Thottal Thodarum

Jun 23, 2020

லாக்டவுன் கதைகள் -12 - பெமினிஸ்ட்”தேங்க்ஸ்” என்றாள் அனு
“நோ பார்மாலிட்டி ப்ளீஸ். ரைட் சைட் உன் ரூமையே நீ எடுத்துக்கலாம். என்ன கொஞ்சம் புத்தகமெல்லாம் வச்சிருக்கேன். அட்ஜஸ்ட் பண்ணிக் கொடுத்திடறேன் வையிட்” என்று கேஷுவலாய் சொல்லியபடி அந்த அறைக்குள் சென்றவனை  பார்த்தபடி தன் பையை மோடாவின் மேல் வைத்துவிட்டு, சுற்றிலும் பார்த்தாள். அதே சேகுவாரா, பாரதியார், பெரியதாய் ஒரு ஹிட்காக், அபூர்வ சகோதரர்கள் அப்பு கமல், குவாண்டின் ட்ரெண்டினோ மூன்று வருடங்களுக்கு முன் எங்கிருந்தார்களோ அங்கேயே இப்போதும் இருந்தார்கள்.
@@@@@@@@@@
“நீ சினிமாக்காரனா?”
“ஏன் அப்படி கேக்குறே?”
“இல்லை கமல் ஹிட்காக் படமெல்லாம் வச்சிருக்கியே? அதான் கேட்டேன்?’
“சே குவாரா படம் கூட தான் வச்சிருக்கேன். அதுக்காக நான் புரட்சியாளனா?”
“இல்லியா என்ன? எதுக்கெடுத்தாலும் சண்டை போடுற? ரைட்ஸுங்குற? போலீஸ் கிட்டேயே ரூல்ஸ் பேசுறே? தென் வாட்? யூ ஆர் எ புரட்சியாளன்”
”சினிமா, இலக்கியம் எல்லாமே மக்களுக்காகத்தான். ஸோ.. இப்படியெல்லாம் பேசுனா சோஷியல் மீடியாவுல புரட்சிக்காரன் பேண்டேஜ் கட்டிருவாங்க. எனக்கு இவங்க எல்லாம்  ஆதர்சம் தட்ஸால்”
@@@@@@@@@@@
“ரூம் க்ளீன் பண்ணியாச்சு. கொஞ்சம் நேரம் கழிச்சுப் போ. ஏசி உனக்கு ஆகாது அதனால கதவை எல்லாம் திறந்து வச்சிருக்கேன். கொஞ்சம் செட்டில் ஆகட்டும். என்ன குடிக்கிறே? க்ரீன் டீ? இல்ல… ரெமி மார்டின் ஸ்டாக் இருக்கு அடிக்கிறியா?” என்று அனுவையே நேரிடையாய் பார்த்தான்.
இவன் நடிக்கிறான். கொஞ்சம் கூட உறுத்தாத மாதிரி நடிக்கிறான். மூன்று வருடங்களுக்கு பிறகு சென்னைக்கு வருகிறேன். வழக்கமாய் டிக்கெட் புக் செய்துவிட்டுதான் கிளம்புவேன். இன்று ஏதோ ஒரு அவசரத்தில் சென்னைக்கு வந்துவிட்டேன். லாக்டவுன் அறிவித்ததிலிருந்து பஸ் டிக்கெட் எல்லாம் ப்ளைட் டிக்கெட் ரேட்டாய் இருந்தது. ப்ளைட் டிக்கெட் பத்தாயிரம் என்றார்கள். “ஒரு வாரம் தானே என் கூட இர்றேன்” என்று என்னை நேராய் ஊடுருவி பார்த்தபடி கேட்டான். எப்போதுமே அப்படித்தான். ஊடுருவிப் பார்க்கும் பார்வை அவனுடய ஸ்பெஷல். சட்டென அவனின் கண்ணை தவிரக்க முடியாமல் பேச்சு வராத சமயங்கள் கூட இருந்திருக்கிறது. அப்படியான ஒரு சந்தர்பம் லாக்டவுனோடு வாய்க்கும் என்று அனு நினைக்கவில்லை.
@@@@@@
“யூ மேட் மை டே. தேங்க்ஸ் அனு”
”வாட் ஸோ ஸ்பெஷல்.”
“உங்க பேச்சுத்தான்”
“ஹலோ நான் பேசுனேனா? கவிதை படிச்சேன்”
“ஓக்கே.. கவிதை,  கவிதையா பேசுனீங்க.. சரியா?’
“ஐ திங்க் உங்களுக்கு என் கவிதை பிடிக்கலைனு தோணுது. தென் வொய் யூ தேங்க் மீ” என்று சற்றே குரலில் கோபத்தை வரவழைத்துக் கொண்டே கேட்டாள். ஏன் முன் பின் தெரியாதவனின் இத்தனை கோபப்படுகிறேன் என்று கூட நினைத்துக் கொண்டாள். ஒரு கரியேட்டராய் இருந்து கொண்டு விமர்சனத்தை ஏற்க மறுப்பது நல்லதல்ல என்று ஒரு மூலையில் தோன்றினாலும், கவிதைன்னா என்னான்னு தெரியாதவனெல்லாம் விமர்சனம் செய்தால் கோபப்படுவதுதான் நியாயம் என்று நினைத்துக் கொண்டாள்.
“உனக்கும் எனக்கும் ஒரே ஊர் அது வாசுதேவநல்லூர்னு ஒரு வரி படிச்ச உடனே என் மனசு சின்ன வயசுக்கு ஓடிருச்சு. அப்புறம் தான் யாரு எழுதியிருக்காங்கன்னு பார்த்தேன். மீரானு இருந்துச்சு. ரொம்ப வருஷத்துக்கு அது பெண்ணுன்ணே நினைச்சிட்டிருந்தேன். மனசுக்கு பிடிச்ச வரியா போனதுனால அது எழுதினது ஆணா இருந்தா என்ன பெண்ணா இருந்தா என்ன? கவிதை, குறீயீடு எல்லாம் ஹம்பக். ஒரு விஷயத்தை படிச்சா, அது படிக்கிறவனுக்கு ஏதாச்சும் ஒரு உணர்வை கொடுக்கணும். அது எதுவா இருந்தாலும் சரி. எழுதினவங்க பேர் பார்த்து பாராட்டுறதுல என்ன இருக்கு? அது மட்டுமில்லாம எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம்”. என்றவனை ஆச்சர்யமாய் பார்த்தாள்.  மீராவையெல்லாம் படிச்சிருக்கியா? என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
“அப்படித்தான் யாரோ ஒருத்தர் பெயர் கூட மறந்துச்சு.. விகடன் சொல்வனத்துல ஒருத்தர் நாயை வச்சி ஒரு கவிதை எழுதியிருந்தாரு. செம்ம கவிதை. நீ ஏன் கட்டுரை, கதைகள் எழுதக்கூடாது?” என்றவனை மிகக் கோபமாய் பார்த்தாள்.
“உனக்கு என்ன பிடிக்குமோ அதை செய்றது என் வேலையில்லை” என்று விருட்டென கிளம்பினாள் அனு.
ராஜனை ஒரு வருடமாய் பேஸ்புக்கில் பாலோ செய்து கொண்டிருக்கிறாள். அவ்வப்போது ரசனையான வரிகளையும், அவன் வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களைக் கூட மிக நகைச்சுவையோடு பகிருவதை பார்த்து ஒரு நாள் அவனுடன் சேட் பாக்ஸில் பேசினாள். கொஞ்சமாய் நெருக்கமானார்கள். அவர்களின் முதல் சந்திப்பு இந்த கவிதை அரங்கு. அனுதான் அழைத்திருந்தாள். நிகழ்ச்சி முடிந்து எல்லோரும் பாராட்டி சென்றபின் ராஜனுடன் டீ அருந்தியபடி பேச விரும்பி காத்திருக்கச் சொல்லியிருந்தாள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம். ஏதுவும் தொந்திரவு தராமல் ஓரமாய் அவனின் காரின் மேல் சாய்ந்தபடி சிகரட் பிடித்த ஸ்டைல் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் இத்தனை ரூடாய் அவனின் விமர்சனமிருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் பாராட்டிய நேரத்தில் இவனின் விமர்சனம் அவன் மீதான கவன ஈர்ப்பு ட்ரையாய் இருக்குமோ? என்கிற சந்தேகம் கூட வந்தது. ஆண்களுக்கு பெண்கள் எப்போதுமே ட்ரையல் அண்ட் எரர் தான். இப்படி போனால் அப்படி ட்ரை பண்ணிப் பார்க்கணும் என்று ஆண் நண்பர்கள் பேசி கேட்டிருக்கிறாள்.
@@@@@@@@@
”உனக்கு ஏதாச்சும் வாங்கணுமா?”
“நத்திங்”
”பேட்ஸ்?”
அனு ரியாக்ட் செய்யாமல் யோசிக்க, “சம்வேர் நியர் தான் உன் டேட்ஸ்?” என்றான். அவளின் ஹேண்ட் பேக்கை திறந்து பார்த்தாள். அவசரத்துக்கு ஒன்றே ஒன்று மட்டுமிருக்க, எழுந்து “நானும் வர்றேன். கடைக்கு” என்றாள்.
“பத்து பேர் நடமாட வேண்டாம்னுதான் லாக்டவுனே. நாப்கின் வாங்குறதுக்கு நீ எதுக்கு? நான் வாங்குனதில்லையா இதுக்கு முன்ன? கம்மான். அப்படின்னா நீயே போ. அப்படியே நம்ம அண்ணாச்சிக்கடை உனக்கு தெரியும் மளிகை அயிட்டம் லிஸ்ட் போட்டுத் தர்றேன்.  சில பெயின் கில்லர்ஸ் மெடிக்கல்ல வாங்கிட்டு வந்திரு. ஓகே” என்று கேஷுவாலாய் சொல்ல, அனுவுக்கு அவனை மீண்டும் பிடித்து விடுமோ என்கிற அச்சம் எழ ஆரம்பித்தது.
”ஓகே நீயே போய்ட்டு வா” என்று தன் பையிலிருந்து 500 ரூபாய் நோட்டு ஒன்றை கொடுத்தாள்.
“எதுக்கு?”
“மை ஷேர்? இன்னும் பத்து நாள் இருக்க வேணாமா?’
அவள் எப்பவுமே அப்படித்தான் எல்லாவற்றிலும்  தன் பங்கு என்று பிரித்துக் கொடுத்துவிடுவாள். 500 ரூபாயை ஒரு முறை பார்த்துவிட்டு, தன் பையில் போட்டுக் கொண்டு கிளம்பினான் ராஜன்.
@@@@@@@@@@@
முதல் சந்திப்புக்கு பிறகு தனக்கும் ராஜனுக்குமான உறவு தொடராது என்றுதான் நினைத்திருந்தாள். அன்றிரவு அவனுடனான டின்னர் ப்ரோக்ராமை கேன்சல் செய்துவிட்டாள். அவன் தன்னுடன் இணக்கமாக இல்லை என்பதை உணர்த்த வேண்டுமென்று நினைத்தாள். ஆனால் அதை அவன் பொருட்படுத்தவேயில்லை. சரி உன் இஷ்டம் என்று அவன் பாட்டுக்கு காரை எடுத்துக் கொண்டு போனான். அது அனுவுக்கு கொஞ்சம் ஆச்சர்யமாய்க் கூட இருந்தது. பெரும்பாலும் ஆண்கள் அவளிடம் அப்படி நடந்து கொண்டதில்லை. பழகிய சில நிமிடங்களிலேயே அதிகாரத்தையும், உரிமையையும் கொடுக்காமலேயே எடுத்துக் கொள்வதில் கொஞ்சம் கூட தயக்கமில்லாதவர்களைத்தான் பார்த்திருக்கிறாள். அன்றிரவு பஸ்ஸில் போகும் போது “சாரி கொஞ்சம் மூட் அவுட் அதான் டின்னர் கேன்சல் பண்ணேன்” என்று மெசேஜ் அனுப்பினாள்;
“ஐ நோ. முதல் சந்திப்பிலேயே விமர்சிப்பவர்களோடு டின்னர் சாப்பிடுவது என்பது அத்தனை சுலபமல்ல. பட் நோ ப்ராப்ளம். குட் நைட்” என்று ஸ்மைலியோடு மெசேஜ் அனுப்பினான். அனுவுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. அவனுக்கு தெரிந்திருக்கிறது. மனதை படிக்கிறவன் போல. அந்த பயத்தின் காரணமாய், அதன் பின்னான இணைய தொடர்பிலோ, அல்லது போன் தொடர்பிலோ எங்கேயும் அதைப் பற்றி பேசவேயில்லை. அனு  ஒரு முறை அச்சமயத்தில் வெளியான ஒரு சினிமாவைப் பற்றி கழுவி ஊற்றி வைக்க, ஜாதி சங்கக்காரர்கள் போல ஒரு கூட்டமே நீ அந்த ஜாதி இந்த ஜாதி என்று அனுவின் ஜாதியை தேடிக் கண்டுபிடித்து, ஆவேசக் கூக்குரலிட்டார்கள். ராஜன் தான் அவர்களின் விஷயங்களை ஸ்கீரீன் ஷாட் எடுத்து புகார் செய்ய உதவினான். போராடக் கற்றுக் கொடுத்தான் மனதொடிந்து போய்விடாமல் உடன் இருந்தான். அப்போதிலிருந்து அவன் மீதான நெருக்கம் அனுவுக்கு அதிகமானது.
”ஒரு கவியரங்கம். சென்னைக்கு வர்றேன். ரெண்டு நாள் தங்குறா மாதிரி ஏதாச்சும் லேடீஸ் ஆஸ்டல் பிக்ஸ் பண்ணித் தர்றீங்களா ராஜன்?”
“ரெண்டு நாளுக்கு எதுக்கு லேடீஸ் ஹாஸ்டல் எல்லாம்? ப்ரெண்ட் வீடு இருந்தால் வந்து தங்க மாட்டாயா?  அது போல நினைத்து என் அறையில் வந்து தங்கு.  ஐ வில் டேக் கேர் ஆஃப் யூ” என்றான் உரிமையாய்.
கோயம்பேட்டில் வந்து ரிஸீவ் செய்தான். அனுவுக்கென ஒர் அறையை சுத்தப்படுத்தி வைத்திருந்தான். ஏசி தனக்கு ஆகாது என்றவளுக்காக அடுத்த அரை மணி நேரத்தில் காற்றோட்டமாய் இருக்கும் இன்னொரு அறையை சுத்தப்படுத்திக் கொடுத்தான். ”ரெண்டு நாள் தங்கப் போகிறவளுக்கு இந்தனை கவனிப்பு அதிகம்” என்றாள் அனு.
”என்னோட ஒருத்தர் இருக்குறாங்கன்னா அவங்க கம்பர்டபிளா பீல் பண்ண வைக்க வேண்டியது என் கடமை. அது ரெண்டு நாளுக்கானாலும் சரி லைஃப் லாங்கா இருந்தாலும் சரி” என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் அவன் பாட்டுக்கு சமையல் அறைக்குள் நுழைந்து பில்டர் காப்பி போட ஆரம்பித்தான்.
 அடுத்த ரெண்டு நாட்களுக்கு போக வேண்டிய இடங்களைப் பற்றி தெரிந்து கொண்டு, லோக்கல் ஆட்டோக்காரர் ஒருவரை பிக்ஸ் செய்தான். ”நான் ஏற்கனவே சென்னை வந்திருக்கேன் ராஜன். திஸ் இஸ் டூ மச். ஐ கேன் டேக் கால்டாக்ஸி” என்றாள் அனு. அவன் அளவுக்கு அதிகமாய் கன்சர்ன் எடுத்துக் கொள்வதாய் பட்டது. மீண்டும் தன்னை இம்ப்ரஸ் செய்ய அவன் முயற்சிக்கிறானோ? என்று கூட தோன்றியது. அப்படியான எண்ணம் தோன்றும் போதே சட்டென எண்ணத்தை கலைத்தாள். “இடியட் நான் என்ன நினைக்கிறேன்னு கண்டு பிடிச்சாலும் பிடிச்சிருவான்” என்று நினைத்தாள்.
“நீ சென்னைக்கு புதிதில்லைன்னு தெரியும். பட் நான் சொல்லுறது கால்டாக்சிய விட சீப் அண்ட் கம்பர்ட். தெரிந்த ஆள் ஆட்டோ ட்ரைவர். கம்பர்டபிளா போயிட்டு வரலாம்னு சொன்னேன். தென் இட்ஸ் அப் டு  யூ”  என்றவன் ஒரு நொடி அமைதியாய் இருந்துவிட்டு, அனுவின் முகத்தை நேராய் பார்த்து, “உன்னை இம்ப்ரஸ் பண்ண இதை பண்ணலை. ஆஸ் எ கெஸ்ட் ஆஃப் மீ உன்னை கம்பர்டபிளா வச்சிக்கணும்னு பார்க்கறேன். ஆட்டோ சொல்லட்டுமா?” என்றான்
இடியட்.. இடியட் படிக்கிறான். மனசை அப்படியே படிக்கிறான். இவனிடம் பொய் சொல்ல முடியாது. அனுவையும் மீறி அதிசயமாய் வெட்கப்பட்டாள்.
நமக்கென ஒரு வண்டி எப்போதும் காத்திருக்கிறது. ஊபர் புக் செய்து காத்திருந்து ஆன்லைனா? கேஷா? என்கிற விசாரணையெல்லாம் இல்லாமல் வெயிட்டிங் சார்ஜ் ஆகிவிடுமே என்கிற பதட்டமில்லாமல் மிக இயல்பாய் உணர்ந்தாள். ரெண்டாவது நாள் கவியரங்கம் முடிந்து வர மிகவும் லேட்டாகிப் போய், அன்றிரவு அவள் போக வேண்டிய பஸ்ஸை மிஸ் செய்தாள். அது குறித்து ஒரே ஒரு முறை கால் செய்தான். கவியரங்கத்தில் இருந்ததால் கட் செய்தாள். புரிந்து கொண்டு பஸ் விஷயத்தை மெசேஜ் செய்தான். பரவாயில்லை என்று சொன்னதற்கு பிறகு கொஞ்சம் கூட தொந்திரவு இல்லை. வீடு சேர்ந்த போது, பதினொன்று ஆகியிருந்தது.
டேபிளின் மேல் ரெமி மார்ட்டின் பாட்டிலை ஓப்பன் செய்து வைத்திருந்தான். பக்கத்தில் கொரிக்க, சில அயிட்டங்களையும் எதிரே இருந்த ஓ.எல்டி டிவியில் ஏதோ ஒரு வெளிநாட்டு மொழி வெப் சீரீஸ் ஓடிக் கொண்டிருந்தது.
“சாப்டியா?”
”இல்லை” என்று சொல்லியபடி டேபிளின் மேலிருந்த தட்டை முறுக்கை எடுத்து ஒரு கடி கடித்தாள்.
“டூயூ ட்ரிங்க்? அஹா பெங்களூர் பெண்ணைப் பார்த்து என்ன கேள்வி கேட்குறேன்?” என்று சிரித்தான்.
“குடிப்பேன். ரெமியும்.. செயிண்ட் ரெமியும் எனக்கு பிடித்த ட்ரிங்க். பட் தமிழ் நாட்டுக்காரர்களோடு குடிப்பதில்லை”
“ஏன்?”
“ரெண்டு பெக் போனதும் படுக்க கூப்பிடுவாங்க. கொஞ்சம் கோவமா முறைச்சா சாரி போதையிலனு சமாளிப்பானுங்க”
”அவ்வளவு ஆபத்தா ஃபீல் பண்ணா டோண்ட் ட்ரிங். அப்புறம் ஒரு விஷயம் ஐ டோண்ட் பஃக் ட்ரங்க்டு வுமன்.” என்று சிரித்தபடி  க்ளாஸை அவள் முன் தள்ளி வைத்தான்.  அவளே தன் பெக்கை ஊற்றிக் கொண்டு ரெண்டு ஐஸ் க்யூபை மட்டுமே போட்டுக் கொண்டு ஒரு சிப் அடித்தாள். ராஜன் அவளை ஆச்சர்யமாய் பார்த்தான். சீரீஸை ஆஃப் செய்து விட்டு கிட்டார் எடுத்து மெல்ல நிரடினான்.
”கிடாரெல்லாம் வாசிப்பியா?” என்று கண் விரிய ஆச்சர்யப்பட்டாள்.
அலையாய் சன்டானாவின் “மரியமரியா”வைப் பாட ஆரம்பித்து, அறை முழுவதும் இசையும் போதையுமாய் வழிய விட்டான். அனுவுக்கு சன்டானா என்றால் உயிர்.
”இன்னும் என்னவெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்க என்னைப் பத்தி?” என்ற அனுவின் கன்னத்தை தன் கையில் ஏந்தி வழக்கம் போல உற்றுப் பார்த்தான். அனுவுக்கு போதை அளவாய் இருந்தது. “என்ன பாக்குற? என் மனசுல இருக்குறதையா படிக்கிறியா? ஃபங்கிங் மைண்ட் ரீடர்” என்று அவன் கையை தள்ளிவிட்டாள்.  ராஜன் விலக்கி விட்ட கையை மார்ப்போடு கட்டிக் கொண்டான்.
“சாரி..சாரி.“ என்று அவன் கையை மார்பிலிருந்து பிரித்து மீண்டும் தன் கன்னத்தில் வைத்துக் கொள்ள அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.ராஜன் தன் கையை இன்னும் இறுக்கமாய் கட்டிக் கொள்ள, பேலன்ஸ் இல்லாமல் அவன் மேல் விழுந்தாள் அனு. மெல்ல ராஜனின் உதடுகளை கவ்வி முத்தமிட ஆரம்பிக்க, ராஜனின் கை இறுக்கம் அவனிடமிருந்து விலகி, அனுவை சுற்றி இறுக்க ஆரம்பித்தது. முயங்கி முடித்து மீண்டும் ராஜனை முத்தமிட்டுக் கொண்டே “குடித்த பெண்ணை ஃப்க் செய்ய மாட்டேனு ஒரு மானஸ்தர் சொன்னார் கொஞ்ச நேரம் முன்னாடி?” என்று கேட்டாள் அனு.
“ஆமாம் அதுக்கென்ன? நான் தான் பண்ண மாட்டேனு சொன்னேன். என்னை ஃப்க் பண்ண அனுமதிக்க மாட்டேன்னா சொன்னேன்?” என்று அவள் கண்களைப் பார்த்து சிரித்தபடி சொன்னான். ராஜனின் சிரிப்பையும் பார்வையும் ஒரு சேர ஃபீல் செய்து மீண்டும் ரொம்ப நாளுக்கு பிறகு வெட்கப்பட்டாள்.  ராஜனை அழுந்த ஒரு முறை முத்தமிட்டு “நாம ஏன் ஒன்னாய் இருக்கக் கூடாது?” என்று கேட்டாள்.
@@@@@@@@@@@@
பேஸ்புக்கின் நோட்டிபிகேஷனில் லாக்டவுன் மீண்டும் ஒரு பதினைந்து நாள் எக்ஸ்டெண்ட் ஆவதாய் செய்தி வந்திருந்தது. சலிப்பாய் டிவியை ஆன் செய்தாள். நெட்ப்ளிக்ஸில் டார்க் பாதியில் நிறுத்தியிருக்க, அதை தொடர்ந்தாள். “இன்னைக்கு என்ன சமைக்கட்டும்?” என்று கேட்டபடி அவளருகில் அமர்ந்தான் ராஜன்.
“உன் இஷ்டம்” என்றாள்.
சிறிது நேரத்தில் ஒரு பாத்திரத்தில் பால் மணத்தோடு தயிர்சாதத்தை பிசைந்து அதில் ரெண்டு துண்டு சிக்கன் ஊறுகாய் போட்டு கொண்டு வந்தான். நடுநடுவே மாதுளை வேறு நிரட அட்டகாசமாய் இருந்தது. “சிக்கன் ஊறுகாய் எனக்காக வாங்கினாயா? என்று கேட்டதற்கு பதில் சொல்லாமல் சிரித்தான். ராஜனுக்கு சிக்கன் ஊறுகாய் பிடிக்காது.
“என்ன அழுகுனி சிரிப்பு?.” என்கிற அனுவின் கேள்விக்கு பதிலே சொல்லாமல் டிவியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“இப்பவெல்லாம் பேஸ்புக்குலேயே ஆளைக் காணம்?”
“பேஸ்புக் பெருசுங்க சுத்துற இடமாயிருச்சு. என்னைப் போன்ற யூத்தெல்லாம் இன்ஸ்டாலதான் வாசம்.” என்று மீண்டும் சிரித்தான்.
”பேஸ்புக்குல சுத்துனா சிக்குறோமேனு இடத்த மாத்திட்டியா?” என்று கேட்டதற்கு முகம் மாறாமல் ”நான் என்னைக்கும் எப்பவும் யாருக்கும் பயந்ததே இல்லை” என்றான்.
@@@@@@@@@@@@@
”சாதிகாவின் கவிதைக்கு ஆர்டின் விட்டிருக்க” என்று சிரித்தபடி கேட்டாள் அனு.
“யாரு சாதிகா?’” என்று கேட்டான் ராஜன்.
“சாதிகா பர்வீன். கவிஞர். என்னை விட மோசமாத்தான் கவிதை எழுதுறா? ஆனா உருகி உருகி லைக்கும் ஆர்டினும் விடற?”
“ஓ அவளா? நல்லாத்தானே எழுதுறா? எனக்கு புரியுது”
“சின்னப் பொண்ணு புதுசா இருக்கா நல்லா எழுதுறதாத்தானே தோணும்?” என்று அழுத்தமாய் அனு சொன்னதன் அர்த்தம் லேசாய் புரிந்து. பதில் சொல்லாமல் கிளம்பி போனான்.
“நாம லிவின்ல இருக்குறோம்ங்கிறத பப்ளிக் ஸ்டேடஸா போட்டுறலாமா?”
தங்கைக்கு பையன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது வரை வேண்டாம் என்று சொல்லியிருக்கிறான். ராஜனின் அம்மாவிடம் ரெண்டொரு முறை போனில் பேசியிருக்கிறாள்.
“அய்யோ இப்ப வேண்டாம். ஊருல கொஞ்சம் பிரச்சனை இருக்கு. அதுவரைக்கும் கொஞ்சம் தள்ளி வைப்போம். ஓக்கே. ஆஸ் வி அக்ரிட்.” என்று சொல்லி அவளை அணைத்தபடி “வர வர பொண்டாட்டியாயிட்டு வர” என்று சொல்லி ஆபீஸுக்கு போனான். அவன் அவ்வளவு சுலபமாய் எடுத்துக் கொண்டு போனதை அனுவால் அப்படி எடுத்துக் கொள்ளவில்லை. அன்று முழுவதும் யோசனையாகவே இருந்தாள்.
@@@@@@@@@@@
டிவியில் ஏதோ ஒரு படம் ஓடிக்கொண்டிருக்க, ராஜன்  அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தான். பக்கத்தில் உட்கார்ந்திருந்த அனுவின் போனில் தொடர்ந்து மெசேஜ் டோன் வந்து கொண்டேயிருக்க, கவனம் கலைந்து ராஜன் போனைப் பார்த்தான். சுதன் என்கிற பெயர் அதில் தெரிய ஒரு நொடி அதை பார்த்துவிட்டு டிவியில் மிண்டும் கவனத்தை திருப்பினான். அவன் பார்த்ததை அனு கவனித்தாள். “சுதன் தான் எப்படியாச்சும் வந்து உன்னை கூட்டிட்டு போயிரவானு? கேட்டு மெசேஜ் பண்ணிட்டேயிருக்கான்”  என்றாள்.
“ஏதாச்சும் கஷ்டமா இருக்கா இங்க இருக்குறது?” என்று கேட்ட ராஜனின் குரலில் ஆதங்கம் இருந்தது.
“நாட் அ டால். ஃபர்ஸ்ட் வீக் இங்க ஸ்டே பண்ண வேண்டியதா இருக்கேனு அவன் கிட்ட சொன்னேன். அவனுக்கு நம்மளைப் பத்தி தெரியும். ஸோ.. அவன் கேட்டான்.”
”சந்துல சிந்து பாட ட்ரை பண்ணுறான்” என்று ராஜன் முணுமுணுத்தான். அது அனுவின் காதில் நன்றாகவே விழுந்தது.
”ஸ்டாப் திஸ் மேல் ஷாவனிஷ்ட் ஸ்டேட்மெண்ட் ராஜன். இன்னும் நீ மாறலை?”
“நம்ம ரெண்டு பேருக்குமிடையே இருக்குற கேப்பை பயன்படுத்திக்க ட்ரை பண்ணுறானு சொன்னேன். அதை லோக்கல் ஸ்லாங்குல சொன்னேன் இதுல என்ன இருக்கு?”
“இது யாரு சந்து. நானா? எல்லா ஆம்பளைங்களும் சிந்து பாடிட்டுத்தான் நிறுத்துவீங்களா என்ன?. நீங்க பாடுறது எல்லாம் சிந்தா இல்லையான்னு எங்களுக்குத்தான் தெரியும்”
“ஓ.ஓ..ஓ.. ப்ளீஸ் ப்ளீஸ் வி ஹேவ் டூ ஸ்டாப் இட் ரைட் நவ்” என்று ராஜன் எழுந்து அவன் அறைக்குள் சென்றான். அனுவுக்கு கோபம் வந்து அவன் அறையை தட்டினாள். “இது என்ன புது ஆட்டிட்டியூட் பேச்ச கட் பண்ணிட்டு போறது?”
“தட் மீன்ஸ் ஐ டோண்ட் வாண்ட் டூ கண்டியூ தெ டிஸ்கஷனு அர்த்தம்”
“அதான் எப்போலேர்ந்து”
”நம்ம ப்ரேக்கப்புக்கு அப்புறம்” என்றான் ராஜன்.
@@@@@@@@@@@@
”கொஞ்சம் நாள் ஷோசியல் மீடியாவுலேர்ந்து வெளிய வரலாம்னு இருக்கேன்” என்றாள் அனு.
”ஓக்கே”
“ஏன்? எதுக்குனு கேட்க மாட்டியா?’
“உன் சோஷியல் மீடியா. உன் இஷ்டம் ” என்று தோள் குலுக்கினான் ராஜன்.
“என்னால அங்க நடக்குறத பார்த்துட்டு கண்டுக்காம இருக்க முடியலை?”
“எதை பார்த்துட்டு?”
“உன்னையும், உன் ஸ்டேடஸையும் போஸ்ட் லைக் எல்லாம் பார்த்து கடுப்பாகித்தான் வெளிய வர்றேன்”
“நான் என்னைக்காவது உன் ஸ்டேடஸுக்கு கருத்து சொல்லியிருக்கேனா?’
“நாட் ஒன்லி ஸ்டேடஸ். நீ லைக் பண்ற ஆளுங்க. அல்ரெடி ஐ டோல்ட் யூ. அந்த சாதிகா. நீயும் அவளும் பப்ளிக் போஸ்டுல பேசிக்கிறதே ஆக்ளியா இருக்கு. இதுல ரெண்டு பேரும் போட்டோ போஸ்ட் வேற. ச்சை” என்று முகம் முழுக்க ஆத்திரமாய் பேசினாள். அமைதியாய் அவளையே வழக்கம் போல பார்த்துக் கொண்டிருந்தான் ராஜன். அவன் பார்வையை தவிர்த்த அனுவின் முகத்தை தன் பால் திருப்பி வைத்து “ யூ ஸ்டாக் மீ?” என்றான். அவன் குரலில் கோபம் இருந்தது.
“அதான் பப்ளிக்கா நடக்குதே. இதுல தனியா ஸ்டாக் பண்ணனுமா?’
“ஒரு வருஷம் முன்னாடி நானும் நீயும் கூட இதே போலத்தான் சேட் பண்ணோம். போட்டோ போட்டோம்”
“யா.. அப்ப அவளுக்கும் உனக்கும் என்ன ரிலேஷன் ஷிப்?”
“முட்டாள் தனமா பேசாத”
“நான் முட்டாள் இல்லை. தட் யூ நோ வெரி வெல்”
“பட் இப்ப முட்டாள் தனமாத்தான் பேசறே?. என்னை சந்தேகப்படுறே?”
“ஏன் நீ சந்தேகத்துக்கு அப்பார்ப்பட்டவனா?’
“எல்லாரும் சந்தேகத்துக்கு உட்பட்டவங்கதான். டூ சம் எக்ஸ்டெண்ட். நான் அப்பார்ப்பட்டவனும் கூட. உனக்கான ஸ்பேசை நான் கொடுக்குறேன். அதையே நானும் எதிர்பார்க்குறேன். லிவ்வினுக்கு முன்னாடி நான் யார் கிட்ட பேசினேனோ அத்தனை பேர் கிட்டேயும் பேசுறேன். ஆனா அப்போ கவனிக்காத இப்ப எல்லாத்தையும் கவனிக்குற. ஏன் ஆம்பளைங்களுக்கு கமெண்ட் பண்றது உன் கண்ணுல தெரியாதா? உனக்கு என்ன இன்ஸெக்யூரிட்டி இப்ப? நான் என்னைக்காவது யார் கூட பேசுற? போட்டோ போடுறன்னு கேட்டிருக்கேனா?. பிகாஸ் நான் உன்னை நம்புறேன்”
”என் மேல அக்கரையில்ல. அதை நம்பிக்கைனு சொல்லாதே..”
“ஷிட். ”
“யெஸ். ஷிட்டாத்தான் என்னை பீல் பண்ண வைக்குறே?”
ராஜன் ஆழமாய் மூச்சை இழுத்துவிட்டான்.
“ப்ரேக்கப்புக்கு காரணம் தேடி சண்டை போடுறியா?”
“அப்படியா தெரியுது உனக்கு ராஜன்?”
“யெஸ். நான் உன்னோட ரிலேஷன்ஷிப்புல இருக்குறது முன்னாடி எப்படி எல்லாரோடையும் இருந்தேனோ அப்படித்தான் இருக்கேன். திடீர்னு உனக்குத்தான் வித்யாசமா தெரியுது. ஒரு வேளை உனக்கு என் மேல இண்ட்ரஸ்ட் போயிருக்கலாம்னு தோணுது. சமீபகாலமாய் உன் இண்ட்ரஸ்ட் வேற ஒருத்தர் மேல இருக்கு. ஐ நோ” என்று ஆழமாய் அனுவின் முகத்தைப் பார்த்தான்.
அனுவுக்கு சுள்ளென்று கோபம் வந்தது. சற்று உண்மையை உரசுகிறான். அவன் பார்வையை தவிர்த்தாள். “சுதனைப் பத்தி தேவையில்லாம பேசாத. ஹி இன்ஸ் ஜஸ்ட் எ ப்ரெண்ட்”
“நான் சுதனு சொல்லையே?”
”உனக்கு மட்டும்தான் மனசுல இருக்குற படிக்க தெரியுமா? எனக்கு தெரியும்”
“ஸோ.. இட்ஸ் ட்ரு?”
“ஆமாம்டா.. உனக்கு சாதிகா முக்கியம்னா எனக்கு சுதனும் முக்கியம்தான்.”
“பெமினிஸ்ட் ஆட்டிட்டியூட்” என்றான் கோபமாய்
“என்ன பெமினிஸ்டுக்கு என்ன?” பதில் சொல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டான். 
“ஒன்னு அவங்களை யாராச்சும் வச்சிருக்காங்க. இல்லை அவங்க யாரையாச்சும் வச்சிருக்காங்க” என்றான் கிண்டலாய்.
“கம் அகெயின்?’
“ஏன் தமிழ் புரியாதா என்ன?
“யூ ஸ்டிங்கிங் இடியட். உன்னையெல்லாம் ப்ராட் மைண்டட் என்று நினைத்து உன்னுடன் இருந்தேன் பாரு. என்னை சொல்லணும். ஃபக்கிங் ஆஸ் ஹோல். இப்ப சொல்லுறேன் ஐயம் ப்ரேக்கிங் அப் வித் யூ” என்று கதவை திறந்து கொண்டு வீட்டை விட்டு போனவள்தான்.  அதன் பிறகு ஆட்கள் வந்துதான் அவளின் பொருட்களை எடுத்துக் கொண்டு போன போது ராஜன் – அனுவின் ப்ரேக்கப் கன்பார்ம் ஆனது.
@@@@@@@@@@@@@@@@@
டைனிங் டேபிளின் மேல் இருந்த செயிண்ட் ரெமியை ஒரு க்ளாஸ் எடுத்து ஊற்றிக் கொண்டு இன்னொரு க்ளாஸை எடுத்து வைத்து சாத்திய அறையையே பார்த்துக்  கொண்டிருந்தாள் அனு.  ரெண்டு பெக் குடித்தும் ராஜன் வெளியே வரவில்லை. பயர் ஸ்டிக்கில் யூட்டியூப்பை திறந்து சண்டானாவை ஓப்பன் செய்து கிடார் நிரடல்களை ஆப் செய்து ஆன் செய்து மீண்டும் மீண்டும் ஒலிபரப்பினாள். ராஜனுக்கு அவனின் கிட்டாரை யார் தொட்டாலும் பிடிக்கவே பிடிக்காது. அனு யூ ட்யூப்பின் கிடார் நிரடல்களை நிறுத்தி நிறுத்தி ஒலித்ததைக் கேட்ட ராஜனுக்கு அவன் கிட்டாரை அனு எடுத்து வாசிக்கிறாளோ என்ற சந்தேகம் வந்து கதவை திறந்தான். அவன் வந்ததை பார்த்ததும் அனு ரிமோட்ட நிறுத்தி “மரிய மரியாவை” ஒலிக்க விட்டாள்.
”ஐ நோ யூ வில் கம்” என்று சிரித்தாள்.
ராஜன் பதிலேதும் சொல்லாமல் டேபிளின் மேல் இருந்த இன்னொரு க்ளாஸில் செயிண்ட் ரெமியை ஊற்றிக் கொண்டு ஒரே மடக்கில் குடித்தான்.
“யெஸ் யூ நோ மி வெரி வெல். அதனாலத்தான் என்கிட்டேயிருந்து உன்னால விலக முடிஞ்சது இல்லையா?”
அனு தன் க்ளாசின் மிச்சத்தை குடித்து மீண்டும் நிரப்பிக் கொண்டாள்.
”அன்னைக்கு நாம ரெண்டு பேருமே ஆர்க்யூ பண்ணியிருக்க கூடாது” என்றான் ராஜன்.
அனு அமைதியாய் அவனையே பார்த்தாள்.
“என்னை ரீட் பண்ண ட்ரை பண்ணுறியா?”
ம்ஹூம் என்று தலையசைத்தாள் அனு.
“ஏன் ஆர்க்யூ பண்ணியிருக்க கூடாதுனு சொல்றே?”
“பேசாம இருந்திருந்தா ரெண்டு பேருக்குள்ள ப்ரேக்கப் நடந்திருக்காது. என்ன தான் புரட்சி பேசினாலும் ரிலேஷன்ஷிப்புனும் போது பொசசிவ்னெஸ் வரத்தான் செய்யுது இல்லை” என்று தன் க்ளாசை மீண்டும் நிரப்பி சிரித்தான் ராஜன்.
“நீ என்னைப் பத்தி சொல்லுறதா பெமினிஸ்டுகளைப் பத்தி சொன்னதுக்கு பேரு  பொசசிவ்னெஸா? சாவனிஸ்டிக் ஸ்டேட்மெண்ட் இல்லை?”
ராஜன் சட்டென அவளை நிமிர்ந்து பார்த்தான். கை கட்டி வாயை தன் ஒரு கையால் மூடிக் கொண்டான். “ஓப்பனப்” என்று கட்டளையிட்டாள் அனு. ராஜன் இன்னும் இறுக்கமாய் தன் கையை கட்டிக் கொள்ள, அனு அவனின் இரண்டு கைகளையும் வேகமாய் தன் முழு பலத்தோடு விலக்க முயன்றாள். வேகமாய் இழுக்கையில் ராஜன் சட்டென விட்டுக் கொடுக்க, அப்படியே அருகில் இருந்த சோபாவின் மேல் மல்லாக்க வீழ்ந்தாள். அவளைப் பிடிக்க போய் ராஜனும் அவள் மேல் விழ, நெருக்கமான தருணத்தில் அவளின் கீழுதட்டை ராஜன் கவ்வி இழுத்து சுவைத்தான். அனு அமைதியாய் அவனை அணைத்து இடம் கொடுக்க, “நாம ரெண்டு பேரும் ஏன் சேர்ந்து இருக்கக்கூடாது?” என்று கேட்டான் ராஜன். ராஜனை இழுத்து மூச்சு முட்ட முத்தமிட, ராஜன் ஏதோ சொல்ல விழைந்து முத்தங்களுக்குள் காற்றாகவும், புரியாத சத்தமாகவும் வெளிப்பட, சட்டென அவனை விலக்கி, “என்னடா?” என்றாள் அனு.
“இப்ப நான் தான் ப்ரோபோஸ் பண்ணியிருக்கேன்? அப்ப இந்த வாட்டி நான் உன்னை வச்சிருக்கனா?“ என்றான் ராஜன். 
“லாக்டவுன் முடிஞ்சதும் முடிவு பண்ணுவோம் இப்ப வா” என்றாள் அனு.

கேபிள் சங்கர்

Jun 19, 2020

எண்டர் கவிதைகள் -30

கைதட்டியாகிவிட்டது
விளக்கேற்றியாகிவிட்டது
தினமொரு சமையல் என சமையல்
குழுவில் போஸ்ட் போட்டாகிவிட்டது
வெறி கொண்டு அனைத்து சீரீஸுகளையும்
படங்களையும் பார்த்தாகிவிட்டது
தினம் பேசும் நண்பர்களிடையே
உங்க ஏரியாவுல கொரானா வந்தாச்சா?
கையில பணமேயில்லை
என்ன பண்ணுறது? போன்ற
பேச்சுக்களைத் தவிர பேச
ஏதுவுமில்லாமல் போய்விட்டது
இன்னுமொரு பதினைந்து நாளே என
நான்கு மாசங்களை ஓட்டியாகிவிட்டது
பேசினால் மூச்சு முட்டி இறந்துவிடுமோ?
என்கிற அச்சம் வீட்டினுள் நுழைந்து
மாதங்களாகிவிட்டது.
யாரிடமும் எதையும் பேச தோணவேயில்லை
புதியாய் முளைத்திருக்கும் வங்கிக்
அழைப்பாளர்களைத் தவிர, ஏனென்றால்
அவர்கள் தான் என் பாதுகாப்பை
முக்கியமாய் நினைக்கிறார்கள்.
அட்லீஸ்ட் வரும் அக்டோபர் மாதம்
வரைக்குமாவது. அதன் பிறகு
அவனும் பேசுவானா என்று தெரியவில்லை
ஜெய் கொரோனா.

Jun 10, 2020

லாக்டவுன் கதைகள் -11- கேரக்டர் ஆர்டிஸ்ட்


“சார்.. இன்னைக்கு ஒரு வண்டி போவுது. பாஸு எல்லாம் வாங்கிட்டாங்க. நான் வீட்டை காலி பண்ணிக்கிறேன். நீங்க கிளம்புங்க. அதான் உங்களுக்கும் நல்லது” என்றவனை கண்களில் கண்ணீர் ததும்ப பார்த்தார் நமச்சிவாயம்.

நமச்சிவாயத்தை நிறைய திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். கொஞ்சம் ரெட்டை நாடியாய் கருத்த உருவத்தோடு, வழுக்கையாய் இருப்பார்.  கண்கள் ரெண்டும் கோலி குண்டுகள் போல் பெரிதாய் இருக்கும் என்பதால் கிராமத்து பஞ்சாயத்தார், ஊர் பெருசு என பல படங்களில் பார்த்திருப்பீர்கள். ஒரு காலத்தில் வெகு பிஸியாய் இருந்தவர்தான் நமச்சிவாயம்

”நல்ல நடிப்பார் சார். நிறைய ட்ராமா எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. ஊருல நாடகக் ட்ரூப் எல்லாம் வச்சிருந்திருக்காரு. நல்ல கேரக்டர் ரோல் ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க” என்று அறிமுகப்படுத்தியவர் என் நண்பர் சிவகுமார்.

“நல்ல கோயில் பூசாரி மாரி இருக்கீங்க சார்” என்று பார்த்த மாத்திரத்தில் சொன்னேன். அவருக்கு நான் சொன்னது பிடித்துப் போய், சட்டென என் கை பிடித்து “ரொம்ப தேங்க்ஸ் சார்” என்றார்.

அவரின் வெள்ளந்தித்தனம் எனக்கு மிகவும் பிடித்துப் போக அன்றிரவே நானும் நண்பரும் சரக்கடிக்க அவர் தான் ஸ்பான்ஸர் செய்தார்.

“சின்ன வயசிலேர்ந்து சினிமாவுல நடிக்கணும்னு ஒரே ஆசை. வீட்டுல விடலை. படிப்பு, கல்யாணம்னு கட்டிப் போட்டுட்டாங்க. வருஷா வருஷம் ஊருல நாடகம் போடுறது மட்டும்தான் என் ஒரே பொழுது போக்கு. அந்த ஒரு நாளுக்காக வருஷம் பூரா நாடகம் எழுதிட்டு, படங்கள் பார்த்திட்டு, நடிச்சிட்டுனு ஆர்வமா இருப்பேன். முப்பது வருஷம் ஸ்கூல் வாத்தியார் வேலை. சாயங்காலம் சினிமா போறது. நாடகம் எழுதுறது, நடிச்சிப் பார்க்குறது. என்னை என் வீட்டுல பையித்தம்னே கூட சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. திடீர்னு ப்ரெசர் தாங்காம நாலைஞ்சு நாளைக்கு சென்னைக்கு வந்து சும்மாவாச்சும் ஏவிஎம், வாஹினினு சுத்திட்டு போயிருவேன். உள்ளக் கூட விடமாட்டாங்க.” என்று மடக்கென சரக்கை எடுத்து குடுத்துவிட்டு, காரமாய் மிளகாய் பஜ்ஜியை எடுத்து ஒரு கடி கடித்துக் கொண்டார்.

அவரின் கதை எனக்கு ஏதும் புதுசாய் இல்லாவிட்டாலும் சரக்கெல்லாம் வாங்கித் தந்து சொல்வதால் அசுவாரஸியமாய் கேட்டுக் கொண்டிருந்தேன். நண்பர் சிவகுமார் யாராக இருந்தாலும் அவர்களை மனம் நோக விட மாட்டார். ரியாக்ட் செய்து கொண்டேயிருப்பார். நமச்சிவாயத்துக்கு அவர் போதுமானவராய் இருந்தார்.

“ஒரே பொண்ணு. நல்லா படிக்க வச்சேன். நல்ல பையனைப் பார்த்து கல்யாணம் கட்டிக் கொடுத்துட்டேன். 52 வயசாச்சு. இன்னமும் எனக்கு ஆசை போகலை. ஒரு நா இல்லை ஒரு நா தமிழ்நாடு பூரா என்னை ஒரு நாளாச்சும் பார்க்கணும்னு ஆசையா இருக்குனு என் பொண்டாட்டிக்கிட்ட அழுதேன். இத்தனை நாள் எங்க இஷ்டத்துக்கு வாழ்ந்திட்ட, இனியாவது உன் இஷ்டத்துக்கு வாழுன்னா என் பொண்டாட்டி. அவ கொடுத்த தைரியத்துலதான் வேலைக்கு வாலண்டியரி ரிட்டையர்மெண்ட் கொடுத்துட்டு வந்துட்டேன். நீங்க பெரிய ரைட்டர், டைரக்டர்னு சொன்னாரு தம்பி. எனக்கு ஏதாச்சும் நல்ல வாய்ப்பு வாங்கிக் கொடுங்க” என்று கேட்ட போது அவரின் கண்கள் போதையில் பளபளவென்றிருந்தது.

சிவகுமாரிடம் சொல்லி நல்ல போட்டோக்கள் எடுத்துக் கொண்டு எப்படி படக் கம்பெனிகளை அப்ரோச் செய்வது என்று அவருக்கு தெரியும் என்பதால் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன். அவரது நேரமோ என்னவோ அடுத்த வாரத்திலேயே என் நண்பர் டிவி சீரியல் உதவி இயக்குனர் “யாராச்சும் நல்ல கிராமத்து பூசாரி மாதிரியான ஆள் தெரிஞ்சா சொல்லுங்க தலைவரே” என்றவுடன் எனக்கு சட்டென நமச்சிவாயத்தின் நியாபகம் வந்தது. உடனடியாய் சிவகுமாருக்கு போன் அடித்து நமச்சிவாயத்தைப் போய் பார்க்கச் சொன்னேன். சாயங்காலம் நமச்சிவாயம் போன் செய்திருந்தார். செலக்ட் ஆகிவிட்டாராம். அவரது குரலில் இருந்த குதூகலம் எனக்கும் ஒட்டிக் கொள்ள, “வாழ்த்துக்கள். நல்லா நடிச்சி என் பேரைக் காப்பாத்துங்க” என்று சொல்லி சிரித்தேன்.

“அய்யா.. தம்பி.. நீ நல்லாருக்கணும். நிச்சயம். நிச்சயம் நான் யார் பேரையும் கெடுக்க மாட்டேன். நல்லா பண்ணுவேன். என் இத்தனை வருஷக் கனவு. அதை மிஸ் பண்ணுவனா?” என்று மீண்டும் அன்றைக்கு பார்ட்டிக்கு அழைத்தார். எனக்கு வேறு வேலைகள் இருந்ததால் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன்.  அதன் பிறகு நான் அவரைப் பற்றி மறந்தே போனேன் என்பதுதான் உண்மை. திடீரென ஒரு நாள் ஒர் புதிய ஜியோ நம்பரிலிருந்து கால் வந்தது. நமச்சிவாயம் தான்.

“சொல்லுங்கண்ணே. நல்லாருக்கீங்களா? தம்பிய மறந்துட்டீங்க?” என்றேன்.
“அய்யோ தம்பி மறப்பேனா? நீங்க தான் பிஸியா இருக்கீங்க அடுத்த பட வேலையில. எனக்கு ஒரு வேஷம் உங்க படத்துல மறந்துராதீங்க. கொடுக்கலை அம்புட்டுத்தான் ஆபீஸ் வந்து கலாட்டா பண்ணுவேன். புது நம்பர் மாத்திட்டேன் அதைச் சொல்லத்தான் போன் பண்ணேன்” என்றார். குரலில் இன்னமும் வெள்ளந்தித்தனம் போகவில்லை.

நான் அனுப்பிய சீரியல் பெரும் ஹிட். அதில் அவர் கேரக்டர் பெரிய அளவில் பேசப்படுவதாகவும் ஊரில் எல்லோரும் மிகவும் சந்தோஷப்படுவதாகவும் சொன்னார். மெகா சீரியல் என்பதால் கிட்டத்தட்ட வாரத்துக்கு மூணு நாலு நாள் ஷூட் இருக்கு என்றார்.

“தம்பி ப்ரீயா இருக்கும் போது நம்மளோட கலந்துக்கணும்” என்று மீண்டும் பார்ட்டிக்கு அழைக்க, “நிச்சயம் வர்றேன்ணே” என்று சொல்லி போனை வைத்தேன். மனதுக்கு சந்தோஷமாய் இருந்தது. எத்தனையோ பேர் கனவுகளை சுமந்து வந்து நிற்கிறார்கள். அத்தனை பேருக்கும் கனவுகள் பலித்துவிடுவதில்லை. ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று சொல்லிக் கொண்டேன்.
அந்த சீரியல் உதவி இயக்குனனை ஒரு முறை வழியில் சந்தித்த போது ”சும்மா ரெண்டு எபிசோடுக்கு கூப்டோம். மனுஷன் நடிப்ப பார்த்துட்டு டைரக்டர் மிரண்டு போய், ரைட்டர்கிட்ட சொல்லி பூரா சீரீஸ்லேயும் வர்ற மாதிரி பண்ணிடாரு. நேரம்” என்றான்.

அதன் பிறகு பல சந்தர்பங்களில் அவர் என்னை மறக்காமல் பார்ட்டிக்கு அழைத்தாலும் போக முடியாத சூழ்நிலை. கொஞ்சம் கொஞ்சமாய் போன் பேசும் நேரமும் குறைந்து என் பட வேலை ஆரம்பமானதால் நேரமில்லாமல் போனது. என் படத்தில் ஒரு கேரக்டர் இருக்க, அவரை நடிக்க அழைக்கச் சொல்லி அஸிஸ்டெண்டிடம் நம்பர் கொடுத்தேன். என்ன காரணமோ தெரியவில்லை. அவர் போன் எடுக்கவில்லை என்று சொன்னான். சிவக்குமாரிடம் சொல்லி, கூப்பிடச் சொன்னேன். அவரும் சில நாட்களாய் போன் பேசவேயில்லை என்றும், நம்பர் மாத்திட்டாரானு தெரியலை என்று சொன்னார். பட வேலைகள் என்னை மூழ்கடிக்க, நமச்சிவாயத்தை நான் மறந்தே போனேன். 

என் படம் ரிலீசான அன்று “வாழ்த்துக்கள். நல்லா பண்ணியிருக்கிங்க” என்று வாழ்த்து செய்தி அவரது நம்பரிலிருந்து வந்தது உடனே போன் அடித்து “என்னா நாங்கெல்லாம் நடிக்க கூப்டா வர மாட்டீங்களா?’என்றதுக்கு பதிலே பேசாமல் அமைதியாய் இருந்தார்.  “என்னண்ணே? என்ன ஆச்சு?” என்றதுதான் தாமதம்.

“மன்னிச்சிருங்க தம்பி. என்னால உங்க படத்துல நடிக்காம போனதுல ரொம்ப வருத்தம். அப்பனு பார்த்து என் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாம போயிருச்சு. பார்த்துக்க ஆளில்லை. வேற வழியில்லாம போக வேண்டியதாப் போச்சு. மூணு மாசமா சென்னையிலேயே இல்லை. ஆஸ்பிட்டல் வீடுனு அலைஞ்சி நொந்து போய் இருந்தேன். அவளை சரியாக்கி வீட்டுல விட்டுட்டு திரும்ப சென்னைக்கு வந்திட்டேன். வந்து பார்த்தா எல்லாமே மாறிப் போயிருச்சு. சீரியல்ல நான் வராததுனால என் கேரக்டருக்கு வேற ஒருத்தரை போட்டுட்டாங்க. வந்ததுலேர்ந்து இந்த சீரியலைத் தவிர வேற யாரையும் எனக்கு தெரியாததுனால வேற புதுசா வரவும் இல்லை. அப்படியே வாய்ப்பு வந்தாலும் கூட்டத்துல நிக்குற மாதிரி எல்லாம் கொடுக்குறாங்க. அசிங்கமா இருக்கு” என்று குரல் உடைந்து அழுதார்.

எனக்கு புரிந்தது. கூட்டதிலிருந்து தான் போயிருக்க வேண்டியவர். சினிமா தன் தங்கக் கரங்களால் அரவணைத்த காரணத்தால்  நேரடியாய் கிடைத்த அங்கீகாரம் இழந்த பின் கூட்டத்தில் நிற்பது பதவியிழப்பாய் தோன்றுகிறது.
“அண்ணே கவலைப் படாதீங்க. எல்லாம் சரியாயிரும். நான் என் ப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லி ஏதாச்சும் நல்ல கேரக்டர் அப்பா ரோல் மாதிரி பிக்ஸ் பண்ணிருவோம். நீங்க ஜாலியா ஹீரோயினை கட்டிப் பிடிச்சி அழுது சந்தோஷமாயிருங்க” என்று சொன்னதும் எதிர் முனையில் வெட்கப்பட்டது அவரது சிரிப்பில் தெரிந்தது.

அவரை சின்னச் சின்னக் கேரக்டரில் நிறைய படங்களில் பார்க்க ஆரம்பித்தேன். சரி மனுஷன் செட்டிலாயிட்டார் என்று முடிவு செய்து என் அடுத்த பட விஷயத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் போது தான் இந்த லாக்டவுன் எழவு விழுந்தது. ஆரம்ப காலத்தில் ஒரு வாரம், பத்து நாள் எனும் போது இருந்த சந்தோஷம் கையில் இருக்கும் பணம் காலியாக காலியாக பயம் அதிகமானது. வாரங்கள் மாதங்களாய் மாறிய பின் இன்னும் கதி கலங்கியது. அடுத்த பட வேலைகள் எப்போது ஆரம்பிக்குமோ என்று சந்தேகம் பெரிதாக, எதிர்காலம் கேள்விக்குறியானது. பேச்சில் தைரியம் இருந்தாலும் உள்ளுக்குள் பயம் தலைவிரித்தாடியது என்றுதான் சொல்ல வேண்டும்.  அப்படியான ஒரு நேரத்தில் தான் சிவகுமாரிடமிருந்து போன்.

“என்னா சிவா? எப்படி இருக்கீங்க? எல்லா சீரியல்லேயும் உங்களைத்தான் பார்க்குறேன்” என்றேன் குதூகலமாய்

“அது இருக்கட்டும் நம்ம நமச்சிவாயம் சார். சீரியஸா இருக்காராம். உங்க ஏரியா பக்கத்துலதான் வீடு போய்  பார்த்துட்டு வர முடியுமா?” என்றார். அவர் ரெட் ஹில்ஸ் பக்கம் இருப்பதால் சாலிக்கிராமம் கொஞ்சம் தூரமே. சரி என்று நான் அவரின் அட்ரஸை வாங்கிக் கொண்டு வீடு தேடிப் போனேன். போலீஸ்காரர்களிடம் செக்கிங்கில் நிலைமையைச் சொல்லி போவதற்குள் படாத பாடு பட வேண்டியிருந்தது. திலகர் தெருவில் ஒர் சின்ன வீட்டின் ஆஸ்பெஸ்டாஸ் மாடியில் படுத்திருந்தார். என்னை அடையாளம் கூட கண்டு கொள்ள முடியாமல் இருந்தார். பக்கத்திலிருந்த ஆஸ்பிட்டலின் ஆம்புலன்ஸை வரவழைத்து அவரை அட்மிட் செய்து க்ளூக்கோஸ் ஏற்றி கொஞ்சம் பேச முடிகிற நிலை வந்ததும் “சாரி உங்களை தொந்திரவு பண்ணிட்டேன்’ என்று கை கூப்பினார்.

“என்னண்ணே.. ஒண்ணும் தொந்திரவு இல்லை. உடம்ப பார்த்துக்க மாட்டீங்களா? இப்படியா இருப்பீங்க?” என்றதும் மளுக்கென்று கண்களிலிருந்து கண்ணீர் உருண்டோடியது.

“பொண்டாட்டி ஆப்பரெஷனுக்காக எட்டு லச்சம் கடன். வர்ற பென்ஷன் எல்லாமே வீட்டுக்கும் கடனுக்குமே போயிருது. எப்படியாச்சும் திரும்பவும் நாம நடிச்சி எழுந்திரலாம்னு தான் காத்திட்டிருந்தேன். எட்டு மாசமா வேலையே இல்லை. கூட்டத்துல நின்னு நின்னு என்னை ஜூனியர் ஆர்டிஸ்டாவேதான் நினைச்சிட்டாங்க. நான் நடிச்ச சீரியல் கேரக்டர் இப்ப யாருக்கும் நியாபகம் இல்லை. முன்னூறுக்கும் ஐநூறுக்கு ஒரு வரி வசனத்துக்கும்  பொறைக்கு அலையிற நாய் மாதிரி அலைஞ்சிட்டிருக்கேன். இந்த லாக்டவுன் வந்து கிடைக்குற பத்திருபதையும் நிறுத்திருச்சு. யார் யாருக்கோ ஆயிரம் ரூபாய் கொடுக்குறவங்க, இந்த கேரக்டர் ஆர்டிஸ்ட், ஜூனியர் ஆர்டிஸ்டுங்களை கண்டுக்கவே மாட்டேன்குறாங்க. அப்படியே கொடுத்தாலும் சங்கத்தில ரிஜிஸ்டர் பண்ண ஆட்களுக்கு மட்டும் தான்னு சொல்றாங்க. ரெண்டு மாச வாடகை தரலை. சாப்பாடு இல்லை. கையில பணமில்லை. ஊருக்கு போலாம்னா எல்லாத்தையும் க்ளோஸ் பண்ணிட்டாங்க. இப்படியே இன்னும் எத்தனை நாள் இருப்போம்னு பயம் வந்திருச்சு. என் பொண்டாட்டி அழுவுறா? ஆசைப்பட்ட விஷயத்தை ஒரு வாட்டி பார்த்துட்ட இல்லை திரும்ப வந்திரு. நிம்மதியா சாவலாம்ங்கிறா. சாவுறதுக்கா நான் இந்த பொறப்ப பெத்தேன். நான் எப்பேர்ப்பட்ட கேரக்டர் ஆர்டிஸ்டுனு தெரிய வேணாம்?. உடம்பு சரியில்லாம போனவுடனே இப்படி ஆஸ்பெஸ்டாஸ் சீட் வீட்டுல சீந்துவாரில்லாம செத்துருவேனோனு பயந்துப் போயிட்டேன். அதான் சிவா சாருக்கு கூப்டேன்” என்று கரகரவென அழுதபடி சொல்ல, என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.  பதில் ஏதும் சொல்லாமல், அவரை டிஸ்ஜார்ஜ் செய்து வீட்டுக்கு கூட்டி வந்து வீட்டுக்காரர்களிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, என் அசிஸ்டெண்ட் அவரின் வீட்டின் பக்கத்தில்தான் குடியிருந்தான். அவனிடம் கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு ஏதாச்சும் பிரச்சனைன்னா சொல்லு என்று சொல்லி கிளம்பினேன்.

லாக்டவுன் எக்ஸ்டெண்ட், இ பாஸ் மூலம் ட்ராவல் செய்யலாம் என்று அரசாங்க விதிமுறையில் கொஞ்சம் ரிலாக்‌ஷேஷன் கொண்டு வர, உடனடியாய் நண்பர் மூலம் பாஸ் வாங்கி அவரை ஊருக்கு அனுப்ப எல்லா வேலைகளையும் செய்து வண்டியோடு அவரின் வீட்டின் முன் நின்று  ”சார் வண்டி போவுது வீட்டை நான் பார்த்து செட்டில் பண்ணிக்கிறேன் நீங்க கிளம்புங்க” என்றதுக்கு தான் கண்ணீர் ததும்ப என்னை பார்த்தார் நமச்சிவாயம். அவர் கண்களில் இன்னமும் ஏக்கம் இருந்தது. வீட்டை விட்டு போக மனமேயில்லை. மூட்டை முடிச்சுகளை வண்டியில் ஏற்றி வைத்து விட்டு வண்டியில் ஏறும் போது அவருக்கு ஒரு கால் வந்தது.

“ம்.. நான் தான் நமச்சிவாயம் தான் பேசுறேன்”

”…”

“கண்டிப்பா சார்.. வந்துடறேன். நிச்சயம்” என்று உற்சாகமாய் போனை வைத்தவர் “ஒ’ வென அழ ஆரம்பித்தார்.

“என்னாண்ணே?”

”அந்த சீரியல் டைரக்டர் வேற ஒரு சீரியல் பண்ணப் போறாராம். அதுல ஒரு கேரக்டர் இருக்காம். லாக்டவுன் முடிஞ்சு வந்து பாருங்கனு சொல்றாரு. இப்ப நான் என்ன பண்ண?” என்ற போது அவரின் குரல் கேவலாய் இருந்தது.

சினிமா அப்படித்தான். கால் வைக்கும் வரை அதற்கும் உங்களுக்கு எந்த ஒட்டும் உறவும் இருக்காது ஒரு முறை ஒரே ஒரு முறை தொட்டுவிட்டால் அவ்வளவுதான் விடாது கருப்பாய் தொறத்தும். கருப்பு பல சமயங்களில் அடித்தும், சில சமயங்களில் அருளையும் தரும். அது தரும் வாய்ப்பு அடியா? அருளா? என்று யாருக்குமே தெரியாது. ஆனால் கருப்பை விட்டு வெளியே போவது என்பது அத்தனை சுலபமில்லை.

“அண்ணே. சொல்லுறேன்னு தப்பா நினைக்காதீங்க. வண்டி ஏறி ஊருக்கு போனீங்கன்னா சாவுற வரைக்கும் சோத்துக்கு பிரச்சனையில்லாம நிம்மதியா நினைச்சதை செஞ்சோம்னு அசைப் போட்டுட்டு வாழலாம். லாக்டவுன் என்னாவும்னு தெரியலை. எப்ப முடியும்னு தெரியலை. என்னைக்கு எல்லாத்தையும் ஆரம்பிப்பாங்கன்னு தெரியலை. எதை நம்பி வாழறதுனு எங்களுக்கே தெரியலை. திரும்பிப் பார்க்காம வ்ண்டியேறுங்க. இதான் உங்களுக்கு நல்லது. அப்படி வாழ்வு வரதுன்னா அதுவே உங்களைக் கூப்பிடும் அதுவரைக்கும் நீங்க உயிரோட இருக்கணுமில்லை. இப்ப கிளம்புங்க” என்றேன். வண்டி கிளம்பிப் போனது. சிறு குழந்தைப் போல கேவிக் கேவி அழுது கொண்டே சென்ற நமச்சிவாயத்தின் முகம் மட்டும் என் மனதிலிருந்து விலகவேயில்லை.

கேபிள் சங்கர்