Thottal Thodarum

Sep 5, 2023

சாப்பாட்டுக்கடை - கைமணம்

 கொரோனா காலத்தில் ஏகப்பட்ட க்ளவுட் கிச்சன்கள் முளைக்க ஆரம்பித்திருந்தது. அவைகளில் 80 சதவிகிதத்திற்கு மேலாய் இப்போது இல்லை. ஒரு சில க்ளவுட் கிச்சன்கள் சின்ன ரெஸ்டாரண்டாகவும் மாறியிருக்கிறது. சிலது இன்னமும் க்ளவுட் கிச்சனாகவே இருக்கிறது. அப்படியான ஒரு கொரோனா காலத்தில் நான் கண்டெடுத்ததுதான் இந்த கை மணம் உணவகம். ஒரு நாள் மதியம் கோபாலபுரம் பக்கம் போய்க் கொண்டிருந்த போது கொலைப் பசி. கைமணம் என்று பெயரைப் பார்த்ததும் அது ஒரு சின்ன சந்தாய் இருந்தது. அங்கே ஒரு ப்ளாட்டின் மாடியில் இருப்பதாய் தெரிய மேலேறிப் போய் பார்த்த போது அங்கே ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகைப் போட்டு சமைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பெண்மணியும் ஒரு சில சமையல்காரர்களும் இருக்க, சாப்பிட இடம் இல்லையே என்று யோசித்துக் கொண்டிருந்த போது "சார் இது க்ளவுட் கிச்சன் தான் நோ டைனிங்" என்றார் பெண்மணி. சோகமாய் இறங்க ஆயத்தமான போது "பிரியாணி இப்பத்தான் இறக்கினோம். வேணும்னா அங்க டேபிள்ல உக்காந்து சாப்பிடுறீங்களா? என்று பிரியாணி அண்டாவை திறக்க, அட்டகாசமான மசாலா வாசம் என்னை சூழ்ந்தது. சூடான, மிகச் சூடான் மட்டன் பிரியாணி. அட்டகாசமான கத்திரிக்கா பச்சடியோடு சாப்பிட்டு முடித்தேன். மசாலா அதிகமில்லாத பிரியாணி. சுவைக்கு ஏதும் குறையில்லை.  அதன் பிறகு அந்தப் பக்கம் போகும் போதெல்லாம் பிரியாணி மண்டைக்குள் கிண்டினாலும் க்ளவுட் கிச்சன் என்று உறைத்ததால் போகாமல் வழக்கப்படி விஸ்வநாதன் மெஸ்ஸுக்கு போய்விடுவேன். 

சமீபத்தில் ஒரு சில மாதங்களுக்கு முன்னால் போன போது கைமணம் ரெஸ்ட்டாரண்ட் ஆகியிருந்தது. ஒரு இருபது பேர் அமர்ந்து சாப்பிடும் அளவுக்கான ஏசி இடம். சரி உள்ளே போய் அமர்ந்தோம். ஸ்டார்டர்ஸ் என்று லிஸ்ட் பார்த்தால் பொரிச்ச கோழி, சிக்கன மஹாராணி, மட்டன் மஹாராணி என்று லிஸ்ட் போடப்பட்டிருக்க, பொரித்த கோழியை ஆர்டர் செய்தோம். அட்டகாசமான மசாலாவோடு பொரிக்கப்பட்ட நான்கு சிக்கன் துண்டுகள். போட்டிருந்த மசாலாவும், கோழியும் செம்ம ஜூஸியாய் இருந்தது.  சிக்கன் மஹாராணி நல்ல நீட்டு துண்டுகளாய் போடப்பட்ட சிக்கன், மேலே டிரை மசாலாவோடு பொரிக்கப்பட்டிருந்தது. லேசான எலுமிச்சையை மசாலாவோடோ அல்லது தயிரோ சேர்திருப்பார்கள் போல.. லேசான புளிப்புடன் அந்த சிக்கன் டேஸ்ட் இருக்கும். அதையே தான் மட்டன் மஹாராணிக்கும்.நன்கு பொரிக்கப்பட்ட சன்னமான மட்டன் பீஸுகளுடன். நிறைய முந்திரிப்பருப்புகளுடன் கார்னிஷிங் செய்யப்பட்டு தருகிறார்கள். இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்த ஸ்டார்டர்ஸ். இவர்களின் மலாய் சிக்கன் கிட்டத்தட்ட சமிபத்திய பேமஸான இண்டியூஸ்ட் சிக்கனுக்கு ஈடாய் இருக்கிறது. 

கைமணத்தின் நல்ல சிக்கன் இடியாப்பம், மட்டன் இடியாப்பம், மற்றும் பன்னீர் இடியாப்பம் தருகிறார்கள். நல்ல தரமான மிக்ஸ். குறிப்பாய் பன்னீரும் சிக்கனும் அருமையோ அருமை. கூடவே தரப்படும் கிரேவியின் சுவையோடு சிறப்பாக இருக்கிறது. இவர்களின் மெனுவில் சுவாரஸ்யமான ஒன்று ரசம் சாதம். நல்ல சூடான ரசம் சாதம் சாப்பிட அதுவும் இரவில் கிடைப்பது அரிது. நல்ல ரசம். இவர்கள் க்ளவுட் கிச்சனாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கீழே உணவகம். ஆன் லைனில் கூட ஆர்டர் செய்து கொள்ளலாம்.  சூரியன் எப்.எம் ஆர்.ஜே பெண் ஒருவர் தான் இந்த கடையின் முதலாளி 

கைமணம்

15, Gopalapuram 1st St, Pudupet, Gopalapuram, Chennai, Tamil Nadu 600086