Thottal Thodarum

Apr 28, 2020

லாக்டவுன் கதைகள்-4


ஒரு அரை மணி நேரத்துல வந்திருவேன். நீங்க வர எவ்வளவு நேரம் ஆகும்?”
“நானும் வந்திருவேன் அரை மணி நேரத்துல”
“ஒண்ணும் பிரச்சனை இருக்காதே. போலீஸ் அது இதுன்னு”
“அட நான் தினம் அங்க தான் போறேன் தம்மடிச்சிட்டுத்தான் வருவேன்”
“இல்லீங்க அப்புறம் வெளிய வந்தேனு தோப்புக்கரணம் போட வைச்சு வீடியோ வெளிய விட்டுருவாங்க. அசிங்கமாயிரும்”
“அஹா அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. ஐ வில் டேக் கேர். நீங்க வாங்க பிரேதன்”
“ஓகே. டன் ஷான்” என்று போனை வைத்தான் ரமேஷ் பிரேதன்.
ஷாந்தனு அவனுடய இண்டிபெண்டண்ட் படத்தின் இசையமைப்பாளன். குவரண்டைன் ஆரம்பித்ததிலிருந்து தினமும் போனில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேரில் சந்திக்கவேயில்லை. இருவரது வீடும் ரெண்டு கிலோ மீட்டர் நடுவில் இருந்தாலும், ரமேஷுக்கு அரசின் விதிமுறையை மீறி வெளியே சுற்ற விருப்பமில்லை. உண்மையை சொல்லப் போனால் விருப்பத்தையெல்லாம் மீறி எங்கே கொரானா தனக்கும் வந்துவிடுமோ? என்கிற பயம்தான் மிக முக்கியமான காரணம். நான்கைந்து இண்டர்நேஷனல் விருது வாங்காமல் சாக நான் தயாராக இல்லை என்று ஒவ்வொரு முறை ஷாந்தனு கூப்பிடும் போதும் சொல்லி தட்டிக் கழித்துவிடுவான்.
“வீட்டுலேயே இருந்து ரொம்ப சுத்த பத்தமாகி இம்யூனிட்டி குறையப் போவுது” என்று ஷான் கிண்டல் செய்தான். சமயங்களில் அவன் சொல்வது உண்மையோ என்று சந்தேகப்படும் அளவிற்கு மொட்டை மாடியில் அரை மணி நேரம் வாக் போய்விட்டு வந்தவுடன் தொண்டை கட்டியது போன்ற உணர்வு உண்டாகி மொட்டை மாடிக்கும் போவதில்லை. இருந்தாலும் ஷாந்தனு ரொம்பவே ஓட்டிக் கொண்டிருப்பதால் வீரமாய் அரசு அனுமதித்த 6-1 பர்சேஸ் டைமில் போய்விட்டு வந்துவிடலாம் என்று முடிவெடுத்துத்தான் இந்த ப்ளான்.
கையில் ரெண்டு கட்டைப் பைகளை எடுத்து வைத்துக் கொண்டான். தன்னுடய இயக்குனர் சங்க கார்டையும் எடுத்து வைத்துக் கொண்டு, கர்ச்சீப்பை முகத்தில் கட்டிக் கொண்டு வண்டியை வெளியே எடுத்தான். வழக்கமான காலை வேளை போல் இல்லை தெரு. எல்லா மளிகை கடை வாசலிலும் சின்னதாய் காய்கறிக்கடை முளைத்திருந்தது.  ஒவ்வொரு தெரு முனையிலும் யாராவது ஒரு வயதான பெண்மணியோ, பெரியவரோ, தர்பூசணி, கிர்ணி போன்ற பழங்களோடு கடை போட்டிருந்தார்கள். டிவியில் காட்டும் அளவிற்கு ஏகப்பட்ட கூட்டமோ, நெரிசலோ சமூக இடைவெளியோ மெயிண்டெயின் பண்ணும் அளவிற்கு ஆட்களே இல்லை. டிவி எப்போதும் எந்நேரமும் ப்ரேக்கிங் நியூஸாகவே காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்று யோசித்தபடி வண்டியை ஓட்டினான். ஆளே இல்லாத ரோட்டில் வண்டியை ஓட்டுவது சுவாரஸ்யமாய் இருந்தது.
சைதாப்பேட்டைக்குள் நுழையும் வழியை எல்லா மெயின் ரோட்டின் வழியாகவும் உள் நுழையாத படி தடுத்திருந்தார்கள். அங்கே போலீசாரும் இருக்க, ஏரியா தெரிந்தவர்கள் பக்கத்து ரோட்டின் வழியாய் ஏரியாவை விட்டு வெளியேவோ, அல்லது உள்ளேவோ வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
மெயின் ரோடெடுக்காமல், குறுக்கு வழியாய் ஷாந்தனு வரச் சொல்லியிருந்த அசோக் நகர் சரவணா பவன் ஓட்டல் வாசலில் வண்டியை நிறுத்தினேன். சில வருடங்களாகவே களையிழந்து போயிருக்கும் சரவணபவனின் வாசலில் பத்திருபது வண்டிகள். ரொண்டொரு கார்கள் நிற்க, காபி சாப்பிட்டே பல நாட்கள் ஆனது போல வந்தவர்கள் எல்லோரும் காப்பி ஆர்டர் செய்து குடித்துக் கொண்டிருந்தார்கள்.
ஓட்டலை ஒட்டிய பேப்பர் கடை வாசலில் நான்கைந்து பேர் சமூக இடைவெளியோடு, சிகரட் பிடித்துக் கொண்டிருந்தார்கள். ஷாந்தனுவும் வந்து தன் காரை பார்க் செய்துவிட்டு பிரேதனைப் பார்த்து கையசைத்தான்.
“வாங்க” என்று கை நீட்டிக் கொண்டே வந்தவன் சட்டென சுதாரித்து, இந்திய வணக்கம் சொல்லி, “ஜெய் கொரானா” என்றான்.
“அட நீங்க வேற என்னங்க இப்படி இருக்கு ஊரு? டீவில ஆவூன்னா அங்க கூட்டம் இங்க கூட்டம்னு சொல்லிட்டிருக்கானுங்க”
“அவனுங்க சொல்லட்டும் வாங்க காப்பி சாப்ட்டு தம்மடிச்சிட்டு போவலாம்” என்று சரவணபவனில் ஆளுக்கொரு காப்பி ஆர்ட்ர செய்து சாப்பிட்டுவிட்டு, பக்கத்துக் கடையில் ஒரு சிகரட்டை வாங்கி பற்ற வைத்தான். பில்லர் அருகே மெயின் ரோடு கிராதிக்கு அப்பால் வண்டி ஓட்டிக் கொண்டு வந்தவர்களை பிடித்து விசாரித்துக் கொண்டிருந்தார்கள். அதை ஒருவன் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான்.
“என்னா சொல்லுங்க காப்பி சாப்டு ஒரு தம் அடிச்சா சுகமே தனிதான்” என்று சொல்லியபடி ஆழமாய்  புகையை இழுத்தான் ஷாந்தனு
“சீக்கிரம் அடிங்க போலீஸ் காரணுங்க வீடியோ எடுத்திட்டிருக்காங்க” என்றான் ரமேஷ் பிரேதன். அவனுக்கு பதட்டமாகவே இருந்தது.
“அட நீங்க வேற பயப்படாதீங்க. என்ன அரஸ்டா பண்ணுவாங்க?’ என்று அடுத்த பஃப்பை ஆழமாய் இழுத்துக் கொண்டிருக்கும் போது, கிராதிக்கு அந்தப்பக்கம் இருந்த  கான்ஸ்டபிளிடம் இன்ஸ்பெக்டர் ஏதோ கடை பக்கம் காட்டி சொல்ல, கான்ஸ்டபிள் சட்டென திரும்பி கிராதியை எகிறி குதித்து, கடை நோக்கி வேகமாய் வர ஆரம்பித்தார். மொத்தமே ஒரு நூறு அடிதான் இருக்கும். அவர் வந்ததைப் பார்த்த தம் அடித்து கொண்டிருந்தவர்கள் பதறி அடித்து ஓட, ரமேஷும், பதற்றத்துடன் ஓட ஆரம்பித்தான். ஷாந்தனு “ப்ரேதன் நில்லுங்க.. நில்லுங்க” என்று கத்திக் கொண்டே பின்னால் வர, ரமேஷ் பிரேதன் கான்ஸ்டபிளின் கைக்கிடையில் கடந்து வண்டியை ஸ்டார்ட் செய்தவன் தான். திரும்பிப் பார்க்கவேயில்லை.  ஷாந்தனுவின் போன் அடித்துக் கொண்டே இருக்க, எடுக்காமல் வீடு வந்து சேர்ந்த பின் தான் எடுத்தான்.
“அட என்னங்க இப்படி பயப்புடுறீங்க. கூப்பிடக் கூப்பிட ஓடீட்டீங்களே.”
”அதெல்லாம் இருக்கட்டும் நீங்க எப்படி எஸ் ஸானீங்க?”
”நான் எதுக்கு எஸ்ஸாகணும்?”
“பின்ன போலீஸ் தம்மடிச்சவங்களை பிடிக்கத்தானே வந்திச்சு?”
“ஆமா பிடிக்கத்தான் வந்திச்சு. ஒரு மணி ஆகப் போவுது அதுக்குள்ள தம் பாக்கெட் ஒண்ணு வாங்கிட்டுவா கடை மூடிற போறானு கான்ஸ்டபிள் கிட்ட சொல்லி அனுப்பியிருக்காரு இன்ஸ்பெக்டர். அவன் வந்து ஒரு பாக்கெட் தம்மும் 50 ரூபா கட்டிங்கும் வாங்கிட்டு போனான் .நீங்க வேற உங்களையெல்லாம் பார்த்து அவன் சிரிச்ச சிரிப்பு இருக்கே..” என்ற சிரிக்க ஆரம்பித்தான் ஷாந்தனு.

#லாக்டவுன்

லாக்டவுன் கதைகள் 1

Post a Comment

No comments: