Thottal Thodarum

Apr 29, 2020

லாக்டவுன் கதைகள் -5


”சஷ்டியை நோக்க சரவணபவன.. ஷிஸ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்” என்று போன் ரிங்க்டோன் அடித்துக் கொண்டேயிருந்தது. அம்மாவுடய போன்.
“அம்மா உன் போன் தான் அடிக்குது. எடேன்” என்று சிவா ஹாலிலிருந்து கத்தினான்.
“போனை விட நீதான் ரொம்ப அலர்ற” என்றாள் சின்னவள். குதர்க்கம் அதிகம் அம்மா மாதிரியே. அவளை முறைத்தான் சிவா. பெரியவள் நெட்ப்ளிக்ஸில் சீரீஸ் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பார்க்கிற சீரீஸில் வரும் பெண்கள் எல்லோரும் பொச்சு பொச்சுனு முத்தம் கொடுத்துக் கொண்டேயிருந்தார்கள். அவளுக்கு எப்படி இருக்கிறதோ தெரியவில்லை சிவாவுக்கு அதைப் பார்க்கும் போதெல்லாம் அன் ஈஸியாய் இருந்தது.
”சுபாம்மா.. ஏன் நீ இந்த கார்டூன், அனிமேஷன் படங்கள் எல்லாம் பாக்கலாமே? கண்டதை பார்க்காம?” என்று கேட்டான் சிவா.
“ப்பா.. கார்ட்டூன் பார்க்க நான் என்ன சின்னக் குழந்தையா? ஐயம் 12. ஐ நீட் சம் ஸ்பேஸ். எப்பப் பாரு அதைப் பாக்காத, இதைப் பாக்காதன்னுட்டு. பாரும்மா அப்பாவை. இந்த ஸ்கூல் எழவு திறந்தா நல்லாருக்கும்”  என்று சிடுசிடுத்தபடி,”நெட்ப்ளீக்ஸுல புதுசா Never have I everனு ஒரு புது சீரிஸ் விட்டிருக்கான். செம்ம ஹாட்” என்று யாருடனோ போனில் கிக்கிலித்துக் கொண்டே சொன்னாள்.
12 வயசுக்கு நானெல்லாம் ராணி காமிக்ஸ் படித்துக் கொண்டும், ரோட்டில் வரும் குச்சி ஐஸும், கமர்கட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.  மொத்தமாய் எட்டு படம் பார்த்திருந்தால் அதிகம். இவள் சொல்லும் சீரீஸ் ட்ரைலரிலேயே 13 வயசு பெண்ணின் ரூமுக்குள் சிக்ஸ் பேக்குடன் தடாலடியாய் நுழைந்து ஸ்ட்ரிப்டீஸ் போல தன் மேல் சட்டையை துறந்தபடி, “லெட்ஸ் ஹேவ் செக்ஸ்” என்று பிட்ஸா சாப்பிடக் கூப்பிடுவது போல கூப்பிடுகிறான். இதைத்தான் இவள் ஹாட் என்கிறாள்.  மீண்டும் அம்மாவின் போன் சஷ்டியையும் ஷிஸ்டரையும் ஒன்று சேர்த்து அலற, “அம்மா அந்த போன்ல யாருனு பாரேன்ம்மா” என்று கத்தினேன்.
”ஏன் கத்துறீங்க?.”
“அது பாட்டுக்கு அடிச்சிண்டே இருக்கு. எங்க போய் தொலைஞ்சா எங்கம்மா. இல்லை நீயாச்சும் எடுத்து அட்டெண்ட் பண்ணு”
“நானு..  உங்கம்மா போனை. அட்டெண்ட் பண்ணிட்டாலும்.. உங்க பொண்ணு போனைக் கூட எடுத்துப் பார்த்துரலாம். அவ போனை எடுத்தா போச்சு.. அத்தனை மூஞ்சிய தூக்கி வச்சிக்குவா?. பொண்ணோட வச்சிட்டிருக்கிற ட்ரான்ஸாக்‌ஷன் ரகசியங்கள். எனக்கு தெரியாதுனு நினைச்சிட்டு பண்ணிட்டிருக்கா, எனக்கா தெரியாது? ஒரு நாள்  இல்லை ஒரு நாள் நான் கேக்காம விடமாட்டேன்.”
