Feb 7, 2012

கேபிளின் கதை - 29


29
மற்ற சேனல்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க கேபிள் நெட்வொர்க் தான் சரியானது என்பதை ஜீடிவியின் சிட்டி கேபிள் மூலமாய் புரிந்து கொண்டார்கள் நம்மவர்களும்.  அந்நேரத்தில் தான் வடநாட்டில் ஜீடிவியின் போட்டிக்கு இந்துஜாவின் ஐ நெட்வொர்க் ஆரம்பித்தது. மும்பையில் ஆரம்பித்த அந்த நெட்வொர்க், மெல்ல, டெல்லி, கொல்கத்தா என்று பரவ ஆரம்பித்தது. அதே நேரத்தில் ஸ்டார் குழுமம் தன் இந்தி சேனலை ஆரம்பித்தது. தொடர்ந்த விளம்பரங்கள், புதிய படங்கள், பெரிய கான்வாஸில் நிகழ்ச்சிகள் என்று எடுத்த எடுப்பிலேயே தடாலடியாய் ஸ்டார் இறங்க, அவர்களுக்கு உதவியாய் மற்ற நெட்வொர்க்குகள் வர ஆரம்பித்தது. ஆரம்பித்த காலத்தில் பல சிட்டி கேபிள் நெட்வொர்க்குகளில் ஸ்டார் தெரியாமலேயே இருந்தது. அந்நேரத்தில் இந்துஜாவின் நெட்வொர்க்குகள் அவர்களுக்கு பெரிய பலமாய் அமைந்தது. இந்துஜா சிட்டி கேபிளுக்கு எதிராக திரும்பக் காரணம் ஜீடிவியின் கட்டணச் சேனலாக மாறி அவர்களுடய இணைப்புகள் பற்றிய கணக்கு பிரச்சனைதான். இம்மாதிரியான கணக்கு ப்ரச்சனை வரும் போது வேண்டுமென்றே அவர்களுக்கு தங்கள் சேனல்களை கட் செய்துவிடுவார்கள். அப்படி கட் ஆகும் போது அவர்கள் ஏரியாவில் தங்கள் நெட்வொர்க் சிக்னல்களை எடுக்க, ஆப்பரேட்டர்களை வளைத்துப் போட்டு, உள் நுழைய பார்ப்பார்கள். அப்படி ஒவ்வொரு முறையும் பார்டரிலிருக்கும் ஆப்பரேட்டர் மாறுவதும், மீண்டும் பேச்சுவார்த்தை சரியாகி, அந்த ஆப்பரேட்டர் கள பலி கொடுக்கப்பட்டு, மீண்டும் இணைந்துவிடுவதும் உண்டு. பாவம் அந்த ஆப்பரேட்டர் அரசனை நம்பி புருஷனை விட்ட கதையாய் மாட்டிக் கொண்டு அலைவார். இவரின் நிலையை பார்த்து அடுத்துவரும் காலங்களில் பல ஆப்பரேட்டர்கள் யார் பக்கம் சாய்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்த காலமெல்லாம் உண்டு.



இந்நிலை இந்தி சேனல்கள் என்றில்லாமல் பெரும்பாலான நேரங்களில் ஸ்போர்ட்ஸ் சேனல்களுக்கும் கேபிள் நெட்வொர்க்குகளுக்கும் ஏற்படும். அப்போதெல்லாம் இம்மாதிரியான சேனல் இருட்ட்டிப்புகள் நிகழ்வது சாதாரணம். முக்கியமாய் இந்தியா பங்கு கொள்ளும் கிரிக்கெட் மேட்சின் போதுதான் இவர்கள் தங்கள் கட்டணத்தை ஏற்றுவார்கள். அல்லது சந்தாதாரர்கள் எண்ணிக்கையை ஏற்றுவார்கள். நெட்வொர்க்குள் முக்கியமான மேட்சுகளை காட்டாமல் விட்டால் வாடிக்கையாளர்கள் ஆப்பரேட்டர் தலையை தின்னத் துவங்க, ஆப்பரேட்டர்கள் எம்.எஸ்.ஓவை என்று சுழற்சி ஆரம்பிக்கும் அதனால் தங்களுக்கு வர வேண்டிய பணம் வந்து விடும் என்று பகல் கனவு காண்பதும் உண்டு. அம்மாதிரியான நேரங்களில் எங்கோ ஒரு டிகோடரை ஆன் செய்து திருட்டுத்தனமாய் பல ஏரியாக்களில் சிக்னல்களை கொடுத்து ஓட்டிய காலங்களும் உண்டு.

இவ்வளவு ப்ரச்சனைகளுக்கு நடுவில் ஒரு தொழிலை நடத்த வேண்டுமென்றால் அதற்கு ஈடான வருமானம் வர வேண்டுமல்லவா? அப்படி வராத தொழில் எப்படி நிலைக்கும்?. அப்படி பல தரப்பட்ட ப்ரச்சனைகள் இருந்தாலும் தொழிலின் வளர்ச்சி விறுவிறுவென போய்க் கொண்டிருந்தது. தரை வழி நெட்வொர்க் தங்கள் வசமிருந்தால் போட்டியாளர்களை சமாளிக்க ஏதுவாக இருக்கும் என்பதை சரியாக உணர்ந்த சன் தங்கள் சாம்ராஜ்யத்தை தமிழகமெங்கும் விரித்தது. தமிழ் நாட்டின் முக்கிய நகரங்களைத் தவிர மற்ற ஊர்களில் தங்களுக்கு ஆதரவான ஆட்களை, அல்லது ஆப்பரேட்டர்களை தங்கள் பக்கம் வைத்துக் கொண்டு, மற்ற ஏரியாக்களில் காலடியெடுத்து வைத்தது.

சேலத்தில் பாலிமர் போல மற்ற ஊர்களில் பெரிதாய் இசையவில்லையாதலால், ஆங்காங்கே தங்கள் கட்டுப்பாட்டு அறைகளை நிறுவி அவ்வூரையும், சுற்று வட்டார ஊரையும் நேரடியான எஸ்.சி.வி நெட்வொர்க் இல்லையென்றாலும், அவர்களது நெட்வொர்க்காகவே அமைத்துக் கொண்டது. பெரும்பாலான ஆப்பரேட்டர்களுக்கு இவர்களது ஆக்கிரமிப்பு பிடிக்காவிட்டாலும், தொழிலில் நிலைக்க, வேறு வழியில்லாமல் இணைந்து கொண்டார்கள். அது மட்டுமில்லாமல் அவர்களுக்கு இன்னொரு முறையில் லாபம் கூட இருந்தது. பெரும்பாலான ஆப்பரேட்டர்கள் கட்டணச் சேனல்களின் பிடியில் பிதுங்கி முழித்துக் கொண்டிருந்த நேரத்தில், எஸ்.சி.வியின் வரவோ, அல்லது அவர்களின் பெயரில்லா வேறு நிறுவனத்தின் மூலமோ சிக்னல்களை பெறும் போது மொத்தமாய் கட்டணச் சேனல்களுக்கு என்று தனியாய் தராமல், ஒவ்வொரு இணைப்புக்கும் குறிப்பட்ட தொகை என்று கொடுத்தால் போதுமானதால் சந்தோஷமாகக்கூட இருந்தது. அது மட்டுமில்லாமல், லோக்கல் கேபிள் சேனல்களை அவர்கள் தடுக்கவில்லையாதலால்,மேல் வருமானத்திற்கு எந்த இடையூறும் இல்லை என்பதாலும் எஸ்.சி.வியிடம் சந்தோஷத்துடன் இணைந்தவர்கள் பலர்.  

இவர்களின் ஆக்கிரமிப்பை சில பெரிய ஆப்பரேட்டர்கள் விரும்பவில்லை. அவர்களைப் போன்ற ஒரு கட்டுப்பாட்டு அறையை அவர்களே நிறுவ முடியும் என்று இருக்கும் போது, எதற்காக நாம் அவர்களிடம் போய் சேர வேண்டும் என்று தம் கட்டி நின்றவர்களும் உண்டு. ஆனால் அவர்களுக்கு வேறு விதமான ப்ரச்சனைகள் அவர்களின் போட்டி ஆப்பரேட்டர்கள் மூலமாய் ஆரம்பிக்கும். ஏரியா விட்டு ஏரியா ப்ரச்சனையை துவக்கும். அப்படி துவக்கினால் உள்நாட்டுப் போர் போல பல ப்ரச்சனைகள் உருவாகும். சில சமயங்களில் கொலைகளில் கூட போய் முடிந்ததுண்டு. இந்த ப்ரச்சனைகள் எல்லாம் தாளாமல் தொழிலை விட்டு ஓடியவர்களும் உண்டு. ஆனால் இவ்வளவு தொல்லைகளுக்க்ம் பின்னால் எம்.எஸ்.ஓ இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அது தெரிய வேண்டும் என்றுதான் பார்டர் ஏரியா ஆப்பரேட்டர்களை தூண்டிவிட்டு விளையாடுவது. பல சமயங்களில் அந்த ஆப்பரேட்டர்கள் தாங்களை அவர்கள் ஒரு கருவியாய் உபயோகிக்கிறார்கள் என்பதை அறியாமல் ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவரே நேரில் பேசி நீ செய் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லும் போது சாமானியனாய் இருந்து ஒரு நிலைக்கு வந்திருக்கும் அந்த ஆப்பரேட்டருக்கு சொல்லவா வேண்டும். ஏற்கனவே துள்ளாட்டம் போடுபவர் இன்னும் ஆவேசம் வந்து துவம்சம் செய்ய ஆரம்பித்துவிடுவார்.

ஒரு வழியாய் இவர்களின் பஞ்சாயத்தை முடிக்க, வேறு வழியில்லாமல் சரணடைவார்கள். அப்படி சரணடையும் போதுதான் தெரியும். துள்ளாட்டம் போட்டவரை அப்படியே ஓரமாய் ஒதுக்கி வைத்துவிட்டு, அவர் மூலம் போட்ட இணைப்புகளை எல்லாம் தூக்கி மீண்டும் புதியதாய் வந்தவர்களுக்கே கொடுத்துவிட்டு, இவரை அம்போவென விட்டுவிடுவார்கள். அப்படியே நொந்து போய் இருப்பவரின் தோள் மீது கை போட்டு பேசி, அவங்களும் பெரிய க்ரூப், விட்டுக் கொடுத்துதான் போகணும் என்று அட்வைஸ் வேறு செய்து, அனுப்புவார்கள். என்னாடா இது என்று யோசித்துக் கொண்டிருந்தவன், தோள் மீது கைப் போட்டு பேசியவுடன், அவ்வளவு பெரிய ஆட்கள் என்னை மதித்து, கேட்கிறார்கள் என்று இளித்துக் கொண்டு மீண்டும் அவர்களின் தீவிர விசுவாசியாய் இருப்பவர்களும் உண்டு. இவனை நம்பினா அவ்வளவுதான் என்று முடிவெடுத்து அவர்கள் பக்கமே திரும்பாமல் போனவர்களும் உண்டு. அவர்கள் கழட்டி விட்டதற்கும் ஒரு காரணம் உண்டு. தங்களிடம் வந்து சேராமல் இருக்கும் ஆப்பரேட்டர்களை தொந்தரவு செய்ய தன் பக்கத்திலிருந்து ஒரு பைசா செலவு செய்யாமல், தன் ஆப்பரேட்டர்கள் மூலம், அவர்கள் செலவில் அவர்களை சீண்டி, தங்கள் பக்கம் வரவழைத்தற்கு காரணம். அந்தப் பக்கம் இருப்பவர்கள் மிகப் பெரிய ஆட்களாய் இருப்பார்கள். ஒரு பெரிய ஏரியாவையே தங்கள் கைவசம் வைத்திருப்பார்கள். அவர்களை இழக்க விரும்பாமல் தான் இத்தனை ஆட்டமும். இவ்வளவு செய்தும் ஆட்டமிழக்காமல் இருக்கும் ஆட்களும் உண்டு. அவர்களை அடக்க, வேறு ஒரு வழியை கண்டு பிடித்தார்கள்.

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

0 comments: