Thottal Thodarum

Feb 19, 2024

சாப்பாட்டுக்கடை - பசும்பொன்

 இந்த பெயரில் ஒரு க்ளவுட் கிச்சனை ஏற்கனவே ஆன்லைனில் பார்த்திருக்கிறேன். நண்பர் கார்த்திகேயன் வந்து பாருங்க என்று கூப்பிட்ட போது கடையின் பெயர் பசும்பொன் என்றிருக்க, அதே தான் இப்ப ரெஸ்ட்டாரண்டாய் மாற்றியிருக்கிறோம் என்று சொன்னார். நல்ல ஆம்பியன்ஸோடு இருந்தது உணவகம். 


ஸ்டார்ட்டரா என்னன்னா வச்சிருக்கீங்க? என்று கேட்ட மாத்திரத்தில் ஒரு பெரிய லிஸ்டைச் சொன்னார். காரப் பொடி சிக்கன், பச்சை மிளகாய் சிக்கன், நெய் சிக்கன், தொடைக்கறி போண்டா, மட்டன் நல்லி எலும்பு ரோஸ்ட், நெய் மட்டன் என வரிசைக்கட்ட, நண்பர்கள் நான்கைந்து பேரோடு போனதால் எல்லாத்துலேயும் ஒண்ணொண்ணு என்று ஆர்டர் செய்தோம்.  காரப் பொடி சிக்கன் முதலில் வந்தது. நன்கு வெந்த போன்லெஸ் சிக்கனை லேசாய் வறுத்தெடுத்து, அதில் மசாலாவைப் போட்டு, அதில் காரப் பொடியை மேலே தூவி கலந்து தருகிறார்கள். முதல் பீஸை வாயில் வைத்த மாத்திரத்தில் கிட்டத்தட்ட கரைந்தது என்றே சொல்ல வேண்டும். மேலே தூவப்பட்ட முந்திரி, திகட்டாத மசாலா, அதில் தூவப்பட்டிருக்கும் லேசான நரநர காரப் பொடி எல்லாம் சேர்த்து சாப்பிடும் போது கிடைக்கும் சுவையே அலாதி. அட்டகாசமாய் இருந்தது. முதல் பாலியேயே சிக்சர். 

சரி அடுத்த பாலாய் வந்த பச்சை மிளகாய் சிக்கனை எதிர் கொள்ள தயாரானோம். பச்சை மிளகாய் சிக்கன் என்றதும் நண்பர்கள் வேண்டாம் ஏதாச்சும் வயித்தை கலக்கிறப் போவுது என்றார்கள். இருந்தாலும் தைரியமாய் முதல் பீஸை எடுத்து வாயில் வைத்தேன். அட்டகாசம். டிவைன் என்றால் இது என்று உங்களுக்கு புரிய முதல் வாய் சிக்கனை சாப்பிட்டால் தான் புரியும். பச்சை மிளகாயை பொரித்து அதை அரைத்து மசாலாவை உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். வெங்காயமும் அதில் அரைப்பட்டிருக்க, நன்கு மேரினேட் செய்யப்பட்டிருக்க, அதிக காரமில்லாமல் அதோடு வரும் மசாலாவை மட்டுமே சும்மா வழித்து வழித்து சாப்பிட வைத்தது. டோண்ட் மிஸ். 

அடுத்து வந்தது நெய் சிக்கன். அட அட அட.. திகட்டாத நெய்யில் சிக்கன் மசாலாவோடு வந்தது. ஆஸ்யூஷுவல் இதன் மசாலாவும், முந்திரியும் சேர்த்து சாப்பிட வாயில் கரைந்தது என்பது டெம்ப்ளெட் வரிகளாய் இருக்கும். 

நெக்ஸ்ட் அயிட்டம் தொடைக்கறி போண்டா. குட்டி டென்னிஸ் பால் அளவிற்கு வந்திருந்தது. நான்கே நான்கு பீஸுகளுடன். கோலா உருண்டைப் போல இருந்தது. ஆனால் டேஸ்ட் கோலா உருண்டைக்கு அடுத்த பதத்தில் நன்கு அரைக்கப்பட்ட சிக்கன் தொடைக்கறியுடன் அரைக்கப்பட்ட பருப்புடன் செம்ம பதத்தில் அருமையான ஸ்டார்ட்டர்.


மட்டன் நெய்யும், நல்லி எலும்பும், சிக்கன் கொடுத்த சிறப்பை அளிக்காவிட்டாலும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்றே தோன்றியது. சிக்கன் ப்ரை என ஒரு லெக் பீஸை பொரித்துக் கொடுத்திருந்தார்கள். நல்ல ஜூஸியாய் பொரித்தெடுக்கப்பட்ட சிக்கன். கார்னுடன், மசாலாவும் ஊறியிருக்க செம்மையாய் இருந்தது. 

மெயின் கோர்ஸில் பன் பரோட்டாவும், பொரித்த பரோட்டாவும் வைத்தார்கள். பன் பரோட்டாவுக்கு தனி சால்னா, பொரித்த பரோட்டாவுக்கு தனி சால்னா. பொரித்த பரோட்டா சால்னா நல்ல காரமாகவும், பன் பரோட்டாவுக்கு ஊற்றப்பட்டது டிபிக்கல் சால்னாவாக கெட்டியாகவும் இருந்தது சுவையை அதிகப்படுத்தியது. நெய் ரோஸ்டுக்கு எல்லா ஸ்டார்டர்ஸ் தொக்குகளும் செம்மையாய் சூட் ஆனது. அதில் ராஜா நெய் சிக்கன் தொக்கு.  இதையெல்லாம் விட சிறப்பான ஒரு விஷயம் என்னவென்றால் தோசையானாலும் சரி, பரோட்டாவானாலும் சரி உடன் ஒரு வெங்காயம், தக்காளி அரைத்த தொக்கு ஒன்று தருகிறார்கள். அது செம்ம.

இவர்களின் மெயின் கோர்ஸ் வித்யாசமாய் இருந்தது. அதிலும் மதிய நேர லிஸ்ட். மட்டன் சாப்பாடு, சிக்கன் சாப்பாடு, மீன் சாப்பாடு இதில் என்னடா வித்யாசம் என்று கேட்பீர்கள். அவர்கள் அதில் தரும் மெனுதான். மட்டன் சாப்பாட்டுக்கு மட்டன் கறியோடு, மட்டன் கெட்டிக் குழம்பு, மட்டன் தண்ணிக் குழம்பு, மட்டன் மோர்க்குழம்பு, ரசம் இத்யாதிகளுடன். என்னது மட்டன் மோர்குழம்பா? என்று ஆச்சர்யத்தில் புருவம் தூக்குவீர்களானால் நிச்சயம் நீங்கள் இதை சாப்பிட்டுப் பார்க்க வேண்டும். அட்டகாசமாய் இருந்தது. டிபிக்கல் மோர்க்குழம்பில் மட்டனோடு. டிபரண்ட் காம்பினேஷன். தண்ணிக்க்குழம்பு இருந்த அளவிற்கு கெட்டிக் குழம்பு இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் அதே சிக்கன் சாப்பாட்டில் உள்ள மோர்குழம்பாகட்டும், கெட்டி குழம்பாகட்டும் தண்ணிக்குழம்பாகட்டும் எல்லாமே செம்ம. 

இவர்களின் ஸ்பெஷல் நெய்ச் சோறு. நெய்சோறோடு சில பல காம்பினேஷன்களை கொடுத்தாலும் ஐ ரெகமெண்ட் நெய்சோறு+ பச்சை மிளகாய் சிக்கன். அல்லது நெய்சோறு + நெய்சிக்கன். டிவைனோ டிவைன். இன்னும் சில அயிட்டங்களை நாங்கள் இன்னும் சுவை பார்க்கவில்லை. இப்போதுதான் திறந்திருக்கிறார்கள். மீண்டும் ஒரு முறை சாப்பிட்டுப் பார்த்து சொல்கிறேன். 

பசும்பொன் உணவகம்

திநகர் பிக் பசார் பின்பக்கம்.

காமாட்சி மெஸ் அருகில். 

Ward - 136, Corp, New No: 6, Old No 5/2, opposite MULTILEVEL CAR PARKING - THE GREATER CHENNAI CORP- MLCP - GCC, Singaravelu St, Chennai, Tamil Nadu 600017

சாப்பாட்டுக்கடை - தமிழ் முஸ்லிம் கிட்சன்

உணவகமாய் திறந்து அதற்கான மெனக்கெடல்களை விட கொஞ்சம் சுலபமானது க்ளவுட் கிச்சன் தான். அப்படியான க்ளவுட் கிச்சன் எத்தனையோ ஆரம்பித்தாலும் நிலைத்து நிற்பது கிடையாது. காரணம் பல க்ளவுட் கிச்சன்கள் மாஸ்டர்களை நம்பி ஆரம்பிப்பதே. அப்படியே ஒழுங்காய் நடந்தாலும் ஸ்விக்கி ஜொமேட்டோவுக்கு கொடுக்குற காசை மீறி லாபம் எடுக்க முடியாமல்.. சரி அதைப்பற்றி தனியே ஒரு கட்டுரையே எழுதும் அளவிற்கு விஷயம் இருக்கிறது. 

அப்படியான ஒரு கிச்சன் தமிழ் முஸ்லிம் ஸ்டைல் உணவு என்று பார்த்ததும் நம்பரை எடுத்து போன் அடித்தேன். தம்பி எர்ஷத்தான் போன் எடுத்தார். நான் கிச்சன்லேயே வந்து சாப்பிடுகிறேன் என்று அங்கேயே கிளம்பிப் போய் சாப்பிடப் போனேன். என்ன சாப்புடுறீங்க? என்றவரிடம் மெனு கேட்டேன். சீரக சம்பா சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, வஞ்சிரம் ப்ரை, என்றார்.  சரி எல்லாத்துலேயும் கொஞ்சம் சாப்பிடுவோம் என்றேன்.



சீரக சம்பா பிரியாணி டேக்ஸாவை திறக்கும் போதே மணம் நாசியை தாக்கியது. நன்கு வெந்த சிக்கன் பீஸ்களோடு மணக்கும் பிரியாணி வந்தது. வழக்கமாய் சீரக சம்பா பிரியாணி சாப்பிடும் போது அந்த அரிசியின் நல்குணங்களோடு, அளவாக சேர்க்கப்பட்ட மசாலா, சில பிரியாணிக்களீல் சேர்க்கப்படும் பச்சைமிளகாய் சமயங்களில் அடி நாக்கில் சுள்ளென உரைப்பை உணர வைக்கும் கிளுகிளுப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் வித்யாசமனா சுவையில் இருந்தது இந்த பிரியாணி. சாப்பிட்ட மாத்திரத்தில் நல்ல மசாலா சுவையோடு கூடவே சாப்பிட்டு முடிக்கும் போது லேசான ஸ்வீட்னெஸை உணர்ந்தேன். தம்பி பால் ஏதாச்சும் சேப்பீங்களா? என்று கேட்ட போது ஆமாண்ணே.. தேங்காய் பால் கொஞ்சம் பாதம் அரைச்சு விடுவோம் என்றார். உடன் கொடுக்கப்படும் கத்திரிக்காய் வழக்கமாய் எண்ணெய் அதிகமாய் மிதக்கும். இந்த கத்திரிக்காயில் அப்படியில்லை. நன்கு வெந்த கத்திரிக்காய் கிரேவி. அதிக காரம் இல்லாமல் சரியான காம்பினேஷன்.

சிக்கன் 65 வழக்கமாய் இல்லாமல் நல்ல பீஸ்களுடன், மசாலா மேரினேட் ஆகியிருக்க, கார்ன் ப்ளவர் மாவில்லாமல் வெறும் மசாலாவில் மட்டுமே ஊறிய சிக்கன் நன்கு  எலும்பு வரை வெந்திருக்க, எலும்போடு மென்று சாப்பிடக்கூடிய வகையில் இருந்தது. மசாலாவில் உள்ள காரமும், சிக்கனி ஜூசும், நம் சலைவாவோடு கலக்க.. ம்ம்ம்ம்.. செம்ம. 

வஞ்சிரம் மீன் மட்டும் ப்ரை நல்ல சைஸ் பீஸ்சாய் இருந்தது. மசாலா மட்டும் இன்னும் கொஞ்சம் ஏறியிருக்க வேண்டும். பட் குட். வேற ஏதாச்சும் புது அயிட்டங்கள்  போடும் போது சொல்லுங்க என்று சொல்லிவிட்டு அவர் சொன்ன பில் தொகையைப் கேட்ட போது அதிர்ச்சியாய் இருந்து. சிரக சம்பா சிக்கன் பிரியாணி 150 ரூபாயாம். அப்ப மத்ததையெல்லாம் பார்த்துக்கங்க.

சுவிக்கி, ஜொமோட்டோவில் வந்துவிட்டதாய் போஸ்ட் போட்டிருந்தார். வாழ்த்து சொல்ல போன் செய்த போது அண்ணே தேங்காய்ப்பால் ரசம் பண்ணியிருக்கேன் என்றார். உடனே கிளம்பினேன். நான் இது வரை தேங்காய்ப் பால் ரசம் சாப்பிட்டதேயில்லை.  

உலை கொதித்துக் கொண்டிருந்தது. சாப்பிடப்போகிறோம் என்கிற ஆவலில் போனதால் “தம்பி கொஞ்சம் குஸ்கா மட்டும் கொடுங்க” என்று கேட்டேன். தம்பி ஒரு கரண்டி சிரக சம்பா பிரியாணி குஸ்காவைக் கொடுத்தார். முதல் நாள் சாப்பிட்ட சுவையை அப்படியே தக்க வைத்திருந்தார். சாப்பிட்டு முடிப்பதற்குள் சாதம் தயாராகி இருக்க, சுடச்சுட சாதம், தேங்காய்ப்பால் ரசம். கூடவே கேரட் கூட்டு. 

மட்டன், சிக்கன் வேக வைத்த தண்ணீரில் சில சமயம் சூப் வைப்பார்கள். அதுவிதமான அலாதியான சுவையை தரும். கிட்டத்தட்ட மட்டன் தண்ணிக்குழப்பு போன்ற டேஸ்டுடம் தேங்காய்ப் பாலில் செய்யப்பட்ட ரசம். லேசான புளிப்போடு அட்டகாசமாய் இருந்தது. யாராச்சும் இதை வாங்கி சாப்பிடுகிறவர்கள் வீட்டில் சுடான சாதம் வைத்துக் கொண்டு வாங்கிச் சாப்பிடுங்கள். அடிபொலி டிவைனாக இருக்கும். நல்ல தரமான வீட்டு சமையல். தம்பியிடம் இன்னும் நிறைய அயிட்டங்கள் லிஸ்ட் வைத்திருக்கிறார். ஒவ்வொன்றாய் கட்டவிழித்துவிட்டு, களேபரமாய் கடை நடக்க வாழ்த்துக்கள். 

சுவிக்கி ஜோமேட்டோவைத் தவிர, இந்த நம்பரில் போன் செய்தாலும் உடனடியாய் அனுப்பி வைக்கிறார்.  எர்ஷர் 9944995980

கேபிள் சங்கர்.
 

Feb 15, 2024

அஸ்தமனமாகும் உதயம்

 அஸ்தமனமாகும் உதயம்

தனியாய் சினிமா போக ஆரம்பித்த காலம் அது. அப்போது தான் உதயம் திரையரங்கத்தை திறந்தார்கள். முதலில் திறக்கப்பட்டது உதயம் மற்றும் சந்திரன் என்று தான் நினைக்கிறேன். மற்ற தியேட்டர் வேலை நடந்து கொண்டிருந்தது. முதன் முதலில் அங்கே ரிலீஸான படம் ரஜினியின் சிவப்பு சூரியன். சைக்கிளில் சென்று படம் பார்த்தேன். சைக்கிள் பார்க்கிங், அங்கே விற்கும் சமோசா, கூல்டிரிக்ச் எல்லாம் சேர்த்து 10 ரூபாய்க்குள் படம் பார்த்துவிட்டு வந்துவிடலாம். உதயத்தின் பெரிய ஸ்க்ரீனைப் பார்த்ததும் மிகவும் ஆச்சர்யமாய் இருந்தது. இன்றைக்கு போல மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர்கள் இல்லாத காலம். ஒரே கட்டிடத்தினுள் நான்கைந்து காம்ப்ளெக்ஸ் தியேட்டர்கள் தான் அப்போதைய பேஷன். சிவப்பு சூரியனில் மொக்கை வாங்கினாலும், அட்டகாசமான ஒரு திரையனுபவத்தை கொடுத்தது உதயம் தியேட்டர்.

உதயம் ஆரம்பித்த காலத்தில் பில்லர் பக்கம் மட்டுமே கொஞ்சம் ஆங்காங்கே கூட்டம் இருக்கும். அந்தப் பக்கம் கே.கே.நகர். எதிரே வடபழனி பக்கம்  போகப் போக இருளோ என்று இருக்கும். எங்கம்மா இந்த ஏரியால எல்லாம் தியேட்டர் கட்டுனா யாரு வருவாங்க? அதுவும் நைட் ஷோ எல்லாம். என்று ஒரு முறை மாலைக் காட்சி படம் பார்த்துவிட்டு வரும் போது சொன்னது இன்றைக்கும் நியாபகம் இருக்கிறது. சென்னையில் பத்து மணிக்கு தான் இரவுக் காட்சி என்று இருந்ததை 9.15 மணிக்கு என ஆரம்பித்த ஒரே தியேட்டர் சென்னையில் உதயம் மட்டுமே. காரணம் அதிக பட்சம் 12 மணிக்குள் இரவுக் காட்சி முடிந்துவிடும். சமீப காலங்களில் கூட பத்து மணிக்குள்ளேயே படம் போடும் கலாச்சாரத்தை கடைபிடித்து வந்தார்கள்.

உதயம், சூரியன், சந்திரன் மூன்று தியேட்டர்கள். உதயம் கிட்டத்தட்ட 800 சொச்ச சீட்கள். சந்திரன் தியேட்டராக நன்றாக இருந்தாலும் திரை ரெக்டாங்கிலாய் இல்லாமல், ஸ்கொயராகவும் இல்லாமல் ஒரு மாதிரி அரைகுறையாய் இருக்கும். அதனால் அங்கே எனக்கு படம் பார்ப்பது அன்றைக்கே பிடிக்காது. சூரியன் நல்ல அகன்ற திரை. சின்ன தியேட்டர். ஒலி,ஒளி எல்லாம் சிறப்பாக இருக்கும்.

என் சினிமா ஆர்வமும், அறிவும் வளர்த்தெடுத்த இடம் உதயம் தியேட்டர் என்றால் அது மிகையாகாது. இதயத்தை திருடாதே, நாயகன், தளபதி, பொட்டி வராத குணா, காதலுக்கு மரியாதை, ரோஜா, அலைபாயுதே என வரிசைக்கட்டி சொல்லிக் கொண்டே போகலாம். நான் எல்லா படங்களை அங்கே தான் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பேன். சைதாப்பேட்டைக்கு அருகில் என்பதால் மட்டுமல்ல. தொடர்ந்து அங்கேயே படம் பார்ப்பதால் அங்கே வேலை செய்யும், கைலாசம், ரவி, பார்க்கிங் சேகர், ஆகியோர் அனைவரும் எனக்கு பழக்கம் ஆதலால் எப்போது போனாலும் எனக்கு டிக்கெட் கன்பார்ம். படத்தின் தரம், அதன் ஓட்டம் பற்றியெல்லாம் அவர்களிடமிருந்து கேட்டு தெரிந்து இது ஹிட்டு, இத்தனை வசூல் என்று அன்றைக்கு கேட்க ஆரம்பித்த பழக்கம் தான் இன்று என்னை ஒரு விநியோகஸ்தராக, இயக்குனராய், மாற்றியிருக்கிறது. ஒரு கட்டத்தில் உதயத்தில் படம் ரிலீஸ் இல்லையென்றால் அது ஏதோ அவமானமான விஷயமாய் மாறி பேசும் அளவிற்கானது.

கே.கே.நகர், அசோக்நகர், ஜாபர்கான்பேட்டை, சுற்று வட்டாரத்தில் நல்ல மிடில்க்ளாஸ், ஹைக்கிளாஸ் தரத்துடன், பார்க்கிங், ஒலி,ஒளி அமைப்புடன் இருக்கும் சிறந்த தியேட்டர் உதயம் காம்ப்ளெக்ஸ்தான். அது மட்டுமில்லாமல் சினிமா ஏரியா பார்டர் கணக்கில் உதயம் சிட்டியில் வரும் கடைசி தியேட்டர். அந்தப்பக்க்கம் பின்னாளில் ஆரம்பித்த காசி, பழைய விஜயா, இந்திரா போன்ற அரங்குகள் செங்கல்பட்டு ஏரியாவில் வரும். எனவே சென்னையின் முக்கியமான கலெக்‌ஷன் செண்டர் உதயம் காம்ப்ளெக்ஸ் தான்.

நிறைய உதவி இயக்குனர்களின் கனவு அவர்களின் படம் உதயம் தியேட்டரில் ரிலீஸாவதுதான். நண்பர் ஒருவர், நல்ல கதை சொல்லி. உதவி இயக்குனர். இன்று வரை படம் செய்யவில்லை. அது தனிச் சோகம். ஆனால் அவர் ஒவ்வொரு முறை கதை சொல்லிவிட்டு அதை நாம் பாராட்டினாலோ இல்லை விமர்சனம் செய்தாலோ, வேகமாய் தலையாட்டி ”இதெல்லாம் செல்லாது செல்லாது. மொத நா மொத ஷோ உதயம் காம்ப்ளெக்ஸுல படம் பார்க்கும் போது அங்கே கிடைக்கிற கைத்தட்டல், பாராட்டுத்தான் நிஜ ரிசல்ட். மத்ததெல்லாம் வேஸ்ட் என்பார். காரணம் அங்கே வரும் ஆடியன்ஸின் தரம். லோ, மிட், மற்றும் ஹைக்ளாஸ் என எல்லாரையும் தன் வசம் வைத்திருந்த வளாகம் அது. அங்கே கிடைக்கும் ரிசல்ட் தமிழகம் எங்கும் கிடைக்கும் ரிசல்டுக்கு ஈக்குவலாய் இருக்கும்.

உதயத்தில் சரக்கடித்துவிட்டு சென்றால் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். அதற்காக அங்கே படம் பார்க்க இரவுக் காட்சிக்கு ரிசர்வ் செய்துவிட்டு பக்கத்து ஹவுஸிங் போர்ட் காம்ப்ளெக்ஸில் இருக்கும் ஒயின் ஷாப்பில் சரக்கடிப்பதற்காக மாலைக்காட்சிக்கே வந்துவிடுவோம். குடித்து சாப்பிட்டுவிட்டு, போதையெல்லாம் இறங்கிய பிறகு தெளிவாய் படம் பார்த்துவிட்டு வீடு போய் சேருவோம். தியேட்டர்காரனுக்கும் அவ்வளவாய் வாடை வராது. வீட்டுலேயேயும் மாட்ட மாட்டோம். தியேட்டர் அனுமதிக்கு என் இன்ப்ளூயன்சும் காரணம்.

உதயத்தில் ரசிகனாய் வளர்ந்தவன் அதே தியேட்டரில் விநியோகஸ்தராகவும் படம் வெளியிட்டது காலத்தின் ஆச்சர்யங்களில் ஒன்று. எங்களது உயிரிலே கலந்தது திரைப்படம் அங்கே சூரியனில் தான் வெளியானது. ஒரு பிரபல நடிகர் தம்பதிகளின் காதலுக்கு அணிலாய், நானும், அந்த தியேட்டர் ஸ்பெஷல் கேபினும் இருந்த காலம். அப்படம் எங்களுக்கு பல படிப்பினைகளை தந்த படம். அது பற்றி என் சினிமா வியாபாரம் புத்தகத்தில் டீடெயிலாய் இருக்கிறது.

சென்னை ஏரியாவுக்குள் ஒரு சிறந்த கலெக்‌ஷன் செண்டர். கணக்கு வழக்கு எல்லாம் சரியாய் கொடுக்கும் தியேட்டர் என ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவுக்கும் பிடித்த தியேட்டராய் இருந்தது உதயம் காம்ப்ளெக்ஸ்.  இத்தகைய தியேட்டரின் மேனேஜ்மெண்டுடனான முரண்பாட்டால், தன் படங்கள் இனி உதயம் திரையரங்கில் வெளியாகாது என்று முடிவெடுத்து இன்று வரை பிடிவாதமாய் இருக்கிறவர் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.  எல்லாவற்றுக்கும் இரண்டு பக்கம் இருக்கும் தானே!.

இப்படியாக இருந்த உதயம் மெல்ல தன் பொலிவிழக்க ஆரம்பித்தது. சினிமா அவ்வளவுதான் என பைரஸி, சிடி, டிவிடி, டெலிவிஷன் என பல காரணங்களால் அவ்வப்போது தொய்வடையும் போது எல்லா தியேட்டர்களைப் போலவே பெரிய திரையரங்கை நடத்த முடியாமல் உதயம் பால்கனியை மினி உதயம் ஆக்கினார்கள். பெரிய திரை, புஷ்பேக் என இருந்தாலும் ஏனோ கீழ் தியேட்டர் சத்தம் சில சமயம் மேலேயும், மேல் தியேட்டர் சத்தம் கீழேயும் கேட்பது எனக்கு பிடிக்காமல் போனது. ஆனால் அவர்களின் மூன்று தியேட்டரிலிருந்து நான்கு தியேட்டர் பரிணாம வளர்ச்சி, தியேட்டர் வளாகம் ரியல் எஸ்டேட் கைகளில் போகாமல் காப்பாற்றியது. மற்றொரு காரணம் தியேட்டர் ஓனர்களின் குடும்ப டிஸ்ப்யூட் தான் என்று சொல்ல வேண்டும்.

ஆம் ஓனர்கள் தான். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட பார்ட்னர்கள் கொண்ட தியேட்டர் அது. மூன்றாவது தலைமுறையை பார்க்க ஆரம்பித்திருந்த நேரம். தியேட்டரை விற்றுவிடலாம் என்று ஒரு கூட்டமும், இல்லை நடத்தலாம் என்று பஞ்சாயத்து ஓடியதாய் நிறைய கதைகள் எல்லாம் உண்டு. கடைசியில் அது உண்மை தான். காரணம் 2008 வரைக்கும் அந்த திரையரங்கம் கோர்ட்டின் கண்ட்ரோலில் தான் இயங்கிக் கொண்டிருந்தது. அதன் பிறகு  உதயத்தை நிறுவியவரே விலைக்கு வாங்கி, இன்றைக்கு விற்றிருக்கிறார்.

உதயம் மங்கிப் போனதற்கு காரணம் சுற்றி உருவாகியிருக்கும் அப்கிரேடட் திரையரங்குகளின் வசதிகள் அங்கு இல்லாதது. எந்த தியேட்டரில் நான் படம் பார்த்து வளர்ந்தேனோ அந்த தியேட்டரில் நான் கடைசியாய் படம் பார்த்து, பார்த்தது என்று கூட சொல்ல முடியாது. எங்களுடய ‘6 அத்யாயம்” திரைப்பட வெளியீட்டின் போது.  அதன் பிறகு ஏனோ அங்கே படம் பார்க்க ஆர்வமே ஏற்படவில்லை. சீட்கள் சுமாராக இருப்பதாகவும், ஒலி,ஒளி அமைப்பும் அத்தனை சிலாக்கியமாய் இல்லாததாலும் மெல்ல தியேட்டர் தன் பொலிவை இழந்தது. ஆனால் இன்றைக்கும் அதை புதுப்பித்து தியேட்டராக மாற்றினால் மிகச் சிறந்த செண்டராய் இருக்கும். அது நடக்காது. காரணம் இன்றைய சினிமா தியேட்டர்களின் நிலை. திடீரென பழைய தியேட்டர்களை எல்லாம் புதிதாய் அப்கிரேட் செய்து புதிய புதிய வசதிகளோடு திறக்கும்  நிகழ்வுகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருகிற அதே நேரத்தில், உதயம் போன்ற மக்களின் தியேட்டர்கள் மூடப்படுவது வருத்தமான விஷயம் தான். ஏனென்றால் டிக்கெட் ரேட்டிலிருந்து உணவுகள் வரை மிகவும் நியாயமான விலையில் கிடைத்துக் கொண்டிருந்த ஒர் இடம்.  

இன்றைய தியேட்டர்கள் மக்களின் வருகைக்காக மீண்டும் காத்திருக்க ஆரம்பித்திருக்கிறது. மக்கள் திரையரங்குக்கு வர ஏனோ தயக்கம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இது மேலும் பல திரையரங்குகளை மூடச் செய்யும். தியேட்டர்கள் இருக்கும் இடத்தில் பெரிய கேட்டட் கம்யூனிட்டி வரலாம். அங்கே வசிக்கும் மக்களுக்காக தனியே சின்ன தியேட்டர் ஓப்பன் செய்யப்படலாம். இன்றைய காலத்தில் ஒவ்வொரு வீடும் ஒரு மினி திரையரங்காய் மாறிக் கொண்டிருக்கிறது. காரணம் டெக்னாலஜி. எல்லார் வீட்டிலும் குறைந்த பட்சம் 55 இஞ்ச் டிவியியும் ஹோம் தியேட்டரும் இருக்கும் இடமாய்த்தான் உதயம் தியேட்டர் இடம் மாறப் போகிறது. நான்கு ஸ்க்ரீனில் 1500 பேர் பார்த்த இடத்தில் 500 வீட்டு ஸ்க்ரீனில் ஆயிரக்கணக்கானவர்கள் பார்க்கப் போகிறார்கள். சினிமா பார்க்கும் மீடியம் தான் மாறுகிறது. சினிமா ஏதோ ஒரு வித மீடியத்தில் உதயமாகிக் கொண்டேதான் இருக்கும்.

கேபிள் சங்கர்

 15-2-2024

 

 

Feb 7, 2024

சாப்பாட்டுக்கடை- கும்பகோணம் மங்களாம்பிகா

 ஏற்கனவே இவர்களைப் பற்றி சில வருடங்களுக்கு முன் சாப்பாட்டுக்கடை பதிவிலேயே எழுதியிருக்கிறேன்.நான் எப்போது கும்பகோணம் போனாலும் இவர்களுடய ரவா தோசை, சாம்பார், கார சட்னிக்கு அடிமை. அட்டகாசமாய் இருக்கும். முன்பு கும்பேஸ்வரர் கோயில் வளாகத்தினுள் வைத்திருந்தவர்கள் இப்போது அந்த கோவிலின் பிரகாரத்தின் பின்னால் வைத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட அதே செட்டப்பில் தான் இக்கடையும்.

நாங்கள் சென்ற போது ஏகப்பட்ட கூட்டம். இத்தனைக்கும் வார நாட்கள் தான். வெளியூர்க்காரர்கள் தான் அதிகம். அங்கே உட்கார்ந்திருந்த தெலுங்குகார கஸ்டமரிடம் கும்மோணத்துக்கார சப்ளையர் தெலுங்கு அரிசு உப்புமாவை “உப்பு பிண்டி” பிய்யம் உப்பு பிண்டி என்று ரெகமெண்ட் செய்து கொண்டிருந்தார்.  இடம் கிடைத்து உட்கார்ந்த மாத்திரத்தில் உடனடியாய் ஆர்டர் செய்தது ரவா தோசைதான். நல்ல முறுகலா கொடுங்கன்னு சொல்லி ஆர்டர் செய்தேன். மகனார்கள் நெய் பொடி தோசை ஆர்டர் செய்தார். இன்னொருவர் பரோட்டா. மனைவியும் அம்மாவும் தோசை மற்றும் ரவா. 

நான் கேட்டார்ப் போலவே நல்ல முறுகலாய் ரவா தோசை வந்தது. உடன் காரச்சட்னியை கேட்டு வாங்கி போட்டுக் கொண்டேன். நல்ல எண்ணெய் ஊற்றி பொன்முறுவலாய் ஒர் ரவா தோசை. பிய்த்து சாப்பிட எடுக்கும் போதே ரவா தோசையின் ப்ரவுன் நிற முறுகல் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை கொடுக்க, சாம்பாரில் தொட்டு ஒரு வாய், தேங்காய் சட்னி, சாம்பாருடன் ஒரு வாய். காரச்சட்னியுடன்  ஒரு வாய் சாப்பிட்டதும் ஒவ்வொரு விள்ளலும் வாயில் கரைந்து போனது. கண் மூடி கண் திறப்பதற்குள் தோசை காலி. இத்தனை நாள் இங்கே நான் ட்ரை செய்யாத அயிட்டம் பொடி தோசை. அதற்கு காரணம் நிறைய உண்டு. பெரும்பாலான பொடி தோசைகள் நன்கு வழுமூனாக அரைத்த பொடியாய் இருக்கும். அதுவும் காரமும் இல்லாமல், பருப்பு அதிகமாய் நரநரவென நெய்யோடும், எண்ணெயோடும் இருக்கும். அது எனக்கு அறவே பிடிக்காது. ஆனால் இவர்கள் கொடுத்த பொடி அப்படியல்ல.. என்னவென்று சொல்ல..

நன்கு பொன்நிற கலரில், நெய்யூற்றி வெந்த தோசைக்கு நடுவில், கல்லில் இடித்த மிளகாய் விதைகள் பாதி அரைப்பட்ட பத்தத்தில் நல்ல காரம் மற்றும் சரியான மிக்ஸுடன் வறுத்த பருப்பையும் சேர்த்து அரைத்த பொடி. தோசையை பிரித்துப் பார்க்கும் போதே வாயில் எச்சில் ஊறியது. நெய்யை தாராளமாய் ஊற்றி, உள்ளே மிளகாய் பொடியை முழுவதுமாய் ஸ்பெர்ட் செய்திருக்க, ஒவ்வொரு விள்ளலுக்கும் நடு நாக்கில் லேசான மிளகாயின் காரமும், பருப்பும் அட அட அட.. டிவைனின் முழு அர்த்தத்தை இந்த பொடி தோசை சாப்பிட்டு விட்டு புரிந்து கொள்ளவும். அத்தனை அட்டகாசமான பொடி தோசை. ஒரு விள்ளல் சாப்பிட்டுவிட்டு மிஸ் செய்யக்கூடாது என்று இன்னொரு தோசை ஆர்டர் செய்தோம். அதை சாப்பிட்டுவிட்டு என் இளைய மகன் “அப்பா எனக்கு வந்த தோசையை விட உன் தோசை இன்னும் சூப்பரா இருக்கு” என்றான். பொடி தோசையின் மகிமை. உள்நாக்கு காரம் அடங்க அடங்க.. இன்னும் கேட்குமே மோர்!! 

எனவே கும்பகோணம் போகிறவர்கள் நிச்சயம் மிஸ் செய்யக்கூடாத ஒரு வெஜ் உணவகம் இந்த மங்களாம்பிகா மெஸ். கூட்டம் அதிகம் ஆக, ஆக, ஜிபே, கார்ட் எல்லாம் கிடையாது என்று கேஷ் கேட்கிறார்கள். அது மட்டும் கொஞ்சம் இடித்தது. 

கும்பகோணம் மங்களாம்பிகா

கும்பேஸ்வரர் கோயில் பிரகார வீதி.