“இந்த லாக்டவுன் எல்லாம் முடிஞ்சு நான் ஆபீஸ் போனப்புறம் கேளு. இப்ப வேணாம். நித்யா”
“கிண்டல்?. உங்கம்மா தங்கையப் பத்தி சொன்னதும் பொத்துட்டு வருது பாசம்?”
“நான் சொன்னது பாசமாவா தெரியுது? அது சர்காசம்மா”
“ம்க்கும்”
“அதானே சர்காசம் எல்லாம் புரிஞ்ச பொண்டாட்டி அமைஞ்சிருந்தா என் வாழ்க்கைதான் நல்லாருந்திருக்குமே”
“ஏன் இப்ப மட்டும் என்ன குறைச்சல்? எவளுக்கு உங்க குதர்க்கம் புரிஞ்சு ஈனு இளிக்கிறாளோ அவளோட நடத்துங்களே உங்க குடும்பத்த. நான் என் குழந்தைகளோட சந்தோஷமா இருந்துப்பேன். என்னடி சுபா?” என்று சுபாவைப் பார்த்து கத்தலாய் சொல்ல, போனில் இருந்த சுபா புரிந்தார்ப் போல கட்டைவிரலை உயர்த்தி சிரித்தபடி போனில் தொடர்ந்தாள்.
“ம்மா. ப்பா.. நீங்க ரெண்டு பேரும் இப்ப போடுறது சண்டைன்னா நீட் சம் ஆட்டிடியூட்” என்று சொல்லி சிரித்தபடி ஹாலை விட்டு வெளியே போனாள் சின்னவள்.  மீண்டும் போன் அடிக்க “ஏண்டி அத்தன வாட்டி போன் அடிக்கிறதே எடுத்து யாருனு பாக்ககூடாது?” என்றபடி பாத்ரூமிலிருந்து வெளியே வந்தாள் அம்மா.
நித்யா பதில் சொல்லாமல் சைகையாய் “எடுக்க விட்டுட்டாலும்” என்று முனகலாய் கையாட்ட, எங்கே அம்மா நித்யாவின் ரியாக்‌ஷனை பார்த்து சண்டை ஏதாவது வந்து விடப் போகிறதோ என்கிற பதட்டத்தில் “வாயெல்லாம் நமநமங்குறது. திங்கறதுக்கு ஏதாச்சும் வடாம் பொரிச்சித் தரயா?”
“லாக்டவுன் ஆரம்பிச்சதிலேர்ந்து பர்மெனெண்டா சமையல் ரூம்லேயே குடியிருக்கேன். இந்த பொழைப்புக்கு கொரானா வந்து சாகலாம்”
“யாரு மேல இருக்குற கோபத்த இப்படி அவன் மேல காட்டுற?” என்று அம்மா நித்யாவிடம் கேட்டிருக்க கூடாதுதான்.
”என் புருஷன்கிட்ட நான் ஆயிரம் பேசுவேன். உங்களூக்கு என்ன? போன் வந்திருச்சு இல்லை போய் குசுகுசுனு பேச ஆரம்பிங்க” என்றாள் நித்யா.
“நான் யாரு கிட்ட குசுகுசுனு பேசணும்?. நீயும் உங்கம்மாவும் பேசாத ரகசியமா நான் பேசிடப் போறேன்”
”நீங்க உங்க பொண்ணோட பேசுறது ரகசியம்னா நாங்க பேசுறதும் ரகசியமா இருந்துட்டுப் போகட்டும்”
”அப்பா.. திஸ் இஸ் இட்.. இவங்க ரெண்டு பேர் பாடிலேங்குவேஜுலேயும் ஒரு ஆட்டிட்டியூட் இருக்கு பாரு” என்று காதோரம் கிசுகிசுத்துவிட்டு போனாள் சின்ன ராட்சஸி.
“என்னவாண்டா அவளுக்கு? ரகசியம் சொல்லிட்டுப் போறா?”
“அது ஒண்ணுமில்ல. குழந்தைகள்”
