Thottal Thodarum

Dec 12, 2019

Gantumoote - காதலெனும் சுமை.


எத்தனை சினிமா பார்த்துவிட்டு அசைப்போட்டுக் கொண்டே இருந்திருக்கிறோம்?. என்று யோசித்தோமானால் கொண்ட்டாட்ட சினிமாக்கள் மிக சிலதைத் தவிர மனதுக்கு நெருக்கமான கதைகளை கொண்ட படங்களையே. எல்லா படங்களும் எல்லாருக்கும் பிடித்துவிடுவதில்லை. ஆனால் காதல் கதைகள் எல்லோருக்கும் பிடிக்கிறது. ஆனால் காதல் கதைகள் பெரும்பாலும் ஆண்களின் பார்வையிலேயே சொல்லப்பட்டு பழக்கமாகி விட்டதினால்  ஈஸ்ட்ரோஜோன் குறைவாய் போன பெண் போல ஆகிவிடும். எமோஷனல் வேல்யூ குறைந்து போய். 

இந்த கண்டுமூட்டே ஒன்றும் இது வரை யாரும் சொல்லாத காதல் கதையில்லை. ஆனால் பெரும்பாலும் சொல்லப்படாத பெண்ணின் பாயிண்ட்டாப் வியூவில் சொல்லப்பட்டிருக்கும் கதை. அத்தனை க்யூட். மீரா தேஷ்பாண்டே எனும் பள்ளி இறுதி ஆண்டு படிக்கும் பெண்ணுக்கும் அவளின் க்ளாஸில் படிக்கும் மதுசூதனுக்கும் இடையே வரும் முதல் காதலைப் பற்றியதுதான். 

சில பள்ளி ஜோடிகளைப் பார்கையில் இந்த பொண்ணு எல்லாம் எப்படி இவனோட சுத்துது என்ற கேள்வி தோன்றாமல் இருக்காது. நாம் அந்த வயதில் சுற்றும் போது அப்படித்தான் அந்நாளைய பெருசுகள் நினைத்திருக்கும். ஹம் ஆப் கே ஹே கோன் இந்தி படத்தை பார்த்தது முதல் சல்மான் கானின் ரசிகையாய் போன மீரா, அவனை போலவே ஹேர்ஸ்டைல் வைத்திருக்கும் மதுவின் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்த ஈர்ப்பு காதலாய் மாறுகிறது. அந்த ட்ராஸ்பர்மேஷனை ஆணாய் எப்படி உணர்வீர்கள் என்று புரியாமல் இத்தனை நாள் இருந்திருக்கலாம். இப்படத்தில் மீராவின் ட்ரான்ஸ்பர்மேஷன் அத்தனை விஷயங்களை மிக அழகாய் சொல்லியிருக்கிறது. மேபி.. இது மீரா போன்ற பெண்ணுக்கு மட்டுமே சாத்தியமானது என்று பெண்கள் நாங்க வேற என்று நினைத்தால் இட்ஸ் ஓக்கே. 

முதல் ஸ்மூச், முதல் அணைப்பு, அது தரும் எக்ஸைட்மெண்ட். என விரிவாய் மிக மெதுவாய், கன்வர்ட் ஆகும் கணங்கள் அட்டகாசம். அதிலும் அந்த முதல் முத்தம். அந்த முத்தம் கொடுத்த சந்தோசத்தை ஆணின் எமோஷனில்லாத வெற்றி பீற்றலால் மீரா “தேவடியாவாக” விளிக்கப்பட்டு அவமானபடுவதை விட, எனக்கும் உனக்கும் மட்டுமேயானா இந்த இண்டிமேட்டான தருணத்தை எப்படி நீ இப்படி பீற்றிக் கொள்வாய் என்று கோபப்படும் இடம் அதுவும் வாய்ஸ் ஓவராய் வரும் போது.. வாய்ஸ் ஓவர் எத்தனை அழகானது என்று புரியும் படம் நெடுக, ஆங்காங்கே வாய்ஸ் ஓவர் மிக அழகாய் நம்மை அடுத்த கட்டத்திற்கு கடத்துகிறது.  

பள்ளிக் காதல், இடை வரும் காதலர்கள், அவமானம், ஸ்கூல் டூர். மனதுக்கு பிடித்த ஆணின் முதல் அரை நிர்வாணம் எத்தனை எக்ஸைட்மெண்டைத் தரும்? திருட்டுத்தனம். இவர்களின் காதலை கண்டு பிடித்த ஆசிரியனின் கேரக்டர். அவரின் அட்வைஸ் எல்லாம் க்ளாஸ்.

முதல் ப்ரேமிலிருந்து இரண்டே பேர் படத்தை தங்கள் தோள்களில் ஏற்றி சுமந்து கொண்டு திரிகிறார்கள். சுமையாய் இல்லாமல் மிக சந்தோஷமாய். அது மீரா தேஷ்பாண்டேவாய் நடித்த தேஜு பெலவாடியும், இயக்குனர் ரூபா ராவும்.

குட்டிக் குட்டி ரியாக்‌ஷன்கள். எத்தனை வெட்கம். அந்த உதட்டை அழுந்த வைத்துக் கொள்வதில் மூலமே பல ரியாக்‌ஷன்களை காட்டியிருக்கிறார். குறிப்பாய் க்ளைமேக்ஸில் அவரது நடிப்பு க்ளாஸ். 

இயக்குனர் ரூபா ராவ். இவரது முந்தைய முயற்சி வெப் சிரீஸான The Other love story. யூட்யூபில் இருக்கிறது தேடிப் பாருங்கள்.அதைப் பற்றிக் கூட நான் கொத்து பரோட்டாவிலும், குமுததிலும் எழுதியிருக்கிறேன். இக்கதை போலவே 90களில் இரண்டு இளம்பெண்களின் லெஸ்பியன் காதலைப் பற்றிய மிக நுணுக்கமாய் அவர்களின் உறவை வெளிப்படுத்தியிருப்பார். அதே போல இக்கதையில் டீன் ஏஜ் பெண்ணின் அத்தனை உணர்வுகளையும் மிக அழகாய், நுணுக்கமாய் மீண்டும் வெளிபடுத்தியிருக்கிறார். குறிப்பாய் மன உணர்வுகளை காட்சிகளாய் வெளிப்படுத்தும் விஷயம். போன் பேசும் காட்சிகள் எல்லாம் கவிதை. அந்த முதல் முத்தத்தின் முதலெடுப்பு, குறுகுறுப்பு, காத்திருத்தல்... வாவ்.. வாவ்.. அட்டகாசம். நான் இங்கே எது சொன்னாலும் கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்வது போல தோன்றும். பட்.. படம் பார்த்த பின் உங்களுக்கும் அந்த உணர்வை தவறாமல் கொடுக்கும். நிச்சயம் கமர்ஷியல் கொண்டாட்டங்கள் விரும்புகிறவர்களுக்கு இல்லை.

படத்தின் தலைப்புக்கு அர்த்தம் சுமை. முதல் காதல் தரும் அனுபவங்கள் எல்லாமே சுமை தான். அது எப்படி இருந்தாலும். அந்த சுமையை அழகான தனிமையான இடத்தில் அசை போடுவதுதான் எத்தனை வலியும், இம்சையும் கொடுக்கும்?. வாழ்த்துக்கள் ரூபா ராவ். 


Dec 7, 2019

சாப்பாட்டுக்கடை - ஹோட்டல் திருச்செந்தூர் மணி அய்யர்

 ரொம்ப வருடங்களுக்கு முன் திருச்செந்தூரில் மணி அய்யர் கடையில் டிபன் சாப்பிட்டிருக்கிறேன். மணி அய்யர் ஓட்டலை நினைத்தவுடன் சட்டென நாக்கில் சாம்பார் நியாபகம் வந்துவிடும் எனக்கு. சென்னையில் பத்து நாட்களுக்கு முன் ஆரம்பித்திருக்கிறார்கள். அசோக்நகரில்.  ஆர்வமாய் போன வாரம் போன போது க்ளோஸ் ஆயிருச்சு என்றார்கள். நேற்றைக்கு நண்பருடன் போனேன். 10.30 மணிக்கு நல்ல கூட்டம். சாம்பாரின் வாசம் மூக்கை துளைத்தது.  நானும் நண்பரும் போய் உட்கார்ந்தோம். எதில ஸ்டார்ட் பண்ணலாம் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் “பொங்கல் இருக்கா? “ என்றேன். “இல்லீங்க ஒன்பது மணிக்கெல்லாம் முடிஞ்சிரும்” என்றார்கள். ”சரி ஆளுக்கு ரெண்டு இட்லி கொடுங்க” என்று ஆர்டரை ஆரம்பித்தோம்.

இட்லி ரொம்பவும் மிருதுவாக இல்லாமல் இருந்தது கொஞ்சம் குறைதான். பட் சூடான சாம்பார். மூன்று சட்டினிகள், கூடவே பூண்டு போட்ட, மிளகாய்பொடி. அதற்கு தனியாய் பணம் எல்லாம் இல்லை. எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு போட்டுக் கொள்ளலாம். சாம்பாரையும், பூண்டு மிளகாய் பொடியும் ஆசம்.

அடுத்ததாய் நல்ல மொறு மொறு ரவா தோசை. நிஜமாகவே ராவா தோசை என்று சொன்னால் மிகச் சிறிய வயதில் திருவல்லிக்கேணி முரளிகபே தான் நியாபகத்துக்கு வரும். அதன் பிறகு நல்ல முறுகலாய் சாப்பிட்ட நினைவு இல்லை. நேற்றைக்கு அது தீர்ந்தது.  அதற்கும் அதே சாம்பார், மூன்று சட்டினிகள் அத்துடன் மொளகாய்பொடி. ஆகாகா

பக்கத்து டேபிளின் மேல் ஒருவர் சப்பாத்தி சாப்பிட்டுக் கொண்டிருக்க, குருமாவை பார்த்த மாத்திரத்தில் பிடித்துப் போனது. சந்தேகத்துக்கு ஆளுக்கு ஒரு பரோட்டா சாப்பிடுவோமா? என்றேன். நண்பரும் சளைக்காமல் ம்ம் என்றார். பரோட்டாவும் குருமாவும் வந்தது. “வாவ்..நிஜமாகவே டிவைன். நன்கு அரைத்துவிடப்பட்ட, முந்திரியெல்லாம் போட்ட குருமா. இதை எழுதும் வரை என் நாக்கில் அந்த சுவை இன்னமும் இருக்கிறது. வேற என்ன நடக்கும். இன்னொரு பரோட்டவையும் ஆர்டர் செய்து சாப்பிட்டு கிளம்பினோம்.

கிளம்பும் போது ஓனர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். திருச்செந்தூர் பெரியப்பாவின் நேரிடை கடை தானாம். பழனியில் ஒரு ப்ராஞ்ச ஆரம்பித்து சிறப்பாக நடை பெறுகிறது என்றார். மதிய லஞ்சுக்கு அவர்கள் வைத்திருக்கும் லிஸ்ட் பார்த்த போதே நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்துவிட்டது. முக்கியமாய் வாரத்தில் ஒரு நாள் திருநெல்வேலி சொதி, அரைத்துவிட்ட சாம்பார். என பெரிய லிஸ்ட் ஒரு வாரம் போய் சாப்பிடணும். நிச்சயம் நல்ல வெஜ் பிரியர்களுக்கு நியாயமான விலையில் திருச்செந்தூர் மணி அய்யர் ஓட்டல். இரண்டு பேருக்கும் சேர்த்து பில் சுமார் 360 ரூபாய்.

Hotel Thiruchendur Mani Iyer
31/69, 7th Ave,
Sarvamangala Colony, 
Indira Colony,
 Ashok Nagar,
 Chennai,
 Tamil Nadu 600083

Nov 4, 2019

Meeku Mathrame Chepputha


தெலுங்கு படங்கள் இப்போதெல்லாம் டெம்ப்ளேட்டுகளிலிருந்து விலகி படம் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். அப்படியான ஒன்றுதான் இந்த “மீக்கு மாத்ரமே சொப்புதா” அதாவது ரகசியங்களை சொல்லும் போது உனக்கு மட்டுமே சொல்லுறேன். யார் கிட்டேயும் சொல்லிராதனு சொல்லி சொல்லுவாங்க இல்லை அதான் படத்தோட தலைப்பு.

ராகேஷ் ஒர் மொக்கை டிவி சேனல் ஹோஸ்ட். இருந்திருந்து போராடி ஸ்டெப்பி எனும் டாக்டரை கரெக்ட் செய்து, வீட்டில் சம்மதிக்க வைத்து கல்யாணம் எல்லாம் பிக்ஸ் ஆகி, இன்னும் ரெண்டொரு நாளில் கல்யாணம் என்கிற போது. சினிமாவில் நடிக்க ஆவலாய் இருந்த காலத்தில், படமாக்கப்பட்ட ஒரே காட்சியான ஹனிமூன் பெட்ரூம் காட்சி  லீக் ஆகிவிடுகிறது. ஏற்கனவே ஏகப்பட்ட கண்டீஷன்களோடு காதலிக்கும் ஸ்டெப்பிக்கு தெரிந்துவிட்டால் தன் திருமணம் ஹோகயா என்று, வீடியோவை அழிக்கும் முயற்சியில் தன் உயிர் நண்பன் காமேஷ், மற்றும் ஹேக்கர் நண்பனோடு அலைகிறான். வீடியோவை அழித்தானா இல்லையா? என்பது மட்டுமல்ல கதை. க்ளைமேக்ஸ் டிவிஸ்ட்டும் தான் கதை.

ரொம்ப நாளாச்சு ஃப்ரீஸியாய் ஒர் காமெடி படம் பார்த்து. விழுந்து விழுந்து சிரிக்க வைக்கவில்லை. ஆனால் படம் நெடுக புன்முறுவலோடு படம் பார்க்க வைக்கிறார்கள். தருன் பாஸ்கரும், அவர் நண்பராக வரும் அபினவும். ஆங்காகே பளிச்சிடும் ஒன்லைனர்கள். ப்ரச்சனைகள் இன்னும் அடர்த்தியாகி, அதுவே காமெடியாகும் தருணங்கள் என க்ளைமேக்ஸ் வரை போரடிக்காமல் போகிறது படம். 

பெல்லி சூப்புலி இயக்குனர் தருண் பாஸ்கருக்கு நடிப்பு இயல்பாய் வருகிறது.  குரலில் உள்ள மாடுலேஷன் இன்னும் நன்றாக இருக்கிறது. டெக்னிக்கலி பெரிதாய் சொல்வதற்கு ஏதுமில்லை. உறுத்தாத ஒளிப்பதிவு, தேவையான எடங்களில் சிறப்பான எடிட்டிங். இரண்டாம் பாதியில் கொஞ்சம் ஆங்காங்கே ரிப்பீட்டீட்டிவாய் தொங்குகிறது. பட் க்ளைமேக்ஸில் வரும் டிவிஸ்ட் க்யூட்.

விஜய் தேவரகொண்டாவின் தயாரிப்பில் வெளியாகியிருக்கிறது. அதுவே படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பை கொடுத்தது. அதை நிச்சயம் எப்படி பெல்லி சூப்புலு விஜய் தேவரகொண்டாவுக்கு ஒர் ஸ்டெபிங் ஸ்டோனாக இருந்ததோ அது போல தருண் பாஸ்கருக்கு இந்தப்படம். எழுதி இயக்கியிருக்கும் சமீர் சுல்தானுக்கு வாழ்த்துக்கள்.. மீக்கு மாத்ரமே செப்புதா.. 

Oct 11, 2019

இரு துருவம் - வெப் சீரீஸ் விமர்சனம்

இந்தியில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் வெப்சீரீஸுகளுக்கு மத்தியில் தமிழில் சொல்லிக் கொள்ளும் படியான வெப்சீரீஸ் என்றால் அது ஆட்டோ சங்கர் மட்டுமே. தொடர்ந்து பல தமிழ் வெப் சீரீஸ்கள் வந்தாலும் அவைகள் எல்லாமே டிவி சேனலில் காசு வாங்கிக் கொண்டு பணத்தை சுருட்டி எடுத்துக்கொடுத்தது போல் தான் இருக்கிறதே தவிர, வெப் சீரீஸுக்கான மேக்கிங், எழுத்து என எந்த மெனக்கெடலும் இல்லை. பெரிய நிறுவனங்கள். பெரிய பெயர்களைக் கொண்டிருந்தாலும் ஒன்றும் ஒப்பேற மாட்டேன் என்கிறது தமிழ் வெப் சீரீஸ் உலகம். அந்த வகையில் புதியதாய் வந்திருக்கும் இந்த இரு துருவம் வெப் சீரீஸ் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

இன்ஸ்பெக்டர் விக்டரின் மனைவி காணாமல் போய் ஆறு மாதமாகிறது. அவனுக்கு ஒரே மகள். மனைவியை அவர் கொலை செய்துவிட்டு காணாமல் நடிக்கிறார் என்று துறை சார்ந்த விசாரணை ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் இந்த பிரச்சனையால் அவரால் தன் வேலையில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியாமல் போகிறது. அந்நேரத்தில் நகரில் ஒர் கொலை நடை பெறுகிறது. அது தொடர் கொலையாய் மாறுகிறது. தொடர் கொலை செய்பவன் யார்? அவன் ஏன் இப்படி செய்கிறான்? அவனை பிடித்தார்களா? இல்லையா? என்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது இந்த இரு துருவம்.

சுவாரஸ்யமான லைன் தான். அதை ஆரம்பித்த விதமும் சுவாரஸ்யம் தான். கொலைகாரன் வேண்டுமென்றே ஒர் தடயத்தை திருக்குறள் மூலமாய் விட்டுச் செல்வதும், அதை நோக்கி விசாரணையை நகர்த்துவதும் என கதை போகிறது. ஒவ்வொரு எபிசோடு ஆரம்பமும் முடிவும் அடுத்த எபிசோடை முழுவதும் பார்க்க வைக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில் நடுவில் வரும் காட்சிகள். அதில் வரும் வசனங்கள் என பல அமெச்சூர் தனமாய் இருக்கிறது. 

குறிப்பாய் உதவி ஆய்வாளராய் வரும் அப்துல் கேரக்டர் அபூர்வ சகோதர்கள் சிவாஜி போல எல்லாவற்றுக்கும் ஹீரோவை புகழ் பாடி சூப்பர் சார்.. சூப்பர் சார் என்பது காமெடி என்று நினைத்தார்களோ என்னவோ? ஒர்க்கவுட் ஆகவில்லை. 

நந்தாவின் நடிப்பு என்று எதையும் ஸ்பெஷலாய் சொல்ல முடியாது. ஏனென்றால் இவருக்கென்றே வடிவமைத்த பாத்திரம். காதல் காட்சிகளில் கூட இறுகிய முகத்தில் சிரிப்பில்லாமல் நடித்துபழகும் இவருக்கு பொண்டாட்டியை தொலைத்துவிட்டு கொலைகாரனை தேடும் போலீஸ் ஆபீஸர். விடுவாரா? அதே இறுகிய முகத்துடனான ரியாக்‌ஷன். பட் இந்த கேரக்டருக்கு பழுதில்லை.

ஆங்காங்கே வரும் மாண்டேஜ் ஏரியல் ஷாட்கள் சுவாரஸ்யம். ஒளிப்பதிவாளர் ராஜாவின் ஒர்க் சிறப்பு. எழுதி இயக்கியவர் சரவணன். இம்மாதிரியான கொலைகாரனை தேடும் கதைகளில் கண்டுபிடிப்பது என்பது சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் இருக்க வேண்டும். இங்கே பல கண்டுபிடிப்புகள் இவர்கள் வசனங்கள் மூலமாகவே சொல்லப்படுவதும், மிகச் சாதாரணமாய் கொலைகாரன் கண்டுபிடிக்கப்படுவதும் பெரிய மைனஸ். புத்திசாலித்தனமான திரைக்கதையும் எழுத்தும் தேவையாய் இருக்கிற இடத்தில் எல்லாம் சறுக்கியிருக்கிறார். 

சோனி லிவ் எனும் இணைய தளத்தில் இந்த வெப் சீரீஸ் ஒளிபரப்பாகிறது. இப்போதைக்கு விளம்பரங்களோடு இலவசமாய். ஒன்றும் பெரிய மோசமில்லை எனும் லிஸ்ட்டில் நிச்சயம் வைக்கலாம்.

சாப்பாட்டுக்கடை - குழம்புக்கடைகுழம்புக்கடை என்று பெயர் பார்த்ததும், சேலத்தில் ஒரு தெருவெங்கும் இம்மாதிரியான குழம்புகள் விற்கும் கடை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அதே போலா? என்று யோசனையுடன் கடையின் முன்பு வண்டியை நிறுத்தினேன். ஆம். அது போலத்தான். கறிகுழம்பு, சிக்கன் குழம்பு, மீன் குழம்பு, எறா குழம்பு, சிக்கன் மசாலா, கறி சாப்ஸ், சிக்கன் கைமா, கறி தோசை, சிக்கன் கறி தோசை, தலைக்கறி, போட்டி,  இட்லி, பரோட்டா, இடியாப்பம், வடைகறி, சாம்பார், வத்தக்குழம்பு என இரவு நேரங்களில் வரிசைக்கட்டுகிறார்கள் என்றால், பகலில் வெஜ் மற்றும் நான் வெஜ் சாப்பாடும் போடப்படுகிறதாம்

சிக்கன் கறி தோசை அட்டகாசம். முட்டையோடு அடித்து ஊற்றப்பட்ட சிக்கன் கைமா நல்ல எண்ணையில் முறுகலாய் எடுக்கப்பட்டு, உடன் தொட்டுக் கொள்ள சிக்கன் அல்லது மட்டன் கிரேவியோடு ஒரு விள்ளல் வைத்தால் அட அட அட.. நிஜமாகவே டிவைன் தான். 

முட்டை லாபா நன்கு சாப்டான பரோட்டா மாவில் செய்யப்படுகிறது சூடாக சாப்பிடும் போது அபாரமான சுவை. உடன் மட்டன்குழம்பு ஆசம்.

ஞாயிறுகளில் ஸ்பெஷல் அயிட்டங்களாய், நண்டு, எறால், சுறா என நான் வெஜ் குழம்பு வகைகள் வரிசைக் கட்டுகிறது. எந்த குழம்பிலும் நெஞ்சைக் கரிக்கும் எண்ணைய் தாளிக்கப்பட்டோ தூக்கத்தில் எதுக்களிக்கும் எண்ணையோ இல்லை. நல்ல மசாலா மற்றும் மஞ்சள் வாசனையோடு ஹோம்லியாய் இருக்கிறது.

வெஜிட்டேரியனில் வத்தக்குழம்பு கிட்டத்தட்ட வெஜ் மீன் குழம்புதான். சாம்பார் ஓக்கே. வடைகறி மிக நல்ல சுவை.சைதை பிரபலமான மாரி ஓட்டல் வடைகறிக்கு நல்ல போட்டி என்றே சொல்ல வேண்டும். நல்ல தரமான குழம்பு மற்றும் லிமிடெட் சாப்பாடு, கறி தோசை, பரோட்டா வகைகள் அத்தனையும் ஒர் சின்னக் கடையில் தான் தயாரிக்கப்படுகிறது. தேவைக்கு ஏற்ப அவ்வப்போது தயாரிக்கப்படுவதால் தரமும், சுவையும் மெயிண்டெயின் செய்யப்படுகிறது. மேற்கு சைதாப்பேட்டை பஸ் நிலையம் அருகில் அமைந்திருக்கிறது இந்தக்கடை.

குழம்புக்கடை
ரங்கபாஷ்யம் தெரு
மேற்கு சைதாப்பேட்டை
பஸ் நிலையம் அருகில்
சென்னை -15

Sep 4, 2019

ஆன்லைன் டிக்கெட்டிங்கும் பொய் பிரச்சாரமும்.


ஆன்லைன் டிக்கெட்டிங்கும் பொய் பிரச்சாரமும்.
செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்று இனி சினிமா டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாகவே விற்கப்படும் என்று அறிவிப்பு கொடுத்திருந்தார். அனைத்து சேனல்களிலும் இதைப் பற்றித்தான் விவாத மேடையே.  திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அதை வரவேற்று அதை நடை முறை படுத்துவது இயலாத காரியம் என்று வழக்கம் போல அறிக்கை விட்டிருந்தால் கூட பரவாயில்லை. சென்னையில் ஓக்கே. மற்ற ஊர்களில் மக்களுக்கு கார்ட் ஏது? இண்டர்நெட் ஏது?, எப்படி சர்வீஸ் சார்ஜ் கொடுப்பார்கள்? அதெப்படி ஆன்லைன் இருந்தால் தான் டிக்கெட் எடுக்க முடியுமா? என்று அமைச்சர் சொன்னதை புரிந்து கொண்டாலும் இது மக்கள் விரோத நடவடிக்கை என்பது போல அனைத்து சேனல்களும் துறை சார்ந்தவர்களும் சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதையேத்தான் சென்ற மாதம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 2020 முதல் அனைத்து சினிமா டிக்கெட்டுகளும் ஆன்லைன் மூலமாகவே கொடுக்கப்படும் என்று அறித்திருந்தார்.  அப்போதெல்லாம் விவாத மேடை வைக்காத சேனல்கள் அவசர அவசரமாய் கடம்பூர் ராஜு சொன்னதும் வைத்ததற்கான காரணம் அதை வைத்து டி.ஆர்.பி ஏற்றிக் கொள்ள மட்டுமே. ஏனென்றால் அவர்களுக்கும் இது என்ன என்பதை விளக்கி சொல்ல வேண்டும் என்கிற பொருப்போ? கட்டாயமோ இல்லை. ஒரு மணி நேரத்துக்கு ஒர் நிகழ்ச்சி.

சரி விஷயத்துக்கு வருவோம். இச்சட்டம் ஆணையானால் என்ன ஆகும்? மக்களுக்கு ஒன்றுமே ஆகாது. ஏனென்றால் மக்கள் வழக்கம் போல டிக்கெட் புக்கிங் தளம் மூலமாகவோ, நேரிடையாகவோ டிக்கெட் வாங்க எந்தவிதமான தடையும்  கிடையாது. அவர்கள் வழக்கம் போல டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். யாருக்கு இது சட்டமாகிறது என்றால் சினிமா திரையரங்கு உரிமையாளர்களுக்கு.  நாங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கிவிட்டோம் கணக்கு சரியாய் கொடுக்கிறோம் என்கிறார்கள். அவர்கள் டிக்கெட்டை பிரிண்டட் சீட்டுக்கு பதிலாய் கம்ப்யூட்டரில் பில்லிங் சாப்ட்வேர் போல் அவரவர் வசதிக்கு பிரிண்ட் செய்து தருகிறார்களே தவிர, வேறேதும் இல்லை. அவர்கள் கொடுப்பதுதான் கணக்கு. அவர்கள் கட்டுவதுதான் டாக்ஸ்.

ஜி.எஸ்.டி. வந்துவிட்டதே அதெப்படி என்று கேட்பீர்களானால் இதை ஏன் சினிமா விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் வரவேற்கிறார்கள் என்று கேட்டுப் பாருங்கள் உங்களூக்கு புரியும். ஏனென்றால் இன்றளவில் சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள மால்கள். அதுவும் கூட கார்பரேட் மால்களில் மட்டுமே சரியான கணக்கு வழக்கு பெற முடியும். மற்ற ஊர்களில் எல்லாம் அவர்கள் கொடுப்பதுதான் கணக்கு. அவர்கள் கட்டுவதுதான் வரி.

உதாரணமாய் சென்னையை தவிர்த்து ஒர் ஏரியாவில் ஒரு கோடி ரூபாய் விநியோகஸ்தர் பங்கு என்று வைத்துக் கொள்வோம். அதற்கு லோக்கல் டாக்ஸ் 8 சதவிகிதம்.18 சதவிகிதம் ஜி.எஸ்.டி என்றால் மொத்தம் 26 லட்சம் வரியாய் கட்ட வேண்டும். இவர்கள் விநியோகஸ்தரிடம் காட்டும் கணக்கு ஒரு கோடி என்றாலும் பேப்பரில் நாற்பது லட்சத்துக்கு தான் காட்டுவார்கள். அதற்கு தான் வரி கட்டுவார்கள். இதுதான் நடைமுறையில் இருக்கிறது. இந்த ஒரு கோடி கூட சும்மா கணக்குக்கு சொல்கிறேன். இதுவே அவர்கள் போனால் போகட்டும் என்று சொல்கிற கணக்குத்தான்.

இப்போது ஆன்லைன் மூலம் டிக்கெட்டிங் என்றாகிவிட்டால் என்ன நடக்கும்? 
விற்கப்படும் ஒவ்வொரு டிக்கெட்டும் அரசாங்க சர்வர் மூலம் அதற்கான வரி முதல் கொண்டு தெரிந்து விடும். தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் தேனியில் உள்ள ஒர் சின்ன தியேட்டரில் எத்தனை டிக்கெட் விற்றிருக்கிறது என்று தெரிந்துவிடும். அப்படி தெரிந்துவிட்டால் அதை கணக்கில் வரவு வைத்தாக வேண்டும். இதான் பிரச்சனை திரையரங்கு உரிமையாளர்களுக்கு. தங்களுக்கான பிரச்சனையை மக்களுக்கு பிரச்சனை என்று மீடியாவும் இதைப்புரிந்து கொள்ளாமல் ஏதோ ஒரு நிகழ்ச்சி என்று நடத்துகிறது.  நேற்று புதிய தலைமுறை சேனலில் இதைப் பற்றி விவாத மேடையில் பேசிய போது எதைப் பற்றி பேசினோமோ அதை விட்டுவிட்டு பாப்கார்ன் விலை பற்றி பேசிக் கொண்டிருந்ததை கண்டித்து, மீண்டும் சப்ஜெக்டுக்கு கொண்டு வர வேண்டியதாகிப் போய் விட்டது.

ஸோ.. இத்துறை சார்ந்த விஷயம் இது. மக்களுக்கு எந்தவிதத்திலும் இது சினிமா பார்ப்பதை பாதிக்காது. என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Aug 20, 2019

நான் ஷர்மி வைரம் - புத்தக முன்பதிவு

இணையத்தில் தொடராய் தொடர முடியாமல் போனதை முழு நாவலாய் வெளிக் கொண்டு வந்திருக்கிறேன். தொடர் வந்த போது பெரும் ஆதரவு அளித்து, எப்போது நாவலாய் வரும்? என்று கேட்டுக் கொண்டிருந்த அன்பர்களின் ஆதரவை நாடி புத்தகமாய் வெளியாகிறது.  புத்தகத்தின் விலை ரூ.200 முன்பதிவு ஆபராய் ரூ.160க்கு தருகிறோம்.. அதற்கான லிங்க் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBEd7SQcUxfbWVekDjlptGt3eeLWruRMvjYgq4ywcELtmM0g/viewform?usp=pp_url

இத்துடன் 24 சலனங்களின் எண் என்கிற புதிய நாவலையும் வெளிக்கொணர்கிறேன். சினிமா, அதன் பின்னணியில் உள்ள பிரச்சனைகள், என சினிமா மாந்தர்களை சுற்றி வரும் நாவல். சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாத நாவல். இதன் விலை. 300 . சலுகை விலையாய் ரூ.250க்கு தருகிறோம். அதற்கான லின்ங்

இரண்டு நாவல்களின் விலை ரூ.500 முன்பதிவு சலுகையாய் ரூ.375க்கு இலவச கொரியர் மூலமாய் அனுப்புகிறோம். அதற்கான லிங்க். https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBEd7SQcUxfbWVekDjlptGt3eeLWruRMvjYgq4ywcELtmM0g/viewform?usp=pp_url

அத்திவரதர் ஒர் மார்கெட்டிங் ஹைஃப் - பாஸ்கர் சச்தி - Chat with x


Aug 9, 2019

சாப்பாட்டுக்கடை - அக்கா கடை

சென்னையில் நான்கைந்து வருடங்களாய் புதிய ஹோட்டல்களை விட தள்ளுவண்டிக் கடைகள், சிறு உணவகங்கள் நிறைய முளைக்க ஆரம்பித்திருக்கிறது. பெரும்பாலும் குடும்பப் பெண்கள் தங்கள் குடும்ப வாழ்வாதாரத்தை பெருக்க, தங்களுக்கு ஆகி வந்த கலையான சமையலை கையில் எடுத்து களம் இறங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த வகையில் மேற்கு சைதாப்பேட்டையில், வன்னியர் தெருவின் முனையில் ஒரு கையேந்தி பவன் நான்கு வருடமாய் இருக்கிறது.  அக்கா கடை என்று தான் அழைக்கிறார்கள்.

மாலை வேளையில் இட்லி, தோசை, மசாலா தோசை, பெசரட்டு, அடை, வடைகறி, சாம்பார் இட்லி , குருமா, இரண்டு வகை சட்னி,சாம்பாருடன் அட்டகாசமான ஒர் விருந்தையே இந்த சின்னச் தள்ளுவண்டியில் தருகிறார்கள்.

அடை எல்லாம் வீட்டுப் பதத்தில் நல்ல எண்ணெய் விட்டு முறுகலாய் அவியலோடும், காரச்சட்னியோடும் பறிமாறப்படுகிறது. மசாலா தோசை என்றால் காளான் மசாலா, பன்னீர் மசாலா என தினத்துக்கு ஒன்றாய் ஸ்பெஷல் அயிட்டங்கள். சாப்பிட்டுப் போனால் நிச்சயம் வயிற்றைக் கெடுக்காத சகாய விலை உணவு. நிச்சயம் அந்தப் பக்கம் போகும் போது ஒரு கை பார்த்துவிட்டுப் போங்க. ரொம்ப லேட்டாய் போனால் ஸ்பெஷல் அயிட்டங்கள் கிடைக்காது

அக்கா கடை
வன்னியர் தெரு,
மேற்கு சைதாப்பேட்டை
சென்னை -15

Aug 4, 2019

பொன்னி

வெட்டாட்டம் என்கிற சக்ஸஸ்புல் நாவலுக்கு பிறகு ஷான் கருப்பசாமியின் எழுத்தில் வெளிவந்திருக்கும் புதிய நாவல் ‘பொன்னி’. முதல் நாவல் வெற்றி பெற்று அது திரைப்படமாகவும் ஆவது எல்லாருக்கும் சாதாரணமாய் நடக்கும் விஷயம் கிடையாது. 

பொன்னியைத் தான் முதல் நாவலாய் வெளியிட இருந்ததாகவும், கண்டெண்ட் மிகவும் பெரியதாய் இருந்ததால் இரண்டாவதாய் வெளியாகி இருந்தாலும், இதான் எனக்கு முழு திருப்தி அளித்த நாவல் என்றார் ஷான். சரி நாவலுக்கு வருவோம்.

இன்றைய தேதியில் வரலாறு காணாத வகையில்  தங்க விலையுர்ந்து  கொண்டிருக்கும் வேளையில் தங்கத்தைப் பற்றிய நாவல் மிகச் சரியான சிங்க்.

கிபி  இரண்டாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கிறது கதை. அப்படியே ஓவ்வொரு நாடாய், காலமாய் அடுத்தடுத்த சேப்டர்களில் கதை பறக்க ஆரம்பிக்கிறது. தங்கத்தைப் பற்றி, அதன் ஆர்ஜின் பற்றி, தங்கம் கண்டுபிடிக்கப்பட்டு என்ன ஆனது? எப்படி சாதாரண மக்களை குறிப்பாய் தமிழர்களின் வாழ்வை நசுக்கியது? கோலார் தங்க வயல், அதன்  பின்னணி என பலவேறு விஷயங்களை நாவல் பூராவும் தகவலாய் உறுத்தாமல் சொல்லிக் கொண்டே போகிறார். சக்தி, பொன்னி, ஜேம்ஸ், பழனி, முக்கியமாய் செல்லம்மா எனும் மோகினி, கதிரவன், வைஷாலி என முக்கிய கேரக்டர்கள் கதையை ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கு கொண்டு செல்கிறார்கள்.  சுவாரஸ்யத்துக்கு குறைவில்லாத எழுத்தும்  அதன் பின்னணிக்காக உழைப்பும் நாவல் பூராவும் தெரிகிறது.

ஜேம்ஸ் - செல்லம்மா காதல் ப்ளேஷ்பேகில் செல்லம்மாவின் அறிமுகம் அட போட வைக்கிறது. உளவாளியாய் பயணித்து காதலில் விழும் அவரின் கேரக்டர் வடிவமைப்பு அட்டகாசம். ஆனால் அது ஒரு கட்டத்திற்கு பிறகு ரொமாண்டிக் பாகமாய் மட்டுமே போனதால் என்னதான் செல்லம்மாவின் கனவை பொன்னி முடிக்க வருகிறாள் என்று இரும்புப் பெண்மணி ஜெயலலிதாவுக்கு இணையாய் பில்டப் கொடுத்தாலும்  எடுபடாமல் போய்விடுகிறது.  திரைப்படமாய் எடுக்கப் போனால் நிச்சயம் இந்த எபிசோடை இன்னும் பட்டை தீட்டி சுருக்க வேண்டும்.

தடாலடியாய் பொன்னியை பாரா டைவிங்கில் அறிமுகப்படுத்துவது. உலகின் மாபெரும்  வங்கியில் வைக்கப்பட்டிருக்கும் தங்கக் கொள்ளை. டாப் ஆங்கிளில் ட்ரக்குள், ட்ரைவிங், பாலைவனம், கோலார் தங்க வயல், ரா, சிஐஏ, என தடாலடியாய் கேரக்டர்களும், தொடர் ஓட்டமுமாய் விறு விறு விஷுவலுமாய், திரைக்கதையாய் நிறைய காட்சிகள். விக்ரம் படம் பார்த்த்தார் போல இருந்தது.  குறிப்பாய் ப்ளாஷ்பேக்கிலும், க்ளைமேக்ஸுலும், வரும் திருப்பங்களும் எல்லாமே ஊகிக்ககூடியதாய் அமைந்ததும், வசனங்கள் காட்சிகள் எல்லாமே சினிமாவிற்கான டெம்ப்ளேட்டில் இருந்ததுதான் இந்நாவலுக்கான பெரிய மைனஸ். மற்றபடி சுவாரஸ்யத்துக்கு குறைவில்லாத வாசிப்பு அனுபவத்தை கொடுக்க தவறவில்லை. பொன்னி.  


Jul 18, 2019

Igloo- அன்பின் கதகதப்பு


Igloo- அன்பின் கதகதப்பு
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல உலக அளவில் மனதுக்கு நெருக்கமாய், சின்னச் சின்ன உணர்வுகளை வெளிப்படுத்தும் படங்கள் இப்போதெல்லாம் அவ்வளவாக வருவதில்லை. அப்படியே வந்தாலும் சீரியல் கண்டெண்ட் என்று மிக சுலபமாய் ஒதுக்கித் தள்ளிவிட்டு அவெஞெர்ஸோ, சிங்கம் 3 பார்க்க போய்விடுகிறோம். தயாரிப்பாளர்களும் இனி இம்மாதிரியான ஆர்டிஸ்ட் படம் தான் ஓடும் என்று முடிவெடுத்து நம்மை கொலையாய் கொல்வார்கள். ஃபீல் குட் படங்கள், குடும்ப உறவுகளைச் சொல்லும் படங்கள். மிக அழுத்தமான கருக்களை கொண்ட கதைகள். சின்ன த்ரில்லர்கள் போன்றவைகள் குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாய் வியாதியை, ஆஸ்பிட்டலை அடிப்படையாய்க் கொண்டு எடுக்கப்படும் கதைக்களன்களை தொடுவதற்கு எல்லோருமே பயப்படும் படியான காலமாகிவிட்ட நிலையில், அக்டோபர் போன்ற மிகச் சில ஹிந்தி படங்கள் மெல்லிய நம்பிக்கையை கொடுக்க வரும். ஆனால் அப்படமே இயக்குனரின் பெயரால் நற்பெயர் பெற்றதேயன்றி பெரும் வசூல் எல்லாம் கிடையாது. அப்படியான இன்றைய பரபர சினிமாவில் நிறுத்தி நிதானமாய் ஒர் அழகிய தமிழ் திரைப்படம் சாரி.. தமிழ் இணையப்படம் இக்லூ. ஓ.டீ.டீ எனும் இம்மாதிரியான ப்ளாட்பார்ம்கள் தான் இனி இம்மாதிரியான படங்களுக்கு சரியான இடம்.

படத்தின் முதல் காட்சியில் காட்டப்படும் விஷுவல்களை எல்லாம் மீறி இரட்டை பெண் குழந்தைகளின் சம்பாஷணைகள் நம்மை ஈர்க்க ஆர்மபித்துவிடுகிறது. அதீத புத்திசாலித்தனமோ, அல்லது அதிகபிரசங்கித்தனமோ இல்லாத குழந்தைகளின் பேச்சு.  அவர்களுக்கும் அவர்களது அப்பனுக்குமிடையே ஆன உறவு. அதன் நெருக்கம். அதை திணிக்காமல் சொன்ன காட்சிகள் வரும் போதே எங்கே இவளது அம்மா? என்ற கேள்வியும் ஏன் காட்டப்படவில்லை என்கிற ஆர்வமும் நம்மை தொற்றிக் கொள்கிறது. அதற்கான விளக்கம் சொல்லும் காட்சி டெம்ப்ளேட்டாய் இருந்தாலும் அங்கேயிருந்து ஆரம்பிக்கிறது இயக்குனரின் எழுத்தாற்றல்.

"கேட்ட உன் அப்பன் வந்து சாத்துவானா?’
“அதுக்கு நீதானேப்பா வரணும்?”

“என்னடா காக்கா மாதிரி கல்லு போட்டு குடிக்கப் போறியா?” போன்ற மிக நுணுக்கமான நகைச்சுவைக்கும் பஞ்சமில்லாத எழுத்து தான் இப்படத்தை சுவாரஸ்யமாக்குகிறது.

எங்கேயும் க்ளீஷே காட்சிகள் இல்லை. காதலில் இருக்கும் இயல்பு. செக்ஸ், முரட்டுத்தனம். ஆட்டிட்டியூட். ஏன் நடு ராத்திரி மூணு மணிக்கு நடு ரோட்டில் காதலன் கேட்டான் என்று மாடியிலிருந்து அவளது தந்தை பார்க்கும் போது ஆடும் சால்சா ஸ்டெப்பாகட்டும். எனக்காக உன் கோபத்த விட மாட்டியா? என்று கோபித்துக் கொண்டு போய் அவனில்லாம இருக்க முடியாது என்று உருகுமிடம். பிடிவாதத்திற்காக பெண் பார்க்கும் படலத்தை ஏற்பாட்டை அம்மாவும் மகளுமாய் மிக அழகாய் கையாண்டு தோற்கடிக்கும் காட்சி. சிவாவுக்கும் ரம்யாவுக்குமிடையே இருக்கும் காதல் ஆரம்பக்காட்சிகளில் தறிகெட்டு ஓடுகிறது என்றால் பின் வரும் காட்சிகளில் நம்மை உருக வைக்கிறது. குறிப்பாய் ரம்யாவின் பக்கெட் லிஸ்டின் கடைசி காட்சி. குறிப்பாய் அவர்களுக்கு நடக்கும் உறவுக்கான காட்சி. ஒரு ஷாட்டில் இருவரும் படுத்திருக்கும் போஸிலேயே வெளிப்படுத்தியிருப்பது க்ளாஸ். எத்தனையோ சினிமாக்கள் பார்த்து இறுகிப்போன இதயத்தை உருக வைத்து கண்ணீர் வரவழைக்கிறது. அவர்களிடையே நடக்கும் கான்வர்ஷேஷன்களில் தான் எத்தனை முதிர்ச்சி.  தெளிவு. காதலர்களிடையே ஆனா அப்புறம்?அப்புறம்? போன்ற அபத்தங்களில்லாத பேச்சும். மொனாட்டனி காதல் காட்சிகளும் கொடுக்கும் சுவாரஸ்யத்தை விட இறுதிக் காட்சிகளில் அவர்களிடையே இருக்கும் அன்யோன்யமும், காதலும் க்ளாஸ். குறிப்பாய் சரக்கடிக்க சொல்லி பேசும் காட்சி.

ரம்யாவுக்கான வியாதியைப் பற்றி சொல்லி ட்ராமா பண்ண வேண்டிய இடங்களை மிக அழகாய் தவிர்த்து இதென்னடா ட்ராமா இனி இவர்கள் வாழ்க்கையே ட்ராமாவாக ஆகப் போகிறது என்பதை அடுத்து வரும் காட்சிகளில் மெலோ ட்ராமா இல்லாமல் முகத்தில் அறைந்தார்ப் போல அன்பையும், காதலையும், கோபத்தையும் இயலாமையையும் ஒருங்கே படம் நெடுக ரம்யாவோடு, சிவாவோடு பயணிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் பரத் மோகன்.

அம்ஜத், அஞ்சு குரியன் இருவரின் நடிப்பு ஆசம். குறிப்பாய் அம்ஜத்தின் ஆட்டிட்டியூட்  ரஜினி போல பேசும் முறை பாடிலேன்க்குவேஜ் என்று ஆரம்பக்க் காட்சியில் கொஞ்சம் ரக்டாக தெரிந்தாலும் மெல்ல ரம்யா மனசில் உட்கார்ந்த சிவாவாய் நம் மனதிலும் உட்காருகிறார். படமே அஞ்சு குரியனின் தோள்களில் தான் மிக அநாயசமாய் சுமக்கிறார்.  குகன் பழனியின் தொந்தரவு இல்லாத ஒளிப்பதிவு. பிரசன்னாவின் எடிட்டிங், அரோல் கரோலியின் இசை என டெக்னிக்கலி எல்லாமே பட்ஜெட் பர்பெக்ட்.

குறையாய் ஏதுமில்லையா? என்று கேட்டால் இருக்கிறது. கொஞ்சம் நாடகத்தனமான ரம்யாவின் அம்மா நடிப்பு. சில மணிரத்னம் ஸ்டைல் காட்சிகள்.  நீளத்துக்காக எழுதப்பட்ட சில காட்சிகள், மேக்கப்புடனே ரம்யா இருப்பது போன்ற என மிகக் குறைவாகவே இருக்கிறது. அதனால் என்ன? வாழ்க்கையில் எல்லா நேரமும் சுவாரஸ்யமும், கொண்டாட்டமாகவாய் இருந்துவிடும். இந்த இக்லூ படம் பார்த்து சில மணி நேரங்களுக்கு காதலில் கதகதப்பை, அன்பை, தக்க வைக்கும்.

கேபிள் சங்கர்.

Jul 13, 2019

Post Man - Web series Review - போஸ்ட் மேன் - வெப் சீரீஸ் விமர்சனம்

செலவுகளைக் குறைக்கும் தயாரிப்பாளர் சங்கம்தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து சென்ற வாரம் ஒரு அறிக்கை அதாவது இனி வரும் காலங்களில் பத்திரிக்கையாளர்கள் அழைக்கப்படும் நிகழ்ச்சிக்களுக்கு எல்லாம் அன்பளிப்பு கவர் அளிக்கப்படாது என்றும். மேலும் இனி வரும் காலங்களில் அவர்களுக்கு சாப்பாடு, விருந்துக்கு பதிலாய் டீயும்ஸ்நாக்ஸும் தான் தரப்படும் என் பீ.ஆர்.ஓ யூனியனுடன் சேர்ந்து முடிவெடுத்திருப்பதாய் தெரிவித்திருந்தார்கள்.

அது மட்டுமில்லாமல் இனி வரும் காலங்களில் யாராவது தரம் தாழ்ந்து விமர்சனம் எழுதி, அல்லது வீடியோ வெளியிட்டால் இந்த டீ காப்பிக்கூட அழைக்கப்பட மாட்டார்கள் என்றும் அதையும் மீறி விமர்சித்தால் கிரிமினல் கேஸ் போடுவோம் என்றும் சொல்லியிருந்தார்கள்.

இதில் காமெடி என்னவென்றால் இதையெல்லாம் ஆரம்பித்து வைத்தது இவர்கள் தான். முன்பு பத்திரிக்கைகளில் வேலை செய்கிறவர்களுக்கு பத்திரிக்கை சம்பளம் தரும். எனவே பத்திரிக்கையாளர்கள் செய்திகளை சேகரிப்பதற்காக அன்பளிப்பு எல்லாம் கொடுத்ததில்லை. என்ன ஸ்பெஷல் போட்டோ செஷன், கட்டுரைகள், மற்றும் பேட்டிகள் வர வழைப்பதற்காக அன்பளிப்பு கொடுத்த காலமிருந்தது. மெல்ல டிஜிட்டல் காலமாக வெப்சைட் வைத்திருக்கிறவர்கள் டிவிட்டர் பேஸ்புக், யூடியூப் அக்கவுண்ட் வைத்திருக்கிறவர்கள் எல்லாரையும் அழைக்க ஆரம்பிக்க தியேட்டரில் ஹவுல் புல் ஷோவாக ஆகிறதோ இல்லையோ ப்ரிவியூ ஷோ ஹவுஸ்புல்லாக ஆரம்பித்தது.

பத்திரிக்கைகளில் வேலைப் பார்த்து கொஞ்சம் காசு சேர்த்து ஒர் இணைய தளத்தை ஆரம்பித்து, இவர்கள் தரும் அன்பளிப்பை மட்டுமே நம்பி வாழும் இணைய தள பத்திரிக்கையாளர்கள் நூற்றுக்கும் மேலே. இவர்கள் நிலமைதான் இனி மோசம். அட்லீஸ்ட் கொஞ்ச நாளைக்காகவது. ஏனென்றால் நிச்சயம் இந்த ரூல் மீறப்படும். என்பது உறுதி.

விமர்சனம் குறித்த இவர்களது கருத்து செம்ம காமெடி. நிச்சயம் செல்ப் எடுக்காது. ஏற்கனவே கம்ப்ளெயிண்ட் கொடுத்து பேட்டியெல்லாம் கொடுத்தும் போலிஸ் ஸ்டேஷனில் கூப்பிட்டு விசாரிக்க கூட இல்லைன்னாங்க்.. ஸோ.. லெட்ஸ் ஸீ

Jul 12, 2019

Article 15


Article 15
ஆயுஷ்மான் குரானா. இந்தி திரையுலகில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு ஹீரோ. அதற்கு காரணம் இவர் தெரிந்தெடுக்கும் கதைகள். இவரது முதல் படமே கொஞ்சம் களேபரமான கதைக்களம் கொண்டதுதான். விந்து தானம் செய்கிறவரின் கதை. அதில் ஆரம்பித்து தொடர் வெற்றியில் இருக்கிற ஒர் நம்பிக்கைக்குறிய நாயகனாய் நான்கு ஹிட்டுக்கு பிறகு வரும் படம். இந்த ஆர்டிக்கள் 15. ஜாதியை வைத்து பாகுபாடு காட்டி ஒதுக்கி வைப்பது இந்திய அரசியல் அமைப்பின் படி குற்றம் என்றாலும் நம் நாட்டில் ஜாதி எப்படி புரையோடியிருக்கிறது என்பதை 2014ல் பதூனில் நடந்த கற்பழிப்பு வழக்கை அடிப்படையாய் வைத்து எடுக்கப்பட்ட மிகவும் தைரியமாய் சொல்லப்பட்டிருக்கும் கதை.

மூன்று ரூபாய் கூலி அதிகம் கேட்டு போராட்டம் செய்ததற்காக இளம் பெண்கள் மூன்று பேர் கேங் ரேப் செய்யப்பட்டு அதில் இரண்டு பேர் கொல்லப்படுகிறார்கள். இன்னொரு பெண்ணை காணவில்லை. அவர்களை ஆணவக்கொலை செய்து தூக்கிலிட்டதாய் கேஸை ஜோடித்து அவர்களது பெற்றோர்கள் மீது கேஸ் போட்டு முடிக்க பார்க்கிறார்கள். லண்டனின் படித்த அப்பாவின் ஆசைக்காக இந்தியாவில் பணி செய்ய வந்து டெல்லியில் நோ சொன்னதினால் இந்த கிராமத்துக்கு ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டு வருகிறார் ஆயூஷ்மான் குரானா. அவர் வந்த மாத்திரத்தில் இந்த ஆணவக் கொலை கேஸ் வர, இது ஆணவ கொலையில்லை என்று புரிந்து கொள்கிறார். ஒரிஜினல் குற்றவாளியை பிடிக்கப் போனால் ஏகப்பட்ட ஜாதி உள் பிரச்சனைகள். அரசாங்க தலையீடுகள். உடன் வேலை செய்கிறவர்களிடையே இருக்கும் ஜாதீய பிரிவினைகள். தாழ்த்தப்பட்ட்வர்களின் மீது கட்டவழித்துவிடும் அதிகார துஷ்பிரயோகம். என எல்லாவற்றையும் கிழித்து தொங்க விட்டிருக்கிறார்கள்.

“வெளிநாட்டில் இருக்கும் போது இந்தியா, தாஜ்மகால் என பெருமை பேசிட்டிருந்தேன். இங்க வந்து பார்க்கும் போது பெருமை பட முடியலை”

”பகுஜனு சொல்றாங்க. ஹரிஜன்னு சொல்றாங்க. ஆனா இந்த தேசத்தின் ஜன்ங்களா எங்களை எப்ப ஏத்துப்பாங்க”

“நியாயத்துக்காக எப்போதும் கெஞ்சாதே”

”உங்களுக்கு எல்லாம் ஒரு ஹீரோ தேவைப்படறான் இல்லை அதிதி?. இல்லை அயான் அவங்களுக்கு ஒரு ஹீரோ வருவான்னு வெய்ட் பண்ணக்கூடாது”

“அவங்களையெல்லாம் வைக்க வேண்டிய இடத்துல வைக்கணும் சார். இல்லாட்டி வேலை கெட்டிரும்”

”எது அவங்க இடம்?”

“நாம சொல்லி வைக்குற இடம்”

”மூணு ரூபா அதிகம் கூலி கேட்டதுனால மூணு பெண்கள் கடத்தப்பட்டு கேங்க் ரேப் செய்யப்பட்டிருக்காங்க. நீங்க குடிக்குற மினரல் வாட்டர்ல ரெண்டு சிப் வாங்க முடியும்’

இப்படியான வசனங்களே சொல்லும் படத்தின் காத்திரத்தைப் பற்றி.

ஜாதியை ஒழித்துவிட்டோம் என்று அரசியல் கட்சிகள் கூவினாலும் தேர்தல் காலங்களில் அவர்கள் ஜாதியை வைத்து செய்யும் அரசியல் டகால்டிகளையும், பேச்சுகக்ளையும் தோலுரிக்கும் தைரியம். வடநாட்டில் ஜாதி பாகுபாடு சமூதாயத்தை எத்தனை சீரழித்திருக்கிறது என்பதையும், ” இங்கே எல்லாம் அதது சரியா போய்ட்டிருக்கு. அத மாத்துறேனு குழப்பாதீங்க” என்று சொல்லும் போது அயுஷ்மான் குரானாவின் கண்களில் தெரியும் அடக்கப்பட்ட கோபம் தான் நமக்கும்.

ஸ்டேஷனில் உள்ள அத்துனை போலீஸ்காரர்களையும் அவரவர் ஜாதி குறித்து கேட்கும் போது அதில் ஒருவர் தலித். நீங்களும் காணாமல் போனவர்களின் ஜாதியும் ஒண்ணா என்று கேட்க, இல்லை அவர்கள் என் ஜாதியைவிட கீழானவர்கள் என்று பெருமையாய் சொல்லுவதை காணக் சகிக்காமல் கத்துமிடம். கூட்டு வண்புணர்வில் ஈடுபட்டது தன் பாதுகாவன் கூட என்று தெரியும் போது கிடைக்கும் அதிர்ச்சியை விட அவனது சகோதரியை வீட்டு சமையலுக்கு வைத்திருக்க, அவளிடம் சகோதரனைப் பற்றி அவன் செய்த காரியத்தைப் பற்றி சொல்லுமிடம். கற்பழிப்பு வழக்கில் மாட்டிய போலீஸ் அதிகாரி அவனது ஜுனியர் தலித் போலீஸ்காரர் அழைத்துப் போக வரும் போதும் “கக்கூஸ் கழுவ வேண்டிய நீயெல்லாம் போலீஸ் ட்ரஸ் போட்டுட்டு எனக்கு சமமா நிக்குற திமிரா?” என்று கேட்க அதற்கு அவர் கொடுக்கும் தண்டனை சாட்டையடி. மொத்த தியேட்டரும் கைத்தட்டி கொண்டாடுமிடம்.

மிக இயல்பான அண்டர் ப்ளே நடிப்பு ஆயூஷ்மான் குரானாவுடயது.

படத்தின் பெரிய பலம் நடிகர்களும், அவர்களுக்கான பாத்திரத் தேர்வுகளும். பணிக்கர் கேரக்டரில் நாசரின் ஹிந்தியும் ஆட்டிட்டியூடும் அட்டகாசம்.  படம் முழுக்க, க்ளாஸ் எடுக்காமல் புரட்சி பேசாமல் மெல்ல ஒரு புரட்சி விதையை நட்டுக் கொண்டே போகிறார்கள் இந்த திரைக்கதை எழுத்தாளர்கள். அனுபவ் சின்ஹாவின் தேர்ந்த இயக்கம் என அனைவரும் சேர்ந்து ஒர் சிறந்த படத்தை தந்திருக்கிறார்கள்.

இப்படத்தில் ஜாதிய பாகுபாடைக் குறித்து கவலைப்படும் உயர்ஜாதி இளைஞனின் பார்வையில் சொல்லப்பட்டிருப்பதை நம் தமிழக இணையர்கள் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜாதி ஒழிப்பைப் பற்றி  பேச தங்கள் ஜாதியிலிருந்து ஒருவர் சொன்னால் தான் அது காவியமாய் கொண்டாடப்படும் என்று நினைப்பதும் கூட ஆர்ட்டிக்கள் 15 படி ஜாதி பாகுபாடு பார்ப்பதாய் சட்டம் இயற்ற வேண்டும்

Jul 5, 2019

எண்டர் கவிதைகள் -28

உன்னைக் காண ஓர் நீண்ட பயணம்
ஆயிரம் காரணங்கள்
எனை வரவேற்க நீ இல்லாமல் போனதற்கு
மீண்டுமொரு நீண்ட பயணம் உனைக் காண
நீ இல்லாமலிருக்க ஆயிரம்
காரணங்களிலிருக்குமென்று 
எதிர்பார்த்தே பயணிக்கிறேன்.
அன்புதான் எத்தனை வலியை
சுமக்க பழக்குகிறது.

Jun 29, 2019

எண்டர் கவிதைகள் -27


அன்பு எங்கேயும் போகவில்லை.
உனக்கான பிரவாகமாய் 


என்னுள்ளேயே இருக்கிறது
அது உனக்கு தெரிந்தே இருந்தாலும், 


கிடைக்கபெறும் அன்பின் மிகையால் 
என் அன்பை தவிர்க்கிறாய்
தூக்கிப் போடுகிறாய்.
அது ஏன் என என்னால் 
புரிந்து கொள்ள முடிவதற்கான
காரணம் அன்பு.
எப்போதும் உன்னை வெறுப்பதுமில்லை,
என்றைக்கும் உன்னை நேசிப்பதை
கைவிடுவதுமில்லை.

Jun 1, 2019

N.G.K - கேள்வியின் நாயகன்.


N.G.K - கேள்வியின் நாயகன்.
என்.ஜி.கே படம் பார்த்துவிட்டு கிட்டத்தட்ட பெரிய டெக்னீஷியன்கள் கூட்டமே என்னை செம்மத்தியாய் ஏமாற்றி விட்டார்கள் என்று கடுப்பேறி விட்டது. காரணம் படத்தில் உள்ள அபத்தங்களின் அணிவகுப்பு. முழுக்க முழுக்க ஸ்பாயிலர் பதிவு. படம் பார்க்காதவங்க ஓடி போயிருங்க.

படத்தின் முதல் காட்சியில் இடி மின்னல்களுக்கு இடையே மண்ணிலிருந்து புறப்படத் தாயார் போல எழுந்து கொள்கிறார். பின்னர் வீட்டின் அருகே பைக்கை வைத்துவிட்டு, தன் வீட்டிற்கே பைப் பிடித்து ஏறுகிறார்?. ஏதாவது தீவிரவாத செயலில், புரட்சி கூட்டத்தின் தலைவனா? என்று பார்த்தால் அப்படியெல்லாம் இல்லை. எம்.டெக், பிஎச்டி படித்துவிட்டு, ஆர்கானிக் விவசாயம் பார்க்கிறாராம். நட்ட நடு ஹாலில் அம்மாவின் முன்னால் ஒரே குல்பியை ஆளுக்கொரு முறை சப்பிக் கொள்கிறார்கள்.

என்.ஜி.கே இருக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இவரால் நான் ஆர்கானிக் வியாபாரம் படுத்துவிட்டதால் எல்லோரும் சேர்ந்து இவர் ஆர்கானிக் விவசாயம் செய்ய கூடாது என்கிறார்கள். அதனால் இவரின் வயல் வெளிகளை விவசாயம் செய்ய முடியாத அளவிற்கு கெடுக்கிறார்கள். வீட்டை எல்லாம் அடித்து நொறுக்குகிறார்கள். ஏன்?

எம்.டெக், பிஎச்டி படித்தவருக்கு ஒரு எம்.எல்.ஏ, கவுன்சிலரின் பதவியின் பவர் தெரியாது என்பதை நம்புகிற அளவிற்கு காட்சிகள் அமைக்கப்படாததால் சூர்யாவை பார்க்க பாவமாய் இருக்கிறது.

ஏன் எல்லோரும் “ஹலோ யாராச்சும் இருக்கீங்களா? “ என்று தனுஷ் புதுப்பேட்டையில் ஜெயில் பேசுவது போலவே கத்தி கத்தி பேசிக் கொண்டிருக்கிறார்கள்?.

500 பேரை கூட்டி வந்து கட்சியில் சேர்க்கிறேன் என்று சொல்லி சேர்க்கிறார் எம்.ஜி.கே. எப்படி?

என்.ஜி.கேவின் அஜெண்டாதான் என்ன?

புகைப்போட்டால் அருகில் இருக்கும் போலீஸுக்கு கூட தெரியாதா?

ஏற்கனவே இவரின் நடவடிக்கையை ஆளாளுக்கு ஜூம் போட்டு டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.பின் எப்படி யாருக்கும் தெரியாமல் போனது?

கார்பரேட் முதலாளிகளை சந்திக்க வேண்டுமென்கிறார் என்.ஜி.கே. அது என்ன ஆனது?

வானதிக்கும் என்.ஜிக்கேவுக்கும் இடையே ரிலேஷன்சிப் வர காரணம்?

எதற்காக ஹை கமாண்ட் ஆபீஸுக்கு எம்.எல்.ஏ கையில் ஒர் பெட்டியை அணைத்தபடி பயந்து போகிறார்? எதற்காக? அந்த பெட்டியில் என்ன இருக்கிறது?.

எதற்காக வானதியின் பிஸ்டலை எடுத்து வைத்துக் கொண்டு வானதியில் அறையில் இருக்கிறார் என்.ஜி.கே?

ஒருவனை ஒழிக்க நினைக்கும் எதிர்கட்சி தலைவர் எதற்காக அவருக்கே பாராட்டு விழா நடத்த வேண்டும்?

மீடியா எதிரே பாராட்டுவது ஓகே. அதுவும் சுத்தத்தமிழில் பத்து நிமிஷம் எதற்காக பொண்வண்ணன் பேசுகிறார்?. அதுவும் போட்டோகிராபர் எல்லாம் 

அவரது பின்பக்கம் இருக்கும் போது?

எதற்காக சைக்கிளில் போக வேண்டும்?

ஊருக்கே உழைக்கும் என்.ஜி.கேவை தாக்குகிறார்கள் ஒருவரும் உதவிக்கு கூட வருவதில்லையே ஏன்?

போலீஸ்காரர் ஒருவர் இந்த பக்கம் போகக்கூடாது மார்கெட் வழியா போ என யாருக்கு பாராட்டு விழா நடத்துகிறார்களோ அவரையே அடையாளம் தெரியாமல் சொல்வது கூட ஓகே ஆனால் அங்கிருக்கும் ஒருவருக்கு கூடவா தெரியாது?

க்ளைமேக்ஸில் அத்தனை கூட்டத்திற்கு நடுவில் என்.ஜி.கேவை காப்பாற்ற வானதி துப்பாக்கியால் சுடுகிறாள். ஆனால் ஊரும் சரி  போலீசும் சரி கூட்டத்தை கண்ட்ரோல் பண்ணிக் கொண்டிருக்கிறது ஏன்?

ஊருக்கே நல்லவரான என்.ஜி.கேவை காப்பாற்ற ஏன் ஒருவரும் வரவில்லை?
எதற்காக அம்மா அப்பாவை கொல்ல வேண்டும்.?

அந்த பாடல் எதற்காக படமாக்கப்பட்டது?

என்.ஜி.கேவின் அப்பா எதோ ஒரு ஸ்பெஷல் லைன் போட்டு ஆர்மி ஆளுடன் பேசுகிறார் அது எதுக்காக?

இப்படத்தில் நல்லதே இல்லையா? என்று கேட்டீர்களானால் இருக்கிறது. அடிபட்ட தொண்டரை அழைத்து வந்து படியேறி எம்.ஜி.ஆர் பேக்ட்ராபில் அரசியலுக்கு வரப்போவதை காட்டும் காட்சி. சூர்யாவின் நடிப்பு. பர்பியூம் காட்சி என ஒரு சில.

எத்தனையோ படங்களை பார்க்கிறோம். அதில் எல்லாம் எத்தனையோ கேள்விகள் படம் பார்த்தபின் வருகிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு இப்படி இத்தனை கேள்விகள் கேட்கிறாயே? என்று கேட்பீர்களானால் அந்த படங்கள் எல்லாம் படம் பார்த்த பின் எழுந்த கேள்விகள். இது படம் பார்க்கும் போதே எழுந்த கேள்விகள். ஒரு படம் பார்க்கும் போது கேள்விகள் எழக்கூடாது. அப்படி எழுந்தால் அந்த படம் நம்மை ஈர்க்கவில்லை என்று அர்த்தம்.May 21, 2019

எலி - என் கதை.

பெட்ரோல் தாறு மாறாய் விலை ஏறிக் கொண்டிருந்த நேரம். பத்து நாட்களுக்கு மேல் காரை எடுக்கவில்லை. அவசரம் இல்லாமல் போக வேண்டிய வேலை இருந்ததால் காரை எடுக்கப் போனேன். காரின் ஆட்டோ லாக்கிங் சிஸ்டத்தில் இடது பக்கம் ஒர்க் ஆகவில்லை. என்னடா? என்று யோசித்து கொண்டே டாஷ்போர்டை திறந்த போது அதில் வைத்திருந்த பேப்பர்கள் எல்லாம் சுக்கல் சுக்கலாய் இருந்தது. எலி கடித்து ரெண்டொரு புழுக்கையையும் போட்டிருந்தது. காரினுள் எலியா? எப்படி? என்று யோசித்துக் கொண்டே காரிலிருந்து வெளியே வந்து ஒரு சுற்று காரை சுற்றிப் பார்த்தேன்.

வாட்ச்மேன் தெலுங்குக்காரர் “என்னா சார்?.”

“கார்ல எலி பூகுந்துருச்சுப் போல.. பேப்பரை எல்லாம் துண்டு துண்டா கடிச்சி வச்சிருக்கு” என்றேன்.

”ஆமா சார். ரேத்திரி பூரா குட்டிக் குட்டி எலிங்கு காரு மேல ஓடுதுங்க..இப்டிதான் என் வீட்டாண்ட ஒருத்தர் புது காரு. ஒரே நாத்தம் அடிக்குதேன்னு டிக்கிய தொறந்து பார்த்தா அழுகுன தக்காளி, முட்டை கோசு எல்லாம் போட்டு வச்சிருக்கு. வயரெல்லாக் கடிச்சி வச்சிருக்கு. பத்தாயிரம் ரூபாய் செலவு.” என்றார்.

ஒரு பக்க கதவு மட்டும் பிரச்சனை எனவே அதை சரி செய்ய ஜி.பி ரோடுக்கு போய் காட்டினேன். “ஒயரு மட்டும் போச்சுன்னா ஐநூறு ரூபா. மோட்டார் போச்சுன்னா.. 1500 என்றார். முதல் முறையாய் எனக்கு எலியைப் பற்றி கவலை வந்தது. திறந்து பார்த்து செக் செய்து “ஒயர் மட்டுமே” என்று சொல்லி “என்னா சார்.. எலி வந்திருக்குது. ரொம்ப டேஞ்சர் சார். அதுக்கு ஒரு மெடிசன் இருக்கு. அதை வாங்கி எலி உள்ளார பூருர வழியில கட்டி வச்சிரணும். அதுக்கு அப்புறம் வராது” என்றார்.

“அப்படியா விலை எவ்வளவு?”

“ஆயிரத்து எழுநூறு ரூபா சார்” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு டப்பாவை எடுத்து வந்து காட்டினார். அதில் போடப்பட்டிருந்த எலியின் சைஸ் பார்த்த போது ‘கெத்க்’என இருந்தது. அத்தனாம் பெருசு. “டிஸ்கவுண்ட் எதுவும் கிடையாதா” என்றேன்.

“சார் விலை பாருங்க 3400. நான் டிஸ்கவுண்ட் ரேட் தான் சொன்னேன்” என்று சிரித்தார் கடைக்காரர்.

இத்தனாம் பெரிய டிஸ்கவுண்டை நான் இது வரை வாங்கியதேயில்லை. இருந்தாலும் ஒரு சின்ன எலிக்காக இவ்வளவு செலவு செய்வதா? என்று யோசித்து பொறவு வாங்கிக்கிறேன்’ என்று சொல்லி ஐநூறோட போகட்டும் ஆண்டவா” என்று வேண்டி வண்டியை கிளப்பினேன்.

ரத்திரி மீண்டும் வண்டியை கொண்டு வந்து விடும் போது ஒன்றுக்கு இரண்டு முறை நான் கார் வைக்கும் இடத்தை சுற்றும் முற்றும் பார்த்தேன். சிறிது நேரம் அங்கேயே சத்தமில்லாமல் இருந்துப் பார்த்தேன். எலி ஏதாவது வருகிறதா? என்று. ஒரு பெருச்சாளி என் காலருகே மிக சாவதானமாய் கடந்து போனது. பதறியடித்து எழுந்தேன். “சார்.. அது ஒண்ணியும் பண்ணாதுசார்.. வயசான எலி” என்று தைரியம் சொன்னார் தெலுங்கு வாட்ச்மேன். “உங்க வண்டில ஏறுறது சுண்டேலி சார். குட்டி குட்டி” என்று கையை குவித்து காட்டினார். அவர் காட்டிய சைஸில் எறும்புதான் இருக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் என்றாலும், நம் வண்டியை பாதுக்காக்க இருக்கும் ஒரே ஆளை இழக்க விரும்பாமல். ஐம்பது ரூபாயை கொடுத்து, “எலி ஏதாச்சும் பக்கதுல வந்தா துறத்தி விடுங்க” என்று சொல்லிவிட்டு வந்தேன்.

அன்றைய இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. அடுத்த நாள் காலையில் போய் பார்த்தால் நிறைய எலிப் புழுக்கைகள் தெரிந்தது. ஒரு மாதிரி அசூசையானது. மீண்டும் க்ளீனிங். வண்டியை தெனம் எடுத்தா எலிக்கு பழக்கம் விட்டுப் போயிரும் என்றார் என் மனைவி. அன்றைக்குதான் மோடியை மிகவும் திட்டினேன். வேறு வழியில்லாமல் காரை எடுத்துக் கொண்டு போனேன். பார்க்கிற நண்பர்களிடமெல்லாம் ‘காருக்குள்ள எலி பூந்திருச்சு” என்று துக்கமாய் சொன்ன உடனேயே “இப்படித்தான் என் பிரண்ட் ஒருத்தர் காருல” என்று ஆளாளுக்கு எலி காருக்குள் பூகுந்ததை பற்றி கதை சொன்னார்கள். உடலெங்கும் வியர்வை பொங்க வைத்தது. இன்கம்மிங் அவுட்கோயிங் கால்களில் கூட நான் என் காரில் எலி புகுந்த கதை சொல்லாமல் விட்டதில்லை. மண்டை முழுக்க எலியே குறுக்கும் நெடுக்குமாய் ஓடிக் கொண்டிருந்தது. கூகுளில் தேடிய போது அய்யாயிரத்துக்கு எல்லாம் மருந்து போட்டிருந்தார்கள். கீழே அதன் விமர்சனங்களை பார்த்த போது எலியால் பிரச்சனைக்குள்ளானவர்களில் நான் மட்டும் தனியானவன் அல்ல என்று புரிந்தது.

வழக்கமாய் காலையில் எடுக்கும் போது ரிவர்ஸ் எடுக்க வேண்டாம் என்று நேராக காரை விட்டிருப்பேன். இன்றைக்கு அதை மாற்றி விட்டால் எலி தடுமாற வாய்ப்பிருக்கிறது என்று ஒரு ஐடியா உதித்து. காரை மாற்றி விட்டேன். பக்கத்து கார் காரரின் வீட்டின் கதவை தட்டி “உங்க காருல எலி தொல்லை எதாச்சும் இருக்கா?” என்று கேட்டுவிட்டு வந்தேன். ‘இல்லையாம்” . என் காரை விட உசத்தியான கார். லக்சரி கார். அவர் காருக்குள் போகாமல் என் போன்ற ஏழை க்விட் காரை ஏன் எலி தேர்தெடுத்தது என்று மனம் வெதும்பிப் போனேன்.

அடுத்த நாள் காலையில் மீண்டும் காரை செக் செய்யப் போயிருந்தேன். வழக்கமாய் எலி கக்கா போகுமிடமெல்லாம் எதுவும் இல்லை. சக்ஸஸ். எலியை ஏமாற்றிவிட்டேன். என்று இறுமாந்திருந்த நேரம் மிக சில நிமிடங்களே. காரின் பின் சீட் கீழே நிறைய எலி கக்காக்கள். க்ளீனிங் என் கண்ணீரோடு.

ஜி.பி.ரோட்டில் சொன்ன மருந்தை வாங்கி வச்சிரலாமா? என்று யோசித்துக் கொண்டிருந்த போது நண்பர் ஒருவர் போன் செய்திருந்தார். “சார்.. ரெண்டு நாளா எப்ப போன் பண்ணாலும் எலி எலின்னு இம்சை பண்ணிட்டேயிருந்தீங்க இல்லை. அதுக்கு ஒரு ரெமிடி நம்ம ப்ரெண்ட் யூஸ் பண்ணி சக்ஸஸ் ஆயிருக்கு” என்றார். மனதில் எலி பாஷாணத்தை வார்த்தார்.

“என்ன என்ன அது?’ என்றேன் ஆர்வத்துடன்.

”பொகையில சார். பொகையில பாக்கெட்ட வாங்கி எலி புழங்குற எடத்துல வச்சா எலி வராது” என்றார். பொகையில வாங்குறது எல்லாம் பெரிய மேட்டரா என்று நினைத்தது தவறு என்று புகையில வாங்க போகும் போதுதான் தெரிந்தது. பாம் உதிரி பொருட்களைக்கூட வாங்கிவிடலாம் போல புகையிலை வாங்க பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது.

புகையிலை பொருட்களை அரசு தடை செய்திருக்கிறதாம். அதனால் விற்பதில்லை என்று கடையில் போய் கேட்ட மாத்திரத்தில் நிர்தாட்சண்யமாய் இல்லை என்றார்கள். வழக்கமாய் வாங்குகிறவர்கள் வந்து கேட்ட போது ஜாடையாய் கண் காட்டி எல்லாம் பேசினார்கள். அத்தனை கெடுபிடி. ஒரு வழியாய் நண்பர் ஒருவரின் இன்ப்ளூயன்ஸை வைத்து ரெண்டு பாக்கெட் பன்னீர் புகையிலை வாங்கி டாஷ்போர்டில் வைத்துவிட்டேன். தொடர்ந்து ரெண்டு நாள் கண்காணிப்பு வேறு. அங்கொன்றும் இங்கொன்றுமாய் எலி கக்காக்கள் தெரிந்தது. அது காய்ந்திருக்கும் நிலையை வைத்து புதுசா பழசா? என்று கண்டுபிடிக்கும் அளவிற்கு எலிப் புழுக்கை ஸ்பெஷலிஸ்ட் ஆகிவிட்டேன். மேலும் நான்கு புகையிலை பாக்கெட்டை வாங்கி எலி வரும் வழிக்கான எடங்களில் எல்லாம் கட்டி தொங்க விட்டு விட்டேன். எலி வருவதில்ல.

நேற்று நண்பர் ஒருவர் போன் செய்தார். ‘சார் வண்டிக்குள்ள எலி “ என்று புலம்ப ஆர்மபித்தார். “டோண்ட் ஒர்ரி. நான் ஹெல்ப் பண்ணுறேன்’ என்றேன். எலி மூர்த்தி சின்னதாய் இருந்தாலும் கீர்த்தி பெருசுதான்.

May 13, 2019

சாப்பாட்டுக்கடை -கும்பகோணம் சுப்பையா மெஸ்ஒரு காலத்தில் பவன் என்று சைவ ஓட்டல்களுக்கு பெயர் வைத்தால் பெரிதாய் கல்லா கட்டலாம் என்று நினைத்து ஏகப்பட்ட பவன்கள் திறந்தார்கள். அதில் தரமானது மட்டுமே நிலைத்திருக்க மற்றவை வழக்கம் போல.  அது போலத்தான் மெஸ் எனும் தாரக மந்திரத்தை தற்போது யார் வேண்டுமானாலும் வைத்து பணம் பண்ண பார்க்கிறார்கள். ஆனால் இங்கேயும் அதே விஷயம் தான் தரமும் பணமும் மட்டுமே மெஸ்ஸின் எதிர்காலத்தை நிர்ணையிக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வளசரவாக்கத்தில் ’கும்பகோணம் சுப்பையா மெஸ்” என்ற பெயர் பலகை என் ஆர்வத்தை தூண்டியது.

முழுக்க முழுக்க சைவ மெஸ். காலையில் பேக்கேஜாய் பூரி, பொங்கல், இட்லி, வடை, கல்தோசை என வரிசைக்கட்டி டிபன் வகைகள். இரண்டு இட்லி, ஒரு வடை, ஒரு பூரி, கொஞ்சம் பொங்கல் இது 45 ரூபாய்க்கு மினி டிபனும்,  மதியம் 60 ரூபாய்க்கு அட்டகாசமான அன்லிமிடெட் மீல்ஸ். ஒரு கூட்டு, பொரியல், அப்பளம், சாம்பார், ரசம், காரக்குழம்பும், மோர் என சுவையான சாப்பாடு.  அதுவும் ஏசி ஹாலில். பொரியல் வகைகள் நாளுக்கு நாள் மாறுகிறது.


வெஜிட்டேரியன் சாப்பாடு அதுவும் மெஸ்களில் அத்தனை சிலாக்கியமாய் இருப்பதில்லை. அப்படியே இருந்தால் வெஜிட்டேரியன் சாப்பாடு நூறுக்கு குறைவில்லாமல் போய்விடுகிறது. அந்த வகையில் நல்ல தரமான குழம்புவகைகளுடன், வயிற்றைக் கெடுக்காத நல்ல சைவ சாப்பாடு விரும்பிகளுக்கு  ஐ ரெக்கமெண்ட் 

கும்பகோணம் சுப்பையா மெஸ்
25. வெங்கடேஸ்வரா நகர்
பிருந்தாவன் நகர் 2வதுதெரு.
வளசரவாக்கம்.
சென்னை 87
9585551045

May 3, 2019

உறுத்தல் - விகடன் சிறுகதை.


பாத்ரூமிலிருந்து பாவாடையை மார்பு வரை மேலேற்றிக் கட்டிக் கொண்டாள் தமயந்தி. தலையின் ஈரம் போக துண்டைக் எடுத்து கட்டியபடி, கண்ணாடியில் முகம் பார்த்தாள். ’கருப்பென்னடி கருப்பு. பெருமாள் கூட கருப்புத்தான். ஒலகமே அவன் காலடியில கிடக்கலை. அதும் போல என் தமயந்தி காலடில கிடக்க ஒருத்தன் வராமயா போயிருவான்?” செத்துப் போன லெட்சுமி பாட்டியின் குரல் ஏனோ நியாபகத்துக்கு வந்தது. வாசலில் காலிங் பெல் சத்தம் கேட்க “சுபா.. யாருன்னு பாரு?” என்று உள்ளிருந்து ஹாலில் டேப்பில் செஸ் ஆடிக்கொண்டிருக்கும் தன் மகளுக்கு குரல் கொடுத்தாள். பரபரவென நெஞ்சிலிருந்த பாவாடையை இடுப்பில் கட்டி, உள்பாடி, ஜாக்கெட்டை போட்டு, சட்டென புடவைக் கட்டி, மீண்டும் ஒரு முறை கண்ணாடி பார்த்து ஸ்டிக்கர் பொட்டை எடுத்து நெற்றியில் வைத்துவிட்டு திரும்பிய போது சுபா கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்து “யாரோ சுந்தர்னு ஒரு அங்கிள் வந்திருக்காரு” என்றாள்.

சுந்தர் என்று கேட்ட மாத்திரத்தில் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள். சுந்தர் மாமாவே தான். நெஞ்சமெல்லாம் படபடவென அடித்தது.
@@@@@@@@@@@@@@@

”நல்ல பையன். அற்புதமான நளபாகக்காரன். நல்ல சம்பாத்தியம். அப்பா இல்லாம வளந்தவன். கொஞ்சம் தடித்தனமா வளர்ந்துட்டான். ஏண்டா இப்படி இருக்கேன்னு கூப்டு கண்டிச்சேன். எனக்குன்னு ஒருத்தி இருந்தா நான் ஏன் இப்படி  இருக்கப் போறேன்னு அழுதான்.  அதும் சரிதான்னு உன்னை கண்டு பிடிச்சுட்டேன். நீ தான் அவனை வழிக்கு கொண்டு வரணும். என்னடா நடராஜா சொல் பேச்சு கேட்டு நடக்குறியா?” என்று நடராஜனைப் பார்த்து கேட்ட போது முப்பத்தைந்து வயது நடராஜன் வெட்கப்பட்டான். அவனின் வெட்கத்தைப் பார்த்து அனைவரும் சிரித்தனர்.
@@@@@@@@@@@@@@@@@@@

”வாங்க மாமா எப்படி இருக்கீங்க?”

”ம்..” என்று சொன்ன மாமாவின் குரல் கரகரவென மாறியிருந்தது. பதினைந்து வருடம் ஆகிவிட்டது. சுபா உள்ளேயிருந்து டம்பளரில் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள். அவளை ஏற இறங்கப் பார்த்தார். பார்ப்பதற்கு தமயந்தி போல் இல்லாமல் நல்ல மாநிறத்தோடு, சற்றே கூர்மையான நாசியுடன் பதிமூன்று வயதுக்கு கொஞ்சம் அதிகமாகவே வளர்ந்திருந்தாள். முட்டிவரை த்ரீபோர்த்தும், கொஞ்சம் இறுக்கமான டி சர்ட்டும் வளர்த்தியாகவே காட்டியது.

“பேரு சுபாஷிணி. பத்தாவது படிக்கிறா”

தமயந்தியின் குரல் கேட்டு கலைந்து  “ம்ம்.. “ என்றார்.
பக்கத்தில் அழைத்து உட்கார வைத்து அவளையே பார்த்தார். தலை தடவி “நல்லாரு” என்றார்.
@@@@@@@@@@@@@@

“ஏதோ வாசனை வர்றதே..? குடிச்சிருக்கீங்களா?”
“குடியா .. சே..சே. என் கண்ணாட்டி செல்லம். அதெல்லாம் விட்டொழிச்சாச்சு. உனக்காக. பர்ஸ்ட் நைட். லைட்டா சின்ன பாட்டில் பியர் மட்டும்” என்றபடி லைட்டை ஆஃப் செய்துவிட்டு, இன்னும் நெருக்கமாய் அவளருக்கில் வந்து உட்கார்ந்தான்.  அவன் மூச்சுக் காற்றில் வந்த வாசமும், அவனின் நெருக்கமும் ஏனோ தெரியவில்லை தமயந்திக்கு பயத்தை கொடுத்தது. ஜன்னல் கதவு திறந்திருக்க, முகத்தில் நிலவின் வெளிச்சம் விழுந்தது. “என் கருப்பு கண்ணாட்டி ஜொலிக்கிறா?’ என்று அவளின் மீது படர்ந்தான். மூர்கமாகி, உடை கூட களைக்காமல் இயங்கினான். கட்டிலின் சத்தம் அந்த இருட்டு அறையில் ஓங்காரமாய் கேட்க, “அய்யோ. சத்தம் கேட்குது.. சத்தம் கேட்குது” என அவன் காதில் கிசுகிசுப்பாய் கத்தினாள். அவன் கேட்காமல் மேலும் இயங்க. அவனைத் தள்ளிவிட்டு கட்டிலிலிருந்து எழுந்து கீழே இறங்கி நின்றாள். நடராஜனுக்கு கோபம் வந்து, மூர்க்கமாய் அவளை அறைந்து, கட்டிலின் மேல் கிடத்தி தொடர்ந்தான். கட்டிலின் சத்தம் இப்போது இன்னும் அதிகமாய் கேட்க தமயந்தி அழுது கொண்டேயிருந்தாள்.
@@@@@@@@@@@@@@@@@@@

”பதினைஞ்சு வயசு இருக்குமா? இவளுக்கு?”

“சரியா பதினைஞ்சு. வீட்டுல மாமி எப்படி இருக்காங்க?”
“ம்ம்ம்.. அவளுக்கென்ன.. வயசிலேயே கோயில் குளம்னு சுத்திட்டிருப்பா..இப்ப கேட்கவா வேணும்.’
@@@@@@@@@@@@@@@@

“என்னா கண்ணுடி. இவளுக்கு. அப்படியே அப்பனை உரிச்சு வச்சிருக்கு. என் கண்ணே பட்டுரும்.” ஆஸ்பத்திரியின் குழந்தையை பார்த்த மாத்திரத்தில் சுந்தரின் மனைவி சொல்லியபடி, திருஷ்டி சுற்றினாள்.

“மாமா” என்றழைத்த தமயந்தியின் குரல் பலவீனமாய் இருந்தது.
என்ன என்பது போல திரும்பிப் பார்த்தார். “இனிமேலாவது அவரை குடிச்சிட்டு வர வேண்டாம்னு சொல்லிப் பாருங்களேன்.”
அதெல்லாம் இனிமே தானா குறைஞ்சிரும் பாரேன். குழந்தைக்கு இன்பெக்‌ஷன் வந்திரும் அது இதுன்னு சொல்லி பயப்படுத்தினாலே போதும். எத்தனையோ மொடாக் குடிகாரன் எல்லாம் பெத்த பொண்ணுக்காக தலைகீழா மாறியிருக்கான். இவன் எம்மாத்திரம்?” என்றாள் சுந்தரின் மனைவி.

குழந்தையின் கையை தொட்டுத் தொட்டு பார்த்துக் கொண்டேயிருந்தான் நடராஜன். முகமெல்லாம் சந்தோஷம். கையில் வைத்திருந்த காசையெல்லாம் சாக்லெட்டுகளாய் மாற்றி ஹாஸ்பிட்டலில் இருந்த அனைவருக்கும் ‘எனக்கு பொண்ணு.. எனக்கு பொண்ணு பொறந்துருக்கு’ என சொல்லிக் கொண்டே கொடுத்தான்.

“மாறிருவான் தான் போல இருக்கு” என்று தமயந்தியைப் பார்த்து சிரித்தபடி சொன்னார் சந்துரு . அவர் குரலில் இருந்த நம்பிக்கை தமயந்திக்கும் தொற்றியது.

குழந்தை வீட்டுக்கு வந்த பத்தாவது  நாள் நடராஜன் மீண்டும் குடித்துவிட்டு வந்தான். குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்படியே அவளின் மடி மேல் சாய்ந்து பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தையை முத்தமிட வந்தான். அவனை அப்படியே எக்கித் தள்ளினாள் தமயந்தி. போதையில் இருந்ததால் தடுமாறி சுவற்றில் மோதி விழுந்தான். கோபத்தோடு எழுந்து “என் கொழந்தைய நான் தொடக்கூடாதா?” என்று அவளின் மடியிலிருந்து பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தையை பிடுங்கினான். அதை எதிர்பாராத தமயந்தி சட்டென சுதாரித்து, குழந்தையை தன் பக்கம் இழுக்க, குழந்தை அத்தனை வன்முறையை எதிர்பார்க்காமல் வீரிட்டு அலறியது. “விடுங்க. விடுங்க.. குழந்தைய நானே தர்றேன்.’ என்று சொல்லி அவளின் பிடியை லேசாய் விடுவிக்க, அதை எதிர்பார்க்காத நடராஜன் குழந்தையோடு மடேலென்று மல்லாக்க விழுந்தான். குழந்தை சுவற்றில் மோதி அழுகையை நிறுத்தியது. அதன் பிறகு அழவேயில்லை.

”என் குழந்தைய நான் தான் கொன்னுட்டேன். என்னை மன்னிச்சிரு..மன்னிச்சிரு” என தமயந்தியின் கால் பிடித்து அழுத நடராஜனை பார்க்க சகிக்கவில்லை. தமயந்தி அவனை பார்க்கப் பிடிக்காமல் அங்கிருந்து எழுந்து “மாமா எனக்கு இங்கிருக்க பிடிக்கலை. உங்க வீட்டுல எனக்கு இடமிருக்குமா?” என்றவளின் கண்களிலிருந்து தாரைத் தாரையாய் கண்ணீர் வந்து கொண்டிருந்தது. சுந்தர் மாமா நிமிர்ந்து பார்த்து, ‘அவளை கூட்டிட்டு போ’ என்றார் மனைவியைப் பார்த்து.

‘தமயந்தி.. செல்லம் என்ன விட்டு போய்டாதடீ.. நான் தப்பு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிரு’ என்று மூக்கில் சளி ஒழுக அழுத நடராஜனைப் பார்க்க அனைவருக்குமே பரிதாபமாய் இருந்தது.
பெத்த குழந்தையை பறிகொடுத்தவ.. புருஷனே ஆனாலும் எப்படி பார்ப்பா? வயிறு பதறாது?” என்று அவள் போவதையே பார்த்த சுற்றம் உள்ள பெண்கள் பேசினார்கள்.
@@@@@@@@@@
”என்ன விஷயம் மாமா? இத்தன வருஷத்திற்கு பிறகு தேடிக் கண்டுபிடிச்சி வந்திருக்கீங்க?”
”ம்ம்க்கும்.. ம்ம்ம்க்கும்’ என்று தேவையில்லாமல் கனைத்தபடி சுபாஷிணியைப் பார்த்தார்.
“கண்ணு.. பக்கத்து ரூமுல இரு. அம்மா பேசிட்டு வர்றேன்” என்றவுடன் சுபாஷிணி எழுந்துப் போனாள்.
“நான் உன்னை வந்து பாத்திருக்கணும். இன்னைக்கு தேடி அலைஞ்சாப் போல தேடியிருக்கணும். தப்பு பண்ணிட்டேன்.” என்றவரின் கண்களில் கண்ணீர் வழிந்தது. தமயந்தி சிறிது நேரம் அவர் அழுவதையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவர் அழுகை நிற்கின்ற வழியாய் தெரியாததால், அவர் அருகில் வந்தமர்ந்து மாமாவின் கையை தன் கையில் எடுத்து வைத்துக் கொண்டாள். “ஏன் என்ன ஆச்சு திடீர்னு?”
@@@@@@@@@@@@@@@@@@
”என்னால முடியலை மாமா. அவன் நடவடிக்கைக்கு நானாச்சுனு சொல்லித்தான் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தீங்க. நல்ல சம்பளம். நல்லா ஜம்முனு இருக்கான்னுதான் என் அண்ணன் சரின்னான். அவன் என்ன செய்வான்? அட்டக்கருப்பியா ஒரு தங்கச்சியை எத்தன வருஷம் வச்சி காப்பாத்துவான்?. ஆனா உங்களைப் பார்த்த போது எனக்கு நம்பிக்கை வந்திச்சு. நீங்க தான் சொன்னீங்க. நான் சொல்லுறேன் அவன் சரியாயிருவான். நீ தான் அவனை திருத்தணும்னு சொன்ன போது நான் நம்பினேன். குழந்தைப் போன போது எத்தனை அழுகை. மன்னிப்பு. கால்ல விழறது. எல்லாம். அந்த ரோஜாப் பூ கையை விரிச்சு என் மார்ல தடவுன ஸ்பரிசம் கூட மறக்கலை. போயிட்டா.  நீங்க அத்தனை சொன்னதுனாலத்தான் வீட்டுக்குப் போனேன். நீங்க சொல்லி நான் கேட்காம இருந்திருக்கேனா? . திரும்ப அதே குடி. கேட்டா பொண்ணு நியாபகம்ங்கிறான். வலிக்க வலிக்க பெத்தவளுக்கு இல்லாத வருத்தம் இழுத்து சுவத்துல அடிச்சி கொன்னவனுக்க்கு எங்கேர்ந்து வந்திச்சு?. கை நிறைய காசு இருக்கு. சம்பாரிச்சதை குடிக்க குழந்தைனு காரணம் இருக்கு. வீட்டுக்கு வந்தா தெனமும் படுத்து எழ நானிருக்கேன் வேற என்ன வேணும் இந்த ஆம்பளைக்கு?. எனக்கு பிடிக்கலை வேண்டாம்னு சொன்னா? செத்துப் போனவளை திரும்ப கொண்டு வரணுமாம். திரும்ப சுவத்துல அடிச்சு கொல்றதுக்கா?.

நான் மட்டும் சுமாரான கலரோட இருந்திருந்தா ஒரு மெடிக்கல் ரெப்போ, சேல்ஸ் மேனோடயோ நிம்மதியா ஒண்டு  குடித்துனத்துலயாவது நல்லா வாழ்ந்திருப்பேனில்லை. கருப்பா பொறந்து யார் ஒத்துகுறானோ அவனுக்கு கழுத்த நீட்டணும்னு விதி. அனுப்பிவிட்டுறணும்னு உடன் பொறந்தவனுக்கு கட்டளை. கருப்பா இருந்தாத்தான் என்ன? எனக்கு மனசில்லை? கருப்பா இருக்குற என்கூட படுத்தாலும் சந்தோஷமாத்தானே இருக்கே?. முடியலை. என்னைக் கொஞ்சம் சந்தோஷமா வச்சிருந்தா நான் அவனை எத்தனை சந்தோஷமா வச்சிருப்பேனு அவனுக்கு தெரியலை. அப்படி தெரியாதவனோட அவன் சந்தோஷத்துக்காக மட்டும் படுத்து புள்ள பெத்துக்க முடியாது. முகத்தைகிட்டப் பார்க்கும் போதெல்லாம் ரத்தமாயிருக்கு அவன் முகம். என்னை அங்கே போகச் சொல்லாதீங்க. ப்ளீஸ்.” என்று அழுதபடி சுந்தரை அணைத்து குலுங்கி அழ ஆரம்பித்தாள் தமயந்தி. சுந்தர் அமைதியாய் அவளின் அழுகை முடியும் வரை காத்திருந்தார்.
@@@@@@@@@@@@@@@@@
”நீ ஏன் யார் கண் காணாம எல்லாத்தையும் விட்டுட்டு போனே? என்னாச்சுன்ன்னு எல்லாரும் கேட்டுக்கிட்டே இருந்தாங்க. நடராஜன் உன் அண்ணன் வீட்டுக்கு எல்லாம் போய் தகராறு பண்ணி, போலீஸ் கேஸ் ஆகி பெரிய பிரச்சனை ஆகியிருச்சு. வடநாட்டுக்கு சமையல் வேலைக்கு போறேன்னு அவனும் கிளம்பிட்டான். அப்புறம் எனக்கும் டச்சு விட்டுப் போச்சு. திரும்ப வந்ததுக்கு அப்புறம் எப்பயாச்சும் போன் பண்ணி பேசுவான். போன வாரம் குடிச்சு குடிச்சே  போய் சேர்ந்துட்டான்.  அவனுக்கு ஒரு பொண்டாட்டி இருக்கா? அவளுக்கு தகவல் சொல்லணுமில்லையா? தேட வேணாமான்னு புலம்பிட்டேயிருந்தா என் பொண்டாட்டி. எதுக்கு சொல்லணும்னு தோணிச்சு.  யாரும் வேண்டாம்னு இத்தனை வருஷமா கல்லு மாதிரி மனசை வச்சிட்டு எங்கேயோ நல்லாருக்கான்னு நினைச்சிட்டிருந்தவளை ஏதுக்கு போய் தேடி கண்டுபிடிச்சு உன் புருஷன் செத்துட்டான்னு சொல்றதுனால என்ன கிடைக்கப் போவுதுனு தோணிச்சு” தமயந்தியின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டார்.

“உன் பொண்ணு போட்டோவை எப்.பில பார்க்குற வரைக்கும். செஸ் டோர்ணமெண்டுல ஸ்டேட் லெவல் வின்னர்னு என் தம்பி பொண்ணு காட்டினா. அவளுக்கு மியூச்சுவல் ப்ரெண்டாம். உன்னை தேடியிருக்கணும். யாருக்காக இல்லாட்டியும் எனக்காக உன்னை தேடியிருக்கணும். தப்பிக்கிறதா நினைச்சு தள்ளிப் போட்டுட்டேன். அது கில்ட்டா அறுத்துட்டேயிருக்கு. போட்டோல உன்னையும் பொண்ணையும் பார்த்ததும் உறுத்தல் தாங்கலை. என்னாலதானா?”  என்று குலுங்கி அழ ஆரம்பித்தார் சுந்தர்.

”ஸ்…ஸ்.. அழாதீங்க. சுபாஷிணிக்கு எதுவும் தெரியாது. அவளைப் பொறுத்த வரைக்கும் அவளுக்கு அப்பாவே இல்லை. உறவுன்னு மொத முறை ஒருத்தர் இங்க வந்திருக்கிறது நீங்கதான்.  வளர்ந்து நிக்குற பொண்ணு. அவளுக்கு புரியும். ஆனா ஏதும் கேட்க மாட்டா. அழுத்தம். நிதானம். தைரியம்  உங்களைப் போல.”

சுந்தர் கலங்கிய கண்களோடு தமயந்தியை நிமிர்ந்து பார்த்தார்.

நடராஜன் எனக்கு பண்ணதுக்கு உங்களண்ட எத்தனை அழுகை. எத்தனை திட்டு. எத்தனை வருத்தம். எதுக்காச்சும் நீ யாருடி என்னை கேள்வி கேட்கனு ஒரு பார்வை, ஒரு சுடு சொல் சொல்லியிருப்பீங்களா?.  என்ன சொன்னாலும், எது நடந்தாலும் நானிருக்கேன் உனக்குனு அழுது முடியற வரைக்கும்  தோள் கொடுக்குற ஆம்பள பொம்பளைக்கு எத்தனை தைரியம். பாதுகாப்பு. நம்பிக்கை தெரியுமா?. அது அத்தனையும் எனக்கு உங்ககிட்ட மட்டுமே  கிடைச்சது. நமக்குள்ள அது நடந்திருக்கக்கூடாது. பட் வருத்தமெல்லாம் இல்லை. என்னைக்கு உங்களோட அன்பு, தைரியம், பாதுகாப்பு நம்பிக்கை எனக்குள்ள வளர ஆரம்பிச்சிச்சோ அன்னைலேர்ந்து எனக்குள்ள அசாத்ய நம்பிக்கை. நீங்களே என் கூட இருக்குறா மாதிரி.

”ரெண்டு பேருக்கும் உறுத்தக்கூடாதுன்னுதான் நான் காணாமப் போனேன். நான் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்குற மொத ஆள் நீங்கதான். சுபாஷிணியும் நானும் சந்தோஷமா, நிம்மதியா இருக்கோம். அது அப்படியே இருக்கணும்னுதான் நீங்களும் நினைப்பீங்க. நினைக்கணும் அதான் ரெண்டு பேருக்கும் நல்லது. இருங்க காப்பி எடுத்துட்டு வர்றேன். சாப்பிட்டு கிளம்புங்க” என்று சுந்தரின் கண்களை தன் கையால் துடைத்து, அவரை அணைத்து பெருமூச்சு விட்டு சமையல் அறைக்குள் சென்று காப்பி எடுத்து வந்த போது சுந்தர் கிளம்பியிருந்தார்.