Thottal Thodarum

Apr 18, 2021

ப்ரம்மா -27

 


27

ரவுடியிசமும் சாதாரண வேலையில்லை. அதற்கும் ஆள் பலம், அதிகார பலம், என பல பலங்கள் வேண்டித்தான் இருக்கிறது. குமாரின் ஆட்களை நினைத்து பரிதாபப்பட்டேன். அதன் பின் என்னையே கடிந்து கொண்டேன். “சார் லைன் கனெக்ட் ஆயிருச்சு” என்று ரிஷப்ஷனிஸ்ட் அழைக்க, ரீசீவரை எடுத்து “பரந்தாமன். 1.75க்கு ஓக்கே சொல்லிட்டாங்க. அப்புறம். நாம தான் அந்த ஏரியா ஆப்பரேட்டர்ஸ். இவங்க சிக்னல் மட்டும் கொடுப்பாங்க. நம்ம செட்டப் அதே போலத்தான் நடக்கும் நெட்வொர்க் இல்லாம” என்றேன்.

எதிர்முனையில் மகிழ்ச்சி. கிட்டத்தட்ட இன்வெஸ்ட் செய்த தொகையில் என்பது சதவிகிதம் லாபம் என்பது மட்டுமில்லாமல் தொழிலுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது என்கிற செய்தி அதிக சந்தோஷத்தை கொடுத்தது.

“ஓக்கேன்னா நான் ட்ராப்ட் ரெடி பண்ணிட்டு வந்திருவேன்” என்றேன்.

“ஓக்கேப்பா. நீதான் நெட்வொர்க் ஆரம்பிக்க ஐடியா கொடுத்த. இப்ப நீயே இருந்து லாபத்தோட முடிச்சும் கொடுக்குற இதை விட என்ன வேணும். ரைட் நீ வேலைப் பாரு. நான் நம்மாளுங்க கிட்ட சொல்லிடறேன்” என்ற் போனை வைத்தார். மீண்டும் கண்ணாடி வழியாய் பார்த்தேன். வால்கள் இன்னமும் வாசலையே பார்த்துக் கொண்டிருக்க, சிரித்தபடி மனுஷின் அறைக்குள் சென்று அவனைப் பார்த்து சிரித்தேன்.

“ஷியாம் நீ ட்ராப்ட் ரெடி செய்” என்று மனுஷ் உத்தரவிட்டான். ஷியாம் பரபரப்பாய் டெலிபோனை ஒத்தி, அடுத்தடுத்த உத்தரவு போட, சடுதியில் எல்லா காரியங்களும் நடக்க ஆரம்பித்தது. நான் அமைதியாய் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டேயிருந்தேன். மனுஷுக்கு என் அமைதி ஏதோ செய்தி சொன்னதாய் உணர்ந்து “வேறேதும் பேசணும்னு நினைக்கிறீங்களா சுந்தர்?” என்று கேட்டான்.

“ஆமாம்” என்பது போல் தலையசைத்து, தொண்டையை கனைத்தபடி குமாரின் பிரச்சனையை சொல்ல ஆரம்பித்தேன். மனுஷ் பொறுமையாய் எல்லாவற்றையும் கேட்டான். ஷியாமைப் பார்த்தான். ஷியாமுக்கு தினேஷ் அலுவலகத்திற்கு வந்தது நியாபகத்துக்கு வந்தது. “மனுஷ் இதையெல்லாம் நாம என்கரேஜ் பண்ணக்கூடாது. டிசி கந்தன் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிரு. அவரு பார்த்துப்பாரு” என்றான். ஷியாமின் குரலில் நீ இதில் இன்வால்வ் ஆகதே என்கிற செய்தி சொல்லும் தொனி தெரிந்தது. மனுஷ் என்ன சொல்கிறான் என்று அவன் முகத்தையே பார்த்தேன். மனுஷ் அவனை படிக்கிறேன் என்று புரிந்து கொண்டு முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் “நீங்க பார்க்காத ரவுடியிசமா சுந்தர். எனிவே ஆஸ் ஷியாம் செட் நான் டிசி கந்தன் கிட்ட பேசிடறேன். உங்களுக்கு அவரு உதவுவாரு” என்று சொல்லிவிட்டு, கொஞ்சம் வெளிய வெயிட் பண்ணுறீங்களா? நான் ட்ராப்ட் ரெடி பண்ணிட்டு கூப்பிடுறேன். ஐ ஹேவ் டு ஸ்டார்ட் மை ஒர்க்” என்று பர்மிஷன் கேட்கும் தொனியில் கேட்க, ஓகே என் வேலையும் உன் வேலையும் முடிந்துவிட்டது நீ கிளம்பு என்று சொல்லாமல் சொல்கிறான். என்று புரிந்து, “சரி சார் வெயிட் பண்ணுறேன்” என்று சொல்லி ரிஷப்ஷனுக்கு வந்தேன்.

மீண்டும் கண்ணாடி வழியாய் வெளியே பார்த்தேன். அவர்கள் இன்னமும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் பார்ப்பதை சிவாவும்  அவர்களைப் பார்த்தான். ஏதும் பேசாமல் அமைதியாய் ரிஷப்ஷனில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்தேன்.

“என்ன ஐடியால இருக்க சுந்தரு?” என்று தாங்காமல் கேட்டே விட்டான் சிவா.

“என்ன கேக்குறே?”

“இல்லை குமாருக்கு பணம் தரதா சொன்னே. இப்ப என்னடான்னா இவனுங்க ஆபீஸுல உக்காந்திருக்க, அவனுங்க என்னடான்னா இங்கிலிஷ் படத்துல பாலோ பண்ணுறா மாதிரி துரத்திட்டேயிருக்கானுங்க. உன் ஐடியாத்தான் என்ன?”

“வெயிட் பண்ணு சொல்லுறேன். பணம் ரெடியாயிரும். இன்னைக்கு கொடுத்திரலாம்” என்றேன். சிவா நம்பாமல் தலையாட்டியபடி மேலே ஏதும் கேட்காமல் க்ளோடிவி லோகோவை ஒளிபரப்பும் டிவியை பார்க்க ஆரமபித்தான். அடுத்த ஒரு மணி நேரம் நாங்கள் இருவரும் ஏதும் பேசவில்லை. ஷியாம் அவனது அறைக்கு அழைத்தான் .டாக்குமெண்ட் ட்ராப்டை கொடுத்துவிட்டு. “ஒரு வாட்டி சரி பார்த்துக்கங்க. ஓக்கேன்னா யார் யார் எல்லாம் சைனிங் அத்தாரிட்டியோ அவங்களை கூட்டிட்டு வந்திருங்க. லேட் பண்ணாதீங்க. நாளைன்னைகு அமாவாசை. நல்ல நாள்ங்கிறாரு மனுஷ்”.

நாத்திகம் பேசும் திராவிட பரம்பரை. நல்ல நாள் பார்க்கிறார்கள். நான் ட்ராப்டை வாங்கிக் கொண்டு வெளியே வரும் போது மனுஷும் கிளம்பி வெளியே வந்தான். என்னுடனேயே லிப்டில் ஏறி “த்ரோவா செக் பண்ணிக்கங்க. டேட் ஷியாம் சொல்லியிருப்பான் இல்லை. அதுக்குள்ள் முடிஞ்சிருச்சுன்னா எவ்ரிதிங் வில் பி பைன்” என்று வாசலில் நின்று என்னிடம் பேசிவிட்டு தன் பி.எம்.டபிள்யூவில் கிளம்பினான். நான் பைக்கை எடுத்துக் கொண்டு வேகமாய் வெளியே வர, என் வால்கள் என்னை மீண்டும் தொடர் ஆரம்பித்தார்கள். ஏரியா பக்கம் தான் போகிறேன் என்று நினைத்தவர்கள் அப்படியே வண்டியை நிறுத்தாமல் கிண்டி டிசி ஆபீஸுக்கு வண்டியை விட்டேன்.  பின் தொடர்ந்தவர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. தயக்கத்துடன் ஸ்டேஷனுக்கு எதிரே உள்ள பரோட்டாக்கடையில் தஞ்சம் அடைந்தார்கள். தங்களை மறைத்துக் கொண்டார்கள். நான் அவர்களை பார்த்தபடி டிசி கந்தன் அலுவகத்தினுள் நுழைந்தேன்.

வாசலில் இருந்த பிசியிடம் மனுஷின் பெயரைச் சொல்லி டிசி கந்தனைப் பார்க்க அனுமதி கேட்டேன்.. உள்ளே அழைக்கப்பட்டேன். சிவாவை வாசலிலேயே இருக்கச் சொல்லிவிட்டு உள்ளே சென்றேன்.

“வணக்கம் சார். என் பெயர் சுந்தர். கேபிள் ஆப்பரேட்டர். க்ளோடிவி மனுஷ் சார் சொல்லி அனுப்பினாரு” என்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

“யெஸ். யெஸ் ஷியாம் போன் பண்ணாரு. சொல்லுங்க. குமாரா பிரச்ச்னை பண்ணுறான். அவன் தான் குண்டாஸுல இருக்கானே?”

நான் குமார் பிரச்சனையை விவரித்து சொன்னேன். பொறுமையாய் கேட்டார். ஷியாமிடமிருந்து போன் வரவில்லையென்றால் இத்தனை பொறுமையாய் கேட்பார்களா? என்று சந்தேகம் தான் .கிடைத்த வாய்ப்பை தவறவிடக்கூடாது என்று விவரமாய் சொன்னேன்.

“நீங்க ஏதாச்சும் கம்ப்ளெயிண்ட் கொடுக்குறீங்களா?” என்று கேட்டார்.

“இல்லை சார். இன்னைக்கு வேண்டாம். எப்படியும் நான் பணம் கொடுக்கப் போறதில்லை. அதுக்கு அவங்க ஏதாச்சும் ரியாக்ட் பண்ணான்னா உங்க ஹெல்ப் தேவைப்படும். அப்ப உதவினா போதும். எப்படி இருந்தாலும் லோக்கல் ஆளு பகைச்சிட்டு பிரயோஜனமில்லை” என்றேன் தயக்கமாய்.

“அப்படியெல்லாம் டைம் கொடுக்க வேண்டியதில்லை சுந்தர். பட். கம்ப்ளெயிண்ட் இல்லாம எல்லா நாளும் போலீஸ் உங்களை பாதுக்காக்கும்னு உறுதியா சொல்ல முடியாது. ஐவில் ஹெல்ப் யூ எனி டைம். என் பர்சனல் நம்பர் எடுத்துக்கங்க. கால் மீ” என்று தன் கார்டை கொடுத்தார்.

நான் நன்றி சொல்லிவிட்டு, வெளியே வந்த போது டி.சியும் வெளியே வந்தார். என்னை வழியனுப்ப வந்தாரா இல்லை அவர் வேலையாய் வெளியே வந்தாரா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அவருடன் வெளியே வருவதைப் பார்த்த வால்கள், மீண்டும் பரோட்டா கடைக்குள் மறைவதை பார்த்தேன். உடன் வந்த சிவாவிடம் வண்டியை பரோட்டாகடைக்கு அப்பால் கொண்டு போய் நில்லு என்று சொல்லி, அவனை கிளப்பிவிட்டுவிட்டு, டிசியிடன் நின்று மீண்டும் நன்றி சொல்லி கிளம்பினேன்.  தேவையில்லாம்ல பரோட்டாக்கடையை நோக்கி கை காட்டியபடி நன்றி சொன்னேன். அவர்கள் இன்னமும் தங்களை மறைத்துக் கொண்டார்கள். சிவா அதற்குள் பரோட்டாக்கடையை தாண்டி வண்டிய எடுத்து ஸ்டார்ட் செய்து இருக்க, சட்டென அவன் பின்னால் ஏறி “மச்சி வண்டிய விடு. வண்டிய விடு”என்று அவன் தோள் பற்றி அவசரப்படுத்தினேன். சிவா பதட்டத்துடன் சடாலென கியர் விடுத்துகிட்டத்தட்ட வீலிங் செய்து கிளம்பினான்.

கிண்டி எஸ்டேட் வழியாய் ஈக்காட்டுத்தாங்கல் மெயின் ரோட்டுக்கு வந்த போது “எங்க போகணும்?” என்று கேட்டான் சிவா.

“எங்கயாச்சும் போ. அண்ணாநகர் அமைஞ்சிகரைனு:” என்றேன்.

ஏதோ ஒரு முடிவில் இருக்கிறேன் என்று புரிந்து அமைதியாய் வண்டியை ஓட்டிக் கொண்டு சென்றான் சிவா. அவ்வப்போது நான் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டு வந்தேன். வால்கள் இல்லை. அமைந்தக்கரை லஷ்மி தியேட்டர் அருகில் வந்த போது மணி கிட்டத்தட்ட மாலஆறு.  சிவாஜியின் லஷ்மி கல்யாணம் ஓடிக் கொண்டிருந்தது. மார்கெட் அருகே இருந்த ஒயின் ஷாப்பில் ஆளுக்கொரு பீரை வாங்கி குடித்துவிட்டு, லஷ்மி தியேட்டரில் டிக்கெட் வாங்கிக் கொண்டு  உள்ளே சென்றேன்.  படம் ஆரம்பித்த அடுத்த சில நிமிடங்களில் நான் என்னையறியாமல் தூங்கிப் போனேன். இடைவேளைக்குகூட எழுப்பவில்லை. சிவா.  படம் முடிந்து வெளியே வந்த மீண்டும் அதே பாருக்கு வந்து ஆளுக்கு ரெண்டு பீரைக் குடித்தோம். பசி வ்யிற்றைக் கிள்ளியது. எதிரே இருந்த ஆற்காடு மெஸ்ஸில்  இட்லியும் ப்ரான் தொக்கும், சாப்பிட்டோம். அடுத்தது என்ன என்பது போல சிவா என்னைப் பார்த்தான். வீட்டுக்கு போன் செய்தேன். வருவதற்கு லேட்டாகும் என்று தகவல் மட்டும் சொன்னேன். சிவாவும் அவன் வீட்டிற்கு போன் செய்தான்.

“தினேஷே நாலு வாட்டி வீட்டிக்கு வந்துட்டானாம்” என்ற சிவாவின் குரலில் கவலை இருந்தது.

“நான் பார்த்துக்குறேன் சிவா பயப்படாத” என்று அவனுக்கு தைரியம் சொல்லி, நேரே முரளிகிருஷ்ணா தியேட்டருக்குள் வண்டியை விட்டேன். சிவா புரியாமல் மீண்டும் என்னைப் பார்த்தான். இம்முறை ஏதோ கேட்க எத்தனித்து வாயைத் திறக்கும் முன் “வா படத்துக்கு போய்ட்டு வீட்டுக்கு போலாம்” என்று அடக்கினேன். எம்.ஜி.ஆர் படம் நினைத்ததை முடிப்பவன் போட்டிருந்தார்கள். மீண்டும் வழக்கம் போது அரை போதையில் சாப்பிட்ட தெம்போடு தூக்கம் போட்டேன். நடுவில் தூக்கம் கலைந்து பார்த்த போது எம்.ஜி.ஆர் சாக்சபோனை பீப்பி போல வாசித்துக் கொண்டிருந்தார். சிவா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். மணி பார்த்தேன். கிட்டத்தட்ட 11.30. சிவாவை எழுப்பி “வா போகலாம்” என்று வெளியே அழைத்து வந்தேன். எங்கள் ஏரியாவில் நுழையும் முன் அசோக்நகர் ரவுண்டாவின் அருகில் வண்டியை நிறுத்தினேன்.

“சிவா இப்ப நான் என்ன சொல்லுறேன்னோ அதை அப்படியே தினேஷ் வீட்டுக்கு போய் சொல்லுவியா?” என்று கேட்டேன். சிவாவின் முகத்தில் பயம் படர்ந்தது.

“பயப்படாத. இது நான் எடுக்குற ரிஸ்க் தான் ஒரு வேளை இது பெயிலியர் ஆச்சுன்னா நாம காசைக் கொடுத்துருவோம். உனக்கு ஒண்ணும் ஆகாது என்ன சொல்லுறியா?”

சிவா மையமாய் தலையாட்டினான்.

“நேரே தினேஷ் வீட்டுக்கு போ. இந்த மாதிர் காலையில பணம் எடுக்க பேங்குக்கு கிளம்புனோம். அப்ப, துணை முதல்வர் பையன் மனுஷ் கூப்டு அனுப்பினாரு. என்னான்னு பார்த்தா நம்ம ஏரியாவுல நீங்க பணம் கேக்குற விஷயம் தெரிஞ்சு யாரு யாரு கிட்ட எவ்வளவு பணம் கேட்டிருக்காங்கனு அவங்க ஒரு லிஸ்ட் வச்சிருக்காங்க. அதை காட்டி இவ்வளவு கேட்டாங்களானு கேட்டாரு. நாங்க ஏதும் சொல்லலை. பின்னாடி பதில் சொல்லாததுனால டிசி கந்தனை போய் பாக்க சொல்லிட்டாரு. அவரு எங்ககிட்ட ஏற்கனவே எழுதி வச்ச கம்ப்ளெயிண்ட் ஒண்ணுல கையெழுத்து போடச் சொல்லி மிரட்டுறாரு. அதுல குமாரு ஜெயில்லேர்ந்து எல்லாரையும் கொலை மிரட்டல் பண்ணுறதாவும், அவரை வெளிய விட்டா பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கு பெரும் அகும்னு சொல்லி குமார் அண்ணனோட குண்டாஸிலேர்ந்து வெளிய விட கூடாதுனு ப்ளான் பண்ணுறதாகவும், அப்படியே வெளிய வந்தா நிச்சயம் என்கவுண்டர் போட தயாரா இருக்குறதா ப்ளான் பண்ணுறாங்களாம். அதுனால் யார் யார் கிட்ட எவ்வளவு டிமாண்ட் பண்ணீங்கனு லிஸ்ட் போட்டு கம்ப்ளெயிண்ட் எழுதித்தர சொன்னாங்க. சுந்தர் இதோ வர்றேனு சொல்லி என்னை கிளம்பச் சொல்லிட்டு பின்னாடியே வந்து எஸ்ஸாயிட்டான். தயவு செஞ்சு எங்களை பாலோ பண்ணாத. போலீஸ் எங்களை பாலோ பண்ணூதுன்னு மட்டும் சொல்லிட்டு வா. அது போதும்’ என்றேன் மூச்சு விடாமல். சிவா என்னை ஆச்சர்யமாய் பார்த்தான்.

“என்னடா பாக்குறே? சரியா சொல்லிருவியா?”

“இப்படி சொன்னா என்ன நடக்குனு எதிர்பார்க்குறே?”

“உனக்கும் எனக்கும் இருக்குற பயம் நிச்சயம் அவனுக்கும் இருக்கும்னு நம்புறேன் சிவா” என்றேன்.

சிவா வண்டியில் ஏறிக் கொண்டான். “சரியா சொல்லிருவியா?” என்று மீண்டும் கேட்டேன். கடகடவென்று நான் என்ன சொன்னேனோ அதை வரிசை மாறாமல் ஒப்பித்தான். “சூப்பர்டா” என்று சொல்லி பாராட்டினேன்.

“நான் சொல்லிட்டு வந்ததும் பாராட்டு. இப்ப வண்டிய விடு’” என்றான். நான் வேகமாய் வண்டியை தினேஷின் வீட்டிற்கு ஓட்டினேன்.

தினேஷின் வீட்டு வாசலில் வண்டியை விட்டு விட்டு, நான் எதிர்புறம் உள்ள ரோட்டில் நின்று கொண்டேன். சிவா உள்ளே போனான். நான்கைந்து குடித்தனம் உள்ள வீடு அது. சிவா போன சில நிமிடங்களில் வெளி லைட் போடப்பட்டது இங்கிருந்து பார்க்க தெரிந்தது. சிறிது நேரம் கழித்து சிவா பரபரப்பாய் வெளியே வந்தான். பின்னாலேயே தினேஷும் வந்து சிவா வண்டியை கிளப்பும் வரை பார்த்திருந்துவிட்டு, உள்ளே போனான். நான் நின்றிருக்கும் இடம் அவனுக்கு தெரியுமாதலால். எதிர் ரோட்டினுள் வந்து என்னைப் பார்த்து வண்டியை ஆஃப் செய்து நின்றான். வேர்த்திருந்தான்.

“என்னடா சொல்லிட்டியா?”

“ம்ம்”

“என்ன சொன்னான்?”

”ஒண்ணும் சொல்லலை. சரி போன்னுட்டான்” என்றான்.

Apr 16, 2021

மீண்டும் ஒரு காதல் கதை - விமர்சனம் 1

 


வாசகப் பெருமக்களுக்கு வணக்கம்

🙏
மீண்டும் ஒரு காதல் கதை
பை
கேபிள் சங்கர்
என்னக் காரணம் என்று தெரியவில்லை. சங்கர் சார், ஒரே பெயரில் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார்.
முதல் புத்தகம்
ரொம்பவும் குட்டியான காதல் கதை. ஷ்ரத்தா, சங்கர், மீரா என மூன்றே கதாப் பாத்திரங்கள் தான். சங்கரும் மீராவும் நண்பர்கள். ஒரு வேலையாக மீராவை பார்க்க வரும் சங்கர் அங்கே ஷ்ரதாவை சந்திக்கிறார். வழக்கமான காதல் பார்முலா தான். கண்டதும் காதல், மோதல், பிரிவு எல்லாமே இருக்கு. ஆனால் காதலா கேரியரா என்று வரும் போது சங்கர் கேரியரை தேர்ந்தெடுப்பது சிறப்பு. நான்கு வருடம் கழித்து தன் காதலை தேடி திரும்பி வருகிறாள் ஷ்ரத்தா . இப்போது சங்கரின் நிலைப்பாடு என்ன என்பது தான் ட்விஸ்ட். சங்கர் சார் புத்தகம் என்று ஆர்வமாக படிக்க துவங்கிய எனக்கு இந்த கதை கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது என்பது தான் உண்மை.
இரண்டாவது கதை
இது 22 சிறுகதைகளின் தொகுப்பு. முதல் கதையில் ஏற்பட்ட ஏமாற்றத்தை சங்கர் சார் இதில் நிறைவு செய்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக அவருக்கும் அவர் தந்தைக்குமான பிணைப்பு. அருமை. தந்தையாக, தோழனாக நின்று வழிநடத்திய அவர், கண் முன்னே இறந்து கிடக்க "அப்பா அடுத்து என்ன செய்யட்டும் " என்று கேட்பது. பக்கத்து வீட்டுக் குழந்தை ரூபத்தில் தன் தந்தை வந்து சாப்பிடுவது போலவும், கடைசியாக அவர் உட்கார்ந்து உயிர் விட்ட சோபாவில் இருந்து அவரைப் பார்த்து சிரிப்பதும், அருகில் அழைத்து ஏதோ சொல்ல விழைவதும்.
கடைசியாக பதினோராம் நாள் காரியத்தன்று ஒத்தன் வந்து சாப்பிடுவது. தட் யாருய்யா அவன் எனக்கே பாக்கணும் போல இருக்கே மொமெண்ட். ( மன்னிச்சிடுங்க சங்கர் சார் சிரிச்சிட்டேன் )
பூணூல் கல்யாணத்தன்று மீசையை மழிக்க அழுவதும். 'எதுக்குடா அழகை. அப்பா செத்து மீசை எடுத்தா தான் அழணும். இதுக்கெல்லாம் ஆழப்படாது ' என்ற அதட்டலில் அடங்குவது
காதல், பழிவாங்கும் உணர்ச்சியெல்லாம் உங்களுக்கு மட்டும் தான் சொந்தமா. எங்களுக்கும் தான் என சொல்லும் நாயின் காதல்
மகனின் சுயநலம் தெரிந்தும் அவன் மேல் பாசத்தைப் பொழியும் குண்டம்மா பாட்டி. அவருக்கு சீரியஸ் என்ற தகவல் கேட்டு ஊருக்கு வரும் அவரது மகன், ஏதோ கோவத்தில் 'எதுக்கு இன்னும் இழுத்திட்டிருக்க' என கத்தவும் அதிர்ச்சி அடைந்து 'சுப்பாணி இப்படி சொல்லிட்டானே பிச்சப்பா ' என புலம்பியபடியே உயிர் விடுவது
ஆக்சிடென்ட் ஆகி கிடக்கும் ஒருவரை காப்பாற்ற முயலும் பைத்தியம். திருமணத்திற்கு பின் டீம் லீடருடன் வரும் காதலால் குழம்பி நிற்கும் பூஜா
எண்டார்ஸ்மெண்ட்க்காக அரசாங்க அலுவலகம் சென்று. லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்ற கொள்கைக்காக மேலும் கீழும் அலைவது
நம்பிக்கை கதையில் வரும் புரடக்ஷன் அசிஸ்டன்ட். அவ்வளவு குடிபோதையிலும் வண்டியை குடுக்க மாட்டேன் என சொல்வதும். Proof கேட்பதும் . சசிகுமார் சொல்வது போல் அவனோட நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சது.
பள்ளிக் காலத்தில் அபாரமாக விளையாடிய கிரிக்கெட். கிறிஸ்டின் நண்பருடன் திருவண்ணாமலை கிரிவலம் சென்று ஆக்சிடெண்டில் இருந்து தப்பிப்பது.
ஜாதிப் பிரச்சனையில் கைவிட்டுப் போன காதலி ஒரு வருடத்தில் விதவையாகிவிட , மீண்டும் போராடி அவரை மணந்து, தேவர் வீட்டு மாப்பிள்ளையாக வலம் வரும் அகிலன்
விட்டா நான் எல்லா கதையையும் சொல்லிடுவேன். அதனால இத்தோட நிறுத்திக்கிரேன். மத்த கதைகளை நீங்களே படிச்சுக்கோங்க மக்களே
@kavitha dinakaran

கிண்டிலில் வாங்க

Meendum Oru Kadhal Kathai Kindle Link: https://amzn.to/3qvRJW2

Apr 12, 2021

பெர்முடா - விமர்சனம்-4

 


Reviewed in India on 10 November 2019
Cable Shankar is a gripping writer with so much passion that reflects in his writing. A very easy language employed to make The readers experience the writing with more images of their own. He is a "go-to" and a very important writer of the present generation.

Bermuda  Kindle link https://amzn.to/3mQCgxA

Bermuda Book Link: https://amzn.to/3lRilx0


Apr 8, 2021

பெர்முடா - விமர்சனம்-3


 

பெர்முடா. விமர்சனம்#3

Cable Sankar: Finished reading of Bermuda.
லைட் ரீடிங் கொடுக்க முடியாத கதை.
ஒவ்வொரு சாப்டரும் வேறு வேறு விதமாக வடிக்கப் பட்டு இருக்கு.
புரியாதது... 3 கதைகள்.. நித்யா - சுரேஷ்வர், சாம்பசிவராவ்-தமயந்தி, ராமசுப்பு -திவ்யா... இந்த மூணு ஜோடிகள் எங்கயாவது ரிலேட் ஆகிறார்களா எனப் புரியவில்லை... எதற்காக 3 கதையை ஒரே கதையா கொடுக்க முயற்சி செஞ்சு இருக்கீங்க.
செக்ஸ் கொஞ்சம் குறைச்சு இருக்கலாம்... சில இடங்களில் காமக்கதைகள் படிக்கிற மாதிரி இருக்கு..:-))
நித்யா காரெக்டர் சொன்னவிதம் பிடித்திருந்தது. சில இடங்களில் சுரேஷ்வர் வாயால் சொல்ல வைத்தது அருமை.
முடிவில் முத்தாய்பாக தமயந்தி பயப்படுதாக சொல்லப்ப்டுவதும், தப்பு செஞ்சால் தண்டனை கிடைக்கும் என்று கூறவருவது போல் இருக்கு
விமலாதித்தன் என்பது மாமல்லன் என்று இருக்கணுமோ..
🤣🤣
நன்றி Raghavan Srinivasa

Apr 5, 2021

24 சலனங்களின் எண். விமர்சனம்-8


 சினிமா உலகின் பிண்ணனியில் நடக்கும் நாவல். சமகால சினிமாவைப் பற்றிய மிக முக்கியமான ஆவணம் என சொல்லலாம். சினிமா உலகில் இருக்கும் போட்டிகள், துரோகங்கள், வன்மம், வெற்றிக்காக படும் அவமானங்கள், இழப்புக்கள் எல்லாவற்றையும் ரத்தமும் சதையுமாக, ஆழமாக எழுதியிருக்கிறார் கேபிள் அண்ணன். அவருடைய பரந்த அனுபவமும் இதற்கு முக்கிய காரணம்.

அதே நேரம் - இவை அனைத்தையும் மீறி இங்கிருக்கும் நட்பு, உழைப்பு, நல்ல மனிதர்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார். சினிமாவில் புதிதாக நுழையும் உதவி இயக்குனர்கள், நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல். நிறைய புரிதல்களை கொடுக்கும்.
நன்றி இயக்குனர் ஸ்ரீகணேஷ்.

Apr 3, 2021

நான் ஷர்மி வைரம்-விமர்சனம் -4 நான் ஷர்மி வைரம். விமர்சனம் #4

எனது பார்வை
புதினம்: நான் ஷார்மி வைரம் (A)
எழுத்தாளர்: கேபிள் சங்கர் ( எ) Cable Sankar
விலை: ரூபாய். 200/-
Kindle:
டிஸ்கி:. எழுத்தாளரே கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு என்பதை உணர்த்த தலைப்பை விட பெரிய (A) சான்றிதழ் தந்துள்ளார். அதனால் கலாச்சார போராளிகள் வேறு இடம் பார்க்கவும்.
நண்பர் கேபிள் சங்கர் - வியாபாரம், எழுத்தாளர், விநியோகிஸ்தர், விமர்சகர், இயக்குனர் என்ற பன்முகம் உள்ளவர். வலைதளத்தின் (blog) தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமான நபர்.
இவரின் எழுத்துப்பாணியை அவர் மானசீக குருவாக மதிக்கும் எழுத்தாளர் சுஜாதாவைப் போல ஒரு பாணியில் வகைப்படுத்த முடியாது.
இவரின் இந்த கதை - இலக்கிய வகையை சார்ந்ததா என்ற கேள்விக்கு நமது பதில் - ஆம், இது வெகுஜன இலக்கியம்.
இந்த கதை, பாலியல் களத்தை பின்புலமாகக் கொண்டது.
சந்தர்ப்ப சூழ்நிலையால் விலைமகனாகும் ஒருவன் - ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பத்தினால் விலைமகளாகும் ஒருத்தியின் மேல் காதல் கொள்ள , அதை வைரம் என்ற சூது கவ்வ - துரோகம், குரோதம், கொள்ளை , விளைவு - என ஒரு அசத்தல் புதினம்.
முதலில் எழுத்தாளருக்கு ஒரு ஷொட்டு -இந்த பின்புலமே புதிது, அதை விலாவாரியாக விவரிக்க எத்தனை மெனக்கிடல். மனிதர் அதகளப்படுத்தியிருக்கிறார். வாசிப்பவரின் கண்முன்னே விரிகிறது கதைத்களம் - வாசகனை ஒர் பார்வையாளனாக முதல் பக்கதிலிருந்தே மாற்றிவிடுகிறார்.
இந்த கதையை தொடராக 2011ல் வலைதளத்தில் எழுத ஆரம்பித்தவர் - ஏனோ முழுத்தொடராக முடிக்கவில்லை. யானை நீண்ட பிரசவ காலம் கொண்டு குட்டியை ஈன்றெடுப்பது போல இந்த கருவோடு எட்டாண்டு காலம் வாழ்ந்து, இன்று புதினமாக தருவித்துள்ளார்.
திரையுலகில் ப்ளாக் ஹீயூமர் என்ற வகையறா உண்டு. இந்த கதையும் அதில் ஓர் அங்கம் தான்.
எழுத்தாளர் இந்த புதினத்தை வலைத்தொடராக எடுக்கும் முயற்சிகளில் உள்ளதாக தெரிகிறது.
அப்படி எடுக்கும் பட்சத்தில் தமிழுக்கு பதிலாக ஹிந்தி மொழியில் எடுத்தால் மிகப்பெரிய வெற்றி பெற வாய்ப்பு உண்டு.
விரைவில் - Guy Ritchie, Anurag Kashyap, நலன் குமாரசாமி, தியாகராஜன் குமாரராஜா போன்ற இயக்குனர்களின் வரிசையில் இந்த எழுத்தாளர் இடம் பெற இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.
பின்குறிப்பு :
ஒவ்வொரு தனிநபருக்கும் ஒரு சுயக்கருத்து உண்டு !
அதனை நான் உணர்ந்து , போற்றி, வழி மொழிகிறேன்!
இப்பதிவு இந்த நூலைப்பற்றிய எனது பார்வை மட்டுமே !
மற்றவரின் பார்வையில் இது வேறு படலாம் !

Apr 2, 2021

பெர்முடா - விமர்சனம் 2

 பெர்முடா. விமர்சனம் #2Cable Sankar லேட் நைட் சந்திப்புகளில் ஏராளமான கதைகள் பேசுவோம். பெரும்பாலும் சந்தித்த நபர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களை பேசும்போது அதனை நிறைய சுவரஸ்யம் கூட்டி கதைகளாக்கி விடுவார்.
அப்படி சொல்லப்பட்ட மூவிருவரின் வாழ்வை கதையாக்கி இருக்கிறார்.
Very very interesting..
நன்றி
Krp Senthil

Apr 1, 2021

ப்ரம்மா -10

10

”தமிழ் நாட்டுல பாதி இடங்கள்ல நம்ம சேனல் தெரியலை” என்று பதட்டத்தோடு சொன்னான் ஷியாம்.

“எதுனால? டெஸ்ட் ப்ராட்காஸ்டிங்க்  போது எல்லா ஊருலேயும் தெரிஞ்சுச்சே?”

“டெஸ்டுலேயே நமக்கு தெரிஞ்ச ப்ரச்சனைதான் மனுஷ். சாட்டிலைட் ட்ரிப்ட் ஆகுதுங்கிறது. இருக்குற மூணு மணி நேர ப்ரோக்ராமை சரியா கிளியரா காட்டணும்னா யாராச்சும் ஒரு ஆளு டிஷ் பக்கத்திலேயே உக்காந்திருக்கணும். எப்படியும் டெக்னிக்கல் பிரச்சனையை நாமளே சரி பண்ணுவோம் அப்ப காட்டிக்கலாம்னு பெரிசா யாரும் இண்ட்ரஸ்ட் காட்டலைனு தகவல்”

மனுஷ் யோசனையாய் அவனைப் பார்த்தான். பழைய சாட்டிலைட்டை வாடகைக்கு எடுக்கும் போதே இந்த ப்ரச்சனை தெரிந்துதான் வாடகைக்கு எடுத்திருக்கிறான். நல்ல சாட்டிலைடுக்கு வாடகை மிகவும் அதிகம்.  அவன் தேற்றிய தொகைக்கு சாட்டிலைட் வாடகை மட்டுமே பல கோடிகள் கொடுக்க இப்போதைக்கு இயலாது. 

”இது மட்டும் தான் பிரச்சனையா? அப்படின்னா இதை நாம டெக்னிக்கலா டீல் பண்ணுவோம். வேற ஏதும் காரணங்கள்?”

ஷியாம் பதில் சொல்லாமல் அமைதியாய் இருந்தான்.

“அப்ப வேற ஒண்ணும் இருக்கு. என்ன அது?”

“ஆளும் கட்சியோட சேனலா நாம அடையாளம் காட்டப்பட்டிருக்கிறதுனால எதிர்கட்சிக்காரங்களோட கேபிள் நெட்வொர்க்குல நம்ம சேனலைக் காட்ட மாட்டேன்குறாங்க. டெஸ்ட் சிக்னல் செக் பண்ண ஆள் அனுப்புனவப்பவே பெருசா ஒத்துழைப்பு தரலை”

“அது எதிர்பார்த்தது தானே ஷியாம்?. ப்ரோக்ராமிங்கில சாதிச்சிட்டோம்னா எதிர்கட்சி, ஆளும்கட்சின்னு பிரிவினை இருக்காது. கண்டெண்ட் தான் பேசும்”

“எனக்கென்னவோ நம்ம சேனல் கட்சி அடையாளத்தோட இருக்குறது அவ்வளவு நல்லதா படலை மனுஷ்” என்றான் ஷியாம்.

ஷியாம் சொல்வது போல மனுஷுக்கும் அத்தனை விருப்பமில்லைதான்.  ஆனால் முதலீடு பெற வேண்டுமானால் பின்னணி வேண்டும். அதிகாரத்தோடு கிடைக்கும் பின்னணி பெரும் பலத்தை தரும். பலம் தனகென ஒரு அதிகாரத்தை தரும். அது பயத்தை தரும்.

“நாம சர்வை ஆகுற வரைக்கும் சில அடையாளங்கள் தேவை ஷியாம். நான் தெரியாம செய்யலை” என்றான் மனுஷ்.

ஷியாமுக்கு மனுஷின் பேச்சு புரிந்ததால், பதில் பேசாமல் தலையாட்டினான்.

“ஆனா ஒரு விஷயம் மனுஷ். ப்ரோக்ராமிங் எவ்வளவு முக்கியமோ அதை விட டிஸ்டிரிப்யூஷன் முக்கியம்னு தோணுது. இப்போதைக்கு இருக்கிற டெக்னிக்கல் ப்ரச்சனைய சமாளிச்சிரலாம். ஆனால் வி ஹேவ் டூ கான்செண்ட்ரேட் மோர் ஆன் டிஸ்ட்ரிப்யூஷன்” என்று அழுத்திச் சொன்னான்.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் இரண்டு மூன்று சேனல்களின் டெஸ்ட் ப்ராட்காஸ்டிங் போய்க் கொண்டிருந்தாலும், அபீஷியலாய் தமிழின் முதல் சேனலாய் க்ளோடிவி வரும் போது, சுலபமாய் அங்கீகாரமும், ரீச்சும் கிடைத்திருக்க வேண்டிய ஒன்று. அது கிடைக்காமல் போனதற்கு காரணம் பின்னணியில் உள்ள அரசியல்.

“சரி முதலில் டெக்னிக்கல் பிரச்சனையை சரி செய்வோம்”

”அதுக்கு நாம வேற சாட்டிலைட் போகணும்”

“நடக்குறதப் பத்தி பேசுவோம்”

ஷியாம் பதில் சொல்லாமல் இருந்தான். அவன் பதில் சொல்லவில்லை என்றால் பேச விருப்பவில்லை என்று அர்த்தம். மனுஷுக்கு அது தெரியும் என்பதால் அவனும் பேசாமல் இருந்தான். சட்டென ஏதோ நினைவு வந்தவனாய் “ஷியாம் உனக்கு நியாபகம் இருக்கா? நாம டெஸ்ட் ப்ராட்காஸ்ட் செய்த போது ஏரியா ஏரியாவா கேபிள் ஆப்பரேட்டரை போய் மீட் பண்ணோமில்லை. அப்ப பேட்டை பக்கத்திலேர்ந்து ஒரு ஆப்பரேட்டர் பேரு கூட சுந்தரோ என்னவோ?. எல்லாரும் நமக்கு சொம்படிச்சிட்டிருந்தப்போ, அவன் தான் முதல்ல உங்க சேட்டிலைட் பழசு. ஜியோ ஸ்டேஷனிரில ட்ராவல்ல பிரச்சனைனு டெக்னிக்கலா பேசினவன். அப்ப அவன் ஒரு விஷயம் சொன்னான் கவனிச்சியா? சரியா ஒரு மிட் டைம்ல சாட்டிலைட்டை ட்ராக் பண்ணாத்தான் பத்து நிமிட இடைவெளில கரெக்டா ட்ராக் பண்ணமுடியும்னு சொன்னான்.  அவனை கூப்பிடு. நமக்கு இதுல இருக்குற ப்ரச்சனை நல்லா தெரிஞ்சேத்தான் இந்த சாட்டிலைட்ட வாடகைக்கு எடுத்திருக்கோம். ஆனா அது ஒரு பெரிய பிரச்சனையே இல்லைனு, ஒரு ஆப்பரேட்டரை வச்சி, நான் பண்ணியிருக்கேன் நீங்களும் பண்ண முடியும்னு விஷயத்தை சொல்ல வைப்போம்.  அவனை தேடிப் பிடிச்சி கூட்டிட்டு வா” என்றான் மனுஷ்.

ஷியாமுக்கு நல்ல ஐடியாவாகவே பட்டது.  சக ஆப்பரேட்டரை வைத்து அது ஒன்றும் பெரிய பிரச்சனையே இல்லை என்பதாய் காட்ட ஆரம்பித்தால் நிச்சயம் தொழில் போட்டி என்று மட்டுமில்லாமல், மனுஷ் சொல்வது போல நல்ல நிகழ்ச்சிகளை மக்களிடம் கொண்டு சேரும் பட்சத்தில் ஒர்க்கவுட் ஆகும் என்று நம்பிக்கை பிறந்தது.

உடனடியாய் தன் கீழ் இருக்கும் மார்கெட்டிங் டீமை இண்டர்காமில் அழைத்தான். ‘பேட்டை ஏரியாவில நாம மீட் பண்ண ஆப்பரேட்டர் லிஸ்ட் வேணும். அதுல சுந்தர் எந்த ஏரியா, அவரோட காண்டேக்ட் நம்பர் உடனே வேணும். கமான் பாஸ்ட்” என்று சடசடவென உத்தரவிட்டான்.

அடுத்த பத்து நிமிடங்களில் சுந்தரின் அட்ரஸ், போன் நம்பர், செல் நம்பர் ஆகிய தகவல்கள் மனுஷின் டேபிளில் இருக்க, ”கூப்ட்டு பேசி வரச் சொல்லுறியா?” என்று கேட்டான் ஷியாம்.

மனுஷ் தலையாட்டியபடியே. “எல்லாரையும் வைக்குற இடத்துல தான் வைக்கணும் ஷியாம். நாளைக்கு இந்தியாவிலேயே முதன்மை சேனலா வரப் போற க்ளோடிவியோட ஓனரை. சீ.ஈ.ஓவை, அத்தனை சுலபமாய் யாரும் சந்திச்சிரக்கூடாது. சந்திச்சிர முடியும்ங்கிற எண்ணத்தையும் ஏற்படுத்திட கூடாது.  நீ கூப்பிட்டு இந்த டைம்லேர்ந்து இந்த டைமுக்குள்ள வர முடியுமானு கேளு. ஆனா அவனுக்கு அந்த டைம்தாங்கிறத புரிய வை. அடுத்த நிலைக்கு போக விரும்புறவன், புரிஞ்சிக்கிறவன், நிச்சயம் வருவான்” என்றான் மனுஷ்.

ஹைராக்கி. படி நிலை. ஒரு நிறுவனத்திற்கு மிக முக்கியமானது யாருக்கு அடுத்து யார்? யார் யார் எந்தெந்த நிலைக்கு பொறுப்பு? என்பதை நிர்ணையிக்கும் படி நிலை. யாரை எங்கே வைக்க வேண்டும்?  பழிவாங்கவோ, அல்லது பல்லக்கு தூக்கவோ இரண்டிற்கும் இந்த படி நிலை முக்கியம். பல விஷயங்களை நேரிடையாய் டீல் செய்வதை தடுக்கும். பழியோ, சதியோ, எதிர்ப்போ எல்லாவற்றையும் ஒரு நாலு லெவல் தள்ளி நின்று பார்க்கும் போது புதிய யோசனைகள் தோன்றும். அதற்கான நேரம் கிடைக்கும். தலைமைப் பதவியில் உள்ள பல பேர்கள் இந்த ஹைராக்கியை தங்களுடய கேடயமாய் பயன்படுத்துவார்கள். ஆனால் சில பேர் எளிமையாய் பழகுகிறேனென்று தன்னை எளிமையானவனாய் வெளிப்படுத்திக் கொண்டாலும் தூரத்தில் நான்கு பாக்ஸர்களைத் தாண்டி நெருங்க முடியாதவர்களாய்த்தான் இருப்பார்கள். பல எளிமையாளர்கள் போலிகள் தான். மனுஷ் வியாபாரி. ஆளுமை மிகுந்தவன். அரசியல் தெரிந்தவன். யாரை எங்கே? எப்போது? நெருக்க. விலக்கத் தெரிந்தவன்.

@@@@@@@@@

சுந்தருக்கு ஆச்சர்யமாய் இருந்தது. மனுஷிடமிருந்து சந்திப்பதற்கான அழைப்பு என்பதை அவன் எதிர்பார்க்கவேயில்லை. சில மாதங்களுக்கு முன்னால் நடந்த ஆப்பரேட்டர் கூட்டத்தில் க்ளோடிட்வியின் சாட்டிலைட் பற்றி அவன் கூறிய கருத்து அங்கிருந்த பல ஆப்பரேட்டர்களுக்க் புரியவேயில்லை என்பதைத் தாண்டி, சாட்டிலைட் நடத்தும் ஆட்களுக்கு புரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்று உணர்ந்துதான் தன் கருத்தை சொன்னான். அவர்கள் ரியாக்ட் ஆகவில்லை. அதற்கு பின்னால் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்று புரிந்து கொண்டு மேலும் பேசாமல் அங்கிருந்து விலகினான்.

டெக்னாலஜி வளர, வளர, அதை புரிந்து கொண்டு தொழில் நடத்துவது போய், காசு கொடுத்தால் யார் வேண்டுமானாலும் டெக்னாலஜியை இம்ப்ளிமெண்ட் செய்து கொடுத்துவிடுவார்கள் என்றாகிவிட்ட நிலையில், பல ஆப்பரேட்டர்களுக்கு எந்தெந்த சேனல் எந்தெந்த சாட்டிலைட்டில் வருகிறது. அசிமுத் என்றால் என்ன? போலரைஷேஷன் என்றால் என்ன? என்று கேட்டால் பதிமூணாம் வாய்ப்பாடு கேட்டது போல முழிப்பார்கள். அவர்களுக்கு தெரியாதது தனக்கு தெரியும் என்பதை வைத்துத்தான் தன் வியாபாரம் வளர்கிறது என்பது ஒரு விதத்தில் சந்தோஷமாக இருந்தாலும் டெக்னாலஜியை அடிப்படையாய் வைத்து செய்து இருக்கும் தொழிலை செய்கிறவன் அதை தெரிந்து கொள்ள பிரயத்தனம் கூட செய்யாமல் இருக்கிறார்களே? என்று வருத்தமாய் இருந்தது.  இன்று மனுஷ் தன்னை அழைத்திருப்பதற்கான காரணமும் அவர்களின் ஒளிபரப்புக்கு பின்னால் உள்ள ஏதோ விஷயத்தைப் பேசத்தான் என்று சுந்தருக்கு தோன்றியது.

மனுஷ் போன்ற பெரும் புள்ளிகளின் சேனலைப் பற்றி குறை கூறியவனை, உங்கள் கருத்துக்கு நன்றி என்று கூட சொல்லாமல் கிளம்பியவர்களிடமிருந்து தன்னை அழைக்கிறார்கள் என்றால் ஒன்று மிரட்ட, அல்லது உபயோகிக்க இந்த இரண்டைத் தவிர வேறோர் காரணமும் இருக்க வாய்ப்பில்ல என்பதில் உறுதியாய் இருந்தான் சுந்தர்.  மனுஷ் அழைப்பதாய் ரிஷப்ஷனில் சொல்லப்பட, ரிஷப்ஷனிஸ்ட் பின்னணியில் உள்ள் டிவியில் க்ளோடிவியின் ஒளி மீண்டும் மீண்டும் பரவிக் கொண்டிருந்தது.

மனுஷின் அறை மிக எளிமையாய் இருந்தது. அவனுக்கு முன் பெரிய டீவி ஒன்று மெளனமாய் ஒடிக் கொண்டிருந்தது. உயர்தர் கார்பெட்டில் கால் வைத்ததும் தன்னையே உள்ளிழுத்துக் கொண்டதாய் உணர்ந்தான் சுந்தர். மனுஷுக்கு பக்கத்தில் ஷியாம் உட்கார்ந்திருந்தான்.  எழுந்து சுந்தருக்கு கை கொடுத்து வரவேற்றான் ஷியாம்.

“வாங்க சுந்தர். வெல்கம் டூ க்ளோடிவி. ஐயம் ஷியாம்.” என்றான்.

“வணக்கம் ஷியாம் வணக்கம் மனுஷ்” என்று இயல்பாய் மனுஷுக்கு எதிரே இருந்த சேரில் அமர்ந்தான் சுந்தர். மனுஷ் அவனது ஆட்டிட்டியூட்டை பார்த்துக் கொண்டேயிருந்தான். மிகவும் தைரியமான, உறுதியான எண்ணம் கொண்டவர்கள்தான் நேரிடைய் தயக்கமின்றி உரையாட தயாராவார்கள் என்று படித்திருக்கிறான். அதை உணர்ந்தும் இருக்கிறான்.

“ஐயம் மனுஷ். உங்களுக்கு தெரிந்திருக்கும். லெட் மீ கம் டு த பாயிண்ட். எங்கள் சாட்டிலைட் ஒளிபரப்பைப் பத்தி நீங்க அன்னைக்கு ஒரு கருத்து சொன்னீங்க?. அதைப் பத்தி பேசத்தான் உங்களை கூப்பிட்டோம். பிகாஸ் என்னதான் சேனல் நாங்க நடத்துனாலும், அதை மக்கள் கிட்ட கொண்டு போய் சேக்குறது நீங்க தான் ஆப்பரேட்டர்ஸ். ஸோ உங்க கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துத்தான் இந்த சந்திப்பு” என்றான் மனுஷ்.

”உங்க ரஷ்யன் சாட்டிலைட் பழசு. இன்னும் ரெண்டு வருஷமோ அல்லது மூணு வருஷம் தான் புட் ப்ரிண்ட்ல இருக்கும் அப்புறம் விண்வெளி குப்பையாத்தான் சுத்தும். பட் உங்க பிரச்சனை பெரிய சாட்டிலைட்டுக்கான பணமா? இல்லையாங்கிறத விட இப்ப முக்கியமான பிரச்சனை ஒளிபரப்பு இன்னும் சரியாப் போய் சேரணும்னா இப்ப இருக்கிற டெக்னிக்கல் பிரச்சனையை சரி செய்யணும் அதுக்குத்தான் என்னை கூப்பிட்டிருக்கீங்கன்னு நினைக்கிறேன். இஃப் ஐயம் கரெக்ட்?” என்று தன் பேச்சை நிறுத்தினான் சுந்தர்.

மனுஷுக்கு சுந்தரை மிகவும் பிடித்துப் போனது. சமரசமில்லாமல் மனதில் தோன்றியதை சொல்கிறான்.

“யா.. யூ காட் அவர் பாயிண்ட். கோ அஹெட். உங்களிடம் ஏதாவது அதற்கான தீர்வு இருக்கா?’

“இருக்கு. கொஞ்சம் பொறுமையும், டெக்னாலஜியும் தெரிஞ்சா இப்போதைக்கு சர்வைவ் பண்ணலாம். உதாரணமா உங்க சாட்டிலைட்டோட பிரச்சனை ஆறு மணிக்கு டிஷ்ஷை ட்யூன் பண்ணா அது நிகழ்ச்சி முடியும் ஒன்பது மணிக்கு ஒரு மணி நேரம் முன்னாடியே க்ளாரிட்டி போயிரும். அதை சரி பண்ணனும்னா.. ஆறு டூ 6.30க்கு தான் சாட்டிலைட் நம்ம புட் பிரிண்ட் நேர்க்கோட்டுல சுத்த ஆரம்பிக்குது. அந்த டைம்ல சாட்டிலைட் டிஷ்ஷை ட்ராக் பண்ணி பிக்ஸ் பண்ணிட்டம்னா, ஆறுலேர்ந்து மோசமா தெரியிற சேனல் ஒரு பத்து நிமிஷ இடைவெளியில கொஞ்சம் கொஞ்சமாய் க்ளாரிட்டியா வர ஆரம்பிச்சி நிகழ்ச்சி முடியுற வரைக்கும் சரியா ஒளிபரப்பாகும். அப்படித்தான் எங்க நெட்வொர்க்குல பண்ணியிருக்கோம். இட்ஸ் ஒர்க்கிங்” என்றான் சுந்தர்.

ஒரு நல்ல வியாபாரி, டெக்னீஷியன் குறைகளை மட்டுமே சொல்லிக் கொண்டிராமல் அதற்கான விடையை தேடுவான். தேடுகிறவன் அடுத்த கட்டத்தை நோக்கிப் போவான்.

”உங்களால் மற்ற நெட்வொர்க்குளுக்கு இதை சொல்லித் தர முடியுமா? தமிழ் நாடு முழுக்க ஆப்பரேட்டர்களை குழுவாய் சந்தித்து ஆட்களை ட்ரெயின் பண்ண முடியுமா?”

சுந்தர் தான் எதிர்பார்த்து வந்த விஷயமே நடக்கிறது என்பது குறித்து மகிழ்ச்சியாய் இருந்தது. மனுஷ் போன்றோரின் நட்பு கிடைப்பது தன் எதிர்காலத்திற்கு நல்லது என்று உள் மனம் கூறியது.

“நிச்சயம் பண்ணலாம். ஆனா அதுக்கு கொஞ்சம் செலவாகுமே?” என்று சிரித்தான்.

“அப்கோர்ஸ்.. அப்கோர்ஸ். உங்க டைம், அறிவு அதை எங்களுக்காக ஸ்பெண்ட் பண்ணும் போது காம்பென்சேட் பண்ணாம விட மாட்டோம்.’

”சரி எப்ப என்னங்கிறது குறிச்சு உங்களை நான் எப்ப காண்டேக்ட் பண்ணுறது?”

“இது விஷயமா ஷியாம் உங்களை காண்டேக்ட் பண்ணுவாரு. ஷ்யாம் டேக் கேர் ஆப் ஹிம்” என்று ஷியாமைப் பார்த்துச் சொன்னான். ஷியாமுக்கு புரிந்தது. ஹைராக்கி.

“சார். இன்னைக்கு இந்த மூணு நேர நிகழ்ச்சிக்கு இது ஓக்கே. ஆனா இன்னும் ஒரு அரை மணி நேரம் ஒளிபரப்பு எக்ஸ்டெண்ட் ஆனா மொத்த கதையும் அவ்வளவுதான். பெட்டர் புது சாட்டிலைக்கு சீக்கிரம் போங்க அது  தான் உங்களுக்கும் உங்க சேனலுக்கும் நல்லது. இதை ஏன் இப்பவே உங்க கிட்ட சொல்லுறேன்னா இதுக்கு அப்புறம் உங்க அடுத்த ஹைராக்கி ஆளைத்தான் நான் டீல் செய்ய வேண்டியிருக்கும். உங்கள சந்திக்க சான்ஸ் கிடைக்குமோ இல்லையோ அதனாலத்தான். ஆல் த பெஸ்ட்’ என்று வாழ்த்திவிட்டு, கிளம்பினான் சுந்தர். மனுஷ் அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான். 

தொடரும்

நாளை இந்தப் பகுதி நீக்கப்பட்டு, புதிய பகுதி வரும்

24 சலனங்களின் எண். விமர்சனம் -6


 

24 சலனங்களின் எண் விமர்சனம் #6

நண்பர் கேபிள் ஷங்கர் எழுதிய 24 சலனத்தின் எண் என்ற திரைத்துறை சார்ந்த நாவல். திரைக்கடலில் நீச்சல் அடிக்க துடிக்கும் அனைவரும் படிக்க வேண்டும். இரு தயாரிப்பாளர் இரு நாயகர் இரு நாயகியர் ஒரே ஒரு ஆபீஸ் பாய் என அனைவரும் இந்த தேரை இழுத்துச் செல்கின்றனர். திரை துறை சார்ந்த நண்பர்கள் படித்தால் அவர்கள் சந்தித்த நபர்கள் போலவே இருக்கும். எனக்கும் அப்படியே... சில இடங்களில் அசைவ வரிகள் தவிர்த்து இருக்கலாம் கேபிள் சங்கர். .கணவன் கனவை பூர்த்தி செய்ய நின்ற படத்தை முடிக்கும் திருமதி மணி அவரை மதிக்கிறேன்.அவ்வப்போது அபயக்குரல் தரும் ஆபிஸ் பாயை நேசிக்கிறேன்.சினிமாவைத்தேடுவோர்க்கு இது சிறந்த கூகுள் மேப்..இந்த நாவலை கம்பி மத்தாப்பு போல் ஜாக்கிரதையாக கொளுத்தி உள்ளார். அடுத்த நாவல் லஷ்மி வெடியாய் வெடிக்க வாழ்த்துக்கள். நன்றி இயக்குனர், எழுத்தாளர் நடிகர்
E Ramdoss