செங்கல்பட்டில் சினிமா எடுக்க ஆசைப்படும் ராஜ்கிரண்கள் ஒருபுறமிருக்க, இன்னொரு பக்கம் ஊருக்கு ஊர் குறும்படங்கள் மூலமாய் சினிமாவின் கதவை நெட்டித் திறக்கலாம் என்கிற நம்பிக்கையில் வேலையை விட்டு, குறும்படம் எடுத்துத்தள்ளும் கூட்டம் பெருகிவிட்டது. முன்பு கவிதைத் தொகுப்புகளை வெளியிடுவதைப் போல, தற்போது குறும்பட வெளியீடு நடந்து கொண்டிருக்கிறது.
ஊரும் உறவும் நண்பர்களும் கூடி, குறும்பட வெளியீட்டுவிழாவுக்குப் பெருந்தொகை செலவழித்தபின், அதை யூடியூபில் போட்டு நண்பர்கள் வட்டம் மூலமாய் பகிர்ந்து ஒரு பத்தாயிரம் ஹிட்ஸ் தேத்திவிட்டால், அடுத்தக் குறும்பட முயற்சிக்கு போக வேண்டியதுதான். இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது குறும்பட உலகம். ஆனால் செலவழித்த தொகையையாவது திரும்ப எடுக்க முயற்சிக்க வேண்டும் என்று யாரும் நினைப்பதே இல்லை.
இவர்களது அடுத்த இலக்கு சினிமாவாக இருப்பதும் ஒரு பிரச்சினைதான். உலகமெங்கும் குறும்படம் மற்றும் ஆவணப் படங்களுக்கான சந்தை என்பது தனியாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. குறும்படங்கள் மூலமாய் வருமானம் ஈட்டுவதும் புகழ் பெறுவதும், வெகுஜன சினிமா இல்லாமலேயே சாத்தியமான ஒன்று. ஆனால் இங்கே அதற்கான வழி முறைகளோ, அல்லது முனைப்போ இருப்பதில்லை.
ஆங்கிலத்தில் நான்கைந்து குறும்படங்களைத் தொகுத்து ஒரு முழு நீள திரைப்படம் போல வெளியிட்டிருக்கிறார்கள். அருகில் உள்ள மலையாளத்தில் ‘கேரளா கஃபே’ எனும் ஒரு திரைப்படம் பிரபல இயக்குனர் ரஞ்சித்தின் தயாரிப்பில் ஷாஜி கைலாஷ், ரேவதி, அஞ்சலி மேனன், உன்னிகிருஷ்ணன் உள்ளிட்ட பத்து இயக்குநர்கள் இயக்கிய குறும்படங்களைத் தொகுத்து ஒரு திரைப்படமாய் வெளிவந்து வெற்றி பெற்றது.
'மும்பை காலிங்' என்ற பெயரில் மும்பையை மையமாய் வைத்து அனுராக் காஷ்யப், ரேவதி, சுரப் சுக்லா போன்ற பதினோரு இயக்குநர்களின் பதினோரு குறும்படங்களை ஒரே திரைப்படமாய்த் தொகுத்து, அதைப் பட விழாக்களில் கலந்துகொள்ளச் செய்து வெற்றி பெற்றார்கள்.
பின்பு 2007-ல் சஞ்சய் தத்தின் தயாரிப்பில், சஞ்சய் குப்தா, அபூர்வ லக்கியா, குல்ஜாரின் மகள் உள்ளிட்ட ஆறு இயக்குநர்கள் இயக்கிய பத்து குறும்படங்கள் கொண்ட ’தஸ் கஹானியான்’ படத்தை திரையரங்குகளில் வெளியிட்டு வெற்றியும் பெற்றார்கள். பிறகு 2013ல் மீண்டும் அனுராக் காஷ்யப், கரண் ஜோஹர், திபங்கர், ஜோயா அக்தர் இயக்கத்தில் நான்கு குறும்படங்களை ’பாம்பே டாக்கீஸ்’ என்கிற பெயரில் திரைப்படமாய் வெளியிட்டார்கள்.
இப்படி இந்திய அளவில் குறும்படங்களைத் தொகுத்து ஒரு கொத்தாக முழுத் திரைப்படத்துக்குரிய கால அளவில் வெளியிடும்முறை புதிதல்ல. ஆனால் தமிழில் இதுபோன்ற முன்முயற்சிகள் இல்லை என்ற குறை இருந்தது. இந்தநேரத்தில் குறும்படங்கள் மூலம் அறிமுகமாகி, வெற்றிகரமான இயக்குநராகியிருக்கும் கார்த்திக் சுப்புராஜ் தமிழில் முதன்முறையாக அதேபோன்றதொரு முயற்சியைத் துணிச்சலாகக் கையிலெடுத்திருக்கிறார்.
‘ஸ்டோன் பெஞ்ச்’ எனும் தன் நிறுவனத்தின் மூலமாய்ப் பெஞ்ச் டாக்கீஸ் என்கிற பெயரில் ஆறு குறும்படங்களைத் தொகுத்து, அதை ஒரு முழு நீள திரைப்படமாக ஆக்கி, தணிக்கை செய்து, திரையரங்குகளில் வெளியிடத் தயாராகியிருக்கிறார்.
ஆறு படங்களில் ஒரு படம் அவர் இயக்கியது. இப்படத்திற்குத் திரையரங்கில் கிடைக்கும் ஆதரவை பொறுத்து மேலும் பல குறும்படங்களைத் திரைப்படங்களாய் தொகுத்து பெஞ்ச் டாக்கீஸ் 2, 3 என அடுத்தடுத்த பாகங்களாக வழங்கவிருப்பதாகச் சொல்கிறார். நிச்சயம் இது மிகச் சீரிய முயற்சி.
இதற்காக ஆகும் செலவுகள் என்று பார்த்தால் ஒரு சராசரி திரைப்படத்தை வெளியிட ஆகும் அதே செலவுகள்தான். எந்த ஒரு புதிய முயற்சிக்கும், வணிக வெற்றி என்பது மிக முக்கியம். அதுதான் கிரியா ஊக்கியாகச் செயல்பட்டு மேலும் இம்மாதிரியான புதிய முயற்சிகளை முன்னெடுக்க, ஆர்வத்தையும், சந்தையையும் விரிவுபடுத்திக் கொடுக்கும். பல பெரிய இயக்குநர்கள், நடிகர்கள் இணைந்து செயல்பட்டு வித்தியாசமான படங்களைக் கொடுக்க இந்த முயற்சி வாய்ப்பளிக்கலாம்.
இதைப் பற்றி நண்பரொருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது வழக்கமாகப் பல தமிழ் சினிமாக்களில் முதல் பாதி ஒரு கதையும், இரண்டாம் பாதி ஒரு கதையுமாகத்தானே இருக்கும்? இரண்டையும் இணைப்பது நாயகன், நாயகி, வில்லன் என்பதைத் தவிர வேறு என்ன தொடர்பு இருக்கிறது என்றார். என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
பூதம் - குறும்படம்
புதிய குறும்பட இயக்குனர்கள் அவர்களுடய படங்களைப் பார்த்து கருத்து சொல்ல, யூடியூபில் தரவேற்றிய தங்களது குறும்படங்களின் சுட்டிகளை(இணைய இணைப்பு) அனுப்பி விடுவார்கள். அப்படிச் சமீபத்தில் நான் பார்த்த படம்தான் இந்த பூதம். நாளைய இயக்குநர் இறுதிப் போட்டியில் இடம் பெற்ற குறும்படம். பூதம் ஒன்று கனவில் வந்து அவனது மச்சான் கல்யாணத்தன்று இறந்து விடுவான் என்று சொல்லிவிட்டு மறைந்து விடுகிறது.
அவனது வாழ்வில் ஏற்கனவே இந்த பூதம் சொல்லி, அவனது அம்மா, காதலி ஆகியோர் இறந்திருக்க, தன் தங்கையின் வாழ்க்கையைக் காப்பாற்ற நினைத்து திருமணத்தைத் தடுக்க நினைக்கிறான். முடியாமல்போக அதன் பிறகு நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள்தான் இக்குறும்படம். படத்தின் எதிர்பாரத இறுதிக்காட்சி, படமாக்கிய விதம், நடித்த நடிகர்களின் நடிப்பு என எல்லாமே சிறப்பாகவே வந்திருக்கின்றன. இயக்கிய மார்டினுக்கு வாழ்த்துகள்.