Thottal Thodarum

Feb 17, 2007

தரிசனம்



என் மனைவியின் தொந்தரவு தாங்காமல் அந்த இடத்திற்கு போக பயணப்பட்டேன். எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்லை. எனக்கு நம்பிக்கையுமில்லை. ஆனால் அதை என் மனைவியிடம் திணிக்க எனக்கு மனமில்லை. அவள் சொன்ன இடம் ஓரு பிரபலமான சாமியாரின் ஆசிரமம். அங்கே போய் அவரை தரிசித்திவிட்டு வந்தால் எல்லா கவலைகளும், நோய்களும் போய்விடும், மன அமைதி கிடைக்குமென்றாள். அவளூக்கு என்ன அமைதி கெட்டு போய்விட்டதென்று கேட்க நினைத்து, கேட்காமல் சரி போகலாம் என்றேன்.பல நூறு கிலோமீட்டர் தூரம் பயணம். அங்கே போய் சேரும் போது இரவாகிவிட்டது. அதனால் அருகேயிருந்த ஓரு லாட்ஜில் அறையெடுத்து தங்கினோம். இரவு குளிர் அதிகமாக இருந்தது. போர்வையோடு சேர்த்து என் மனைவியை அணைத்து போர்த்திக் கொள்ள எத்தனித்தேன். அவள் சடாரென்று எழுந்து

"என்ன நீங்கள் .... உங்க மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க... நாம என்ன ஹனிமூன் டூருக்கா வந்திருக்கோம்.. தள்ளிப்படுங்க..."

என்று கட்டிலை விட்டு இறங்கி வெறும் தரையில் போய் படுத்தாள். நான் அவளை பார்த்து

"சரி நான் ஓண்ணும் செய்யமாட்டேன்... மேல வந்து படு..." என்ற குரலை சற்றும் சட்டை செய்யாமல் என் குரல் கேட்காதது போல முகம் திருப்பி கண்மூடிக் கிடந்தாள். அவள் பிடிவாதம் எனக்கு தெரியும்.அதிகாலை மூ்ன்று மணிக்கெல்லாம் என்னை எழுப்பி குளிக்க வைத்து, அந்த ஆசிரமத்தில் நுழைந்தவுடன் அங்கே இருந்த சீடர்கள், என்னையும், என் மனைவியையும், தனி, தனியே பிரித்து, அவளை பெண்கள் பக்கத்திலும், ஆண்கள் பக்கத்தில் என்னை நிற்கவைத்து, இனிமேல், திரும்ப வெளியே வரும் போதுதான் ஒன்றாய் பிரிந்த இடத்திலேயே பார்க்க முடிய்மென்று அந்த சீடர் கூற, என் மனைவி உள்ளே நுழைந்தது முதல் அந்த சாமியாரின் பேரைச் சொல்லியபடியே மெய் மறக்க ஆரம்பித்திருந்தாள்.

அவளுக்கு என் ஞாபகமிருக்குமா என்று சந்தேகமே..என் மனைவி சென்றவுடன் வேறு வழியில்லாமல் நானும் அங்கிருந்த ஆண்கள் ஜோதியில் கலக்க ஆரம்பித்தேன். எல்லோரும் கும்பலாய் கொஞ்சம் கூட சத்தமில்லாமல் அமைதியாய் வருவது எனக்கு அதிசயமாயிருந்தது. பொதுயிடத்தில் கூட உரத்து போன் பேசுபவர்களா? இவர்கள்? அவர்களின் ஓழுங்கு எனக்கு ஆச்சர்யபட வைத்தது. எல்லோரும் அங்கிருந்த கோயில் சந்நிதிக்கு போனவுடன் அங்கே கடவுளுக்கு ஆராதனை செய்து பூஜை முடிந்தவுடன். "டோலக்" :" ஜல் ...ஜல்..."ஜால்ரா போன்ற இசை கருவிகளை எடுத்துக் பஜனை பாடலை பாடி வாசிக்க ஆரம்பித்தார்கள். அப்படியே பஜனைகளை பாடியபடி நடக்க ஆரம்பிக்க.. அந்த அதிகாலை நேர அமைதியும், ஓரே ரிதத்தில் வரும் பஜனை பாடலும் என் மனதை அந்த பஜனை ரிதத்திக்கு தலை ஆட்டச் சொன்னது.

நாம் அந்த சுருதிக்கும், அந்த காலை நேர அமைதியும் செய்யும் அதிகாலை ரீங்காரம் தான் என்று என் அறிவுக்கு எட்டினாலும், எனக்கு அந்த மெல்லிய இசை தரும் போதையும், அந்த அதிகாலை குளீரும் தேவையாகத்தான் இருந்தது. நானும் அவர்களுடன் பாட ஆரம்பித்தேன்.மெல்ல பாடியபடி ஓரு ரவுண்ட் வந்து மீண்டும் ஓரு ஆரதனை முடிந்தபின், எல்லாரையும் ஓரு பரந்த மைதானத்தில் ஓரு ஆளுக்கும், மற்றோரு ஆளுக்கும் நம்முடய கையை நீட்டினால் கிடைக்கும் இடைவெளியமைத்து உட்கார வைத்தார்கள். அந்த இடத்தை பார்க்கும் போதே ஓருவித அமைதி ஏற்பட்டிருந்தது. மைதானத்தின் நடுவே ஓரு பரந்து விரிந்த ஓரு மாளிகை, ஓருவிதமான மயக்கும் ரோஜா கலரில் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. அதன் பின் பக்கத்தில் பனி படர்ந்த உயர்ந்த மலைகள், சுற்றிலும் உயர்தர புற்களால் அமைக்கப்பட்டிருந்த பச்சை ஜமுக்காளம் போலிருக்கும் பனிநீர் படிந்த புல்தரையும், எங்களுக்குள் இருந்த இடைவெளியும், அதனால் ஏற்பட்ட அமைதியும், மிக அற்புதம்.சுமார் ஓரு மணி நேரத்திற்கு அப்படி உட்கார்ந்திருந்தேன்.ஓரு மனிதன் எந்த விதமான செயல்களிலும் ஈடுபடாமல் சும்மா உட்கார்ந்திருப்பது மிக கடினமானது. முதல் பத்து நிமிடத்தில் யாரும் பார்க்காமல் மற்றவரிடம் பேசலாம் என்று பார்கும், ஆனால் அங்கே அவர்கள் கடைபிடிக்கும் ஓழுங்கு உங்களை கட்டுப்படுத்தும், பின்னர் உங்கள் மனதிற்குள் பல என்ன ஓட்டங்கள் ஓட ஆரம்பிக்கும், அங்கிங்கே அலைந்து சிறிது நேரத்திற்கு பிறகு எந்த வித எண்ணங்களூம் இல்லாமல் ஓரு வெறுமை உங்களை ஆட்கொள்ள ஆரம்பித்துவிடும்.

நீங்கள் அந்த சாமியாரின் அதி தீவிர பக்தராக இருந்தால், அவர் நாமத்தை ஜபிப்பதையே கடமையாய் கொண்டிருந்தால் நிச்சயம் அவரால் தான் நமது மனத்திற்கு அமைதியேற்பட்டதாக தெரியும். அந்த சமயத்தில் ஓரு விதமான மெல்லிய இசை, மனதை வருடும் மெல்லிய இசை,சாரங்கி, வீணை, வயலின், போன்ற கம்பி வாத்தியங்களினால் வருடப்பட்ட இசை, அதனூடே "குமுக்கு,,,குமுக்கு..." என்று இடிக்காத தபலாவும் சேரும் போது.. அந்த மாளிகையின் முதல் மாடி பால்கனியில் அவர் தெரிந்தார்.

அந்த கூட்டத்தில் இருந்தவர்கள் எல்லோரும் அந்த கணமே தங்கள் கவலைகள் போக்கும் கடவுளின் அவதாரமாய் தெரிய..அவர் பெயர் சொல்லி அழைத்தார்கள். அங்கே ஓரு பக்தி மின்சாரம் எந்த கனைக்டிவிட்டியும் இல்லாமல் காற்றில் இருந்தது. அதற்குள் அவர் மெல்ல மாடியிலிருந்து இறங்கிவந்து, தரையிரங்கி, அங்கே அருகேயிருந்த பெண்கள் பக்கத்தில் மெல்ல நடந்து வந்து, அங்கேயிருந்த பெண்களில் சிலருக்கு மலர்களும், தங்கசெயினும், குங்குமமும், ஆண்களுக்கு வீபூதியும், மோதரமும் கொடுத்துவிட்டு அங்கிருந்த எல்லோரையும் ஓரு பார்வை பார்த்துவிட்டு, வலது கையை உயர்த்தி, எல்லாரையும் ஆசிர்வதித்துவிட்டு, அந்த் இசை முடிவதற்குள் உள்ளே சென்றுவிட்டார்.

எல்லாம் முடிந்து நான் என் மனைவியை அந்த ஆசிரமத்தின் வாசலில்தான் பார்த்தேன். அவள் முகத்தில் ஏதோ ஓரு பிரகாசம் இருந்தது.

"என்ன .. எப்படியிருந்தது தரிசனம்? என்றாள்.

நான் அவளிடம் "என்ன தரிசனம்?' என்றேன்.

அவளுக்கு என்னைப் பற்றி தெரிந்திருந்தாலும், மனசு கேட்காமல்

"உங்களுக்குள்ளா ஏதுமே தோணலயா?"

"அவரை பார்த்தவுடனே நம்ம மனசுல ஓரு சின்ன நம்பிக்க வரல?" அவளை மாதிரியான பக்தர்களுக்காகவே தயாரிக்கப்பட்ட ஓரு தேர்ந்த திரைக்கதை ஆசிரியரின் நேர்த்தியோடு அமைககபட்ட ஓரு திரைக்கதைதான் இந்த தரிசனம் என்று சொன்னால், அவள் மனது புண்படும் என்று தோன்றியதால்.. நான் ஏதும் பேசாமல்.. சிரித்தபடி, தலையாட்டினேன்.