Thottal Thodarum

Apr 1, 2021

ப்ரம்மா -10

10

”தமிழ் நாட்டுல பாதி இடங்கள்ல நம்ம சேனல் தெரியலை” என்று பதட்டத்தோடு சொன்னான் ஷியாம்.

“எதுனால? டெஸ்ட் ப்ராட்காஸ்டிங்க்  போது எல்லா ஊருலேயும் தெரிஞ்சுச்சே?”

“டெஸ்டுலேயே நமக்கு தெரிஞ்ச ப்ரச்சனைதான் மனுஷ். சாட்டிலைட் ட்ரிப்ட் ஆகுதுங்கிறது. இருக்குற மூணு மணி நேர ப்ரோக்ராமை சரியா கிளியரா காட்டணும்னா யாராச்சும் ஒரு ஆளு டிஷ் பக்கத்திலேயே உக்காந்திருக்கணும். எப்படியும் டெக்னிக்கல் பிரச்சனையை நாமளே சரி பண்ணுவோம் அப்ப காட்டிக்கலாம்னு பெரிசா யாரும் இண்ட்ரஸ்ட் காட்டலைனு தகவல்”

மனுஷ் யோசனையாய் அவனைப் பார்த்தான். பழைய சாட்டிலைட்டை வாடகைக்கு எடுக்கும் போதே இந்த ப்ரச்சனை தெரிந்துதான் வாடகைக்கு எடுத்திருக்கிறான். நல்ல சாட்டிலைடுக்கு வாடகை மிகவும் அதிகம்.  அவன் தேற்றிய தொகைக்கு சாட்டிலைட் வாடகை மட்டுமே பல கோடிகள் கொடுக்க இப்போதைக்கு இயலாது. 

”இது மட்டும் தான் பிரச்சனையா? அப்படின்னா இதை நாம டெக்னிக்கலா டீல் பண்ணுவோம். வேற ஏதும் காரணங்கள்?”

ஷியாம் பதில் சொல்லாமல் அமைதியாய் இருந்தான்.

“அப்ப வேற ஒண்ணும் இருக்கு. என்ன அது?”

“ஆளும் கட்சியோட சேனலா நாம அடையாளம் காட்டப்பட்டிருக்கிறதுனால எதிர்கட்சிக்காரங்களோட கேபிள் நெட்வொர்க்குல நம்ம சேனலைக் காட்ட மாட்டேன்குறாங்க. டெஸ்ட் சிக்னல் செக் பண்ண ஆள் அனுப்புனவப்பவே பெருசா ஒத்துழைப்பு தரலை”

“அது எதிர்பார்த்தது தானே ஷியாம்?. ப்ரோக்ராமிங்கில சாதிச்சிட்டோம்னா எதிர்கட்சி, ஆளும்கட்சின்னு பிரிவினை இருக்காது. கண்டெண்ட் தான் பேசும்”

“எனக்கென்னவோ நம்ம சேனல் கட்சி அடையாளத்தோட இருக்குறது அவ்வளவு நல்லதா படலை மனுஷ்” என்றான் ஷியாம்.

ஷியாம் சொல்வது போல மனுஷுக்கும் அத்தனை விருப்பமில்லைதான்.  ஆனால் முதலீடு பெற வேண்டுமானால் பின்னணி வேண்டும். அதிகாரத்தோடு கிடைக்கும் பின்னணி பெரும் பலத்தை தரும். பலம் தனகென ஒரு அதிகாரத்தை தரும். அது பயத்தை தரும்.

“நாம சர்வை ஆகுற வரைக்கும் சில அடையாளங்கள் தேவை ஷியாம். நான் தெரியாம செய்யலை” என்றான் மனுஷ்.

ஷியாமுக்கு மனுஷின் பேச்சு புரிந்ததால், பதில் பேசாமல் தலையாட்டினான்.

“ஆனா ஒரு விஷயம் மனுஷ். ப்ரோக்ராமிங் எவ்வளவு முக்கியமோ அதை விட டிஸ்டிரிப்யூஷன் முக்கியம்னு தோணுது. இப்போதைக்கு இருக்கிற டெக்னிக்கல் ப்ரச்சனைய சமாளிச்சிரலாம். ஆனால் வி ஹேவ் டூ கான்செண்ட்ரேட் மோர் ஆன் டிஸ்ட்ரிப்யூஷன்” என்று அழுத்திச் சொன்னான்.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் இரண்டு மூன்று சேனல்களின் டெஸ்ட் ப்ராட்காஸ்டிங் போய்க் கொண்டிருந்தாலும், அபீஷியலாய் தமிழின் முதல் சேனலாய் க்ளோடிவி வரும் போது, சுலபமாய் அங்கீகாரமும், ரீச்சும் கிடைத்திருக்க வேண்டிய ஒன்று. அது கிடைக்காமல் போனதற்கு காரணம் பின்னணியில் உள்ள அரசியல்.

“சரி முதலில் டெக்னிக்கல் பிரச்சனையை சரி செய்வோம்”

”அதுக்கு நாம வேற சாட்டிலைட் போகணும்”

“நடக்குறதப் பத்தி பேசுவோம்”

ஷியாம் பதில் சொல்லாமல் இருந்தான். அவன் பதில் சொல்லவில்லை என்றால் பேச விருப்பவில்லை என்று அர்த்தம். மனுஷுக்கு அது தெரியும் என்பதால் அவனும் பேசாமல் இருந்தான். சட்டென ஏதோ நினைவு வந்தவனாய் “ஷியாம் உனக்கு நியாபகம் இருக்கா? நாம டெஸ்ட் ப்ராட்காஸ்ட் செய்த போது ஏரியா ஏரியாவா கேபிள் ஆப்பரேட்டரை போய் மீட் பண்ணோமில்லை. அப்ப பேட்டை பக்கத்திலேர்ந்து ஒரு ஆப்பரேட்டர் பேரு கூட சுந்தரோ என்னவோ?. எல்லாரும் நமக்கு சொம்படிச்சிட்டிருந்தப்போ, அவன் தான் முதல்ல உங்க சேட்டிலைட் பழசு. ஜியோ ஸ்டேஷனிரில ட்ராவல்ல பிரச்சனைனு டெக்னிக்கலா பேசினவன். அப்ப அவன் ஒரு விஷயம் சொன்னான் கவனிச்சியா? சரியா ஒரு மிட் டைம்ல சாட்டிலைட்டை ட்ராக் பண்ணாத்தான் பத்து நிமிட இடைவெளில கரெக்டா ட்ராக் பண்ணமுடியும்னு சொன்னான்.  அவனை கூப்பிடு. நமக்கு இதுல இருக்குற ப்ரச்சனை நல்லா தெரிஞ்சேத்தான் இந்த சாட்டிலைட்ட வாடகைக்கு எடுத்திருக்கோம். ஆனா அது ஒரு பெரிய பிரச்சனையே இல்லைனு, ஒரு ஆப்பரேட்டரை வச்சி, நான் பண்ணியிருக்கேன் நீங்களும் பண்ண முடியும்னு விஷயத்தை சொல்ல வைப்போம்.  அவனை தேடிப் பிடிச்சி கூட்டிட்டு வா” என்றான் மனுஷ்.

ஷியாமுக்கு நல்ல ஐடியாவாகவே பட்டது.  சக ஆப்பரேட்டரை வைத்து அது ஒன்றும் பெரிய பிரச்சனையே இல்லை என்பதாய் காட்ட ஆரம்பித்தால் நிச்சயம் தொழில் போட்டி என்று மட்டுமில்லாமல், மனுஷ் சொல்வது போல நல்ல நிகழ்ச்சிகளை மக்களிடம் கொண்டு சேரும் பட்சத்தில் ஒர்க்கவுட் ஆகும் என்று நம்பிக்கை பிறந்தது.

உடனடியாய் தன் கீழ் இருக்கும் மார்கெட்டிங் டீமை இண்டர்காமில் அழைத்தான். ‘பேட்டை ஏரியாவில நாம மீட் பண்ண ஆப்பரேட்டர் லிஸ்ட் வேணும். அதுல சுந்தர் எந்த ஏரியா, அவரோட காண்டேக்ட் நம்பர் உடனே வேணும். கமான் பாஸ்ட்” என்று சடசடவென உத்தரவிட்டான்.

அடுத்த பத்து நிமிடங்களில் சுந்தரின் அட்ரஸ், போன் நம்பர், செல் நம்பர் ஆகிய தகவல்கள் மனுஷின் டேபிளில் இருக்க, ”கூப்ட்டு பேசி வரச் சொல்லுறியா?” என்று கேட்டான் ஷியாம்.

மனுஷ் தலையாட்டியபடியே. “எல்லாரையும் வைக்குற இடத்துல தான் வைக்கணும் ஷியாம். நாளைக்கு இந்தியாவிலேயே முதன்மை சேனலா வரப் போற க்ளோடிவியோட ஓனரை. சீ.ஈ.ஓவை, அத்தனை சுலபமாய் யாரும் சந்திச்சிரக்கூடாது. சந்திச்சிர முடியும்ங்கிற எண்ணத்தையும் ஏற்படுத்திட கூடாது.  நீ கூப்பிட்டு இந்த டைம்லேர்ந்து இந்த டைமுக்குள்ள வர முடியுமானு கேளு. ஆனா அவனுக்கு அந்த டைம்தாங்கிறத புரிய வை. அடுத்த நிலைக்கு போக விரும்புறவன், புரிஞ்சிக்கிறவன், நிச்சயம் வருவான்” என்றான் மனுஷ்.

ஹைராக்கி. படி நிலை. ஒரு நிறுவனத்திற்கு மிக முக்கியமானது யாருக்கு அடுத்து யார்? யார் யார் எந்தெந்த நிலைக்கு பொறுப்பு? என்பதை நிர்ணையிக்கும் படி நிலை. யாரை எங்கே வைக்க வேண்டும்?  பழிவாங்கவோ, அல்லது பல்லக்கு தூக்கவோ இரண்டிற்கும் இந்த படி நிலை முக்கியம். பல விஷயங்களை நேரிடையாய் டீல் செய்வதை தடுக்கும். பழியோ, சதியோ, எதிர்ப்போ எல்லாவற்றையும் ஒரு நாலு லெவல் தள்ளி நின்று பார்க்கும் போது புதிய யோசனைகள் தோன்றும். அதற்கான நேரம் கிடைக்கும். தலைமைப் பதவியில் உள்ள பல பேர்கள் இந்த ஹைராக்கியை தங்களுடய கேடயமாய் பயன்படுத்துவார்கள். ஆனால் சில பேர் எளிமையாய் பழகுகிறேனென்று தன்னை எளிமையானவனாய் வெளிப்படுத்திக் கொண்டாலும் தூரத்தில் நான்கு பாக்ஸர்களைத் தாண்டி நெருங்க முடியாதவர்களாய்த்தான் இருப்பார்கள். பல எளிமையாளர்கள் போலிகள் தான். மனுஷ் வியாபாரி. ஆளுமை மிகுந்தவன். அரசியல் தெரிந்தவன். யாரை எங்கே? எப்போது? நெருக்க. விலக்கத் தெரிந்தவன்.

@@@@@@@@@

சுந்தருக்கு ஆச்சர்யமாய் இருந்தது. மனுஷிடமிருந்து சந்திப்பதற்கான அழைப்பு என்பதை அவன் எதிர்பார்க்கவேயில்லை. சில மாதங்களுக்கு முன்னால் நடந்த ஆப்பரேட்டர் கூட்டத்தில் க்ளோடிட்வியின் சாட்டிலைட் பற்றி அவன் கூறிய கருத்து அங்கிருந்த பல ஆப்பரேட்டர்களுக்க் புரியவேயில்லை என்பதைத் தாண்டி, சாட்டிலைட் நடத்தும் ஆட்களுக்கு புரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்று உணர்ந்துதான் தன் கருத்தை சொன்னான். அவர்கள் ரியாக்ட் ஆகவில்லை. அதற்கு பின்னால் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்று புரிந்து கொண்டு மேலும் பேசாமல் அங்கிருந்து விலகினான்.

டெக்னாலஜி வளர, வளர, அதை புரிந்து கொண்டு தொழில் நடத்துவது போய், காசு கொடுத்தால் யார் வேண்டுமானாலும் டெக்னாலஜியை இம்ப்ளிமெண்ட் செய்து கொடுத்துவிடுவார்கள் என்றாகிவிட்ட நிலையில், பல ஆப்பரேட்டர்களுக்கு எந்தெந்த சேனல் எந்தெந்த சாட்டிலைட்டில் வருகிறது. அசிமுத் என்றால் என்ன? போலரைஷேஷன் என்றால் என்ன? என்று கேட்டால் பதிமூணாம் வாய்ப்பாடு கேட்டது போல முழிப்பார்கள். அவர்களுக்கு தெரியாதது தனக்கு தெரியும் என்பதை வைத்துத்தான் தன் வியாபாரம் வளர்கிறது என்பது ஒரு விதத்தில் சந்தோஷமாக இருந்தாலும் டெக்னாலஜியை அடிப்படையாய் வைத்து செய்து இருக்கும் தொழிலை செய்கிறவன் அதை தெரிந்து கொள்ள பிரயத்தனம் கூட செய்யாமல் இருக்கிறார்களே? என்று வருத்தமாய் இருந்தது.  இன்று மனுஷ் தன்னை அழைத்திருப்பதற்கான காரணமும் அவர்களின் ஒளிபரப்புக்கு பின்னால் உள்ள ஏதோ விஷயத்தைப் பேசத்தான் என்று சுந்தருக்கு தோன்றியது.

மனுஷ் போன்ற பெரும் புள்ளிகளின் சேனலைப் பற்றி குறை கூறியவனை, உங்கள் கருத்துக்கு நன்றி என்று கூட சொல்லாமல் கிளம்பியவர்களிடமிருந்து தன்னை அழைக்கிறார்கள் என்றால் ஒன்று மிரட்ட, அல்லது உபயோகிக்க இந்த இரண்டைத் தவிர வேறோர் காரணமும் இருக்க வாய்ப்பில்ல என்பதில் உறுதியாய் இருந்தான் சுந்தர்.  மனுஷ் அழைப்பதாய் ரிஷப்ஷனில் சொல்லப்பட, ரிஷப்ஷனிஸ்ட் பின்னணியில் உள்ள் டிவியில் க்ளோடிவியின் ஒளி மீண்டும் மீண்டும் பரவிக் கொண்டிருந்தது.

மனுஷின் அறை மிக எளிமையாய் இருந்தது. அவனுக்கு முன் பெரிய டீவி ஒன்று மெளனமாய் ஒடிக் கொண்டிருந்தது. உயர்தர் கார்பெட்டில் கால் வைத்ததும் தன்னையே உள்ளிழுத்துக் கொண்டதாய் உணர்ந்தான் சுந்தர். மனுஷுக்கு பக்கத்தில் ஷியாம் உட்கார்ந்திருந்தான்.  எழுந்து சுந்தருக்கு கை கொடுத்து வரவேற்றான் ஷியாம்.

“வாங்க சுந்தர். வெல்கம் டூ க்ளோடிவி. ஐயம் ஷியாம்.” என்றான்.

“வணக்கம் ஷியாம் வணக்கம் மனுஷ்” என்று இயல்பாய் மனுஷுக்கு எதிரே இருந்த சேரில் அமர்ந்தான் சுந்தர். மனுஷ் அவனது ஆட்டிட்டியூட்டை பார்த்துக் கொண்டேயிருந்தான். மிகவும் தைரியமான, உறுதியான எண்ணம் கொண்டவர்கள்தான் நேரிடைய் தயக்கமின்றி உரையாட தயாராவார்கள் என்று படித்திருக்கிறான். அதை உணர்ந்தும் இருக்கிறான்.

“ஐயம் மனுஷ். உங்களுக்கு தெரிந்திருக்கும். லெட் மீ கம் டு த பாயிண்ட். எங்கள் சாட்டிலைட் ஒளிபரப்பைப் பத்தி நீங்க அன்னைக்கு ஒரு கருத்து சொன்னீங்க?. அதைப் பத்தி பேசத்தான் உங்களை கூப்பிட்டோம். பிகாஸ் என்னதான் சேனல் நாங்க நடத்துனாலும், அதை மக்கள் கிட்ட கொண்டு போய் சேக்குறது நீங்க தான் ஆப்பரேட்டர்ஸ். ஸோ உங்க கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துத்தான் இந்த சந்திப்பு” என்றான் மனுஷ்.

”உங்க ரஷ்யன் சாட்டிலைட் பழசு. இன்னும் ரெண்டு வருஷமோ அல்லது மூணு வருஷம் தான் புட் ப்ரிண்ட்ல இருக்கும் அப்புறம் விண்வெளி குப்பையாத்தான் சுத்தும். பட் உங்க பிரச்சனை பெரிய சாட்டிலைட்டுக்கான பணமா? இல்லையாங்கிறத விட இப்ப முக்கியமான பிரச்சனை ஒளிபரப்பு இன்னும் சரியாப் போய் சேரணும்னா இப்ப இருக்கிற டெக்னிக்கல் பிரச்சனையை சரி செய்யணும் அதுக்குத்தான் என்னை கூப்பிட்டிருக்கீங்கன்னு நினைக்கிறேன். இஃப் ஐயம் கரெக்ட்?” என்று தன் பேச்சை நிறுத்தினான் சுந்தர்.

மனுஷுக்கு சுந்தரை மிகவும் பிடித்துப் போனது. சமரசமில்லாமல் மனதில் தோன்றியதை சொல்கிறான்.

“யா.. யூ காட் அவர் பாயிண்ட். கோ அஹெட். உங்களிடம் ஏதாவது அதற்கான தீர்வு இருக்கா?’

“இருக்கு. கொஞ்சம் பொறுமையும், டெக்னாலஜியும் தெரிஞ்சா இப்போதைக்கு சர்வைவ் பண்ணலாம். உதாரணமா உங்க சாட்டிலைட்டோட பிரச்சனை ஆறு மணிக்கு டிஷ்ஷை ட்யூன் பண்ணா அது நிகழ்ச்சி முடியும் ஒன்பது மணிக்கு ஒரு மணி நேரம் முன்னாடியே க்ளாரிட்டி போயிரும். அதை சரி பண்ணனும்னா.. ஆறு டூ 6.30க்கு தான் சாட்டிலைட் நம்ம புட் பிரிண்ட் நேர்க்கோட்டுல சுத்த ஆரம்பிக்குது. அந்த டைம்ல சாட்டிலைட் டிஷ்ஷை ட்ராக் பண்ணி பிக்ஸ் பண்ணிட்டம்னா, ஆறுலேர்ந்து மோசமா தெரியிற சேனல் ஒரு பத்து நிமிஷ இடைவெளியில கொஞ்சம் கொஞ்சமாய் க்ளாரிட்டியா வர ஆரம்பிச்சி நிகழ்ச்சி முடியுற வரைக்கும் சரியா ஒளிபரப்பாகும். அப்படித்தான் எங்க நெட்வொர்க்குல பண்ணியிருக்கோம். இட்ஸ் ஒர்க்கிங்” என்றான் சுந்தர்.

ஒரு நல்ல வியாபாரி, டெக்னீஷியன் குறைகளை மட்டுமே சொல்லிக் கொண்டிராமல் அதற்கான விடையை தேடுவான். தேடுகிறவன் அடுத்த கட்டத்தை நோக்கிப் போவான்.

”உங்களால் மற்ற நெட்வொர்க்குளுக்கு இதை சொல்லித் தர முடியுமா? தமிழ் நாடு முழுக்க ஆப்பரேட்டர்களை குழுவாய் சந்தித்து ஆட்களை ட்ரெயின் பண்ண முடியுமா?”

சுந்தர் தான் எதிர்பார்த்து வந்த விஷயமே நடக்கிறது என்பது குறித்து மகிழ்ச்சியாய் இருந்தது. மனுஷ் போன்றோரின் நட்பு கிடைப்பது தன் எதிர்காலத்திற்கு நல்லது என்று உள் மனம் கூறியது.

“நிச்சயம் பண்ணலாம். ஆனா அதுக்கு கொஞ்சம் செலவாகுமே?” என்று சிரித்தான்.

“அப்கோர்ஸ்.. அப்கோர்ஸ். உங்க டைம், அறிவு அதை எங்களுக்காக ஸ்பெண்ட் பண்ணும் போது காம்பென்சேட் பண்ணாம விட மாட்டோம்.’

”சரி எப்ப என்னங்கிறது குறிச்சு உங்களை நான் எப்ப காண்டேக்ட் பண்ணுறது?”

“இது விஷயமா ஷியாம் உங்களை காண்டேக்ட் பண்ணுவாரு. ஷ்யாம் டேக் கேர் ஆப் ஹிம்” என்று ஷியாமைப் பார்த்துச் சொன்னான். ஷியாமுக்கு புரிந்தது. ஹைராக்கி.

“சார். இன்னைக்கு இந்த மூணு நேர நிகழ்ச்சிக்கு இது ஓக்கே. ஆனா இன்னும் ஒரு அரை மணி நேரம் ஒளிபரப்பு எக்ஸ்டெண்ட் ஆனா மொத்த கதையும் அவ்வளவுதான். பெட்டர் புது சாட்டிலைக்கு சீக்கிரம் போங்க அது  தான் உங்களுக்கும் உங்க சேனலுக்கும் நல்லது. இதை ஏன் இப்பவே உங்க கிட்ட சொல்லுறேன்னா இதுக்கு அப்புறம் உங்க அடுத்த ஹைராக்கி ஆளைத்தான் நான் டீல் செய்ய வேண்டியிருக்கும். உங்கள சந்திக்க சான்ஸ் கிடைக்குமோ இல்லையோ அதனாலத்தான். ஆல் த பெஸ்ட்’ என்று வாழ்த்திவிட்டு, கிளம்பினான் சுந்தர். மனுஷ் அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான். 

தொடரும்

நாளை இந்தப் பகுதி நீக்கப்பட்டு, புதிய பகுதி வரும்

Post a Comment

No comments: