Thottal Thodarum

Jul 18, 2019

Igloo- அன்பின் கதகதப்பு


Igloo- அன்பின் கதகதப்பு
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல உலக அளவில் மனதுக்கு நெருக்கமாய், சின்னச் சின்ன உணர்வுகளை வெளிப்படுத்தும் படங்கள் இப்போதெல்லாம் அவ்வளவாக வருவதில்லை. அப்படியே வந்தாலும் சீரியல் கண்டெண்ட் என்று மிக சுலபமாய் ஒதுக்கித் தள்ளிவிட்டு அவெஞெர்ஸோ, சிங்கம் 3 பார்க்க போய்விடுகிறோம். தயாரிப்பாளர்களும் இனி இம்மாதிரியான ஆர்டிஸ்ட் படம் தான் ஓடும் என்று முடிவெடுத்து நம்மை கொலையாய் கொல்வார்கள். ஃபீல் குட் படங்கள், குடும்ப உறவுகளைச் சொல்லும் படங்கள். மிக அழுத்தமான கருக்களை கொண்ட கதைகள். சின்ன த்ரில்லர்கள் போன்றவைகள் குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாய் வியாதியை, ஆஸ்பிட்டலை அடிப்படையாய்க் கொண்டு எடுக்கப்படும் கதைக்களன்களை தொடுவதற்கு எல்லோருமே பயப்படும் படியான காலமாகிவிட்ட நிலையில், அக்டோபர் போன்ற மிகச் சில ஹிந்தி படங்கள் மெல்லிய நம்பிக்கையை கொடுக்க வரும். ஆனால் அப்படமே இயக்குனரின் பெயரால் நற்பெயர் பெற்றதேயன்றி பெரும் வசூல் எல்லாம் கிடையாது. அப்படியான இன்றைய பரபர சினிமாவில் நிறுத்தி நிதானமாய் ஒர் அழகிய தமிழ் திரைப்படம் சாரி.. தமிழ் இணையப்படம் இக்லூ. ஓ.டீ.டீ எனும் இம்மாதிரியான ப்ளாட்பார்ம்கள் தான் இனி இம்மாதிரியான படங்களுக்கு சரியான இடம்.

படத்தின் முதல் காட்சியில் காட்டப்படும் விஷுவல்களை எல்லாம் மீறி இரட்டை பெண் குழந்தைகளின் சம்பாஷணைகள் நம்மை ஈர்க்க ஆர்மபித்துவிடுகிறது. அதீத புத்திசாலித்தனமோ, அல்லது அதிகபிரசங்கித்தனமோ இல்லாத குழந்தைகளின் பேச்சு.  அவர்களுக்கும் அவர்களது அப்பனுக்குமிடையே ஆன உறவு. அதன் நெருக்கம். அதை திணிக்காமல் சொன்ன காட்சிகள் வரும் போதே எங்கே இவளது அம்மா? என்ற கேள்வியும் ஏன் காட்டப்படவில்லை என்கிற ஆர்வமும் நம்மை தொற்றிக் கொள்கிறது. அதற்கான விளக்கம் சொல்லும் காட்சி டெம்ப்ளேட்டாய் இருந்தாலும் அங்கேயிருந்து ஆரம்பிக்கிறது இயக்குனரின் எழுத்தாற்றல்.

"கேட்ட உன் அப்பன் வந்து சாத்துவானா?’
“அதுக்கு நீதானேப்பா வரணும்?”

“என்னடா காக்கா மாதிரி கல்லு போட்டு குடிக்கப் போறியா?” போன்ற மிக நுணுக்கமான நகைச்சுவைக்கும் பஞ்சமில்லாத எழுத்து தான் இப்படத்தை சுவாரஸ்யமாக்குகிறது.

எங்கேயும் க்ளீஷே காட்சிகள் இல்லை. காதலில் இருக்கும் இயல்பு. செக்ஸ், முரட்டுத்தனம். ஆட்டிட்டியூட். ஏன் நடு ராத்திரி மூணு மணிக்கு நடு ரோட்டில் காதலன் கேட்டான் என்று மாடியிலிருந்து அவளது தந்தை பார்க்கும் போது ஆடும் சால்சா ஸ்டெப்பாகட்டும். எனக்காக உன் கோபத்த விட மாட்டியா? என்று கோபித்துக் கொண்டு போய் அவனில்லாம இருக்க முடியாது என்று உருகுமிடம். பிடிவாதத்திற்காக பெண் பார்க்கும் படலத்தை ஏற்பாட்டை அம்மாவும் மகளுமாய் மிக அழகாய் கையாண்டு தோற்கடிக்கும் காட்சி. சிவாவுக்கும் ரம்யாவுக்குமிடையே இருக்கும் காதல் ஆரம்பக்காட்சிகளில் தறிகெட்டு ஓடுகிறது என்றால் பின் வரும் காட்சிகளில் நம்மை உருக வைக்கிறது. குறிப்பாய் ரம்யாவின் பக்கெட் லிஸ்டின் கடைசி காட்சி. குறிப்பாய் அவர்களுக்கு நடக்கும் உறவுக்கான காட்சி. ஒரு ஷாட்டில் இருவரும் படுத்திருக்கும் போஸிலேயே வெளிப்படுத்தியிருப்பது க்ளாஸ். எத்தனையோ சினிமாக்கள் பார்த்து இறுகிப்போன இதயத்தை உருக வைத்து கண்ணீர் வரவழைக்கிறது. அவர்களிடையே நடக்கும் கான்வர்ஷேஷன்களில் தான் எத்தனை முதிர்ச்சி.  தெளிவு. காதலர்களிடையே ஆனா அப்புறம்?அப்புறம்? போன்ற அபத்தங்களில்லாத பேச்சும். மொனாட்டனி காதல் காட்சிகளும் கொடுக்கும் சுவாரஸ்யத்தை விட இறுதிக் காட்சிகளில் அவர்களிடையே இருக்கும் அன்யோன்யமும், காதலும் க்ளாஸ். குறிப்பாய் சரக்கடிக்க சொல்லி பேசும் காட்சி.

ரம்யாவுக்கான வியாதியைப் பற்றி சொல்லி ட்ராமா பண்ண வேண்டிய இடங்களை மிக அழகாய் தவிர்த்து இதென்னடா ட்ராமா இனி இவர்கள் வாழ்க்கையே ட்ராமாவாக ஆகப் போகிறது என்பதை அடுத்து வரும் காட்சிகளில் மெலோ ட்ராமா இல்லாமல் முகத்தில் அறைந்தார்ப் போல அன்பையும், காதலையும், கோபத்தையும் இயலாமையையும் ஒருங்கே படம் நெடுக ரம்யாவோடு, சிவாவோடு பயணிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் பரத் மோகன்.

அம்ஜத், அஞ்சு குரியன் இருவரின் நடிப்பு ஆசம். குறிப்பாய் அம்ஜத்தின் ஆட்டிட்டியூட்  ரஜினி போல பேசும் முறை பாடிலேன்க்குவேஜ் என்று ஆரம்பக்க் காட்சியில் கொஞ்சம் ரக்டாக தெரிந்தாலும் மெல்ல ரம்யா மனசில் உட்கார்ந்த சிவாவாய் நம் மனதிலும் உட்காருகிறார். படமே அஞ்சு குரியனின் தோள்களில் தான் மிக அநாயசமாய் சுமக்கிறார்.  குகன் பழனியின் தொந்தரவு இல்லாத ஒளிப்பதிவு. பிரசன்னாவின் எடிட்டிங், அரோல் கரோலியின் இசை என டெக்னிக்கலி எல்லாமே பட்ஜெட் பர்பெக்ட்.

குறையாய் ஏதுமில்லையா? என்று கேட்டால் இருக்கிறது. கொஞ்சம் நாடகத்தனமான ரம்யாவின் அம்மா நடிப்பு. சில மணிரத்னம் ஸ்டைல் காட்சிகள்.  நீளத்துக்காக எழுதப்பட்ட சில காட்சிகள், மேக்கப்புடனே ரம்யா இருப்பது போன்ற என மிகக் குறைவாகவே இருக்கிறது. அதனால் என்ன? வாழ்க்கையில் எல்லா நேரமும் சுவாரஸ்யமும், கொண்டாட்டமாகவாய் இருந்துவிடும். இந்த இக்லூ படம் பார்த்து சில மணி நேரங்களுக்கு காதலில் கதகதப்பை, அன்பை, தக்க வைக்கும்.

கேபிள் சங்கர்.

Post a Comment

No comments: