Thottal Thodarum

Nov 30, 2016

கொத்து பரோட்டா -2.0-8

கேட்டால் கிடைக்கும்
மால்களுக்கு போனால் அங்கேயிருக்கும் புட்கோர்ட்டுகளில் சாப்பிட வேண்டுமென்றால் அவர்களிடம் 20 ரூபாய் கொடுத்து கார்டு வாங்கி அதில் நம் பணத்தை கொடுத்து சார்ஜ் செய்து  கொள்ள வேண்டும். உள்ளே சாப்பிட பணத்திற்கு பதிலாய் கார்டை ஸ்வைப் செய்தால் போதும். ஆரம்ப காலத்தில் இது என்னவோ அவர்கள் நமக்காக செய்யும் வசதியாக தெரிந்தாலும், நிஜத்தில் மகா கொள்ளை. ஒருவர் ஆரம்பித்த பழக்கம் எல்லா மால்களிலும் தொடர, மக்கள் பணத்தை கொள்ளையடிக்க ஆரம்பித்தார்கள். இந்த கார்டு வாங்குவதால் வாடிக்கையாளர்களான நமக்கு என்ன உபயோகம்? இந்த கார்ட்டை நாம் ஏன் விலை கொடுத்து வாங்க வேண்டும்?. இந்த கார்டு கொடுப்பதினால் ஏதேனும் டிஸ்கவுண்ட் கிடைக்குமா? கார்டு வேண்டாம் என்று திரும்பக் கொடுத்தால் ஏன் நம் பணத்தை திரும்பக் கொடுப்பதில்லை? அது எப்படி சரியான வியாபார முறையாகும்? என்கிற கேள்விகளை யாரும் கேட்பதில்லை. ஏனென்றால் பெரும்பாலும்  அப்பன் காசில் செலவு செய்கிறவர்கள். அதையும் மீறி தன் தோழிகளுடன் வரும் போது ஐந்துக்கும் பத்துக்கும் சண்டை போடுகிறவனாய் காட்டிக் கொள்ள விரும்புவதில்லை. குடும்பங்களுடன் வருகிறவர்களோ.. என்னைக்கோ ஒரு நாள் வர்றோம் எதுக்கு சண்டை சத்தமில்லாம போயிருவோம் யாராச்சும் ஒருத்தன் கேள்வி கேட்பான் என்றோ, அல்லது கேள்வி கேட்டால் கிடைக்கவா போவுது என்றோ போய்விடுகிறார்கள். நிஜத்தில் இந்த மால்களில் நடக்கும் வியாபாரத்தில் புட் கோர்ட் நடத்துகிறவர்களுக்கு முப்பது சதவிகிதம் தான் வாடகை. எனவே இவர்களின் சேல்ஸ் நடவடிக்கைகளை கண்காணிக்கவும், கணக்கு செய்யவும் தான் இந்த கார்டு. இந்த கார்டினால் அவர்களுக்குத்தான் உபயோகமே தவிர மக்களுக்கு ஒரு ..ரும் இல்லை. ஒரு நாளைக்கு நாலாயிரம் பேர் இம்மாதிரி கார்டுகளில் பத்து ரூபாய் விட்டுச் சென்றால் 40 ஆயிரம் ரூபாய். மாதத்திற்கு 12 லட்ச ரூபாய்.  நம்மிடம் பத்து ரூபாய் கூட குறைவாய் இருந்தா கார்டு தராதவர்களுக்கு நம் காசை வட்டியில்லாம உபயோகிக்க கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதற்காக பல வருடங்களாய் எங்கள் கேட்டால் கிடைக்கும் குழு மூலமாய்  சண்டையிட ஆரம்பித்திருந்தோம் அதற்கான பலன் இன்றைக்கு ஈ.ஏ போன்ற மால்களில் கார்டுக்கு காசு வாங்குவதில்லை. போரம் போன்ற மால்களில் கார்டுக்கு காசு கிடையாது. கார்டு வேண்டாம் என்று திரும்பக் கொடுத்தால் உங்களது பணம் வாபஸ். போனிக்ஸ் மாலில் இந்த கந்தாயமே கிடையாது. புட்கோர்ட்டில் கையில காசு வாயில தோசை சிஸ்டம் தான்.  ஈ.ஏ போன்ற மால்களில் நான் இன்னமும் தொடர்ந்து காசை திரும்பக் கொடுக்க சண்டையிட்டுக் கொண்டிருக்கிறேன். நிச்சயம் கேட்டால் கிடைக்கும். என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. https://www.facebook.com/groups/kettaalkidaikkum/
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தீபாவளிக்கு வெடிகளை விட, மத்தாப்பூ, புஸ்வாண வகையராக்களின் சேல்ஸ்தான் அதிகமென்று தெரிகிறது. ஒரு காலத்தில் புஸ்வாணம் சங்கு சக்கர விஷயமெல்லாம் பெண் பிள்ளை பட்டாசுகள் என்றிருந்த காலமெல்லாம் போய் பெண் பிள்ளைகள் ஆட்டாபாமை கையில் பிடித்து தூக்கி போட்டுக் கொண்டிருக்க, மிக இளைஞர்கள் எல்லாம் புஸ்வாணமும், ராக்கெட்டும் விட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் தீபாவளி புது ட்ரெஸ், யாருக்கும் சந்தோஷமோ இல்லையோ.. பதின்மவயது பெண்களுக்கு அதீத சந்தோஷத்தை தருகிற விஷயமாகவே படுகிறது. சாதாரண கவுன், பாவாடை சட்டையிலிருந்து, ஜீன்ஸ், டீ சர்ட்,, காக்ரா, சிம்பிள் சுரிதார் என பல விதங்களில் தங்களை அழகுப்படுத்திக் கொண்டு, அதற்கான ரிசல்ட்டை பெறுவதற்காக ரெவ்விரண்டு பேராய், கை கோர்த்துக் கொண்டு, கண்கள் பூராவும் பெருமையும், சந்தோஷமுமாய் நடை  பழகும் அழகிருக்கிறதே  அட..அட.அட..  பாவம் பையனுங்க தான் திரும்பத் திரும்ப ஜீன்ஸ், டீ சர்ட், என இருக்கும் நாலு பத்து கலருக்குள் இருப்பதை தெரிந்தெடுத்து, காலை பட்டாசு வெடித்து வியர்த்து வழிய நின்றிருக்கும் போது இவர்களின் வருகை 10,000 வாலா சரவெடியாய் வெடிக்கும். ஆயிரம் சொல்லுங்க கடவுள் ஓரவஞ்சனைக்காரன் தான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கிட்டத்தட்ட பத்து வருஷமாய் தமிழ்நாட்டில் திரையரங்குகளின் அனுமதி கட்டணம் உயர்த்தப்படவேயில்லை என்று அரசிடம் போராடிப் பார்த்துவிட்டு, கோர்ட்டை நாடியிருக்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். அரசும் தன் புதிய கட்டணத்தை தாக்கல் செய்தது. அதாவது 120 ரூபாயிலிருந்து 150 ரூபாய்க்கு. கட்டுமா? கட்டாதா என்று பதில் சொல்ல வேண்டிய திரையரங்கு உரிமையாளர்களுக்கு பதிலாய், ஐகோர்ட் இதெல்லாம் கட்டாது என்று சொல்லி ரிஜெக்ட் செய்து, வேறொரு கட்டணத்தை தாக்கல் செய்ய சொல்லியிருக்கிறது. இதில் காமெடி என்னவென்றால் தமிழ் நாட்டில் மல்ட்டிப்ளெக்ஸ் அதுவும் நான்கு திரை, புட்கோர்ட் இருக்கும் அரங்கிற்க்கு மட்டுமே 120 ரூபாய் வாங்க வேண்டும். அனால் தேவி போன்ற திரையரங்குகள் எல்லாம் புட்கோர்ட் என்று ஒரு போர்டை வைத்துவிட்டு, 120 ரூபாய் வாங்குகிறார்கள். சென்னை போன்ற நகரங்களில் சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகளில் 10 முதல் அதிகபட்சமாய் 50 ரூபாய் தான் ஆனால் இன்றைக்கு எந்த அரங்கிலாவது 50 ரூபாய்க்கு டிக்கெட் கொடுத்து பார்த்திருக்கிறீர்களா? சென்னையில் கேஸினோ, மற்றும் ஏ.வி.எம் ராஜேஸ்வரி அரங்ககுளில் மட்டுமே இது நடைமுறை படுத்தப்படுகிறது. அதனால் தான் எப்போதும் ஏவிஎம். ராஜேஸ்வரி திரையரங்கில் கூட்டம் இருந்து கொண்டேயிருக்கும். சென்னை, செங்கல்பட்டு, ஏரியாக்களில் மல்ட்டி ப்ளெக்ஸ் தவிர மற்ற திரையரங்குகளில், புதிய படமென்றால்150 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். இதை தட்டிக் கேட்க வேண்டிய அரசு அதிகாரிகள் வாரா வாரம் கட்டிங் வாங்கிக் கொண்டு போவதைத் தவிர வேறேதும் செய்ததாய் சரித்திரமில்லை. அப்படியே அதிக விலைக்கு டிக்கெட் விற்றதை எதிர்த்து கோர்ட்டுக்கு போனால் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்பதை போன்று பதில் சொல்லி, கோர்ட்டையும் சரிகட்டுகிறது அரசு. மற்ற ஊர்களில் உள்ள சிங்கிள் ஸ்கீரின் தியேட்டர்கள் எல்லாவற்றிலும், புதிய படமென்றால் 200-300 வரை விற்றுக் கொண்டுதானிருக்கிறார்கள். ஒரு சினிமா போவதற்கு ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்க, அதனால் தான் பைரஸிக்காகவும், திருட்டு டிவிடிக்காகவும், கேபிள் டிவி பைரஸி ஒளிபரப்புக்காகவும், மக்கள் காத்திருக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இங்கே பெரிய படங்களைத் தவிர சிறு முதலீட்டு படங்களுக்கு நல்லாயிருக்குன்னு தெரிந்தால் கூட ஆட்கள் வருவதில்லை. 120 ரூபாய்க்கே வார நாட்களில் காய்ந்து கொண்டிருக்கிறார்கள், டிக்கெட் விலையில் எங்களுக்கு லாபமில்லை அதனால் தான் பாப்கார்ன் வகையராவை 200க்கு விற்று பிழைப்பு நடத்துகிறோம் என்று சொல்லும் மல்ட்டிப்ளெக்ஸ் ஓனர்கள் எல்லாம் டிக்கெட் விலையை அதிகப்படுத்திவிட்டால், 20 ரூபாய்க்கு தர ஆரம்பிப்பார்களா?. விலைவாசி எறுவதற்கு ஏற்ப விலையை ஏற்ற வேண்டியதுதான். ஆனால் இவர்கள் ஆசைப்படுவது பகல் கொள்ளை. பெங்களூரைப் பார் அங்கே தமிழ் படத்திற்கு 800-900 என்றெல்லாம் டிக்கெட் விற்கிறார்கள் என்று உதாரணம் காட்டுகிறார்கள். ஆனால் அங்கே கன்னட படத்திற்கு 120க்குள் தான் டிக்கெட் விலையே. ஆந்திராவில் 80 ரூபாய்க்கு நல்ல ஒளி,ஒலி தரத்துடன் ஏசியில படம் பார்த்துவிட முடியும். அதனால் தான் சினிமா இன்னமும் அங்கே கொண்டாட்டமாய் வாழ்கிறது. டிக்கெட் விலையை 300-350க்கு உயர்த்த ஆசைபடுகிற தியேட்டர் அதிபர்கள், பெரிய பட்ஜெட் படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் எல்லோரும் சேர்ந்து சினிமா எனும் பொன் முட்டையிடும் வாத்தை அறுக்க தயார் ஆகிக் கொண்டிருக்கிறார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@
Train To Bhusan
2016ல் கொரியாவில் கிட்டத்தட்ட 10 மில்லியன் டிக்கெட்டுகள் விற்ற படம். சூப்பர் டூப்பர் ஹிட். ஆகச்சிறந்த கதையென்றால் ஒன்றுமில்லை. வழக்கமான ஹாலிவுட் ஜோம்பி கதைதான். ஆனால் அதை சொன்ன விதத்தில் தான் நம்மை கட்டிப் போடுகிறார்கள். கதாநாயகன் ஒரு ஃபண்ட் மேனேஜர். அவனுக்கு ஒரு குட்டிப் பெண். நாயகனும் மனைவியும் பிரிந்து வாழ்கிறார்கள். மகள் தன் அம்மாவை பார்க்க வேண்டுமென்று அழ, அவளைப் பார்க்க பூஷனுக்கு புறப்படுகிறார்கள். அந்த ரயிலில் ஜோம்பியாய் மாறிய பெண்ணொருத்தி ஏறியதை கவனிக்காத கண்டக்டர் ட்ரையினை கிளப்ப்பிவிடுகிறார். ரயில் மொத்தமும் கொஞ்சம் கொஞ்சமாய் ஜோம்பிக்களாய் மாறிக் கொண்டிருக்க, இருக்கும் பத்திருபது பேருக்குள் கர்பிணி மனைவியோடு பயணிப்பவன். நான்கைந்து மாணவர்கள். அவர்களுடய தோழி ஒருத்தி, வயதான அக்கா தங்கை, ஒரு செல்ஃப் செண்டர் ஆன ரயில் அதிகாரி, நம்ம ஹீரோவும், குழந்தையும். இவர்களுக்குள் நடக்கும் போராட்டம், சுயநலம். தியாகங்களுக்கு இடையே ஜோம்பிக்கள் என போகிறது கதை. பாராட்டப்பட வேண்டியவர்களில் முக்கியமானவர்கள் ஜோம்பிக்களாய் நடித்த துணை நடிகர்கள். மேக்கப், நடிப்பு எல்லாமே ஸ்கீரினின் அருகே அவர்கள் வரும் போது காலை தூக்கி எட்டி உதைக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுத்த யாருமே தவறவில்லை. எல்லா தியாகங்களுக்கு பிறகும் மிகுந்திருக்கும் கர்பிணிப் பெண்ணும், ஹீரோவின் மகள் மட்டுமே மிஞ்சியிருக்க.. வரும் க்ளைமேக்ஸ் எமோஷனல் அத்யாச்சார். கொரிய படங்கள் எப்பவுமே இப்படித்தான் கொஞ்சம் வெஸ்டர்ன், கொஞ்சம் பாரம்பரியம், கொஞ்சம் செண்டிமெண்ட், நல்ல குவாலிட்டி டெக்னிக்கல் மற்றும் நடிப்பு என எல்லாவற்றையும் சரி விகிதத்தில் கலந்து கொடுப்பதில் விற்பன்னர்கள் என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@ 
Girl In The City-

ஹிந்தியில் சமீபத்தில் பார்த்து இம்ப்ரஸான புது வெப் சீரீஸ். ஹிந்தி என்று கூட சொல்ல முடியாது. ஹிந்திங்கிலிஷ் சீரீஸ். மீரா டெஹ்ராடூனிலிருந்து மும்பையில் எப்படியாவது பேஷன் டிசைனராகி விட வேண்டுமென்ற நோக்கத்தோடு, தன் மிலிட்டரி அப்பாவிடம் மூன்று மாதம் டைம் வாங்கிக் கொண்டு மும்பைக்கு வந்து சேருகிறாள். எம் 9 எனும் பேஷன் டிசைனிங் கம்பெனியில் விலையில்லா இண்டர்னாக சேருகிறாள். தோழி சமீராவின் அறையில் வாசம்.  அவளோ எந்த ஒரு வேலையும் இல்லாத செலவாளி. ஷோக்காளி. பர்மெனெட்டாக ஆண் சகவாசம் வைத்துக் கொண்டும், சிகரெட் பிடித்துக் கொண்டலையும் டெஹ்ராடூனிலிருந்து வந்து மும்பை விழுங்கிய மான். அதே ப்ளாட்டில் ஸ்டார்டப் கம்பெனி ஆரம்பிக்க போராடும் மிடில் க்ளாஸ் கார்த்திக். இவர்களுடய கனவு, காதல், வாழ்க்கை என்பதை மிக அழகாக, ஸ்டைலாக, ஒரு ஃபீல் குட் இந்தி படத்தை பார்த்த மகிழ்ச்சியை இந்த வெப் சீரிஸ் தருகிறது. பெண் சுதந்திரம், ஆண் பெண் பாகுபாடு, ஃபீரி செக்ஸ். கொண்டாட்டம் அத்தோடு வாழ்க்கையின் இலக்கு இவைகளையெல்லாம் மீராவின் பார்வையில் சொல்கிறார்கள். சமீர் இக்பாலின் இயக்கம், சன்யுக்தா சாவ்லா ஷேக்கின் எழுத்தில் மீராவாக வரும் மிதிலா பால்கரின் நடிப்பு. அவரின் இன்னொசென்ஸ், அந்த கருகரு சுருள் முடி  எல்லாம் மயக்குகிறது. இதிலும் இந்த சீரீஸின் ஸ்பான்ஸர்களைப் பற்றி ஒவ்வொரு எபிசோடிலும் ஏதேனும் ஒரு காரணத்தை வைத்து சொல்வதைத் தவிர வெரி ப்ரொபஷனல் மேக்கிங். அண்ட் பர்பாமென்ஸ். மொத்தம் 13 எபிசோட்கள். எல்லாமே 15 நிமிட நேரம். க்விக் அண்ட் க்யூட் எண்டர்டெயின்மெண்ட். https://goo.gl/yShgfP

Nov 16, 2016

கொத்து பரோட்டா – 2.0-7

காதல் என்கிற பெயரில் ஸ்டாக்கிங் அதாவது பெண்களை பின் தொடர்ந்து, கம்பெல் செய்து, மனரீதியாய், உடல் ரீதியாய் துன்புறுத்தி, செய்யடுவது தான் காதல்.  என்கிற எண்ணத்தை வெளிப்படுத்தும் சினிமாக்களைப் பற்றி பேச அம்பேத்கார் பெரியார் ஸ்டடி சர்க்கிளின் சார்ப்பாக அழைத்திருந்தார்கள். சுவாதியில் ஆரம்பித்து கடந்த ஒரு வருடத்தில் நடந்த ஒருதலைக் காதல் கொலைகளைப் பார்க்கும் போது இது நிச்சயம் தீவிரமாய் பேச வேண்டிய ஒரு விஷயம். ஆனால் அதை சினிமாவை மட்டுமே குறிவைத்து பேசுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  சென்னை போன்ற இடங்களில் கூட ஆண் பெண் இணைக்கமாய் பழக்கக் கூடிய சமூதாய நிலை இன்னும் ஏற்படாத நிலையில், நகரமில்லாத ஊர்களில் ஆணும் பெண்ணும் பேசுவதே ஆச்சர்யம் மிகுந்த விஷயமாய் இருக்கும் நிலையில், ஒரு பெண்ணை காதல் செய்ய அவளை பின் தொடர்ந்து  இம்ப்ரஸ் செய்து, தன்  காதலை சொல்வது தான் சரி என்கிற எண்ணம்  இருப்பதும், அதை அவள் ஏற்க மறுக்கும் போது அதை தோல்வியாய், அவமானமாய் பார்க்கும் மனநிலைக்கு ஆண் தள்ளப்படுவதால் நடக்கும் குற்றங்களும் பார்க்கும் போது, சினிமா தான்  இவர்களை கெடுப்பதாய் மனம் பதைக்கிறது. ஆனால் என்னைப் பொறுத்த வரை, இதற்கான மாற்றம் நம் வீட்டிலிருந்து வர வேண்டும். நம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் கல்வி.  குடும்பத்தில் பெண்களுக்கு கொடுக்கும் முக்யத்துவம்.  சக பெண்களை ஆசா பாசம் உள்ள மனுஷியாய் மதிப்பது. நம் குழந்தைகளுக்கு எப்படி குட் டச் பேட் டச் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோமோ அது போல, நம் குழந்தைகளின் இம்மாதிரியான வன்முறைகளுக்கு இடமாகும் போது, சட்டரீதியாய் நடவடிக்கை எடுக்க, பெற்றோராய் அவர்களுக்கு ஆதரவாய் நிற்பதும், வன்முறையில் இறங்கும் போது ஆம்பளைப் புள்ள அப்படித்தான் இருப்பான் பொம்பளை புள்ள நீ ஒழுங்கா இருந்தா அவன் ஏன் இப்படி பண்ணுறான் என்று அந்த ஆண் மகனைப் பெற்ற அம்மாவே சப்போர்ட் செய்யாமல் இருக்க அவர்களுக்கு இது தவறு, தண்டனைக்குரிய செயல் என்று சொல்லித்தர வேண்டும். ஆனால் இந்த மாற்றங்கள் மெதுவாய்த்தான் வரும். நாம் சோர்வடையக்கூடாது. தொடர்ந்து செயல் பட்டுக் கொண்டே வரும். எப்படி பெண்களுக்கு எதிரான விதவை திருமணம், சதி, போன்றவைகள் மாறியதோ அது போல  மாறும். மாற்றம் வேண்டுமெனில் இருக்கிற சிஸ்டத்தோடு இயங்கினாலேயன்றி மாற்றத்தை கொண்டு வர முடியாது. முயல்வோம்.  பெண்ணை, பெண்மையை போற்றவெல்லாம் வேண்டாம். சக உயிரனமாய், எல்லா உரிமைகளையும் கொடுத்து மதிக்க கற்றுக் கொள்வோம், கற்றுக் கொடுப்போம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம் - பதாகன்
இண்ட்ரோவர்டான இளைஞன். அவனுக்கு ஒரு பெண்ணை பிடிக்கிறது. தினமும் அந்தப் பெண்ணை தூரத்திலிருந்து பார்த்து வருவதை அவனின் தாத்தா கவனித்து, அவன் சார்பாக பெண் கேட்கிறார். பார்மல் பெண் பார்க்கும் சம்பவத்திற்கு முதல் நாள் அவன் வீட்டில் ஒர் கட்டெறும்பு அவனை கடித்துவிடுகிறது. அதனால் அவனது முகம் மிக கோரமாய் காட்சியளிக்கும் படியாக மாறிவிட, அப்பெண்ணின் பெற்றோர்கள் பெண் தர மறுத்து வேறு ஒருவனுக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்கல். கோபத்தில் அந்த கட்டெறும்பைத் தேடி கொல்ல முயற்சிக்கிறான். அப்போது வரும் செய்தி தான் க்ளைமேக்ஸ்.. லீனியராய் சொன்னால்  சாதாரணமாகத் தெரியும் கதையை படு சுவாரஸ்யமாக்கியது வைத்தது நான்லீனியர் ஸ்க்ரீன்ப்ளே, விக்னேஷின் எடிட்டிங், கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவு, நிர்மல் ராஜின் இசையும் தான் காரணம். எழுதி இயக்கியவர் ரமேஷ். தாத்தா அரந்தை மணியன், பேரன் சித்தார்த், நாயகி மிஷா கோஷல் ஆகியோரின் ஸ்கிரின் ப்ரெஸென்ஸ்.. குட்.. இன்னும் கொஞ்சம் ட்ரிம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற எண்ணம் வந்ததை மறுக்க முடியவில்லை.
https://www.youtube.com/watch?v=LNe3fX5tvD4
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Breaking Bad
2013 ஆம் ஆண்டு கின்னஸ் புக் ஆப் ரெக்கார்டில் அதிகப்பட்ச விமர்சகர்களால் பாராட்டுப் பெற்றது. அமெரிக்க டெலிவிஷன் வரலாற்றிலேயே இந்த சீரியலின் கடைசி எபிசோட் அன்று அதிகபட்ச பார்வையாளர்களை கவர்ந்தது. ஏகப்பட்ட விருதுகளை அள்ளியது என்பது போன்ற பல பெருமைகள் இந்த சீரீஸுக்கு உண்டு. ஜனவரி 2008 -செப்டம்பர் 2013 வரை ஐந்து சீசன்கள் ஏபிசி நெட்வொர்க்கில் வெளியானது. வின்சி கிலிகன் என்பவர் உருவாக்கிய சீரிஸ். கதை இது தான்.  வால்டர் வொயிட் எனும் சாதாரண ஹை ஸ்கூல் கெமிஸ்டரி டீச்சர். அவருக்கு ஒரு மாற்று திறனாளியான மகனும், கர்பத்துடனான மனைவி ஸ்கைலரும் உண்டு.  பெரிதாய் ஏதும் ஆசைப்படாத உழைக்கும் சாதாரணனான வொயிட்டின் வாழ்க்கையில் திடீரென ஒரு அதிர்ச்சி. எந்த விதமான புகைக்கும் பழக்கமும் இல்லாத அவருக்கு லங்க் கேன்சர். ஆடித்தான் போகிறார். இனி தன் குடும்பம் எப்படி சர்வைவ் ஆகும்? அதற்கான பணத்திற்கு எங்கு போகும்? பிறக்கப் போகும் குழந்தைக்கும், வளர்ந்து நிற்கும் மகனுக்கும் என்ன செய்யப் போகிறோம்? என்ற கேள்வி. தான் சாவதற்குள் எப்படியாவது  பணம் சம்பாரிக்க வேண்டுமென்று விழைகிறார். அப்போதுதான் அவருடய மாணவனான ஜெஸ்ஸி பிங்க் மேனை சந்திக்கிறார். அவன் ’மெத்தம்பெட்டமைன்’ எனும் கிரிஸ்டல் வகை போதை பொருளை சிறு அளவில் தயாரித்து விற்றுக் கொண்டிருக்க, துரித பணம் சம்பாதிக்க, அவனுடன் சேர்ந்து நல்ல தரமான போதை வஸ்துவை தயாரித்து விற்க ஆரம்பிக்கிறார். பிடித்தது புலி வால். அது நேர்மையான கெமிஸ்டரி வாத்தியாரை போதை பொருட்களை தயாரிப்பவனாக மாற்றியது மட்டுமல்லாமல் அதன் பின்னணியில் உள்ள குற்ற காரியங்களையும் வழியேயில்லாமல் செய்ய விழைய, அதீத பணம் ஒரு புறம். தான் செய்யும் ரகசிய காரியம் தன் குடும்பத்துக்கு தெரியக் கூடாது என்ற பயம் ஒரு புறம். இன்னொரு பக்கம் ட்ரக் என்போர்ஸ்மெண்ட்டில் போலீஸ் அதிகாரியாய் இருக்கும் தன் சகலைக்கு தெரியாமல் வைத்திருக்க வேண்டிய கட்டாயம். என கதை போக.. ஒரு கட்டத்தில் அவனது கேன்சர் குணமாக ஆரம்பிக்கிறது. ஆனால் புலி வாலை விட முடியாமல் அவன் படும் போராட்டம். அவனது எமோஷனல் வீக்னெஸ்சான ஜெஸ்ஸி பிங்க்மேனின் கேரக்டரால் படும் அவதிகள். இந்த மெத் மருத்தின் பின்னணியில் இருக்கும் போதை மருந்து நெட்வொர்க். அதன் துரோகங்கள். பழிவாங்கல். சட்ட ரீதியான சிக்கல்கள். போதையுலகிலும், போலீஸ் வட்டாரத்திலும் ஹைசென்பர்க் என உருவகப்படுத்தப்படும் பிம்பம். இப்படி எல்லா விஷயங்களிலிருந்தும் இருக்கவும் முடியாமல், வெளிவரவும் முடியாமல் அடையும் மன உளைச்சல். ஒவ்வொரு எபிசோடின் முடிவிலும் ஜெஸ்ஸியால் ஏற்படுத்தப்படும்  டெக்னிக்கல் குளறுபடிகளை சிம்பிள் கெமிக்கல்  ஜித்துக்கள் தப்பிக்கும் ஐடியாக்கள்.   அருமையான எமோஷனல் சீன்கள். அதீத வயலென்ஸ். கொஞ்சம் கம்போஸ்டான செக்ஸ்.  என பார்க்க ஆரம்பித்தால் நம்மை விடாது கட்டிப் போட்டுவிடும் சீரியல். ப்ராயன் க்ரான்ஸ்டனின் அபாரமான நடிப்பு. அருமையான கேரக்டர்கள். விஷுவல்ஸ். மேக்கிங். க்ரைம் திரில்லர் வகையறாக்களின் மேல் அதீத காதல் உள்ளவராக இருந்தால் இந்த சீரீஸ் ஒரு விடாது கருப்பு. ஐந்து சீசனையும் பார்க்காமல் விடாது. நெட்ப்ளிக்ஸில் தற்போது கிடைக்கிறது. என்ஜாய்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அம்மணி
ஃபீல் குட் வகைப் படங்கள் ஒரு வகையென்றால் நிஜ வாழ்க்கையின் பக்கத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து வரும் படங்கள் இன்னொரு வகை. அதில் ரெண்டாவது வகையில் வரும் இந்த அம்மணி. சாலம்மா எனும் கவர்மெண்ட் ஆஸ்பிட்டல் ஆயாதான் படத்தின் கதாநாயகி.  ஆனால் அவள் வீட்டில் யார் ஆதரவும் இல்லாமல் வாழும் அம்மிணி எனும் பிராமண மூதாட்டி தான் கதையின் நாயகி. கொஞ்சமே கொஞ்சம் நீட்டி முழக்கினாலும் டிவி சீரியல் மேட்டர் என்று சொல்லிவிடக்கூடிய கதை தான். அதை குட்டிக் குட்டியான காட்சிகளால் சுவாரஸ்யமாக்கியிருக்கிறார் இயக்குனர் லஷ்மி ராமகிருஷ்ணன். ரயில் தண்டவாளம். ரயில் பின்னணியில் இருக்கும் வீடு. இயல்பான வசனங்கள். மருமகளாய் நடித்திருக்கும் அந்த இரு பெண்களின் தேர்வு. அம்மிணி பாட்டியின் கேரக்டரைஷேஷன். கேயின் பின்னணி மற்றும் சாருகேசியில் அமைந்த “மழை இங்கில்லையே” ஒரு அட்டகாசப் பாடல். இப்படியான எல்லா பாஸிட்டிவ் விஷயங்களை மீறி, படத்தின் நீளத்துக்காக வரும் ரோபோ சங்கர் குத்து பாட்டு, கொஞ்சம் நீட்டி முழக்கப்படும் குடும்ப காட்சிகள், கன்வின்ஸிங் இல்லாத  க்ளைமேக்ஸ் மட்டுமே கொஞ்சம் இடறுகிறது. பட்.. கொரிய படங்களைப் பாருங்கள். ஈரானிய படங்களைப் பாருங்கள். வாழ்க்கையிலிருந்தே எடுக்கப்படும் கதைகளை எவ்வளவு அருமையாய் எடுக்கிறார்கள் என்று பக்கம் பக்கமாய் எழுதுகிறவர்கள் கூட போய் பார்த்ததாய் தெரியவில்லை. காரணம் திரையிட திரையில்லாமை ஒரு புறம்.  அப்படியே திரையிட்ட அரங்குகளில் சேரும் கூட்டமும் ஒரு காரணம். நான் பார்த்த முதல் நாள் காட்சியில் மொத்தமே முப்பது பேருக்கு மேல் இல்லை. பாப்கார்ன் விக்காத எந்த படத்தையும் தியேட்டர்காரர்கள் வைத்திருக்க விரும்புவதில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேட்டால் கிடைக்கும்
மேக்ஸில் தீபாவளி பர்சேஸ். பில் போடுமிடத்தில் நான் மிகவும் எதிர்பார்த்த பஞ்சாயத்து. துணிகளை கொடுக்கும் பைகளுக்கு பணம் கேட்கும் படலம். நான் கொடுக்க மாட்டேன் என்றேன். ”இல்லை சார்.. கவர்மெண்ட் ரூல்” என்றார். “எது பைய விலை விக்கணும்ங்கிறதா?” என்பது சரியான பதிலில்லை. “அரசு ப்ளாஸ்டிக் உபயோகிப்பதை தடுக்கத்தான் இந்த சட்டத்தை கொண்டு வந்தார்கள். ஒன்று பையை மக்கள் கொண்டு வருவார்கள். அல்லது உங்களைப் போன்ற பெரு வியாபாரிகள் அதற்கான மாற்றை கொண்டு வந்து ப்ளாஸ்டிக்கை ஒழிப்பீர்கள் என்கிற நம்பிக்கையில் தான். நீங்க ப்ளாஸ்டிக்கை ஒழிக்கணும்னு நினைச்சா.. துணிப்பையையோ, அல்லது சணல் பையையோ தயாரிச்சு. அதுக்கு காசு வாங்கியிருந்தாகூட இந்தனை வருஷத்துல ப்ளாஸ்டிக்கை கொஞ்சம் கொஞ்சமாய் ஒழிச்சிருக்கலாம். பட்.. ஒரு ரூபாய் வாங்க ஆரம்பிச்சு, இன்னைக்கு ஏழு ரூபா வரைக்கும் அதுவும் டேக்ஸோட வாங்குறீங்க. இதுல ரெண்டு பக்கத்துல உங்க விளம்பரம் வேற. ஸோ.. காசு கொடுத்துதான் பைய வாங்கணும்னா.. உங்க விளம்பரம் இல்லாம கொடுங்க.. இல்லை துணிப்பையை விலைக்கு கொடுங்க. அதுவும் இல்லைன்னா.. பையை ப்ரீயா கொடுங்க.. எதுவுமே முடியாதுன்னா நான் இந்த துணிகளை வாங்கப் போறது இல்லை” என்றேன். சுற்றியுள்ள மக்களிடமிருந்து ஏகோபித்த குரலில் “கேளுங்க..சார்.. கேளுங்க சார்..” என்ற உற்சாக குரல் வர,  “எல்லாத்துக்கு யாராவது வந்து கேட்கணும்னு ஏன் காத்திருக்கீங்க? நீங்களும் கேளுங்க கிடைக்கும் என்றேன். கிட்டத்தட்ட நான் பில் போட்டு வெளியே வரும் வரை அனைவரின் ப்ளாஸ்டிக் பைக்கு விலையில்லாததாய் ஆனது. கேட்டால் கிடைக்கும் நம்புங்கள்.


Nov 3, 2016

கொத்து பரோட்டா 2.0-6

கொத்து பரோட்டா -2.0-6
நாட்டில் எங்கு பார்த்தாலும் பெண்கள் மீதான வன்முறை அதிகமாகிக் கொண்டுதானிருகிறது. நாட்டில் நடக்கும் பல கற்பழிப்பு சம்பவங்கள் வெளியே தெரிவதேயில்லை. அதையும் மீறி இந்திய அளவில் ஒரிரு சம்பவங்கள் மீடியாவினால் பெரிதாக்கப்பட்டு அதன் பிறகு பேசப்படுவதில்லை. ஆனால் இந்த இழி செயலை செய்பவர்களை சட்டமும் பெரிய அளவில் தண்டிப்பதில்லை. சில வருடங்களில் வெளிவந்து கல்யாணம் செய்து கொண்டு ரேப்பை விட்ட இடத்திலிருந்து ஒரே இடத்தில் பண்ணிக் கொண்டுதானிருக்கிறான். அதிலும் ரெண்டு வயது பெண் குழந்தையிடமெல்லாம் இந்த வேலை செய்கிறவனின் “லுல்லா” வை அறுத்து எரியணும் என்று பெருங்கோபத்தோடு பெருமுகிறவர்கள் இருக்க, சமீபத்தில் அமெரிக்காவில் வடக்கு கரோலினா மாகாணத்தில் கிம்பர்லி வால்ட் எனும் 17 வயது பெண் தன் நண்பர்களுடன் நடந்து போகும் போது ராபர்ட் வில்லியம் எனும் மூன்று முறை தண்டிக்கப்பட்ட குற்றவாளி, ட்ரைவுக்கு அழைத்து, வால்ட் மறுத்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவரை தூக்கிப் போய் கற்பழித்துவிட்டார். அந்த போராட்டத்தில் வால்ட் மயக்கமடைந்துவிட, எழுந்து பார்த்தபோது தன்னை கற்பழித்தவன் குடி போதையில் இருக்க, தனக்கு நடந்த கொடுமைக்கு அவனை பழிவாங்க முடிவெடுத்து, அவனது விரைக்கொட்டையை அறுத்து, அவனது மைக்ரோவேவில் சமைத்து, துப்பாக்கி முனையில் அவனை சாப்பிட வைத்திருக்கிறாள். அமெரிக்க படங்கல் வரும் வன்முறை போல இருந்தாலும். சரியான தண்டனை என்றே எனக்கு தோன்றுகிறது. போலீஸும், வால்டை கைது செய்யவில்லை.  எதையும் பெருசாய் கொண்டாடும் அமெரிக்கர்கள் இந்தப் பெண்ணையும் சூப்பர் ஹீரோ ரேஞ்சுக்கு கொண்டாடுகிறார்கள்.  வன்முறை நல்லது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
புதிது புதிதாய் சில ஹெச்.டி சேனல்கள் டிவி 18 குழுமம் திறந்துவிட்டிருக்கிறது. FYI டிவி என்பது தான் அது. அதில் காட்டும் சில நிகழ்ச்சிகள் சுவாரஸ்யமாய் இருக்கிறது. கலப்பு திருமணம் புரிந்த, அல்லது செய்யப் போகிற ஜோடிகள் தம் தம் ஜோடிகளின் வீட்டுக்கு போய் அவர்களது உணவு, கலாச்சாரம் போன்றவற்றுடன் எப்படி இணைகிறார்கள்? எப்படி அட்ஜெஸ்ட் செய்து தங்கள் காதலில் ஜெயிக்கிறார்கள் என்று காட்டுகிறார்கள். நான்கு மொழி டப்பிங்கோடு.  அதை தொகுத்து வழங்குவது எழுத்தாளர் சேத்தன் பகத். அதனால் அந்நிகழ்ச்சிக்கு  ரியல் 2 ஸ்டேட்ஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மற்றொரு நிகழ்ச்சியில் மாமியார் /மருமகள் இருவரையும் இருவரையும் உட்கார வைத்து பேசுகிறார்கள். மகன் தனக்கு பிடித்த உணவு வகையைப் பற்றி சொல்கிறான். அதை மருமகள், அம்மா இருவரும் செய்கிறார்கள். இருவரது உணவையும் யார் செய்தது என்று சொல்லாமல் நடுவராய் மகன்/கணவரை வைத்தே எந்த உணவு நன்றாக இருக்கிறது என்று முடிவு சொல்ல, யார் சமைத்தது என்று வெளிப்படுத்துகிறார்கள். பல சமயங்களில் கணவன் அம்மாவுடயதுதான் நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். மனைவியர்களும் பெருதன்மையாய் அவருக்கு அம்மா சமையல் தான் பிடிக்குமென்று சிரித்தபடி சொல்கிறார்கள். வீட்டுக்கு போய் என்ன ஆனது என்று நிகழ்ச்சியை எக்ஸ்டெட்ண்ட் செய்தால் தான் உண்மை விளங்கும். பெண்ணியவாதிகள் இதென்ன மொக்கையான ப்ரோக்ராம் என்று கேட்கலாம். இம்மாதிரியான இக்கட்டான தருணங்கள் ஒரு ஆணுக்கு மட்டுமே பிரத்யோகமானது. அதை அவன் சமாளிக்கு விதத்தை ஒரு ஆணாய் என் போன்றவர்கள் தான் ரசித்து உள்வாங்க முடியும். எத்தனை நாளைக்கு சுவாரஸ்யமாய் இருக்கப் போகிறது என்று தெரியவில்லை. பட்.. லைவ்லி
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மதாரி என்கிற இந்திப்படம் வெளியான தினம் அன்று கபாலி வெளியானது என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ அது போல இப்படத்தின் போஸ்டர் டிசைனை கபாலி டீம் காப்பியடித்துவிட்டனர் என்கிற மாதிரியெல்லாம் பரபரப்பாக பேசிய இர்பான் கான் நடித்தபடம் மதாரி. அப்படத்தை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. ஒரு தேசிய கலாமிட்டியில் தன் மகனை இழந்த தந்தை அதற்கு காரணமான உள்துறை அமைச்சரின் பையனை கடத்தி, தன் புத்திர சோகத்தை எப்படியானது என்று  மக்களுக்கு விளக்கி, அதன் மூலம், அரசியல்வாதிகள் எவ்வளவு சுயநலமானவர்கள் என அவர்களின் முகத்திரையை கிழிக்கிறான். காமன்மேனின் கோபம். டோம்பிவில்லி ஃபாஸ்ட், தமிழில் எவனோ ஒருவன், ஹிந்தி திரிஷ்யம், தற்போது இந்த மதாரி. படம் ஆரம்பித்த சில நிமிஷங்களிலே படத்தின் மீதான சுவாரஸ்யம் போய்விடுகிறது. பேசிப் பேசி மாய்கிறார்கள். க்ளைமேக்ஸின் போதுதான் லேசான சுவாரஸ்யம் வருகிறது. அதுவும் நீண்டு போய் விட்றா சூனா பானா.. என்று தூக்கம் தான் வந்தது. ஒரே ஒரு ஆறுதல் இர்பான்கான். கலாமிட்டி என்றது வெள்ளம் ஞாபகம் வந்ததை தவிர்க்க முடியவில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சில நேரங்களில் உலகமே கொண்டாடும் சில விஷயங்கள் எனக்கு பிடிப்பதில்லை.  குறிப்பாய் திரைப்படங்கள். பல நேரங்களில் உலகே கொண்டாடுகிறது என்று ”பொய்”யப்படுகின்ற படங்களை பார்த்து அப்படி ஓடுதாமே இப்படி ஓடுதாமே என்று சிலாகிக்கும் பல பேரை பார்த்திருக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் யார் படம் பற்றி பேசினாலும் படம் சுமார் தான் கலெக்ட் பண்ணிரும், ஃபெஸ்டிவல் லீவு கல்லா கட்டிரும் என்றெல்லாம் ஸ்டேடஸ் போடுவார்கள். இன்னும் சில பேர் தியேட்டர் ஆன்லைன் புக்கிங் ஸ்கீரீன் ஷாட்டெல்லாம் போட்டு பார் இத்தனை நாள் புக்காகியிருக்கிறது என்றும். இந்த தியேட்டரில் இத்தனை சீட், இத்தனை ஷோ ஹவுஸ்புல் அப்ப இவ்வளவு கலெக்‌ஷன் என்று சொல்வார்கள். ஆனால் நிஜத்தில் அஹா ஓஹோ என்று கொண்டாடப்பட்ட சிட்டி, செங்கல்பட்டு மல்ட்டிப்ளெக்ஸ் படங்கள் அதன் முதலீட்டைக் கூட பெற்றதில்லை என்பது சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு மட்டுமே தெரியும். அவர்களும் வலிக்காத மாதிரியே நடித்துக் கொண்டிருப்பார்கள். சரி.. விஷயத்துக்கு வருவோம். அப்படி செம்ம ஓப்பனிங்.. இப்படி அப்படி என சிலாகிக்கப்பட்ட எம்.எஸ்.தோனி படம் எனக்கு பிடிக்கவே இல்லை. மூன்று மணி நேர தனிமனித துதி பாடி கல்லா கட்டும் முயற்சியே. சொல்லப்படாத கதை என்று சொல்லிவிட்டு, காதல் மேட்டரை மட்டுமே வைத்து ஒப்பேற்றியிருக்கிறார்கள். லஷ்மிராயெல்லாம் வரவேயில்லை. என்பது எனக்கு மட்டுமேயான வருத்தமா என்று கேட்டால் பதில் தெரியவில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பூதம்  - குறும்படம்
நாளைய இயக்குனர் சீசன் 5யில் இறுதிச் சுற்றில் மூன்றாவதாக வந்த படம். இந்த பூதம். ரொம்பவே சிம்பிள் கதை. விடிஞ்சா தங்கச்சிக்கு கல்யாணம். அண்ணன் எல்லா ஏற்பாட்டையும் பார்த்துட்டு நிம்மதியா தூக்கினா ஒரு பூதம் கனவுல வந்து ”உன் தங்கச்சிக்கு கல்யாணம் அதே நாள்.. ஹி..ஹி..ஹி.. உன் தங்கச்சி புருஷன்…ஹி..ஹி..ஹி. மச்சான் செத்துருவாண்டா” என்று சொல்லிவிட்டு போய்விடுகிறது. தன் தங்கச்சி புருஷனை எப்படி காப்பாற்ற முயல்கிறான். முடிவு என்னவாயிற்று என்பதுதான் கதை. க்ளைமேக்ஸ் ட்விஸ்ட் அபாரம். தங்கச்சிக்கு கல்யாணம் நடந்த பின் அவரின் மேல் காட்டும் கரிசனம், அதை பார்த்துதங்கச்சி படும் பொறாமை எல்லாம் படு காமெடி. சுவாரஸ்யமான மேக்கிங். ஒளிப்பதிவு, நடிப்பு, மிக இயல்பான நகைச்சுவை. எழுதி இயக்கியவர் மார்ட்டின். https://www.youtube.com/watch?v=9P15TwtFXF0
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பத்திருபது வருடங்களுக்கு முன்னால் சவுக்கார்பேட்டை என்.எஸ்.சி போஸ் ரோட்டில் ஒரு கையேந்தி பவனிருக்கும் வெள்ளிகிழமை ராத்திரி கொழுக் மொழுக் சேட்டுப் பெண்களும், அவர்களின் இளம் தொந்தி ஆண்களும், ஒட்டிய வயிற்றோடு ஜீரோ சைஸில் சுற்றியலையும் இளம் பெண்களும் நைட் ஷோ பார்த்துவிட்டு, கூட்டமாய் பட்டர் தோசை, வடகறி சாப்பிடுவார்கள். பட்டர் பேப்பரில் மலையாய் குவித்திருக்கும் பட்டரை தோசைக்கரண்டியின் பாதி அளவுக்கு எடுத்து, கல்லில் இருக்கும் தோசையின் மோல் ‘சொய்ங்’ என்று வீசி, அதை பரப்பி, தோசை மீது பொடி போட்டு தோசை கொடுப்பார்கள். பிரிதொரு கார்பரேஷன் விதிமுறை செயலாகி கடையை தூர்தெடுத்துவிட்டார்கள். கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு கடை டி.நகர் பிரில்லியண்ட் டிடோரியல் அருகில் இருந்தது.  அதையும் அரசு தன் கடமையை செய்துவிட்டபடியால் அவர்களின் ஆட்களே நடேசன் பார்க்கின் அருகில் கிட்டத்தட்ட அதே குவாலிட்டி பொடி தோசை போடுகிறார்கள். ஒன்லி இன் இரவுகளில் சுடச்சுட பொடி தோசை, ஊத்தப்பம், அதன் மேல் சாம்பார் என்று சொல்லமுடியாத் விதமான தக்காளி சாம்பார், அதற்கு ஈடான தேங்காய் கெட்டிச் சட்னி. ரெண்டையும் மேலே ஊற்றி கொஞ்சமே கொஞ்சம் ஊற வைத்து சாப்பிட்டால்.. வாவ்..
@@@@@@@@@@@@@@@@@@@@
ஒவ்வொரு பெரிய படம் வரும் போதும் அப்படங்களை நெகட்டிவ் விமர்சனங்கள் செய்பவர்கள் மீது ஒரு கூட்டம் தமிழ் சினிமாவை அழிக்கிறார்கள் என்று குரல் கொடுப்பார்கள்.  ஒரு காமெடி என்னவென்றால் முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிட்டு சக சினிமாக்காரர்களிடம் மொக்கை படம், சூப்பர் படம் என்று பெரும்பாலும் சொல்கிறவர்கள் என் போன்ற சினிமாக்காரர்களே. இதில் விடியோ விமர்சகர்கள் மீது அதுவும் பிரபலமாய் இருக்கிறவர்கள் மீது கல்லெறிய ஆரம்பித்திருக்கிறார்கள். நல்ல படமென்றால் அஹா ஓஹோ என்று பாராட்டுவதும் அவர்கள் தான் நல்லாயில்லை என்றால் கழுவி ஊற்றுகிறவர்களும் அவர்கள் தான். நமக்கெதுக்கு வம்பு சத்தமில்லாம இருந்திருவோம்னு பாராட்டிமட்டுமே விமர்சனம் போடும் கூட்டமொன்று உண்டு. அவர்கள் என்னதான் கூவி கூவி விமர்சனம் செய்தாலும் 4000 ஹிட்ஸ் தாண்டுவதில்லை. உண்மையை சொல்லப் போனால் இவர்களால் திட்டப்படும் படங்கள் வசூலில் குறைந்ததாய்  ஏதுமில்லை. இவர்களால் பாராட்டப்படும் படங்கள் வசூல் ஏறியதாய் சரித்திரமும் இல்லை. பட்.. ரெகுலர் விமர்சகர்களுக்கு இவர்களின் வளர்ச்சி கொஞ்சம் ஓவராகவே தெரிகிறது. இவர்களின் மீது கேஸ் போடப் போவதாய் அறிக்கையை வாட்ஸப்பில் வளைய விட்டிருக்கிறார்கள். ஏற்கனவே பத்து லட்ச ஹிட்ஸ் அடித்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு மேலும் நீங்கள் கொடுக்கும் விளம்பரம் தான் இது என்று இவர்களுக்கு புரியவில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சேம்சங் கேலக்ஸியின் நோட் 7 வெடிக்க ஆரம்பித்தாலும் ஆரம்பித்தது, மீமேகாரர்களுக்கு கொண்டாட்டமாய் போய்விட்டது. ஏகப்பட்ட வீடியோக்கள். அதில் ஒன்று ஆர்னால்டின் படத்தில் வரும் ஓருகாட்சியில் சாம்சங் கேலக்சியை க்ரேனேட் கணக்காய் தூக்கிப் போட்டு வெடிக்க வைக்கும் காட்சி. இன்னொரு பக்கம் சாம்சங் நோட்டை சார்ஜ் போட்டிருக்கிறேன் எத்தனை மணி நேரம் கழித்து வெடிக்கும் என்று பார்ப்போம் என பேஸ்புக் லைவ் வீடியோவில். இதற்கெல்லாம் உச்சமாய் சமீபத்தில் அமெரிக்காவில் விமானங்களில் கேலக்ஸி நோட்டுடன் பயணப்பட்டால் உங்களது போர்டிங் மறுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. என்ன சேம்சங்குக்கு வந்த சோதனை.

குமுதம் 2-11-16