Pages

Apr 7, 2015

கோணங்கள்-23

கோணங்கள் 23- இலவசமாகிவரும் சினிமா!

“வாரத்துக்கு இத்தனை படம் வந்தா எப்படிப் பாப்பாங்க மக்கள்?”
“அப்படியே நல்லாயிருக்குன்னு கேள்விப்பட்டுப் படம் பார்க்கலாம்னா… தியேட்டர்ல இருக்க மாட்டேங்குது”



“முதல்ல.. வெளியாகிற படங்களோட எண்ணிக்கையைக் குறைக்கணும். அப்பத்தான் தமிழ் சினிமா உருப்படும்” எனப் பலதரப்பட்டக் கருத்துகள் பேசப்படுகின்றன. ஆனால் ப்ளாக் பஸ்டர், சூப்பர் ஹிட் என்ற வார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தம் என்னவென்று ஒரு வெற்றிப் படத்தின் தயாரிப்பாளரிடமோ விநியோகஸ்தரிடமோ கேட்டால் சோகமாகச் சிரிப்பார்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன் வெளியான படமொன்று விமர்சகர்களிடையே நல்ல பாராட்டு பெற்றது. இத்தனைக்கும் நல்ல விநியோக நிறுவனம்தான் படத்தை வெளியிட்டது. என்ன செய்து என்ன? அப்படத்தின் வசூல் மட்டும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. அதே வாரத்தில் வந்த ஒரு காமெடிப் படத்தின் வசூல் ஓரளவுக்குப் பரவாயில்லை. இன்றைய தமிழ்சினிமா இருக்கும் நிலை இது. இன்று படமெடுத்து வெளியிட்டுவிட்டாலே சூப்பர் ஹிட்தான். அதன் பிறகு ஓடும் நாட்கள், வசூல் எல்லாம் எக்ஸ்ட்ரா.

பணம் போட்டுப் பணமெடுப்பதுதான் சினிமாவின் அடிப்படை வியாபாரம். அவ்வியாபாரமே இன்றைக்குப் பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது. ஏனென்றால் முன்னணி வரிசை நடிகர்களைத் தவிர வேறு யாருக்கும் வியாபாரம் என்ற ஒன்றே இல்லை என்பதுதான் உண்மை நிலை. படம் எடுத்து முடித்ததும் அதன் ஆடியோ உரிமையை விற்கலாம் என்றால் இன்றைய டிஜிட்டல் பைரஸி உலகில், படத்தின் இசை வெளியீட்டுக்கு முதல்நாள் இரவே பாடல்களை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளக்கூடிய அளவில் அதன் வியாபாரம் இருப்பதால் எந்தவொரு நிறுவனமும் பணம் கொடுத்து ஆடியோவை வாங்குவதில்லை.

அப்படி வாங்கினால் அவை பெரிய இசையமைப்பாளர்கள் இசையமைத்த படங்களாகத்தான் இருக்கும். ஏனென்றால் அவர்களின் பெயருக்காகவாவது ஐ ட்யூன், காலர் ட்யூன், யூ ட்யூப் விளம்பரம் போன்ற வழிகளில் வருமானம் வர வாய்ப்பிருக்கிறது. இரண்டாம் நிலை இசையமைப்பாளர்கள் படங்களுக்கு என்றால் குத்துமதிப்பான ஒரு விலையில் இரண்டு முதல் அதிகபட்சம் ஏழு லட்சம் வரையோ கொடுத்து அவுட் ரைட்டாக மட்டுமே ஆடியோ வாங்கப்படுகிறது.

புதிய இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், டீம் என்றால் அதுவும் இன்று இல்லை. “இத்தனை சிடி போடுவோம், அது விற்ற காசில், டவுன்லோட், ஐ ட்யூன், யூ ட்யூப் வருமானத்தில் வரும் பணத்தில் 50-50 எனச் சதவிகிதம் தருவோம்” என்ற ஒப்பந்தத்தோடு முடிகிறது. எத்தனை படங்களுக்குச் சரியாகக் கணக்குக் காட்டப்பட்டு, அப்படத்தின் ஆடியோ முலம் ஒத்தைப் பைசாவேணும் தருகிறார்களா என்று கேட்டீர்களானால் கிட்டத்தட்ட இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஓராண்டு முன்புவரை ஏதாவது ஒரு திரையரங்கில் ஆடியோ வெளியீட்டு நிகழ்வு நடத்தும் செலவையாவது பகிர்ந்துகொண்டன ஆடியோ நிறுவனங்கள். பின்னர், மெல்ல மெல்ல தயாரிப்பாளர்களை நெருக்கி, “சிடி போடுவோம், மற்ற டிஜிட்டல் முறை விற்பனை மூலம் வரும் வருமானத்தைப் பகிர்ந்துகொள்வோம் என்று ஆசைகாட்டின. தற்போது உங்கள் வசதிக்கு ஏற்றாற்போல் இசைவெளியீட்டை, திரையரங்கிலோ, பண்பலை வானொலி நிலையத்திலோ வைத்துக் கொள்ளுங்கள் என்று கைவிரித்துவிட்டன.
அதுவும் போதாதென்று “எங்க ஆடியோ லேபிளில் உங்க படப் பாடல்களைப் போட்டுக்கங்க. ரிங் டோன் கன்வர்ஷன், டிஜிட்டல் வர்ஷன், இதுக்கெல்லாம் செலவாகுது. அதனால ப்ளாட் ரேட்டாய் ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்துருங்க. நாங்க ஆடியோ சிடி, போட்டு உங்களுக்குக் கொடுத்திடுறோம்” என்று அப்படியே தலைகீழ் நிலைமைக்குக் கொண்டுவந்து நிறுத்திவிட்டார்கள் ஆடியோ நிறுவனத்தினர்.

படத்தையும் எடுத்து, இசையமைப்பாளருக்கு பணமும் கொடுத்து அதைப் பணத்துக்கு விற்ற காலம் போய், படமெடுத்த தயாரிப்பாளரே பணம் கொடுத்து சி.டி போட்டு அதை வேறொரு நிறுவனத்தின் பெயரில் வெளியிடும் கொடுமையான நிலையில்தான் இன்றைய ஆடியோ உலகம் இருக்கிறது. மிகப்பெரிய இசையமைப்பாளரின் பாடல் உரிமையே வெறும் ஒன்று முதல் இரண்டு கோடி வரைதான் போகிறது. அப்படி வருகிற வருமானத்தை இசையமைப்பாளருக்குக் கொடுத்த சம்பளத்துடன் ஒப்பிட்டால் நஷ்டத்தில்தான் கணக்கு வரும்.

இதனால் நிறைய பட நிறுவனங்கள் எதற்கு வெளியில் கொடுத்து ஆடியோவை வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களே ஒரு ஆடியோ லேபிளை உருவாக்கி விடுகிறார்கள். வரும் பத்து பைசாவாவது பணம் போட்ட நமக்கே வரட்டுமென்ற இவர்களின் முடிவை எல்லோராலும் செயல்படுத்த முடியாது. ஏனென்றால் அந்நிறுவனத்தை நிறுவ, தனியே ஒரு செலவு செய்ய வேண்டியிருக்கும்.

ஆடியோ நிறுவனங்கள் இப்படிச் செயல்படுவதற்கான காரணம் என்ன என்று கேட்டால் அவர்கள் சொல்லும் ஒரே காரணம் ஆடியோ விற்பதில்லை என்பதுதான். ஏன் விற்பதில்லை என்று கேட்டால் பைரஸி என்ற ஒரே பதில்தான் வருடக் கணக்கில் சொல்லப்பட்டு வருகிறது.

சமீபத்தில் கமல் ஹாசன் கூடத் தன்னுடைய உத்தம வில்லன் படத்தின் இசையை மும்பையில் வசிக்கும் தன் மகள் ஸ்ருதிக்கு ஆடியோ ஃபைலாக அனுப்பி அதை டவுன்லோட் செய்துகொள்ளச் செய்து வெளியிட்டார். அப்போது பேசிய கமல் “எப்படியும் நீங்கள் ஆடியோ வாங்கப் போவதில்லை எதற்கு சி.டி எல்லாம் போட்டு, வீண் செலவு?” என்று வருத்தத்துடன் கேட்டார்.

இசைவெளியீடு செய்தாயிற்று என ஊடகங்களிலும் சுவரொட்டி மூலமும் விளம்பரம் செய்ய ஆகும் செலவு உட்பட இன்று ஐந்து லட்சம் ரூபாய் இல்லாமல் ஒரு படத்தின் இசை வெளியீடு சாத்தியமில்லை. மீறித் தயாரிப்பாளர்கள் ராயல்டி கேட்டால் அந்தப் பாடல்கள் ஒலிபரப்பப்படுவதேயில்லை. இப்படி சினிமாவை சார்ந்து இருக்கும் தொழில்நுட்பங்கள் இலவசத்திலிருந்து வருமானம் ஈட்டும் நிலைக்கு மாறியிருக்க, இவற்றுக்குக் கச்சாப்பொருளான இசையைத் தரும் சினிமா இலவசமாகிக்கொண்டிருக்கிறது.

மினி ரிவ்யூ- வடக்கன் செல்ஃபி
மலையாள சினிமாவின் இளமை பட்டாளம், நிவின் - வினித் சீனிவாசன் கூட்டணி. முதல் பாதி முழுவதும் படிப்பே வராமல் சினிமாவில் சேர்ந்தால் பெரிதாகச் சம்பாதிக்கலாம் என்று கிளம்புகிறார்கள். தமிழ் சினிமாவில் கெளதம் வாசுதேவ் மேனனிடம் சேர்ந்தால் அஜித் பழக்கமாகி, அஜித்தை வைத்துப் படமெடுக்கலாம் என்ற கனவில் தான்தோன்றியாய் திரிகிறார் நிவின். ஒரு கட்டத்தில் அப்பா கடையில் உட்காரச் சொல்ல, சினிமாவில் சேரும் கனவோடு, சென்னைக்கு ரயிலேறி விடுகிறார். ரயிலில் பக்கத்துவீட்டுப் பெண்ணும் வர, திருட்டுத்தனமாய் அவளுடன் ஒரு செல்ஃபி எடுத்து பேஸ்புக்கில் போடுகிறார்.

சென்னைக்கு வந்த நாலு நாளில் சினிமா நமக்கு ஒத்துவராது என்று பேக் டூ பெவிலியன் வந்தால் பிரச்சினை தலைமேல் உட்கார்ந்திருக்கிறது பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் அவர் ஓடிப் போனதாய். இல்லை என்றால் நம்ப ஆளில்லை. அதனால் ஆமாம் என்று தலையாட்டிவிட்டு அவளை கூட்டி வருவதாய் சென்னை செல்கிறார். அவள் எங்கேயிருக்கிறாள் என்று தெரியாமல் தேட ஆரம்பிக்க, பின்பு நடக்கும் சுவையான விஷயங்கள்தான் படம். வழக்கமான மலையாளப் படங்கள் போல முதல் பாதி சுரத்தில்லாமல் இருக்கிறது. இரண்டாம் பாதி கிரிப். பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களால் இன்றைய காலங்களில் நடக்கும் விஷயங்களை வைத்துத் திரைக்கதை அமைத்திருக்கிறார் வினித் சீனிவாசன். ஒரேயொரு காட்சியில் பாபி சிம்ஹா வருகிறார். ஒருமுறை பார்க்க ஓகே.

8 comments:

  1. Dear Mr Shankar
    I wrote to you once on this, writing again.
    I think with such a huge NRI base for Tamil film industry, and most of us watching the movies online for free, remember there is no alternative for us, much like what you wrote here, I think it would be prudent to create a portal, where we allow the NRIs to contribute money towards any movie of their liking, and distribute it to the producers of the movie.
    I have talked to many of my friends here in US, most of them agrees.
    Creating a portal is easy to accept money, but logistics of maintaining the cash flow, proper distribution etc is what needs to be worked out.
    This thought strengthened among ourselves after watching the recent Cheran movie.
    Hope someone takes some action and I am ready to help in anyways possible.
    thx.

    ReplyDelete
  2. @itsdifferent. thank for ur comment.. pl do mail me or do contact me regarding setting up the portal. sankara4@gmail.com
    9840332666

    ReplyDelete
  3. tentkotta.com is doing a similar service , legally.

    ReplyDelete
  4. fyi.. we subscribe to legal / paid site.. tentkotta.com

    ReplyDelete
  5. I agree with @Its different. I'm an NRI too and I'm interested in this idea. Something like Netflix which streams Indian movies would be great market.

    ReplyDelete
  6. Hi, I agree with @itsdifferent. I'm an NRI too and like this idea. Something like Netflix where we can stream or download desi movie will be a great option.

    Good luck Cable Sankar, great work I'm a regular reader of your blog.

    -Bala

    ReplyDelete
  7. கேபிளன்னே..
    மேலே சொன்னவரு சரியாத்தான் சொல்லியிருக்காரு.. இருந்தாலும் என்னுடைய கருத்து என்னான்னா..
    தமிழ் சினிமாவுல இணைய தொழில்நுட்பம் தெரிஞ்சவங்க ரொம்பவே கம்மி.. திருட்டு விசிடில படம் பார்க்க எங்களுக்கும் மனசு கஷ்டமாதான் இருக்கு.. (வெளிநாட்டுல இருக்குறதனால / தியேட்டர்கள் இல்லாததனால / பாஸ்போர்ட் விசா போக்குவரத்து செலவு பிரச்சினை / ஊருக்கு வரும்போது எங்கு சென்று குறிப்பிட்ட படம் பார்ப்பது என்பது தெரியாததனால இப்படி பல சங்கடங்கள்) இவ்வளவு ஏன் திகில் படமாகிய ஓர் இரவு (பலமுறை தங்களிடம் கேட்டிருக்கிறேன்) கிளைமாக்ஸ் என்னன்னு இதுவரை தேடிகொண்டிருக்கிறேன்.

    பணத்தை கொடு டவுன்லோட் இடு அல்லது படத்தை பாரு என்று தமிழ் வெப்சைட்டுகள் ஒன்று கூட இல்லை (ஆனா போர்ன் சைட்டுகள் தான் அதிகம் - அவர்களுக்கு மட்டும் எப்படி சாத்தியம் ? இதில் கேட்காமல் ரினிவல் பண்ற பிரச்சினைக்கு பயந்து டவுன்லோட் இலவசமா போடுரவங்களும் உண்டு) படம் ரிலீஸ் ஆன அன்னைக்கே திருட்டு விசிடியில் வருகிறது.. இங்கே திருட்டு விசிடி என்று குறிப்பிடுவது விசிடி தகட்டை அல்ல.. இணைய தளத்தை - ஒரு வாரத்தில் வெளிநாட்டு தமிழர்கள் சீரியல் பார்க்க உபயோகிக்க்ம் தளங்கல்களில் இலவசமாக கிடைக்கிறது.. (ஐ ரிலீஸ் ஆனபோது அன்னைக்கு காலையில் டவுன்லோட் போட்டு சாயங்காலம் பிளைட் பிடித்து விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தேன் - இருந்தாலும் பத்து நாள் கழித்து திருவாரூர் சென்று தியேட்டரில் - 15 பேர்தான் - தான் படம் பார்த்தேன் 100 ரூபாய் டிக்கட் - but 20 RS printed ticket)

    ஏன் சேரன் அல்லது உங்களை போன்ற கருத்துடையவர்கள் ஒன்று சேர்ந்து இணையதளங்களை கவனித்து அல்லது அவர்களுடன் ஒப்பந்தம் போட்டு கொண்டு படங்களை விற்க கூடாது.. 1 டாலர் என்பது எங்களுக்கு சிறிதாக தெரிந்தாலும் இந்தியாவில் அது அறுபது ரூபாய்.

    பணம் கொடுத்து பார்க்க NRI கள் தயாராய் தான் இருக்கிறோம்.. பணம் அனுப்ப எங்களுக்கு தயாரிப்பாளரின் பேங் விவரங்கள் தெரியாது.. சந்தர்ப்பங்களை அவர்கள் தான் அமைக்கவேண்டும்.

    பெறுகின்ற டொனேஷனைவிட விற்பனை என்ற பெயரில் கிடைக்கும் தொகை தயாரிப்பாளருக்கு அதிகமாகவே இருக்கும்..

    ReplyDelete
  8. டிவி, fm ஆகியவற்றில் ஒளிபரப்பப்படும் பாடல்கள், நகைச்சுவை காட்சிகள் உரிமை வாங்கி ஒளிபரப்பபடுகிறதா அல்லது காந்தி கணக்கா? அவ்வாறு உரிமை வாங்கும் பட்சத்தில் பணம் தயாரிப்பளர்களுக்கு செல்கிறதா?

    அப்படி இல்லாத பட்சத்தில் தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து ஒரு அமைப்பை உருவாக்கி உரிமம் இல்லாமல் ஒளிபரப்படும் பாடல்களுக்கு அந்த சேனல்கள் இடம் இருந்து பணம் வாங்குவது அல்லது சேனல் மீது வழக்கு பதிவு செய்வது போன்ற விஷயங்களை செய்து முறைபடுதலாமே.. அதிகாரவர்க்க தலையீடு, தயாரிப்பாளர்கள் ஒருங்கிணைத்தல், வழக்கு நடத்துதல் போன்ற சிரமங்கள் இருக்கும்தான். ஆனாலும் கண்டிப்பாக கொஞ்சமாவது பலன் இருக்கும் என்று எண்ணுகிறேன்.

    ReplyDelete