Thottal Thodarum

Mar 30, 2019

நிகழாமல் போன அற்புதம் சூப்பர் டீலக்ஸ்


தமிழ் சினிமாவை தற்போதைய வகைப்படி ரெண்டாக பிரிக்கலாம். சோஷியல் மீடியாவுக்கு முன்/ சோஷியல் மீடியாவுக்கு பின் என. ஆரண்ய காண்டம் திரைப்படம் இண்டர்நெட் 1 ஜிபி 300 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த காலத்தில் வெளிவந்தது. அதனால் இத்தனை விந்தோதுதல்கள் இல்லாமல், உனக்கு தெரியலைன்னா உன் பொண்டாட்டி பத்தினி இல்லை என்று சபிக்காமல்,  சரியான வகையில் எடுத்துக் கொள்ளப்பட்டு கொண்டாடப்பட்ட படம் தான். அது தான் ஓடவேயில்லையே அப்புறம் என்ன கொண்டாடப்பட்டது என்று சொல்கிறீர்கள் என்றால் கொண்டாட்டம் என்பது அதன் வியாபாரத்தை வைத்து அல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். லெளகீகத்தை வைத்து பேசினால் நிச்சயம் தயாரிப்பாளரின் டார்க் கதையைப் பற்றியும் பேச வேண்டும். அது படைப்பிற்கு தேவையில்லாத ஒன்று.

சினிமாவாக எனக்கு மிகவும் பிடித்த படம் ஆரண்ய காண்டம். தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த வித்யாசமான கதை சொல்லல் கொண்ட படம்.  குவாண்டின் படங்களில் வரும் நீண்ட ஷாட்கள். ஷார்பான ப்ளாக் ஹூயூமர். சம்பந்தமேயில்லாத பேச்சு. பின்னணி பாடல்கள் வித்யாசமான மேக்கிங் என அத்தனை விஷயங்களிலும் இன்ஸ்பயர் செய்த படம். அதைப் பற்றி என் வலைப்பூவில் விரிவாக எழுதியிருந்தேன்.  சரி நாம நிகழாமல் போன அற்புதம் குறித்து பேசுவோம்.

சூப்பர் டீலக்ஸை ஏன் நிகழாமல் போன அற்புதம் என்று சொல்ல வருகிறேன்?. காரணம் ஒன்றே ஒன்று தான் எங்கேயும் இக்கதைகள் எனக்குள் நிகழ வேண்டிய அந்த அற்புத தருணத்தை நிகழ்த்தவே இல்லை. அதுதான் காரணம்.

நான்கு கதைகள். கல்லூரி காதலன். கட்டாயத் திருமணம். காதலி அவனை வீட்டுக்கு போன் பேச்சில் அழைக்கிறாள். பேச்சு உடலுறவாகிறது. இரண்டாவது முறை ட்ரை செய்ய அவள் விழையும் போது அவன் மார்படைத்து இறக்கிறான். கள்ளக்காதலனோடு மாட்டினாலே பிரச்சனை இதில் அவன் மேட்டருக்கு பிறகு மர்டராகிப் போயிருக்கும் பட்சத்தில் எத்தனை பிரச்சனை? கிட்டத்தட்ட வீட்டில் வந்து போகும் காதலனை துண்டு துண்டாய் பிரியாணி சமைத்துப் போடும் கதை ஒன்றை நலன் குமாரசாமி எழுதி, குமாரராஜா இயக்கிய X எனும் அந்தாலஜி படம் நியாபகம் வருகிறது.

ஏழரை வருடங்களுக்கு முன் வீட்டை விட்டு ஓடிப் போன கணவன் திரும்ப வரப் போகிறான் என்று குடும்பமே காத்துக் கொண்டிருக்கிறது. அவனது பிள்ளை உட்பட. அவன் அவளாக உருமாறி வருகிறான்.

நான்கு பதின்பருவத்து பையன்கள். திருட்டுத்தனமாய் பிட்டு படம் பார்க்க வீட்டில் ப்ளான் போடுகிறார்கள். அதில் வரும் ஒர் பிட்டு படத்தில் பையன்களில் ஒருவனின் அம்மா நடித்திருக்க, டிவி உடைபடுகிறது. ஒடைந்த டிவியை ரீப்ளேஸ் செய்ய வேண்டும்.

தனசேகரன். எத்தனையோ லட்சம் பேர் சுனாமியில் இறந்திருக்க, பிழைத்த ஒருவன். தான் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று நம்பி ஆசீர்வாதம் ஆனவன். இக்கதையில் வரும் இணைப்பு கேரக்டர்களான லீலா தான் பதின்பருவ பையனின் பிட்டு பட அம்மா. அவனுடய தகப்பன் இந்த தனசேகரனான அற்புதம். மற்ற மூன்று கதையை இணைக்கும் பெர்லினெனும் இன்ஸ்பெக்டர்.

அற்புதங்கள் நிகழக்கூடிய கதைக்களன் தான். எங்கே நிகழாமல் போனது? அக்கதைகளில் வரும் நம்பகத்தன்மை இன்மையால். அதற்கு முக்கிய காரணம் கதை நடக்கும் இடம். காலமென ஆரம்பிக்கும் முதல் குழப்பங்கள். கேட்டால் சென்னை என்பீர்கள் என்றால் சென்னையின் அடையாளங்கள் எதையாவது சொல்லுங்கள்.

காதலனுடனான உறவு. மரணம். நிச்சயம் பதட்டத்தின் உச்சத்தில் முக்கியமாய் கணவனுக்கு தெரியாமல் மறைக்க வேண்டிய கட்டாயம் வேம்பூவுக்கு இருக்கிறது. மறைக்கிறாள். ஆனால் புருஷன் ப்ரிட்ஜில் பொணத்தைப் பார்த்ததும், வெறும் சத்தமான ஃபக் மட்டுமே அவனது அதிர்ச்சியாய் இருப்பதும், கீழ் வீட்டிலிருந்து வரும் உறவினர்கள் இருக்கும் போதே உடலை துண்டு துண்டாய் அறுக்க பிணத்துடன் கறி வெட்டும் கத்தியோடு மிகச் சாதாரணமாய் கணவன் விவாதிப்பது ஏன்? எதற்கு? எப்படி?. நிச்சயமாய் வீட்டிற்கு வந்த விருந்தாளி மரணம் அடைந்துவிட்டான் என்று போலீஸில் சொன்னால் கூட கொலை கேஸாகாது. அது மட்டுமில்லாமல் கிரிமினலாய் யோசிக்க வேண்டிய கட்டாயம் வேம்பூவுக்கு வேண்டுமானால் இருக்கலாம். கணவனுக்கு இருக்க வேண்டிய அவசியம்?.  

மேட்டர் பண்ணிட்டேன் என்று வேம்பூ சொல்லும் போது தியேட்டரில் அத்தனை சந்தோஷமாய் சிரிக்கிறார்கள். ப்ளாக் ஹூயூமர். பட் அந்த காட்சியில் நாயகனின் அதிர்ச்சி ரிஜிஸ்டர் ஆகாமல் வெறும் ஃபக்கோடு போகிறது, சரி புருஷன் மனைவியின் துரோகத்துக்கு உதவுகிறான் என்றாலும், வீட்டில் வந்திருக்கிற கீழ் வீட்டு உறவினர்கள் போவதற்குள் பிணத்தை அறுக்க, டிஸ்பொஸ் செய்ய வேண்டிய அவசியம் தான் என்ன? இவர்கள் எழுதிய கதைக்காக திணிக்கப்பட்டவுடன் அங்கே நிகழ வேண்டிய அற்புதம் மிஸ்ஸாகிறது.

ஷில்பாவாக வரும் மாணிக்கம். குடும்பம் அதிர்ச்சியாகிறது. அதிலிருந்து மீள என்ன செய்யப் போகிறது? என்று யோசிப்பதற்குள் மகனின் பள்ளிக்கு கிளம்புகிறாள். ஏன் என்றால் அப்படிப் போக வேண்டும் என்று எழுதப்பட்டாகிவிட்டது. ஷில்பாவும், ராசுக்குட்டியும் க்ராஸ் செய்யும் சந்து எங்கே இருக்கிறது? அங்கே ஏன் பொதுக்கக்கூஸு? அத்தனை கூட்டம்? அது என்ன மாதிரியான இடம்?. எதற்காக அந்த வழியாய் போக வேண்டும். ஏன் ஜிப்பு ராசுகுட்டியின் லுல்லாவில் மாட்ட வேண்டும். அவன் முன்னால் எதற்கு ஷில்பா உட்கார வேண்டும்.?. இத்தனையும் போலீஸ் ஸ்டேஷனில் அவளை உட்கார வைக்க வேண்டும் என்று எழுதப்பட்டதால் இயல்பாய் நடக்க வேண்டிய அற்புதம் மிஸ்ஸாகிறது.

விடலைப் பருவப் பசங்க பிட்டு படம் பார்க்குறதுக்கு ஒண்ணு சேர்ற எடம். இயல்பு. ஆனால் அதை சிடி வாங்கிப் போட்டு ஒண்ணா பாக்குறாங்கன்னு சொல்ல ஆரம்பிச்சப்ப திணிக்கப்படுற விஷயம். ஏன்னு கேட்டா 3டில பாக்குறதுக்காகனு சொன்னதும் அது சாதாரண எல்.ஈ.டி டிவி தானே? அதுல எங்க 3டி இருக்கு? டிவிடில எப்படி 3டி மேட்டர் வீடியோ வரும்? சரி அப்படியே வந்தாலும் அது எப்படி 50 ரூபாய்க்கு கிடைக்கும் என்கிற கேள்விகள் எழும் போதே சுவாரஸ்யம் போக ஆரம்பிச்சது. ஆனானப்பட்ட பர்மா பஜாரிலேயே இன்றைக்கு பிட்டு படம் விற்பனை  ஹார்ட் டிஸ்கிலேயோ, பென் ட்ரைவிலோ விற்க ஆரம்பித்துவிட்டர்கள். இன்னமும் சொல்லப்போனால் மெயில் ஐடி கொடுத்தால் கூகுள் ட்ரைவில் அனுப்பும் ஆட்கள் எல்லாம் வந்துவிட்ட காலத்தில் பிட்டு படம் விற்கும் கடை செட்டப்பே திணிப்பு. அதில் விற்பனை அக்கா. அதை விட திணிப்பு.  பின்பு அந்த பசங்க கொலை செய்யுற அளவுக்கு எல்லாம் போகறதுனு வர ஆரம்பிச்சதும் மொத்தமா வேடிக்கைப் பார்க்குற மனநிலைக்கு வந்து க்ளைமேக்ஸ் ஏலியனா வரும் போது அங்கே நிகழ இருந்த மொத்த அற்புதமும் காணாம போயிருச்சு.

கதை முழுவதும் ஒரே நாளில் நடக்கிறது. இறந்த காதலனின் உடலை டிஸ்போஸ் செய்ய அலையும் போது இன்ஸ்பெக்டர் பெர்லின் அதை வாட்ச் செய்கிறான். பின் தொடர்கிறார். அதே நாளில் இன்ஸ்பெக்டர் காலையில் வேட்டி சட்டையோடு போலீஸ் ஸ்டேஷனில் ஷில்பாவோடு வல்லுறவு கொள்கிறார். பின்பு அதே ஸ்டேஷனில் போலீஸ் யூனிபார்மோடு பிள்ளையை தொலைத்துவிட்டு வரும் ஷில்பாவிடம் மீண்டும் உறவு வைக்க முயன்று அடிபடுகிறார். இதற்கிடையில் பையன்கள் ஏலியனை சந்தித்து பணம் தயார் செய்து டிவி வாங்கி வீட்டில் வைத்துவிட்டு, பழைய டிவியை தூக்கிக் கொண்டு வந்து எங்கோ ஒரு மாடியிலிருந்து போடுகிறார்கள்.

இதன் கால நேரம் என்ன? எப்போது டிரஸ் மாற்றுகிறார். வேம்புவை பாலோ செய்கிறார். இதற்கெல்லாம் பின்பு என்றால் வேம்புவின் வீட்டில் சம்பவம் காலையில் நடை பெறுகிறது. அதே காலையில் தான் ஷில்பா ஸ்கூலுக்கு தன் மகனோடு கிளம்புகிறாள். அதே காலையில்தான் ஸ்கூல் போவதற்கு பொய் சொல்லிவிட்டு வீட்டில் பிட்டு படம் பார்க்க தங்குகிறார்கள் பையன்கள். இப்படி நம்ப முடியாத டைம் ப்ரேம்கள் முதல் பாராவில் ஏதோ ஒரு மாடியிலிருந்து தூக்கிப் போடப்படும் டிவி, வேம்பூவின் கதையில் வரும் பெர்லினின் தலையில் வீழும் போதும் மொத்த கதையிலும் நடக்க வேண்டிய அற்புதம் காணாமல் போய்விடுகிறது.

