Thottal Thodarum

Jan 31, 2019

ராமின் பேரன்பு

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி என ராம் எடுத்த மூன்று படங்களிலும் நான் முரண்பட்டேயிருக்கிறேன். ஆனால் என்றைக்கும் ராமின் படங்கள் பிடிக்காமல் போனதில்லை. படங்களின் மேல் விமர்சனங்கள் வைத்திருந்தேனேயன்றி, குற்றம் சாட்டியதில்லை. ராமின் படங்கள் விமர்சனங்களை மீறி என்னை அலைக்கழிக்காமலும் இருந்ததில்லை. ஆனந்தியை மறக்க முடியுமா?, பறவையே எங்கு இருக்கிறாயையோ? ‘நிஜமாத்தான் சொல்லுறியா?” என்கிற அப்பாவி ஆனந்தியின் கேவலையோ மறக்கத்தான் முடியுமா?. இன்றளவில் தமிழ் சினிமாவில் அப்படி ஒரு பயணப்பாடலை காணவேயில்லை. ராமின் ஒவ்வொரு படமும் ஒரு அனுபவம் தான். அப்படியொரு அனுபவத்தை காண ராம் அழைத்த போது எந்தவிதமான முன்முடிவும் இல்லாமல் தான் அமர்ந்தேன்படம் ஆரம்பித்த முதல் ப்ரேமிலேயே நான் படத்துள் மூழ்கிப் போனேன்.

நீங்க வாழுற வாழ்க்கை எத்தனை ஆசீர்வதிக்கப்பட்டதுன்னு என்னோட கதையக் கேட்டா புரியும்என்கிற வசனம் ஒலித்த போது பெரிதாய் பாதிக்கவில்லை. படம் முடிந்து வெளியே வரும் போது புரிந்தது. ஆம்.. நான் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று.

ஊரே பாட்டும் கூத்துமாய் கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் போது எங்கோ ஒருவன் மட்டுமே அத்துனை கொண்டாட்டத்தையும் அமைதியாய், எந்திவிதமான ரியாக்ஷன்கள் இல்லாமல் பார்த்துக் கொண்டிருப்பான். அவன் ஏன் அப்படி இருக்கிறான் என்று கவனிக்கவோ? கேட்கவோ ஆளில்லை. ஏனென்றால் அனைவரும் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இவனைப் பற்றி அக்கறையில்லை. அல்லது தெரியாது. அப்படியே தெரிந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.  அப்படி தனியான ஒருவனைப் பற்றிய கதை. அவனுக்கு இருக்கிற ஒரே கொண்டாட்டம், தூக்கம் எல்லாமே அவனின் மகள். ஸ்பாஸ்டிக் சைல்ட் அதுவும் பெண் குழந்தை. அவள் வளர ஒரு தந்தையாய் அவனும் வளர்கிறான். துக்கப்படுகிறான். புரிந்து கொள்ள பிரயத்தனப்படுகிறான். அவமானப்படுகிறான். அடிபடுகிறான். வாழ்க்கை அவனை வளர்த்தெடுக்கிறது

படம் நெடுக வசனங்கள் மிகக் குறைவு. ஆனால் பேசும் விஷயங்கள் நிறைய. குறிப்பாய் அஞ்சலி ஒரு காட்சியில் மன்னிப்பு கோரும் வகையில்நான் அதை ஏன் செய்தேன்னு கேட்டுட்டுப் போங்கஎன்று இறைஞ்சுவார். மம்முட்டிவேணாம். நான் ஏன் இப்படி இருக்கேன். எவ்வளவு கஷ்டப்படுறேன்னு தெரிஞ்சு எனக்கே இப்படி பண்ணியிருக்கீங்கன்னா.. நீங்க எவ்வளவு கஷ்டத்துல இருப்பீங்க?” என்று கேட்டுவிட்டு போய்க் கொண்டேயிருப்பார். அன்பு ஒன்றுதான் எல்லாவற்றுக்குமான பதில் என்பதை குறிக்கும் அக்காட்சி அத்தோடு முடியவில்லை. அவர் போவதைப் பார்த்துக் கொண்டே வருத்ததில்பாவம் ரொம்ப நல்லவர் இல்லைஎன்று கூறுவார். “நாம மட்டும் என்னவாம்?”என்று பதில் கூறுவார் உடனிருப்பவர். எத்தனை அர்த்தம் பொதிந்த வார்த்தைகள். மளுக்கென கண்களில் நீர் கட்டியது.

ஸ்பாஸ்டிக் குழந்தைகளை வைத்து வியாபாரம் செய்கிறவனை காட்டிக் கொடுத்த சிறுவனை அடிபட்டு இருக்கிறான் என்று அவன் தந்தையை தேடிப் போய்உங்க பையனை அங்க அடிக்கிறாங்கஎன்று சொல்லும் போது பூ ராமின் முகத்தில் தெரியும் வருத்தத்தை எத்தனை வார்த்தையில் சொன்னாலும்  விளக்க முடியாது. அதன் பின் அவர் பேசும் வசனம்ஹாஎன துக்கம் தொண்டையை அடைக்கும்

ஸ்பாஸ்டிக் குழந்தைகளைப் பற்றி பெரிய அளவில் ்தமிழில் ந்ததாய் நியாபகம் இல்லை. கல்கி கோல்சின் நடித்த படம் தான் வளர்ந்த ஸ்பாஸ்டிக் பெண்ணின் உடல் சார்ந்த வேட்கை, காதல் என பல விஷயங்களை பேசிய படம்

இப்படத்தில் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என அனைவருமே படத்துடன் இயந்து செயல் பட்டிருக்கிறார்கள். யாரும் எங்கேயும் துருத்திக் கொண்டு இதோ பார் நானிருக்கிறேன் என்கிறார்ப் போல செயல்படவில்லை. கொடைக்கானல் காட்சியில் இருந்த அமைதியும், அழகும், சென்னைக்கு வந்தபின் வைக்கப்பட்ட  கீக்கிட ஷாட்கள் பல விஷயங்களை புரிய வைக்கிறது. எங்கே பாடல்கள் அல்லது பின்னணியிசை ஆரம்பிக்கிறது என்றோ முடிகிறது என்றோ உணர முடியவில்லை. அத்துனை தரமான இசை.  

நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது வாழ்க்கையில் வெற்றி பற்றி பேசிக் கொண்டிருந்தார். எது வெற்றி என்று கேட்டேன். பணமா? சோஷியல் ஸ்டேடஸ் அங்கீகாரமா? செய்யும் தொழிலில் கிடைக்கும் அங்கீகாரமா? என்று திரும்பக் கேட்டதற்கு பதில் இல்லை. நான் விரும்பும் விஷயத்தில் இயங்கிக் கொண்டிருப்பதே வெற்றிதான் என்றேன். அது வரம் என்று அவருக்கு புரியவில்லை. புரிந்தவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ராம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார். பேரன்பு பெரு வாழ்க்கை. ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.சாப்பாட்டுக்கடை - சந்திரா மெஸ் - வளரசவாக்கம்

 

பொங்கலுக்கு பிறகு தொடர்ந்து பாய்க்கடை விடுமுறையாதலால் வேறு ஏதாவது குட்டி மெஸ்ஸை தேடுவோம் என்று பார்த்த போது உடன் வந்த சுரேஷ் இதே ரோடுல இன்னொரு மெஸ் இருக்கு ஆனா நான் சாப்டது இல்லை என்றான். சின்னக்கடையாய் இருந்தது. மொத்தமே நான்கைந்து டேபிள்கள் தான். ‘சரி எத்தனையோ பார்த்துட்டோம் இதை பார்க்க மாட்டோமா?” என்று உள்ளே நுழைந்தோம்.  சாப்பாடு 65 ரூபாய் என போட்டிருக்க, உள்ளே போனால் மட்டன் சாப்பாடு 120, சிக்கன் சாப்பாடு, எரா சாப்பாடு. நண்டு சாப்பாடு, சிக்கன் சாப்பாடு  என வகை படுத்தியும் இருந்தார்கள். 
வாரத்தின் ஒவ்வொரு நாட்களுக்கு ஒவ்வொரு மெனு வைத்திருக்கிறார்கள்
நார்மல் சாப்பாட்டுக்கு சிக்கன் குழம்பும், கருவாட்டுக்குழம்பு, காரக்குழம்பு, ரசம், சாம்பார், மோர், ஒரு பொரியல் மற்றும் அப்பளம் என வகையாய் தந்தார்கள். சிக்கன் குழம்பு வீட்டுக்குழம்புப் போல இருந்தது. கருவாட்டுக்குழம்பில் முருங்கைக்காய் எல்லாம் போட்டு வாடையில்லாமல் கொஞ்சம் காரம் தூக்கலாய் சுவையாய் இருந்தது. காரக்குழம்பில் நன்கு வதக்கப்பட்ட பூண்டோடு, கெட்டியாய் அட்டகாசமாய் இருந்தது. ரசம், பொரியல் ஓகே ரகம். நான் மட்டன் மசாலா வெறும் 70 ரூபாய் தான். ஒரு பெரிய மண்டை பீசுடன் நல்ல குழம்புடன் தருகிறார்கள். நன்கு வெந்த துண்டுகள். மசாலாவில் நன்கு ஊறி குழம்போடு சாப்பிடும் போது தனிச்சுவையை அளித்தது. 

கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் இவர்கள் இக்கடையை நடத்துகிறார்கள். சின்னக்கடையாய் இருந்தாலும் வாடிக்கையாளர்கள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். மெஸ்ஸில் ப்ரைட் ரைஸ் எல்லாம் போடுவது கொஞ்சம் உறுத்தல் தான் வேறு வழியில்லை இரவு உணவுக்கு ப்ரைட் சாப்பிட்டு பழக்கப்பட்ட ஏரியாக்களில் அதை விற்காமல் வியாபாரம் செய்ய முடியாது. 
வீட்டு டேஸ்டில் மட்டன் குழம்பு. கருவாட்டுக்குழம்பு, காரக்குழம்பு டேஸ்ட் செய்ய விரும்புகிறவர்கள் ஒரு முறை ட்ரை பண்ணிப் பாருங்க.

சந்திரா மெஸ்
4/24, திருவள்ளுவர் தெரு
வளசரவாக்கம்.


Jan 30, 2019

உயிர் உறிஞ்சும் மீடியேட்டர்கள்


உயிர் உறிஞ்சும் மீடியேட்டர்கள்
சமீபத்தில் இயக்குனர் நண்பருக்கு போன் செய்தேன். பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிக்காக பாடல் ஒன்றை படமாக்கிக் கொண்டிருப்பதாய் சொன்னார். படப்பிடிப்பு முடிந்து ரெண்டாவது நாளிலேயே பாடல் தொலைக்க்காட்சியில்  ஒளிபரப்பானது. அதன் தொடர்ச்சியாய் நிறைய பாடல்களை அவர்களது ஸ்ட்ரீமிங் ஆப்பில் பார்த்தேன். நிறைய உழைத்திருக்கிறார்கள். நல்ல பாடல்களை தெரிந்தெடுத்திருக்கிறார்கள்.  ஓரளவுக்கு நல்ல நடிகர், நடிகைகளையும் தெரிவு செய்திருக்கிறார்கள். எல்லாம் இருந்தும் பாடல்களின் மொத்த தரம் மிகக் குறைவாய் இருந்தது. இயக்குனர் நண்பர்களை அழைத்து “என்னங்க எல்லாம் நல்லா ப்ளான் பண்ணி மேக்கிங்கில் இவ்வளவு மோசமா கொண்டு வந்திருக்கீங்க?’ என்றதுதான்  தாமதம். ஆளாளுக்கு ஓ வென அழாத குறைதான்.

”சார்.. ஓரு பாட்டு நல்லா வரணும்னா.. சிட்சுவேஷனுக்கு ஏத்தபடி ரெண்டு அல்லது மூணு நாள் ஷூட் பண்ணணும். இவங்க கொடுக்குற காசுக்கு ஒரு நாள் ஷூட் பண்ணவே முடியாது. இதுல எப்படி குவாலிட்டியும் கொடுக்குறது?’

“ஏன் நல்ல தரமான குறும்படங்கள் சின்ன பட்ஜெட்டுல பண்றது இல்லையா?”

“நூறு படம் பட்ஜெட்டுல பண்ணா ஒண்ணு தேறுறதே கஷ்டம். அப்படித்தான் இந்த நிகழ்ச்சியும்” என்றார்.

இந்த பாடல்களுக்கான பட்ஜெட் வெறும் ஒன்னரை லட்சம் ரூபாய் தானாம். அதையும் ஷூட்டிங் நடந்து முடிப்பதற்குள் வாங்குவதற்கு படாத பாடு பட வேண்டுமாம். ஆனால் அந்த நிகழ்ச்சிக்காக அந்த சேனல் ஒதுக்கும் தொகை இரண்டு மடங்குக்கு மேல் என்கிறார்கள்.

இப்படி தொலைக்காட்சியில் ஆரம்பித்து இன்றைய வெப் சீரிஸ் வரை நன்றாக சம்பாதிப்பவர்கள் மீடியேட்டர்கள் தான். சமீபத்தில் நெட்ப்ளிக்ஸின் வெளியான தமிழ் படம் ஒன்றின் இயக்குனரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். அவர்களின் தமிழ் படம் எப்படி நெட்ப்ளிக்ஸில் தேர்வானது? என்று விரிவாக சொன்னார். உலகின் முக்கிய திரைப்பட விழாவான பூஷன் விழாவில் தெரிவான பின் அவர்களே தான் வந்தார்கள். நல்ல தொகைக்குத்தான் படத்தை வாங்கினார்கள். நெட்ப்ளிக்ஸுக்கான அக்ரிமெண்டுக்கும் இவர்கள் கையில் பெரும் தொகைக்கும் 33 % வித்யாசம் இருக்கும் என்றார். அந்த படத்தை இவர்களிடமிருந்து வாங்கி நெட்ப்ளிக்ஸுக்கு தந்த வகையில் அந்த மீடியேட்டருக்கு 33 சதவிகிதம் லாபம்.

ஒரு சுயாதீன திரைப்படமெடுக்க அவர்கள் எடுக்கும் முன்னெடுப்பு, பணத்திரட்டல் என பல பிரச்சனைகளுக்கு நடுவேதான் இம்மாதிரியான நல்ல திரைப்படங்கள் வெளியாகிறது. இன்றைய டிஜிட்டல் உலகில் இம்மாதிரியான படங்களுக்கு நிறைய வாய்ப்புகள் உருவாகியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இந்த ஊடகங்கள்தான் இவர்களின் டார்கெட்டே. ஆனாலும் இந்நிறுவனங்கள் இவர்களை நேரிடையாய் அணுக முடிவதேயில்லை. ஏற்கனவே பழம் தின்று கொட்டைப்போட்ட நிறுவனங்கள், பைனான்ஸியர்கள் போன்றோர்தான் இங்கேயும் கோலோச்சுகிறார்கள்.  எனவே அடி மாட்டு விலைக்கு வாங்கி, மொத்தமாய் நான்கைந்து படங்களை அவர்கள் அங்கே அனுப்பி லாபம் பார்க்கிறார்கள்.

நான்கைந்து படங்களுக்கு முன் பணம் செலவு செய்கிறார்கள் அல்லவா? அதற்கு லாபம் வேண்டாமா? என்று நீங்கள் கேட்கலாம். வாங்குகின்ற நிறுவனம் இவர்கள் சொல்லும் விலைக்குத்தான் வாங்குகிறார்கள். அப்படியிருக்க அதை நேரிடையாய் நிறுவனமே வாங்கும் போது படைப்பாளனுக்கு நல்ல லாபம் வரும் போது அதை அடுத்த முயற்சியில் இன்னும் திறமையாய் பயன்படுத்துவான். இந்த மிடியேட்டர்களால் அவனுக்கு வரும் லாபமும் குறைவு..அடுத்த முயற்சிக்குள் இறங்க தயக்கமும் உருவாகிவிடும்.