“என்னைப் பத்தித்தானே. பெரியவங்களுக்கு என்ன மரியாதை கொடுக்கணும்னு சொல்லிக் கொடுத்தாத்தானே?’
“உங்க பேரன் வந்தா மட்டும் ரொம்ப மரியாதை கொடுக்குறான் பாருங்க மாமா மாமிக்கு?
“தேவையில்லாத அவனை எதுக்கு இழுக்குற இதுல?”
“கண்முன்னாடி இருக்குற பேத்திகளுக்கு மரியாதை தெரியாது. இல்லாத பேரனைச் சொன்னா ஏன் உங்களுக்கு கோபம் வருது?”
“நான் பேசவே இல்லைடி.. இனிமே. வாயத் திறந்தா ஏன்னு கேளு. வயசான காலத்துல மட்டு மரியாதை இல்லாம பேசுறா நீயும் பார்க்குற” என்று சிவாவைப் பார்த்து கத்தினாள் அம்மா.
“அம்மா சண்டைப் போட்டது நீங்க என்னை ஏன் இதுல இழுக்குறீங்க?”
“தோ.. பெத்ததும் சரியில்லை. அவனுக்கு வந்து வாய்ச்சதும் சரியில்லை. நான் சாகுறேன்’ என்ற போது மீண்டும் அவளின் செல் அடிக்க, இம்முறை சஷ்டியை நோக்குவதற்கு எடுத்துவிட்டாள்.
“ம்ம். .சொல்லுடி”
“இருக்கேன். என்னாத்த சொல்ல?. ஒரு வாய் சோத்துக்கு அல்லாட வச்சுடானே இந்த கடவுள்?’
“அய்யய்யோ?
“என்னாடி சொல்லுறே?”
“நீயும் வாயை வச்சிண்டு சும்மா இருந்திருக்க மாட்ட”
“என்னாது ஒண்ணும் பண்ணலையா?. உன்னைப் பத்தி எனக்கு தெரியாது.”
“இத்தனை வயசுக்கு அப்புறம் இது தேவையா?’
“ஏதோ ஒரு கோபத்துல போயிருப்பார். எங்கப் போகப் போறாரு? வரட்டும் பேசுவோம்.”
“ஆமா லாக்டவன் முடிஞ்சாத்தானே வெளிய வர முடியும். அப்ப வர்றேன். இந்த கொரானா வேற வயசானவங்களைத்தான் கொல்லுதாம். எவளோ ஒரு மருமக தான் பரப்பி விட்டிருக்கா போல”
“போலீஸ் கேஸுனு ஆயிருச்சு. நடக்குறது நடக்கட்டும். கடவுள் விட்ட வழி”
“என்னம்மா போலீஸ் அது இதுன்னு? யாரு?” சிவாவின் குரலில் ஆர்வம் அதிகமாய் இருந்தது.
“உங்க சித்திதாண்டா. போன்ல. சித்தப்பாவுக்கும் அவளுக்கு பத்து நாளா சண்டையாம். எங்கம்மா டார்ச்சர் தாங்கலையாம். நெதம் ஏதாச்சும் ஒரு பிரச்சனை கிளப்பிட்டிருக்காளாம். இதுனால புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டை முத்திப் போய், உங்க சித்தி மேல போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்துட்டாராம் உங்க சித்தப்பா. இந்த நிமிஷம் உன்னை நான் டைவர்ஸ் பண்ணுறேனு. வயசான காலத்துல கூழோ கஞ்சியோ குடிச்சிட்டு இருக்குறத விட்டுட்டு. மாப்பிள்ளை வீட்டுல இருந்துட்டு என்னா அழிச்சாட்டியம் பண்ணிட்டிருக்கா உன் பாட்டி?. இந்த கொரானா இவளுக்கெல்லாம் வந்து போய் தொலையக்கூடாது?’ என்ற அம்மாவை அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்தான் சிவா.

#லாக்டவுன்

Post a Comment

No comments: