Thottal Thodarum

Sep 6, 2018

கொத்து பரோட்டா 2.0-65

கொத்து பரோட்டா 2.0-65
கந்து வட்டி, காரணமானவர்களை அரஸ்ட் செய் என்று கூக்குரலிட்டு ஏதும் நடக்கவில்லை. எதிர்பார்த்தபடி, பிரச்சனைக்குரிய படங்களுக்கு போட்டிருந்த தடை விலகியது. பஞ்சாயத்துக்களின் வீரியம் குறைந்தது. இதனிடையில் விஷால் திடீர் அரசியல் பிரவேசம் திரையுலகினரை கலகலக்க வைத்திருக்கிறது. நடிகர் சங்க தேர்தல், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தேர்தல் என அடுத்தடுத்து ஒவ்வொரு பதவியாய் போட்டியிட்டு பெற்றவர் இப்போது ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் எம்.எல்.ஏவுக்காக போட்டியிருகிறார். கமல் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்து மெல்ல ஆழம் பார்த்துக் கொண்டிருக்க, வரும்.. ஆனா வராது என்கிற ரீதியில் போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம். இன்னும் போர் வரவில்லை என்றெல்லாம் வழக்கம் போல பத்திரிக்கைகளுக்கு தீனி போடும் அறிவிப்புகளை மட்டுமே விட்டுக் கொண்டிருக்கும் ரஜினி இவர்களுக்கிடையே விஷாலின் இந்த திடீர் அரசியல் நுழைவை பலர் ஆதரிக்கவும் பாராட்டவும் செய்திருக்கிறார்கள். இதனிடையே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களிடையே விஷாலை பதவி விலக வைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு இயக்குனர் சேரன் தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்  சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.  ஏன் விஷால் பதவி விலக வேண்டும்?.

அதற்கு அவர்கள் சொல்லும் காரணம். எந்த ஒரு சங்கமாய் இருந்தாலும் ஆளும் அரசின் அணுக்கத்தில் தான் சங்கத்தின் உறுப்பினர்களுக்கான உரிமைகளை கேட்டு பெற முடியும். அப்படியிருக்க, விஷால் எம்.எல்.ஏ பதவிக்காக ஆளும் கட்சியை எதிர்த்து போட்டியிடுகிறார். ஆளும் கட்சியை விமர்சிக்கிறார். அதனால் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக்காமல் போகும் என்ற விஷயத்தை முன் வைத்து போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார். ஒருவரின் தலைமையின் மேல் மாற்று கருத்து இருக்கும் பட்சத்தில் அவர்கள் மேல் குற்றம் சாட்டுவது ஒன்றும் தவறில்லை. ஆனால் அதே நேர்த்தில் பொதுக்குழுவில் வைத்து பேச வேண்டிய விஷயத்தை தடாலடியாய் போராட்டமாய் மாற்றி அவரை பதவியிறக்கும் முயற்சி?. இத்தனைக்கும் அவரின் அரசியல் கன்னிப் பேச்சு கூட ஆரம்பமாகவில்லை. எத்தனையோ தயாரிப்பாளர்கள் அவர்களின் திரைப்படங்கள் மூலமாய் அரசுக்கு எதிராய் பேசுகிறார்கள். அது வெற்றியும் பெருகிறது. அந்த வெற்றிக்கு காரணம் மக்களின் குரலாய் அப்படத்தின் கருத்துக்கள் இருப்பதால் தான் . இப்படியான படங்களை எடுத்து அரசின் மேல் காழ்புணர்ச்சியை ஏற்படுத்துகிறார்கள் என்று சொல்லி, அந்த தயாரிப்பாளரை சங்க உறுப்பினரிலிருந்து நீக்க போராட்டம் நடத்துவதும் இதுவும் ஒன்றே என தோன்றுகிறது.

இந்த முடிவு விஷாலுக்கு எதிரான தயாரிப்பாளர் சங்க அரசியல் ஆட்டம். ஒரு வேளை விஷால் இந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனால் தயாரிப்பாளர்களின் குரலாய் விஷால் மாற வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே இருக்கிற கருணாஸ் என்ன செய்தார் என்று இது வரை யாரும் கேட்காதற்கான காரணம் அவர் ஆளும் கட்சி என்பதாலா? அரசு மானியத்தை அறிவித்திருக்கும் நேரத்தில் இந்த முடிவு தவறு என்று ஒரு கருத்தும் இருக்க, அறிவித்த மானியத்தை அழுத்திப் பெற உங்களிலிருந்து ஒரு எம்.எல்.ஏ  உரிமையோடு கேட்க வாய்பிருக்கும் பட்சத்தில் லெட்ஸ் வெயிட் அண்ட் வாட்ச்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
7 வயது சிறுமி ஹன்சிகாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளியை அவரின் பெற்றோர்கள் போராடி அவனுக்கு கொடுக்கப்பட்டிருந்த குண்டர் சட்ட தண்டனையை விலக்கி, விடுதலை பெற்றார்கள். இதற்காக அவர்கள் சொத்துக்களை எல்லாம் விற்றுக்கூட செலவு செய்வேன் என்றும், சொல்ல, பொதுமக்களிடையே நீதித்துறையின் பால் பெரும் அதிருப்தி எழுந்தது. அப்படி விடுவிக்கப்பட்ட குற்றவாளி சில நாட்களுக்கு முன் பெற்ற தாயை பணத்துக்காக கொன்று நகையை திருடிச் சென்றிருக்கிறான். எந்த தகப்பன் தன் பிள்ளைக்காக சொத்துக்களை விற்று வெளிக் கொணர்ந்தாரோ, அதே பிள்ளையால் தன் மனைவியை இழந்திருக்கிறார். இம்மாதிரியான குற்றவாளிகளுக்கு ஜெயில் தண்டனையெல்லாம் பத்தாது. தூக்குல போடணும் என்கிற கோபம் வராமல் இல்லை.  மரண தண்டனைக்கு எதிரானவர்கள் கூட இவனைப் போல ஆட்களுக்கு கருணை காட்ட விழைவதில்லை.

பன்னிரண்டு வயதுக்குள்ளான பெண் குழந்தைகள் மீது பாயும் பாலியல் பலாத்கார செயல் நிருபிக்கபட்ட குற்றவாளிக்கு மரண தண்டனை என்கிற சட்டத்தை மத்திய பிரதேச அரசு சட்டமாக்கியிருக்கிறது. இதை அனைத்து கட்சிகளும் வர்வேற்று அதற்கான பில்லை பாஸ் செய்திருக்கிறார்கள். குழந்தைகள் மீதான குற்ற நடவடிக்கைகளை குறைக்க உயர்ந்த பட்ச தண்டனை ஒன்றே வழி என்பதை எல்லோரும் வரவேற்றிருக்கிறார்கள். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் சட்டங்கள் இருந்தாலும் அதை வளைக்க ஆயிரம் வழிகள்.இதையெல்லாம் மீறி இது போன்ற சட்டங்கள் நிச்சயம் தேவை என்றே தோன்றுகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
MIND HUNTER
நெட்பிளிக்ஸின் புதிய சீரீஸ். இந்த மைண்ட் ஹண்டர்.
Mindhunter: Inside the FBI's Elite Serial Crime Unit written by John E. Douglas and Mark Olshaker
என்கிற புத்தகத்தை அடிப்படையாய் வைத்து ஜோ பென்ஹால் உருவாக்கியது. 1977 களில் அமெரிக்க எப்.பிஐயில் உள்ள கிரிமினல் சைக்காலஜி டிபார்ட்மெண்ட்டில் வேலைபார்க்கும் ஹோல்டன் போர்ட், டென்ச் மற்றும் சைக்காலஜிஸ்ட் வெண்டி காரை சுற்றி வரும் கதை. சீரியல் கில்லர்களை சந்தித்து ஏன் அவர்கள் இப்படி மாறினார்கள்?. எது அவர்களை சீரியல் கில்லர்களாய் மாற்றியது? என்று அவர்களிடம் பேட்டியெடுத்து, அவர்களின் மனநிலையை அராய்ந்து எதிர்கால குற்றங்களை கண்டுபிடிக்க எப்படி பயன்படுத்துவது என்ற ஆராய்ச்சியில் இவர்கள் பணிக்கப்பட்டிருக்க, போர்டும், டென்சும் ஒவ்வொரு சீரியல் கில்லராய் போய் பேட்டியெடுக்க ஆரம்பிக்கிறார்கள். ஆரம்பத்தில்  கடமையாய் செய்ய ஆரம்பிக்கும் விஷயம் மெல்ல ஆழ்மனதில் அவர்களுக்கு ஒரு விதமான படபடப்பை உருவாக்கி, குற்றவாளிகளும், அவர்களின் குற்றங்களும் ஆக்கிரமிக்க தொடங்குகுறது.

சீரீஸ் முழுவதும் ரத்தக்களரியான, அதி வக்கிரமான பர்வர்டட் மைண்ட் கொண்டவர்களின் நடத்தை, குற்ற செயல்களை பற்றி எந்தவிதமான குற்ற வுணர்வும் இல்லாமல் ரசித்து, ருசித்து பேசுகிற குற்றவாளிகள் என பக்கா பரபர ஆக்‌ஷன் கோரி காட்சிகளை காட்ட ஏதுவான கதைக்களம் தான். ஆனால் இவையனைத்தையும் வெறும் வசனங்கள், நடிப்பின் மூலம் நாம் பார்க்கும் விஷுவல்களுக்கிடையே மனதினுள் தனி வீஷுவலை ஓட வைத்திருக்கிறார்கள். நம் மனக்கண்ணில் ஓடும் அந்த விஷுவல்கள் ஸ்பைன் சில்லிங்.. இதன் முதல் இரண்டு எபிசோடுகளை எழுதி தயாரித்திருப்பவர் பிரபல இயக்குனர் டேவிட் ஃபின்சர்.

ஹோல்டன் போர்டாக வரும் ஜொனாதன் கிராபின் நடிப்பு அபாரம். அப்பாவியான முகம். எதையும் ஆச்சர்யதோடும், அணுகும் முறை. குற்றவாளிகளின் பேச்சுக்கள் அவரின் உள்ளே ஊடுருவி, கேள்வி கேட்கும் முறை, எல்லாம் அட்டகாசம். அதே போல சதா சர்வகாலம் புகைத்துக் கொண்டேயிருக்கும் டென்ச் கேரக்டரின் நடிக்கும் மெக்காலனி. தேர்ந்த நடிப்பு.

சாதாரணமாய் இந்த சீரீஸை பரபரவென கடந்து போக முடியவில்லை. எப்படி கதையில் குற்றவாளிகளின் செயல்கள் பேச்சுகள் அவர்களை ஆக்கிரமித்து ஒரு விதமான மன அழுத்தத்தை கொடுத்ததோ அதே நிலை பார்க்கும் நமக்கும் ஏற்படுகிறது. ஒரு எபிசோடைப் பார்த்ததும் அடுத்ததை பார்க்க முடிவதில்லை. ஒரு விதமான அழுத்தம் நம் மனதினுள் ஓடிக் கொண்டேயிருக்கிறது. ஏனென்றால் இக்கதையில் வரும் கேரக்டர்கள் நிஜமானவர்கள். நிஜ குற்றவாளிகளின் பேச்சிலிருந்து எடுக்கப்பட்டவை. இவர்கள் உலவும் சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிற எண்ணம் நம்முள் ஏற்படும் போது வெறும் கதை மாந்தர்களாய் இவர்களை பார்க்க முடிவதில்லை. பட் டோண்ட் மிஸ்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என்னுடய தமிழ் திரைப்பட விநியோக அனுபவத்தை புத்தகமாய் சினிமா வியாபாரம் என்கிற பெயரில் 2010 ஆம் ஆண்டு புத்தகமாய் வெளியிட்டேன். இன்று வரை அது தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கான கையேடாய் வளைய வந்து கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவின் வியாபாரம், அது எப்படி நடக்கிறது? அதனுள் இருக்கும் பிரச்சனைகள் என்ன? எப்படியெல்லாம் தயாரிப்பாளரக்ள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதையெல்லாம் விவரமாய் சொல்லியிருந்தேன் படிக்கும் பழக்கம் குறைந்து போய்க் கொண்டிருக்கிற காலகட்டத்தில் விஷுவல் பதிவுக்கு தேவை இருப்பதால் அதை வீடியோ பதிவாக்கியிருக்கிறேன். 2010 எழுதப்பட்ட புத்தகத்தில் எழுதிய விஷயங்கள் தான் இதுவரையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவே தற்போதை வியாபார முறையில் புதிதாய் நூறு கோடி இருநூறு கோடி என கூவுவது எல்லாம் எப்படி தமிழ் சினிமாவில் சாத்தியம் போன்ற பல தமிழ் ச்னிமா முகத்திரையை வீடியோ பதிவாய் கிழிக்கும் முயற்சிதான் இந்த சீரீஸ். https://www.youtube.com/watch?v=1PDMeIaLZsw&t=45s
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


Post a Comment

1 comment:

srik said...

All these are old posts and why repeating now