Thottal Thodarum

Jun 1, 2020

லாக்டவுன் கதைகள் -9- ஈ - பாஸ்


“என் தூரத்து சொந்தம் அக்கா முறை. அவங்க வீட்டுக்காரு இறந்துட்டாரு. பொறந்து வீட்டு முறையில என்னை விட்டா அளில்ல. சரினு பொண்டாட்டியையும் என் ரெண்டு பொட்டை புள்ளைங்களையும் பெங்களூருக்கு அனுப்பிவிட்டேன். ஒரு ரெண்டு நாள் இருந்து ஊரு சுத்தி பார்த்துட்டு வர்றேனாளுக. நானும் அவங்களும் எங்க வெளிய போறாங்க இருங்கன்னு சொன்னேன். லாக்டவுன் போட்டாச்சு. அங்கேர்ந்து கிளம்ப முடியலை. 50 நாளாச்சு. அவங்க அங்க மாட்டிட்டு”  என்று கிட்டத்தட்ட அழும் நிலையில் என் குரல் இருந்ததை நானே உணர்ந்தேன். போன் அடித்தது பெண்டாட்டிதான். “சொல்லும்மா? சாப்டாச்சா?” என்று கேட்டேன்.

“அதுக்கென்ன குறைச்சல். எல்லாம் ஆச்சு? நீங்க?”

“இனிமேதான் சமைக்கணும்”

“மணி நாலாவுது இன்னுமா மதிய சாப்பாடு சாப்பிடலை” என்றவளின் குரலில் வருத்தம் இருந்ததை உணர்ந்து மனம் குதூகலித்தது.

”பசங்க என்ன பண்ணுறாங்க?”

“இதோ இருக்காளுங்க பெரியவதான் முனகிட்டே இருக்கா”

“கொடு போனை”

“அப்பா.. என்னை இங்கேர்ந்து கூட்டிட்டு போவீங்களா மாட்டீங்களா?’

“நானும் ட்ரை பண்ணிட்டுத்தான்மா இருக்கேன்.”

“எது 50 நாளாவா?. வந்தா தெனம் சண்டதானே அங்கயே இருந்துட்டு போவட்டும்னு உட்டுட்டாரு போல” என்றாள் பொண்டாட்டி ஓவர்லாப்பில்

“ம்ம்க்கும். இவ சண்டைக்குத்தான் பயந்துட்டாங்க. இன்னும் ரெண்டு மூணு நாள்ல எப்படியாச்சும் பாஸ் வாங்கிடரேன்மா? கொஞ்சம் பொறுத்துக்க” என்றேன்.

“முடியலைப்பா.. பெங்களூர் போறோம்ங்குற ஆசையில சாவுக்கு வந்த வீட்டுலேயே இருக்க முடியலைப்பா.. எத்தனை நாள் தான் வேத்தாள் வீட்டுல இருக்குறது?’

“நான் தான் உங்க சாப்பாட்டு செலவுக்கு பணம் அனுப்பியிருக்கேனே?”

“இந்தா நீ சோறு போடுறதுக்கு காசுனு கொடுக்க முடியுமா? நானும் ஒரு நாள் காய்கறி, ஒரு நாள் கறிக்குனு காசு கொடுத்துட்டு இருக்கேன். என்ன இருந்தாலும் தூரத்து சொந்தம். எனக்கு பிரச்சனையில்லை. புள்ளைங்களுக்கு புதுசு. வயசு பசங்க வேற அவங்க வீட்டுல இருக்காங்க மடியில நெருப்ப கட்டிட்டுத்தான் இருக்க வேண்டியிருக்கு” என்று போனைபிடுங்கி பேசின மனைவியின் குரலில் ஆதங்கமும் பயமும் இருந்ததை உணர முடிந்தது.

“ம்ம்ம்கும் நெருப்ப வயத்துல கட்டிகிட்டிருக்கியா நல்லா பிரியாணி துன்னுட்டு ஜாலியா இருக்கா. எங்களை பார்த்துக்க எங்களுக்கு தெரியும்” என்றாள் சின்னவளும் பெரியவளும் கோரஸாய். ஸ்பீக்கரில் இருந்தது போன் இப்போது.

