Thottal Thodarum

Oct 30, 2018

தமிழ் சினிமா இன்றைய நிலை.

தமிழ் சினிமா இன்றைய நிலை.
புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியாக ஆரம்பித்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், தமிழ் சினிமாவின் நிலை எப்படி இருக்கிறது என்று கேட்டீர்களானால், ரெண்டு மாதத்திற்கு முன் என்ன நிலையோ அதை விட கொஞ்சம் மோசம் என்றே சொல்ல வேண்டும். சென்ற வாரம் ரிலீஸான மெர்க்குரி, முந்தல் போன்ற படங்களின் வசூல் நிலை மோசம் என்பதுதான் தகவல். படம் வெளியான பிறகு அதன் தகுதிகேற்ப படத்தின் வசூல் அமைவது ஒன்றும் தவறில்லை. ஆனால் பிரபல இயக்குனரின் படம் ஒன்று வெளியாகும் போது அட்லீஸ்ட் மல்ட்டிப்ளெக்ஸுகளிலாவது நல்ல ஓப்பனிங் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கொஞ்சம் கூட அம்மாதிரியான விஷயம் நடக்க வில்லை. என்பதை பார்க்கும் போது பயமாகவே இருக்கிறது.

இந்த வாரம் வெளியான தமிழ் படங்கள் தியா, பக்கா, பாடம் ஆகியவை. கூடவே ரெண்டு மலையாள படங்கள், ஹாலிவுட் படமான அவெஞ்சர்ஸ். மக்கள் திரைப்படம் பார்க்கவே விரும்பவில்லையோ, என்று சந்தேகப்படும் காலத்தில், அவெஞ்சர்ஸ் வெளியான அத்துனை திரையரங்குகளிலும் காலைக் காட்சியே கிட்டத்தட்ட ஹவுஸ்புல். ஆனால் வெளியான தமிழ்சினிமாவின் நிலை மிகப் பரிதாபம். படத்தின் கண்டெண்ட் ஒரு பக்கம் நன்றாக இல்லை என்ற கருத்து இருந்தாலும், அவென்சர்ஸுக்கு கிடைத்த ஓப்பனிங்கில் பத்து சதவிகிதம் கூட இல்லை என்றே சொல்ல வேண்டும். இதில் படம் வேறு சரியில்லை என்று வெளிவந்தவர்களும், விமர்சகர்களும் சொல்லிவிட்ட படியால். இப்படங்களின் எதிர்காலம் பெரிய கேள்விக்குறியாகியிருக்கிறது. எனக்கென்னவோ எல்லா ஊர்களிலும் பத்து பர்செண்டுக்கு உள்ளான பார்வையாளர்கள் அனைவரும் இணையத்தில் விமர்சனம் செய்கிறவர்களாய் இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்றே தோன்றுகிறது.

ஒரு படத்திற்கு அதிகபட்சம் 350 தியேட்டர்கள் என்று சொன்னார்கள். ஆனால் வழக்கம் போல சென்ற வாரம் ரிலீசான முந்தல், இந்த வார பாடம் போன்றவைகளுக்கு வழக்கம் போல தியேட்டர்களே இல்லை என்ற நிலைமை தான். சிறு முதலீட்டு படங்களுக்கு தியேட்டர் கிடைக்க வழி செய்வது என்ற கொள்கை என்னவானது என்றே தெரியவில்லை. அது சாத்தியம் இல்லை என்றே கூட தோன்றுகிறது.

தியேட்டர் அதிபர்கள் அட்வான்ஸோ, எம்.ஜியோ கொடுக்க முடியாது என்று முடிவான பிறகு, தியேட்டர் வருமானத்தில் வரும் அவர்களது ஷேர் மட்டுமே அவர்களது வருமானம் என்று ஆகும் போது, நிச்சயம் மக்கள் கூட்டம் அதிகம் வரும் என்ற நம்பிக்கை உள்ள திரைப்படங்களை மட்டுமே வெளியிட ஆசைப்படுவார்கள். ஏனென்றால் அப்படியான படங்களை வெளியிட்டால் தான் பார்க்கிங், டிக்கெட் மூலம் கிடைக்கும் ஷேர், புக் மைஷோ போன்ற டிக்கெட் விற்கும் நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் ஒரு டிக்கெட்டுக்கான புக்கிங் சார்ஜில் பங்கு, காண்டீன் வியாபாரம் என பல வழிகளில் பணம் பார்க்க முடியும். புதிய நடிகர்கள் சிறு முதலீட்டு திரைப்படங்களை வெளியிட்டால், அம்மாதிரியான பலவிதமான வருமானங்கள் வரவே வராது. படம் நன்றாக இருக்கிறது என்ற டாக் வரும் வரை காத்திருந்து தியேட்டர் நடத்த வேண்டிய நிலை அவர்களுக்கு இல்லை. ஏனென்றால் டிக்கெட் வருமானம் மட்டுமே தான் இருக்கும் பட்சதில் அதுவும் விற்கும் டிக்கெட்டுக்கு ஏற்பத்தான் வருமானம் என்று இருக்கும் பட்சத்தில் பெரிய படங்களை வெளியிட்டால் மட்டுமே லாபம் பார்கக் முடியும். இல்லாவிட்டால் வாடகை கொடுத்து ஓட்ட சொன்னால் கூட கொஞ்சம் யோசிக்கத்தான் செய்வார்கள். வாடகை வாங்கி படம் போட்டாலும், பல தியேட்டர்களீல் கேண்டீனை வாடகைக்கு விட்டிருப்பார்கள். கூட்டம் வராத படத்தை போட்டு ஆட்கள் வரவில்லை என்றால் காண்டீன்காரரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். அதனால் தயாரிப்பாளர் சங்கத்தின் 350 திரையரங்கு லிமிட் ஒர்க்கவுட் ஆகும் என்றே தோன்றவில்லை.


இந்த வாரம் செங்கல்பட்டு ஏரியாவில் உள்ள ஒர் ரெட்டை திரையரங்கில் அவென்செர்ஸ் ஒரு அரங்கிலும், பக்கா, தியாவை ஒர் திரையரங்கில் ரெண்டிரண்டு ஷோக்களாய் பிரித்துக் கொடுத்திருந்தனர். தமிழ் படங்களுக்கு முதல் நாளில் கிடைத்த வரவேற்பைப் பார்த்தவர்கள். அடுத்த நாளே அவென்சர்ஸை எல்லா அரங்குகளிலும் வெளியிட்டுவிட்டார்கள். சனி, ஞாயிறு கல்லாவை கட்ட இதை விட சிறந்த வழி கிடையாது. இந்த ஆங்கிலப்படம் குழந்தைகளை சரியாக டார்கெட் செய்து, விளம்பரப்படுத்தப்பட்டு, வெளியாகியிருக்கிறது. இப்படம் பற்றிய அறிவோ, மார்வலின் படங்கள் பற்றிய அறிவோ கொஞ்சம் கூட இல்லாமல் வேறு வழியே இல்லாமல் குடும்பம் குடும்பமாய் மக்கள் தம்தம் குழந்தை குட்டிகளோடு படம் பார்க்க வருகிறார்கள். எனவே படம் பார்க்க மக்கள் தயாராக்த்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான கொண்டாட்டத்தை அளிப்பதற்கான படங்கள் தான் இல்லை என்கிற போது, எப்படி மக்களால் குறைந்த அளவே தெரியப்பட்ட, அல்லது சுத்தமாய் தெரியப்படாமலேயே இருக்கும் படங்கள் நாங்கள் வெளியிட முடியும் என்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். 

Oct 23, 2018

#Me Too

உலகெங்கும் மீடூ கூக்குரல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இது தேவையானதும் கூட. ஏன் லேட்டாய் சொன்னாய் போன்ற கேள்விகளுக்கு பதிலாய், அட்லீஸ்ட் இப்பவாவது சொல்ல வழி பிறந்திருக்கிறதே என்று சந்தோஷப்பட வேண்டிய நேரம். எனக்கு நெருக்கமான தோழிகள் சில பேருக்கு இம்மாதிரியான பாலியல் தொல்லைகள் குறித்த அனுபவம் இருக்கிறது. சொல்லியும் இருக்கிறார்கள். அதே நேரத்தில் அம்மாதிரியான அனுபவங்கள் கிடைக்கப் பெற்றவர்களிடமிருந்து அடுத்த முறை விலகியும் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மனதில் ஆறாத வடுவாய் உறைந்திருக்கும், அச்சம்பவத்திலிருந்து வெளிவர இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மீடூ இயக்கம் மூலமாய் அவர்களுக்கு எதிராய் கேள்விகள் எழுப்புவதும், அவர்கள் குரல் வளையை நெருக்க, நினைப்பதும் நாம் நம் சமூகத்துக்கு செய்யும் துரோகம். நம் வீட்டு பெண்களுக்கு இழைக்கும் துரோகமாகும். 

ஆனால் இதே நேரத்தில் இதை பழிவாங்கும் நடவடிக்கையாய் கையில் எடுக்கும் பெண்கள் இல்லாமல் இல்லை. தாய்மையை போற்றும் இதே இடத்தில் தான் பிறந்த குழந்தையை வீசி எறிவது முதல், கணவனை போட்டுத்தள்ளுவது வரை நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. 

எத்தனையோ நண்பர்களின் வாழ்க்கை அவர்களது மனைவிமார்களின் வரதட்சணை கொடுமை கேஸினால் மொத்த குடும்பமே நடுத்தெருவுக்கு வந்த கதையெல்லாம் உண்டு. குறிப்பாய் நான் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை அவன் குடும்பத்தை ஜெயில்ல வைக்காம விடமாட்டேன் என்று கருவறுத்து சொன்ன பெண்களை நான் பஞ்சாயத்து பேசப் போன நேரங்களில் பார்த்திருக்கிறேன். 

பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகளுக்கு ஆண்களும் வரையரையில்லாமல், கேள்வி கேட்காமல் , அருமை தோழி, செருப்படி தோழி என பின்னூட்டம் மிடுகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். 

பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்து எப்போது பேசினாலும், சில வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் ஒன்று எனக்கு ஞாபகம் வரும்.  பிரபல ஓட்டலில் உள்ள பப் அது. உயர் குடி மக்கள் மட்டுமே தென்படும் பப். இறந்து போன ஒரு தொழிலதபர் தன் அடுத்த வார பிறந்த நாள் பார்ட்டியை அங்கே  வந்திருந்த தோழிகளுக்காக உடனடியாய் கொண்டாட, நானும் அவர்களில் ஒருவனாய் அழைக்கப்பட்டேன். பிரபல நடிகர், பிரபல ஒளிப்பதிவாளரின் மனைவி, அவரது தோழி, இன்னும் பிற நடிகர்கள் என ஒர் சிறு கூட்டம். பார்ட்டி சிறப்பாக நடந்தேறி கொண்டிருந்த வேளையில், ஒளிப்பதிவாள மனைவியின் தோழி, அழுதபடி வந்தாள். 

என்னவென்று கேட்ட போது. வரும் வழியில் ரெஸ்ட் ரூமிற்கு அருகில் நின்றிருந்த இரண்டு இளைஞர்களில் ஒருவனை காட்டி அவன் தன் பின்பக்கத்தை பிடித்து அழுத்தி விட்டான் என்று மேலும் அழுதாள். வந்ததே கோபம் எங்களுக்கு.. உடனடியாய் உடனிருந்த ஒரு சில பேர் அங்கே போய் அவர்களிடம் சண்டை போட ஆர்மபிக்க, வ்ந்திருந்த நடிகர் அதீதமாய் போதையில் சண்டையிட்டு, அவனை அடிக்க ஆரம்பித்தார். உடனிருந்த நண்பர் அதை தடுக்கும் பொருட்டு அவரும் அடிபட்டார். எனக்கென்னவோ எதையும் விசாரிக்காமல் அடிதடியில் ஈடுபடுவதில் உடன்பாடு இல்லை. எனவே அவர்களை பிரித்து விட்டேன்.

நண்பனுக்கு விழுந்த அடியை தடுத்த அடி வாங்கிய நண்பர் “சார்.. அவனுக்கு இந்த எடமெல்லாம் புதுசு. நானாச்சும் கூட இங்க ரெகுலர்.  அவன் அப்படியெல்லாம் பண்ண மாட்டான்” என்று சத்தியம் செய்தான். “எந்த ஆம்பளை தன் தப்ப ஒத்துட்டிருக்கான்” என்றாள் அவள். எல்லாரையும் பிரித்து விட்டு, சண்டையினால் பப் மூட உத்தவிட்டதினால் கிளம்பினோம்.

மணி பன்னிரெண்டு கூட ஆகாததால் பார்ட்டி மூட் யாருக்கும் குறையவில்லை. அதனால் வேறு எங்கு பார்ட்டி நடக்கிறது என்று கேட்டறிந்து “இட்ஸ் ஹேப்பனிங் இன் டி.நகர்” என்று ஒர் முக்கிய ஓட்டலை சொல்ல, எல்லாரும் கிளம்பினோம். என்னுடய காரில் ஒளிப்பதிவாளர் மனைவி, அவரது தோழி, இன்னொரு நடிகர் வர, காரில் பேசிக் கொண்டே வந்தோம். இரண்டு பேருக்கும் நடுவில் உட்கார்ந்திருந்த நடிகர் இம்மாதிரியான ஆண்களின் குறியை அறுத்துவிட வேண்டும் என்றார். அதைச் சொன்னதும் சிரித்தார். தோழி. 

ஏன் சிரிக்கிறாய் என்று கேட்ட போது “விரைப்பெடுத்த குறியை அறுத்தால் சின்னதாய் இருக்குமா? பெருசாய் இருக்குமா? “ என்று கேட்டாள் அவள். அவள் பாதிக்கப்பட்ட கோபத்தில் பேசுகிறாள் என்று எல்லோரும் அமைதியாய் இருந்தோம்.

சிறிது நேர அமைதியான பயணத்திற்கு பின், “என்னதான் செஞ்சான் அவன்?” என்று தெலுங்கில் கேட்டாள் ஒளிப்பதிவாள மனைவி.  “உண்மைய சொல்லணும்னா.. அவன் ஒண்ணும் செய்யலை. இருக்குறதுலேயே நான் தான் சுமாரா இருந்தவ அந்த பார்ட்டியில. எவனுமே என்னை கண்டுக்கலை. ஏன் இப்ப பக்கத்துல உக்காந்துட்டு என் மொலைய இடிச்சிட்டு இருக்கானே இவன் கூட. சும்மா என்னை பம்ஸை பிடிச்சான் அங்க பிடிச்சான்னு சொன்னா.. கவனிப்பானு அழுதுட்டே வந்து சொன்னேன். ஆனா அடிதடி வரைக்கும் போகும்னு நினைக்கலை” என்றாள். 

எனக்கு தெலுங்கு தெரியும் என்று அவர்களுக்கு தெரியாத காரணத்தினால் இயல்பாய் பேசினார்கள். ஒளிப்பதிவாள மனைவி.. சிறிது அதிர்ச்சிக்கு பிறகு அவளும் சிரிக்க ஆரம்பித்தாள். அவர்கள் எதற்கு சிரிக்கிறார்கள் என்று புரியாமல் நடிகணும் சிரித்தான்.

இது நடந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அப்பவே அப்படி என்றால் இன்றைக்கு டிக்டாக்கில் வடசென்னை பிரபல “லூசு.. கூதி” வசனத்தை வெளிப்படையாய் டப்மாஷ் செய்கிற காலம். அதை தவறு சொல்லவில்லை. அது அவர்கள் விருப்பம்.  பட் அட்டென்ஷன் சீக்கிங் அதிகமாய் இருக்கிற காலம். எல்லா சட்டங்களையும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளக்கூடிய காலம். சரியா பயன்படுத்தினா பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும். இல்லைன்னா.. கஷ்டம் தான். இன்று வரைக்கும் அடிப்பட்ட அந்த ஆண் தனக்குண்டா பாதிப்பிலிருந்து வெளிவந்திருக்க முடியுமா? என்று கேட்டறிய வழியில்லை. ஆனால் என்னால் இன்றும் கூட வெளிவர முடியாமல் பத்து ஆண்டுகளுக்கு பிறகு எழுதுகிறேன்.  

மீடூக்கள் லேட்டாய்தான் வெளிவரும். 

Oct 12, 2018

சாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி

தேனியில் இறங்கிய மாத்திரத்தில் நண்பர் ராஜனுக்கு போன் செய்தேன். எனக்கு அறை புக் செய்திருப்பதாகவும் குளிச்சிட்டு ரெடியா இருங்க.. கீழே ஓட்டல்ல ஏதும் சாப்பிடாதீங்க நல்ல டிபன் கடைக்கு கூட்டிட்டு போறேன் என்றார். நான் போய் சேர்ந்த போது மணி ஒன்பது. பஸ் பயணம் என்பதால் இரவு உணவை தவிர்த்து விடுவேன். அதனால் வயிறு கபகபவென இருந்தது.  நான் குளிச்சு, இவரு வந்து என கொஞ்சம் அங்கலாய்ப்பாய் இருந்தாலும், என் ரசனை தெரிந்தவர் நிச்சயம் ஒர் நல்ல கடைக்குத்தான் கூட்டிப் போவார் என்று ஆவலாய் சடுதியில் குளித்து ரெடியானேன்.

ராஜனும், நண்பர் அரண்மனை சுப்புவும் வந்தார்கள். அல்லி நகர் போகும் வழியில் உள்ள ஒர் சின்னக் கடையில் நிறுத்தினார்கள். சின்னக் கடை என்றால் நிஜமாகவே சின்னக்கடைதான். மொத்தமாய் ஒரு எட்டு பேர் உட்கார்ந்து சாப்பிடக்கூடிய கடை தான் செல்வம் மெஸ்.

ப்ரைட் ரைஸ் போன்ற ஒரு சாதத்தை கட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அது என்னவென்று கேட்டேன் பொங்கல் என்றார்கள். என்னாடா இது இப்படி உதிரி உதிரியாய் பொங்கலா என்று அதை ஒரு கை பார்ப்போம் என்று ஆர்டர் செய்தோம். நெய்யும், இல்லாமல் டால்டாவும் இல்லாமல் சீரகம், மிளகு எல்லாம் போட்ட மணம் வீடும் பொங்கல். நம்மூரில் சாப்பிட்டு பழகிய பொங்கல் போல இல்லை. கூடவே தொட்டுக் கொள்வதற்கு நல்ல சாம்பார். கார சட்னி, தேங்காய் சட்னி இருந்தாலும் காரச் சட்னி ஆசமோ ஆசம்.

உடன் ஆளுக்கொரு இட்லி, மற்றும் ஊத்தப்பம் பேமஸு என்ற அரண்மனை சுப்புவின் ரெக்கமெண்டேஷன் வேறு. ஊத்தப்பம் வந்தது. வாவ்.. அருமையோ அருமை.. ருசிக்கு முக்கிய காரணம் விறகடுப்பு. நன்றாக எண்ணெய் உற்றப்பட்டு, வெங்காயம் நன்கு வேகும் வரையில் ஊத்தப்பம் வேக வைக்கப்பட, எடுத்து வாயில் போட்டால் ம்ம்ம்ம்ம்.. கூட காரச்சட்னி மீண்டும் ஆசமோ ஆசம்.

நிச்சயம் தேனி பக்கம் போனால் காலை டிபனுக்கு போய் விடுங்கள். அருமையான சைவ டிபன் வகைகளுக்காக. 50 வருடங்களுக்கு மேலாக நடத்தப்படும் இந்த உணவகத்தில் கவனிப்பு மிகவும் பர்சனலாய் இருக்கிறது வருகிற அத்தனை பேரிடமும். ஒர் இஸ்லாமிய பெரியவவர் வந்து ஊத்தப்பம் ஆர்டர் செய்தார். எண்ணெய் இல்லாம.. என்றார். 

”அதுக்கு எதுக்கு ஊத்தப்பம் சாப்புடுறீய.. கொஞ்சம் இத்தா சொட்டு ஊத்தினா ஒன்னியும் ஆவாது அத்தா” என்று சொல்லியபடி இட்லிக்கு சட்னி ஊற்றினார்.