Thottal Thodarum

Sep 13, 2022

சாப்பட்டுக்கடை - மன்னா மெஸ்

சாப்பாட்டுக்கடை - மன்னா மெஸ்


இந்தக்கடையைப் பற்றி பல பேர் சொல்லியிருக்கிறார்கள். இக்கடையின் ஓனர் ஜெயராஜ் அவ்வப் போது பேஸ்புக்கில் விருந்தினர்களுடன் படமெடுத்து போட்டிருப்பார். பெரும்பாலும் பயணங்களில் அசைவத்தை பலரும் தவிர்க்கவே நினைப்பார்கள். முக்கியமாய் காரம், மசாலா காரணங்களால் வயிறு பிரச்சனை கொடுக்க வாய்ப்புண்டு என்பதாலேயே தவிர்த்து விடுவார்கள். சென்னையிலிருந்து 99 கிலோமீட்டரில் 99கிலோ மீட்டர் எனும் உணவகத்தை நடத்து மனோவின் உணவகம் ஆரம்பித்ததிலிருந்து வெளியூர் போகும் போதெல்லாம் சாப்பிட்டிருக்கிறேன். அற்புதமான, தரமான சைவ உணவு வேண்டுமென்றால் நிச்சயம் இவர்களைத்தான் ரெகமெண்ட் செய்வேன். இந்த மன்னா மெஸ் மட்டும் நம் லிஸ்டில் எஸ்கேப் ஆகிக் கொண்டேயிருந்தது. காரணம் பெரும்பாலும் காலை உணவு நேரத்திலேயே அந்த ஏரியாவை க்ராஸ் செய்வதாலும், அத்தனைக் காலையில் அசைவம் சாப்பிட வேண்டாமே என்கிற யோசனையாலும் தவிர்த்துக் கொண்டிருந்தேன்


இம்முறை சரியாய் மதியம் தான் பாண்டிச்சேரிக்கு கிளம்பினோம். கிளம்பும் போதே .சி.ஆர் போகாமல் திருச்சி ரூட். மதிய சாப்பாடு மன்னாவில் என்று சொல்லித்தான் கிளம்பினேன். சரியாய் மதியம் ஒன்னரை மணிக்கு மன்னாவை அடைந்தோம். கல்யாண வீடு போல நூற்றுக்கணக்கான பேர் உணவருந்திக் கொண்டிருந்தார்கள். என்னடா இது இத்தனைக் கூட்டமா? என்று யோசித்தபடி, உள்ளே செல்ல, ஆட்கள் எழ, எழ, ஆட்கள் உட்கார்ந்து கொண்டேயிருந்தார்கள். இத்தனை பேருக்கும் சளைக்காமல் எப்படி சர்வ் செய்யப் போகிறார்கள் என்கிற யோசனையோடு, சீட் பிடித்து அமர்ந்தோம்.


உட்கார்ந்த மாத்திரத்தில் ஆர்டர் எடுக்க ஆள் வந்தார்கள். நான்கு நான் வெஜ் சாப்பாடு, ஒரு மட்டன் சுக்கா, பிச்சிப் போட்ட சிக்கன் என ஆர்டர் கொடுத்த அடுத்த சில நிமிடங்களில் இலை வைக்கப்பட்டு, இலையில் சுரைக்காய் கூட்டும், பீட் ரூட் பொரியலும் வைத்தார்கள். “இந்த நான்வெஜ் ஓட்டல்ல இதை விட்டா காயே கிடைக்காது போல. எங்க போ இந்த பீட் ரூட், இல்லை கோசுஎன்றேன்


இல்ல சார்ஒவ்வொரு நாளைக்கு ஒரு பொரியல். நேத்து வாழக்கா..” என்றபடி பரிமாறினார் ஒரு பெண்


சலித்தபடியே பீட் ரூட் பிடிக்காத நான் ஒரு பிடி எடுத்து வாயில் வைத்தேன். அட, அட அட, அட்டகாசமான பீட் ரூட் பொரியலை இன்றைக்குத்தான் ஹோட்டல்களில் சாப்பிட்டிருக்கிறேன். பெரும்பாலான ஓட்டல்களில் கறுக் முறுக்கெனவே இருக்கும் பீட் ரூட். இங்கே நன்கு வெந்த சிறு சிறு துண்டுகளை, தேங்காய் போட்டு தந்திருக்க, சுரைக்காய் கூட்டையும், பொரியலையும் சாப்பாடு வருவதற்குள் இரண்டு முறை வாங்கி சாப்பிட்டு விட்டேன்


சாப்பாடு போடப்பட்டவுடன் கருவாட்டுத் தொக்கு நல்ல கிரேவியாய், கூடவே நான்கு சின்ன வெங்காயம் தொடுகறியாய் வைக்கப்பட, வாடை இல்லாத தொக்கு சிறப்பாய் இருக்க, அடுத்தது சிக்கன் குழம்பு, வைத்தார்கள். வெந்நீர் தண்ணீர் போல இல்லாமல், நல்ல கெட்டியாய், காரம் அதிகமில்லாமல் நாட்டுக் கோழி குழம்பு பரிமாறப்பட, அடுத்ததாய் மட்டன் குழம்பு, இதுவும் திக்காய் பெப்பர் அதிகமாய் இருந்தாலும் செம்ம சுவை. காடை கிரேவி இருக்கு, மீன் குழம்பு இருக்கு என்று அடுத்த லிஸ்ட் போட, காடை கிரேவியும் பெப்பரை அடிப்படையாய் வைத்து வைக்கப்பட்டிருக்க, செம்ம சுவை. எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டது மீன் குழம்பு. ஒன்றுக்கு இரண்டு முறை எல்லோரும் கேட்டு வாங்கிச் சாப்பிட்டார்கள். எதுக்கும் இவர்களின் சைவ அயிட்டங்களில் காரக் குழம்பு எப்படி இருக்கிறது என்று சாப்பிட்டுப் பார்த்துவிடலாம் என்று முடிவு செய்து எடுத்து வரச் சொன்னேன். காரணம் பெரும்பாலான அசைவ ஓட்டல்களில் தரும் காரக்குழம்பு கிட்டத்தட்ட மீன் குழம்பு டேஸ்டிலேயே இருக்கும். இவர்களின் சுவை செம்ம. காரக்குழம்பில் உள்ள புளியின் சுவை, மீன் குழம்பை விட சற்றே குறைவாகவும், அதே நேரத்தில் தாளித்த எண்ணெய் வாசனையோடு இருந்தது


சைட் டிஸ்களில் பிச்சிப் போட்ட கோழியின் சுவைக்கு ஏதும் குறைவில்லை. ஆனால் நான் எதிர்பார்த்த பிச்சிப் போட்ட கோழியில்லை. கொங்கு ஸ்டைலில் எதிர்பார்த்த கோழி. சாதாரண கோழி பிரட்டல் போல இருந்தது. சுவையில் ஏதும் குறையில்லை. ஆனால் அதே நேரத்தில் மட்டன் சுக்கா செம்ம. நன்கு வெந்த துண்டுகள், பெப்பர்  மற்றும் மசாலா காரம் அதிகமில்லாமல் நல்ல சுவையுடன் இருந்தது. ரசமும் தரம்.


சாப்பிட்டு முடித்துவிட்டு பில்லைப் பார்த்த போது நான்கு பேருக்கு 1200 சில்லரை தான் வந்திருந்தது. 180 ரூபாய்க்கு இத்தனை க்ரேவியுடன் தரமான, எதுக்கலிக்காத, நெஞ்செரிச்சல் இல்லாத, வயிற்றையும் பர்சையும் பதம் பார்க்காத இந்த மன்னா மெஸ் சிறப்பு. நிச்சயம் மதிய சாப்பாட்டுக்கு ஹைவேயில் அசைவம் சாப்பிட விரும்பிகிறவர்களுக்கு டிவைனான சாப்பாடு தான்


அடுத்த நாள் மதியம் மறந்து போய் ஈஸிஆரில் வந்து மன்னா மெஸ்ஸை நினைத்துக் கொண்டே ஓட்டல்களைத் தேடி நான்கு மணிக்கு அடையார் ஆனந்த பவனின் பரோட்டா சாப்பிட்டோம். மன்னா மெஸ்ஸை மிஸ் செய்தபடியே


கேபிள் சங்கர்