Thottal Thodarum

Jul 18, 2019

Igloo- அன்பின் கதகதப்பு


Igloo- அன்பின் கதகதப்பு
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல உலக அளவில் மனதுக்கு நெருக்கமாய், சின்னச் சின்ன உணர்வுகளை வெளிப்படுத்தும் படங்கள் இப்போதெல்லாம் அவ்வளவாக வருவதில்லை. அப்படியே வந்தாலும் சீரியல் கண்டெண்ட் என்று மிக சுலபமாய் ஒதுக்கித் தள்ளிவிட்டு அவெஞெர்ஸோ, சிங்கம் 3 பார்க்க போய்விடுகிறோம். தயாரிப்பாளர்களும் இனி இம்மாதிரியான ஆர்டிஸ்ட் படம் தான் ஓடும் என்று முடிவெடுத்து நம்மை கொலையாய் கொல்வார்கள். ஃபீல் குட் படங்கள், குடும்ப உறவுகளைச் சொல்லும் படங்கள். மிக அழுத்தமான கருக்களை கொண்ட கதைகள். சின்ன த்ரில்லர்கள் போன்றவைகள் குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாய் வியாதியை, ஆஸ்பிட்டலை அடிப்படையாய்க் கொண்டு எடுக்கப்படும் கதைக்களன்களை தொடுவதற்கு எல்லோருமே பயப்படும் படியான காலமாகிவிட்ட நிலையில், அக்டோபர் போன்ற மிகச் சில ஹிந்தி படங்கள் மெல்லிய நம்பிக்கையை கொடுக்க வரும். ஆனால் அப்படமே இயக்குனரின் பெயரால் நற்பெயர் பெற்றதேயன்றி பெரும் வசூல் எல்லாம் கிடையாது. அப்படியான இன்றைய பரபர சினிமாவில் நிறுத்தி நிதானமாய் ஒர் அழகிய தமிழ் திரைப்படம் சாரி.. தமிழ் இணையப்படம் இக்லூ. ஓ.டீ.டீ எனும் இம்மாதிரியான ப்ளாட்பார்ம்கள் தான் இனி இம்மாதிரியான படங்களுக்கு சரியான இடம்.

படத்தின் முதல் காட்சியில் காட்டப்படும் விஷுவல்களை எல்லாம் மீறி இரட்டை பெண் குழந்தைகளின் சம்பாஷணைகள் நம்மை ஈர்க்க ஆர்மபித்துவிடுகிறது. அதீத புத்திசாலித்தனமோ, அல்லது அதிகபிரசங்கித்தனமோ இல்லாத குழந்தைகளின் பேச்சு.  அவர்களுக்கும் அவர்களது அப்பனுக்குமிடையே ஆன உறவு. அதன் நெருக்கம். அதை திணிக்காமல் சொன்ன காட்சிகள் வரும் போதே எங்கே இவளது அம்மா? என்ற கேள்வியும் ஏன் காட்டப்படவில்லை என்கிற ஆர்வமும் நம்மை தொற்றிக் கொள்கிறது. அதற்கான விளக்கம் சொல்லும் காட்சி டெம்ப்ளேட்டாய் இருந்தாலும் அங்கேயிருந்து ஆரம்பிக்கிறது இயக்குனரின் எழுத்தாற்றல்.

"கேட்ட உன் அப்பன் வந்து சாத்துவானா?’
“அதுக்கு நீதானேப்பா வரணும்?”

“என்னடா காக்கா மாதிரி கல்லு போட்டு குடிக்கப் போறியா?” போன்ற மிக நுணுக்கமான நகைச்சுவைக்கும் பஞ்சமில்லாத எழுத்து தான் இப்படத்தை சுவாரஸ்யமாக்குகிறது.

எங்கேயும் க்ளீஷே காட்சிகள் இல்லை. காதலில் இருக்கும் இயல்பு. செக்ஸ், முரட்டுத்தனம். ஆட்டிட்டியூட். ஏன் நடு ராத்திரி மூணு மணிக்கு நடு ரோட்டில் காதலன் கேட்டான் என்று மாடியிலிருந்து அவளது தந்தை பார்க்கும் போது ஆடும் சால்சா ஸ்டெப்பாகட்டும். எனக்காக உன் கோபத்த விட மாட்டியா? என்று கோபித்துக் கொண்டு போய் அவனில்லாம இருக்க முடியாது என்று உருகுமிடம். பிடிவாதத்திற்காக பெண் பார்க்கும் படலத்தை ஏற்பாட்டை அம்மாவும் மகளுமாய் மிக அழகாய் கையாண்டு தோற்கடிக்கும் காட்சி. சிவாவுக்கும் ரம்யாவுக்குமிடையே இருக்கும் காதல் ஆரம்பக்காட்சிகளில் தறிகெட்டு ஓடுகிறது என்றால் பின் வரும் காட்சிகளில் நம்மை உருக வைக்கிறது. குறிப்பாய் ரம்யாவின் பக்கெட் லிஸ்டின் கடைசி காட்சி. குறிப்பாய் அவர்களுக்கு நடக்கும் உறவுக்கான காட்சி. ஒரு ஷாட்டில் இருவரும் படுத்திருக்கும் போஸிலேயே வெளிப்படுத்தியிருப்பது க்ளாஸ். எத்தனையோ சினிமாக்கள் பார்த்து இறுகிப்போன இதயத்தை உருக வைத்து கண்ணீர் வரவழைக்கிறது. அவர்களிடையே நடக்கும் கான்வர்ஷேஷன்களில் தான் எத்தனை முதிர்ச்சி.  தெளிவு. காதலர்களிடையே ஆனா அப்புறம்?அப்புறம்? போன்ற அபத்தங்களில்லாத பேச்சும். மொனாட்டனி காதல் காட்சிகளும் கொடுக்கும் சுவாரஸ்யத்தை விட இறுதிக் காட்சிகளில் அவர்களிடையே இருக்கும் அன்யோன்யமும், காதலும் க்ளாஸ். குறிப்பாய் சரக்கடிக்க சொல்லி பேசும் காட்சி.

ரம்யாவுக்கான வியாதியைப் பற்றி சொல்லி ட்ராமா பண்ண வேண்டிய இடங்களை மிக அழகாய் தவிர்த்து இதென்னடா ட்ராமா இனி இவர்கள் வாழ்க்கையே ட்ராமாவாக ஆகப் போகிறது என்பதை அடுத்து வரும் காட்சிகளில் மெலோ ட்ராமா இல்லாமல் முகத்தில் அறைந்தார்ப் போல அன்பையும், காதலையும், கோபத்தையும் இயலாமையையும் ஒருங்கே படம் நெடுக ரம்யாவோடு, சிவாவோடு பயணிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் பரத் மோகன்.

அம்ஜத், அஞ்சு குரியன் இருவரின் நடிப்பு ஆசம். குறிப்பாய் அம்ஜத்தின் ஆட்டிட்டியூட்  ரஜினி போல பேசும் முறை பாடிலேன்க்குவேஜ் என்று ஆரம்பக்க் காட்சியில் கொஞ்சம் ரக்டாக தெரிந்தாலும் மெல்ல ரம்யா மனசில் உட்கார்ந்த சிவாவாய் நம் மனதிலும் உட்காருகிறார். படமே அஞ்சு குரியனின் தோள்களில் தான் மிக அநாயசமாய் சுமக்கிறார்.  குகன் பழனியின் தொந்தரவு இல்லாத ஒளிப்பதிவு. பிரசன்னாவின் எடிட்டிங், அரோல் கரோலியின் இசை என டெக்னிக்கலி எல்லாமே பட்ஜெட் பர்பெக்ட்.

குறையாய் ஏதுமில்லையா? என்று கேட்டால் இருக்கிறது. கொஞ்சம் நாடகத்தனமான ரம்யாவின் அம்மா நடிப்பு. சில மணிரத்னம் ஸ்டைல் காட்சிகள்.  நீளத்துக்காக எழுதப்பட்ட சில காட்சிகள், மேக்கப்புடனே ரம்யா இருப்பது போன்ற என மிகக் குறைவாகவே இருக்கிறது. அதனால் என்ன? வாழ்க்கையில் எல்லா நேரமும் சுவாரஸ்யமும், கொண்டாட்டமாகவாய் இருந்துவிடும். இந்த இக்லூ படம் பார்த்து சில மணி நேரங்களுக்கு காதலில் கதகதப்பை, அன்பை, தக்க வைக்கும்.

கேபிள் சங்கர்.

Jul 13, 2019

Post Man - Web series Review - போஸ்ட் மேன் - வெப் சீரீஸ் விமர்சனம்

செலவுகளைக் குறைக்கும் தயாரிப்பாளர் சங்கம்தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து சென்ற வாரம் ஒரு அறிக்கை அதாவது இனி வரும் காலங்களில் பத்திரிக்கையாளர்கள் அழைக்கப்படும் நிகழ்ச்சிக்களுக்கு எல்லாம் அன்பளிப்பு கவர் அளிக்கப்படாது என்றும். மேலும் இனி வரும் காலங்களில் அவர்களுக்கு சாப்பாடு, விருந்துக்கு பதிலாய் டீயும்ஸ்நாக்ஸும் தான் தரப்படும் என் பீ.ஆர்.ஓ யூனியனுடன் சேர்ந்து முடிவெடுத்திருப்பதாய் தெரிவித்திருந்தார்கள்.

அது மட்டுமில்லாமல் இனி வரும் காலங்களில் யாராவது தரம் தாழ்ந்து விமர்சனம் எழுதி, அல்லது வீடியோ வெளியிட்டால் இந்த டீ காப்பிக்கூட அழைக்கப்பட மாட்டார்கள் என்றும் அதையும் மீறி விமர்சித்தால் கிரிமினல் கேஸ் போடுவோம் என்றும் சொல்லியிருந்தார்கள்.

இதில் காமெடி என்னவென்றால் இதையெல்லாம் ஆரம்பித்து வைத்தது இவர்கள் தான். முன்பு பத்திரிக்கைகளில் வேலை செய்கிறவர்களுக்கு பத்திரிக்கை சம்பளம் தரும். எனவே பத்திரிக்கையாளர்கள் செய்திகளை சேகரிப்பதற்காக அன்பளிப்பு எல்லாம் கொடுத்ததில்லை. என்ன ஸ்பெஷல் போட்டோ செஷன், கட்டுரைகள், மற்றும் பேட்டிகள் வர வழைப்பதற்காக அன்பளிப்பு கொடுத்த காலமிருந்தது. மெல்ல டிஜிட்டல் காலமாக வெப்சைட் வைத்திருக்கிறவர்கள் டிவிட்டர் பேஸ்புக், யூடியூப் அக்கவுண்ட் வைத்திருக்கிறவர்கள் எல்லாரையும் அழைக்க ஆரம்பிக்க தியேட்டரில் ஹவுல் புல் ஷோவாக ஆகிறதோ இல்லையோ ப்ரிவியூ ஷோ ஹவுஸ்புல்லாக ஆரம்பித்தது.

பத்திரிக்கைகளில் வேலைப் பார்த்து கொஞ்சம் காசு சேர்த்து ஒர் இணைய தளத்தை ஆரம்பித்து, இவர்கள் தரும் அன்பளிப்பை மட்டுமே நம்பி வாழும் இணைய தள பத்திரிக்கையாளர்கள் நூற்றுக்கும் மேலே. இவர்கள் நிலமைதான் இனி மோசம். அட்லீஸ்ட் கொஞ்ச நாளைக்காகவது. ஏனென்றால் நிச்சயம் இந்த ரூல் மீறப்படும். என்பது உறுதி.

விமர்சனம் குறித்த இவர்களது கருத்து செம்ம காமெடி. நிச்சயம் செல்ப் எடுக்காது. ஏற்கனவே கம்ப்ளெயிண்ட் கொடுத்து பேட்டியெல்லாம் கொடுத்தும் போலிஸ் ஸ்டேஷனில் கூப்பிட்டு விசாரிக்க கூட இல்லைன்னாங்க்.. ஸோ.. லெட்ஸ் ஸீ

Jul 12, 2019

Article 15


Article 15
ஆயுஷ்மான் குரானா. இந்தி திரையுலகில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு ஹீரோ. அதற்கு காரணம் இவர் தெரிந்தெடுக்கும் கதைகள். இவரது முதல் படமே கொஞ்சம் களேபரமான கதைக்களம் கொண்டதுதான். விந்து தானம் செய்கிறவரின் கதை. அதில் ஆரம்பித்து தொடர் வெற்றியில் இருக்கிற ஒர் நம்பிக்கைக்குறிய நாயகனாய் நான்கு ஹிட்டுக்கு பிறகு வரும் படம். இந்த ஆர்டிக்கள் 15. ஜாதியை வைத்து பாகுபாடு காட்டி ஒதுக்கி வைப்பது இந்திய அரசியல் அமைப்பின் படி குற்றம் என்றாலும் நம் நாட்டில் ஜாதி எப்படி புரையோடியிருக்கிறது என்பதை 2014ல் பதூனில் நடந்த கற்பழிப்பு வழக்கை அடிப்படையாய் வைத்து எடுக்கப்பட்ட மிகவும் தைரியமாய் சொல்லப்பட்டிருக்கும் கதை.

மூன்று ரூபாய் கூலி அதிகம் கேட்டு போராட்டம் செய்ததற்காக இளம் பெண்கள் மூன்று பேர் கேங் ரேப் செய்யப்பட்டு அதில் இரண்டு பேர் கொல்லப்படுகிறார்கள். இன்னொரு பெண்ணை காணவில்லை. அவர்களை ஆணவக்கொலை செய்து தூக்கிலிட்டதாய் கேஸை ஜோடித்து அவர்களது பெற்றோர்கள் மீது கேஸ் போட்டு முடிக்க பார்க்கிறார்கள். லண்டனின் படித்த அப்பாவின் ஆசைக்காக இந்தியாவில் பணி செய்ய வந்து டெல்லியில் நோ சொன்னதினால் இந்த கிராமத்துக்கு ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டு வருகிறார் ஆயூஷ்மான் குரானா. அவர் வந்த மாத்திரத்தில் இந்த ஆணவக் கொலை கேஸ் வர, இது ஆணவ கொலையில்லை என்று புரிந்து கொள்கிறார். ஒரிஜினல் குற்றவாளியை பிடிக்கப் போனால் ஏகப்பட்ட ஜாதி உள் பிரச்சனைகள். அரசாங்க தலையீடுகள். உடன் வேலை செய்கிறவர்களிடையே இருக்கும் ஜாதீய பிரிவினைகள். தாழ்த்தப்பட்ட்வர்களின் மீது கட்டவழித்துவிடும் அதிகார துஷ்பிரயோகம். என எல்லாவற்றையும் கிழித்து தொங்க விட்டிருக்கிறார்கள்.

“வெளிநாட்டில் இருக்கும் போது இந்தியா, தாஜ்மகால் என பெருமை பேசிட்டிருந்தேன். இங்க வந்து பார்க்கும் போது பெருமை பட முடியலை”

”பகுஜனு சொல்றாங்க. ஹரிஜன்னு சொல்றாங்க. ஆனா இந்த தேசத்தின் ஜன்ங்களா எங்களை எப்ப ஏத்துப்பாங்க”

“நியாயத்துக்காக எப்போதும் கெஞ்சாதே”

”உங்களுக்கு எல்லாம் ஒரு ஹீரோ தேவைப்படறான் இல்லை அதிதி?. இல்லை அயான் அவங்களுக்கு ஒரு ஹீரோ வருவான்னு வெய்ட் பண்ணக்கூடாது”

“அவங்களையெல்லாம் வைக்க வேண்டிய இடத்துல வைக்கணும் சார். இல்லாட்டி வேலை கெட்டிரும்”

”எது அவங்க இடம்?”

“நாம சொல்லி வைக்குற இடம்”

”மூணு ரூபா அதிகம் கூலி கேட்டதுனால மூணு பெண்கள் கடத்தப்பட்டு கேங்க் ரேப் செய்யப்பட்டிருக்காங்க. நீங்க குடிக்குற மினரல் வாட்டர்ல ரெண்டு சிப் வாங்க முடியும்’

இப்படியான வசனங்களே சொல்லும் படத்தின் காத்திரத்தைப் பற்றி.

ஜாதியை ஒழித்துவிட்டோம் என்று அரசியல் கட்சிகள் கூவினாலும் தேர்தல் காலங்களில் அவர்கள் ஜாதியை வைத்து செய்யும் அரசியல் டகால்டிகளையும், பேச்சுகக்ளையும் தோலுரிக்கும் தைரியம். வடநாட்டில் ஜாதி பாகுபாடு சமூதாயத்தை எத்தனை சீரழித்திருக்கிறது என்பதையும், ” இங்கே எல்லாம் அதது சரியா போய்ட்டிருக்கு. அத மாத்துறேனு குழப்பாதீங்க” என்று சொல்லும் போது அயுஷ்மான் குரானாவின் கண்களில் தெரியும் அடக்கப்பட்ட கோபம் தான் நமக்கும்.

ஸ்டேஷனில் உள்ள அத்துனை போலீஸ்காரர்களையும் அவரவர் ஜாதி குறித்து கேட்கும் போது அதில் ஒருவர் தலித். நீங்களும் காணாமல் போனவர்களின் ஜாதியும் ஒண்ணா என்று கேட்க, இல்லை அவர்கள் என் ஜாதியைவிட கீழானவர்கள் என்று பெருமையாய் சொல்லுவதை காணக் சகிக்காமல் கத்துமிடம். கூட்டு வண்புணர்வில் ஈடுபட்டது தன் பாதுகாவன் கூட என்று தெரியும் போது கிடைக்கும் அதிர்ச்சியை விட அவனது சகோதரியை வீட்டு சமையலுக்கு வைத்திருக்க, அவளிடம் சகோதரனைப் பற்றி அவன் செய்த காரியத்தைப் பற்றி சொல்லுமிடம். கற்பழிப்பு வழக்கில் மாட்டிய போலீஸ் அதிகாரி அவனது ஜுனியர் தலித் போலீஸ்காரர் அழைத்துப் போக வரும் போதும் “கக்கூஸ் கழுவ வேண்டிய நீயெல்லாம் போலீஸ் ட்ரஸ் போட்டுட்டு எனக்கு சமமா நிக்குற திமிரா?” என்று கேட்க அதற்கு அவர் கொடுக்கும் தண்டனை சாட்டையடி. மொத்த தியேட்டரும் கைத்தட்டி கொண்டாடுமிடம்.

மிக இயல்பான அண்டர் ப்ளே நடிப்பு ஆயூஷ்மான் குரானாவுடயது.

படத்தின் பெரிய பலம் நடிகர்களும், அவர்களுக்கான பாத்திரத் தேர்வுகளும். பணிக்கர் கேரக்டரில் நாசரின் ஹிந்தியும் ஆட்டிட்டியூடும் அட்டகாசம்.  படம் முழுக்க, க்ளாஸ் எடுக்காமல் புரட்சி பேசாமல் மெல்ல ஒரு புரட்சி விதையை நட்டுக் கொண்டே போகிறார்கள் இந்த திரைக்கதை எழுத்தாளர்கள். அனுபவ் சின்ஹாவின் தேர்ந்த இயக்கம் என அனைவரும் சேர்ந்து ஒர் சிறந்த படத்தை தந்திருக்கிறார்கள்.

இப்படத்தில் ஜாதிய பாகுபாடைக் குறித்து கவலைப்படும் உயர்ஜாதி இளைஞனின் பார்வையில் சொல்லப்பட்டிருப்பதை நம் தமிழக இணையர்கள் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜாதி ஒழிப்பைப் பற்றி  பேச தங்கள் ஜாதியிலிருந்து ஒருவர் சொன்னால் தான் அது காவியமாய் கொண்டாடப்படும் என்று நினைப்பதும் கூட ஆர்ட்டிக்கள் 15 படி ஜாதி பாகுபாடு பார்ப்பதாய் சட்டம் இயற்ற வேண்டும்

Jul 5, 2019

எண்டர் கவிதைகள் -28

உன்னைக் காண ஓர் நீண்ட பயணம்
ஆயிரம் காரணங்கள்
எனை வரவேற்க நீ இல்லாமல் போனதற்கு
மீண்டுமொரு நீண்ட பயணம் உனைக் காண
நீ இல்லாமலிருக்க ஆயிரம்
காரணங்களிலிருக்குமென்று 
எதிர்பார்த்தே பயணிக்கிறேன்.
அன்புதான் எத்தனை வலியை
சுமக்க பழக்குகிறது.