Thottal Thodarum

Dec 20, 2016

கொத்து பரோட்டா 2.0-10

கொத்து பரோட்டா 2.0-10
நாடே ரெண்டு பட்டுக் கிடக்கிறது. அமெரிக்காவுக்கு ஒர் 9/11 போல, நம்மூருக்கு ஒரு 9/11. 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்கிற அறிவிப்பினால். கருப்புப் பணத்தை, ஐ.எஸ்.ஐயினால் நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க ஊடுருவப்பட்டிருக்கும் கள்ளப் பணத்தை , வரிக்குள்ளேயே வராத பாரலல் மணியை கணக்குக்குள் கொண்டு வர, விலை வாசி குறைய, ரியல் எஸ்டேட் மார்கெட் சீர் பட, நாட்டின் பொருளாதாரம் மேம்பட, என ஆயிரம் ப்ளஸ்கள் இந்த அறிவிப்பால் நடக்கும் என்கிற பாஸிட்டிவ் உணர்வு முதல் இரண்டு நாட்களுக்கு இருக்கத்தான் செய்தது. அம்பானிக்களுக்கும் அதானிகளுக்கு காட்டும் அக்கறையை மக்களுக்கு காட்டாத மோடி அரசு என ஒரு பக்கம் இந்த திட்டத்தை எதிர்த்து எதிர்கட்சிகளும், மக்களில் ஒரு பகுதியினரும் கோஷமிட்டுக் கொண்டிருக்க,  இன்னொரு பக்கம் நாட்டின் முன்னேற்றத்துக்காக ரெண்டொரு நாள் கஷ்டப்பட தயாராக இருக்க மாட்டோமா? என்று உசுப்பிவிடப்பட்ட தேசப் பற்றோடு வளைய வருவதில் பெரிய கஷ்டமொன்றும் பல மிடில் க்ளாஸ்களுக்கும், இணைய வாசிகளுக்கும் இல்லை. யாரும் பேங்க் போய் அநாவசிய கூட்டத்தை ஏற்படுத்தாதீங்க.. பணம் தேவையாக இருக்கும் அடித்தட்டு மக்கள் முதலில் மாற்றிக் கொள்ளட்டும் என்றெல்லாம் ஸ்டேடஸ் போட்டவர்கள், முதல் நாள் முத ஷோவுக்கு போகிறார்ப் போல போய் 2000 ரூபாய் நோட்டோடு செல்பி எடுத்து போட்டுக் கொண்டனர். தினக்கூலிகள், சிறு வியாபாரிகள், சிறு தொழில் உற்பதியாளர்கள், ஆன்லைன், டெபிட் கார்ட், க்ரெடிட் கார்ட், ஸ்மார்ட் போன் போன்ற வஸ்துக்களையெல்லாம் பழகாதவர்கள் அதிகம் உள்ள நாடு நம் நாடு. ஆனால் அவர்களையெல்லாம் பழக்குவதற்குத்தான் இந்த முயற்சி என்று வைத்துக் கொண்டாலும்.  புழக்கத்தில் இருக்கும் 80 சொச்ச சதவிகித நோட்டுக்களை ரெண்டொரு நாட்களில் மாற்றுவது என்பது சாதாரண விஷயமில்லை. ரகசியமாய் அதிரடியாய் செய்தால்தான் இம்மாதிரி முயற்சிகள் வெற்றி பெறும் என்று சொன்னாலும், செயல்படுத்திய பின் அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு ஏற்றார்ப் போல அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துவிட்டு செயல் படுத்தியிருக்க வேண்டும். பழைய நோட்டுக்களுக்கு பதிலாய் 500, அல்லது 100 ரூபாய் நோட்டுக்களை கொடுத்திருந்தால் கூட கொஞ்சம் ஆங்காங்கே சில்லரைப் பிரச்சனை தீர்ந்திருக்கும். ஆனால் 2000 ரூபாய் நோட்டை கொடுத்துவிட்டு, அதற்கு சில்லரை தேடும் நிலைக்கு வைத்தது, ஏடிஎம்கள் தொடர்ந்து பணப்பட்டுவாடா செய்ய ஏதுவாய் வேலை செய்வது. தகுந்த சில்லரை விநியோக முறை. வங்கிகளில் பணம் மாற்றும் முறை, என முன்னேற்ப்பட்டையும் செய்திருந்தால் நிச்சயம் வரவேற்றிருப்பேன். இதுல கையில மை வேற வைக்கப் போறீங்களாமே? அஹான்… முதல் ரெண்டு நாள் இருந்த தேப்பற்று உத்வேகமெல்லாம் கையிலிருக்கும் காசு போல குறைந்து கொண்டே வருகிறது. பாத்து பண்ணுங்க மோடி ஜி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Money Monsters
ஜார்ஜ் க்ளூனி, ஜூலியா ராபர்ட்ஸ், நடிகை, ஜோடி பாஸ்டரின் இயக்கம் என ஈர்ப்புக்கான எல்லா விஷயமும் இருந்ததால் போய் உட்கார்ந்தாயிற்று. டிவியில் இந்த ஸ்டாக்கை வாங்கு, அந்த ஸ்டாக்கை வாங்கு என ரெகமெண்ட் பண்ணும் ஷோ ஹோஸ்ட் செய்பவராக கூளூனி. அவர் சொன்ன ஸ்டாக்கை வாங்கி நஷ்டப்பட்ட ஒருவன் சேனலின் உள்ளே நுழைந்து அவரை பணையக் கைதியாக வைத்துக் கொண்டு, நீ சொன்ன ஸ்டாக் எப்படி நஷ்டமானது என்று பப்ளிக்காக அந்த கம்பெனி ஓனர் பேச வேண்டுமென்ற கோரிக்கை வைக்க, கிட்டத்தட்ட எட்டு நூறு மில்லியன் தொகையை ஆட்டையைப் போட்டு சவுத் ஆப்பிரிக்காவில் இன்வெஸ்ட் செய்த தில்லாலங்கடியை எப்படி வெளிக்  கொணர்கிறார்கள் என்பதுதான் கதை. இம்மாதிரியான கதைகளில் எப்பவுமே ஹீரோ யாராக இருந்தாலும் காமன் மேன் தான் விக்டிம். பல படங்களில் இந்த மாதிரியான கேரக்டரில் ஹீரோ இருப்பார். இதில் அவருக்கு உதவுகிறவராய் இருக்கிறார். ஷார்ப்பான வசனங்கள், சுவாரஸ்யமான ப்ளாட், எல்லாம் இருந்தும் க்ளைமேக்ஸுன் போது கொஞ்சம் தெலுங்கு படம் போல சவ சவதான். ஸ்டாக் மார்க்கெட், அது இது என்று உட்டாலக்கடி அடித்தாலும் மீடியாவின் செய்தி வெறி, அதற்காக எப்படியெல்லாம் இயங்குகிறது என்பது அடிநாதமாய் ஓடுவது சுவாரஸ்யம். படம் நம் மக்கள் நீ எப்படி மல்லையாவ விட்ட? அம்பானிய விட்ட? அதானிய விட்டேன்னு கேட்டுட்டு இருக்குற டைமுக்கு செம்ம மேட்ச்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சினிமா தொழில் முழுவதும் ஸ்தம்பித்து நிற்கிறது. கருப்புப்பணம் அதிகம் ஊடாடும் தொழில் சினிமா. பெரும்பாலும் நடிகர்களுக்கு கொடுக்கப்படும் அட்வான்ஸ் தொகையானது கருப்பாகவே இருக்கும். இனி அதற்கான மாற்று வழியையோ, அல்லது நேர்வழியாகவே எதாவது ஒரு முடிவு எடுத்தாக வேண்டும். இதில் பாவப்பட்டவர்கள் லிஸ்டில் இயக்குனர் மற்றும் பல தொழில் நுட்பக் கலைஞர்கள் எல்லாம் கடைசி நேரத்தில் ஒப்பந்த தொகையே வராமல், படம் ரிலீஸானல் போதுமென்று கையெழுத்து போட்டு கொடுக்கும் நிலை தான் அதிகம்.  படம் ஓடாமல் போனால் தயாரிப்பாளரின் நிலை அதை விட மோசம் என்பது தனிக்கதை. இந்த பணப் பரிவர்த்தனை பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுவது தினக்கூலி தொழிலாளர்களான லைட் மேன்கள், யூனிட்களில் வேலை செய்கிறவர்கள் தான். தினம் மாலையில் செட்டில் செய்யப்படும் இவர்களுக்கு சம்பளம் கொடுக்க ரொக்கமாய் இல்லாத காரணத்தால் பல ரெகுலர் கம்பெனிகள் ஆன்லைனில் ட்ரான்ஸ்பர் செய்ய முயல ஆரம்பித்திருக்கிறார்கள். வரிவிதிப்பிற்குள் இது வரை பெரும்பாலும் வராத இவர்களும் வந்து தான் ஆக வேண்டிய நிலை. இது பலருக்கு கஷ்டமாய்த்தான் இருக்கும்  என்றாலும்  வேறு வழியில்லை. பழகித்தான் ஆக வேண்டும். இவர்களில் பெரும்பாலானவர்கள் கேஸ் மானியத்துக்கும், வெள்ளத்தின் போது நிவாரண நிதி பேங்க் அக்கவுண்டில் கொடுத்த போது வாங்கியவர்கள் தான்.  @@@@@@@@@@@@@@@@@@@@@
மனிதன்  ஆறறிவு கொண்டவன். அதனால் பேரழவு காலத்திலும், தன்னை காப்பாற்றிக் கொள்ள பல வழிகளை கையால்கிறான்.  பணத்தட்டுப்பாட்டை அவன் சமாளித்த விதங்கள் பல அட போட வைக்கக்கூடிய விஷயங்கள். எட்டாம் தேதி ராத்திரியே இருக்குற பணத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு நகைக்கடைக்கு ஓடி 500, 1000த்தை நகையாய் மாற்றியவர்கள். நடு ராத்திரி ஏடிஎம்மில் க்யூவில் நின்று தன் கையிருப்பையெல்லாம் டெபாசிட்டாய் போட்டு, ஏ டி எம் மை ஏ.டி.பேங்கிங்காய் மாற்றியவர்கள். ரயில் டிக்கெட், ஏர் டிக்கெட் பல்க் புக்கிங் செய்தவர்கள். சேஞ்ச் இல்லை என்பதால் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போடுகிறவனெல்லாம் 500க்கும் ஆயிரத்துக்கு பெட்ரோல் போட வைத்தவர்கள். புத்திசாலித்தனமாய் 500 ரூபாய் நோட்டுக்களை வாங்கிக் கொண்டு சில்லறைக்கு  சோடக்சோ பாஸ் கொடுத்தவர்கள்.  ஐந்நூறுக்கு நூறு, ஆயிரத்துக்கு இரு நூறு என்று இன்ஸ்டெண்ட் மணி சேஞ்சர் ஆனவர்கள் காசில்லாவிட்டாலும் பரவாயில்லை வரும் போது கொடுங்கள் என்று இலவசமாய் உணவளித்தவர்களிடையே, பணப்பறிமாற்றமே இல்லாமல் முழு தொகைக்கும் உணவை வாங்கச் சொன்னவர்கள். பத்திருபது சில்லரைகளையும் கொடுக்காமல் விட்டவர்கள்.  ஏ.டி.எம்களில் பணம் நிரப்பும் வண்டியை பின் தொடர்ந்து சென்று எங்கெல்லாம் பணம் நிரப்பப்படுகிறது என்று நண்பர்களுக்கு வாட்சப் தட்டிவிட்டவர்கள். மெயின் ரோட்டில் இல்லாத எதாவது மாலின் பேஸ்மெண்டில் உள்ள, தெரு முக்கினுள் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் ஏடிஎம்களையெல்லாம் தெரிந்து சுலபமாய் பணம் எடுத்தவர்கள், தெரிந்த கடன் வைக்கக்கூடியவர்களிடம் கடன், க்ரெடிட் கார்டில் ஆயிரக்கணக்கில் கடன் வைத்திருப்பவர்கள் பக்கத்து மளிகை கடைகளில் கடன் சொல்ல கூச்சப்பட்டு நிற்பவர்கள், வேசிகளிடம் ஆயிரம், 500 ரூபாய் நோட்டை மாற்றியவர்கள், டாஸ்மாக்கில் நல்ல காலத்துலேயே எம்.ஆர்.பிக்கு மேல் காசு வாங்குகிறவர்கள், 92 ரூபாய் சரக்கு ப்ளாட் நூறு ரூபாய் ஆனால் 5 வாங்கணும் என்று டார்கெட்டும் எக்ஸ்ட்ரா பணமும் சம்பாரித்த சேல்ஸ் மேன்கள், ரியல் எஸ்டேட் ப்ரொக்கர்கள் போல பழைய டிவிஎஸ் 50 வைத்திருக்கும் ஆட்கள் எல்லாம் பத்து சி, நூறு சி மாத்தணும் என்றோ, மாத்தித் தர்றேன் என்றோ நட்ட நடுரோட்டில் 40 பர்செண்ட் எக்ஸேஞ்ச் ரேட் பேசிக் கொண்டிருப்பவர்கள்,  இருக்கும் நாட்டில் மெல்லமாய் போகலாம் தேவையானவங்க வாங்கட்டும், இருக்கிறத வச்சி மேனேஜ் பண்ணிப்போம் என்று பதட்டப்படாமல் தேவைகதிகமாய் பணம் எடுக்க க்யூவில் நிற்காமல் சரியான நேரத்தில் டெபாசிட் செய்தும், பேங்குக்கு போய் பணம் எடுத்தும், அளவாய் செலவு செய்து, கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்து, காக்க வைக்க வேண்டியவர்களுக்கு காக்க வைத்தும், மிக தேவைக்கு க்ரெடிட் கார்டிலும், டெபிட் கார்டிலும் தேய்த்தும் சமாளிக்கிறவர்கள் கோடி. மனிதனுக்கு அறாம் அறிவு உண்டு. அவன் வாழ எந்தவிதமான செயல்களையும்,   வழிகளையும் மேற்கொள்ளக்கூடியவன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நடுநிசிக் கதைகள்
எனக்கும் இரவு நேர ரோந்து போலீஸ்காரர்களுக்கும் ஏதோ ஒர் உறவு இருக்கிறது போல. நடு ராத்திரியில் அடிக்கடி அலைபவன் நான். பெரும்பாலான செக்கிங் நேரங்களில் கொஞ்சம் பேச்சுக் கொடுத்தால் செக்கிங்கை மீறி என்னுடன் பேச ஆரம்பித்துவிடுவார்கள். இம்மாதிரியான சம்பவங்களை எழுதுமளவுக்கு. சமீபத்தில் அப்படித்தான் வழக்கம் போல நானும், நண்பர் கே.ஆர்.பியும் படம் பார்த்துவிட்டு பேசிக் கொண்டே அவரை ட்ராப் செய்ய போய்க் கொண்டிருந்தேன்.  ஆர்.சி, இன்சூரன்ஸ் எல்லாம் செக் செய்த அந்த இன்ஸ்பெக்டரைப் பார்த்து பாவம் சார் என்றேன். ஏன் என்று கேட்டவர் பிடிக்குதோ பிடிக்கலையோ உங்களை மாதிரியான் ஆபீஸர்களின் சேவைதான் பல குற்ற சம்பவங்களை தடுக்குது என்றேன். அதே நேரத்தில் பல நேர்மையாளர்களை இம்சிக்கவும் செய்கிறது.  என்றவுடன் சற்றே க்ரிப்பினிலிருந்து இறங்கியவர், எங்களை அனுப்பி வைக்க மனசில்லாமல் பேச ஆரம்பித்தார். பேச்சு இன்றைய இளைஞர்களைப் பற்றியும், அரசைப் பற்றியும் போனது. தண்ணியடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாதுன்னு சொன்னா, பாரை பத்து மணி வரைக்கும் திறந்து வைக்கக்கூடாது என்றார். இன்றைய தேதியில் எவனொருவன் டீசண்டாக இருக்கிறானோ அவன் தான் எல்லா கேப்மாரி வேலைகளையும் செய்கிறான் என்றார்.  முன்னாடியெல்லாம் காருல பொண்ணிருந்தா அது பேமிலின்னு டிஸ்டர்ப் பண்ண மாட்டோம். இன்னைக்கெல்லாம் காரில் எவன் பேமிலிய கூட்டிட்டு வர்றான்?.  என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு காரில் இரண்டு பெண்கள் உட்கார்ந்திருக்க, ஒர் ஆண் மட்டுமே வந்த காரை மறித்தார்கள். ப்ரோக்ராம் முடிச்சிட்டு வர்றோம் என்றார்கள். ஆண் குடிக்கவில்லை. இரண்டு பெண்களும் குடித்திருந்தார்கள். பாருங்க.. என்ன ப்ரோக்ராம்னு எங்களுக்கும் தெரியும். பட் கேட்க முடியாது என்று சலித்துக் கொண்டார்.   பெண் போலீஸைப் பற்றி பேச்சு வந்தது. சினிமாவுல விட அதிகமான அசிங்கம் எங்க டிபார்ட்மெண்டுலதான் நடக்குது. புதியதாய் வரும் பெண் போலீஸ்காரர்களின் வெற்றி, அவர்கள் துரிதத்தில் அடையும் பதவிகளுக்கு பொறாமை பட்டார். நானெல்லாம் இத்தனை வருஷ சர்வீஸுல எங்கயோ போக வேண்டியவன். என்ன நான் பொம்பளையில்லை என்று வருத்தப்பட்டார். எல்லா இடத்திலும் பெண்கள் அப்படித்தான் என்று சொல்ல முடியாது. திறமையால், உழைப்பால் முன்னுக்கு வந்தவர்கள் கூட இருக்கிறார்கள் என்றேன். சிறிது நேரம் மெளனமாய் இருந்தார். பெண் போலீஸார்கள் காவலுக்கு ரோட்டில் நிற்கும் நேரங்களில் அவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க, மாதவிடாய் கால நிலைகளை கடக்க எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதைப் பற்றி சொன்ன போது “33 சதவிகிதம்  கேட்கிறாங்க இல்லை. படட்டும்என்றார்.  ஏதும் பேசாமல் கிளம்பிவிட்டேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம்
நாளைய இயக்குனர் சீசன் 2வில் போட்டியில்  கலந்து கொண்ட படம் இந்த போஸ்டர். இக்குறும்படத்தை இயக்கியவர் இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார். எழுதியது அடியேன். அவருடய ஆரம்பக்கால குறும்படங்களுக்கு என்னுடய கதையை அவர் பயன்படுத்தியிருக்கிறார். என்னுடய பூர்வாசிரம பெயரில் கதை, திரைக்கதை எழுதியிருந்தேன். சிறுகதைகளை குறும்படம் ஆக்குவது அவ்வளவு சுலபமான விஷயமல்ல.  ஆனால் அதே நேரத்தில் அது சிறப்பாகவும் அமைவதற்கு பல சான்ஸ்கள் உள்ளது. அதை தன் முதன் முயற்சியிலேயே சிறப்பாக செய்தவர் ரவிகுமார்.  சுவாரஸ்யமான ட்விஸ்டுடன் இருக்கு இந்த குறும்படத்தை பாருங்கள் . https://goo.gl/OuE30E


Dec 10, 2016

நீர் - நாவல் விமர்சனம்

நீர் – நாவல் விநாயக முருகன்

சென்ற வருட டிசம்பர் வெள்ளத்தை சென்னை வாசிகள் யாரும் மறந்திருக்க முடியாது. மறக்கக்கூடிய விஷயமா அது?. அதனால் பாதிக்கப்பட்டவர்களில் பல பேர் தங்களுடய அனுபவங்களை முகநூலிலும், இணைய தளங்களிலும் எழுதி வந்தார்கள். செயற்கையாய் ஏற்படுத்தப்பட்ட இயற்கை  பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். அச்சமயத்தில் உயிர்மையில் ஒரு கட்டுரை கூட எழுதினேன்.  இந்த வெள்ளம் பல பேரின் உள்ளக் குமுறலை, ஆதங்கத்தை, தவிப்பை, பல வழிகளில் வெளிக் கொண்டு வந்திருக்க, இதோ இப்போது எழுத்தாளர் விநாயக முருகன் ‘நீர்” என்கிற நாவல் மூலமாய் தன் எண்ணங்களை வடித்திருக்கிறார். மழை ஆரம்பித்ததிலிருந்து, சின்னச் சின்ன விஷயங்களாய் அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்களின் கேரக்டர்களை அறிமுகப்படுத்தியதில் ஆரம்பித்து, மெயின் ரோட்டின் வழியாய் சாக்கடை தண்ணீரில் போக முடியாமல் பின் பக்கத்து வீட்டு சந்திராவின் வீட்டு காம்பவுண்ட் சுவர் வழியாய் எகிறி குதித்து போவதும், சந்திரா, ஜே.கே, ஆர்.வி, குயில், போன்ற கேரக்டர்கள். தனிமை கொடுக்கும் காமம்.  வெள்ளத்தினால் ஏற்பட்ட உயிர் பயம். அதனால் ஏற்படும் மனக்குழப்பங்கள். நீ எக்கேடு கெட்டாவது போ.. என்று தன்னை விட்டுவிட்டு ஊருக்கு போன மனைவியின் மேலான கோபம். கழிவிரக்கம். சந்திராவின் மீதான காமம், என சுவாரஸ்யமான நடையில் வெள்ளத்தின் பார்க்காதவன் மனதில் பயத்தையும், பதைப்பையும் உருவாக்கும் எழுத்து. என்னை போன்ற பாதிப்படைந்தவர்களுக்கு கிட்டத்தட்ட ரீப் ப்ளே மாதிரியான விஷயம்தான் என்றாலும், சுவாரஸ்யமாய்த்தான் இருந்தது. என்ன வெள்ளம் வடிய ஆரம்பித்ததும், கதை (அ) நிகழ்வின்  போக்கில் உள்ள சுவாரஸ்யமும் வடிந்து, அடிக்கடி கதை நாயகன் என்ன செய்வது என்று தெரியாமல், மொட்டை மாடியில் தம்மடிக்க போவது போல கதையின் முடிவும் ஆனது  வருத்தமே. 

Dec 8, 2016

ஜெ.ஜெயலலிதாவாகிய நான்.

ஜெயலலிதாவின் மறைவு தமிழகத்து அரசியலில் ஒர் பெரிய வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறது.  திமுக தன் சரிசமமான எதிரியை இழந்திருக்கிறது. அரசு அதிகாரிகள் ஒர் பெரோஷியஸ் முதல்வரை இழந்திருக்கிறார்கள். மக்கள் தங்கள் தைரியத்தை இழந்திருக்கிறார்கள். பத்திரிக்கை மீடியா ஒர் வகையில் சுதந்திரம் அடைந்திருக்கிறது. இத்தனை ஆண்டுகாலம் சசிகலா குடும்பத்தை எந்தவிதத்திலும் விமர்சிக்காத பத்திரிக்கைகள் எல்லாம் ஜெ இறந்த  அடுத்த நாள் சசிகலா அண்ட் கோவை மன்னார்குடி மாஃபியா என்று எழுதுகிறார்கள் என்றால் வேறென்ன சொல்ல?. சிறுவயதிலேயே சினிமாவில் அடியெடித்து அதில் குறுகிய காலத்தில் புகழ் பெற்று தன்னுடய முப்பதுகளிலேயே அதிலிருந்து விலகி, அரசியலில் எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்டவரின் அரசியல் வளர்ச்சி, அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. விடாக்கண்டன்களையும், உட்கட்சி கொடாக்கண்டன்களையும் சமாளித்து “யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் கவலைப்படாத தைரியசாலி” என்ற பிம்பத்தை, ஏற்படுத்தி, தன் கட்சியினரை மட்டுமில்லாமல் மக்களையும் நம்ப வைத்தவர்.

சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம், அதனால் அடைந்த வீழ்ச்சி, வளர்ப்பு மகன், திருமணம், வீழ்ச்சி, சொத்துக்குவிப்பு வழக்கு, டான்சி ஊழல், ஜெயில், சென்னை வெள்ளத்திற்கான காரணகர்த்தா, ஸ்டிக்கர் பாய்ஸ், எம்.ஜி.ஆருக்கு பிறகான தொடர் வெற்றி என வளைய வந்தவர். வேறொரு அரசியல்வாதிக்கு இத்தனை ப்ரச்சனைகள் வந்திருந்தால் இவ்வளவு அழுத்தமாய், வலிமையாய் கடந்து வந்திருப்பாரா? என்பது சந்தேகமே. தான் ஒரு இரும்பு மனுஷி என்பதை ஒவ்வொரு பிரச்சனையின் போதும் கடந்து தன் பிம்பத்தை நிஜமென நிருபித்தவர். கடைசிக் காலங்களில் தனக்கென்று குடும்பம் இல்லாததால் மக்களால் நான் மக்களுகாகவே நான் என்கிற தாரக மந்திரத்தை முன்னெடுத்தவர். எம்.ஜி.ஆருக்கு பிறகு மக்களின் ஏகோபித்த அன்பைப் பெற்றவர். சிறந்த நடிகை, உழைப்பாளி, படிப்பாளி, அறிவாளி, தைரியசாலி, இரும்புமனுஷி என பெயர் பெற்றவரின் கடைசி 75 நாட்கள் குழப்பத்தின் உச்சமாகவே கடந்தது.  புலனாய்வு பத்திரிக்கைகள் என்கிற பெயரில் பத்துக்கு மேற்பட்ட பத்திரிக்கைகள் வரும் தமிழ்நாட்டிலிருந்து  ஒரு பத்திரிக்கை கூட அப்பல்லோ எனும் இரும்புக் கதவுகளை திறக்க முடியாத நாட்கள் அவை. ஏன்?. அவரது இறப்பு பற்றிய அறிவிப்பில் கூட அத்தனை குழப்பங்கள். தந்திடிவி மாலையிலேயே அவரின் மறைவைப் பற்றி அறிவித்துவிட, அதை தொடர்ந்து எல்லா டிவிக்களும், ஜெயா டிவி உட்பட அறிவித்து, அதிமுக அலுவலகத்தில் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட,  அப்பல்லோ அப்படியெல்லாம் இல்லை என்று அறிக்கை விட, இன்னொரு பக்கம் ரெட்டியின் மகள் படு சீரியஸ் என்று போட்ட ட்விட்டை திரும்ப எடுத்துவிட, என ஏகப்பட்ட குழப்பங்கள். இரவு பதினொரு மணி முப்பது நிமிடத்துக்கு தான் அவர் இறந்தார் என்றால் இத்தனை நாளாக கூடாத எம்.எல்.ஏக்களின் கூட்டம் ஏன் காலையிலேயே கூட்டப்பட்டது. ஏன் மறுபடியும் மாலையில் சந்திப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டது? சரியாய் பதினோரு மணி தருவாயில்  எல்லா முடிவுகளையும் எடுத்துவிட்டு, மீடியாவை கட்சி அலுவலகத்துள் அனுமதித்தது. அங்கே வீடியோ காட்சிகள் வெளி வந்து கொண்டிருக்கும் போதே இங்கே அப்பல்லோவில் ஜெவின் மறைவு குறித்து வெளியான அஃபீஷியல் தகவல். உடனடி அழுகையில்லா பதவியேற்பு. என ஆயிரம் குழப்படிகள் இருந்தாலும், தன் தங்கத்தலைவியின் மேல் வைத்திருக்கும் மாறாத அன்பை கலவரமில்லாமல் வெளிப்படுத்திய மக்களும், அதை கட்டிக்காத்த காவல் துறைக்கும் மிகப் பெரிய சல்யூட். ஒரு பேட்டியில் ஜெ தன் வாழ்வை பற்றி சொல்லும் போது தன் விருப்பமான வாழ்வை நான் எப்போதும் வாழ்ந்ததேயில்லை என்று சொல்லியிருந்தார். அவரது மறையும் போது அதே வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டேயிருந்தது. 

Dec 7, 2016

கொத்து பரோட்டா 2.0-9

கொத்து பரோட்டா – 2.0-9
யூட்யூப் வீடியோ– ஜிம்முக்கு போன ஜெமினி கணேசன்
யூ ட்யூபில் குறும்படங்கள் என்ற தலைப்பில்லாமல் நிறைய வீடியோக்கள் பிரபல்யம். வலைப்பூ உலகில் எப்படி வித்யாசமான பெயர்களோடு வளைய வருவார்களோ  அது போல, ஸ்மைல் சேட்டை, மெட்ராஸ் மீட்டர், பாரசிட்டமால் பணியாரம், டெம்பிள் மங்கீஸ், புட் சட்னி என்றெல்லாம் எகனமொகனையாய் பெயர் வைத்துக் கொண்டு  கவனத்தை ஈர்க்கக் கூடிய சேனல் வைத்திருக்கிறார்கள். அதில் பல விதமான திறமையாளர்கள். விதவிதமான பகடிகள் என பரந்து பட்ட ஆர்வலர்களை அடையாளம் காட்டும் ஒரு தளமாகிக் கொண்டிருக்கிறது. அதில் கொஞ்சம் நாளுக்கு முன் பார்த்த இந்த ”ஜிம்முக்கு போன ஜெமினி கணேசன்” குறும்படம் அல்லது வீடியோ படு சுவாரஸ்யம். ரேடியோ ஜாக்கி, நடிகர் என பல முகங்கள் கொண்ட பாலாஜி வேணுகோபாலின் எழுத்தாளர், இயக்குனர் அவதாரம். இந்த வீடியோவின் மிகப்பெரிய பலம் வசனங்கள்.  அதை விட பெரிய ப்ளஸ் அதை கிட்டத்தட்ட மேஜர் சுந்தர்ராஜன் வாய்ஸில் சொன்ன மாடுலேஷன். அதற்கு இணையான விஷுவல்கள். நடிகர்களின் இயல்பான நடிப்பு. என பத்து நிமிட வீடியோவில் குறைந்தது பத்து அட்டகாச சிரிப்பு. ஏழெட்டு புன்முறுவல்கள், நான்கைந்து அவுட்டு களுக்குகளுக்கு நான்  கியாரண்டி.  https://www.youtube.com/watch?v=_Pn2qrfj3tw
@@@@@@@@@@@@@@@@@@@
Sairat
ஃபன்றி பட இயக்குனர் நாகராஜ் இயக்கிய புதிய படம். சாய்ரட். சுமார் நாலு கோடியில் தயாரிக்கபட்ட இந்த மராத்தி படத்தின் மொத்த வசூல் 100 கோடி. மல்ட்டி ப்ளெக்சுகளில்  ஸ்பெஷல் ஷோ போட்டால் புல்லாகி விடுமளவுக்கு  மராத்தி படமொன்று தமிழ்நாட்டில் ஓடியதற்கான காரணம் நாகராஜ் மஞ்சுளே எனும் ப்ராண்டும், இணையத்தில் படம்  பற்றி தொடர்ந்து சிலாகித்து பேசியதன் காரணமென்று நினைக்கிறேன்.

கிராமத்தில் வரும் பதின்ம வயது காதல் பாட்டீல் எனும் மேல் ஜாதி பெண்ணுக்கும், மீனவ சமுதாயத்தை சேர்ந்த பையனுக்கும் காதல். பெண் டாமினெண்ட், காதலை அவள் தான் முதலில் வெளிப்படுத்துகிறாள். பையனுக்கு பெண்ணுக்குமிடையே பரிமாறப்படும் பார்வைகள், பின்னணியிசை, பாடல்கள் எல்லாம் செம்ம. குட்டிக் குட்டி ஷாட்களில் அவர்களின் ரியாக்‌ஷன்கள் அட்டகாசம். முக்கியமாய் ஒரு காட்சியில் காதல் கைகூடிவிட்டதை ரயில் ஓடும் சத்தத்தோடு, அதற்கு இசைந்து ஆடும் ஆட்டம்,  பெண்கள் குளிக்கும் போது தெரிந்தே குதித்து காதலியை பார்த்துக் கொண்டே கரையேறும் காட்சிகள் எல்லாம் க்யூட் கவிதை. அந்த பெண் தான் எவ்வளவு அழகு. அந்த கண்களும், உதடுகளிலும் தெரியும் காதல், சோகம், ஆதிக்கம் எல்லாமே க்ளாஸ்.. உயர்ஜாதியின் திமிர், அதிகார நடை, ட்ராக்டர் முதல் சைக்கிள் வரை எல்லாவற்றையும் ஓட்டும் லாவகம், காதலை சொல்லும் காட்சிகள் முதல், க்ளைமேக்ஸ் வரை நாயகி நம் கண்களைவிட்டு, மனதை விட்டு அவரை விலக்கவே முடியவில்லை.

நகரங்களின் டாப்  ஆங்கிள்  கேண்டிட் ஷாட்கள், கரட்டாண்டி போல ஊனமுற்ற நண்பன், கதாநாயகியுடன் உடன் வலம் வரும் சுமார் பெண், ஊர் விட்டு ஓடி வந்து பஸ்ஸிலும், பஸ் ஸ்டாண்டிலும், காமன் பாத்ரூமில் குளித்து சினிமா தியேட்டரில் தூங்கி, வாழும் காட்சிகள், க்ளைமேக்ஸ் என  காதல் படத்தை மராத்தியில் ரைட்ஸ் வாங்காமல் எடுத்திருக்கிறார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தினாலும், காதல் படத்தில் பேசாத சில விஷயங்களை இப்படத்தில் பேசியிருக்கிறார்கள். முக்கியமாய் பணக்கார புத்திசாலி பெண், ஆவரேஜ் ஆண் ஊரை விட்டு ஓடி போய் எப்படி அவ்வளவு சுலபமாய் வாழ்ந்துவிட முடியும். அவர்களிடையே நடக்கும் ஊடல், கோபம், சந்தேகம், இன்செக்யூரிட்டி அவர்களுக்குள்  ஏற்படும் கைகலப்பு, பொறுமையின்மை, தப்பு செய்துவிட்டோமோ என்ற குற்றவுணர்ச்சி எல்லாவற்றையும் படம் கொஞ்சம் விறுவிறுப்பு குறைந்தாலும் அதை அழகாய்  சொல்லியதிலும், க்ளைமேக்ஸில் என்ன நடக்கப் போகிறது என்பது நமக்கு தெரிந்தாலும் காட்சியை அமைத்த விதம், அக்கொலைகளை பின்னனியிசையில்லாமல் அமைதியாய், காட்சிப்படுத்திய விதம், குழந்தையின் ரத்தம் தோய்ந்த கால்களின் பதிவு எல்லாம் அழுத்தமான முத்திரை பதித்து நம் மனதை பிசைந்து ஊடுருவ ஆரம்பிக்க வைத்ததில் நம்மூர் காதலை  விட ரெண்டு படி உயர்ந்த படைப்பை  தந்திருக்கிறார் நாகராஜ் மஞ்சுளே..
@@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ராண்ட் நேம் ஆகிவிட்டால் எல்லாவிதமான விமர்சனங்களுக்கு தயாராக இருக்கவேண்டும். பெரும்பாலானவர்கள், முக்கியமாய் இளைஞர்கள் ப்ராண்ட்டை பிடிக்காவிட்டாலும் கூட, எங்கே நாம் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் அவுட்டேட் ஆகிவிடுவோமோ, நமக்கான ஆதரவு குறைந்துவிடுமோ என்றெல்லாம் யோசித்து பாராட்டியோ, தலையில் தூக்கி வைத்து கொண்டாடியோ விடுவார்கள். ஆனால் இவையனைத்தும், சோசியல் மீடியாவில் மட்டுமே. இவர்கள் அங்கு  மட்டுமே தினமும் வலம் வருவதால் அது மட்டுமே உலகம் என்றிருக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்து படிக்கும் அல்லது கண்களில் படும் விஷயங்களை எந்தவிதமான எதிர்ப்பும் இன்றி நம்பி விடுவார்கள். இவர்களின் எண்ணத்தால் யாருக்கு லாபமோ இல்லையோ, இவர்களை நம்ப வைப்பதற்காக செயல் படும் கூட்டமொன்று பெரிய அளவில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. ஆன்லைன் மார்க்கெட்டிங் என்கிற பெயரில் ப்ரோமோ செய்கிறேன் பேர்விழி என்று பத்து பதினைந்து ஃபேக் அக்கவுண்டுகள், சில நூறு பேஸ்புக் பேஜ்கள், என சிலதை  வைத்துக் கொண்டு பத்தாயிரம் முதல் லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள். அதன் மூலம் இவர்கள் பரப்பும் விஷயத்தைத்தான் பெரும்பான்மையான இணையவாசிகள் நம்புகிறார்கள். உண்மையாகவே ஷோசியல் மீடியாவின் பவர் என்ற ஒன்று உண்மையென்றால் கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி எதிர்கட்சியாகவாகவாவது வந்திருக்க வேண்டும். ஸோ.. பெய்ட் ரிவ்யூசுக்கும், கருத்துக்கும், ஆட்டு மந்தையாகாதீர்கள். சொந்தமாய் ஜிந்தியுங்கள்.  இணையம் எனும் குண்டுச் சட்டிக்குள் வண்டியோட்டாமல் வெளியே வாருங்கள்
@@@@@@@@@@@@@@@@@@@@@@
சாட்டிலைட் உரிமை என்ற ஒரு விஷயம் சினிமாவை எப்படி சில வருடங்களுக்கு முன் உயர்த்த்தியதோ அதே உரிமைதான் கடந்த சில வருடங்களாய் இக்கட்டில் நிற்க வைத்திருக்கிறது. ஒரு கோடியிலிருந்து ரெண்டு கோடிக்குள் தயாரிக்கப்படும் சின்ன பட்ஜெட் படங்கள் முதலீட்டில் 50 சதவிகிதம் சாட்டிலைட்டிலேயே வந்துவிடும் என்கிற நிச்சயத்தன்மையும், டிஜிட்டல் சினிமாவும், பெரிதும் கை கொடுக்க, வருடத்திற்கு 200 சொச்ச படங்கள் வெளியாகும் நிலை. ஒரு காலத்தில் பெரிய நடிகர்கள் நடித்த படமென்றால் நான் நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டிருந்தவர்கள் கூட தற்போது கொஞ்சம் யோசித்து வாங்கிக் கொண்டிருக்கிற நிலை தான். நடிகர்கள் தங்களது சாட்டிலைட் விலையை சம்பளமாய் வாங்கி ஆரம்பித்திருக்க, எட்டு கோடிக்கும் பத்து கோடிக்கும் போய்க் கொண்டிருந்த நடிகர்கள் படமெல்லாம் ஒன்னரைக்கும் ரெண்டு கோடிக்கும் விலை போக ஆரம்பித்துவிட்டது. இருபது முப்பது கோடி விலைக்கு விற்ற  பெரிய நடிகர்கள் படங்களுக்கு இது பொருந்தும். அதனால் தான் முதல் நாள் கலெக்‌ஷனே முப்பது, நாற்பது கோடி என விளம்பரப்படுத்திக் கொள்வது. ஆனால் அது கிராஸா? ஷேரா? என்று கேட்டால் எவருக்கும் தெரியாது. உண்மையில் சொல்லப் போனால் டிவியில் படம் பார்க்கும் பழக்கமே கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் குறைந்துவிட்டது என்றே தோன்றுகிறது. பண்டிகை நாட்களில் போடப்படும் திரைப்படங்களுக்காக காத்திருந்தவர்கள் தற்போதெல்லாம் டிவியில் போடப்படும் விளம்பரங்களின் இம்சை தாங்காமல் படம் பார்ப்பதையே நிறுத்தி விட்டார்கள். அத்தோடு மட்டுமில்லாமல் இணையம், டிவிடி, என படம் நல்லாருக்கு என்று தெரிந்தால் அதை அவரவர்கள் வசதிக்கு ஏற்ப மொபைலில் கூட பார்க்கும் நிலை வந்து விட்டதால், டிவி வீயூவிங் என்பது குறைந்து கொண்டேயிருக்கிறது. சினிமாவை விட  மற்ற நிகழ்ச்சிகளுக்கு நல்ல டி.ஆர்.பி வருகிறது என்பதால் படத்தில் இன்வெஸ்ட் செய்வதை குறைத்துக் கொண்டு, மற்ற நிகழ்ச்சிகளுக்கு இன்வெஸ்ட் செய்வது அதிகமாகிவிட்டது. நண்பர் ஒருவர் தமிழ் படங்களின் வெளிநாட்டு உரிமை வாங்கி விற்பவர். சின்ன படங்களுக்கு எல்லாம் ஒரு காலத்தில் பத்து, பதினைந்து லட்சம் கிடைத்துக் கொண்டிருந்தது தற்போது ரெண்டு மூணு லட்சத்திற்கு கொடுக்க தயாராக இருந்தும் வாங்க் ஆளில்லை என்கிறார். காரணம் படங்களின் குவாலிட்டி என்றும் சொல்கிறார். நானெல்லாம் ராத்திரி பத்து மணிக்கு  மேல் தான் டிவியே பார்க்கிறேன். என்னழவு பத்து மணிக்கு மேலே அவர்களுடய நிகழ்சிகளுடய விளம்பரங்களைப் போட்டு கொல்கிறார்கள்.  தமிழ் சினிமாவுக்கு சமீபத்தில் வந்திருக்கும் புதிய இம்சை பேஸ்புக் லைவ். உரிமையில்லாமல் எல்லா படங்களையும் ஹெச்.டியில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை தடுக்கவில்லையென்றால் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தினை சந்திக்க வேண்டியிருக்கும்.  சாட்டிலைட் உரிமம் ஏற்கனவே அதளபாதாள நிலையில் இருக்க்கும் பட்சத்தில் மேலும் அடி வாங்கும். உடனடியான நடவடிக்கை பைரஸிக்கு எதிராகவும்,  படங்களை வெளியிடும் முறையில், விற்கும் முறையில் நாலு காசு பார்க்க வாய்ப்பு நிறைய பெருகியிருக்கிறது. சாட்டிலைட் விற்றால் கொஞ்சம் பெரிய காசு வரும் என்று அடியில் கண்ட சொத்துக்கள் எல்லாவற்றையும் 99 வருட பெர்பெச்சுவல் ரைட்ஸாக விற்பதற்கு பதில், எல்லா டிஜிட்டல் தளங்களையும் தனித்தனி உரிமையாய் விற்று தியேட்டர் மட்டுமே என்றில்லாது காசு பார்க்க முடியும். அதை கொஞ்சம் நிறுத்தி நிதானமாய் அரசியல் பாராமல் திடமான முடிவெடுத்தால் நிச்சயம் லாபகரமாக இருக்கும்  கொஞ்சம் மாத்தி யோசியுங்க.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேட்டால் கிடைக்கும்
வெள்ளத்தின் போது எல்லா ஏரியாக்களிலும் லேண்ட் லைன், செல் என எல்லா நெட்வொக்கும் கந்தர் கோளமாகியிருந்த நேரம். எல்லாம் சரியாகி லைன் வருவதற்கே கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், எனக்கு பதினைந்து நாளாய் வரவில்லை. ஏர்டெல்லிலிருந்து அம்மாத டெலிபோன் பில் வந்தது. மாத வாடகை முழுவதுமாய் போட்டிருந்தார்கள். கஸ்டமர் கேருக்கு போன் செய்து என் லைன் எத்தனை நாளாக வேலை செய்யவில்லை? எத்தனை முறை நான் புகார் அளித்திருக்கிறேன் என்று சொல்ல முடியுமா என்று கேட்டேன். எல்லாவற்றையும் சொன்னார்கள். பின்பு எப்படி நீங்கள் எனக்கு முழு மாத வாடகை கட்டணத்தை கட்டச் சொல்லி அனுப்பலாம் என்று கேட்டேன். பில்லிங் மும்பையிலிருந்து வரும் சார். அக்கவுண்ட் டிப்பார்ட்மெண்ட் வேறு என்றார். மும்பையிலிருக்கும் உங்கள் நிறுவனத்திற்கு சென்னையில் இந்த இந்த இடங்களில் எல்லாம் பிரச்சனை. உங்களத் நெட்வொர்க் எங்கெல்லாம் பழுதாயிருக்கிறது என்று தெரியாதா? அப்படியிருக்க நேர்மையாய் நீங்களே அந்தந்த  இணைப்புகளுக்கு டிஸ்கவுண்ட் கொடுத்திருக்க வேண்டுமில்லையா? ஏனென்றால் என்னுடய பில்லிங் சைக்கிள் முறைக்கு முன்னாலேயே உங்களது  நெட்வொர்க் வெள்ளத்தினால் பாதிப்படைந்துவிட்டது, சரி அப்படியே பில்லிங் மும்பையிலிருந்து வந்துவிட்டாலும் கம்யூனிகேஷன் பிஸினெஸில் இருக்கும் நீங்கள் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சார்.. உங்களது லைன் இத்தனை நாள் வேலை செய்யாததினால் உங்களுக்கான டிஸ்கவுண்ட் தொகை என்று அறிவிக்க ஒரு எஸ்.எம்.எஸ், அல்லது மின்னஞ்சல் போதுமே? என்றேன். எதிர்புறம் பதில் இல்லை. சற்று நேரத்துக்கு பிறகு எனக்கு இருநூறு ரூபாய் டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட்டது. நான் அதை ஏற்க மறுத்து விட்டேன். ஏனென்றால் கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் எனக்கு இணைப்பு இல்லை.  மாத வாடகை 1500 ரூபாய் எனும் போது பாதி நாட்களுக்கான பணம் டிஸ்கவுண்ட் செய்யப்பட வேண்டும் இல்லையென்றால் இணைப்பை துண்டித்துக் கொள்ளுங்கள் என்றேன்.  எங்களுடய நெட்வொர்க் மொத்தமும் நாசமாகிவிட்டது என்றார். உங்களுடயது தேசிய அளவிலான நிறுவனம் அதற்கான நஷ்ட ஈட்டை உங்களது இன்ஸூரன்ஸ் டிவிஷன் பார்த்துக் கொள்ளும். ஆனால் என் போன்ற சாதாரணன்களில் நஷ்டத்திற்கு எந்த இன்ஷூரன்ஸ் பொறுப்பெடுத்துக் கொள்ளும். மக்கள் வெள்ளத்தினால் இருப்பவற்றையெல்லாம் இழந்து அல்லாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓடும் திருடனைப் போல ஏன் இப்படி அவர்களின் வயிற்றில் அடிக்கிறீர்கள்? என தொடர்ந்து கேட்டேன்.  அடுத்த சில நொடிகள் அமைதிக்கு பிறகு..  எனக்கான டிஸ்கவுண்ட் கிடைத்துவிட்டது. இதையே ஏன் எல்லா வாடிக்கையாளர்களுக்கும் நீங்கள் செய்யக் கூடாது என்று கேட்டேன். பதில் இல்லை. எனக்கு கேட்கும் தைரியமும் பொறுமையும் இருக்க, என்னால் என் உரிமையை கேட்டாவது பெற முடிந்தது. ஆனால் எத்தனை வாடிக்கையாளர்கள் எங்கே பணம் கட்டவில்லையென்றால் லைனை கட் செய்துவிடுவார்களோ என்ற பயத்தில் பணம் கட்டியிருப்பார்கள்?. அத்தனையும் ஏமற்று வேலையல்லவா?. இணையத்தின் கேட்டால் கிடைக்கும் குழுவில் இதை போட்டு  எல்லாரையும் கேட்க சொல்லி அதனால் பயனடைந்தார்கள். கேட்காதவர்கள்???..  கேளுங்க.. கேட்டால் நிச்சயம் கிடைக்கும்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@