Thottal Thodarum

Jun 10, 2020

லாக்டவுன் கதைகள் -11- கேரக்டர் ஆர்டிஸ்ட்


“சார்.. இன்னைக்கு ஒரு வண்டி போவுது. பாஸு எல்லாம் வாங்கிட்டாங்க. நான் வீட்டை காலி பண்ணிக்கிறேன். நீங்க கிளம்புங்க. அதான் உங்களுக்கும் நல்லது” என்றவனை கண்களில் கண்ணீர் ததும்ப பார்த்தார் நமச்சிவாயம்.

நமச்சிவாயத்தை நிறைய திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். கொஞ்சம் ரெட்டை நாடியாய் கருத்த உருவத்தோடு, வழுக்கையாய் இருப்பார்.  கண்கள் ரெண்டும் கோலி குண்டுகள் போல் பெரிதாய் இருக்கும் என்பதால் கிராமத்து பஞ்சாயத்தார், ஊர் பெருசு என பல படங்களில் பார்த்திருப்பீர்கள். ஒரு காலத்தில் வெகு பிஸியாய் இருந்தவர்தான் நமச்சிவாயம்

”நல்ல நடிப்பார் சார். நிறைய ட்ராமா எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. ஊருல நாடகக் ட்ரூப் எல்லாம் வச்சிருந்திருக்காரு. நல்ல கேரக்டர் ரோல் ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க” என்று அறிமுகப்படுத்தியவர் என் நண்பர் சிவகுமார்.

“நல்ல கோயில் பூசாரி மாரி இருக்கீங்க சார்” என்று பார்த்த மாத்திரத்தில் சொன்னேன். அவருக்கு நான் சொன்னது பிடித்துப் போய், சட்டென என் கை பிடித்து “ரொம்ப தேங்க்ஸ் சார்” என்றார்.

அவரின் வெள்ளந்தித்தனம் எனக்கு மிகவும் பிடித்துப் போக அன்றிரவே நானும் நண்பரும் சரக்கடிக்க அவர் தான் ஸ்பான்ஸர் செய்தார்.

“சின்ன வயசிலேர்ந்து சினிமாவுல நடிக்கணும்னு ஒரே ஆசை. வீட்டுல விடலை. படிப்பு, கல்யாணம்னு கட்டிப் போட்டுட்டாங்க. வருஷா வருஷம் ஊருல நாடகம் போடுறது மட்டும்தான் என் ஒரே பொழுது போக்கு. அந்த ஒரு நாளுக்காக வருஷம் பூரா நாடகம் எழுதிட்டு, படங்கள் பார்த்திட்டு, நடிச்சிட்டுனு ஆர்வமா இருப்பேன். முப்பது வருஷம் ஸ்கூல் வாத்தியார் வேலை. சாயங்காலம் சினிமா போறது. நாடகம் எழுதுறது, நடிச்சிப் பார்க்குறது. என்னை என் வீட்டுல பையித்தம்னே கூட சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. திடீர்னு ப்ரெசர் தாங்காம நாலைஞ்சு நாளைக்கு சென்னைக்கு வந்து சும்மாவாச்சும் ஏவிஎம், வாஹினினு சுத்திட்டு போயிருவேன். உள்ளக் கூட விடமாட்டாங்க.” என்று மடக்கென சரக்கை எடுத்து குடுத்துவிட்டு, காரமாய் மிளகாய் பஜ்ஜியை எடுத்து ஒரு கடி கடித்துக் கொண்டார்.

அவரின் கதை எனக்கு ஏதும் புதுசாய் இல்லாவிட்டாலும் சரக்கெல்லாம் வாங்கித் தந்து சொல்வதால் அசுவாரஸியமாய் கேட்டுக் கொண்டிருந்தேன். நண்பர் சிவகுமார் யாராக இருந்தாலும் அவர்களை மனம் நோக விட மாட்டார். ரியாக்ட் செய்து கொண்டேயிருப்பார். நமச்சிவாயத்துக்கு அவர் போதுமானவராய் இருந்தார்.

“ஒரே பொண்ணு. நல்லா படிக்க வச்சேன். நல்ல பையனைப் பார்த்து கல்யாணம் கட்டிக் கொடுத்துட்டேன். 52 வயசாச்சு. இன்னமும் எனக்கு ஆசை போகலை. ஒரு நா இல்லை ஒரு நா தமிழ்நாடு பூரா என்னை ஒரு நாளாச்சும் பார்க்கணும்னு ஆசையா இருக்குனு என் பொண்டாட்டிக்கிட்ட அழுதேன். இத்தனை நாள் எங்க இஷ்டத்துக்கு வாழ்ந்திட்ட, இனியாவது உன் இஷ்டத்துக்கு வாழுன்னா என் பொண்டாட்டி. அவ கொடுத்த தைரியத்துலதான் வேலைக்கு வாலண்டியரி ரிட்டையர்மெண்ட் கொடுத்துட்டு வந்துட்டேன். நீங்க பெரிய ரைட்டர், டைரக்டர்னு சொன்னாரு தம்பி. எனக்கு ஏதாச்சும் நல்ல வாய்ப்பு வாங்கிக் கொடுங்க” என்று கேட்ட போது அவரின் கண்கள் போதையில் பளபளவென்றிருந்தது.

சிவகுமாரிடம் சொல்லி நல்ல போட்டோக்கள் எடுத்துக் கொண்டு எப்படி படக் கம்பெனிகளை அப்ரோச் செய்வது என்று அவருக்கு தெரியும் என்பதால் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன். அவரது நேரமோ என்னவோ அடுத்த வாரத்திலேயே என் நண்பர் டிவி சீரியல் உதவி இயக்குனர் “யாராச்சும் நல்ல கிராமத்து பூசாரி மாதிரியான ஆள் தெரிஞ்சா சொல்லுங்க தலைவரே” என்றவுடன் எனக்கு சட்டென நமச்சிவாயத்தின் நியாபகம் வந்தது. உடனடியாய் சிவகுமாருக்கு போன் அடித்து நமச்சிவாயத்தைப் போய் பார்க்கச் சொன்னேன். சாயங்காலம் நமச்சிவாயம் போன் செய்திருந்தார். செலக்ட் ஆகிவிட்டாராம். அவரது குரலில் இருந்த குதூகலம் எனக்கும் ஒட்டிக் கொள்ள, “வாழ்த்துக்கள். நல்லா நடிச்சி என் பேரைக் காப்பாத்துங்க” என்று சொல்லி சிரித்தேன்.

“அய்யா.. தம்பி.. நீ நல்லாருக்கணும். நிச்சயம். நிச்சயம் நான் யார் பேரையும் கெடுக்க மாட்டேன். நல்லா பண்ணுவேன். என் இத்தனை வருஷக் கனவு. அதை மிஸ் பண்ணுவனா?” என்று மீண்டும் அன்றைக்கு பார்ட்டிக்கு அழைத்தார். எனக்கு வேறு வேலைகள் இருந்ததால் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன்.  அதன் பிறகு நான் அவரைப் பற்றி மறந்தே போனேன் என்பதுதான் உண்மை. திடீரென ஒரு நாள் ஒர் புதிய ஜியோ நம்பரிலிருந்து கால் வந்தது. நமச்சிவாயம் தான்.

“சொல்லுங்கண்ணே. நல்லாருக்கீங்களா? தம்பிய மறந்துட்டீங்க?” என்றேன்.
“அய்யோ தம்பி மறப்பேனா? நீங்க தான் பிஸியா இருக்கீங்க அடுத்த பட வேலையில. எனக்கு ஒரு வேஷம் உங்க படத்துல மறந்துராதீங்க. கொடுக்கலை அம்புட்டுத்தான் ஆபீஸ் வந்து கலாட்டா பண்ணுவேன். புது நம்பர் மாத்திட்டேன் அதைச் சொல்லத்தான் போன் பண்ணேன்” என்றார். குரலில் இன்னமும் வெள்ளந்தித்தனம் போகவில்லை.

நான் அனுப்பிய சீரியல் பெரும் ஹிட். அதில் அவர் கேரக்டர் பெரிய அளவில் பேசப்படுவதாகவும் ஊரில் எல்லோரும் மிகவும் சந்தோஷப்படுவதாகவும் சொன்னார். மெகா சீரியல் என்பதால் கிட்டத்தட்ட வாரத்துக்கு மூணு நாலு நாள் ஷூட் இருக்கு என்றார்.

“தம்பி ப்ரீயா இருக்கும் போது நம்மளோட கலந்துக்கணும்” என்று மீண்டும் பார்ட்டிக்கு அழைக்க, “நிச்சயம் வர்றேன்ணே” என்று சொல்லி போனை வைத்தேன். மனதுக்கு சந்தோஷமாய் இருந்தது. எத்தனையோ பேர் கனவுகளை சுமந்து வந்து நிற்கிறார்கள். அத்தனை பேருக்கும் கனவுகள் பலித்துவிடுவதில்லை. ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று சொல்லிக் கொண்டேன்.
அந்த சீரியல் உதவி இயக்குனனை ஒரு முறை வழியில் சந்தித்த போது ”சும்மா ரெண்டு எபிசோடுக்கு கூப்டோம். மனுஷன் நடிப்ப பார்த்துட்டு டைரக்டர் மிரண்டு போய், ரைட்டர்கிட்ட சொல்லி பூரா சீரீஸ்லேயும் வர்ற மாதிரி பண்ணிடாரு. நேரம்” என்றான்.

அதன் பிறகு பல சந்தர்பங்களில் அவர் என்னை மறக்காமல் பார்ட்டிக்கு அழைத்தாலும் போக முடியாத சூழ்நிலை. கொஞ்சம் கொஞ்சமாய் போன் பேசும் நேரமும் குறைந்து என் பட வேலை ஆரம்பமானதால் நேரமில்லாமல் போனது. என் படத்தில் ஒரு கேரக்டர் இருக்க, அவரை நடிக்க அழைக்கச் சொல்லி அஸிஸ்டெண்டிடம் நம்பர் கொடுத்தேன். என்ன காரணமோ தெரியவில்லை. அவர் போன் எடுக்கவில்லை என்று சொன்னான். சிவக்குமாரிடம் சொல்லி, கூப்பிடச் சொன்னேன். அவரும் சில நாட்களாய் போன் பேசவேயில்லை என்றும், நம்பர் மாத்திட்டாரானு தெரியலை என்று சொன்னார். பட வேலைகள் என்னை மூழ்கடிக்க, நமச்சிவாயத்தை நான் மறந்தே போனேன். 

என் படம் ரிலீசான அன்று “வாழ்த்துக்கள். நல்லா பண்ணியிருக்கிங்க” என்று வாழ்த்து செய்தி அவரது நம்பரிலிருந்து வந்தது உடனே போன் அடித்து “என்னா நாங்கெல்லாம் நடிக்க கூப்டா வர மாட்டீங்களா?’என்றதுக்கு பதிலே பேசாமல் அமைதியாய் இருந்தார்.  “என்னண்ணே? என்ன ஆச்சு?” என்றதுதான் தாமதம்.

“மன்னிச்சிருங்க தம்பி. என்னால உங்க படத்துல நடிக்காம போனதுல ரொம்ப வருத்தம். அப்பனு பார்த்து என் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாம போயிருச்சு. பார்த்துக்க ஆளில்லை. வேற வழியில்லாம போக வேண்டியதாப் போச்சு. மூணு மாசமா சென்னையிலேயே இல்லை. ஆஸ்பிட்டல் வீடுனு அலைஞ்சி நொந்து போய் இருந்தேன். அவளை சரியாக்கி வீட்டுல விட்டுட்டு திரும்ப சென்னைக்கு வந்திட்டேன். வந்து பார்த்தா எல்லாமே மாறிப் போயிருச்சு. சீரியல்ல நான் வராததுனால என் கேரக்டருக்கு வேற ஒருத்தரை போட்டுட்டாங்க. வந்ததுலேர்ந்து இந்த சீரியலைத் தவிர வேற யாரையும் எனக்கு தெரியாததுனால வேற புதுசா வரவும் இல்லை. அப்படியே வாய்ப்பு வந்தாலும் கூட்டத்துல நிக்குற மாதிரி எல்லாம் கொடுக்குறாங்க. அசிங்கமா இருக்கு” என்று குரல் உடைந்து அழுதார்.

எனக்கு புரிந்தது. கூட்டதிலிருந்து தான் போயிருக்க வேண்டியவர். சினிமா தன் தங்கக் கரங்களால் அரவணைத்த காரணத்தால்  நேரடியாய் கிடைத்த அங்கீகாரம் இழந்த பின் கூட்டத்தில் நிற்பது பதவியிழப்பாய் தோன்றுகிறது.
“அண்ணே கவலைப் படாதீங்க. எல்லாம் சரியாயிரும். நான் என் ப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லி ஏதாச்சும் நல்ல கேரக்டர் அப்பா ரோல் மாதிரி பிக்ஸ் பண்ணிருவோம். நீங்க ஜாலியா ஹீரோயினை கட்டிப் பிடிச்சி அழுது சந்தோஷமாயிருங்க” என்று சொன்னதும் எதிர் முனையில் வெட்கப்பட்டது அவரது சிரிப்பில் தெரிந்தது.

அவரை சின்னச் சின்னக் கேரக்டரில் நிறைய படங்களில் பார்க்க ஆரம்பித்தேன். சரி மனுஷன் செட்டிலாயிட்டார் என்று முடிவு செய்து என் அடுத்த பட விஷயத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் போது தான் இந்த லாக்டவுன் எழவு விழுந்தது. ஆரம்ப காலத்தில் ஒரு வாரம், பத்து நாள் எனும் போது இருந்த சந்தோஷம் கையில் இருக்கும் பணம் காலியாக காலியாக பயம் அதிகமானது. வாரங்கள் மாதங்களாய் மாறிய பின் இன்னும் கதி கலங்கியது. அடுத்த பட வேலைகள் எப்போது ஆரம்பிக்குமோ என்று சந்தேகம் பெரிதாக, எதிர்காலம் கேள்விக்குறியானது. பேச்சில் தைரியம் இருந்தாலும் உள்ளுக்குள் பயம் தலைவிரித்தாடியது என்றுதான் சொல்ல வேண்டும்.  அப்படியான ஒரு நேரத்தில் தான் சிவகுமாரிடமிருந்து போன்.

“என்னா சிவா? எப்படி இருக்கீங்க? எல்லா சீரியல்லேயும் உங்களைத்தான் பார்க்குறேன்” என்றேன் குதூகலமாய்

“அது இருக்கட்டும் நம்ம நமச்சிவாயம் சார். சீரியஸா இருக்காராம். உங்க ஏரியா பக்கத்துலதான் வீடு போய்  பார்த்துட்டு வர முடியுமா?” என்றார். அவர் ரெட் ஹில்ஸ் பக்கம் இருப்பதால் சாலிக்கிராமம் கொஞ்சம் தூரமே. சரி என்று நான் அவரின் அட்ரஸை வாங்கிக் கொண்டு வீடு தேடிப் போனேன். போலீஸ்காரர்களிடம் செக்கிங்கில் நிலைமையைச் சொல்லி போவதற்குள் படாத பாடு பட வேண்டியிருந்தது. திலகர் தெருவில் ஒர் சின்ன வீட்டின் ஆஸ்பெஸ்டாஸ் மாடியில் படுத்திருந்தார். என்னை அடையாளம் கூட கண்டு கொள்ள முடியாமல் இருந்தார். பக்கத்திலிருந்த ஆஸ்பிட்டலின் ஆம்புலன்ஸை வரவழைத்து அவரை அட்மிட் செய்து க்ளூக்கோஸ் ஏற்றி கொஞ்சம் பேச முடிகிற நிலை வந்ததும் “சாரி உங்களை தொந்திரவு பண்ணிட்டேன்’ என்று கை கூப்பினார்.

“என்னண்ணே.. ஒண்ணும் தொந்திரவு இல்லை. உடம்ப பார்த்துக்க மாட்டீங்களா? இப்படியா இருப்பீங்க?” என்றதும் மளுக்கென்று கண்களிலிருந்து கண்ணீர் உருண்டோடியது.

“பொண்டாட்டி ஆப்பரெஷனுக்காக எட்டு லச்சம் கடன். வர்ற பென்ஷன் எல்லாமே வீட்டுக்கும் கடனுக்குமே போயிருது. எப்படியாச்சும் திரும்பவும் நாம நடிச்சி எழுந்திரலாம்னு தான் காத்திட்டிருந்தேன். எட்டு மாசமா வேலையே இல்லை. கூட்டத்துல நின்னு நின்னு என்னை ஜூனியர் ஆர்டிஸ்டாவேதான் நினைச்சிட்டாங்க. நான் நடிச்ச சீரியல் கேரக்டர் இப்ப யாருக்கும் நியாபகம் இல்லை. முன்னூறுக்கும் ஐநூறுக்கு ஒரு வரி வசனத்துக்கும்  பொறைக்கு அலையிற நாய் மாதிரி அலைஞ்சிட்டிருக்கேன். இந்த லாக்டவுன் வந்து கிடைக்குற பத்திருபதையும் நிறுத்திருச்சு. யார் யாருக்கோ ஆயிரம் ரூபாய் கொடுக்குறவங்க, இந்த கேரக்டர் ஆர்டிஸ்ட், ஜூனியர் ஆர்டிஸ்டுங்களை கண்டுக்கவே மாட்டேன்குறாங்க. அப்படியே கொடுத்தாலும் சங்கத்தில ரிஜிஸ்டர் பண்ண ஆட்களுக்கு மட்டும் தான்னு சொல்றாங்க. ரெண்டு மாச வாடகை தரலை. சாப்பாடு இல்லை. கையில பணமில்லை. ஊருக்கு போலாம்னா எல்லாத்தையும் க்ளோஸ் பண்ணிட்டாங்க. இப்படியே இன்னும் எத்தனை நாள் இருப்போம்னு பயம் வந்திருச்சு. என் பொண்டாட்டி அழுவுறா? ஆசைப்பட்ட விஷயத்தை ஒரு வாட்டி பார்த்துட்ட இல்லை திரும்ப வந்திரு. நிம்மதியா சாவலாம்ங்கிறா. சாவுறதுக்கா நான் இந்த பொறப்ப பெத்தேன். நான் எப்பேர்ப்பட்ட கேரக்டர் ஆர்டிஸ்டுனு தெரிய வேணாம்?. உடம்பு சரியில்லாம போனவுடனே இப்படி ஆஸ்பெஸ்டாஸ் சீட் வீட்டுல சீந்துவாரில்லாம செத்துருவேனோனு பயந்துப் போயிட்டேன். அதான் சிவா சாருக்கு கூப்டேன்” என்று கரகரவென அழுதபடி சொல்ல, என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.  பதில் ஏதும் சொல்லாமல், அவரை டிஸ்ஜார்ஜ் செய்து வீட்டுக்கு கூட்டி வந்து வீட்டுக்காரர்களிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, என் அசிஸ்டெண்ட் அவரின் வீட்டின் பக்கத்தில்தான் குடியிருந்தான். அவனிடம் கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு ஏதாச்சும் பிரச்சனைன்னா சொல்லு என்று சொல்லி கிளம்பினேன்.

லாக்டவுன் எக்ஸ்டெண்ட், இ பாஸ் மூலம் ட்ராவல் செய்யலாம் என்று அரசாங்க விதிமுறையில் கொஞ்சம் ரிலாக்‌ஷேஷன் கொண்டு வர, உடனடியாய் நண்பர் மூலம் பாஸ் வாங்கி அவரை ஊருக்கு அனுப்ப எல்லா வேலைகளையும் செய்து வண்டியோடு அவரின் வீட்டின் முன் நின்று  ”சார் வண்டி போவுது வீட்டை நான் பார்த்து செட்டில் பண்ணிக்கிறேன் நீங்க கிளம்புங்க” என்றதுக்கு தான் கண்ணீர் ததும்ப என்னை பார்த்தார் நமச்சிவாயம். அவர் கண்களில் இன்னமும் ஏக்கம் இருந்தது. வீட்டை விட்டு போக மனமேயில்லை. மூட்டை முடிச்சுகளை வண்டியில் ஏற்றி வைத்து விட்டு வண்டியில் ஏறும் போது அவருக்கு ஒரு கால் வந்தது.

“ம்.. நான் தான் நமச்சிவாயம் தான் பேசுறேன்”

”…”

“கண்டிப்பா சார்.. வந்துடறேன். நிச்சயம்” என்று உற்சாகமாய் போனை வைத்தவர் “ஒ’ வென அழ ஆரம்பித்தார்.

“என்னாண்ணே?”

”அந்த சீரியல் டைரக்டர் வேற ஒரு சீரியல் பண்ணப் போறாராம். அதுல ஒரு கேரக்டர் இருக்காம். லாக்டவுன் முடிஞ்சு வந்து பாருங்கனு சொல்றாரு. இப்ப நான் என்ன பண்ண?” என்ற போது அவரின் குரல் கேவலாய் இருந்தது.

சினிமா அப்படித்தான். கால் வைக்கும் வரை அதற்கும் உங்களுக்கு எந்த ஒட்டும் உறவும் இருக்காது ஒரு முறை ஒரே ஒரு முறை தொட்டுவிட்டால் அவ்வளவுதான் விடாது கருப்பாய் தொறத்தும். கருப்பு பல சமயங்களில் அடித்தும், சில சமயங்களில் அருளையும் தரும். அது தரும் வாய்ப்பு அடியா? அருளா? என்று யாருக்குமே தெரியாது. ஆனால் கருப்பை விட்டு வெளியே போவது என்பது அத்தனை சுலபமில்லை.

“அண்ணே. சொல்லுறேன்னு தப்பா நினைக்காதீங்க. வண்டி ஏறி ஊருக்கு போனீங்கன்னா சாவுற வரைக்கும் சோத்துக்கு பிரச்சனையில்லாம நிம்மதியா நினைச்சதை செஞ்சோம்னு அசைப் போட்டுட்டு வாழலாம். லாக்டவுன் என்னாவும்னு தெரியலை. எப்ப முடியும்னு தெரியலை. என்னைக்கு எல்லாத்தையும் ஆரம்பிப்பாங்கன்னு தெரியலை. எதை நம்பி வாழறதுனு எங்களுக்கே தெரியலை. திரும்பிப் பார்க்காம வ்ண்டியேறுங்க. இதான் உங்களுக்கு நல்லது. அப்படி வாழ்வு வரதுன்னா அதுவே உங்களைக் கூப்பிடும் அதுவரைக்கும் நீங்க உயிரோட இருக்கணுமில்லை. இப்ப கிளம்புங்க” என்றேன். வண்டி கிளம்பிப் போனது. சிறு குழந்தைப் போல கேவிக் கேவி அழுது கொண்டே சென்ற நமச்சிவாயத்தின் முகம் மட்டும் என் மனதிலிருந்து விலகவேயில்லை.

கேபிள் சங்கர்

Post a Comment

2 comments:

சாஷீ said...

திடீரென்று உங்கள் நியாபகம் ,இப்ப blog எல்லாம் இருக்கா னு பாக்க வந்தேன், உங்க எழுத்து ரசிகன் குறிப்பா ஒரு காலத்தில் கொத்துபரோட்டாவுக்கு,வந்து பாத்தால் அதே எழுத்தின் தரம் மாறாமல் ,நெஞ்சை கனக்க வைத்த கதை.. சூப்பர் சார் ,மீண்டும் உங்கள் பக்கத்தை தொடர்ந்து படிக்கும் ஆர்வம் கவ்வுகிறது..வாழ்க வளமுடன்

Kalai said...

Beautiful!