Thottal Thodarum

May 29, 2018

சப்பாத்திக்கடை - விருகம்பாக்கம்

விருகம்பாக்கத்தில் 5 ரூபாய்க்கு சப்பாத்தி கிடைக்கிறது. கூடவே தால், பன்னீர், சிக்கன், கடாய் சிக்கன், மட்டன், என கிரேவியுடன்  என்றார்கள். ஒரு சப்பாத்தியின் விலை 5 ரூபாய் மட்டுமே என்றவுடன் ஒரு நடை போய்ட்டு வந்துருவோம்னு என்று கிளம்பினோம்.

ஏவிஎம் காலனி, காமராஜ் சாலையில் இருந்தது அந்த சின்னக்கடை. வாசலிலேயே சப்பாத்தி போட்டுக் கொண்டிருந்தார்கள். நண்பர் சப்பாத்தி தால் ஆர்டர் செய்ய, நான் சப்பாத்தி கடாய் சிக்கன். 

நல்ல மிருதுவான சப்பாத்தி, உடன் கொடுக்கப்பட்ட தால் நன்றாக இருந்தது. விலை ரூ. 30. கடாய் சிக்கன் ரூ.60. மசாலா அதிகமில்லாமல் சப்பாத்திக்கு மிகத்தோதாய் மிகவும் கிரேவியாய் இல்லாமல் கெட்டியாகவும் இல்லாமல் இருந்தது சிக்கன்.

கொடுக்கப்படும் கிரேவி மூன்றிலிருந்து நான்கு சப்பாத்திக்கு வரும். நிச்சயம் வயிற்றையும், பர்ஸையும் பதம் பார்க்காத உணவை கொடுக்கிறார்கள். ஆரம்பித்து ரெண்டு மாதம்தான் இருக்கும். நாளைக்கு நானூறு சப்பாத்தி போவதாய் சொல்கிறார்கள். 

சாலிக்கிராமம், வளசரவாக்கம், விருகம்பாக்கம்  பகுதிகளுக்கு டோர் டெலிவரியும் செய்கிறார்கள். ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள்.

கந்து வட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -7

கந்து வட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -8

தமிழ் சினிமாவின் முக்கிய ஏரியாவான வடபழனியில் ஒவ்வொரு துறையினருக்கும் ஒரு டீக்கடை முக்கு உண்டு. பிரசாத ரெக்கார்டிங் முன்பு பார்த்தால் நிறைய உதவி இயக்குனர்கள், ஏன் ஒரு படம் செய்து அடுத்த படத்திற்காக காத்திருப்பவர்கள். முதல் பட தோல்விக்கான காரணங்களை நின்று அலசுகிறவர்கள் என பெரும்பாலும் இயக்கம் சார்ந்தவர்கள் மட்டுமே அதிக்கம் செலுத்துமிடம் காவேரி கார்னர்.
அடுத்து கொஞ்சம் தூரம் போனால் மரங்கள் அடர்ந்த பாரதியார் தெரு. நீங்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவை பார்க்கிறவர்கள் என்றால் நீங்கள் பல படங்கள் பார்த்த,அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய அளவில் பிரபலமான பல துணை நடிகர்களை அங்கே பார்க்கலாம். அந்த தெரு ஒரு நம்பிக்கை தெரு. அந்த தெருவிலிருந்துதான் சூரி, மூனீஷ்காந்த், என பல நடிகர்கள் பிரபலமாகியிருக்கிறார்கள். அங்கே கூடும் ஒவ்வொருக்கும் எனர்ஜி கொடுக்ககூடிய ஒர் முக்கிய விஷயம் அவர்களின் வெற்றிதான். “தோ.. இங்கதான் நானும் சூரியும் தெனம் முனை கடையில டீ குடிச்சுட்டு, ஆபீஸ் ஆபீஸா ஏறிட்டு வருவோம்” எனும் நண்பரை நீங்கள் நிறைய படங்கள் பார்த்திருப்பீர்கள்.

“என்ன.. அவனுக்கு டைம் ஒர்க்கவுட் ஆயிருச்சு. மேலே போயிட்டான்.” என்பவரின் கண்களில் தூரத்து வெளிச்சம் பளீரென தெரியும்.

வாட்சப் இல்லாத காலங்களில் இந்த இடம் தான் வாய்ப்பு தேடும் நடிகர்களின் டேட்டா பேஸ். பெரும்பாலனவர்கள் கூடும் நேரம் மதியம் தான். சாப்பிட்ட பிறகோ, அல்லது சாப்பிட காசில்லாமல் வெறும் டீ மட்டுமே குடித்துவிட்டு, பசி மயக்கத்தை சரிக்கட்ட மரத்துக்கு கீழ் நிற்பார்கள்.  ஆபீஸ் ஆபீஸாய் போட்டோ கொடுத்து, ஆடிஷன்கள் செய்துவிட்டு, வருகிறவர்கள், அங்கே இருக்கும் மற்றவர்களிடம் “இந்த ஆபீஸ் போனியா? அந்த ஆபீஸ் போனியா? ‘என்று அட்ரஸ் கொடுப்பார்கள். யார் யார் படம் ஆரம்பிக்கப் போகிறார்கள்?. எப்போது ஆரம்பமாகிறது. எது உப்புமா கம்பெனி, யார் மேனேஜர். எந்த படத்தின் இணை இயக்குனர் அங்கே இருக்கிறார். என்பது போன்ற தகவல்கள் அங்கே சொல்லபடும். வேண்டுகிறவர்கள் எழுதிக் கொண்டு தங்கள் முயற்சியை தொடர்வார்கள். அங்கே தகவல் கொடுக்கிறவர்களுக்கு இவர்கள் போய் வந்த அலுவலகம் மற்றும்மேலதிக தகவல்களை அளிப்பார்கள். இங்கே இருக்கிறவர்கள் யாருக்கும் ஈகோ என்பது இருக்காது. எனக்கு கிடைக்கிற வாய்ப்பு நிச்சயம் எனக்குத்தான் வரும். உனக்கு வருவது உனக்கு. என்ற எண்ணம் அதிகம். தன்னிடம் இருப்பது வித்யாசமான நச் நடிப்பு என்ற நம்பிக்கை பலரிடம் இருப்பதை நான் கண்டிருக்கிறேன். நிஜமாகவே திறமையான பல பேர் அங்கே நின்றிருப்பார்கள். இன்றைக்கு அதே இடத்தில் கூடுகிறவர்களின்  வாட்ஸப் குழு ஆர்மபிக்கப்பட்டு, இதே தகவல்கள் அங்கேயும்  பகிரப்படுகிறது.

வீடுகள் நிறைய ஆனதால் பெரிய கூட்டங்கள் கூடாவிட்டாலும் இன்றைக்கும் நான்கைந்து அடுத்த தலைமுறை ஆட்கள், பழையவர்களுடன் நின்று கொண்டிருப்பார்கள். பெரும்பாலும், அனுபவஸ்தர்கள் பெரிய பெரிய நடிகர்களுடன் தாங்கள் நடித்தது, அல்லது அவர்களின் சொதப்பல்கள், அவர்களின் சொதப்பல்களை மறைக்க, துணை நடிகர்களான தங்கள் மீது காரணம் சொல்லி எஸ்கேப் ஆன கதை எல்லாம் சொல்வார்கள். புதிய பார்ட்டிகள் பெரும்பாலும் குட்டிக் குட்டி படங்களில் தூரத்தில் கூட்டத்தில் நின்று வந்திருக்கிறவர்கள் வாய் பிளந்து கேட்டுக் கொண்டேயிருப்பார்கள்.  பல சமயங்கள் துணை நடிகர்கள் சொல்லும் கதையில் இருந்த சுவாரஸ்யம் அந்த படக்காட்சியில் கூட இருக்காது.  

நண்பர் ஒருவர் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் நடிகர். யாரோ ஒருவர் பெரிய இயக்குனருக்கு நண்பர் எனவும் தனக்கு நல்ல கேரக்டர் வாங்கித் தருவதாய் சொல்லியிருக்கிறார் என்றார். வாழ்த்து சொல்லிவிட்டு வடபழனியில் இறக்கிவிட்டு வந்தேன். இரவு போன் செய்த போது அதைப் பற்றி மட்டுமே பேசாமல் இருந்தார். என்னங்க ஆச்சு? என்றவுடன் வேறு வழியில்லாமல் “அட நீங்க வேறங்க.. காலையில இறக்கிவிட்டதிலேர்ந்து அவருக்காக ரெண்டு மணி நேரம் காத்துட்டிருந்தேன் எப்ப போன் பண்ணாலும், ஷங்கர் சார் ஆபீஸுல, மணி சார் ஆபீஸுலன்னார்.. அப்புறம் வந்தாரு. ஓலாவுல. இறங்கி என்னை கூப்பிட்டார். போனேன். 240 சேஞ்ச் இருக்கான்னு கேட்டாரு.. இருந்த 500 ஐ கொடுத்தேன். சேஞ்ச் வாங்கிட்டு, அப்படியே பாக்கெட்டுல போட்டுக்கிட்டு, வண்டி வச்சிருக்க இல்லனு கேட்டாரு.. ஆமா சார்னேன். வண்டிய எடுன்னுட்டு என் பின்னாடி உக்காந்து வடபழனி, வள்சரவாக்கம், அன்பு நகர், கோயம்பேடுன்னு ஒவ்வொரு ஆபீஸா போனாரு. ஹால்ல உட்கார வச்சிட்டு, உள்ளாரப் போவாரு. கொஞ்ச நேரத்துல திரும்ப வந்து ஒரு போட்டோ கொடுங்கன்னு கேட்டு வாங்கிட்டு, உள்ளாரப் போய்ட்டு, சார் கிட்ட சொல்லிட்டேன் டைரக்டர் இப்ப டிஸ்கஷன்ல இருக்குறதுனால, கூப்புடுறேனு சொல்லியிருக்காருனு சொல்லிட்டு, இதே போல பல ஆபீஸுகள் காட்டிவிட்டு, திரும்ப வடபழனில இறக்கிட்டு கிளம்பறேனு சொன்னாரு.  நான் ரொம்பவே தயங்கி.. “ சார்.. அந்த 500ன்னதும்” “என்ன தம்பி எத்தனை ஆபீஸுல உன்னை அறிமுகபடுத்தியிருக்கேன் என்கிட்டயே காசைக் கேக்குறே. எனக்கு பணம் முக்கியமில்லை சொல்லிட்டு, தன் பேண்ட் பாக்கெட்டுலேர்ந்து காசை விட்டெறியாப்புல எடுக்க, அதிலேர்ந்து நாலைஞ்சு போட்டு அவர் போட்டோ வந்துச்சு. கீழ விழுந்ததை எடுத்து அவர் கையில கொடுத்துட்டு “சார்.. தயவு செய்து ஏமாத்தாதீங்கனு சொல்லிட்டு கிளம்பி வந்துட்டேன்” என்றான்.

பாவமாய் இருந்தது. இப்படி இவர்களை ஏமாற்றி பிழைக்கிற ஆட்களிடமிருந்து அவர்கள் தப்பி நான்கைந்து படங்களில் தலை காட்டுவதே பெரிய விஷயம். ஆனால் அவர்களையும் குற்றம் சொலல் முடியாது. பல வருடங்களாய் சினிமாவில் என்றைக்காவது நானுமொரு சிறந்த நடிகனாய் வலம் வருவேன் என்கிற சூளுரை கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து குடும்பத்த காப்பாற்ற வேறு வழியில்லாமல் இப்படி காலம் ஓட்டுகிறவர்கள் அவர்கள்.


சில மாதங்களுக்கு முன் அந்த தெருவுக்கு போக நேர்ந்தது. வழக்கமாய் உட்கார்ந்திருக்கும் கும்பல் இருக்க, எல்லாரும் வருத்தமாய் இருந்தார்கள்.  என்னவென்று கேட்டேன். வயதான ஒரு துணை நடிகரின் பேரைச் சொல்லி, “செத்துட்டாரு சார். பாவம். சினிமா சினிமான்னு காலத்த தள்ளிட்டாரு. கல்யாணம் கூட ஆகலை. அவரோட ரூம்ல அநாதையா செத்துக் கிடந்தாரு. நாங்க எல்லாரும் தான் காசு போட்டு அனுப்பி வச்சோம். நேத்து கூட சொல்லிட்டிருதாரு.. இந்தவாட்டி ஹரி படத்துல நல்ல கேரக்டர்டா.. நான் செயிச்சுருவேன்னு..” என்று அழ ஆர்மபித்தான். அவன் அழுதது அவருக்காக மட்டுமல்ல என்று எனக்கு புரிந்தது. 

May 25, 2018

கொத்து பரோட்டா 2.0-56

கொத்து பரோட்டா 2.0-56
ஜி.எஸ்.டி வரி விதிப்பினால் குழம்பிப் போயிருக்கின்றன தீயில் மீண்டும் தமிழக அரசு எண்ணெய் ஊற்றியிருக்கிறது. தமிழக கேளிக்கை வரி இருக்கிறதா? இல்லையா? என்ற குழப்பத்துடனே 18 முதல் 28 சதவிகித ஜி.எஸ்.டியை திரையரங்குகள் வசூலித்துக் கொண்டிருந்தாலும், விநியோகஸ்தர்களுக்கு கடந்த சில மாதமாய் தியேட்டர் அதிபர்கள் வசூலை செட்டில் செய்வதில் பல குழப்பங்கள். காரணம் மேற்ச் சொன்ன கேளிக்கை வரி இருக்கிறதா? இல்லையா? என்கிற குழப்பம் காரணம். திடீரென ஆறு மாதத்திற்கு முன் தேதியிலிருந்து பணத்தை கட்டுங்கள் என்ற சட்டம் போட்டுவிட்டால் விநியோகஸ்தர்களிடமிருந்து பணத்தை எப்படி வாங்குவது என்ற பயத்தில் பல தியேட்டர்கள் வசூலான தொகையை கொடுக்காமலேயே இருக்கிறது. இந்த லட்சணத்தில் இப்போது தடாலென தமிழ் சினிமாவிற்கு பத்து சதவிகிதம் வரி மற்ற மொழி படங்களுக்கு 20 சதவிகிதம் வரி என்று அறிவிப்பு மேலும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. காரணம் முன்பு கேளிக்கை வரி அரசின் நிர்ணையிக்கப்பட்ட 120 ரூபாய்க்குள் இருந்தது. அதாவது 120 ரூபாயில் முப்பது சதவிகித வரியும் சேர்ந்தது. ஆனால் ஜி.எஸ்.டிக்கு பிறகு 120 ரூபாய் அப்படியே திரையரங்குக்கும் விநியோகஸ்தர்களுக்கும் போய் சேர்ந்து கொண்டிருந்த நேரத்தில், இப்போது திடீரென பத்து சதவிகிதம் வரி கட்டு என்றால் மீண்டும் அது 120 ரூபாய்க்குளிலிருந்து கட்ட வேண்டுமா? அல்லது 120 ரூபாய்க்கு 10 சதவிகிதம் வரி போட்டு, பின்பு அதன் மேல் ஜி.எஸ்.டி போட்டு வரி வாங்க வேண்டுமா? என்பதுதான். ஏற்கனவே காசு கொடுத்து டிக்கெட் வாங்கும் மக்களிடம் 156.40 பைசாவுக்கு சில்லரை தருவதில்லை. வழக்கத்திலேயே இல்லாத 50 பைசா, 10 பைசா மட்டுமில்லாமல் ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் சில்லரையைக் கூட தராமல்மொத்தமாய் 160 வாங்கிப் போட்டுக் கொள்ளும் திரையரங்குகள் ஏராளம். இப்படியிருக்க, இப்போது புது வரி. இது என்னன்ன குழப்பங்களை கொண்டு வரப் போகிறதோ என்று புரியவில்லை.

பைரஸியை ஒழிப்பேன் என்று சொல்லுங்கள். தமிழ் நாடு முழுவதும் ஆன்லைனில் டிக்கெட் கொண்டு வரும் முறையை அமல்படுத்த சொல்லுங்கள் நாங்கள் வரி கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று விஷால் அறிவித்துள்ளார். இது மல்ட்டிப்ளெக்ஸ் தவிர மற்ற ஊர் தியேட்டர்காரர்களுக்கு வயிற்றில் புளி கரைக்கும் விஷயம் தான். ஆனால் இதை செய்தால்தான் அட்லீஸ்ட் நேர்மையாய் வரியை பிடித்தம் செய்து, விநியோகஸ்தர்கள் பங்கை கணக்கில் கொண்டு வர முடியும். பைரஸியை ஒழிப்பது என்பது அவ்வளவு சுலபமில்லை என்றாலும் அரசின் துணையிருந்தால் நிச்சயம் கட்டுப்படுத்த முடியும். அதற்கு அரசை ஒத்துழைக்க வைக்க, விஷாலின் கோரிக்கை கொஞ்சம் நியாயமாய்த்தான் படுகிறது. எதையுமே எங்களுக்கு செய்யாமல் எதுக்கு வரி மட்டும் கேட்கிறாய்? என்கிறார். ஆனால் இப்படி ஒரேயடியாய் எல்லாவற்றிலும் விலையேற்றம் கொண்டு வந்தால் நிச்சயம் மக்கள் தியேட்டர் பக்கம் ஒதுங்குவது ரொம்பவும் கஷ்டமே.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Hindi Medium
ஒரு தூக்கம் வராத நடுராத்திரி வேளையில் பார்க்க ஆரம்பித்த படம். எப்படி இதை திரையில் பார்க்காமல் போனோம் என்று வருத்தப்பட வைத்த அட்டகாசமான படம். ராஜு, மித்தா தம்பதியருக்கு ஒரு குட்டி தேவதை பெண். மித்தாவுக்கு தன் பெண்ணை ஆங்கில மீடியம் ஸ்கூலில் தான் படிக்க வைக்க வேண்டுமென்று ஆசை. அதுவும் டெல்லியில் உள்ள பெரும் பணக்கார பள்ளியில் மட்டுமே என்பது முக்கியம். ராஜ் டெல்லியில் சாந்தினி சவுக் பஜாரில் பிரபல டிசைனர்களின் டிசைன்களை ஒரிஜினல் காப்பிஸ் என்று செம்ம வியாபாரம் செய்து கொண்டிருக்கிறவன். டிபிக்கல் ஹிந்திவாலா. மனைவியின் இம்சை தாங்காமல் அத்துனை பள்ளிகளின் அட்மீஷன் பாரத்தை விடிய விடிய நின்று வாங்குகிறான். ஆனால் அங்கேயெல்லாம் சீட் கிடைக்க, பெற்றோர்களுக்கு க்ளாஸ் எடுக்க, மித்தாவின் கல்லூரி தோழன் ஒருவன் சீட் கிடைக்க ஒரு கன்சல்டண்டை அறிமுகப்படுத்துகிறான். எல்.கே.ஜி. சீட்டுக்கு. அந்த கன்சல்டெண்ட் பெண் படுத்தும் பாடுகள், குழந்தைக்கு ஆங்கில ஹைஃபை சொசைட்டி பழக்கம் வேண்டுமென்று இம்சித்து, புராதான குடும்ப வீட்டை விட்டு, பக்கத்தில் இருக்கும் ஹைஃபை சொசைட்டியில் குடியேறுவது.சாதாரணம் உடைகளை விட்டு, வெகு பணக்கார உடைகளுக்கு மாறுவது என எல்லா வேலைகள் செய்தும், நான்கு ஸ்கூல்களில் ராஜ் – மித்தா தம்பதியரின் பெண்ணுக்கு சீட் கிடைக்காமல் போகிறது.

ஆர்.டி.ஈ எனும் படிப்பதற்கான உரிமை கோரலின் படி ஏழைகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் சீட்டை வாங்க முடியும் என்று தெரிய வர, ராஜ் பணம் கொடுத்து அந்த கேட்டகிரியில் அப்ளை செய்கிறான். அப்போது பார்த்து பள்ளியின் மேல் ஏழைகளுக்கான சீட்டை பணக்காரர்களுக்குகொடுப்பதாய் பள்ளியில் வேலை பார்க்கும் ஒருவரே கம்ப்ளெயிண்ட் கொடுத்துவிட, நேரில் சென்று விசாரித்து பார்த்துதான் சீட் கொடுக்கப்படும் என்று சொல்லிவிடுகிறார்கள்.  வேறு வழியில்லாமல் ராஜ் – மித்தா தம்பதியினர் உடனடியாய் ஏழை வேஷம் போட வேண்டிய கட்டாயம். ஒரு லோயர் மிடில் க்ளாஸ் இடத்தில் வாடகைக்கு போய் இருக்க பழகுகிறார்கள். அங்கு பல விஷயங்கள் அவர்களுக்கு வாழ்க்கையை புரிய வைக்கிறது. அவர்களது பெண்ணிற்கு சீட்டும் கிடைக்கிறது. மீண்டும் தங்கள் வழக்கமான வாழ்க்கைக்கு திரும்பினாலும், அநியாயமாய் ஒரு ஏழைக்கு கிடைக்க வேண்டிய சீட்டை பறித்துவிட்டோம் என்ற குற்றவுணர்ச்சியில் ஒரு கவர்மெண்ட் பள்ளியை தத்தெடுத்து அதை உயர்த்துகிறார்கள். ஆனால் பிரச்சனை ஏழையாய் வாழ்ந்த நாட்களில் நெருக்கமான நண்பனாய் வலம் வந்த ஷியாம் சுந்தரின் வடிவில் வருகிறது. பின்பு என்ன ஆனது என்பதை அமேசான் ப்ரைம் வீடியோவில் கண்டு கொள்க.

மிக சாதாரண கதை. படம் நெடுக பிரசாரமில்லா சர்காசம். காமெடி. அற்புதமான வசனங்கள். ராஜ் என் மகளுடய சீட்டை உன் மகனுக்கு வாங்கிக் கொடுக்கிறேன் என்று ஷியாமிடம் சொல்லும் போது, ஷியாம் கோபப்பட்டு, நீ கொடுப்பது பிச்சை.  ஆனால் என்னிடமிருந்த் பறித்தது எனக்கான உரிமையை. உரிமையை நான் ஏன் பிச்சையெடுத்து பெற வேண்டும்? என்று கேட்குமிடம் ஒர் உதாரணம். ராஜாக நடித்த இர்பானின் நடிப்பு மிக இயல்பு. எழுதி இயக்கிய சாகேத் சவுத்ரிக்கு வாழ்த்துக்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Newton
அரசியல் படம் எடுக்க வேண்டுமென்றால் போலீஸ், எம்.எல்.ஏ, எம்.பி. அடியாள். பெய்ட் கில்லர் எல்லாம் தேவையில்லை. சாதாரண அரசு அதிகாரியின் வாழ்க்கையை கண் முன்னே காட்டினால் போதும். அதிலும் உலகிலேயே பெரிய ஜனநாயக கடமையான தேர்தலை சத்தீஷ்கரில், நக்சல்பாரிகளின் கண்ட்ரோலில் உள்ள ஒர் தொகுதியில் வெற்றிகரமாக நடந்துவதற்கு போகும் நியூடன் குமார் எனும் அரசு அதிகாரியின் கதை. நியூடன் குமார் நேர்மையான அரசு அதிகாரி. திருமணமாகாதவன். யாருமே தேர்தல் அதிகாரியாய் போகத் தயங்கும் இடத்திற்கு போகிறேன் என்கிறான். அங்கே போகும் போதுதான் தெரிகிறது  அங்கு இதுவரை நிஜத்தேர்தலே நடந்ததில்லை என்று. அதையும் மீறி போலிங் பூத்துக்கு போயே ஆகவேண்டும் என்று கிளம்புகிறான் நியூட்டன். உடன் ஒர் அதிகாரியும். ஆதிவாசிகளிடையே படித்து அரசு அதிகாரியாய் பணிபுரியும் மைக்கோ எனும் பெண்ணுடன். போலிங் பூத்துக்கு யாருமே வரவில்லை. மீறி அழைத்தால் யாருமே வருவதற்கு தயாராக இல்லை. ஆட்களே வராத காரணத்தால் தன்னுடன் வந்திருக்கும் போலீஸ்காரர்களை கொண்டு போலி ஓட்டு போடலாம் என்கிறார் போலீஸ் தலைவர். அதற்கு ஒத்துக் கொள்ளாத நியூட்டன் ஆட்களை தேடிப் போய் அழையுங்கள் என்கிறான். அந்நேரம் பார்த்து வெளிநாட்டிலிருந்து மீடியா ஆதி வாசிகளின் தேர்தல் பூத்தை படம்பிடிக்க வருவதாய் போலீஸுக்கு தகவல் வர, போலீஸார் அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டி அனைவரையும் வரவழைக்கின்றனர். இது எதையும் அறியாத நியூட்டன் வந்தவர்களை ஓட்டுப் போட அனுமதிக்க, எலக்ட்ரானிக் ஓட்டிங் மிஷினில் ஓட்டுப் போடுவதைப் பற்றி எதையும் தெரியாமல் முதல் ஓட்டரே விழிக்கிறார்.

வேறு வழியில்லாமல் அனைவருக்கு மீண்டும் அங்கேயே க்ளாஸ் எடுக்கப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு புரியவில்லை. போலீஸுக்கோ மீடியா உயர் அதிகாரியுடன் வரும் போது ஓட்டு போடப்பட வேண்டிய கட்டாயம். அது ஒரு விளையாட்டு உபகரணம் என்றும் விளக்கிற்கு பக்கத்தில் இருக்கும் படங்கள் உங்களுக்கு பரிசாய் வருமென்று சொல்கிறார். நியூட்டன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் வேறு வழியில்லாமல் ஓட்டு பதிவு நடைபெறுகிறது. மீடியா போன பின்பு திடீரென மவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்த, அனைவரும் ஓட்டுப் பதிவு முடிவதற்கு முன்பே அங்கிருந்து கிளம்புகின்றனர். எப்படி வராத ஓட்டர்கள் பாரின் மீடியாவுக்கு முன் வந்தார்கள்? திடீரென எங்கிருந்து மாவோயிஸ்ட் தாக்குதல் என்று யோசித்த நியூட்டனுக்கு ஒரு விஷயம் ஸ்ட்ரைக் ஆகிறது. அப்போது பார்த்து நான்கு ஓட்டர்கள் வழியில் வர அங்கேயே அவர்களது ஓட்டை போட வைக்க விரும்புகிறான். போலீஸ் அவனை தடுக்கிறது.

மக்களுக்கான அரசாங்கம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான திட்டங்களைத் தீட்டும் அரசாங்கம் எப்படி இயங்குகிறது என்பதை அதே அரசாங்கத்துக்காக பணி செய்யும் ஒர் ஊழியனின் பார்வையில் சாட்டையால் அடித்திருக்கிறார் இயக்குனர் அமித் மசூர்கர். நியூட்டனாய் நடித்திருக்கும் ராஜ்குமார் ராவின் நடிப்ப ஆப்ஃட். க்ளைமேக்ஸை நோக்கிப் போகும் திரைக்கதையில் பரபரப்பாக நடக்கும் காட்சிகள் கொஞ்சம் நம்பக்தன்மையற்றதாய் அமைந்துவிட்டது நம்முடை ஆஸ்கர் கனவை தகர்க்க கூடியதாக அமைந்துவிட்டது வருத்தமே.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


May 24, 2018

கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? 6

கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? 6
சில வருடங்களுக்கு முன் எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் பல சீரியல்களை இயக்கியவர். திரைப்படத்துக்கான முயற்சியில் இருந்தார். எப்போது அவருக்கு அதற்கான வாய்ப்பு கிடைத்தாலும், என்னையும் ஸ்க்ரிப்டில் உதவ அழைத்துக் கொள்வார். ஒரு நாள் வழக்கம் போல அழைத்தார். படம் ஒண்ணு ஓகே ஆயிருக்கு. நம்ம காமெடிக்கதைதான். ப்ரொடியூசர் ஓகே சொல்லிட்டாரு. ஆபீஸ் பார்க்க சொல்லியிருக்காரு. என்றார். மிகவும் சந்தோஷமாய் இருந்தது.

”அப்ப நாம உடனே கதையை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து லேட்டஸ்ட் ட்ரெண்டுக்கு காமெடிய சேர்த்துருவோம்’ என்றேன். நண்பரும் உற்சாகமாக தலையாட்டினார்.

அங்கே இங்கே என அலைந்து ஒரு வழியாய் கோயம்பேடில் அலுவலகம் வாடகைக்கு பிடித்தாயிற்று. ஒரு சுபயோக சுபதினத்தில் அலுவலக பூஜை போடப்பட்டது. தயாரிப்பாளர் மட்டுமே வந்து கலந்து கொண்ட நிகழ்வு. உடன் யாரும் வரவில்லை. தயாரிப்பாளருக்கு 50 வயது இருக்கும். நல்ல ஸ்லிம்மாய், வயது தெரியாமல் இருந்தார். இருந்த டபுள் பெட்ரூம் ப்ளாட்டில் எந்த அறையை அவருக்கு எடுத்துக் கொள்ளப் போகிறார் என்று கேட்டோம். இரண்டு அறைகளில் பால்கனி உள்ள அறையை அவர் எடுத்துக் கொள்வதாய் சொன்னார். அது வெய்யில் நேரடியாய் உள்ளே வரும் படியான அறை. மதிய நேரத்தில் வெக்கை அதிகமாய் இருக்கும் என்றேன்.

