Pages

Jul 19, 2023

சாப்பாட்டுக்கடை - ரமேஸ்வரம் கஃபே - பெங்களூரு

 சமீபகாலமாய் எந்த ரீல்ஸ், ஷார்ட்சை திறந்தாலும் இந்த ராமேஸ்வரம் கஃபேயை பற்றிய வீடியோ தவறாமல் இருக்கும். அதுவும் ஒரு நாளைக்கு 5 லட்சம் பில் போடும் கடை. பெரிய க்யூ நிற்கும் கடை என்றெல்லாம் வீடியோ அவர்கள் வீடியோவில் காட்டும் செந்நிற தோசை. மசாலா, இட்லி சாம்பார் எல்லாவற்றையும் பார்க்கும் போது வழக்கமான வேற லெவல் ஓட்டலை ஏத்திவிட்டு பிஸியாக்கிட்டாங்களோ என்கிற சந்தேகம் எனக்கு வராமல் இல்லை.  இவ்வளவு தூரம் வந்துவிட்டோம் போய் தான் பார்த்துவிடுவோமே என்று தேடிய போது பெங்களூருவில் மூன்று இடங்களில் இருந்தது. நாங்கள் ஜே.பி.நகர் பிராஞ்சுக்கு ஆட்டோ பண்ணிட்டு போனோம். ஆட்டோவெல்லாம் வச்சி சாப்பிடணுமா ஜி என்று உடன் வந்த நண்பர் ராமசந்திரன் கேட்டுக் கொண்டே வந்தார். எடுத்த குறிக்கோளில் கொஞ்சமும் வழுவாமல் போய் சேர்ந்த போது அத்தனை க்யூவெல்லாம் இல்லை. ஆனால் செம்ம கூட்டம். ஆனால் அது அங்கே தெரியாத வண்ணம் இடத்தை செட் செய்திருந்தார்கள். 

இத்தனைக்கும் மக்கள் நடமாட்டம் இருக்கும் இடம் தான். தனியாய் வேலட் பார்க்கிங். ஓப்பன் கிச்சன். ஆங்காங்கே சாப்பிட வைக்கப்பட்டிருந்த டேபிள்கள். கோயில் தாழ்வாரம் போல உட்கார்ந்து கொள்ளக்கூடிய அளவில் சில இடங்களில் கல்லில் அமைத்திருந்தார்கள். நாங்கள் என்ன சாப்பிடுவது என்று மெனுவை பார்த்துக் கொண்டிருக்கும் போதே மூன்று பேர் பில் போட்டுவிட, நான் வடை ஒரு ப்ளேட். இரண்டு ஓப்பன் வெண்ணெய் மசாலா தோசை, இரண்டு காப்பி ஆர்டர் செய்தேன். 

தோசைக்கு தனி பில். கூடவே ஒரு வைப்பரேட்டர் சாதனம் ஒன்றை கொடுத்து தோசை ரெடி ஆனதும் அது பச்சை ஒளிர்ந்தபடி வைப்பரேட் ஆகும் என்றார்கள். அடுத்த கவுண்டரில் இட்லியும் வடையும் சொல்லிவிட்டு, அடுத்த சில நொடிகளில் சூடான வடையும், இரண்டு வகை கெட்டி சட்னி, டிபிக்கல் உடுப்பி சாம்பாரோடு கொடுத்தார்கள். வடை மினியேச்சர் சைசில் இருந்தாலும் நல்ல கிரிஸ்பியாய் வாயில் போட்டால் கரையும் அளவுக்கு இருந்தது. கூடவே கார சட்னி, மற்றும் தேங்காய் சட்னி வேறு. தேங்காய் சட்னியோடு சாம்பாரையும் தொட்டு ஒரு சிறு துண்டை சாப்பிட்டால் வாவ் அவ்வளவு நன்றாக இருந்தது. என்ன ஆளுக்கு ஒரு வடை என்று சாப்பிட நினைத்து ஒரு செட் ஆர்டர் செய்தது நொடிகளில் காலியாகும் என்று நினைக்கவேயில்லை. இன்னொரு ப்ளேட் ஆர்டர் பண்ணிரலாமா ஜி? என்று ராமசந்திரனிடம் கேட்டேன். இருங்க தோசை எப்படி இருக்குனு பார்த்துட்டு ஆரடர் செய்வோம் என்ற போதே அவர் கையில் இருந்த டோக்கன் வைப்ரேட் ஆக ஆரம்பிக்க. ஓப்பன் மசாலா வெண்ணெய் தோசையை எடுத்து வைத்தார்கள். 

அட அட அட. ஊத்தப்பம் சைஸ் தோசை. அதன் மேல் நம்மூரில் போடுவது போல நைஸாய் அரைத்த பொடியாய் இல்லாமல் கொஞ்சம் நரநரவென பருப்பு தட்டுப்படும் அளவி/ர்கான பொடி. அதிக காரமில்லை. அதன் மேல் உருளைக்கிழங்கு மசாலா. அதை சுற்றி லேசான மல்லி கார்னிஷிங். அதன் மேல் ஒரு தேக்கரண்டு வெண்ணெய். தோசை வேறு ஆவி பறக்க இருப்பதால் அதன் சூட்டில் மேலே உள்ளே வெண்ணைய் அப்படியே மசாலாவோடு தோசையில் உறிஞ்சப்பட்டு, மெல்ல வெண்ணெயின் பளபளப்பு தோசையை ஒரு விள்ளல் பிட்டவுடன் கையில் ஒட்டிக் கொண்ட வெண்ணெயே சாட்சி. கூடவே தக்காளி குருமா வேறு கொடுத்திருந்தார்கள். ஒரு விள்ளல் கார சட்னியோடு, இனனொரு விள்ளல் சாம்பார் சட்னியோடு, அடுத்தது குருமாவோடு, அடுத்தது மசாலாவோடு என சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அட்டகாசமான சுவை. குறிப்பாய் மேலே போடப்பட்டிருந்த பொடியோடு சாப்பிடும் போது அதில் ஏற்கனவே சொன்னது போல நரநரத்த பொடி மேலும் சுவையைக் கூட்டியது. ஆனால் இதை சாப்பிட்டு முடித்த போது வயிறு போதும் என்று சொல்லிவிட்டது. நல்ல வேளை வேறு எதுவும் ஆர்டர் செய்யவில்லை. முழு தோசையை வெண்ணெய் உருக பார்த்த போது ஒரு செக்சியான பெண்ணைப் பார்த்தது போல இருந்தது.

காபி கவுண்டர் தனி. நாட்டுசக்கரை, சக்கரை போட்டு தருகிறார்கள். சக்கரையில்லா காப்பி கேட்டாலும் தருகிறார்கள். ஹைதை போல எல்லாவற்றிலும் ஏற்கனவே சர்க்கரை போட்டு எல்லாம் தருவதில்லை. ராமேச்வரம் கஃபேயின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் நான் கருதுவது. முதலில் சுவை. சாப்பிட்ட பின் வயிற்றுக்கு எந்த உபாதையும் செய்யவில்லை. இரண்டாவது ப்ராம்ப்ட் சர்வீஸ். என்ன தான் செல்ஃப் சர்வீஸ் என்று வைத்துவிட்டாலும் உணவு வகைகளை தயாரித்து கொடுப்பதாகட்டும் இடத்தை உடனடியாய் க்ளீன் செய்வ்வதாகட்டும் எனக்கு நம்மூர் சரவணபவனை தான் நியாபகப்படுத்தியது. எப்படி இருந்த சரவணபவன். ம்ஹும். இவர்கள் இன்றைய தேதிக்கு 5 லட்சம் ஒரு ப்ராஞ்சு செய்வது எல்லாம் ஆச்சர்யமே இல்லை. விலையும் அத்தனை அதிகம் இல்லை என்றே சொல்வேன். இரண்டு ஓப்பன் தோசை, வடை ஒரு ப்ளேட், மூன்று கப் சாம்பார், இரண்டு காப்பிக்கு மூன்னூற்று சொச்சம் தான் பில்.  நல்ல தரமான வெஜ் டிபன் வகையாராக்களை பெங்களூருவில் சாப்பிட விரும்பினால் ஐ ரெகமெண்ட் ராமேஸ்வரம் கஃபே.


No comments:

Post a Comment