Thottal Thodarum

Jan 23, 2021

24 சலனங்களின் எண். விமர்சனம் #4

ஒரு சினிமா இயக்குனரின் சினிமா பற்றிய நாவல் நாவலாக மட்டுமல்லாமல் புதிதாக சினிமா எடுக்க வருபவர்களுக்கு சினிமா உலகில் உள்ள அரசியலையும் மனிதர்களின் நுணுக்கமான ஈகோவை புரிந்துகொண்டு வெற்றிகரமாக காய் நகர்த்த உதவும் ஒரு சிறந்த புத்தகமாகவும் உள்ளது என்பதில் ஐயமில்லை.தலைவர் கேபிள் சங்கர் அவர்கள் வலைப்பூவுலகின் சுஜாதா என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் அவரது தனித்துவபாணி எழுத்தின் மூலம். நீண்ட நாட்களுக்கு பிறகு தலைவரின் கொத்துபரோட்டாவை சுவைத்த திருப்தி. ஒரு சினிமா இயக்குனரின் சினிமா பற்றிய நாவலில் சினிமாத்தனம் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.ஆங்காங்கே ஒரு சில இடங்களில் கட்டுரைத்தொனி தென்பட்டாலும் மிக சுவாரஸ்யமான நடையால் மீண்டும் கதைக்குள் இழுத்து விடுகிறார். கதை நகர நகர அதற்குப் பின்புலமான உண்மைச் சம்பவங்கள் இதுவாக இருக்குமோ அதுவாக இருக்குமோ என்ற எண்ண ஓட்டங்கள் ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை. வெப் சீரிஸ் என்ற ஒரு வஸ்து அறிமுகமாவதற்கு முன்பே அதற்கான கண்டண்டாக பிரபல வார இதழ்களில் வெளியாகும் தொடர்களுக்கு நிகரான வரவேற்புடன் கேபிள் சங்கர் வலைப்பதிவில் வந்து பாதியில் நின்ற 'நான் ஷர்மி வைரம்' நீண்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே நீண்ட இடைவெளிக்குப் பின் தந்தாலும் அதன் சுவை குறையவே இல்லை. 'நான் ஷர்மி வைரம்'தலைவரின் வலைப்பூ வாசகர்களின் ஜாங்கிரி அதை அப்படியே சாப்பிட்டு விடுங்கள்
🙂
.வாழ்த்துக்கள் தலைவரே அடுத்து உங்கள் தனித்துவமான பாணி திரைப்படத்திற்காக காத்திருக்கிறோம். திரைத்துறையிலும் சமரசமின்றி சாதித்திட வாழ்த்துக்கள் தலைவரே. புத்தகத் திருவிழா சமயங்களில் பரபரப்பாக வெளியிட்டு எழுத்துப் பிழைகளோடு வரும் புத்தகங்களுக்கு மத்தியில் ஒரு சில எழுத்துப் பிழைகளை தவிர பக்காவான வடிவமைப்பு மற்றும் எழுத்துப் பிழையற்ற புத்தகம் நீண்ட நாட்களுக்கு பிறகு‌.அதற்காகவே தனியொரு ஸ்பெஷல் சல்யூட் தல. வலைப்பூ உலகம் ,யூட்யூப் சேனல் திரைப்படத்துறை ,தொடர்ந்து பப்ளீஷராகவும் வெற்றி கொண்டுள்ள அன்பு தலைவருடன் என்றென்றும் கரம்பற்றி கோர்த்திருப்போம்

Jan 19, 2021

Kerala Paradiso

 சிறிய கிராமத்தில் ஒரே ஒரு தியேட்டர் இருந்து, இன்று அது இல்லாமல் பக்கத்து நகரங்களுக்கு படம் பார்க்கச் செல்லும் சினிமா ரசிகர்கள் ஏராளம். ஒவ்வொரு முறையும் அவரவர்கள் ஊருக்கு போகும்போது அங்கே இருந்த தியேட்டரை நினைத்து நாஸ்டால்ஜிக் விஷயங்களை நண்பர்களுடன் அசை போடாதவர்கள் இருக்கிறார்களா? என்ன? அலங்கார் தியேட்டரில் ஜாக்கிசானின் ப்ராஜெக்ட் ஏ பார்த்துவிட்டு, அவரைப் போலவே நண்பர்களுடன் ஓடுகிற பஸ்ஸில் ஏற முயன்ற நாட்களை இன்றைக்கும் நானும் என் கல்லூரி நண்பர்களும் பார்க்கும் போதெல்லாம் சொல்லி சிரிக்காமல் இருந்தது இல்லை.

அப்படியான ஒரு சிறு கேரள ஊரில் வெளிநாட்டுக்கு போய் சம்பாரித்து வந்த காசில் சினிமா பாரடைசோ படம் கொடுத்த தாக்கத்தில் தன் சொந்த கிராமத்தில் “கேரளா பேரடைசோ” என்கிற் தியேட்டரைக் கட்டியவரின் மருமகன். தினமும் தியேட்டரைச் சுற்றியே வலம் வருகிறவனுக்கு அத தியேட்டர் பேங்க் கடனுக்காக மூடப்பட, தியேட்டர் கட்டிய மாமனுக்கு உடல் நலமில்லாமல் போக, தன் காதல், தியேட்டர் இடத்தை அடைய நினைக்கும் ஆட்கள், நிஜ வாழ்க்கை சம்பவங்களை சினிமாவக மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் ஹீரோ, அவனது அன்பான குடும்பம், கூட்டமில்லாவிட்டாலும், கதகளிக்காக் தன் வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டிருக்கும் கலைஞன். சினிமா பாட்டுக்காக ட்ரான்ஸிஸ்டருடனே வாழும் ராணுவக்காரர், சினிமாவும் சரக்கும் ஒண்ணு எனக்கு ஏன்னா இது ரெண்டும் கொடுக்குற போதை வேறு ஏதும் கொடுக்காது எனும் ராகவன், என சுவாரஸ்யக் கேரக்டர்களை வைத்து, மிகச் சாதரணமான விஷயத்தை சுவாரஸ்யம் குன்றாமல் சொல்வதில் மலையாள சினிமாக்காரர்கள் வல்லவர்கள் என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் பிஜோய். இது இவருக்கு முதல் படம். கோவா பெஸ்டிவலில் அங்கீகரிக்கப்பட்டு நேரடி ஓடீடீ ரிலீஸ் ஆகியிருக்கிறது. ஃபீல் குட் படம் பார்க்க விரும்புகிறவர்களுக்கான படமிது. டோண்ட் மிஸ்.

Moviewud OTTயில் கிடைக்கிறது வெறும் 50 ரூபாய்க்கு
பாருங்கள் மற்றும் ஆதரவளியுங்கள்

Jan 12, 2021

சாப்பாட்டுக்கடை- ரஹமாஸ் பிரியாணி.

பிரியாணியை கண்டுபிடித்தவர்களை விட நமக்கு பிரியாணி ஒர் எமோஷன் என்பதை மறுக்க முடியாது. அதனால் தான் சென்னையில் உள்ள அத்தனை தெருக்களிலும் ரெண்டு பிரியாணி கடை திறக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஒரு பிரியாணிக்கடை  மூடப்படுகிறது. இத்தனை பிரியாணிக்கடைகள் இருந்தாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே தான் நல்ல பிரியாணிகடைகள் இருக்கிறது. 

என்னதான் சிக்கன், சிக்கன் 65, எறா, பிஷ், என பிரியாணி வகைகள் நிறைய வந்திருந்தாலும், என்னை பொறுத்தவரை பிரியாணி என்றால் அது மட்டன் பிரியாணிதான். சீரகசம்பா ஒரு வகையான சுவை என்றால் நல்ல பாஸுமதி ரைசின் சுவை வேற லெவல். அப்படி சமீபதத்தில் நான் சாப்பிட்ட நல்ல பிரியாணியைப் பற்றித்தான் இங்கே சொல்லப் போகிறேன். 

சென்னை கோடம்பாக்கத்தில் ரஹமாஸ் பிரியாணி என்று போர்ட்டை பார்த்து பல முறை கடந்து போயிருக்கிறேன். அக்கடை பற்றி பல முறை நண்பர்கள் சொல்ல கேட்டும் சாப்பிட வாய்க்கவில்லை. போன வாரம் பார்சலில் வந்தது ரஹமாஸ் பிரியாணி. பெட்டியை திறந்தவுடன் கிடைத்த ஆரோமாவை சொல்வதா?. காரம், மணம் குணத்தோடு, நன்கு வெந்த மசாலாவில் தோய்ந்த மட்டனை சொல்வதா?. பல சமயங்களில் பிரியாணியை தால்சாவோடோ, அல்லது தயிர் வெங்காயம் இல்லாமல் சாப்பிட முடியாத வகையில் இருக்கும். ஆனால் இவர்களின் பிரியாணியை அதில் இருக்கும் கறியை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு முழு பிரியாணியை சாப்பிட முடியும். அத்தனை ஜூஸி, அண்ட் டேஸ்டி. இவர்கள் கொடுக்கும் கத்திரிக்காய் எண்ணைய் தொக்கை சாப்பிடாமல் வராதீர்கள். அத்தனை அட்டகாசம். கூடவே தால்சாவும் தருகிறார்கள். எனக்கு தால்ச்சா அத்தனை உசிதமாக ஐயிட்டம் அல்ல. அதனால் நோ ரெக்கமெண்டேஷன். கூடவே மரக்காயர் நெய் சோறு, மட்டன், சிக்கன் வறுத்தகறி, கிரேவி, ஒரு அட்டகாசமான தக்காளி சாஸ்  போன்ற ஸ்வீட் தருகிறார்கள். அதை நெய்ச்சோற்றோடு கலந்து சாப்பிட்டால் வேறு ஒரு விதமான சுவை. 

மட்டன் பிரியாணி ரூ.199, நெய் சோறு பேக்கேஜ் ரு.170, பரோட்டா வித் சால்னா செட் ரூ.32. அட்டகாசமான, ஒர் டிவைன் மட்டன் பிரியாணி வேண்டுவோர் உடன் செல்லவும் ரஹமாஸ் பிரியாணி. டோண்ட் மிஸ்

ரஹமாஸ் பிரியாணி.
101, 4th Ave, Sarvamangala Colony, 
Dr.Subbaraya Nagar, 
Ashok Nagar, 
Chennai, Tamil Nadu 600083