“பரவாயில்லைங்க வெய்யில் படாம வாழுறது தப்பான விஷயம்” என்றார்.

நாங்கள் ஏதும் பேசவில்லை. தினமும் கதை விவாதம் நடக்க ஆரம்பித்தது. இயக்குனருக்கு அட்வான்ஸ் கொடுத்தது மட்டுமே நடந்திருக்க, உதவி இயக்குனர்கள் சேர்க்க இயக்குனர் விருப்பப்பட்ட போது, 

“மொதல்ல உங்க நண்பரோட வச்சி ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிருங்க. அதுக்கு அப்புறம் உதவியாளர்களை கூப்பிட்டுக்கலாம். பைனல் ஸ்டேஜுல என்றார்.

அவர் சொல்வது சரியென பட்டது. எதற்கு வீண் செலவு எப்படியும் நாங்கள் இருவரும் தான் எழுதப் போகிறோம் எனும் பட்சத்தில் ஷூட்டிங்குக்கிற்கு தயாராகும் நேரத்தில் உதவியாளர்களை போட்டுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து வேலை செய்ய ஆரம்பித்தோம். தயாரிப்பாளர் தினமும் அங்கே தங்குவார். திடீரென ரெண்டொரு நாளைக்கு ஆள் இருக்க மாட்டார். எங்கே போகிறேன் என்றும் சொல்ல மாட்டார். அவருடன் யாருமே வர மாட்டார்கள். அவரைத் தேடியும் யாரும் வர மாட்டார்கள் எனும் போது அவரைப் பற்றி ஏதும் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாத புதிராய் இருந்தார். கொஞ்சம் நாட்கள் பழக்கத்திற்கு பிறகு ‘என்ன சார். .அடிக்கடி காணாம போயிர்றீங்க? ஏதுனாச்சும் சின்ன வீடு செட்டப் பண்ணியிருக்கீங்களா?’என்று ஜாலியாய் கேட்டேன். மையமாய் ஒரு புன்னகையை பூத்து.. “அது ஒண்ணுதான் குறைச்சல்” என்றார்.

தினமும் காலையிலும், மாலையிலும் கதையில் எந்தெந்த காட்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை நிறுத்தி நிதானமாய் சொல்லச் சொல்வார். அதில் கரெக்‌ஷன் எல்லாம் சொல்வார். பலது மொக்கையான மொக்கையாய் இருக்கும் வேறு வழியில்லாமல் அதை ஏற்றுக் கொண்டு, கரெக்‌ஷன் பண்ணிரலாம் சார் என்பார் இயக்குனர். அப்படியெல்லாம் ஒத்துக்க கூடாது நண்பா என்று அவரை கடிந்து கொள்வேன்.

“இதுக்கெல்லாம் கோச்சிக்கிட்டா ப்ரோடியூசர் கிடைக்க மாட்டான் “ என்றார் நண்பர். உண்மையும் கூட.
தயாரிப்பாளரிடம் ஒர் விநோதமான பழக்கம் இருந்தது. அரை மணிக்கொரு தரம் பால்கனி கதவை பாதி திறந்து தலையை மட்டுமே நீட்டி வலது, இடது என இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு,  மீண்டும் சாத்திவிட்டு, விட்ட இடத்திலிருந்து தொடர்வது. ஏன் அப்படி அறைகுறையாய் கதவை திறந்து பார்க்கிறார் என்று எங்களுக்குள் ஒர் கேள்வி இருந்து கொண்டேயிருந்தாலும், சில விநோத பழக்கங்களை பற்றி கேட்டு அவரை சங்கடத்தில் விடக்கூடாது என விட்டு விட்டோம்.

கதைக்கு லொக்கேஷன் பார்க்க கோபி செட்டி பாளையத்திற்கு போகலாம் என்று முடிவு செய்த போது  வேண்டாம் என்றார். இல்ல சார். .நம்ம ப்ரெண்டோட இடம் ஒண்ணு இருக்கு ப்ரீயா கிடைக்கும் என்றார் இயக்குனர். “அட என்னங்க.. எவ்வளவோ செலவு பண்றோம் லொக்கேஷனுக்காக, அதுவும் ப்ரீயா கிடைக்கும்ங்கிறதுக்காக எல்லாம் அங்க போறது எனக்கு பிடிக்கலை.. இங்கயே ஏதாச்சும் ஒரு இடம் கிராம பேஸோட பாருங்க என்றார்.

வேறொரு இடம் பார்த்து அவரை அழைத்த போது அவர் வரவில்லை நீங்களே பாருங்கள் என்றார். லொகேஷன் வேலைகள் நெருங்க நெருங்க.. அவர் அலுவலகத்துக்கு இரவில் மட்டுமே வர ஆர்மபித்தார். அலுவலகம் ஆரம்பித்த நாட்களில் அங்கே வந்த துணை நடிகையோடான பழக்கம் நெருக்கமாகியிருந்தது. பல நேரங்களில் அவளுடன் இரவுகள் கழிய ஆரம்பித்தது. வழக்கம் போல சில பல நாட்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பார். திடீரென போன் செய்து நாளைக்கு இஙக் வந்துருங்க என சொல்லி சென்னையில் அவுட் ஸ்கர்டுக்கு அழைத்து பேசுவார்.

சில நாட்கள் கழித்து, அலுவலகத்திற்கு வந்தார். வழக்கம் போல பால்கனி கதவை திறந்து பார்த்தார். கொஞ்சம் பதட்டமாய் இருந்தது போல இருந்தது. “ஆபீஸ மாத்திருவோமா” என்றார். ஏன் நல்லாத்தானே இருக்கு? என்ற போது இல்லை கொஞ்சம் வாஸ்து சரியில்லைன்னு தோணுது. அதான். சீக்கிரம் வேற ஆபீஸ் பார்ப்போம் என்றார்.  சரி என்று தலையாட்டிவிட்டு கிளம்பினோம். நாங்கள் கிளம்பிய போது துணை நடிகை உள் நுழைந்தாள். 

அடுத்த நாள் காலை அலுவலகம் பூட்டி இருந்தது. நாங்கள் போட்ட பூட்டு இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் துணைநடிகைக்கு போன் செய்தோம். ஓவென அழுதாள். என்னாச்சு என்று கேட்ட போது, “நடு ராத்திரி கதவ தடதடனு தட்டுனாங்க.. இவரு போய் பெட்டுக்கு அடியில ஒளிஞ்சிக்கிட்டாரு. என்னைய போய் திறக்க சொன்னாரு. எனக்கு பயம். போலீஸா இருக்குமோன்னு. அடநீங்க வாங்கன்னு கூப்பிட்டா வர் மாட்டேன்குறாரு. தைரியத்த வர வழைச்சுட்டு போய் திறந்தா நாலு தடி பசங்க  என்னைய தள்ளீவிட்டுட்டு உள்ளாற போய் கட்டிலுக்கு கீழ இருந்தவரை அடிச்சி நிமித்தி, கூட்டிட்டு போய்ட்டாங்க.. என்னாங்க இப்படி பண்றீங்களேன்னு கேட்டு, போலீஸுக்கு போன் பண்ணுவேன்னேன். நாங்களே கோபி செட்டி பாளையம் போலீஸ் தான்னாங்க.. ஊருல இருக்குற ரெண்டு மூணு பெரிய ஆளுங்களோட பினாமிங்கிட்டேர்ந்து டாக்குமெண்டை எடுத்து போலி பத்திரம் செஞ்சு, கை மாத்தி விட்டுட்டு, ஆள் காணாம போயிட்டானாம். ஆறு மாசமா தேடி கண்டுபிடிச்சிருக்காங்க” என்று அழுதாள்.

“சரி விடு அதுக்கு நீ ஏன் அழுவுற? நாங்க தான அழுவணூம்” என்றார் இயக்குனர்.

“அட நீ வேற டைரக்டர்.. மூணு மாசமா வாடகை, உங்க பேட்டா எல்லாம் நான் நகைய அடகுவச்சி கொடுத்தது” என்றாள் அவள் அழுவது நியாயமாய் பட்டது.


May 16, 2018

எங்கும் நிறைந்தவன் பாலகுமாரன்.


பாலகுமாரனை படித்திருக்கிறேன் என்று சொல்லும் போதே பெருமைப்படுகிறவர்கள் மத்தியில் என்னை பாலகுமாரனுக்கு தெரியும் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருந்த காலம். முதன் முதலில் ஒரு சிறுகதை தொகுப்பை படிக்க ஆரம்பித்து மிரண்டு போயிருந்தேன்.

சிறுகதையின் பெயர் நியாபகமில்லை. மனைவி கர்ப்பம் . காரணம் அவளுடய கள்ளக்காதலன். அவள் கலைக்க சொல்கிறாள். ஏன் என்று கேட்டதற்கு அந்த பையன் கருப்பு என்கிறாள். கருக்கலைப்பில் இறக்கிறாள். அவளது இறுதி ஊர்வலத்தில் ரோட்டோரம் நின்று அழும் அந்த கள்ளக்காதலனையும் பாடை சுமக்க அழைத்துகிறான் கணவன். ப்பா.. என்ன ஒரு கதை என்று மிரண்டு போய் பாலகுமாரனின் அத்தனை நாவல்களையும் படிக்க ஆரம்பித்தேன். எனது தலைவன் சுஜாதா தான் என்றாலும் இன்னொரு தலைவனாய் பாலகுமாரனை ஏற்றுக் கொண்டேன். அத்தனை புத்தகங்களை படித்தேன். இன்னும் வீட்டின் லைப்ரரியில் வைத்திருக்கிறேன்.

உனக்கென்ன
சாமி பூதம் கோயில் குளம்
ஆயிரமாயிரம் ஜாலியாய்
பொழுது போகும்...
வலப்பக்க கடல் மணலை
இடப்பக்கம் இறைத்திறைத்து
நகக்கணுக்கள் வலிக்கின்றன..
அடியே.. நாளையேனும்
மறக்காமல் வா."

எனக்கும் கவிதைகளுக்குமான தூரம் பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் என்றாலும் இன்றளவிலும் ஞாபகம் இருக்கும் ஒரே கவிதை. அதை சில பல வருடங்களுக்கு முன்னால் குறும்படமாக எடுத்துப் பார்க்கும் அளவிற்கு விருப்பம்.

அவருடன் லேண்ட் லைன் காலத்தில் தொடர்ந்து தொலைபேசியில் பேசியிருக்கிறேன். நேரில் சந்தித்து இருக்கிறேன் . சுப்ரகீத் வாசலில் நடு ராத்திரியில் காதலன் ப்ரிவியூ பார்த்துவிட்டு அவரின் வசனத்தைப் பற்றிய விமர்சித்தேன். எப்போதும் விவாதமாய் இருக்கும் பேச்சு சண்டையாய் மாறி, அதன் பின் ஏனோ நான் அவரை தொடர்பு கொள்ளவில்லை.

அவருடய அத்துனை க்ளாஸிக்களில் ஆரம்பித்து ஆன்மீகத்துக்குள் செல்லும் வரையான அத்தனை புத்தகங்களையும் படித்திருக்கிறேன்.

மீண்டும் காதல் கதை எழுதுகிறார் என்று குமுதத்தில் விளம்பரம் வந்ததும் அத்தனை கொண்டாட்டமாய் படித்தேன். மனுஷனுக்கு வயசே ஆகலைடா.. என்று சந்தோஷித்தேன். அதை விட சந்தோஷம் குமுதம் லைஃபில் அவர் எழுதும் விளம்பரம் வந்த வாரத்துலேயே என் போட்டோ போட்டு நான் எழுதப் போகும் கொத்து பரோட்டா 2.0 வுக்காக விளம்பரம் வந்ததை பார்க்கும் போது கிடைத்த சந்தோஷத்துக்கு அளவேயில்லை.

காதலன் ப்ரிவீயூ சண்டைக்கு பிறகு நான் அவருடன் பேசுவதில்லை. சில வருடங்களுக்கு பிறகு புதுப்பேட்டை படத்தில் நடிக்க வந்திருந்த போது நேரில் சந்திக்க நேர்ந்தது.. அப்போது நான் வேறு ஒரு ஷூட்டிங்கில் இருந்தேன். எதிரே போய் நின்று சிரித்தேன். அவருக்கு ஞாபகமில்லை போல. வெறும் சிரிப்புடன் கடந்துவிட்டார்.

என்ன ஆள் இவர் எத்தனை நாள் பழகியிருக்கிறோம், பேசியிருக்கிறோம், சண்டை போட்டிருக்கிறோம் என்னை பார்த்தும் பார்க்காமல் போகிறாரே என்ற கோபம் குமைந்து, அதற்கு பிறகு பல முறை அவரை நேரில் புத்தக கண்காட்சியில் எல்லாம் பார்த்திருக்கிறேன். ஏனோ பேசத் தேன்றியதே இல்லை. அவருடன் சண்டைப் போட்டதும், வெறும் சிரிப்புடனேயே கடந்து போனதுமே ஞாபகம் வரும்.

ரெண்டொரு நாளுக்கு முன்னால் நண்பர் ஒருவர் என்னை எதிர்பட்டார். சிரித்து வணக்கம் வைத்தார். யாரென்று தெரியாமல் மையமாய் சிரித்து விலகிப் போனேன். அவர் பின்னாலேயே வந்து அவரை அறிமுகப்படுத்திக் கொண்டு, மறந்துட்டீங்களா? என்று கேட்டார். சட்டென ஞாபகம் வந்துவிட்டது. எட்டு வருடங்களுக்கு முன் ஒர் படத்தை இயக்கிய இயக்குனர். கிட்டத்தட்ட ஒன்னரை வருடங்களுக்கு மேல் அவருடன் நான் பேசி பழகியிருக்கிறேன். கதை விவாதித்திருக்கிறேன். கடைசியாய் அவருக்கும் எனக்குமான கதை விவாதம் சண்டையில் முடிந்து போய் பிரிந்துவிட்டேன்.

சாரி.. சட்டுனு நியாபகம் வரலை என்று சங்கடமாய் சிரித்தேன்.
பரவாயில்லை சார். இத்தனை வருஷத்துல எத்தனையோ பேரை, பிரபலங்களை தாண்டி வந்திருக்கீங்க. உங்க வளர்ச்சிய நான் பார்த்துட்டேயிருக்கேன். இத்தனை வளர்ச்சியில என்னைய நியாபகம் வச்சிக்க வாய்ப்பில்லை. ஆனா நான் மறக்க மாட்டேன். அன்னைக்கு நீங்க சொன்னதை கேட்டிருந்தா படம் தப்பிச்சிருந்திருக்கும். என்றவர் கைபிடித்து டெய்லி உங்களை நான் நினைச்சிட்டே இருக்கேன். வாழ்கையில ஒரு சில பேர்தான் கைபிடிச்சு இத பண்ணு பண்ணாதேன்னு உபதேசமில்லாம சொல்வாங்க அதுல என் வாழ்கையில நீங்க ஒருத்தரு. என்று சொல்லிவிட்டு ஒரு டீ சாப்பிடுவோமா? என்றார். என் படத்தை எழுத்தை பற்றி விமர்சித்து பாராட்டிவிட்டு என் மொபைல் நம்பரை வாங்கிக் கொண்டு போனார்.

அவர் போன மாத்திரத்தில் எனக்கு பாலகுமாரன் தான் நினைவில் வந்தார். நானும் இவரைப் போல வழிமறித்து நின்று பேசியிருக்க வேண்டும், என்னை நியாபகம் இல்லையா? சுப்ரகீத் வாசல்ல நின்னு உங்க வசனத்தை விமர்சித்து சண்டை போட்டேனே சங்கர்.. என்று மீண்டும் அறிமுகபடுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

வாழ்க்கையில் பல விஷயங்களை மெச்சூர்டாய் டீல் செய்ய கற்றுத்தந்தவன். ஆண் அழலாமா? என்றால் அழலாம் என்று சொல்லித்தந்தவன். அதே நேரம் சக மனிதர்களை நேசிக்க கற்றுத்தந்தவன். பெண்களை வெறும் சதையாய், கொண்டாட்டமாய் பார்க்காமல் ஒரு சக மனுஷியாய் பார்க்க கற்றுத்தந்தவன், எதையும் எல்லாவற்றையும் நம் பார்வை வழியே பார்க்காமல் அவன் அப்படி செய்தான் என்றால் ஏன் அப்படி செய்ய விழைந்திருப்பான் என்று யோசித்து பார்த்து நம் எமோஷனை கட்டுப்படுத்த கற்று கொடுத்தவன். உறுத்தாமல் அறிவுரை சொன்னவன். தேடு தேடினால் தான் எல்லாமே கிடைக்கும் என்று வழி சொன்னவன். அவரிடம் பேசியிருக்க வேண்டும்.


நேற்று ராத்திரி வீட்டிற்குள் நுழைந்த போது என்ன பாலகுமாரன் வீட்டுக்கு போய்ட்டு வரலையா? என்றாள் மனைவி.

இல்லை என்றேன்.

ஏன் சுஜாதாவை செத்துப் போய் பார்க்க விரும்பலைன்னு சொன்னீங்களே அது போலவா?

மையமாய் சிரித்தேன். வாழ்க்கையில் சில பேர் நம்மிடமிருந்து விலகுவதேயில்லை. பாலகுமாரனும் அப்படித்தான். அவர் எனக்கு அறிமுகப்படுத்திய பல விஷயங்களை நான் பழகி, கடத்திக் கொண்டிருக்கிறேன். ரெண்டு நாள் முன்பு சந்தித்த இயக்குனர் மூலமாய் கற்றுக் கொண்டும் இருக்கிறேன். இதை இப்படி யோசிக்க எனக்கு பழக்கியவர் பாலகுமாரன். பாலாவுக்கு சாவு ஏது?.. எங்கும் நிறைந்தவன்.