வேறொரு நண்பர் ஒருவர்  ஹிந்தியில் எடுக்கப்படும் வெப் சீரீஸில் நடித்துவிட்டு வந்தார். ஒர் சிறிய கேரக்டர் தான் இருந்தால் நல்ல மரியாதை. பட்ஜெட், கவனிப்பு என சிறப்பாக எடுக்கிறார்கள். அவுட்புட்டை பார்க்கும் போது சினிமாவை வெப் சீரிஸ் தூக்கி சாப்பிடும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றார். உண்மைதான் வட நாட்டில் எடுக்கப்படும் சீரிஸ்கள் ஓரளவுக்கு நல்ல தரத்துடன் இருக்கிறது. அதே சேனல்களில் வெளியான தமிழ் வெப்சீரீஸ்களின் தகுதியும் தரமும் படு மோசம். விசாரித்ததில் ஹிந்தியில் கொடுக்கும் அதே அளவிற்குத்தான் இங்கேயும் முதலில் பட்ஜெட் அளித்திருக்கிறார்கள். கொடுத்தது பிரபல தொலைக்காட்சி தொடர் தயாரிக்கும் நிறுவனத்திற்கு. பணத்தை வாங்கி கல்லாவில் போட்டுவிட்டு, பொதிகை தொலைக்காட்சி தொடருக்கு ஆகும் செலவில் ஒரு மோசமான மேக்கிங்கில் வெப் சீரீஸ். பின் எப்படி விளங்கும்.

அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கு இருக்கும் பிரச்சனை இங்கே தமிழ் நாட்டில் கண்டெண்டுகளை தேர்ந்தெடுக்க சரியான ஆட்களை நேரிடையாய் வைக்க முடியாமல், இங்கே பிரபலமாய் இருந்து தற்போது நொந்து நூடூல்ஸ் ஆன நிறுவனங்கள் தங்களின் பழைய ஹோதாவில் காண்டேக்டுகளை மட்டுமே முன்னிலையாய் வைத்து பணத்தை லவட்டுகிறார்கள். முடிவு தரமற்ற கண்டெண்டுகள்.

இங்கே நல்ல திறமையான கலைஞர்கள். நியாயமான சம்பளத்திற்கு வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள். மீடியாவில் சாதிக்க வெண்டுமென்ற வெறியோடு அலைகிறார்கள். அதை பயன்படுத்திக் கொண்டு, கசக்கிப் பிழிந்து ஒரு நிகழ்ச்சியை தயாரித்து, அதை நல்ல விலைக்கு விற்று பெரும் லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் மீடியா  மீடியேட்டர்கள். அதே நேரத்தில் அவர்களுக்கு ஒதுக்கப்படும் தொகையில் நியாயமான லாபத்தை தங்களது பங்காய் வைத்துக் கொண்டு இளைஞர்கள், ஆர்வலர்களின் உழைப்பை உறிஞ்சாமல் செலவு செய்தால் நல்ல தரமான நிகழ்ச்சிகள் மக்களுக்கு கிடைக்கும். அதை நம்பியுள்ளவர்களின் வாழ்க்கையும் சிறக்கும்.

Jan 28, 2019

சாப்பாட்டுக்கடை - பாய்கடை - விருகம்பாக்கம்.

சரவணபவன் வெற்றிக்கு பின் எங்கே யார் சைவ உணவகம் ஆரம்பித்தாலும், கூடவே பவன் எனும் பெயர் சேர்ந்து கொள்ளும்.அதே போலத்தான் மெஸ். ஆனால் இந்த பாய்கடை அப்படியல்ல. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் இந்தக்கடை ஒரு போர்ட்டு கூட இல்லாமல் வாய் வழி பிரச்சாரம் போலவே வெற்றிகரமாய் ஓடிக் கொண்டிருக்கிறது. 


சிக்கன் சாப்பாடு, மட்டன் சாப்பாடு ஆகிய இரண்டு வகை சாப்பாடுகள் சிக்கன் குழம்பு, மூன்று மண்டை, மண்டையான சிக்கன் 65, ரசம், சாம்பார், மோர் கூடவே அன்லிமிடெட் சாப்பாடு. சிக்கன் குழம்பு நல்ல மசாலா மணத்துடன், கொண்டைக்கடலை, தேங்காய் எல்லாம் அரைத்துப் போட்டு, அளவான காரத்துடன் ஊற்றி சாப்பிட ஆரம்பித்தால் சாம்பார், ரசம் , மோர் எல்லாமே இரண்டாம் பட்சமாய் போய்விடும். உடன் கொடுக்கப்படும் சுடச்சுட கொடுக்கப்படும் வழக்கமான சிக்கன் 65 போலில்லாமல் வீட்டில் சில சமயம் கிடைக்கப்பெறும் ஹோட்டல் போல் அல்லாத சிக்கன். ரெண்டுமே ஆகச் சிறந்த காம்பினேஷன்.

மட்டன் சாப்பாடுக்கு சிக்கன் 65 எல்லாம் கிடையாது. நன்கு மசாலாவோடு ஊறிய பெரிய சைஸ் மட்டன் பீஸோடு கொடுக்கப்படும் குழம்பு. நல்ல காரம் மணத்துடன் இருக்கும். கடைக்குள் நுழையும் போதே, உலை கொதித்துக் கொண்டிருக்கும் வாசமும், 65 பொரிக்கும் வாசமும், ஒன்று சேர நம்மை அசர அடிக்கும். 

இரவில் தோசை, சப்பாத்தி கொண்டக்கடலை, காலிப்ளவர் குருமா, அட்டகாசமான கறிவேப்பிலை, பருப்பு,புளி போட்டு நரநரவென அரைத்த காரச் சட்னி ஆசமோ ஆசம். 

முன்பு ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு சாப்பாடு என போட்டிருந்திருக்கிறார்கள். மக்கள் கூட்டம் அதிகமாகிவிட்டதினால் வெறும் சிக்கன், மட்டன் சாப்பாடு மட்டுமே. மதியம் 12 ஆரம்பித்தால் 3-3.30 கடை மூடிவிடுகிறார்கள். அங்கேயே இருந்து சாப்பிட அவ்வளவு வசதிப்படாத சின்னக்கடைதான். பழைய வீடு. தேவைப்பட்டவர்கள் பார்சல் வாங்கிக் கொண்டு சென்று விடுவது நல்லது. சிக்கன் சாப்பாடு 100 . மட்டன் சாப்பாடு 120 

பாய் கடை
திருவள்ளுவர் தெரு 
வளசரவாக்கம்

EE.Ma.yau V/S மதயானைக்கூட்டம்.


EE.Ma.yau V/S  மதயானைக்கூட்டம்.
எப்போது பார்த்தாலும் எப்படா இந்த மாதிரியெல்லாம் ஒரு படம் தமிழ்ல வரும்னு மலையாள படங்களை கொண்டாடிக் கொண்டேயிருக்கிறோம். மீண்டும் ஒரு மலையாளப்படத்தைப் பார்த்து கொண்டாட வேண்டிய கட்டாயம். இந்த ஈ.மா.யூ. ஆனால் அதே நேரத்தில் நம் பக்கத்திலிருந்தும் இது போன்ற படங்கள் வந்திருக்கிறது. அது எதற்காக கொண்டாடப்படாமல் போனது என்பதை  பற்றியும் பேச வேண்டும். முதலில் இ.மா.யூ.

ரொம்பவே சிம்பிளான கதை. கடற்கரை கிராமம். வாவேச்சன் ஊர் வருகிறார். வரும் போதே வாத்து ஒன்றை பிடித்துக் கொண்டு வந்து மனைவியிடம் சமைக்கச் சொல்கிறார். சின்னதாய் மனைவியிடம் தோள் தட்டி ரொமான்ஸ். மகள், மருமகளிடம் விசாரிப்பு. மகனுக்காக காத்திருந்து வந்தவனுடன் பிராந்தி களி. கூடவே பேச்சு சுவாரஸ்யம் ஏற, தன் தந்தைக்கு நடந்த  இறுதி ஊர்வலத்தைப் பற்றி பேச்சு போகிறது. அப்படியான ஊர்வலம் ஊரிலேயே நடந்ததில்லை என்கிறார். அதை விட உயர்ந்த தரமான ஊர்வலத்தை உனக்கு நான் செய்வேன் என்று மகன் சத்யம் செய்கிறான். சத்யம் செய்த சில நிமிடங்களில் வாவேச்சன் சரக்கின் போதையில் கீழே வீழ்ந்து மரிக்கிறார். மகன் அவருக்கு சத்யம் செய்த வகையில் அவரின் இறுதிச் சடங்குகளை செய்தானா? இல்லையா? என்பதுதான் கதை.

நீளமான ஷாட்கள். ஷாட்களூடேயே கேரக்டர்கள் வந்து போவது. சுய எள்ளல். சாவு வீட்டில் நடக்கும் நிகழ்வுகள். ஊர் வம்பு பேசும் ஆட்கள். சின்னபுத்தியுள்ள சர்ச் பாதர், எப்போதும் சர்க்கடித்தபடி இருக்கும் குழி வெட்டும் ஆள், ஒரு முழு பாட்டில் ப்ராந்தியை குடித்துவிட்டு மட்டையாகிப் போயிருக்கும் டாக்டர், மூன்று பெக் அடித்துவிட்டு, நர்ஸைகூப்பிட்டு சாவை உறுதி செய்யச் சொல்லும் அவரது மனைவி. கொஞ்சம் கூட சிரிக்கவோ, வருத்தப்படவோ செய்யாத நர்ஸ். அவளுடய பயந்தாங்கொள்ளி, ஈர மனசு கணவன். ஈசீன் நண்பன் ஐய்ய்யப்பன், சாத்வீகனான இன்ஸ்பெக்டர். இறந்தவரின் பெண்ணிடம், ஆறுதல் சொல்லும் சாக்கில் இறுக்கி அணைத்து, பின்பக்கத்தை அழுத்தும் காதலன், நாலு பேர் வரும் போது கழுத்தில் செயின் இல்லைன்னா எப்படி? என்று இறுதி சடங்கிற்கு இருக்கும் தங்கத்தை கொடுத்துவிட்டு, பக்கத்துவீட்டு பெண்ணிடம் செயின் கடன் வாங்கிப் போட்டுக் கொள்ளும் மருமகள். மகளைப் போல நடந்த்தினாலும் சம்பந்திவீட்டார் வந்திருக்கும் போது ஒப்பாரியில் மகனுக்கு கல்யாணத்தின் போது டவுரி வாங்காததையும், அவர்கள் ஒன்றும் கொடுக்காததையும் சொல்லிக் காட்டும் மாமியார். என எத்தனை கேரக்டர்கள். அவ்வளவு கேரக்டர்களும் படத்தில் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். அத்துனை துல்லியம்.

ஒரு சாவிற்கு பின் நடக்கும் சம்பவங்கள்.மிக இயல்பான காமெடியில்  ஆரம்பித்து,  தலையில் அடிப்பட்டு வீழ்ந்ததினால் அவரின் சாவில் சந்தேகத்தை கிளப்பி, பிரச்சனையாக்கி, எப்படியாவது அப்பனுக்கு வாக்கு கொடுத்தார் போல, இறுதி ஊர்வலம் நடந்த ஆசைப்பட்ட மகனின் ஆசையில் மண் விழ்ந்து விஷயம் கை மீறும் போது உருக்கமாக முடிக்கிறார்கள்.

இதே போன்ற படம் நம் தமிழில் வந்திருக்கிறது. அது மதயானைக் கூட்டம் என்கிற படம். ஒர் இழவு வீடு அதை சுற்றி நடக்கும் உறவு அரசியல். இறந்தவரின் சின்னவீட்டு ப்ரச்சனை, அதன் காரணமாய் நடக்கும் கொலை என படு சுவாரஸ்யமான கதைக்களம். இன்னும் சொல்லப் போனால் க்ரிப்பிங்கான திரைப்படமாகவும் இருக்கும். எங்கே ஈ.மா.யூவிலிருக்கும் தரம் மதயானைக்கூட்டத்தில் சறுக்கியது என்று யோசித்தால், சொல்லப்பட்ட விதத்தில் தான் என்று சொல்ல வேண்டும்.

மதயானைக்கூட்டம் ஆரம்பித்த காட்சியிலிருந்து கடைசி வரை தேவர்களின் புகழ் பாடும் படமாகவே நமக்கு புரிபட ஆர்மபிக்கும். நாம், நம் ஜாதி, ஜாதி பெருமை, ஜாதி வெட்டி வீரம், வெட்டி ஜாதிப் பெருமைக்காக கொலை என ஒரு சாராரின் புகழ் பாடும் படம் போலவே இருக்கும். தேவையில்லாத காதல் காட்சிகள், டூயட்., ஜாதிப் பெருமை என பிரஸ்தாபித்ததினால் ஒரு சாராரின் படமாய் போய் மக்களின் விருப்பத்தில்லாம போய்விட்டது.

ஆனால் ஈ.மா.யூ அதை செய்யவில்லை. மிக ஆழகாய் வாழ்க்கையை, மனிதர்களை கண் முன் கொண்டு வருகிறது. மனிதர்களிடையே இருக்கும் ஆசா பாசங்கள், வன்மம், சின்னபுத்தித்தனம் ஆகியவற்றை போகிற போக்கில் சொல்லிப் போகிறது. மிகவும் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் மிக இயல்பான ஒளிப்பதிவும் நடிப்பும். வசனங்களும். சர்ச் பாதர் நடுராத்திரி போலீஸுக்கு போன் செய்து வாவேச்சனின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று புரளியை நம்பி புகார் கொடுக்க, இன்ஸ்பெக்டர் அதை லூசில் விட, பாதிரியாரா இருக்க வேண்டியவன் எல்லாம் போலீஸா இருக்கான் என்று துப்பறியும் நாவல் படிக்கும் பாதிரி கேரக்டர். போலீஸ் பிரச்சனையை சரி செய்ய கொஞ்சம் இன்ப்ளூயன்ஸ் உள்ள அய்யப்பன் மழைக்காலையில் ஸ்டேஷனுக்கு போக, அங்கே ரைட்டருக்கு பிரிவு உபச்சார விழா. வேறு ஒரு மனநிலையில் உள்ள அய்யப்பனையும் அவரை வாழ்த்தி பேச சொல்லும் இன்ஸ்பெக்டரின் கட்டாயத்தின் பேரில் பேச விழைந்து, முடியாமல் அழுதபடி கிளம்புகிறவனுடன் கிள்மபும் இன்ஸ்பெக்டர்.  விசாரணைக்காக டாக்டரிடம் கேட்க, ஏற்கனவே உடம்பு சரியில்லை. கீழ வீழ்ந்துச் சின்னக் காயம். வேற ஒண்ணுமில்லை. என்று சொல்லவிட்டு, செல்ல, அதற்கு முன் பாதிரியுடன் நடந்த விஷயத்தை மனதில் வைத்து, நீங்க பாதிரியா இருக்க வேண்டியது இன்ஸ்பெக்டரா இருக்கீங்க எனும் வசனம் அழுத்தம்.

ஒர் அழுத்தமான விஷயத்தை மிக இயல்பாய், அதன் நிஜத்தன்மையோடு, கொண்டு சென்று எமோஷனலாக்கி நம்மை அனுப்புகிறார்கள் இந்த ஈ.மா.யூவில். ஆரம்பம் கொண்டே எமோஷனலாக்கி, ஜாதிப் பெருமை, ல்வ், தேடல் என அலைக்கழித்து கதை சொல்லி நம்மிடமிருக்கும் பொறுமையை சோதித்தது மதயானைக்கூட்டம். இருந்தாலும் நம் தமிழ் திரையுலகமும் ஒர் சிறு முயற்சியை செய்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது என்பதை மீறி கொஞ்சம் பெருமையாகக்கூட இருக்கிறது.

Jan 22, 2019

பொண்டாட்டி - ஒர் அலசல் (நீ எவண்டா பொண்டாட்டிகளை அலச)அராத்துவின் புதிய நாவல் வரப்போகிறது என்பதை பல விதமான மார்கெட்டிங் டெக்னிக்கை பயன்படுத்தி இந்த புத்தக திருவிழாவுக்கு வெளியிட்டார்கள். ஆன்லைன் ப்ரீ புக்கிங். டிஸ்கவுண்ட் புக்கிங். கிண்டில் என எல்லா இடத்தில் நல்ல விற்பனை என்றும் கேள்விப்பட்டேன். நான் இதை எழுதுவது  பொண்டாட்டியின் விற்பனையைப் பற்றி கூற அல்ல.  பொண்டாட்டி நாவலைக் குறித்து பேச.

பொண்டாட்டி ஒரு செக்ஸ் நாவலா? என்றால் ஆமாம். பொண்டாட்டி ஒரு ஆணாதிக்க நாவலா? என்.. ஆமாம். பொண்டாட்டி எப்போதும் புதிராகவே இருக்கும் பெண்களைப் பற்றி, அவர்களின் பர்வர்ஷன் பற்றி, தடுமாற்றங்களைப் பற்றி, ஆசாபாசங்களைப் பற்றிய மனோதத்துவமான பதிவா? ஆமாம். யாரு யாருக்கு உறவுன்னு நானாறு பக்கத்தையும் மாத்தி, மாத்தி புரட்டியே தாவூ தீர்ந்து போச்சு. வடசென்னை கேரக்டர் மேப்பை விட மோசம். இது மயிரு நாவல். ஃபேக் நாவலில்லை ஃபோர்ன் நாவல். அபீஷியலான மஞ்சள் பத்திரிக்கைத்தர நாவலா? புத்தகம் படித்து சுயமைதுனம் செய்யும் பழக்கம் வழக்கொழிந்து விட்டநிலையில் அதற்காக நானூறு பக்க புத்தகம் தேவையா?  இது இலக்கியமா? இல்லை. அராத்துவின் பர்வர்ஷன். அவர் பார்த்த, ஒழுத்த பெண்களைப் பற்றிய கற்பனை என்பீர்கள் என்றால் அதுவும் ஆமாம் தான். நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கு எவ எவன் கூட படுத்தான் (அ) ள். அவனுக்கு குறி எப்படி இருந்துச்சு. முலை எப்படி இருந்துச்சுங்கிறத எழுதுறதுக்கு ஒரு விமர்சனம் வேற என கரித்துக் கொட்டுவீர்கள் என்றால் தினசரிகள் வரும் உறவு சார்ந்த, செக்ஸ் சார்ந்த குற்றங்கள் குறித்து படித்துவிட்டு எங்கேயோ ஒரு பெண், ஒரு குடும்பம் அவரவர்கள் பிரச்சனை நினைப்பவர்களானால் இனி வரும் வரிகளை படிக்காமல் நாட்டை காப்பாற்ற போய்விடுங்கள். அப்படித்தான் அச்செய்திகளை கடக்கிறோம்.   

காதல் இருக்கிறதோ இல்லயோ காமம் இல்லாத ஆண் பெண் இல்லை. காமம் தான் காதலை வளர்க்கிறது. சமயங்களில் காதலை அழிக்கவும் செய்கிறது. அதற்கான காரணங்கள் பல இருந்தாலும், நம்பிக்கை துரோகம் முதலிடம் வகிக்கிறது. பெண்கள் இப்படியெல்லாம் இருக்க மாட்டார்கள். ஒரு ஆணின் பார்வையில் சொல்லப்பட்ட கதை என்று ஒரு பக்க வாதம் செய்யக்கூடும். ஆனால் உண்மையில் இதைப்படிக்கும் பல பெண்கள் தங்களை இக்கதையில் வரும் கேரக்டர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் பொதுவெளியில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆணிற்கு நிகராய் பெண்களும் நம்பிக்கை துரோகம் செய்யவல்லவர்களே. பல சமயங்களில் பெண் குடும்பம்,குட்டி என முக்கியத்துவம் மாறிப் போய் செக்ஸை பின்னுக்கு தள்ளிவிடுவார்கள். ஆதிரைப் போல.

இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பளை எனும் கூற்றுக்கு ஏற்ப ஆணின் கற்பனையில் உள்ள பெண்ணாய் வலம் வரும் பொற்செல்வி போல. எப்போதும் தன்னை, தன் அழகை முன் வைத்து, வழியும் ஆண்களை பழக்கப்பட்ட நாய் போல ஒரு சில முத்தங்களையும், அணைப்புக்களையும் தந்து காரியம் சாதித்துக் கொள்ளும் புத்திசாலி தீப்தியைப் போல, அவளை அடைய ஜெயமோகனும், எஸ்.ராமகிருஷ்ணனும், சாரு நிவேதிதாவும் செய்யும் தகிடுதிங்களைப் போல, காதலன் என்று ஆகிவிட்டான் என்ன செய்ய? என கிட்டத்தட்ட மசோகிஸ்டாய் வலம் வரும் ஆதிரை போல, எவ வந்தாலும் என் உறவை தக்க வைத்துக் கொள்ள எதை வேணும்னாலும் செய்வேன் என விழையும் வந்தனா, ஆண்களின் பிட்டுப்பட கற்பனையான சுமதி ஆண்டி. ஏஞ்சலீனா, கதையே இல்லாத இன்பா குறி சொல்லும் கலா. இக்கதையை வழிநடத்தும் ஆத்தா மகமாயி. என பெண்கள் கூட்டம்,

நாவல் முழுவதும் கெட்ட வார்த்தை வீச்சம் ஆங்கிலத்திலும் தமிழிலும் வழிந்தோடுகிறது. நம்மையும் அறியாமல் வாய்விட்டு சிரிக்க வைக்கும் வரிகள். ‘மான்கள் இல்லாத காட்டில் இயற்கையாய் செய்து பார்க்கலாம் என்று முடிவு செய்து இறங்கிப் பார்த்து, தீப்திக்கு முதுகு சிராய்த்ததும், ஜெயமோகனுக்கு ஏதோ ஒரு காட்டு வண்டு கடித்ததும் தான் மிச்சம். அந்த விடுமுறை முழுவதும் மூன்று கொட்டைகள் கொண்ட அதிசய மனிதாய் வலம் வந்தான் ஜெயமோகன்

சுவாரஸ்யமான நான் லீனியர் கதை சொல்லல். சமயங்களில் இவ இவனை வச்சிக்கப் போறா? அதானே.. எதுக்கு ரெண்டு பக்கம் என்கிற அசுவாரசியமும் இணைந்தே பயணிக்கும் எழுத்து. ஆங்காங்கே நிரவி விடப்பட்டிருக்கும் கனோசியர் வகை வர்ணனைகள். உயர் மட்ட வாழ்க்கை முறை. இதை நாவல்னு சொல்லலாமா? இல்லை பேஸ்புக் குறுங்கதைகள் போன்ற ஏதோ ஒன்றாய் நினைத்துக் கொள்ளலாமா? என்று கேட்டீர்களானால் அது உங்க இஷ்டம்.  சாருவின் தாக்கம் சிஷ்யப் பிள்ளை அராத்துவிடம் அதிகம் இருக்கிறது.

“ஆத்தா நீயும் ஒரு பொண்டாட்டி தானே?”

“இல்லடா நான் ஆத்தா. ஊருல உள்ள அத்தனை பொண்டாட்டியும் ஆத்தாடா”
என்கிறாள் ஆத்தா கலாவின் வாயிலாய். கிட்டத்தட்ட அதுதான் உண்மை. என்ன தான் ஆண் தான் பெரிய பூ.. என்று நினைத்து ஆட்டம் ஆடினாலும் ஆட வைப்பவள் பெண்தான்.

என்னா மசுருக்குடா  எழுதணும். எங்களைப் பத்தி எங்களுக்கு தெரியும். நீ எழுதுறது ஆம்பளைங்களுக்கு.அவனுங்களுக்கு ஒரு கிளுகிளுப்பு வேணும். உனக்கும் கிளுகிளூப்பு வேணும். உங்க அரிப்புக்கு பொண்டாட்டித்தான் கிடைச்சாளா?” என அம்பாள் கலா மூலமாய் கேட்பதுதான் பலரது கேள்வியாய் இதைப் படித்ததும் இருக்கக் கூடும்.

வாழ்வியல் என்பது வறுமை. பணம். அதிகாரம். அதிகார துஷ்பிரயோகம். தலித்தியம். நீலம். ஆரஞ்சு. மஞ்சள். பிச்சைக்காரன். இசை. கவிதை. ஸ்த்ரீ சம்போகம். ஃப்ரீ செக்ஸ். பெரியாரிசம். அம்பேத்காரிசம். அந்த இசம். இந்த இசம் என்பதும் அதான் இலக்கியம் என்பதுமாய் நினைக்கிறவர்கள் இந்தப் நாவல் பக்கம் போக வேண்டாம். ஆச்சாரக் குறைவாய் போய்விட வாய்ப்பிருக்கிறது. ஒரு மொக்க நாவலுக்கு இத்தனை பெரிய கட்டுரை தேவையா? என என்னை கூட அராத்துவை சேர்த்து திட்டக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருந்தாலும். எனக்கு படிக்க சுவாரஸ்யமாய் இருந்தது.
நாவலில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை. சாரு அப்படி பார்த்திருக்கிறார். இப்படி பார்த்திருக்கிறார். என்றார் அராத்து. கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகளும். திடீரென ஒரு வரியில் ஜெயமோகன் வீட்டிலிருந்து தீப்தி ஹோட்டலுக்கு போய் மீண்டும் ஜெயமோகன் வீட்டிலேயே இருக்கிறாள். தீப்தி ப்ரியநந்தினி ஆவது போன்ற சிற்சில தவறுகள் இருக்கிறது. கேட்டால் தெரிந்தே வைத்தோம் என அராத்து சொல்வார்.

நான் அடிக்கடி என் தோழிகள், தோழன்களிடம் சொல்லு ஒரு விஷயம். “ஒரு ஆம்பளை பொறந்ததுலேர்ந்து யாராச்சும் ஒரு பெண்ணிற்காகதான் இயங்கி கொண்டிருக்கிறான். அம்மா, அக்கா, தங்கை, கல்யாணம், பொண்டாட்டி, அவள் மூலமாய் கிடைக்கப் பெறும் குழந்தைகள், அவர்கள் மூலமாய் கிடைக்கப் பெறும் பேரன் பேத்திக்கள் என கடைசி வரை அவன் அவர்களைச் சார்ந்தே இயங்கிக் கொண்டிருக்கிறான். நீ வீரன் சூரன். நீ ஆம்பளை. உன்னால முடியும். நீயில்லாட்டி நான் என்ன செய்வேன் என உசுப்பேத்தி, உசுப்பேத்தி ரணகளப்படுத்தி, குழந்தையின் அரணாக்கயிற்றில் கயிற்றைக் கட்டி சுதந்திரமாய் இருப்பது போன்ற உணர்வை குழந்தைக்கு கொடுத்து, அது தாண்டிப் போகும் போது “இந்தாடா” என பிடித்திழுத்து மீண்டும் முதலிலிருந்து தவழவிடுகிறவர்கள் பெண்கள். ஆண்கள் எல்லாரும் அட்டக்கத்திகள் தான்:”.

இந்த பொண்டாட்டியும் அப்படியான பெண்களினால் இயக்கப்பட்ட அட்டக்கத்தி ஆண்களின் கதைதான்.

கேபிள் சங்கர்