Thottal Thodarum

Apr 29, 2020

லாக்டவுன் கதைகள் -5


”சஷ்டியை நோக்க சரவணபவன.. ஷிஸ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்” என்று போன் ரிங்க்டோன் அடித்துக் கொண்டேயிருந்தது. அம்மாவுடய போன்.
“அம்மா உன் போன் தான் அடிக்குது. எடேன்” என்று சிவா ஹாலிலிருந்து கத்தினான்.
“போனை விட நீதான் ரொம்ப அலர்ற” என்றாள் சின்னவள். குதர்க்கம் அதிகம் அம்மா மாதிரியே. அவளை முறைத்தான் சிவா. பெரியவள் நெட்ப்ளிக்ஸில் சீரீஸ் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பார்க்கிற சீரீஸில் வரும் பெண்கள் எல்லோரும் பொச்சு பொச்சுனு முத்தம் கொடுத்துக் கொண்டேயிருந்தார்கள். அவளுக்கு எப்படி இருக்கிறதோ தெரியவில்லை சிவாவுக்கு அதைப் பார்க்கும் போதெல்லாம் அன் ஈஸியாய் இருந்தது.
”சுபாம்மா.. ஏன் நீ இந்த கார்டூன், அனிமேஷன் படங்கள் எல்லாம் பாக்கலாமே? கண்டதை பார்க்காம?” என்று கேட்டான் சிவா.
“ப்பா.. கார்ட்டூன் பார்க்க நான் என்ன சின்னக் குழந்தையா? ஐயம் 12. ஐ நீட் சம் ஸ்பேஸ். எப்பப் பாரு அதைப் பாக்காத, இதைப் பாக்காதன்னுட்டு. பாரும்மா அப்பாவை. இந்த ஸ்கூல் எழவு திறந்தா நல்லாருக்கும்”  என்று சிடுசிடுத்தபடி,”நெட்ப்ளீக்ஸுல புதுசா Never have I everனு ஒரு புது சீரிஸ் விட்டிருக்கான். செம்ம ஹாட்” என்று யாருடனோ போனில் கிக்கிலித்துக் கொண்டே சொன்னாள்.
12 வயசுக்கு நானெல்லாம் ராணி காமிக்ஸ் படித்துக் கொண்டும், ரோட்டில் வரும் குச்சி ஐஸும், கமர்கட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.  மொத்தமாய் எட்டு படம் பார்த்திருந்தால் அதிகம். இவள் சொல்லும் சீரீஸ் ட்ரைலரிலேயே 13 வயசு பெண்ணின் ரூமுக்குள் சிக்ஸ் பேக்குடன் தடாலடியாய் நுழைந்து ஸ்ட்ரிப்டீஸ் போல தன் மேல் சட்டையை துறந்தபடி, “லெட்ஸ் ஹேவ் செக்ஸ்” என்று பிட்ஸா சாப்பிடக் கூப்பிடுவது போல கூப்பிடுகிறான். இதைத்தான் இவள் ஹாட் என்கிறாள்.  மீண்டும் அம்மாவின் போன் சஷ்டியையும் ஷிஸ்டரையும் ஒன்று சேர்த்து அலற, “அம்மா அந்த போன்ல யாருனு பாரேன்ம்மா” என்று கத்தினேன்.
”ஏன் கத்துறீங்க?.”
“அது பாட்டுக்கு அடிச்சிண்டே இருக்கு. எங்க போய் தொலைஞ்சா எங்கம்மா. இல்லை நீயாச்சும் எடுத்து அட்டெண்ட் பண்ணு”
“நானு..  உங்கம்மா போனை. அட்டெண்ட் பண்ணிட்டாலும்.. உங்க பொண்ணு போனைக் கூட எடுத்துப் பார்த்துரலாம். அவ போனை எடுத்தா போச்சு.. அத்தனை மூஞ்சிய தூக்கி வச்சிக்குவா?. பொண்ணோட வச்சிட்டிருக்கிற ட்ரான்ஸாக்‌ஷன் ரகசியங்கள். எனக்கு தெரியாதுனு நினைச்சிட்டு பண்ணிட்டிருக்கா, எனக்கா தெரியாது? ஒரு நாள்  இல்லை ஒரு நாள் நான் கேக்காம விடமாட்டேன்.”
“இந்த லாக்டவுன் எல்லாம் முடிஞ்சு நான் ஆபீஸ் போனப்புறம் கேளு. இப்ப வேணாம். நித்யா”
“கிண்டல்?. உங்கம்மா தங்கையப் பத்தி சொன்னதும் பொத்துட்டு வருது பாசம்?”
“நான் சொன்னது பாசமாவா தெரியுது? அது சர்காசம்மா”
“ம்க்கும்”
“அதானே சர்காசம் எல்லாம் புரிஞ்ச பொண்டாட்டி அமைஞ்சிருந்தா என் வாழ்க்கைதான் நல்லாருந்திருக்குமே”
“ஏன் இப்ப மட்டும் என்ன குறைச்சல்? எவளுக்கு உங்க குதர்க்கம் புரிஞ்சு ஈனு இளிக்கிறாளோ அவளோட நடத்துங்களே உங்க குடும்பத்த. நான் என் குழந்தைகளோட சந்தோஷமா இருந்துப்பேன். என்னடி சுபா?” என்று சுபாவைப் பார்த்து கத்தலாய் சொல்ல, போனில் இருந்த சுபா புரிந்தார்ப் போல கட்டைவிரலை உயர்த்தி சிரித்தபடி போனில் தொடர்ந்தாள்.
“ம்மா. ப்பா.. நீங்க ரெண்டு பேரும் இப்ப போடுறது சண்டைன்னா நீட் சம் ஆட்டிடியூட்” என்று சொல்லி சிரித்தபடி ஹாலை விட்டு வெளியே போனாள் சின்னவள்.  மீண்டும் போன் அடிக்க “ஏண்டி அத்தன வாட்டி போன் அடிக்கிறதே எடுத்து யாருனு பாக்ககூடாது?” என்றபடி பாத்ரூமிலிருந்து வெளியே வந்தாள் அம்மா.
நித்யா பதில் சொல்லாமல் சைகையாய் “எடுக்க விட்டுட்டாலும்” என்று முனகலாய் கையாட்ட, எங்கே அம்மா நித்யாவின் ரியாக்‌ஷனை பார்த்து சண்டை ஏதாவது வந்து விடப் போகிறதோ என்கிற பதட்டத்தில் “வாயெல்லாம் நமநமங்குறது. திங்கறதுக்கு ஏதாச்சும் வடாம் பொரிச்சித் தரயா?”
“லாக்டவுன் ஆரம்பிச்சதிலேர்ந்து பர்மெனெண்டா சமையல் ரூம்லேயே குடியிருக்கேன். இந்த பொழைப்புக்கு கொரானா வந்து சாகலாம்”
“யாரு மேல இருக்குற கோபத்த இப்படி அவன் மேல காட்டுற?” என்று அம்மா நித்யாவிடம் கேட்டிருக்க கூடாதுதான்.
”என் புருஷன்கிட்ட நான் ஆயிரம் பேசுவேன். உங்களூக்கு என்ன? போன் வந்திருச்சு இல்லை போய் குசுகுசுனு பேச ஆரம்பிங்க” என்றாள் நித்யா.
“நான் யாரு கிட்ட குசுகுசுனு பேசணும்?. நீயும் உங்கம்மாவும் பேசாத ரகசியமா நான் பேசிடப் போறேன்”
”நீங்க உங்க பொண்ணோட பேசுறது ரகசியம்னா நாங்க பேசுறதும் ரகசியமா இருந்துட்டுப் போகட்டும்”
”அப்பா.. திஸ் இஸ் இட்.. இவங்க ரெண்டு பேர் பாடிலேங்குவேஜுலேயும் ஒரு ஆட்டிட்டியூட் இருக்கு பாரு” என்று காதோரம் கிசுகிசுத்துவிட்டு போனாள் சின்ன ராட்சஸி.
“என்னவாண்டா அவளுக்கு? ரகசியம் சொல்லிட்டுப் போறா?”
“அது ஒண்ணுமில்ல. குழந்தைகள்”
