Thottal Thodarum

Jun 5, 2020

லாக்டவுன் கதைகள் -10- மொட்டை மாடி


“மொட்ட மாடில பேய் இருக்குதுங்க” என்றார் பக்கத்து ப்ளாட் பெண்மணி.
“நான் தெனம் ராத்திரி ஒரு மணிக்கும் ரெண்டு மணிக்கு தான் வர்றேன். நான் பார்த்ததேயில்லைங்க”

“சார்.. பேய் என்ன எல்லார் கண்ணுக்குமா தெரியும்?.”

“அப்ப நான் பேயா?’

”நீங்க பேயில்லை. மனுஷங்கதான். யார் கிட்டயாவது ஏதாவது சொல்லணும்னாதான் பேய் கண்ணுக்கு தெரியும்னு சொல்வாங்க”

“நீங்க மனோஜ் நைட் ஷியாமனோட சிக்ஸ்த் சென்ஸ் தமிழ் டப்பிங் ஏதாச்சும் இந்த லாக்டவுன்ல பார்த்தீங்களா?’

“ஙே”

“சரி விடுங்க. எல்லாம் மன பிராந்தி” என்று சொல்லி சிரித்தபடி மொட்டை மாடிக்கு போனேன். இருளோ என்று இருக்க, சுவிட்ச் தேடி லைட்டைப் போட்டேன். நல்ல குளிர்ந்த காற்றுடன் மொட்டை மாடி அமைதியாய் இருந்தது. எங்கள் ப்ளாட்டில் யாரும் இரவுகளில் மொட்டை மாடிக்கு போகாத காரணம் லாக்டவுனில் இருந்த காரணத்தினால்தான் தெரிந்தது. வெய்யிலின் வெக்கை தாங்க முடியாமல் தினம் மாலையில் மொட்டை மாடியில் வாக்கிங் போவதைப் பார்த்த பக்கத்து வீட்டு பெண்மணி கூப்பிட்டு சொல்லிய எச்சரிக்கை தான் மொட்டை மாடியில் பேய் கதை. எனக்கு அது கதையாகவே பட்டது. என் மனைவியிடம் என்ன இது பேய்க்கதை என்று கேட்டதற்கு. அவங்களுக்கு வேற வேலையில்லை என்றாள்.

தினம் நான் மொட்டை மாடிப் போவதைப் பார்த்து நான்கைந்து பேர் மொட்டை மாடியில் கூட ஆரம்பித்தார்கள். ஆனாலும் ஒன்பது மணிக்கு மேல் யாரும் இருப்பதில்லை.  சில நாட்களில் இரவுகளில் வாங்கிங்க் போக ஆரம்பிக்க, எதிர் ப்ளாட்டில் உள்ள இன்னொரு பெண்மணி, என் வீட்டிற்குள் வந்தார். “சார் மொட்டை மாடியில ஏதும் தப்பா இல்லையா உங்களுக்கு?” என்று கேட்டவளின் குரலில் லேசான நடுக்கம் இருந்தது.

“இல்லீங்களே என்ன?”

“இல்லை இந்த வீட்டுக்கு நான் வாடகைக்கு வந்த போது என் வீட்டுலேர்ந்துதான் அந்த பேய் மொட்டை மாடிக்கு போச்சு” என்றார். சொல்லும் போது முகமெல்லாம் வேர்த்திருந்தது.

“என்னாது உங்க வீட்டுலேர்ந்து துறத்தி விட்டீங்களா?’

“ஆமா சார்?”

“பேயை?”

“அட ஆமா சார்” என்ற அவளின் குரலில் அழுத்தம் இருந்தது.

“நீங்க எப்படி கண்டுபிடிச்சீங்க. உங்க வீட்டுல பேய் இருக்குனு?”

“சார்.. வீட்டுக்கு குடி வந்த ரெண்டொரு நாள்ல எல்லோரும் ஆபீஸ் போனப்புறம் வீடுல மதியம் நான் மட்டும் தானே இருப்பேன். ஆனா தனியா இருக்குறா மாதிரியே ஃபீல் ஆகாது. பக்கத்து ரூமுல யாரோ இருக்குறா மாதிரி இருக்கும். போய் பார்த்தா ஏதும் இருக்காது.”

“பகல்லயே பேயைப் பார்த்தீங்களா?’

“அட பாக்கலைங்க ஃபீல் பண்ணேன்”

“சரி அப்ப எப்பத்தான் பார்த்தீங்க?’

“ஒரு வாரம் கழிச்சு. ராத்திரி தூக்கதுல எழுந்து  ப்ரிட்ஜ் கிட்ட தண்ணிக் குடிக்க போனேன். நின்னுட்டிருந்திச்சு”

“என்னாங்க சாதாரணமா சொல்லுறீங்க?”

“முதல்ல பயத்துல நாக்கு ஒட்டிக்கிட்டு சத்தமே வரலை?. சட்டுனு லைட்ட போட்டதும் காணம்”

“திரும்ப லைட் ஆப் பண்ணா இருந்துச்சா?”

“அட அப்படியெல்லாம் இல்லைங்க சொல்லுறத கேளுங்க. நானும் என் வீட்டுக்காரரை எழுப்பி சொல்லலாம்னு பார்த்தேன். அவரு கொஞ்சம் பயந்த சுபாவம் வேற. இப்பத்தான் கடனை உடனை வாங்கி லீசுக்கு வீடெடுத்திருக்காரு. விஷயத்தைக் கேட்டா மனுஷன் தெகைச்சுப் போய், போனாலும் போயிருவாருனு சொல்லலை. அதுக்கு அப்புறம் ரெண்டு மூணு நாளைக்கு வரலை.”

“ஏன் அது பயந்திருச்சா?’

“அட காமெடி பண்ணாதிங்க சார். நாலாவது நாள் ஹால்ல படுத்திட்டிருக்கேன். பக்கத்துல படுத்திட்டிருந்திச்சு. தூக்கி வாரிப் போட்டிருச்சு. ஆனா ஒண்ணும் பண்ணாது. அமைதியாய் இருக்கும். ஒரு சில நாள் அது வராம போச்சுன்னா நானே தேடக்கூட ஆரம்பிச்சிட்டுடேன். என் ப்ரெண்ட் ஒருத்தர் கிட்ட சொன்ன போது அவர் தான் சொன்னாரு இதெல்லாம் மோகினிப் பேயி. மெல்ல மனசை மயக்கி ஆளுங்களுக்கு உள்ளார இறங்கிரும்னு.”

“மோகினிப் பேய் ஆம்பளைங்களத் தானே அட்டாக் பண்ணும்னு சொல்லுவாங்க?. அது சரி உங்க வீட்டுல உங்கள் ஆட்டாக் பண்ணதும் சரிதான் என்று சிரித்தபடி சொல்ல, என் மனைவி கால் மிதித்தாள்.  கதை சொல்லும் சுவாரஸ்யத்தில் எதிர்வீட்டம்மா கண்டு கொள்ளவில்லை.

”அப்புறம் பாதரை அழைச்சிட்டு வந்து ஓட்டுறதுனு முடிவெடுத்தோம்”

“உங்கப்பா பேய் ஓட்டுவாரா என்ன?’

‘அட சர்ச் பாதருங்க. எல்லாத்தையும் காமெடி பண்ணுறாருங்க உங்க வீட்டுக்காரரு. பேய் உங்க வீட்டுல வந்தாத்தான் தெரியும்.”

“சரி சொல்லுங்க. அப்புறம் என்னா ஆச்சு?’

“பாதர் வந்து ஜபிச்சு. புனித நீரெல்லாம் தெளிச்சு. ஒரு நாள் பூரா மந்திரம் ஜபிச்சாரு. அன்னைக்கு ராத்திரி பூரா கதவு தொறந்து வையுங்கனுட்டு போய்ட்டாரு. நடு ராத்திரி மூணு மணி அப்படியே உக்காந்தாப்போல அசந்து தூங்கிட்டேன். சட்டுனு யாரோ எழுப்புறா மாதிரி இருந்துச்சு. முழிச்சுப் பார்த்தா அந்த பேய் நிக்குது. என்னாங்குறேன். வாசல பார்த்துட்டு என்னைய பாக்குது. எனக்கு பாவமாயிருச்சு. இது நாள் வரைக்கும் கூட இருந்திச்சே தவிர ஒரு தொந்தரவு இல்ல நல்ல மாரி. அழுகையாக்கூட இருந்திச்சு. தபாரு.. எனக்கு உன்னை அனுப்பணுனு எல்லாம் இல்லை. ஆனா குடுத்தனம் பண்ணுற வீட்டுல உன்னைய வச்சிக்க முடியாது புரிஞ்சுக்கன்னேன். ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம் அப்படியே என்னைப் பார்த்துட்டு மெல்ல வாசல் வழியா மொட்டை மாடிக்கு போயிருச்சு. அன்னைலேர்ந்து தான் எல்லாரும் சொல்லுறாங்க மொட்ட மாடில பேயப் பார்த்ததா?. ஆனா என் கண்ணுக்கு ஏதுவுமே தெரியாது.’

“ஒரு வேளை உங்க கிட்ட அது கோவத்துல இருக்கோ?” என்றேன் சீரியசாய்.

“நல்லவரா இருக்கீங்க உங்களுக்கு ஒண்ணும் ஆயிரக்கூடாதுனு சொல்ல வந்தேன்.  போங்க ஆயிரம் இருந்தாலும் அது பேயி. எப்போ எப்படி இருக்கும்னு யாருக்கு தெரியும்?” என்று விறுவிறுவென கிளம்பிப் போய்விட்டார்.

நான் மொட்டை மாடிக்கு போவதால் தான் இந்த பேய்க்கதைகளா? என்று யோசித்து கேட்டதற்கு இல்லை அவ்வப்போது ப்ளாட்டில் இருக்கும் பெண்கள் மத்தியில் இந்த கதை உண்டு என்றாள் என் மனைவி. ”ஏன் ஏ2 வந்து போவாளா சுஜா தங்கச்சி அவளைக்கூட பேய் அமுக்கிச்சுருச்சுனு சொன்னா”

“நீ பார்த்தியா?”

“ம்க்கும் நான் பேயைப் பார்த்தேன். அவதான் சொன்னா மாடியில ஒரு நா சாயங்காலம் படுத்திட்டிருந்த போது அப்படியே அமுக்கிருச்சுன்னு”

ரெண்டொரு நாளில் மொத்த ப்ளாட்டும் மொட்டை மாடி பேய் கதை தான் பேசி கொண்டிருக்க, சாயங்காலம் இரண்டாவது ப்ளோர் பசங்கள் வெய்யிலில் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென பெரிய சத்தத்துடன் ஓடி வந்தார்கள். என்னவென்று கேட்ட போது க்ரவுண்ட் ப்ளோர் சுமேஷ் மட்டும் என்னிடம் வந்து “அங்கிள் மொட்டை மாடில பேய் இருக்கு” என்றான் ரகசியமாய்.

“டேய் பகல்ல எப்படிடா பேய் வரும்?”

“நானும் அதான் நினைச்சேன் அங்கிள். வாங்க துணைக்கு வர்றீங்களா காட்டுறேன்” என்றான்.

நானும் அவனும் மொட்டை மாடிக்கு போனோம். என் முன்னை பதுங்கலாய் நடந்தான் சுமேஷ். “எதுக்குடா இப்படி நடக்குற?”

“நாம வர்றது தெரிஞ்சா ஓடிப் போயிருமில்ல அதான்” என்றான்.

“பயந்து ஓடிப் போற பேயிக்கு எதுக்குடா பயப்படுறீங்க?” என்று சிரித்தபடி சொன்னேன்.

“ஷ்ஷ்ஷ் பேசாதீங்க அங்கிள்” என்று வாயில் மேல் விரல் வைத்து மிரட்டினான்.

மொட்டை மாடி கதவை சரலேன்று திறந்து எட்டிப் பார்த்தான் வாங்க என்று சைகை செய்து என்னையும் அழைத்தான். நிறைய இங்கிலீஷ் படம் பார்க்கிறவன் போல. அவனின் பாடிலேங்குவேஜில் அது தெரிந்தது. மொட்டை மாடி நடுவில் போய் இடுப்பில் கை வைத்து நின்றான். “என்னடா?”

“போயிருச்சு.. சே” என்று அலுத்துக் கொண்டான்.

ப்ளாட்டில் ரெண்டொரு ஆட்கள் தம்மடிக்க மொட்டை மாடி வருவதை பார்த்திருக்கிறேன். ஏதாச்சும் கிளுகிளு சமாச்சாரமாய் கூட இருக்கலாம் என்று மனதின் ஓரத்தில் பட்சி சொல்லியது. நான் ஆரம்பித்து வைத்த வாக்கிங் நடமாட்டம், லாக்டவுன் வேறு இடையூராய் இருக்கிறது மொட்டை மாடி பயன்பாட்டை தடுக்க இந்த கதை எல்லாம் கட்டிவிடுகிறார்களோ என்று கூட தோன்றியது. எதுவாக இருந்தாலும் மொட்டை மாடிக்கு போவதை நிறுத்தக்கூடாது என்று முடிவு செய்து தினம் இன்னும் ராத்திரியில் போக ஆரம்பித்தேன்.

கொஞ்சம் கொஞ்சமாய் பேயின் மீதான ஆர்வத்தை விட, அதற்காக சொல்லப்படுகிற கதைகளின் மேல் ஆரவம் அதிகமாகி, வீட்டின் பின்னணியைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன். 100 வருஷம் முன்பு இங்கே இருந்தவர்களின் சமாதி இந்த ப்ளாட்டின் கீழ் இருப்பதாகக்கூட ஒரு கதை சொன்னார்கள். சொன்னவர் கீழ் ப்ளாட் தாத்தா. அவருக்கு அவருடய தாத்தா சொன்ன கதையாம். “நல்ல பேய் கதை எழுதலாம் போல தாத்தா” என்று சொன்ன போது அவரின் முகம் மாறி “நீ பாக்குற வரைக்கும் நம்பப் போறதில்லை. ஆனா பேய் யாருனு தெரிய வரும் போது நீ பேயா போகாம இருக்கணும்” என்றார். ஒன்றும் புரியவில்லை.

அவர் சொன்னதை பற்றி யோசித்துக் கொண்டே வாக்கிங் முடிந்து கண் மூடி அமர்ந்திருந்த போது எதிர் பக்கம் யாரோ உட்கார்ந்திருப்பதைப் போல உணர்ந்து கண்ணைத் திறந்தேன். ஒர் இளைஞன் உட்கார்ந்திருந்தான்.  

“யாருங்க? நீங்க? உங்கள் நான் பார்த்ததேயிலையே?’ ஆள் கொஞ்சம் அழுக்காய் இருந்தான்.

“நான் தாங்க இந்த லேண்டோட ஓனரு”

“புரியலை”

“என்னோட நிலத்தைத்தான் என்னை ஏமாத்தி ப்ளாட்காரணுக்கு வித்துட்டானுங்க”

“இந்த லேண்ட வித்தவரு மூணாவது ப்ளோர் சுந்தர்னாங்களே”

“அவன் என் மாமா பையன் தான்”

”அப்ப உங்க மாமாதான் உங்களை ஏமாத்தினாரா? அவரு செத்துட்டாரே?”

“ஆமாங்க. செத்து பத்து வருஷமாச்சு. நாந்தான் அவரை கொன்னேன்” என்றான்.

கெதக்கென்றது. சுந்தரின் அப்பா கொலை செய்யப்பட்டவர் என்று அரசல் புரசலாய் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு வேளை தண்டனைக்காலம் முடிந்து வந்திருக்கிறான் போல.

“பரோலா? இல்லை ரிலிஸ் பண்ணிட்டாங்களா?” என்றேன் மிகச் சாதாரணமாய்

”நான் ரிலீஸ் ஆகி பத்து வருஷம் ஆயிருச்சுங்க. அவனை கொன்ன அன்னைக்கே நானும் செத்துட்டேன்” என்று சிரித்தான் போது உருவம் முழுவதும் வெள்ளையாய் மாறி போயிருந்தது.

”அப்ப…அப்ப நீங்க பேயா?”

“ஆத்மா”

“இதை ஏன் என்கிட்ட சொல்றீங்க?”

”நீங்க ரைட்டர், டைரக்டர், நீங்க நம்ப மாட்டேன்குறீங்கனு சொன்னாங்க. அதான் நானே நேரவந்து சொல்லிட்டு போகலாம்னு வந்தேன் வரட்டா” என்று மறைந்து போனான்.

உடலெல்லாம் வியர்த்திருந்தது. துடைத்துக் கொண்டே மாடியிலிருந்து இறங்கிய போது “என்ன பேசினாரா அவரு”” என்று கேட்டாள் வீட்டிலிருந்து மாடிக்கு அனுப்பிய பெண்மணி. இப்போது அவள் முகமும் வெள்ளையாய் இருந்தது.

கேபிள் சங்கர்

லாக்டவுன் கதைகள் -9- ஈ-பாஸ்

Post a Comment

2 comments:

RAMESH K said...

கேபிள் சங்கர் சார்,
தற்போது தான் தங்களின் 24 சலனங்களின் NUMBER புத்தகம் படித்து முடித்தேன். மிக சிறந்த முறையில் தங்களின் எழுத்தாக்கம் நன்று. ஒரே மூச்சில் நான் படித்து முடித்த புத்தகங்களில் இதுவும் ஒன்று. கொஞ்சவும் தொய்வு ஏற்படுத்தாமல், அதே வேளையில் மிக ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ள உங்கள் கதை சிறப்பு. 24 கலை தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாகிற சினிமாவின் பின் இவ்வளவு வலியும் வேதனையும் இருப்பது இதை படிப்பதின் வழி புரிந்து கொண்டேன். உங்களுடைய இந்த புத்தகம் படித்ததன் மூலம் இனி எந்தவொரு படத்தையும் திரையரங்கில் மட்டுமே பார்க்கவேணும் னு முடிவு பண்ணிருக்கேன். நாங்க சாதாரணமாக கடந்து போகிற பிரபலங்களின் பேட்டிகளுக்கு பின் கூட வலி இருக்கும் என்பதை தங்களின் எழுத்தின் வழி உணர்ந்தேன். உண்மையான உழைப்பு எத்தனை போராட்டங்களை சந்தித்தாலும் நம்மை கைவிடாது என்று நம்பிக்கை தரும் வகையில் கதையை வைத்ததில் மிக்க நன்றி. தங்களுக்கு எனது இதயபூர்வமான பாராட்டுக்கள்.

தங்களை எதில் பாராட்டுவது என்று தெரியவில்லை. அதனால் இந்த வலைதளத்தை பயன்படுத்தினேன். மன்னிக்கவும்.

JB @ Jayabalan said...

Awesome sir.