“அடியேய்.. அம்மாவோட சண்ட போடாதீங்க. நான் எப்படியாச்சும் ட்ரை பண்ணுறேன்” என்று போனை வைத்தேன்.

நிஜமாகவே மனசு பூரா புள்ளைகள் நினைப்பாகவே இருந்தது.  எத்தன மணியானாலும் ஷூட்டிங் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ராத்திரி வீடு வந்து சேரும் வரை பெரியவள் தூங்கவே மாட்டாள்.  ரெண்டாவது வருடம் பிடெக் படிக்கிறாள்.

அவளுடன் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்.  எனக்கும் அவளுக்குமிடையே அப்பா பெண் உறவை விட, நண்பர்கள் உறவு தான் அதிகம் என்று பார்க்கிறவர்கள் எல்லோரும் சொல்வார்கள்.  அவளைப் பற்றி நினைக்கும் போதே கண்களில் கண்ணீர் தளும்பியது. சின்னவளைப் பற்றி சொல்லவே வேண்டாம். அப்படியே என் அம்மா.

போனை வைத்ததிலிருந்து என் அடுத்த முயற்சியை செயல்படுத்த ஆரம்பித்துவிட்டேன். லாக்டவுனில் பயணம் செய்ய இ பாஸ் இருந்தால் போதும் என்று சொன்ன நாளிலிருந்து நானும் பல முறை முயற்சித்துவிட்டேன் முடியவேயில்லை. ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணம் ரிஜெக்ட் ஆகிக்  கொண்டேயிருந்தது.

என் டைரக்டரிடம் போய் அவருக்கு தெரிந்த உயரதிகாரிகள் மூலமாய் முயற்சி செய்யலாம் என்று முடிவு செய்து போய் கேட்ட போது “பொண்டாட்டி புள்ளை இல்லாம கொஞ்ச நாள் ஜாலியாத்தான் இருறேன்யா” என்று சிரித்தார். நான் அவருக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் மலங்க மலங்க விழித்தேன்.  அவருக்கு பதில் சொல்ல முடியாவிட்டால் நான் அப்படித்தான் விழிப்பேன் என்று அவருக்கு தெரியும்

“இன்னும் நீ மாறலை. இரு போன் பண்ணிப் பார்க்குறேன்” என்று நான்கைந்து நம்பருக்கு போன் செய்தார். என் நேரமோ என்னவோ யாரும் போன் எடுக்கவில்லை. ரெண்டொரு நம்பர் பிஸியாகவே இருந்தது.
“ஃப்ரீயானது கூப்பிடுவாங்க. நீ டீட்யில் கொடுத்துட்டுப் போ. நான் என்னான்னு கேட்டு சொல்லுறேன்” என்றார்.

என் பொண்டாட்டி பிள்ளைகளின் ஆதார் கார்ட், டீடெயில் எல்லாம் அவருடய வாட்சப்பில் அனுப்பி  “ கொஞ்சம் தயவு பண்ணுங்க சார்” என்று கெஞ்சிய குரலில் சொல்லிவிட்டு வந்தேன். ஒரு வாரம் ஆகிவிட்டது இது வரை அவரிடமிருந்து பதிலே இல்லை.  இதற்கு நடுவில் பெங்களூரில் லாக்டவுன் ஈஸி பண்ணிட்டாங்க அங்கேர்ந்து ட்ரை பண்ணுங்க என்றார்கள் உடனே பொண்டாட்டிக்கு போன் போட்டேன். பக்கத்தில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் போய் விஷயத்தை சொல்லி வண்டி எல்லாம் தயாரா இருக்கு தயவு செய்து பர்மிஷன் கொடுங்க என்று முகத்தை வருத்தமாய் வைத்து கேட்கச் சொன்னேன்.

“உங்க டைரக்‌ஷன் வேலையெல்லாம் வேற யார் கிட்டேயாவது வச்சிக்கங்க. எனக்கு எப்படி கேட்கணும்னு தெரியும்’ என்று போனை வைத்தாள்.

அடுத்த ரெண்டு மணி நேரத்திற்கு அவளுக்கு போன் போட்டும் பிரயோஜனமில்லை. கட் செய்து கொண்டேயிருந்தாள். ஒரு வேளை பாஸு கிடைத்து கையெழுத்து வாங்குமிடத்தில் இருக்கிறாளா? என்று மனம் லேசாய் துள்ளாட்டம் போட்டது.  ஒரு விதத்தில் இவளையும் மிஸ் செய்கிறேன் என்று மனம் சொல்லியது.

”அநேகமா இன்னைக்கு கிடைச்சு வந்துருவாங்கன்னு நினைக்கிறேன்” என்று நண்பரிடம் குதூகலமாய் சொன்னேன்.

“அப்ப இன்னைக்கு வந்ததும் கபி கபி தானா?” என்று நண்பர் கண்ணடித்து சிரித்தார். 

உண்மையில் சொல்லப் போனால் மூன்று மாதத்திற்கு முன்னால் நடந்தேறியது.  தமிழ் சினிமா ஹீரோயின்களை விட என் பொண்டாட்டி ரொம்ப மோசம். கல்யாணம் ஆன புதிதில் வீட்டுல பெரியவங்க இருக்காங்க. புள்ளை பொறந்தப்புறம் அடுத்தது ஏத்திவிட்டுடலாம்னு பாக்கறீங்களா? எனக்கு ஆகாதுப்பா என்றாள் .ரெண்டாவது பின்னால் கிட்ட வந்தீங்க அவ்வளவுதான் என்றவள் பிள்ளைகள் வயதுக்கு வந்த பிறகு கிட்டதட்ட மிரட்டி, கெஞ்சித்தான் காரியம் நடைபெற வேண்டியிருக்கிறது. எப்ப கேட்டாலும் பொண்ணுக்கு கல்யாணம் ஆச்சுன்னா பேரன் பொறந்திருப்பான் என்பாள். பேரன் பொறந்தா கபி கபி செய்யக்கூடாதா? என்ன?

“லாக்டவுனு சொன்ன உடனே கிளப்பி விட்டிருக்கலாமில்லை?” என்றார் நண்பர்.

“அட நீங்க வேற நான் பண்ணாம இருப்பனா?. லாக்டவுனு சொன்னவுடனேயே ஒரு காரை அரேஞ்ச் பண்ணி உடனே கிளம்புங்கனு கிளப்பிவிட்டேன் சரியா கர்நாடகா பார்டர்ல தமிழ்நாட்டுக்காரன் வண்டிய உட மாட்டேன்னு ப்ளாக் பண்ணிட்டான். நான் போன்ல எத்தனையோ சொல்லிப் பார்த்தேன் ஒண்ணியும் வேலைக்காகலை”   

போன் அடித்தது. பொண்டாட்டிதான். “என்னம்மா பாஸு கிடைச்சுதா?”என்றேன் ஆவலாய்.

“ம்ம்.. மயிருல தான் கொடுத்தானுங்க. நான் தமிழ்ல பேச அவன் கன்னடத்துல பேச, மூணு மணி நேரம் உக்கார வச்சி. சரியான காரணம் இல்லாமல் பாஸு கொடுக்க முடியாதுன்னுட்டான்” என்றவளின் குரலில் அதீத எரிச்சல் இருந்தது.

நான் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் அமைதியாய் இருந்தது வேறு அவளை கிளப்பிவிட்டிருக்க வேண்டும். “போவல.. போவலைனு அடிச்சிட்டேன். நீ தான் அக்கா மொற வேணும். அவங்களுக்கு யாருமில்லை பொறந்த ஊட்டு உறவுலனு கொஞ்சி, கெஞ்சினே. விருந்தும் மருந்து ரெண்டு நாளுனு சும்மாவா சொன்னாங்க. ஒவ்வொரு நாளும் அவளுக்கு சிஷ்ருஷை பண்ணியே என் தாலி அறுந்து போவுது” என்று கத்தினாள்.

“அதெப்படிம்மா அருவும், நாந்தான் இருக்கேனில்லை” என்று நகைச்சுவையாய் சமாளிக்க முயற்சித்தேன். அது எடுபடவில்லை.

“தபாரு.. நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது. உடனடியாய் ஏதாச்சும் டாக்டர் கிட்டேர்ந்து உனக்கு உடம்பு சரியில்லைன்னு போன் அடிச்சி சர்ட்டிபிகேட் வாங்கி பாஸு வாங்கு இல்லே..” என்று அங்கே நாக்கை மடித்து கோபத்தில் போனை வைத்தாள்.

”என்னவாம்?” என்று கேட்ட நண்பரிடம் முழுவதுமாய் சொல்ல விருப்பமில்லாமல் “கிடைக்கலையாம்” என்றேன்.

“பொம்ப்ளைங்களை அனுப்பினா சரியா வருமா? ஆம்பளைங்க யாராச்சும் போனாத்தான் சரியா வரும். சரி.. நைட்டு சரக்கு அடிக்க வரட்டுமா ரூமுக்கு?’ என்றார்.

“எப்படி சரக்கு?”

“ஆந்திரா போய் வாங்கிட்டு வந்தான் நம்ம ப்ரெண்டு”

“சரக்கெல்லாம் பார்டர் தாண்டி எடுத்துட்டு வர உடுறானுவ. என் பொண்டாட்டி புள்ளைய கூட்டிட்டு வர உட மாட்டேனு ரூல்ஸ் பேசுறானுங்களே” என்று அங்கலாய்த்தேன். நண்பரை ரூமுக்கு வரச் சொல்லிவிட்டு, ராத்திரி பூராவும் சரக்கு தந்த போதையில் புலம்பினேன். என் புலம்பல் தாங்க முடியாமல் அடுத்த நாள் காலையில் சூர்யா ஆஸ்பத்திரியில் ஒரு டாக்டரிடம் போய் பார்க்கச் சொன்னார்.

சொன்ன நேரத்திற்கு டான் என்று போய்விட்டேன். “என்ன விஷயம்?’ என்ற டாக்டரிடம் “சுரேஷ் ஏதும் சொல்லலைங்களா?” என்றேன். டாக்டர் தலையாட்டினார். பெருமூச்சு விட்டபடி முதல்லிருந்து ஆரம்பித்து என் சோகக் கதையை சொன்னேன்.

“என்னான்னு எழுதிக் கொடுக்கட்டும்?”

“பார்த்த உடனே ஈ பாஸு குடுக்குறாப் போல ஒரு வியாதி எழுதிக் கொடுங்க சார்” என்றேன்.

“கொரானானு எழுதிக் கொடுக்கட்டுமா?” என்றவரை பார்த்து இயல்பாய் தலையாட்டி “அய்யோ.. அப்ப வர்ற வுட மாட்டங்க. வேற எதுனாச்சும்” என்று குரல் குழைத்துக் கெஞ்சினேன்.

“சரி ஹார்டுல ப்ராப்ளம் அப்படினு எழுதித் தர்றேன். மயக்கம் போட்டு விழுந்து ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்கு. ஆஞ்சியோ பண்ணனும்னு எழுதித்தரேன்” என்று பெரிய மனது வைத்தார்.  

அவசர அவசரமாய் சர்டிபிகேட்டை வாங்கி கொண்டு நான்கைந்து காப்பி எடுத்து மீண்டும் ஈ பாஸ் அப்ளை செய்தேன். வழக்கமாய் கொஞ்சம் நேரம் கழித்துத்தான் அக்னாலெஜ்மெண்ட் வரும் இன்று அப்ளிகேஷன் போட்ட மாத்திரத்தில் வர, சுப சகுனம் என்று தோன்றியது. மதியம் பாஸ் கிடைத்தால் உடனடியாய் அவர்களுக்கு வாட்சப் அனுப்பினால் இரவு வந்துவிடலாம். இப்போது லாக்டவுன் என்பதால் நிச்சயம் ட்ராபிக் வேறு இருக்காது. என்று யோசித்தபடி, பொண்டாட்டிக்கு போன் போட்டு விஷயத்தை சொன்னேன்.

”ஹார்டுல ஓலா?. அது போதுமா? வேற எதுனாச்சும் பெருசா போட்டு வாங்கியிருக்கலாமில்லை” என்றாள். பேசிக்  கொண்டிருக்கும் போதே மேசேஜ் டோன் வர, இரு இரு என்று அவளை ஹோல்ட் செய்து மெசேஜை பார்த்தேன். ஈ பாஸிடமிருந்துதான். ரிஜெக்டட். சொன்ன மாத்திரத்தில் அழ ஆரம்பித்தாள். நிச்சயம் அங்கே அவர்களால் இருக்க முடியாத நிலை. அதை வெளியே சொல்ல முடியாத அவஸ்த்தைதான் இந்த அழுகை என்று புரிந்தது. “அழுவாத ஏதாச்சும் செய்யுறேன்” என்று போனை கட் செய்தேன். என் கண்களிலும் கண்ணீர் வந்திருந்தது. யோசித்தபடியே தூங்கிப் போனேன். பெரிதான சங்கூதும் சத்தம் கேட்டு தடாலென்று கண்விழித்து, என்னையே தொட்டுப் பார்த்துக் கொண்டேன்.  நமக்கில்லை என்று நினைத்து சந்தோஷப்பட்டேன். வெளியே வந்து எட்டிப் பார்க்க, எதிர் வீட்டு தாத்தா போய்விட்டிருந்தார். கொஞ்சம் நேரம் வீட்டு வாசலில் அவரை கிடத்தியிருந்த இடத்தில் போய் நின்று துக்கம் விசாரித்தேன். 

கொரானா காலத்தில் போனதால் நாலைந்து பேர் கூட இல்லை. “எப்பவும் மனுஷங்களோட இருக்குறவரு இப்படி நாலு பேர் கூட கூட முடியாம போய்ட்டாரே” என்று பாட்டி அழுதாள்.  கொரோனாவை மதிக்காமல் அவளை அணைத்து தேற்றிய போது ஒரு மின்னல் அடித்தது. பரபரவென போன் எடுத்து உடனடியாய் பொண்டாட்டி கூப்பிட்டேன். “என்னா?” என்றவளின் குரலில் தூக்கம் மிச்சமிருந்தது.

விஷயத்தை சொன்ன உடன் கற்பூரமாய் பிடித்துக் கொண்டாள். இயக்குனரின் மனைவி அல்லவா. அடுத்த நிமிடங்களில் அவள் பெங்களூரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் போய் மாமனார் இறந்து விட்டதாய் சொல்லி அழ, நான் இங்கேயிருந்து வீடியோ கால் மூலம் பாடியைக் காட்டி, அழுதேன். ஆயாவிடம் ஏற்கனவே சொல்லி வைத்திருந்தேன். ‘உங்க மாமா பூட்டாருடீ” என்று ஆயாவும் தன் பங்குக்கு நடிக்க, அடுத்த சில மணி நேரங்களில் என் பொண்டாட்டி புள்ளைகள் என் வீட்டில்.

வீட்டினுள் நுழைந்தவுடன் அவர்களைப் பார்த்த மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் திகைத்து மூவரையும் அணைத்துக் கொண்டேன். எல்லோர் கண்களிலும் கண்ணீர். துடைத்துக் கொண்டு. “ஒரு வழியா ஈ பாஸு வாங்கி உங்களை வீடு சேர்த்தாச்சு. தாத்தா புண்ணியம் கட்டிக்கிட்டாரு” என்றேன்.

