Jan 17, 2012

கேபிளின் கதை -28

28
கேரேஜ் பீஸ் என்றால் என்ன?
ஒரு கேபிள் நெட்வொர்க்கில் பல சேனல்கள் காட்டப்படுகிறது. ஒவ்வொரு சேனலுக்கும் ஒவ்வொரு அலைவரிசையை கொடுக்கிறார்கள். நூறு சேனல்கள் இருந்தால் முன்பே சொன்னது போல ப்ரைம் பேண்ட், எனப்படும் கருப்பு வெள்ளை டிவியில் இருக்கும் மெக்கானிக்கல் ட்யூனர் அலைவரிசைக்குள் வரும் இட்த்திற்குத்தான் எப்போதும் அடிதடி. 1-12 சேனல்களில் 2,6,8 ஆகியவை தூரதர்ஷனுக்கு போய்விடும். மிச்சமிருக்கிற சேனல்களுக்குள் சன், மற்றும் ஸ்போட்ர்ஸ் சேனல்கள் இடம்பிடிக்க, கேபிள் டிவி நெட்வொர்க்குகளின் ஆரம்ப நாட்களில் இதைப் பற்றி பெரிதாய் யாரும் கவலைப் படவில்லை. எப்போது எஸ் பேண்ட், மற்றும் யு.எச்.எஃப் சேனல்களோடு நூற்றுக்கும் அதிகமான அலைவரிசைகளை கொடுக்க முடிகிற அளவிற்கு நெட்வொர்க் வளர ஆரம்பித்ததோ அப்போதிலிருந்து தான் இந்த கேரேஜ் பீஸ் விவகாரம் ஆரம்பித்தது.


இதற்கு முன்னால் அப்படியெல்லாம் கிடையாதா? என்று கேட்டால் உண்டு என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் கேபிள் டிவியின் ஆரம்பக் காலத்தில் தங்கள் சேனல்களை மக்களிடம் கொண்டு செல்ல அந்த சேனல்காரர்களே டிஷ், ரிசீவர், மற்றும் மாடுலேட்டரையும் கொடுத்து போடச் சொல்லுவார்கள். அதுவும் எல்லாருக்கும் கிடையாது. ஒவ்வொரு ஏரியாவிலும் உள்ள பெரிய ஆப்பரேட்டர்களுக்கு மட்டுமே. அப்படி ஒரு பெரிய நெட்வொர்க்கில் போட்டுவிட்டால் உடனடியாய் மற்ற நெட்வொர்க்குகளிலும் அதே சேனல்களை ஒளிபரப்ப வேண்டிய கட்டாயம் வந்துவிடும். மீறி கொடுக்காமல் இருப்பவர்களுக்கு, டிஷ் மட்டுமாகவோ, ரிசீவர் மட்டுமாகவோ கொடுத்து சமாளிப்பார்கள். அதற்கு அடுத்த நிலைதான் வெளிநாட்டுச் சுற்றுலா, போன்ற விஷயங்கள்.

இப்படியாய் போய்க் கொண்டிருந்த மார்கெட்டிங் விஷயங்கள் எல்லாம் ஒரே இட்த்தில் எம்.எஸ்.ஓ முலம் வந்துவிட ஆரம்பித்ததும் ஆப்பரேட்டர்களிடமிருந்து சேனல்கள் எம்.எஸ்.ஒவிற்கு தாவியது. இந்த கேரேஜ் பீஸ் எனும் வழக்கம் வருவதற்கான காரணம் இந்தி சேனல்கள்தான். ஏனென்றால் புற்றீசல் போல வரிசையாய் இந்தி சேனல்கள் முளைக்க, முதல் பனிரெண்டு சேனல்களுக்குள் தங்கள் சேனலை நிலைநிறுத்திக் கொள்ள, அந்தந்த எம்.எஸ்.ஓவுக்கு மாதா மாதம் பணம் கொடுக்க ஆரம்பித்தார்கள். அதாவது சிட்டி கேபிள் என்பது ஜீ டிவியின் நெட்வொர்க். அவர்களது அலைவரிசைகளின் படி ஜீ டிவி, ஜீ சினிமா ஆகிய சேனல்கள் தான் முதல் பன்னிரெண்டு அலைவரிசைகளுக்குள் இருக்கும். அதை மீறி ஒரிரு சேனல்கள், ப்ளாக் அண்ட் வொயிட், மற்றும் கலர் டிவிக்களில் தெரியும்படியான முதல் முப்பது சேனல்களுக்குள் தங்கள் சேனலை கொண்டு செல்வதற்காக பகீரத ப்ரயத்தனம் செய்ய வேண்டியிருந்த காலமது.

இம்மாதிரியான நேரங்களில் வெளிநாட்டு எம்.எஸ்.ஓக்களின் வியாபார முறையை நம் ஆட்களும் பின்பற்ற ஆரம்பித்தார்கள். பெரும்பாலான வியாபார முறையை வெளிநாட்டுக்காரர்களிடமிருந்துதான் நாம் பின்பற்றுகிறோம். அதைப் போலவே இந்த்த் துறைக்கும் ஆனது. கேபிள் நெட்வொர்க்குகள் எதற்காக மற்றவர்களுடய சேனல்களை காட்ட வேண்டும்?. சேனல்களை மக்களிடையே கொண்டு செல்வதுதான் நெட்வொர்க்குகளின் வேலையென்றால் எல்லாச் சேனல்களையும் கொண்டு சென்று அவர்களுக்கு என்ன லாபம்?. ஒவ்வொரு சேனலுக்கும் அவர்கள் தங்கள் நெட்வொர்க்கை விரிவுப்படுத்தி, அதற்கான உபகரணங்களை நிறுவி கொண்டு செல்ல வேண்டியிருக்கும் போது எப்படி இலவசமாய் செய்ய முடியும்? சேனல்கள் இல்லாவிட்டால் இவர்களின் தொழில் இல்லை. இந்த தொழில் இல்லையென்றால் சேனல்களுக்கு வேலையில்லை என்ற நிலையில் ஒருவருக்கொருவர் தேவையாக இருந்த காலத்தில் புகழ் பெற்ற சேனல்களைத்தவிர, புதிதாய் வரும் சேனல்களுக்கு அவர்கள் சேனலை மக்களிடையே கொண்டு செல்ல மாதம் ஒரு கட்டணம் வாங்க ஆரம்பித்தார்கள்.

அதிலும் அலைவரிசைகளுக்கு ஏற்றார்போல் ஒவ்வொரு முக்யத்துவமான அலைவரிசைக்கும் ஒரு ரேட் என்று நிர்ணையித்து மாதக் கட்டணமாகவோ, அல்லது மொத்தமாய் வருடத்திற்கு ஒரு முறை என்றோ வழக்கமாக, அதே வழக்கத்தை இந்தியாவிற்கு கொண்டு வர ஆரம்பித்தார்கள்.

ஜீ டிவி இந்தியாவெங்கும் அவர்களது சேனல்கள் வெகு விரைவாய் மக்களை சென்றடையக் காரணம் அவர்களது கேபிள் நெட்வொர்க்கான சிட்டிகேபிள் தான். வட இந்திய மாநிலங்களில் முக்கியமாய் மும்பை, டெல்லி, கல்கத்தா ஆகிய இடங்களில் முக்கிய நகர மையங்களில் இவர்களது நெட்வொர்கை நிறுவிவிட்டதால் ஜீடிவியின் சேனல்கள் உடனடியாய் ப்ரைம்பாண்டிலும், கலர் டீவிக்களின் முப்பது சேனல் அலைவரிசைகளுக்குள் அமைத்துக் கொண்டு விட, ஜீடிவியின் டி.ஆர்.பி ஏறு முக வரிசையிலேயே இருந்தது. தரையில் அவர்களது நெட்வொர்க்கின் பலத்தால் சேனல்களின் பலமும் கூடியது. அதே நேரத்தில் மற்ற புதிய சேனல்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க இந்த நெட்வொர்க் முறை அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாய் இருந்தது.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

2 comments:

Jagannathan said...

The history of Cable TV is remarkably recorded by you in this series of articles. You have done a lot of studies and understood the system - how it worked and how it changed. Thanks for sharing your insight with us. - R. Jagannathan

shan said...

I am visiting your blog oftem to see this cable story alone ...It's getting interesting...go on..! my wishes