Thottal Thodarum

Sep 28, 2018

செக்க செவந்த வானம் - விமர்சனம்


தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் வெற்றியா?


இந்தக் கேள்வியை சினிமா ஆர்வலர்கள் பலர் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். ஏனென்றால் தயாரிப்பாளர் சங்கம் ஸ்டரைக் அறிவுக்கும் போது, தியேட்டர்காரர்களும் ஸ்ட்ரைக் அறிவித்தார்கள். அவர்களது முக்கிய கோரிக்கை, தமிழக அரசின்  கேளிக்கை வரி விலக்கு, மற்றும், ஏற்கனவே ஒப்புக் கொண்ட தியேட்டர் பராமரிப்பு தொகையை உயர்த்தி அரசாணை பெறுவது போன்றவை தான். ஏற்கனவே தியேட்டரை  மூடி ஆள் வர காத்திருந்த நாட்கள் பலருக்கு நியாபகம் வந்தது ஒருபுறம் என்றால் மறுபுறம், வரிசையாய் மல்ட்டிப்ளெக்ஸை மட்டுமே வைத்துக் கொண்டிருக்கும் சிட்டி திரையரங்கு உரிமையாளர்கள், தமிழ் படம் இல்லையென்றால் என்ன? இருக்கவே இருக்கு, மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கில படங்கள் என்ற குஷன் இருக்கும் போது அதை விட மனசில்லை. அதனால் ஸ்ட்ரைக் ஆட்டத்திற்கு வர வில்லை என்று அவர்களது ஸ்டரைக் பிசுபிசுத்துப் போக முக்கிய காரணம்.
ஆனால் தயாரிப்பாளர் சங்கம் மிக வலுவாய் இம்முறை இந்த ஸ்ட்ரைக்கை நடத்தியது. வி.பி.எப் கட்டணத்தை முன்னிருத்தி ஆரம்பிக்கப்பட்டாலும்,  முறையான கணக்கு வழக்குக்காக, கம்ப்யூட்டரைஸ்ட் டிக்கெட்ங், எல்லாவற்றிலும் வெளிப்படைத் தன்மை என பல விதமான சப் டெக்ஸ்ட் கோரிக்கைகளுடன் இன்னும் அழுத்தமாய் போராட்டத்தில் குதித்தார்கள்.க்யூபுக்கு போட்டியாய் ஒன்றிரண்டு நிறுவனங்களை மாஸ்டரிங், மற்றும், ப்ரொஜெக்‌ஷனுக்காக இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். இனி மாஸ்டரிங்குக்காக க்யூப்பை நம்பி இருக்க வேண்டிய தேவையில்லை. தமிழ் தயாரிப்பாளர்கள் கவுன்சிலே செய்து கொடுக்கும் என்று அதற்குரிய கட்டணத்தை வாங்கிக் கொள்ளும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

ஈ சினிமா எனும் 1 கே ப்ரொஜக்‌ஷனுக்காக இது வரை கட்டிக் கொண்டிருந்த பணத்தில் பாதியை கட்டினால் போதும் என்று க்யூப் ஒத்துக் கொண்டிருந்தாலும், 2கே, 4கேவுக்கான கட்டணங்களில் எந்தவிதமான மாறுதல்களும் இல்லை என்றே தெரிகிறது. வி.பி.எப் கட்டணமாய் பத்தாயிரம் ஆக்கியிருப்பதாய் சொன்னாலும் எவ்வளவு தூரம் அது நிஜம் என்று தெளிவான அறிவிப்பு வெளிவரவில்லை. ஏனென்றால் தமிழகத்தில் தற்போது 1கே ஈ சினிமா மிகவும் குறைவான தியேட்டர்களிலேயே இருக்கிறது. பெரும்பாலான தியேட்டர்களில் 2கே, 4 கே என தொழில்நுட்பம் உயர்ந்த ப்ரொஜக்டர்களுக்கு க்யூப் ஏற்கனவே மாற்றியாகிவிட்ட நிலையில் 1 கேவுக்கு பணம் குறைந்து ஏதும் பெரிய புண்ணியமில்லை. அது மட்டுமில்லாமல் 2 கே வுக்கு மேலேஉள்ள விலையில் மாற்றம் செய்தால் க்யூப்புக்கு மற்ற மாநிலங்களில் வாங்கும் பணத்திற்கு பங்கம் வந்துவிடும். என்பதால் அதை அறிவிக்காமல் இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் இது வரை க்யூப், யூ.எப்.ஓ, பி.எக்ஸ்.டி, ஸ்கிராபிள், ப்ரோவி, சோனி, ஏராக்ஸ் போன்ற நிறுவனங்கள் இதற்கு முன்பு க்யூப் நிர்ணையித்த விலையையேத்தான் வாங்கிக் கொண்டிருந்தது. இந்த போராட்டத்திற்கு பிறகு ஏராக்ஸ் தன் விலையைக் குறைத்திருக்கிறது இதை முன்பே செய்திருந்தால் நிஜமான போட்டி உருவாகி இந்த பிரச்சனைக்கே முடிவு ஏற்பட்டிருக்கும்.
ஆனால் ஏராக்ஸிடம் மிக குறைந்த தியேட்டர்களே இருக்கிறது. ஆறு மாதங்களுக்குள் க்யூபின் அக்ரிமெண்ட் பிடியில் இருப்பவர்கள் விலக வாய்ப்பு உருவாகியிருக்கிறது. அதன்படி மற்ற டிஜிட்டல் ப்ரொவைடர்கள் தங்களது சிறந்த மார்க்கெட்டிங் மற்றும் செட்டப் வசதிகளை வைத்து எப்படி சமாளிக்க போகிறார்கள் என்று பார்க்க வேண்டும். க்யூப்பும் தங்கள் பங்கிற்கு இந்த ஆறு மாதங்களுக்குள் தியேட்டர் அதிபர்களை எப்படி கவரப் போகிறது என்பதை பார்க்க வேண்டும். நிச்சயம் பணபலம் கொண்ட நிறுவனம் பெரிய அளவில் இறங்கி அடிக்க வாய்ப்பு அதிகம்.

டிக்கெட்டுக்கள் ஆன்லைனில் தான் விற்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை. கேரளாவில், கர்நாடகாவில் இருப்பதைப் போல அர்சுக்கும் நேரிடையாய் எத்தனை டிக்கெட்டுகள் விற்பனையானது, அதற்கான வரி எல்லாமே வெளிப்படையாய் தெரியவரும் முறையில் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை. இதற்கு வெளிப்படையாய் பல திரையரங்கு உரிமையாளர்கள் நாங்கள் தயார். நேர்மைக்கு பெயர் போனவர்கள் எங்களது உறுப்பினர்கள் என்று கூக்குரலிட்டார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இதில் உடன்பாடே இல்லை. ஏனென்றால் தியேட்டருக்கு வரும் கூட்டம் குறைந்து கொண்டிருக்கும் வேலையில் முதல் நாள் இருநூறு டிக்கெட் விற்பனை என்றால் விநியோகஸ்தருக்கு ஏற்றார்ப் போல 50 -100 டிக்கெட் விலையை அட்ஜெஸ்ட்மெண்ட்டில் சம்பாதித்துக் கொண்டிருக்கும் பிரபல தியேட்டர்கள் பல. அட்ஜெஸ்ட்மெண்ட் பணம் மட்டுமில்லாமல், அதற்கான வரியை கணக்கு காட்ட தேவையில்லை. ஏற்கனவே வசூல் இல்லை அதனால் எம்.ஜி.தரமாட்டோம் என்று தியேட்டர் அதிபர்கள் கைதூக்கிவிட்டபடியால், அட்வான்ஸ் மட்டுமே வாங்கிக் கொண்டு படம் போடுகிற நிலையில் தியேட்டரதிபர்களுக்கு கணக்கு காட்டாமல் இருந்தால்மட்டுமே லாபம். அதிகம்.
சமீபத்தில் எங்களது பட வெளியீட்டிற்கு பிறகு எங்களது பங்கை பெரும் போது அதற்குரிய இன்புட் ஜி.எஸ்.டி டேக்ஸோடு வாங்கிக் கொள்ள இன்வாய்ஸ் எழுதி,வரியோடு வாங்க முடிகிற ஏரியா, சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாக்களில் மட்டுமே, எங்களிடம் கணக்கு சரியாய் இருக்கு, நியாயமாய் இருக்கிறோம், கம்ப்யூட்டர் மூலமாய்த்தான் டிக்கெட் கொடுக்கிறோம் என்று எப்போது அரைகூவல் விடுக்கும் ஏரியாக்களில் எல்லாம் யாருமே ஜி.எஸ்டி நம்பர் கொடுக்கவில்லை. அதற்குரிய கணக்கும் கொடுக்கவில்லை. தோராயமாய் வரிகள் போக இவ்வளவு என்றும் அதை நான் பெற்றுக் கொண்டேன் என்று வாங்கிக் கொள்ளும் முன்பே லெட்டர் கொடுத்தால் பணம் தரும் பழைய வழக்கமே இன்னமும் இருக்கிறது.


இப்படியான பட்சத்தில் பெரிய கேள்விகளோடுதான் இந்த போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. ஏற்கனவே சொன்னது போல, வி.பி.எப் கட்டணம், டிஜிட்டல் ப்ரொவைடர் ப்ரச்சனைகள் ஒரளவுக்கு தான் சரியாகியிக்கிறது. முக்கிய கோரிக்கையான வெளிப்படைத்தன்மைக்கு, அரசின் முன்பாகவே ஜூன் மாதம் வரை டைம் வாங்கியாகிவிட்டது. புக் மை ச்ஷோ, டிக்கெட் நியூ போன்ற நிறுவனங்களுக்கு ஒரே நாளில் தங்களது டிக்கெட் விற்பனை நெட்வொர்க்கை மாற்றிக் கொள்ளும் வசதியிருக்கும் இந்நாளில் இதற்கு மூன்று மாதங்கள் என்பது நேரத்தை இழுத்தடிக்கும் ஒர் உக்தி என்றே சொல்ல வேண்டும். பார்ப்போம் ஜூன் மாதத்திற்குள்ளாவது இதற்கு விடிவு கிடைக்கிறதா என்று? . இல்லாவிட்டால் காலத்திற்கு தியேட்டர்களின் ஆதிக்கத்தில் பிழைக்க வேண்டிய கட்டாயம் தயாரிப்பாளர்களுக்கு இருந்தே தீரும்..

Sep 25, 2018

சாப்பாட்டுக்கடை - பக்ரா பிரியாணி


பிரியாணிக்கடை என்றதும் ஒரு விதமான சலிப்பு கூட ஏற்படும் அளவுக்கு சென்னையெங்கும் பிரியாணி கடைகள். ஹைதராபாத் பிரியாணி, சீரக சம்பா பிரியாணி, ஆற்காடு பிரியாணி, என வகை வகையாய் பிரியாணி கடைகள். மக்களின் பாஸ்ட் புட்டாக மாறிவிட்டது பிரியாணி கடைகள். இத்தனை பிரியாணிக்களில் வெகு சில பிரியாணிக்களே பிரபலம். அதற்கு காரணம் அதன் தனிச்சுவையும் சர்வீஸும் என்றே சொல்ல வேண்டும். இப்படியான பிரியாணிப் போட்டிக் காலத்தில் புதிய பிரியாணிக்கடை பக்ரா பிரியாணி.

வடபழனியிலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் ஏறாமல், இடது பக்கம் சர்வீஸ் லேனில் நுழைந்தால் சின்னதாய் இருக்கிறது இந்த பிரியாணிக்கடை. ப்ளாக் அண்ட் வொயிட் காம்பினேஷனில் வித்யாசமான லுக்கில் ஒர் பிரியாணிக்கடை.

டேக்கவே மட்டுமே அங்கு இருக்கிறது. அதனால் சூடான மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, கோலா, என கலந்து கட்டி வாங்கி வந்தோம். அலுவலகத்துக்கு வந்து முதலில் சாப்பிட ஆரம்பித்தது மட்டன் பிரியாணியை. நன்கு வெந்த மட்டன் பீஸ்கள். நெஞ்சைக் கரிக்காத மசாலா என ஜமாய்த்தது. உடன் தொட்டுக் கொண்டு சாப்பிடக் கொடுத்த கத்திரிக்காய் அட்டகாசம். அதன் சுவை பிரியாணியை இன்னும் ஒரு வாய் எக்ஸ்ட்ரா சாப்பிட வைக்கும் என்பது உண்மை. சிக்கன் பிரியாணியும் அதே சுவையில். முக்கியமாய் ரெண்டு பிரியாணிக்கும் சுவை வித்யாசம் இருந்தது பெரிய விஷயம். பல கடைகளில் குஸ்காவை வைத்துக் கொண்டு சிக்கனோ, மட்டனோ அதை வைத்துக் கொடுத்துவிடுவார்கள்.

கோலா சற்றே பெரிய சைஸாய் இருந்தாலும், கோலாவுக்கான கிரிஸ்பினெஸ் கொஞ்சம் குறைவு. அத்தோடு மாவு அதிகம் இருந்ததாய் பட்டதால் வடை சாப்பிட உணர்வு இருந்தது. அதை பற்றி கருத்து சொல்லியிருக்கிறேன். விரைவில் சரி செய்யப்படும் என்றார் உரிமையாளர் அப்துல். இன்னமும் சுவிக்கி, ஊபர், புட் பாண்டா போன்ற புட் டெலிவரி ஆப்களில் வெளிவரவில்லை ஆதலால். இப்போதைக்கு நேரடியாய் போய்த்தான் வாங்க வேண்டும். கோடம்பாக்கம் பக்கம் போகிறவர்கள் ஒரு நடை போய் பார்த்து சாப்டு சொல்லுங்க. 

ப்க்ரா பிரியாணி
கோடம்பாக்கம் மேம்பாலம் 
சர்வீஸ் ரோடு,
வடபழனியிலிருந்து போகும் வழியில்
9600156784
044-4850557

Sep 24, 2018

கொத்து பரோட்டா 2.0-66

கொத்து பரோட்டா 2.0-66
Raju Kari Gadhi 2
முதல் பாகம் முழுவது சிறு நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டது. அதிரிபுதிரி வெற்றியின் காரணமாய் அதே தயாரிப்பாளர் இம்முறை மாமனார் மருமகளை வைத்து எடுத்திருக்கிறார்கள். நாகார்ஜுன், சமந்தாவைத்தான் சொல்கிறேன். வழக்கம் போல ஒரு தனி பங்களா. அதை விலைக்கு வாங்கி ரிஸார்ட் நடத்தும் மூன்று இளைஞர்கள். மூன்று இளைஞர்களில் ஒருவர் ஒரு பிகரை உசார் செய்து அறைக்கு போகும் போது வித்யாசமான அனுபவங்கள் கிடைக்கிறது. போர்ன் படம் பார்க்க விரும்பும் போதும், இன்னொரு இளைஞர் தன் காதலியுடன் ஸ்கைப்பில் அவரை டாப்லெஸாக காட்டு என்று கேட்கும் போதும், அமானுஷ்யங்கள் நடக்க, வியாபாரம் படுத்து விடும் என்று பயப்பட ஆர்மபிக்கிறார்கள். அப்போது வருகிறார் நம் நாகார்ஜுன். பேய் ஓட்டுகிறவர் என்று சொல்லாமல் அவரை மெண்டலிஸ்ட் என்கிறார்கள். பேசும் போதே எதிராளியின் மனங்களை படித்து, போலீஸுக்கு ஒரிஜினல் குற்றவாளிகளை பிடித்துக் கொடுக்குமளவுக்கு மிகுந்த திறமைசாலி. அவரை அழைத்துக் கொண்டு வருகிறார்கள். அங்கேயிருப்பது பேய் தானா? அப்படியானால் ஏன் அது அங்கேயிருக்கிறது. கில்மா விஷயங்கள் நடக்கும் போது மட்டும் ஏன் ஆக்ரோஷமாகிறது என்பதைப் போன்ற கேள்விகளுக்கு பதிலை கண்டுபிடிக்கிறார் நாகார்ஜுன்.

கிட்டதட்ட மெல்லிசை படமும், இந்த படமும் ஒரே கொரியன் படத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. மெல்லிசை காதல் படம், இது லவ் கம் ஹாரர் படம். அம்புட்டுத்தான் வித்யாசம். பட் படம் முழுக்க நாகார்ஜுனை பார்த்துக் கோண்டேயிருக்கலாம் போலிருக்கிறது. அம்புட்டு ஸ்மார்ட். சமந்தா அழகுப் பேய். முதல் பாகத்தில் இருந்த அளவுக்கு காமெடி பெரிசாய் எடுபடவில்லை என்றாலும், நாகார்ஜுன் படத்தை காப்பாற்றியிருக்கிறார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Raja the Great
ஜி.எஸ்.டி மற்றும் அராஜக தமிழக கேளிக்கை வரிக் கொள்கைகள் காரணமாய் தமிழ் நாட்டில் மாற்று மொழிப்படங்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருப்பதால் பாக்க முடியாமல் போன படங்களில் இதுவும் ஒன்று. அமேசான் ப்ரைம் வீடியோ புண்ணியத்தில் பார்த்தாகிவிட்டது. தீபாவளிக்கு வெளியாகி பெரும் கலக்‌ஷன் பெற்ற படம் என்பதாலும், ரவி தேஜாவின் தொடர் தோல்விகளுக்கு பிறகான வெற்றி என்பதாலும் உடனடியாய் பார்த்தாகிவிட்டது.

இதில் ரவிதேஜா கண்பார்வையற்றவர். ஆனால் அதை உணரா வண்ணம் அவரை சிறு வயதிலிருந்தே எல்லாவற்றுக்கும் ட்ரைனிங் பெற்று வளர்ந்தவர். கண் பார்வையுள்ளவர்களை விட துல்லியமாய் பல விஷயங்களை ஏன் ஓடுகிற ட்ரைனின் மேல் கூட நடப்பவர். எப்படி என்றெல்லாம் கேட்க கூடாது. தெலுங்கு படம். பட் யூஷுவல் ரவிதேஜாவின் காமெடி பட நெடுக.. செம்மையாய் போகிறது.
வழக்கமான கதை தான். நேர்மையான போலீஸ் ஆபீஸ்ர் பிரகாஷ் ராஜ் கொடூர வில்லனின் தம்பியை கொன்று விடுகிறார். அதற்காக அவரை கொன்று விட்டு எப்படி என் தம்பியை கொன்றாயோ அதே போல உன் மகளையும் கொல்வேன் என்று அவளை தேடி அலைகிறான். அவளுக்கு அப்பாவின் போலீஸ் நண்பர்கள் பாதுகாப்பு கொடுக்க, ரவி தேஜா போலீஸின் நண்பனாய் அவளை பாதுகாக்க எப்படி முயல்கிறார்? காப்பாற்றுகிறார் என்பது மீதி.

சுவரஸ்யமான கலகல டயலாக்குகள். அழகான நாயகி, விறுவிறுப்பான பைட். அதிலும் முக்கியமாய் எல்லா வில்லன்களுடன் இருட்டு அறையில் முரட்டு குத்து போல இருட்டு குடோனில் நடக்கும் காட்சிகள் அதிரிபுதிரி. தீவிர தெலுங்கு மசாலா விரும்பிகளுக்கு மட்டும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சமீபத்தில் ஆந்திராவில் நடந்த ஒரு சம்பவத்தை படித்த போது சினிமா எவ்வளவு பெரிய தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்துகிறது என்பதையும் ஏன் ஆந்திரா மக்கள் லாஜிக் இல்லாத சினிமாக்களை நம்புகிறார்கள் என்பதும் புரிய வந்தது.  தெலுங்கானாவில் உள்ள  நாகா கர்னூல்  எனும் டவுனில் வசிக்கும் நர்ஸ் சுவாதிக்கும் சுதாகர் ரெட்டி என்பவருக்கும் திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகி , ஒரு குழந்தையும் உள்ளது. இந்நேரத்தில் சுவாதிக்கும் அவருடன் பணிபுரியும் பிஸியோதெரப்பிஸ்ட்  ராஜேஷுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்களது காதலுக்கு இடையூறாய் கணவன் இருக்க, அவரை ஆட்டத்திலிருந்ஹ்து விலக்க ஒரு ப்ளான் செய்தாள் சுவாதி.

கணவருக்கு அனஸ்தீஷியா இன்ஜெக்‌ஷன் போட்டு, அவனை தூக்கிக் கொண்டு போய் மண்டையில் அடித்து கொலை செய்து, அவனது உடலை எரித்துவிட்டார்கள். கணவன் சுதாகர் ரெட்டியின் மறைவை மற்றவர்கள் உணரும் முன்பே ஒரு ஸ்மார்ட் ப்ளானை செய்ய முடிவெடுத்தாள். ராஜேஷை சுதாகராய் மாற்ற முடிவெடுத்தாள் ப்ளாஸ்டிக் சர்ஜரி மூலம்.

அதற்காக அவனின் முகத்தில் சிறிது ஆஸிட்டை ஊற்றி காயப்படுத்திவிட்டு, ஆஸ்பிட்டலில் அட்மிட் செய்துவிட்டு, உறவினர்களிடம் யாரோ முகம் தெரியாத எதிரிகள் அவரின் மீது இப்படி செய்துவிட்டார்கள் என்று அழுதிருக்கிறாள். டாக்டர்களும் ப்ளாஸ்டிக் சர்ஜரி தவிர வேறு வழியில்லை என்று முடிவு செய்து ஆப்பரேஷனுக்கு நாள் குறித்து தயாராக, எல்லாம் சுபமாய் போகும் நேரத்தில், மட்டன் சூப் மூலமாய் மாட்டிக் கொண்டார்கள்.

ரெட்டியின் உறவினர்கள் ரெட்டிக்கு மட்டன் சூப் கொடுக்கப் போக, ஒரிஜினல் ராஜேஷ் எனக்கு மட்டன் வேண்டாம் நான் வெஜிட்டேரியன் என்று சொல்ல, உறவினர்களுக்கு சந்தேகம் வந்திருக்கிறது. உடனடியாய் பிரச்சனையை கிளப்ப, சுவாதியும், ராஜேஷும், மாட்டிக் கொண்டார்கள். கேட்பதற்கு லாஜிக் இல்லாத கதையாய் தெரிந்தாலும் நிஜத்தில் இது நடந்தேறியிருக்கிறது.

டெக்னாலஜியும், படிப்பறிவும் நன்மை பயக்கிறதோ இல்லையோ? தீமையை ஈஸியாய் பயக்கிறது.
http://www.thenewsminute.com/article/how-mutton-soup-exposed-telangana-womans-plot-kill-and-swap-her-husband-73066
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
உள்ளிருப்பு போராட்டம், பொதுக்குழுவில் பிரச்சனை, நடிகர் சங்க பொறுப்பிலிருந்து பொன்வண்ணனின் ராஜினாமா என தமிழக அரசியல் களேபரத்தை விட, பரபரப்பாய் இருக்கிறது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க விஷயம். விஷாலின் அரசியல் பிரேவேசத்தினால் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் பழிவாங்கப்படுவார்கள் என்கிற கோஷம் என்னைப் பொறுத்த வரைக்கும் மொக்கையான விஷயம்தான்.  ஒரு குழு பதவிகளை ஏற்று இருக்கிறது. அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்ற இரண்டாண்டு காலம் நேரமிருக்கிறது. அது வரை அவர்களை செயல்பட விடாமல் குற்றம் குறை சொல்லி பதவியிலிருந்து தூக்க வேண்டும் என்று சொல்வதும், போராடுவதும் நியாயமானதாக தெரியவில்லை. பல வருடங்களாய் மாற்றம் என்பதே யில்லாத குழுவில் மாற்றம் வருவதற்கு நாட்கள் எடுக்கத்தான் செய்யும். அதற்காக இவர்களின் தொடர் அறிக்கைகள் எல்லாம் சரி என்று சொல்லவில்லை. மாற்றம் வர முயற்சி செய்கிறவர்களை உடனடியாய் தடுக்க வேண்டாமே என்று தான் சொல்கிறேன். லெட்ஸ் வெயிட் அண்ட் வாட்ச்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சங்கரை ஆணவக் கொலை செய்த ஆறு பேருக்கு தூக்கு தண்டனை விதித்திருக்கிறது கோர்ட். மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கோஷம் போட ஆரம்பித்துவிட்டார்கள் ஒரு புறம். இன்னொரு புறம் இவர்களுக்கு இதுதான் சரியான தண்டனை என்ற ஆதரவுக் குரலும் எழும்ப ஆரம்பித்துவிட்டது. பெற்ற மகளின் வாழ்க்கை என்றும் பாராமல் ஜாதி வெறி மட்டுமே முன்னிருத்தி சங்கரை பட்டப்பகலில் வெட்டி கொன்றது மகா கொடூரம். அந்த கொடூரத்தை தாங்கிக் கொண்டு, சங்கர் குடும்பத்துடனே வாழ்வேன் என்ற முடிவெடுத்து, கேஸை பெற்றோர்களுக்கு எதிராய் நின்று நடத்தி, தண்டனை வாங்கி கொடுக்க போராடிய கவுசல்யாவின் மன உறுதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த தீர்ப்பிலிருந்து விடுபட, அவர்கள் மேல் கோர்ட்டுக்க் போனாலும், வழக்கு தொடுப்பேனென்றும், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட தன் தாய், மாமன், ஆகியோரின் மரணதண்டனையை உறுதி செய்வேன் என்றும் சொல்லியிருக்கிறார்.

நிச்சயம் இம்மாதிரியான ஜாதி வெறியர்களுக்கு மரண தண்டனை தான் சரியான தீர்ப்பு. மரணத்துக்கு பதில் மரணம் என்பது சரி கிடையாது என்ற கொள்கை சரிதான் என்றாலும், சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றம் செய்து மரண தண்டனை கிடைப்பதற்கும், தான் என்ன செய்கிறோம்? எதற்காக செய்கிறோம் என்று அறிந்து, அதனால் வரும் பிரச்சனைகளை உணர்ந்து ஜாதிதான் முக்கியம் என அந்த வெறியில் ஒரு உயிரை எடுக்க துணிந்த குடும்பத்துக்கு அவர்களின் மரணம் மூலமாய்த்தான் வலியை உணர்த்த முடியும். அடுத்த தலைமுறைக்கு ஜாதியை விட மனித உயிர் பெரிதென புரிய வைக்க முடியும்..

ரவுடிகளை என்கவுண்டர் செய்யும் போது மனித உரிமை கோரி போராடுகிறவர்களுக்கு தெரியாது. அவர்களால் பாதிப்படையும் மக்கள் அவர்களின் சாவிற்கு பிறகு எத்தனை நிம்மதியாய் இருக்கிறார்கள் என்று. வெறும் தண்டனைகள் அதனில் இருக்கும் ஓட்டைகளை வைத்து வெளிவந்து அரசியல்வாதியாகி, மந்திரியாகும் நாட்டில் முளையிலேயே கிள்ளும் இந்த மரண தண்டனை சரி தான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



Sep 19, 2018

கும்பகோணம் டூ சென்னை

நேற்று மதியம் கும்பகோணம் டூ சென்னை மதிய பஸ். ரதி மீனாவின் ஸ்லீப்பர் கம் சீட் பஸ். 600 சொச்சம் டிக்கெட். மனசுக்கு கஷ்டமாய் தான் இருந்தது. பஸ்ஸுக்காக காத்திருந்த நேரத்தில் ஒரே கூட்டமாய் கல்லூரி பெண்கள் வர, அனைவரும் அதே பஸ்ஸுக்கு என்று தெரிந்த போது 600 சொச்சம் கஷ்டமாய் இல்லை. வண்டி ஏறி லோயர் பர்த்தில் செட்டிலாவதற்குள் “ஏய்.. நீ இங்க வாடி. நான் அங்க போறேன். அய்யோ.. ஆ.. எப்படி ஏறுறது? ம்ம்.. தனியா வா சொல்லித் தரேன்” என்று கூச்சலும் குழப்பமுமாய் களேபரமாய் இருந்தது.

இன்னொரு மஞ்சள் சூடிதார் அணிந்திருந்த மித வயது பெண் இவர்களின் அத்தனை களேபரக் கூச்சல்களையும் பார்த்து மெல்லிய சிரிப்பை உதிர்த்தபடி இருந்தாள். பக்கத்து சீட்டில் ஒருவர் வண்டியேறி அடுத்த செகண்ட் தன் ஸ்லீப்பரில் ஏறி படுத்த மாத்திரத்தில் லேசான குரட்டை விட ஆரம்பித்தார். இந்த பெண்கள் கும்பலில் தன் தாயோடு வந்திருந்த பெண் மட்டும் மிக அடக்க ஒடுக்கமாய் அம்மா பக்கத்தில் உட்கார்ந்தபடி, திரும்பித் திரும்பி தோழிகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஸ்லீக்காய் ஜீனும், கருப்பு டீ சர்டும் போட்ட இளம் பெண் மூக்கருகில் கர்சீப்பை வைத்தபடி இருந்தாள். அவளருகில் இருந்த பையில் டிபிக்கல் தமிழ் பெண் பெயரோடு சென்னை டூ தோஹா என்று எழுதியிருந்தது. அவளுக்கு போன் வந்த மாத்திரத்தில் கடகடவென முகத்தில் வைத்த கர்சீப்பை எடுக்காமல் வண்டியை விட்டு இறங்கியவள், வண்டியின் வாசலருகே காத்திருந்த வயதான பெரியவரின் கைகளை பிடித்து மிகமிக் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தாள். அவளது கைபிடியில் அதீத பாசமிருந்ததாய் பட்டது எனக்கு. பெரியவர் மிகவும் அடிப்பட்டவராய், சோகமாய் இருந்தார். கிளம்பும் போது இரண்டு கைகளை ஒரு சேர பற்றி இறுக்கமாய் பிடித்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் வண்டியேறினாள். பெரியவர் வண்டியை சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டு, கிளம்பினார். அவளுடன் அவளுக்கு ரொம்பவுமே சம்பந்தப்படாத உருவத்தில் இன் செய்யப்பட்ட பேண்ட் சட்டையுடன் மாமா களையுடன் அமர்ந்திருந்தான். ஏனோ அவள் அவனுடம் பேசவேயில்லை. திண்டிவனத்துக்கு முன் காப்பிக்கடையில் நிறுத்திய போது அவள் காப்பி குடித்துவிட்டு, கடை வாசலில் தூறலில் நின்றபடி தூரத்து பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் அவளுடன் நின்றுவிட்டு, அவளிடமிருந்து எந்தவிதமான மாறுதலும் இல்லாததால், அவர் பஸ் ஏறி அமர்ந்துவிட்டார். பஸ் டிரைவர் வரும் வரை அதே தூரத்து பார்வையோடு இருந்தாள். சென்னையில் மீனம்பாக்கம் ஸ்டாப்பில் வண்டியை விட்டு இறங்கும் போது அவள் பின்னாடியே அந்த இன் செய்யப்பட்ட மனிதரும் ஒருவருக்கு ஒருவர் பேசாமலேயே போனார்கள்.

ரயில், பஸ்களில் தூக்கம் வராமல் பாட்டு கேட்பவர்கள் தயவு செய்து ஹெட் போன் எடுத்து வரவும். இல்லாவிட்டால் படு கொடுமையாய் இருக்கிறது. அவர்களுக்கு சின்னதாய் வைத்துக் கொண்டு கேட்பதாய் தெரியும். ஆனால் பஸ்ஸில் பயண அமைதியில் ஒலிபெருக்கியை விட கொடுமையாய் ஒலி டிஸ்ட்ரப் செய்கிறது. பாடல் தெரிவுகள் பல சமயங்களில் படு கொடுமை. நேற்று மொத்தம் எட்டு பாட்டுக்கள் எதையும் நான் கேட்டதேயில்லை. தேடி ஆளை கண்டுபிடித்து ஆஃப் செய்ய சொல்லிவிட்டுத்தான் மறு வேலை பார்த்தேன்.

கல்லூரி பெண்கள் ஒரு கட்டத்தில் என் பெட்டின் மேற்பெட்டில் கூட்டம் சேர ஆரம்பித்தார்கள். ஒரே பெட்டில் ஏழெட்டு பெண்கள். தொடர்ந்து சத்தமாய், ரகசியமாய், குசுகுசுவென, சினிமா, அவன், இவன், போன், வாத்தியார், ஜொள்ளு, அவ ரொம்ப சீன் போடுறவ, அவளும் அவ ட்ரெஸும், அவனோட அவளுக்கு மேட்டர் ஆயிருச்சு. என் கிட்ட சொன்னா. ஏய்.. சத்தமா பேசாத .... அம்மா இருக்காங்க. இங்க பேசுறது அங்க எப்படீடீ கேட்கும்?. அப்படியே கேட்டாலும் அவங்க காலத்துல இதெல்லாம் பண்ணாமய இருந்திருப்பாங்க?

இவர்கள் பேச்சுக்கு நடுவே அரை மணிக்கொரு தரம் ரெண்டு மூன்று பெண்களுக்கு போன் வந்து கொண்டேயிருந்தது. “ஏய் ஆருடி?” என்ற கேள்வி போன் வந்த பெண்களிடம் கேட்கப்பட்டுக் கொண்டேயிருக்க, பெண்கள் “நான் அப்புறம் பேசுறேன் வை” என்று கடுப்படுத்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு கட்டத்தில் இவர்களின் பேச்சின் சுவாரஸ்யம் குறைந்து ஜீ5யில் சன்னிலியோனின் வாழ்க்கை வரலாறு பார்க்க போய்விட்டேன். இறங்குமிடம் வந்த போது கூட்டமாய் பெண்கள் இறங்க அந்த பெர்த்திலிருந்து எட்டு பேர் இறங்கினார்கள்.
தொடர்ந்து போன் ரீசீவ் செய்த இரண்டு பெண்கள் “இவனுங்க தொல்லை தாங்க முடியலை. கமிட்டாகுறவரைக்கும் அமைதியா இருக்குறவனுங்க.. ஆனப்புறம் பத்து நிமிஷத்துக்கு ஒரு போன் அடிச்சு என்ன பண்ணுறே? எங்க இருக்க? எந்த ஊரு? யாரோட பேசிட்டிருக்கேனு கிடைக்குற கேப்புல எங்க இவனுங்கள விட்டு ஓடிப் போயிருவோமோன்னு பயம். புஜ்ஜி. செல்லம்னு இம்சை. தாங்கலைப்பா. ” என்று அலுத்துக் கொண்டேயிருந்தாள்.

மீண்டும் அவளுக்கு போன் வர, அதை மற்றவளிடம் காட்டி “தோ. வந்திருச்சு. என்னடா வந்துட்டியா? மழை பெய்யுதா. அப்படியே ஓரமா நில்லு வந்துடறேன். பாவம். எனக்காக மழையில நினையுறே? வந்துட்டேன் செல்லம்” என்று சொல்லி போனைக் கட் செய்துவிட்டு, பக்கத்திலிருந்தவளைப் பார்த்து சிரித்தபடி பையை எடுத்து இறங்கினாள். மழையில் நினைந்தபடி நின்று கொண்டிருக்கும் அவனை நினைத்து சிரிப்பு வந்தது.

Sep 15, 2018

சாப்பாட்டுக்கடை - கூரைக்கடை (எ) விக்னேஷ் மெஸ் - தேனி

சமீபத்திய தேனி பயணத்தில் முக்கியமாய் போக வேண்டிய இடங்கள் என்று லிஸ்டில் முதலிடம் இருந்தது இந்த உணவகம். நண்பர்கள் நிறைய பேர் சொல்லியிருந்தார்கள். காலை உணவை ஒர் அருமையான 50 வருட பாரம்பரிய குட்டியூண்டு மெஸ்ஸில் முடித்துவிட்டு, வெளிப் பயணங்களை முடித்துக் கொண்டு சரியாய் ஒரு மணிக்குள் போய் சேர்ந்தோம். அந்த மெஸ்ஸைப் பற்றி விரிவாய் தனி பதிவில்.

”சீக்கிரம் போகலைண்ணா.. காலியாயிரும்ணே” என்று சொல்லிக் கொண்டே வண்டிய வேகமாய் விரட்டினார் மேற்கு தொடர்ச்சி மலை “அரண்மனை சுப்பு”. போகிற வழியில் அப்படத்தின் இயக்குனர் டீம் லீஸுக்கு எடுத்து தங்கியிருந்த வீட்டை காட்டினார். கொஞ்சம் தூரத்தில் விக்னேஷ் மெஸ்.

ஹை வே ரோட் கடை போன்ற தோற்றத்தில் தான் இருந்தது கூரைக்கடை என்கிற விக்னேஷ் மெஸ். நெருங்க நெருங்க. கோழியின் வாசனை மூக்கை துளைத்தது. 

சீக்கிரம் போயிருந்த படியால் கூட்டமில்லை. சாப்பாடு என்றதும் தலைவாழை இலை போடப்பட்டது. ஒரு கூட்டு, தயிர் வெங்காயம், வழக்கம் போல நான் வெஜ் உணவகப் பெரியல். 

நாட்டுக்கோழி ஆர்டர் செய்தோம். நல்ல தொக்காய் வந்தது. நல்லெண்ணெய் மணம் வேறு கமகமத்தது. சாதம் பரிமாறப்பட்டு, அதில் நாட்டுக்கோழி க்ரேவியை போட்டு கலந்தடித்து சாப்பிட ஆரம்பித்தோம். வாவ். நல்ல காரம், மணத்தோடு திக் கிரேவியாய் நன்கு வெந்த நாட்டுக் கோழியை பிய்த்து கலந்து சாப்பிட்டோம். டிவைன்1. தொட்டுக் கொள்ள கரண்டி ஆம்லெட். 

அடுத்த ரவுண்ட் எல்லா கிரேவிக்களோடு ஆரம்பமானது. முதலில் மீண்டும் நாட்டுக் கோழி குழம்பு. இம்முறை சாப்பிட ஆரம்பிக்கும் முன் இருங்க என்று சொல்லி, ஒரு முட்டை நல்லெண்ணெய்யை ஊற்றினார்கள். சூடான சாதத்தில் நல்ல மணம், குணம் நிறைந்த நாட்டுக்கோழி குழம்போடு, நல்லெண்ணெய்.. ஆஸமோ ஆஸம். டிவைன்2

மற்ற அயிட்டங்கள் எல்லாம் இதற்கு முன் ஈடாகாது என்பதால் நோ விவரணை. நேரடியாய் போய் சாப்பிட்டு அனுபவித்துக் கொள்ளுங்கள்

Sep 8, 2018

பேஸ்புக் போஸ்டும் ஒலக சினிமாவும்

சினிமா நண்பர் ஒருவரை சந்திக்க சென்றிருந்தேன். சில பல விஷயங்களை பேசிவிட்டு கிளம்பும் போது சமீபத்தில் வெளியாகி பேஸ்புக்கில் சூப்பர் ஹிட்டாயிருக்கும் ஒரு நல்ல படத்தைப் பற்றி பேச்சு வந்தது. எப்படி? என்றார்.
”நல்ல படம்” என்றேன்.
”நீங்க பல படம் பாக்குறவரு நீங்களே நல்ல படம்னு தான் சொல்றீங்க”
“அது என் கருத்துங்க. ஏன்னு நான் கட்டுரை எழுதியிருக்கேன்”
”எனக்கெல்லாம் உக்கார முடியலை. என் பொண்டாட்டி வாங்க போலாம்.. வாங்க போலாம்னு நச்சு. கிளம்பலாம்னு பார்த்தா பக்கத்து சீட்டுல பிரபல விமர்சகர் ஒருத்தர் நாலாவது வாட்டி பாக்குறதா சொல்லி உட்கார்ந்திருந்தாரு. எழுந்தும் வர முடியலை.
வெளிய வந்து படம் பார்த்த நாலைஞ்சு நண்பர்கள் கிட்ட கேட்டா மொகத்த ஒரு மாதிரி வச்சிக்கிட்டு “ம்ம்ம்”னு தலையாட்டினாங்க.
அது நல்ல படம் இல்லைனு சொல்ல வரலை. எனக்கு செட்டாகல. காக்கா மூட்டைய பாராட்டுனாங்க.. அத பார்த்த போது எனக்கு பிடிச்சிது. இது பிடிக்கலை அதுக்காக எனக்கு பிடிக்கலைன்னு கூட சொல்லுற சுதந்திரம் இல்லாம போயிருச்சு. சொன்னா நம்மளை முட்டாள். அறிவிலி. சினிமாவுக்கே லாயக்கில்லை. அப்படின்னு சொல்லி அவமானப்படுத்துறாங்க. உனக்கு .... சினிமா தெரியுமாங்குறாய்ங்க.
நான் என்னைக்காவது உனக்கு கன்பைட் காஞ்சனா பாத்திருக்கியான்னு கேட்டு உனக்கு தெரியலைன்னா உன்னை அவமானப்படுத்துறேனா என்ன?
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ரசனை. பிடிச்சவன் கொண்டாடிக்கட்டும். பிடிக்காதவன் நல்லாயில்லைன்னு சொல்லிட்டு போய்ட்டே இருக்கட்டும்னு விட்டுறணும். என் ரசனை தான் மேம்பட்டதுன்னு திணிக்கிறது எப்படி நியாயமாகும்?.
ரொம்பவே புண் பட்டிருக்கிறார் என்று புரிந்தது.
“சரி விடுங்க.. ரெண்டு வாரம் கழிச்சு இன்னொரு படம் இது மாதிரி வருது. நாய எல்லாம் வச்சி வருது அத கொண்டாட போயிட்டு இத விட்டுருவாங்க. ஒலகமே இப்படித்தான். என்ன எங்க எடுத்தாய்ங்களோ அங்கயே ரிலீஸாகலை. அதான் நிஜ நிலமை. இதுக்கெல்லாம் வருத்தப்படாம போய்ட்டே இருங்க.. என்றேன்.
அதெப்படிங்க சும்மா விடறது. டார்ச்சரா இல்ல இருக்கு. அதான் பார்த்தேன் நானும் பேஸ்புக்குல ஸ்டேடஸ் போட்டுட்டு வந்துட்டேன். என்னான்னு ” தமிழில் ஒர் ஒலக
சினிமான்னு” என்றார்.

வாழ்க கருத்து சுதந்திரம்.
பின்குறிப்பு : இந்த போஸ்டுக்கும் லைக் போட பயந்து இருக்கிறவர்கள் அதிகம் 

Sep 7, 2018

சாப்பாட்டுக்கடை - கருப்பையா மெஸ்

மெஸ் என்கிற பெயரில் எதை ஆரம்பித்தாலும் தமிழகத்தில், குறிப்பாய் சென்னையில் ஏகோபித்த ஆதரவை தரத் தயாராக இருக்கிறார்கள் என்றதும் ஏகப்பட்ட மெஸ்கள்முளைத்துக் கொண்டேயிருக்கிறது. அதைப் போலத்தான் இதுவும் என்று நினைத்திருந்தேன். சிவகங்கை மாவட்டத்துக்காரர்களின் உணவகம் என்றதும் நாக்கு சப்பு கொட்ட ஆரம்பித்தது.

ஃபேம் நேஷனல் மாலில் உள்ளே அமைந்துள்ள இந்த உணவகத்தின் மெனு கார்ட் போட்டைப் பார்த்ததும் உள்ளே போகத் தூண்டியது. பிச்சிப் போட்ட கோழி, வஞ்சிரம் மீன், நண்டு, மட்டன் சுக்கா என லிஸ்ட் போடப்பட்டிருக்க மெனுவில் சிக்கன், மட்டன், மீன் என மீல்ஸ் வகைகள். கூடவே சீரக சம்பா மட்டன் பிரியாணி என பரந்து விரிந்த மெனுக்கள்.

ஒரு மட்டன், ஒரு சிக்கன், மீன் மீல்ஸ் ஆர்டர் செய்தோம்.  சிக்கன் மீல்ஸில் சிக்கன்சுக்காவும், மட்டன் மீல்ஸில் சுக்காவும், மீன் மீல்ஸில் வஞ்சிரம் மீனும், அயிரை மீன் குழம்பும்  வந்தது. 

நன்கு வெந்த சின்ன துண்டுகளோடு மட்டன் சுக்கா நல்ல காரத்துடன் வைத்தார்கள். உடன் கொடுக்கப்பட்ட, மட்டன், சிக்கன், மீன் கிரேவிக்கள் கெட்டியாக இருந்தது. மிளகு அதிகம் போடப்பட்டிருந்தாலும் அந்த காரம் தேவையாகவே இருந்தது. 

சிக்கன் சுக்காவும் அதே போலதான். சாதாரண சாப்பாட்டிற்கு வைக்கும் மீன் குழம்புக்கும், மீன் சாப்பாட்டுக் குழம்புக்கும் நல்ல வித்யாசம் இருந்ததை மறுக்க முடியாது. சற்றே புளிப்பும், காரமும் தூக்கலாய் வஞ்சிரம் மீன் துண்டுகளோடு சாப்பிட்டால் வாவ்.. அருமை.

சீரக சம்பா பிரியாணி ஒன்றை ஆர்டர் செய்து பகிர்ந்துண்டோம். நன்கு வேக வைக்கப்பட்ட துண்டுகளோடு. நல்ல காரம் மணத்தோடு இருந்தது.  சிக்கன் பிரியாணி வழக்கமான பாஸ்மதி ரைஸில் கொடுக்கிறார்கள். 

மீன் சாப்பாடு, மட்டன் சாப்பாடு, சிக்கன் சாப்பாடு என எல்லா சாப்பாடும் பேக்கேஜாய் இருப்பதால் அதிகபட்சம் முன்னூறு ரூபாய்க்குள் நல்ல காரம், மணத்தோடு, சிவகங்கை மண் மணத்தோடான உணவை சுவைக்கலாம்.

அட்சயா பவன் நிறுவனத்தினர் தான் இந்த உணவகத்தை ஆர்மபித்திருப்பதால் சாப்பாட்டுடன் போடப்படும் காய்கறி வகைகள் சுவையாகவும் தினமும் வகை வகையாய் தருகிறார்கள். வழக்கமாய் நான் வெஜ் உணவங்களில் பெரும்பாலும் பீட்ரூட்டோ, நூக்கோலோதான் இருக்கும்.

ஐ ரெகமெண்ட் பிச்சிப் போட்ட கோழி, வஞ்சிரம் மீன் சாப்பாடு, மட்டன் சுக்கா. அண்ட் சீரக சம்பா மட்டன் பிரியாணி. டிவைன் வகைகளில் சேர்த்துக் கொள்ள தக்கவை.

இன்னொரு சுவையான தகவல் என்னவென்றால் சிவகங்கையில் இந்த கருப்பையா மெஸ் ஃபூயுர் வெஜ்ஜாம்.



மாலில் வந்து சாப்பிட பார்க்கிங் சார்ஜ் அழ வேண்டுமே என்று யோசிக்க வேண்டாம். ஒரு மணி நேரத்துக்கான பார்க்கிங் சார்ஜை உணவக நிர்வாகமே ஏற்றுக் கொள்கிறது.

கருப்பையா மெஸ்
ஃபேம் நேஷனல் மால்
விருகம்பாக்கம்.


Sep 6, 2018

கொத்து பரோட்டா 2.0-65

கொத்து பரோட்டா 2.0-65
கந்து வட்டி, காரணமானவர்களை அரஸ்ட் செய் என்று கூக்குரலிட்டு ஏதும் நடக்கவில்லை. எதிர்பார்த்தபடி, பிரச்சனைக்குரிய படங்களுக்கு போட்டிருந்த தடை விலகியது. பஞ்சாயத்துக்களின் வீரியம் குறைந்தது. இதனிடையில் விஷால் திடீர் அரசியல் பிரவேசம் திரையுலகினரை கலகலக்க வைத்திருக்கிறது. நடிகர் சங்க தேர்தல், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தேர்தல் என அடுத்தடுத்து ஒவ்வொரு பதவியாய் போட்டியிட்டு பெற்றவர் இப்போது ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் எம்.எல்.ஏவுக்காக போட்டியிருகிறார். கமல் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்து மெல்ல ஆழம் பார்த்துக் கொண்டிருக்க, வரும்.. ஆனா வராது என்கிற ரீதியில் போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம். இன்னும் போர் வரவில்லை என்றெல்லாம் வழக்கம் போல பத்திரிக்கைகளுக்கு தீனி போடும் அறிவிப்புகளை மட்டுமே விட்டுக் கொண்டிருக்கும் ரஜினி இவர்களுக்கிடையே விஷாலின் இந்த திடீர் அரசியல் நுழைவை பலர் ஆதரிக்கவும் பாராட்டவும் செய்திருக்கிறார்கள். இதனிடையே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களிடையே விஷாலை பதவி விலக வைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு இயக்குனர் சேரன் தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்  சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.  ஏன் விஷால் பதவி விலக வேண்டும்?.

அதற்கு அவர்கள் சொல்லும் காரணம். எந்த ஒரு சங்கமாய் இருந்தாலும் ஆளும் அரசின் அணுக்கத்தில் தான் சங்கத்தின் உறுப்பினர்களுக்கான உரிமைகளை கேட்டு பெற முடியும். அப்படியிருக்க, விஷால் எம்.எல்.ஏ பதவிக்காக ஆளும் கட்சியை எதிர்த்து போட்டியிடுகிறார். ஆளும் கட்சியை விமர்சிக்கிறார். அதனால் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக்காமல் போகும் என்ற விஷயத்தை முன் வைத்து போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார். ஒருவரின் தலைமையின் மேல் மாற்று கருத்து இருக்கும் பட்சத்தில் அவர்கள் மேல் குற்றம் சாட்டுவது ஒன்றும் தவறில்லை. ஆனால் அதே நேர்த்தில் பொதுக்குழுவில் வைத்து பேச வேண்டிய விஷயத்தை தடாலடியாய் போராட்டமாய் மாற்றி அவரை பதவியிறக்கும் முயற்சி?. இத்தனைக்கும் அவரின் அரசியல் கன்னிப் பேச்சு கூட ஆரம்பமாகவில்லை. எத்தனையோ தயாரிப்பாளர்கள் அவர்களின் திரைப்படங்கள் மூலமாய் அரசுக்கு எதிராய் பேசுகிறார்கள். அது வெற்றியும் பெருகிறது. அந்த வெற்றிக்கு காரணம் மக்களின் குரலாய் அப்படத்தின் கருத்துக்கள் இருப்பதால் தான் . இப்படியான படங்களை எடுத்து அரசின் மேல் காழ்புணர்ச்சியை ஏற்படுத்துகிறார்கள் என்று சொல்லி, அந்த தயாரிப்பாளரை சங்க உறுப்பினரிலிருந்து நீக்க போராட்டம் நடத்துவதும் இதுவும் ஒன்றே என தோன்றுகிறது.

இந்த முடிவு விஷாலுக்கு எதிரான தயாரிப்பாளர் சங்க அரசியல் ஆட்டம். ஒரு வேளை விஷால் இந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனால் தயாரிப்பாளர்களின் குரலாய் விஷால் மாற வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே இருக்கிற கருணாஸ் என்ன செய்தார் என்று இது வரை யாரும் கேட்காதற்கான காரணம் அவர் ஆளும் கட்சி என்பதாலா? அரசு மானியத்தை அறிவித்திருக்கும் நேரத்தில் இந்த முடிவு தவறு என்று ஒரு கருத்தும் இருக்க, அறிவித்த மானியத்தை அழுத்திப் பெற உங்களிலிருந்து ஒரு எம்.எல்.ஏ  உரிமையோடு கேட்க வாய்பிருக்கும் பட்சத்தில் லெட்ஸ் வெயிட் அண்ட் வாட்ச்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
7 வயது சிறுமி ஹன்சிகாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளியை அவரின் பெற்றோர்கள் போராடி அவனுக்கு கொடுக்கப்பட்டிருந்த குண்டர் சட்ட தண்டனையை விலக்கி, விடுதலை பெற்றார்கள். இதற்காக அவர்கள் சொத்துக்களை எல்லாம் விற்றுக்கூட செலவு செய்வேன் என்றும், சொல்ல, பொதுமக்களிடையே நீதித்துறையின் பால் பெரும் அதிருப்தி எழுந்தது. அப்படி விடுவிக்கப்பட்ட குற்றவாளி சில நாட்களுக்கு முன் பெற்ற தாயை பணத்துக்காக கொன்று நகையை திருடிச் சென்றிருக்கிறான். எந்த தகப்பன் தன் பிள்ளைக்காக சொத்துக்களை விற்று வெளிக் கொணர்ந்தாரோ, அதே பிள்ளையால் தன் மனைவியை இழந்திருக்கிறார். இம்மாதிரியான குற்றவாளிகளுக்கு ஜெயில் தண்டனையெல்லாம் பத்தாது. தூக்குல போடணும் என்கிற கோபம் வராமல் இல்லை.  மரண தண்டனைக்கு எதிரானவர்கள் கூட இவனைப் போல ஆட்களுக்கு கருணை காட்ட விழைவதில்லை.

பன்னிரண்டு வயதுக்குள்ளான பெண் குழந்தைகள் மீது பாயும் பாலியல் பலாத்கார செயல் நிருபிக்கபட்ட குற்றவாளிக்கு மரண தண்டனை என்கிற சட்டத்தை மத்திய பிரதேச அரசு சட்டமாக்கியிருக்கிறது. இதை அனைத்து கட்சிகளும் வர்வேற்று அதற்கான பில்லை பாஸ் செய்திருக்கிறார்கள். குழந்தைகள் மீதான குற்ற நடவடிக்கைகளை குறைக்க உயர்ந்த பட்ச தண்டனை ஒன்றே வழி என்பதை எல்லோரும் வரவேற்றிருக்கிறார்கள். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் சட்டங்கள் இருந்தாலும் அதை வளைக்க ஆயிரம் வழிகள்.இதையெல்லாம் மீறி இது போன்ற சட்டங்கள் நிச்சயம் தேவை என்றே தோன்றுகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
MIND HUNTER
நெட்பிளிக்ஸின் புதிய சீரீஸ். இந்த மைண்ட் ஹண்டர்.
Mindhunter: Inside the FBI's Elite Serial Crime Unit written by John E. Douglas and Mark Olshaker
என்கிற புத்தகத்தை அடிப்படையாய் வைத்து ஜோ பென்ஹால் உருவாக்கியது. 1977 களில் அமெரிக்க எப்.பிஐயில் உள்ள கிரிமினல் சைக்காலஜி டிபார்ட்மெண்ட்டில் வேலைபார்க்கும் ஹோல்டன் போர்ட், டென்ச் மற்றும் சைக்காலஜிஸ்ட் வெண்டி காரை சுற்றி வரும் கதை. சீரியல் கில்லர்களை சந்தித்து ஏன் அவர்கள் இப்படி மாறினார்கள்?. எது அவர்களை சீரியல் கில்லர்களாய் மாற்றியது? என்று அவர்களிடம் பேட்டியெடுத்து, அவர்களின் மனநிலையை அராய்ந்து எதிர்கால குற்றங்களை கண்டுபிடிக்க எப்படி பயன்படுத்துவது என்ற ஆராய்ச்சியில் இவர்கள் பணிக்கப்பட்டிருக்க, போர்டும், டென்சும் ஒவ்வொரு சீரியல் கில்லராய் போய் பேட்டியெடுக்க ஆரம்பிக்கிறார்கள். ஆரம்பத்தில்  கடமையாய் செய்ய ஆரம்பிக்கும் விஷயம் மெல்ல ஆழ்மனதில் அவர்களுக்கு ஒரு விதமான படபடப்பை உருவாக்கி, குற்றவாளிகளும், அவர்களின் குற்றங்களும் ஆக்கிரமிக்க தொடங்குகுறது.

சீரீஸ் முழுவதும் ரத்தக்களரியான, அதி வக்கிரமான பர்வர்டட் மைண்ட் கொண்டவர்களின் நடத்தை, குற்ற செயல்களை பற்றி எந்தவிதமான குற்ற வுணர்வும் இல்லாமல் ரசித்து, ருசித்து பேசுகிற குற்றவாளிகள் என பக்கா பரபர ஆக்‌ஷன் கோரி காட்சிகளை காட்ட ஏதுவான கதைக்களம் தான். ஆனால் இவையனைத்தையும் வெறும் வசனங்கள், நடிப்பின் மூலம் நாம் பார்க்கும் விஷுவல்களுக்கிடையே மனதினுள் தனி வீஷுவலை ஓட வைத்திருக்கிறார்கள். நம் மனக்கண்ணில் ஓடும் அந்த விஷுவல்கள் ஸ்பைன் சில்லிங்.. இதன் முதல் இரண்டு எபிசோடுகளை எழுதி தயாரித்திருப்பவர் பிரபல இயக்குனர் டேவிட் ஃபின்சர்.

ஹோல்டன் போர்டாக வரும் ஜொனாதன் கிராபின் நடிப்பு அபாரம். அப்பாவியான முகம். எதையும் ஆச்சர்யதோடும், அணுகும் முறை. குற்றவாளிகளின் பேச்சுக்கள் அவரின் உள்ளே ஊடுருவி, கேள்வி கேட்கும் முறை, எல்லாம் அட்டகாசம். அதே போல சதா சர்வகாலம் புகைத்துக் கொண்டேயிருக்கும் டென்ச் கேரக்டரின் நடிக்கும் மெக்காலனி. தேர்ந்த நடிப்பு.

சாதாரணமாய் இந்த சீரீஸை பரபரவென கடந்து போக முடியவில்லை. எப்படி கதையில் குற்றவாளிகளின் செயல்கள் பேச்சுகள் அவர்களை ஆக்கிரமித்து ஒரு விதமான மன அழுத்தத்தை கொடுத்ததோ அதே நிலை பார்க்கும் நமக்கும் ஏற்படுகிறது. ஒரு எபிசோடைப் பார்த்ததும் அடுத்ததை பார்க்க முடிவதில்லை. ஒரு விதமான அழுத்தம் நம் மனதினுள் ஓடிக் கொண்டேயிருக்கிறது. ஏனென்றால் இக்கதையில் வரும் கேரக்டர்கள் நிஜமானவர்கள். நிஜ குற்றவாளிகளின் பேச்சிலிருந்து எடுக்கப்பட்டவை. இவர்கள் உலவும் சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிற எண்ணம் நம்முள் ஏற்படும் போது வெறும் கதை மாந்தர்களாய் இவர்களை பார்க்க முடிவதில்லை. பட் டோண்ட் மிஸ்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என்னுடய தமிழ் திரைப்பட விநியோக அனுபவத்தை புத்தகமாய் சினிமா வியாபாரம் என்கிற பெயரில் 2010 ஆம் ஆண்டு புத்தகமாய் வெளியிட்டேன். இன்று வரை அது தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கான கையேடாய் வளைய வந்து கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவின் வியாபாரம், அது எப்படி நடக்கிறது? அதனுள் இருக்கும் பிரச்சனைகள் என்ன? எப்படியெல்லாம் தயாரிப்பாளரக்ள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதையெல்லாம் விவரமாய் சொல்லியிருந்தேன் படிக்கும் பழக்கம் குறைந்து போய்க் கொண்டிருக்கிற காலகட்டத்தில் விஷுவல் பதிவுக்கு தேவை இருப்பதால் அதை வீடியோ பதிவாக்கியிருக்கிறேன். 2010 எழுதப்பட்ட புத்தகத்தில் எழுதிய விஷயங்கள் தான் இதுவரையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவே தற்போதை வியாபார முறையில் புதிதாய் நூறு கோடி இருநூறு கோடி என கூவுவது எல்லாம் எப்படி தமிழ் சினிமாவில் சாத்தியம் போன்ற பல தமிழ் ச்னிமா முகத்திரையை வீடியோ பதிவாய் கிழிக்கும் முயற்சிதான் இந்த சீரீஸ். https://www.youtube.com/watch?v=1PDMeIaLZsw&t=45s
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Sep 5, 2018

Sudani From Nigeria - Malayalam film

சூடானி ஃபர்ம் நைஜீரியா

ஒவ்வொரு வாரமும் மலையாள படங்களைப் பார்க்கும் போது, எப்படி இவர்களுக்கு மட்டும் இப்படியான கதைக்களன்கள் கிடைக்கிறது என்ற யோசனை வருவதை தவிர்க்கவே முடிவதில்லை. பூமரம் ஒரு வகையான படமென்றால் சென்ற வாரம் பார்த்த சூடானி ஃபர்ம் நைஜீரியா இன்னொரு வகை. அதற்கு இன்னொரு காரணமாய் நான் நினைத்தது. அவர்களுடய விளையாட்டு, கலாச்சாரம். ஒரு பெரிய வரம்.

மலப்புரத்தில் உள்ள ”Myc Accode” எனும் டீமில் ஏழு மேட்ச் விளையாடி ஹைஜீரியாவிலிருந்து ராபின்சன் எனும் புட்பால் வீரனை அழைத்து வருகிறார்கள். அந்த டீமின் மேனேஜர் மஜீத். முப்பதுகளை கடந்து, இன்னமும் திருமணம் ஆகாமல் இருப்பவன். காரணம் பெரிய விளையாட்டு வீரனாகவும் இல்லாமல், நிரந்தர வருமானம் இல்லாதவனாகவும் இருப்பது ஒர் முக்கிய காரணம். ராபின்சன் என்னதான் தான் நைஜீரியாவிலிருந்து வந்தவன் என்று சொன்னாலும் ஊர்காரர்களைப் பொறுத்தவரை அவனைப்போன்ற ஆட்களை சூடானிலிருந்து வந்தவன் எனக் கூறி சூடானி என்றே அழைக்கிறார்கள். சிறந்த வீரனாய் இருக்கும் ராபின்சனுக்கு திடீரென ஒரு விபத்து ஏற்பட்டு, கால் முறிந்து போகிறது. டீம், மற்றும் மஜீத்தின் நிதி நிலை மிக மோசமாய் இருக்க, ராபின்சனை தன் வீட்டில் வைத்து பார்த்துக் கொள்கிறான் மஜீத்.

மஜீத்தின் வீட்டில் அவன் வயதான தாயாரும், அவளூடய இரண்டாம் புருஷன் மட்டுமே. அம்மாவின் ரெண்டாவது கல்யாணத்தினால் அவளுடனோ, அல்லது இரண்டாம் தகப்பனுடனோ சுமூகமாக இல்லை. இந்நிலையில் மஜீத்தின் அம்மாவும், ராபின்சனும் பாஷை தெரியாமலேயே நெருக்கமாகிவிட, இவனைப் பற்றி ராபின்சனுக்கும், ராபின்சனைப் பற்றி மஜீத்துக்கு தெரிய வருகிறது. ராபின்சன் அவன் நாட்டில் நடந்த சிவில் வாரில் தன் குடும்பத்தை பறி கொடுத்து, தன் இரு தங்கை மற்றும் பாட்டியுடன் கேம்பில் வசித்து வருகிறவன். இந்த மேட்ச் அவனுக்கு மிகப் பெரிய வருமானத்தை கொடுக்கும் என்று நம்பி இங்கே வந்தவன்.

இதற்கிடையில் ராபின்சன் எதிர் டீமில் உள்ளவனிடம் காசு வாங்கியதாய் தெரிய வர, மஜீத்துக்கும், ராபின்சனுக்கும் சண்டை.. வீட்டை விட்டு வெளியே அனுப்பலாம் என்று பார்த்தால் அவனை ஸ்பான்ஸர் செய்து வர வழைத்தது மஜீத்தாய் இருக்கும் பட்சத்தில் அவன் தான் பார்த்துக் கொள்ள வேண்டுமென்ற சட்டத்தை காட்ட, வேறு வழியில்லாமல் வீட்டில் இருக்க வைக்கிறான். இவர்களைப் பற்றி வெளிவந்த  ஒரு பேப்பர் நியூஸ் ப்ரச்சனையை கொண்டு வருகிறது. ராபின்சனின் பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு வரச் சொல்லி போலீஸ் அழைக்க, பாஸ்போர்ட்டை காணோம். பின் நடக்கும் ரகளையும், பாசப் போராட்டமும் தான் படம்.

இத்தனை இயல்பாய் நடிப்பார்களா? அல்லது அவர்கள் போக்கில் படமாக்கிவிட்டு எடிட் செய்தார்களா? என்று சந்தேகம் வரும் அளவிற்கு அத்துனை இயல்பான நடிப்பு. மஜீத்தாக வரும் சவ்பினினி நடிப்பு அவ்வளவு இயல்பு. மேட்சினூடே வாட்ஸப்பில் “ஓவர் ஓவர்:” என பேசி தகவல் பறிமாறும் காட்சியாகட்டும்,, தன் பெற்றோர்களிடம் காட்டும் கோபமாகட்டும். காசில்லாத நேரத்தில்  ஆக்ஸ்டெண்ட் ஆகி பணத்துக்கு அலையும் நேரத்தில் பேசும் பேச்சாகட்டும், பெண் பார்க்க போகுமிடத்தில் நடத்து கொள்ளும் விதமாகட்டும், மனிதர் அடிபொலி.

நைஜீரியன் சாமுவேலிடம் பெரிய அளவிற்கு நடிப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும், அந்த ஓங்கி வளர்ந்த குழந்தை முகத்தில் தெரியும் இன்னொசென்ஸ், அட்டகாசம். ஜாகீர் அம்மாவின் திருமணம் காரணமாய் அவளிடமும், அவளின் கணவனிடமும் நடந்து கொள்ளும் முறை. “என்னைக்காவது ஒரு நாள் ஜாகிருக்கு இதே போல உடம்புக்கு முடியாம இருந்து நான் அவனை பார்த்துக்கணும்” என்று தன் மகனுடனான நெருக்கமில்லாத தருணங்களை நினைத்து அழும் அம்மா, ராபின்சனுக்காக உடனிருக்கும் அத்தையுடன் மசூதிக்கு போய் வேண்டுதல் செய்வது, ராபின்சனின் ப்ளாஷ்பேக் என அத்துனை காட்சிகளையும் திணிக்காமல் அதன் போக்கிலே கொண்டு போயிருக்கும்  இயக்குனர் ஜாக்ரியா மொகம்மதுக்கு இது முதல் படமாம். என்ன ஒரு நேர்த்தியான ரைட்டிங் அண்ட் எக்ஸிக்யூட்டிங். குறிப்பாய் க்ளைமாக்சில் வரும் ஜாகிரின் அப்பா, அம்மா காட்சி. ஒரே ஒரு ரியாக்‌ஷன் தான் அந்த அம்மாவின் முகத்தில் தெரியும் ரியாக்‌ஷன் ஆயிரம் கதைகள் சொல்லும். அத்துனை இயல்பு.


மிகைப்படுத்தாத தெள்ளிய ஆறு போல் ஓடும் கதை கொண்ட படங்கள் ஏன் தமிழில் வருவதில்லை? அப்படியான படங்களை உரிமை வாங்கி ரீமேக் செய்யும் போது, மலையாள படத்தை ரசித்தார்ப் போல ஏன் தமிழில் அதே விதமான ரசிப்புத்தன்மை மக்களிடம் இல்லை என்ற சந்தேகம் எப்போது மலையாள படம் பார்த்தாலும் வந்து கொண்டேதானிருக்கிறது. அதற்கு முக்கியமான ஒரு விஷயம் அவர்களுடய கலாச்சாரம். கேரளாவில் கால்பந்தும், லோக்கல் க்ளப்பும் கலாச்சாரம். நமக்கு?. மோகினியாட்டம் முதல் எல்லா ஆட்டம் பாட்டத்திலேயும், இசையும், ஊடுருவியிருக்கிற அவர்களுடய பாரம்பரியம். என பல விஷயங்களை அவர்கள் இன்றும் கொண்டாடிக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களுடய அடுத்த தலைமுறைக்கு கடத்திக் கொண்டுமிருக்கிறார்கள். நாம் அதை செய்கிறோமா? என்ற கேள்வி மலையாள படங்களை பார்க்கையில் எழாமல் இல்லை.