“இவ்வளவு கஷ்டப்பட்டு பாஸு வாங்கி என்ன பிரயோஜனம். வழியில ஒரு இடத்துல கூட செக் பண்ணலை” என்றாள் என் பெரிய பெண்.

கேபிள் சங்கர்

லாக்டவுன் கதைகள் - 8 எனக்காக இது கூட பண்ண மாட்டியா?


Post a Comment

2 comments:

RAMESH K said...

கேபிள் சங்கர் சார்,
தற்போது தான் தங்களின் 24 சலனங்களின் NUMBER புத்தகம் படித்து முடித்தேன். மிக சிறந்த முறையில் தங்களின் எழுத்தாக்கம் நன்று. ஒரே மூச்சில் நான் படித்து முடித்த புத்தகங்களில் இதுவும் ஒன்று. கொஞ்சவும் தொய்வு ஏற்படுத்தாமல், அதே வேளையில் மிக ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ள உங்கள் கதை சிறப்பு. 24 கலை தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாகிற சினிமாவின் பின் இவ்வளவு வலியும் வேதனையும் இருப்பது இதை படிப்பதின் வழி புரிந்து கொண்டேன். உங்களுடைய இந்த புத்தகம் படித்ததன் மூலம் இனி எந்தவொரு படத்தையும் திரையரங்கில் மட்டுமே பார்க்கவேணும் னு முடிவு பண்ணிருக்கேன். நாங்க சாதாரணமாக கடந்து போகிற பிரபலங்களின் பேட்டிகளுக்கு பின் கூட வலி இருக்கும் என்பதை தங்களின் எழுத்தின் வழி உணர்ந்தேன். உண்மையான உழைப்பு எத்தனை போராட்டங்களை சந்தித்தாலும் நம்மை கைவிடாது என்று நம்பிக்கை தரும் வகையில் கதையை வைத்ததில் மிக்க நன்றி. தங்களுக்கு எனது இதயபூர்வமான பாராட்டுக்கள்.

தங்களை எதில் பாராட்டுவது என்று தெரியவில்லை. அதனால் இந்த வலைதளத்தை பயன்படுத்தினேன். மன்னிக்கவும்.

RAMESH K said...

கேபிள் சங்கர் சார்,
தற்போது தான் தங்களின் 24 சலனங்களின் NUMBER புத்தகம் படித்து முடித்தேன். மிக சிறந்த முறையில் தங்களின் எழுத்தாக்கம் நன்று. ஒரே மூச்சில் நான் படித்து முடித்த புத்தகங்களில் இதுவும் ஒன்று. கொஞ்சவும் தொய்வு ஏற்படுத்தாமல், அதே வேளையில் மிக ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ள உங்கள் கதை சிறப்பு. 24 கலை தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாகிற சினிமாவின் பின் இவ்வளவு வலியும் வேதனையும் இருப்பது இதை படிப்பதின் வழி புரிந்து கொண்டேன். உங்களுடைய இந்த புத்தகம் படித்ததன் மூலம் இனி எந்தவொரு படத்தையும் திரையரங்கில் மட்டுமே பார்க்கவேணும் னு முடிவு பண்ணிருக்கேன். நாங்க சாதாரணமாக கடந்து போகிற பிரபலங்களின் பேட்டிகளுக்கு பின் கூட வலி இருக்கும் என்பதை தங்களின் எழுத்தின் வழி உணர்ந்தேன். உண்மையான உழைப்பு எத்தனை போராட்டங்களை சந்தித்தாலும் நம்மை கைவிடாது என்று நம்பிக்கை தரும் வகையில் கதையை வைத்ததில் மிக்க நன்றி. தங்களுக்கு எனது இதயபூர்வமான பாராட்டுக்கள்.

தங்களை எதில் பாராட்டுவது என்று தெரியவில்லை. அதனால் இந்த வலைதளத்தை பயன்படுத்தினேன். மன்னிக்கவும்.