“என்னைப் பத்தித்தானே. பெரியவங்களுக்கு என்ன மரியாதை கொடுக்கணும்னு சொல்லிக் கொடுத்தாத்தானே?’
“உங்க பேரன் வந்தா மட்டும் ரொம்ப மரியாதை கொடுக்குறான் பாருங்க மாமா மாமிக்கு?
“தேவையில்லாத அவனை எதுக்கு இழுக்குற இதுல?”
“கண்முன்னாடி இருக்குற பேத்திகளுக்கு மரியாதை தெரியாது. இல்லாத பேரனைச் சொன்னா ஏன் உங்களுக்கு கோபம் வருது?”
“நான் பேசவே இல்லைடி.. இனிமே. வாயத் திறந்தா ஏன்னு கேளு. வயசான காலத்துல மட்டு மரியாதை இல்லாம பேசுறா நீயும் பார்க்குற” என்று சிவாவைப் பார்த்து கத்தினாள் அம்மா.
“அம்மா சண்டைப் போட்டது நீங்க என்னை ஏன் இதுல இழுக்குறீங்க?”
“தோ.. பெத்ததும் சரியில்லை. அவனுக்கு வந்து வாய்ச்சதும் சரியில்லை. நான் சாகுறேன்’ என்ற போது மீண்டும் அவளின் செல் அடிக்க, இம்முறை சஷ்டியை நோக்குவதற்கு எடுத்துவிட்டாள்.
“ம்ம். .சொல்லுடி”
“இருக்கேன். என்னாத்த சொல்ல?. ஒரு வாய் சோத்துக்கு அல்லாட வச்சுடானே இந்த கடவுள்?’
“அய்யய்யோ?
“என்னாடி சொல்லுறே?”
“நீயும் வாயை வச்சிண்டு சும்மா இருந்திருக்க மாட்ட”
“என்னாது ஒண்ணும் பண்ணலையா?. உன்னைப் பத்தி எனக்கு தெரியாது.”
“இத்தனை வயசுக்கு அப்புறம் இது தேவையா?’
“ஏதோ ஒரு கோபத்துல போயிருப்பார். எங்கப் போகப் போறாரு? வரட்டும் பேசுவோம்.”
“ஆமா லாக்டவன் முடிஞ்சாத்தானே வெளிய வர முடியும். அப்ப வர்றேன். இந்த கொரானா வேற வயசானவங்களைத்தான் கொல்லுதாம். எவளோ ஒரு மருமக தான் பரப்பி விட்டிருக்கா போல”
“போலீஸ் கேஸுனு ஆயிருச்சு. நடக்குறது நடக்கட்டும். கடவுள் விட்ட வழி”
“என்னம்மா போலீஸ் அது இதுன்னு? யாரு?” சிவாவின் குரலில் ஆர்வம் அதிகமாய் இருந்தது.
“உங்க சித்திதாண்டா. போன்ல. சித்தப்பாவுக்கும் அவளுக்கு பத்து நாளா சண்டையாம். எங்கம்மா டார்ச்சர் தாங்கலையாம். நெதம் ஏதாச்சும் ஒரு பிரச்சனை கிளப்பிட்டிருக்காளாம். இதுனால புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டை முத்திப் போய், உங்க சித்தி மேல போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்துட்டாராம் உங்க சித்தப்பா. இந்த நிமிஷம் உன்னை நான் டைவர்ஸ் பண்ணுறேனு. வயசான காலத்துல கூழோ கஞ்சியோ குடிச்சிட்டு இருக்குறத விட்டுட்டு. மாப்பிள்ளை வீட்டுல இருந்துட்டு என்னா அழிச்சாட்டியம் பண்ணிட்டிருக்கா உன் பாட்டி?. இந்த கொரானா இவளுக்கெல்லாம் வந்து போய் தொலையக்கூடாது?’ என்ற அம்மாவை அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்தான் சிவா.

#லாக்டவுன்

Apr 28, 2020

லாக்டவுன் கதைகள்-4


ஒரு அரை மணி நேரத்துல வந்திருவேன். நீங்க வர எவ்வளவு நேரம் ஆகும்?”
“நானும் வந்திருவேன் அரை மணி நேரத்துல”
“ஒண்ணும் பிரச்சனை இருக்காதே. போலீஸ் அது இதுன்னு”
“அட நான் தினம் அங்க தான் போறேன் தம்மடிச்சிட்டுத்தான் வருவேன்”
“இல்லீங்க அப்புறம் வெளிய வந்தேனு தோப்புக்கரணம் போட வைச்சு வீடியோ வெளிய விட்டுருவாங்க. அசிங்கமாயிரும்”
“அஹா அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. ஐ வில் டேக் கேர். நீங்க வாங்க பிரேதன்”
“ஓகே. டன் ஷான்” என்று போனை வைத்தான் ரமேஷ் பிரேதன்.
ஷாந்தனு அவனுடய இண்டிபெண்டண்ட் படத்தின் இசையமைப்பாளன். குவரண்டைன் ஆரம்பித்ததிலிருந்து தினமும் போனில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேரில் சந்திக்கவேயில்லை. இருவரது வீடும் ரெண்டு கிலோ மீட்டர் நடுவில் இருந்தாலும், ரமேஷுக்கு அரசின் விதிமுறையை மீறி வெளியே சுற்ற விருப்பமில்லை. உண்மையை சொல்லப் போனால் விருப்பத்தையெல்லாம் மீறி எங்கே கொரானா தனக்கும் வந்துவிடுமோ? என்கிற பயம்தான் மிக முக்கியமான காரணம். நான்கைந்து இண்டர்நேஷனல் விருது வாங்காமல் சாக நான் தயாராக இல்லை என்று ஒவ்வொரு முறை ஷாந்தனு கூப்பிடும் போதும் சொல்லி தட்டிக் கழித்துவிடுவான்.
“வீட்டுலேயே இருந்து ரொம்ப சுத்த பத்தமாகி இம்யூனிட்டி குறையப் போவுது” என்று ஷான் கிண்டல் செய்தான். சமயங்களில் அவன் சொல்வது உண்மையோ என்று சந்தேகப்படும் அளவிற்கு மொட்டை மாடியில் அரை மணி நேரம் வாக் போய்விட்டு வந்தவுடன் தொண்டை கட்டியது போன்ற உணர்வு உண்டாகி மொட்டை மாடிக்கும் போவதில்லை. இருந்தாலும் ஷாந்தனு ரொம்பவே ஓட்டிக் கொண்டிருப்பதால் வீரமாய் அரசு அனுமதித்த 6-1 பர்சேஸ் டைமில் போய்விட்டு வந்துவிடலாம் என்று முடிவெடுத்துத்தான் இந்த ப்ளான்.
கையில் ரெண்டு கட்டைப் பைகளை எடுத்து வைத்துக் கொண்டான். தன்னுடய இயக்குனர் சங்க கார்டையும் எடுத்து வைத்துக் கொண்டு, கர்ச்சீப்பை முகத்தில் கட்டிக் கொண்டு வண்டியை வெளியே எடுத்தான். வழக்கமான காலை வேளை போல் இல்லை தெரு. எல்லா மளிகை கடை வாசலிலும் சின்னதாய் காய்கறிக்கடை முளைத்திருந்தது.  ஒவ்வொரு தெரு முனையிலும் யாராவது ஒரு வயதான பெண்மணியோ, பெரியவரோ, தர்பூசணி, கிர்ணி போன்ற பழங்களோடு கடை போட்டிருந்தார்கள். டிவியில் காட்டும் அளவிற்கு ஏகப்பட்ட கூட்டமோ, நெரிசலோ சமூக இடைவெளியோ மெயிண்டெயின் பண்ணும் அளவிற்கு ஆட்களே இல்லை. டிவி எப்போதும் எந்நேரமும் ப்ரேக்கிங் நியூஸாகவே காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்று யோசித்தபடி வண்டியை ஓட்டினான். ஆளே இல்லாத ரோட்டில் வண்டியை ஓட்டுவது சுவாரஸ்யமாய் இருந்தது.
சைதாப்பேட்டைக்குள் நுழையும் வழியை எல்லா மெயின் ரோட்டின் வழியாகவும் உள் நுழையாத படி தடுத்திருந்தார்கள். அங்கே போலீசாரும் இருக்க, ஏரியா தெரிந்தவர்கள் பக்கத்து ரோட்டின் வழியாய் ஏரியாவை விட்டு வெளியேவோ, அல்லது உள்ளேவோ வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
மெயின் ரோடெடுக்காமல், குறுக்கு வழியாய் ஷாந்தனு வரச் சொல்லியிருந்த அசோக் நகர் சரவணா பவன் ஓட்டல் வாசலில் வண்டியை நிறுத்தினேன். சில வருடங்களாகவே களையிழந்து போயிருக்கும் சரவணபவனின் வாசலில் பத்திருபது வண்டிகள். ரொண்டொரு கார்கள் நிற்க, காபி சாப்பிட்டே பல நாட்கள் ஆனது போல வந்தவர்கள் எல்லோரும் காப்பி ஆர்டர் செய்து குடித்துக் கொண்டிருந்தார்கள்.
ஓட்டலை ஒட்டிய பேப்பர் கடை வாசலில் நான்கைந்து பேர் சமூக இடைவெளியோடு, சிகரட் பிடித்துக் கொண்டிருந்தார்கள். ஷாந்தனுவும் வந்து தன் காரை பார்க் செய்துவிட்டு பிரேதனைப் பார்த்து கையசைத்தான்.
“வாங்க” என்று கை நீட்டிக் கொண்டே வந்தவன் சட்டென சுதாரித்து, இந்திய வணக்கம் சொல்லி, “ஜெய் கொரானா” என்றான்.
“அட நீங்க வேற என்னங்க இப்படி இருக்கு ஊரு? டீவில ஆவூன்னா அங்க கூட்டம் இங்க கூட்டம்னு சொல்லிட்டிருக்கானுங்க”
“அவனுங்க சொல்லட்டும் வாங்க காப்பி சாப்ட்டு தம்மடிச்சிட்டு போவலாம்” என்று சரவணபவனில் ஆளுக்கொரு காப்பி ஆர்ட்ர செய்து சாப்பிட்டுவிட்டு, பக்கத்துக் கடையில் ஒரு சிகரட்டை வாங்கி பற்ற வைத்தான். பில்லர் அருகே மெயின் ரோடு கிராதிக்கு அப்பால் வண்டி ஓட்டிக் கொண்டு வந்தவர்களை பிடித்து விசாரித்துக் கொண்டிருந்தார்கள். அதை ஒருவன் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான்.
“என்னா சொல்லுங்க காப்பி சாப்டு ஒரு தம் அடிச்சா சுகமே தனிதான்” என்று சொல்லியபடி ஆழமாய்  புகையை இழுத்தான் ஷாந்தனு
“சீக்கிரம் அடிங்க போலீஸ் காரணுங்க வீடியோ எடுத்திட்டிருக்காங்க” என்றான் ரமேஷ் பிரேதன். அவனுக்கு பதட்டமாகவே இருந்தது.
“அட நீங்க வேற பயப்படாதீங்க. என்ன அரஸ்டா பண்ணுவாங்க?’ என்று அடுத்த பஃப்பை ஆழமாய் இழுத்துக் கொண்டிருக்கும் போது, கிராதிக்கு அந்தப்பக்கம் இருந்த  கான்ஸ்டபிளிடம் இன்ஸ்பெக்டர் ஏதோ கடை பக்கம் காட்டி சொல்ல, கான்ஸ்டபிள் சட்டென திரும்பி கிராதியை எகிறி குதித்து, கடை நோக்கி வேகமாய் வர ஆரம்பித்தார். மொத்தமே ஒரு நூறு அடிதான் இருக்கும். அவர் வந்ததைப் பார்த்த தம் அடித்து கொண்டிருந்தவர்கள் பதறி அடித்து ஓட, ரமேஷும், பதற்றத்துடன் ஓட ஆரம்பித்தான். ஷாந்தனு “ப்ரேதன் நில்லுங்க.. நில்லுங்க” என்று கத்திக் கொண்டே பின்னால் வர, ரமேஷ் பிரேதன் கான்ஸ்டபிளின் கைக்கிடையில் கடந்து வண்டியை ஸ்டார்ட் செய்தவன் தான். திரும்பிப் பார்க்கவேயில்லை.  ஷாந்தனுவின் போன் அடித்துக் கொண்டே இருக்க, எடுக்காமல் வீடு வந்து சேர்ந்த பின் தான் எடுத்தான்.
“அட என்னங்க இப்படி பயப்புடுறீங்க. கூப்பிடக் கூப்பிட ஓடீட்டீங்களே.”
”அதெல்லாம் இருக்கட்டும் நீங்க எப்படி எஸ் ஸானீங்க?”
”நான் எதுக்கு எஸ்ஸாகணும்?”
“பின்ன போலீஸ் தம்மடிச்சவங்களை பிடிக்கத்தானே வந்திச்சு?”
“ஆமா பிடிக்கத்தான் வந்திச்சு. ஒரு மணி ஆகப் போவுது அதுக்குள்ள தம் பாக்கெட் ஒண்ணு வாங்கிட்டுவா கடை மூடிற போறானு கான்ஸ்டபிள் கிட்ட சொல்லி அனுப்பியிருக்காரு இன்ஸ்பெக்டர். அவன் வந்து ஒரு பாக்கெட் தம்மும் 50 ரூபா கட்டிங்கும் வாங்கிட்டு போனான் .நீங்க வேற உங்களையெல்லாம் பார்த்து அவன் சிரிச்ச சிரிப்பு இருக்கே..” என்ற சிரிக்க ஆரம்பித்தான் ஷாந்தனு.

#லாக்டவுன்

லாக்டவுன் கதைகள் 1

Apr 27, 2020

லாக்டவுன் கதைகள்-3


அம்மா யூனிபார்ம் அயர்ன் பண்ணவேயில்லை?”
“வீடியோல தெரியவா போவுது?”
“தெரிஞ்சா என்ன தெரியாட்டி என்ன யூனிபார்ம்னா அயர்ன் பண்ணித்தானே போடணும்?”
“ம்ம்.. ஊரே அடஞ்சுக்கிடக்கு. இதுல் அயர்ன் பண்ணி ட்ரஸ் போடுறதுதான் பாக்கி”
“அதெல்லாம் முடியாதும்மா.. எனக்கு அயர்ன் பண்ணிக் கொடு”
“உங்கப்பா சும்மாத்தானே நெட்ப்ளிக்ஸ் பார்த்துட்டு இருக்காரு அவரை அயர்ன் பண்ணச் சொல்லு”
@@@@@@@@@@@
“அப்பா”
“என்னம்மா?”
“என் யூனிபார்ம அயர்ன் பண்ணிக் கொடுப்பா. க்ளாஸ் ஆரம்பிக்குது”
“வீடியோ க்ளாஸுக்கு எல்லாம் எதுக்கு யூனிபார்ம்னு தெரியலையே. ஒர்க் ப்ரம் ஹோம் பண்ணுற நானே டீ சர்ட்டும், ட்ராயரும் போட்டுட்டு வேலை செய்யுறேன்”
“அதெல்லாம் எனக்கு தெரியாது. அம்மா உங்க கிட்ட கேட்க சொன்னாங்க”
“சுமா.. என்ன இவ அயர்ன் அது இதுன்னு சொல்லுறா?’
“ம்ம்.. கேட்குறா இல்லை செய்யுங்க”
“அயர்ன் பாக்ஸெல்லாம் எங்கேன்னே தெரியலை”
“நான் எடுத்துக் குடுத்தா பண்ணிக் கொடுக்குறீங்களா?
   
“என்ன முறைக்கிறீங்க?.  என்னைக்கு நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணியிருக்கீங்க? அவளை எதாச்சும் சொல்லி இன்னைக்கு சரி பண்ணுங்க.. நாளைய க்ளாஸுக்குள்ள ரெடி பண்ணுறேன்”
@@@@@@@@@@@@@@@@
”செல்லக்குட்டியில்லை. இன்னைக்கு அட்ஜஸ்ட் பண்ணிகுவியாம். நாளைக்கு க்ளாஸுக்கு அப்பா உனக்கு அயர்ன் பண்ணி ரெடியா வச்சிர்றேன் என்னா பாப்பா ப்ளீஸ்”
“ம்ம்ம்.. சரி.. “
”உன் டேப்பை கொடு”
“அது எதுக்கு?”
“ஆங்.. க்ளாஸ் ஆரம்பிக்குது இல்லை. டீச்சர் போர்டுல ஏதாச்சும் எழுதுனாங்கன்னா?”
“அப்பாவுக்கு ஆபீஸ் வேலைக்கு வேணும்மா.”
“அப்ப லேப்டாப் கொடு”
“ஆறாம் க்ளாஸ் போறதுக்கு எல்லாம் இத்தனை பிரஷர், பில்டப் வேணுமா?. இந்தா டேப்ப வச்சிக்க”
@@@@@@@@@@@@@@
“ஹாய்..”
“ஹாய்”
“ஹாய் வைஷு”
“ஸ்டூடண்ட்ஸ் இதென்ன பிக்னிக்கா வந்திருக்கீங்க.. ஹாய் சொல்லிட்டு. பீ காம்”
“அய்ய்யோ.. இவங்களா என் புது க்ளாஸ் டீச்சர்”
@@@@@@@@@@@@@@
“ஏன் பாப்பா டல்லா இருக்கே?”
“எனக்கு பயமா இருக்கு?”
”ஏண்டா செல்லம்?”
“புதுசா வந்த டீச்சர் ஸ்க்ரீன்ல வந்த உடனே க்ளாஸுல இருக்குறதா நினைச்சு இவங்களா நம்ம க்ளாஸ் டீச்சர்னு சொல்லிட்டேன். அவங்களுக்கு கேட்டுருக்குமோ?”
அவங்கவங்க லெவல்ல அவங்கவங்க கவலை
#லாக்டவுன்

லாக்டவுன் கதைகள் -2

"வண்டியை நிறுத்துங்க” என்று வண்டியின் சாவியை எடுத்தார் போலீஸ்.
“சார் கடைக்கு போறேன் சார்.”
“ரூல்ஸ் என்னா தெரியுமா?”
“காலையிலேர்ந்து 1 மணிக்குள்ள கடைக்கு போறதா இருந்தா போலாம் தானே?”
“யார் இல்லைன்னு சொன்னா? முகமுடி எங்க? அது இல்லாம வெளிய வரக்கூடாதுனு சொல்லியிருக்கு இல்லை. பைன் கட்டிட்டு போங்க”
“சார்.. முகமுடி வாங்கத்தான் சார் போய்ட்டு இருக்கேன்”
“அலோ முகமுடி இல்லாம போனா பைனு கவர்மெண்டு சொல்லியிருக்கு இல்லை?’
“அலோ.. வெளிய வந்தா முகமுடி போடணும்னா வீட்டுல வந்து எல்லாருக்கும் கொடுத்துட்டு ரூல் போடுங்க. கடைக்கு போய்த்தானே வாங்கணும். லூசுத்தனமா ரூல்ஸ் போட்டா எப்படிங்க வாங்குறது?”
“மரியாதையா பேசுங்க.:”
“உங்களை எங்கங்க சொன்னேன். ரூல்ஸ் போட்டவனை சொன்னேன்”

லாக்டவுன் கதைகள்-1

புதிய செல்போன் நம்பரிலிருந்து ஒரு கால். ட்ரூ காலரில் யார் அது என்று வரும் வரை காத்திருந்தேன். ஆர்.பி.எல் பொறுக்கி என்று வந்தது. மொரட்டோரியம் கொடுத்தாகிவிட்டதே என்று யோசனையோடு போனை எடுத்தேன்.
“சார் நாங்க ஆர்.பி.எல்லேர்ந்து கவிதா பேசுறேன். ரிக்கார்டிங் க்ரெடிட் கார்ட் பேமெண்ட்” என்றாள்.
“ஏங்க உங்களுக்கு எல்லாம் கொரானா லாக் டவுன் கிடையாதா?. அதான் நான் மொரட்டோரியம் போட்டு விட்டாச்சு. ரெண்டு மாசம் வரைக்கும் கட்ட முடியாதுனு சொல்லி போட்டாச்சு இல்லை.அப்புறம் ஏன் என்னை தொந்திரவு பண்ணுறீங்க?’”
“இல்லை சார்.. நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணத்தான் போன் பண்ணேன்”
“என்ன ஹெல்ப்?”
“அதான் உங்களுக்கு லேட் ஃபீஸ் வராது. வேற ஏதாச்சும் சந்தேகம் இருந்துச்சுன்னா க்ளியர் பண்ணலாமேன்னுதான்” என்றாள்
“அப்ப ஆரம்பிக்கும் போது க்ரெடிட்கார்ட் பேமெண்ட்னுதானே ஆரம்பிச்சீங்க. மொரட்டோர்யம் பத்தி உங்களுக்கு சொல்ல கால் பண்ணியிருக்கேனு இல்லை சொல்லியிருக்கணும்”
போன் கட்