Thottal Thodarum

Jul 19, 2023

சாப்பாட்டுக்கடை - ரமேஸ்வரம் கஃபே - பெங்களூரு

 சமீபகாலமாய் எந்த ரீல்ஸ், ஷார்ட்சை திறந்தாலும் இந்த ராமேஸ்வரம் கஃபேயை பற்றிய வீடியோ தவறாமல் இருக்கும். அதுவும் ஒரு நாளைக்கு 5 லட்சம் பில் போடும் கடை. பெரிய க்யூ நிற்கும் கடை என்றெல்லாம் வீடியோ அவர்கள் வீடியோவில் காட்டும் செந்நிற தோசை. மசாலா, இட்லி சாம்பார் எல்லாவற்றையும் பார்க்கும் போது வழக்கமான வேற லெவல் ஓட்டலை ஏத்திவிட்டு பிஸியாக்கிட்டாங்களோ என்கிற சந்தேகம் எனக்கு வராமல் இல்லை.  இவ்வளவு தூரம் வந்துவிட்டோம் போய் தான் பார்த்துவிடுவோமே என்று தேடிய போது பெங்களூருவில் மூன்று இடங்களில் இருந்தது. நாங்கள் ஜே.பி.நகர் பிராஞ்சுக்கு ஆட்டோ பண்ணிட்டு போனோம். ஆட்டோவெல்லாம் வச்சி சாப்பிடணுமா ஜி என்று உடன் வந்த நண்பர் ராமசந்திரன் கேட்டுக் கொண்டே வந்தார். எடுத்த குறிக்கோளில் கொஞ்சமும் வழுவாமல் போய் சேர்ந்த போது அத்தனை க்யூவெல்லாம் இல்லை. ஆனால் செம்ம கூட்டம். ஆனால் அது அங்கே தெரியாத வண்ணம் இடத்தை செட் செய்திருந்தார்கள். 

இத்தனைக்கும் மக்கள் நடமாட்டம் இருக்கும் இடம் தான். தனியாய் வேலட் பார்க்கிங். ஓப்பன் கிச்சன். ஆங்காங்கே சாப்பிட வைக்கப்பட்டிருந்த டேபிள்கள். கோயில் தாழ்வாரம் போல உட்கார்ந்து கொள்ளக்கூடிய அளவில் சில இடங்களில் கல்லில் அமைத்திருந்தார்கள். நாங்கள் என்ன சாப்பிடுவது என்று மெனுவை பார்த்துக் கொண்டிருக்கும் போதே மூன்று பேர் பில் போட்டுவிட, நான் வடை ஒரு ப்ளேட். இரண்டு ஓப்பன் வெண்ணெய் மசாலா தோசை, இரண்டு காப்பி ஆர்டர் செய்தேன். 

தோசைக்கு தனி பில். கூடவே ஒரு வைப்பரேட்டர் சாதனம் ஒன்றை கொடுத்து தோசை ரெடி ஆனதும் அது பச்சை ஒளிர்ந்தபடி வைப்பரேட் ஆகும் என்றார்கள். அடுத்த கவுண்டரில் இட்லியும் வடையும் சொல்லிவிட்டு, அடுத்த சில நொடிகளில் சூடான வடையும், இரண்டு வகை கெட்டி சட்னி, டிபிக்கல் உடுப்பி சாம்பாரோடு கொடுத்தார்கள். வடை மினியேச்சர் சைசில் இருந்தாலும் நல்ல கிரிஸ்பியாய் வாயில் போட்டால் கரையும் அளவுக்கு இருந்தது. கூடவே கார சட்னி, மற்றும் தேங்காய் சட்னி வேறு. தேங்காய் சட்னியோடு சாம்பாரையும் தொட்டு ஒரு சிறு துண்டை சாப்பிட்டால் வாவ் அவ்வளவு நன்றாக இருந்தது. என்ன ஆளுக்கு ஒரு வடை என்று சாப்பிட நினைத்து ஒரு செட் ஆர்டர் செய்தது நொடிகளில் காலியாகும் என்று நினைக்கவேயில்லை. இன்னொரு ப்ளேட் ஆர்டர் பண்ணிரலாமா ஜி? என்று ராமசந்திரனிடம் கேட்டேன். இருங்க தோசை எப்படி இருக்குனு பார்த்துட்டு ஆரடர் செய்வோம் என்ற போதே அவர் கையில் இருந்த டோக்கன் வைப்ரேட் ஆக ஆரம்பிக்க. ஓப்பன் மசாலா வெண்ணெய் தோசையை எடுத்து வைத்தார்கள். 

அட அட அட. ஊத்தப்பம் சைஸ் தோசை. அதன் மேல் நம்மூரில் போடுவது போல நைஸாய் அரைத்த பொடியாய் இல்லாமல் கொஞ்சம் நரநரவென பருப்பு தட்டுப்படும் அளவி/ர்கான பொடி. அதிக காரமில்லை. அதன் மேல் உருளைக்கிழங்கு மசாலா. அதை சுற்றி லேசான மல்லி கார்னிஷிங். அதன் மேல் ஒரு தேக்கரண்டு வெண்ணெய். தோசை வேறு ஆவி பறக்க இருப்பதால் அதன் சூட்டில் மேலே உள்ளே வெண்ணைய் அப்படியே மசாலாவோடு தோசையில் உறிஞ்சப்பட்டு, மெல்ல வெண்ணெயின் பளபளப்பு தோசையை ஒரு விள்ளல் பிட்டவுடன் கையில் ஒட்டிக் கொண்ட வெண்ணெயே சாட்சி. கூடவே தக்காளி குருமா வேறு கொடுத்திருந்தார்கள். ஒரு விள்ளல் கார சட்னியோடு, இனனொரு விள்ளல் சாம்பார் சட்னியோடு, அடுத்தது குருமாவோடு, அடுத்தது மசாலாவோடு என சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அட்டகாசமான சுவை. குறிப்பாய் மேலே போடப்பட்டிருந்த பொடியோடு சாப்பிடும் போது அதில் ஏற்கனவே சொன்னது போல நரநரத்த பொடி மேலும் சுவையைக் கூட்டியது. ஆனால் இதை சாப்பிட்டு முடித்த போது வயிறு போதும் என்று சொல்லிவிட்டது. நல்ல வேளை வேறு எதுவும் ஆர்டர் செய்யவில்லை. முழு தோசையை வெண்ணெய் உருக பார்த்த போது ஒரு செக்சியான பெண்ணைப் பார்த்தது போல இருந்தது.

காபி கவுண்டர் தனி. நாட்டுசக்கரை, சக்கரை போட்டு தருகிறார்கள். சக்கரையில்லா காப்பி கேட்டாலும் தருகிறார்கள். ஹைதை போல எல்லாவற்றிலும் ஏற்கனவே சர்க்கரை போட்டு எல்லாம் தருவதில்லை. ராமேச்வரம் கஃபேயின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் நான் கருதுவது. முதலில் சுவை. சாப்பிட்ட பின் வயிற்றுக்கு எந்த உபாதையும் செய்யவில்லை. இரண்டாவது ப்ராம்ப்ட் சர்வீஸ். என்ன தான் செல்ஃப் சர்வீஸ் என்று வைத்துவிட்டாலும் உணவு வகைகளை தயாரித்து கொடுப்பதாகட்டும் இடத்தை உடனடியாய் க்ளீன் செய்வ்வதாகட்டும் எனக்கு நம்மூர் சரவணபவனை தான் நியாபகப்படுத்தியது. எப்படி இருந்த சரவணபவன். ம்ஹும். இவர்கள் இன்றைய தேதிக்கு 5 லட்சம் ஒரு ப்ராஞ்சு செய்வது எல்லாம் ஆச்சர்யமே இல்லை. விலையும் அத்தனை அதிகம் இல்லை என்றே சொல்வேன். இரண்டு ஓப்பன் தோசை, வடை ஒரு ப்ளேட், மூன்று கப் சாம்பார், இரண்டு காப்பிக்கு மூன்னூற்று சொச்சம் தான் பில்.  நல்ல தரமான வெஜ் டிபன் வகையாராக்களை பெங்களூருவில் சாப்பிட விரும்பினால் ஐ ரெகமெண்ட் ராமேஸ்வரம் கஃபே.


Jul 16, 2023

சாப்பாட்டுக்கடை - வளையம்பட்டியார் மெஸ்

இந்தக் கட்டுரை வீடியோ போடுவதற்காகப் போய் ஷூட் செய்துவிட்டு, வேற லெவல், சூப்பர் என்று எழுதப்பட்டது அல்ல. 

மெஸ்கள் புகழ் பெற ஆரம்பித்தவுடன் யார் உணவகம் ஆரம்பித்தாலும் கூடவே மெஸ் என்று போட்டுக் கொள்ளும் பழக்கம் உருவாக ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. மெஸ் என்பது சுவையில் தனித்தன்மையுடன், பெரிய லக்‌ஷரியாய் இல்லாமல், மிக நியாயமான விலையில் இருப்பது. அனால் மெஸ் என்று வைத்துக் கொண்டு 5 ஸ்டார் ஓட்டல் ரேட்டை வைத்துக் கொண்டு கல்லா கட்டிக் கொண்ட்டிருக்கும் காலத்தில் புதியதாய் வளையம்பட்டியான் மெஸ். அதுவும் மெஸ்களின் தலைமயிடமான திருவல்லிக்கேணியில் நண்பர் ஆசிப் ஆரம்பிக்கப் போவதாய் சொன்னவுடன் ஆச்சர்யமாய்த்தான் இருந்தது. 

முதல் நாள் போன போது ஏகப்பட்ட கூட்டம் விருந்தினர்கள் பல பேர் வந்திருந்தார்கள். நிறைய அயிட்டங்களை வரிசைப்படுத்தி வைத்திருந்தார்கள். ஆனால் அத்தனை கூட்டத்திலும் எனக்கு மிகவும் பிடித்தது தலைக்கறியும், அதன் குழம்பும், கூடவே குடல் குழம்பை அத்தனை சுவையாய் கொடுத்திருந்தார்கள். செஃப் ஹரி நாமக்கல்காரர்.  ஆரம்பித்து சுமார் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. 

மதிய சாப்பாட்டு தினமும், மட்டன், சிக்கன், மீன் குழம்பு, தலைக்கறி குழம்பு, ரசம், தயிர் மற்றும் பொரியல் வகைகளுடன் ஆரம்பித்தது. நல்ல அரிசி, மட்டன் குழம்பு அதிக மசாலா இல்லாமல், நன்கு வெந்த மட்டனின் வாசத்துடன் கெட்டியாய் கொடுத்தார்கள். சிக்கன் குழம்பும் அதே போலத்தான். இதில் அதிர வைத்தது தலைக்கறி குழம்பு. இதுவரை சாப்பிடாதவர்கள் மிஸ் செய்யாதீர்கள். அட்டகாசமான சுவை.. காரம், மணம், சுவை எல்லாமே சரியான அளவில் டிவைன். மீன் குழம்பும் அதே போலத்தான் அதிகமான கவிச்சி வாடையில்லாமல் அளவான புளிப்புடன், காரத்துடனும் இருந்தது. கடைசியாய் கெட்டித்தயிர் ஒரு சின்ன சட்டியில் தருகிறார்கள். மொத்த அளவில்லா சாப்பாடு வெறும் 120 ரூபாய்தான். 

அடுத்து இவர்களின் ஸ்பெஷாலிட்டி சைட் டிஷ்கள். குறிப்பாய், மட்டன் சுக்கா. சின்ன பீஸ்களாய் நன்கு வெந்த மட்டன். பெப்பர் தூக்கலாய் அட்டகாசமாய் இருந்தது அடுத்து சிக்கன் பிச்சிப் போட்டது என்று ஒரு தருகிறார்கள். ஆனால் இவர்களில் வைத்திருக்கும் பெயர் சிக்கன் ஸ்ப்ரே.. ஒரு முழு பீஸ் கோழியை நன்கு மேரினேட் செய்து வைத்துவிட்டு, அதை கேட்கும் போது பிய்த்துப் போட்டு, நல்ல கிரிஸ்பாய் அதில் லேசாய் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை கலந்து நல்ல மனத்துடன் தருகிறார்கள். அட்டகாசமான சைட்டிஷ். 

சிக்கன் சிந்தாமணி. அண்ட் பள்ளிப்பாளையம் ஆஸ் யூஷுவல் குறை நிறையென ஏதுமில்லை. சிந்தாமணி சின்னச் சின்னத் துண்டுகள் நன்கு மேரினேட் செய்யப்பட்டதினால் அதன் மசாலா நன்கு உள்ளே போய் கூடுதல் சுவையை கொடுத்தது. 

போட்டி. பெரும்பாலும் பல ஹோட்டல்களில் போட்டியை அவாய்ட் செய்துவிடுவேன். ஏனென்றால் அதை ஒழுங்காய் க்ளீன் செய்து சமைக்க மாட்டார்கள் என்கிற எண்ணம். ஆனால் இவர்களின் போட்டி செம்ம. அதுவும் லேசாய் க்ரீமியாய் தருகிறார்கள். போட்டி ரசிகர்கள் அதை ஒரு சின்ன கவளம் சோற்றில் போட்டு சாப்பிட்டுப்பாருங்கள்.

மட்டன் சுக்கா, நுரையீரல், சுவரொட்ட்டி எல்லாம் இவர்களின் ஸ்பெஷல் அயிட்டஙக்ள். சுவரொட்ட்டிக்க்கு முன்பே சொல்லி வைத்தால் தான் கிடைக்கும். மீன் வகைகளில் வச்சிரம், கனவாய் எல்லாம் வைத்திருக்கிறார்கள். பாண்டிச்சேரி ஒயின்ஸ் ஷாப்பில் கொடுக்கும் கனவாய்க்கு ஈடாய் வேறு எங்கும் சாப்பிட்டதில்லை. இங்கு அதே டேஸ்டில். எறா தொக்கும் ப்ரையும் மிகச் சிறப்பு. குறிப்பாய் குண்டு குண்டாய் எறாவை போடாமல் இருந்தது மிகவும் நன்றாய் இருந்தது. 

இரவு நேரத்தில் மட்டன், சிக்கன் மற்றும் எறா தோசை வெறும் முட்டையையும், மசாலாவையும் போட்டு ஆங்காங்கே சிதறவிடப்பட்ட பீஸ்களூடன் இல்லாமல் நன்கு வெந்த பீஸ்களூடன், நல்ல தடிமனான பீஸா போல வெங்காயம் மசாலா, மற்றும் முட்டையோடு அருமையான சுவை. கூடவே கெட்டிக் குழம்பு, மட்டன் தலைக்கறி க்ரேவி, மற்றும் சிக்கன் க்ரேவியோடு, மற்றும் சட்னியும் இருக்கிறது. 

நண்டு ஆம்லெட், எறா ஆம்லெட், என விதவிதமான கடல்வாழ் உயிரினங்களை ஆம்லெட் போட்டுத் தருகிறார்கள். கிட்டத்தட்ட தோசையைப் போல இருக்கிறது. கொஞ்சம் ஆம்லெட் தனமாய் இல்லாமல் கல் தோசைப் போல இருப்பதால் அத்தனை  பாராட்டை தர முடியவில்லை. அதே போல இவர்களது ஞாயிறு ஸ்பெஷலான நாட்டுக்கோழி சீரக சம்பா பிரியாணி. சீரக சம்பா பிரியாணியின் வாசம் அருமையாய் இருந்தாலும், மசாலா அத்தனை சிறப்பாய் இல்லாததால் ரொம்பவே ப்ளண்டாக இருந்தது. குறைகளை அவர்களிடமும் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். நண்பர்கள் சில இங்கேயிருந்து ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு நேரிடையாய் அங்கேயே போய் சாப்பிடும் அளவுக்கு ரசிகர்களாகிவிட்டார்கள். 

ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் மெயின் டிஷ்ஷிலிருந்து சைட் டிஷ் வரை எல்லாமே 120-200 ரூபாக்குள் தான். நிஜமான மெஸ் தரம் மற்றும் விலையுடன். நீங்களும் டிரை பண்ணிப்பாருங்க.

வளையம்பட்டியார் மெஸ்

அக்பர் தெரு

திருவல்லிக்கேணி  

Jul 1, 2023

சாப்பாட்டுக்கடை - குக்கிராமம்

 குக்கிராமம். பெயரே வித்யாசமாய் இருக்க அண்ணாநகரில் இருக்கிறது என்றார்கள். முழுவதும் ஆர்கானிக் உணவு மட்டுமே என்றிருக்க முதல் பயமே விலை வச்சி செய்யப் போறாங்க என்பதுதான்.  இடம் ஒரு சின்ன பார்க் போல இருந்தது. ஒரு பழைய பில்டிங்கில் உள்ளே ஆர்கானிக் பொருட்களின் ஸ்டோராகவும், வெளியே உணவகமாகவும் செயல்பட்டுக் கொண்டிருந்தது. உள்ளே நுழையும் முன்னே வாசலில் ஒரு கோயில் மணி தொங்க விட்டிருந்தார்கள். வழக்கமாய் பிட்ஸா கடைகளில் தான் இம்மாதிரி பாத்திருக்கிறேன். போகும்போது உணவும், உங்க பரிமாறலும் நன்றாக இருந்தது என்று மெட்டபராய் சொல்ல வைத்திருப்பார்கள். அது போல இங்கேயும் தொங்குகிறதே? என்று ஆச்சர்யமாய் உள்ளே போனேன். 

மெனு லிஸ்ட் எதிர்பார்த்ததை விட பெருசாகவே இருந்தது. முதலில் ஏதாவது ஸ்டார்டரிலிருந்து ஆரம்பிப்போம் என வெங்காயப்பூ ப்ரையில் ஆரம்பித்தோம். நல்ல ஆர்கானிக் வெங்க்கயத்தை போட்டு கிரிஸ்பியான ரிங்க் பக்கோடா வெங்காயம் வாயில் வைத்தவுடன் கரைந்ததால் அடுத்ததாய் புடலங்காய் செய்யப்பட்ட ஸ்டார்டர் ஆர்டர் செய்தோம். புடலங்காயை எப்படி அத்தனை சுவையாய் செய்ய முடியும் என்று தெரியவில்லை. நீர் சத்து உள்ள காய் அதை வெங்காயப்பூ போல போட்டுக் கொடுத்ததும் அருமையாய் இருந்தது.

அடுத்ததாய் இட்லி தக்காளி நல்லெண்ணெய் குழம்பு ஆர்டர் செய்திருந்தோம். நல்ல ஆர்கானிக் தக்காளியோடு, அது நாட்டுத்தக்காளியாய் இருக்கும் போல நல்ல புளிப்பும் அதே நேரத்தில் கொஞ்சம் காரமும் சேர்ந்திருக்க, மொத்த குழம்பையும் ஆர்கானிக் நல்லெண்ணெய்யில் சமைத்திருந்தார்கள். குழம்பு இட்லியில் ஊறியிருக்க, மெல்ல தக்காளி மற்றும் நல்லெண்ணெய் மணமும் நாசியில் ஏற அட்டகாசமான ஒரு அனுபவத்தை கொடுத்தது. நல்லெண்ணெய்ய்யின் சுவை அடடா

பூரி என மில்லட் பூரி வகைகள் வைத்திருந்தார்கள். வழக்கமான பூரிக்கு கொடுக்கும் கிழங்குதான். மில்லட் பூரி என்பதைத் தாண்டி ஒன்றும் பெரிதாய் பீல் செய்ய முடியவில்லை. மில்லட் அடை அட்டகாசமாய் இருந்தது.  சைசில் சின்னதாய் இருந்தாலும் சுவையில் பெரிதாய் இருந்ததும் நான்கைந்து சட்னி வைகள் மற்றும் அவியலோடு தந்தார்கள். நல்ல சுவை. அண்ட் க்ரிஸ்பி ஆல்சோ

விதவிதமான மில்லட் தோசைகள் நிறைய மசாலா மிக்ஸ்க்களோடு தருகிறார்கள். ஏனோ எனக்கு தோசை வகைகளை சுவைத்துப் பார்க்க விருப்பம் வர வில்லை. அதற்கு காரணம் விலை என்பதாய் கூட இருக்கலாம். 120 லிருந்து 170 வரை வைத்திருக்கிறார்கள். நிச்சயமாய் நல்ல தரமான உணவை தருகிறார்கள். எல்லா அயிட்டங்களிலும் பெஸ்ட் தக்காளி ந்ல்லெண்ணெய் குழம்பு தான். டிவைன். கிளம்பி வரும் போது வாசலில் தொங்கிய மணி அடிக்க கை தானாகவே  நீண்டு கயிற்றைப் பிடித்து அடித்தது.