(இந்தக் கதை ஒரு நாளில் நடப்பது இல்லை. ரெண்டு நாளில் நடப்பது. இது கூட அறியாமல் என்ன எழுதுகிறாய் என்று சில பேர் கேட்டார்கள். எனக்கு தெரிந்த உலக சினிமா அறிவுக்கு எழுதிட்டேன். ரெண்டு மூணு தடவை பார்த்து யோசித்து கருத்து சொல்கிறவர்களுக்கு என் அனுதாபங்கள். ஒரு சினிமா அதன் அடிநாதமான விஷயத்தை முதல் பார்வையிலேயே கொடுத்து நம்மை கவரும் போதுதான் இரண்டாவது முறை பார்க்கும் போது அதன் நுணுக்கங்களை பார்த்து பரவசப்பட தோன்றும். இது முதல் எஃபெக்டையே சரி வரக் கொடுக்காத போது என்ன பிரயோஜனம்)

இவையெல்லாவற்றையும் இணைக்கும் பெர்லினின் கேரக்டர் மிகையின் உச்சகட்டம். ஆண், பெண், திருநங்கை என யாரைக் கண்டாலும் கிளப்பிக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் காட்சியில் இருக்கும் நடிகர்களின் நடிப்பு பசிக்கு தீனி போட வேண்டும் என்பதற்காக இழுத்தடிக்கப்பட்ட காட்சிகள். நீளமான ஷாட்களில் பெரும்பாலும் சம்பவங்கள் ஏதுமில்லாமல் அங்கிட்டும் இங்கிட்டும் திருப்பி திருப்பி கடுப்பேற்றுவதும் கூட நிகழாமல் போன அற்புதம்தான்.

சேட்டு வீடு, ஷில்பாவின் வீடு, பையன்களின் வீடு, தனியார் ஹாஸ்பிட்டல், பிராத்தனைக்கூடம் என எல்லா லொக்கேஷன்களும் அழுக்காக இருப்பதும். ஆங்காங்கே பாதி அடிக்கப்பட்ட ப்ளூ கலர் சுவர் பூச்சுக்கள். ஆர்ட் டைரக்டர் வேலை ஆக்காஹா என்று பாராட்ட விஷயங்கள் இருந்தாலும், அது எங்கே இருக்கு? எந்த இடம்? போன்ற ஜியாகரிப்பிகல் கேள்விகள் எழுந்து கொண்டேயிருக்கிற காரணமும் நிகழாமல் போன அற்புதம்.

ராசுக்குட்டியாய் வரும் சிறுவனின் நடிப்பு இயல்பு.  டெஸ்ட் ட்யூப் பேபி என்றால் அழும், சண்டைப் போடும் சிறுவனின் குழந்தைமை “கடவுள் ஒரு சில்ற பய” எனும் போது பேபி ஷாமிலி காலத்து படமாய் மாறி அற்புதம் நிகழாமல் போகிறது.

ஷில்பாவின் கேரக்டரில் மிகவும் கஷ்டப்பட்டு நுழைந்ததாய் விஜய் சேதுபதி சொல்லியிருந்தார். உண்மையில் சொல்லப் போனால் இப்படத்தில் நடிக்கிறேன். ட்ரை பண்ணுறேன் என்று சொதப்பியது இவர் தான். ஸாரி டூ சே. எங்கேயும் எந்த இடத்திலும் திருநங்கைக்கான உடல் மொழி இல்லை. அவரு நாட்டுக்கட்டை அப்படித்தான் இருப்பாரு என்பீர்களானால், நான் பொன்னம்பலம் போன்ற திருநங்கைகளையே பார்த்திருக்கிறேன். இவரது நடிப்பு எனும் திணிப்பினால் நிகழாமல் போய்விட்டது அற்புதம்.

நடிகர்களாய் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய நடிகர்கள் வேம்பூவாக வரும் சமந்தா, பெர்லினாய் வரும் பக்ஸ் அக்கேரக்டரின் நடிப்பு எரிச்சலூட்டினாலும், அதனுடய ஸ்கெட்சே அப்படியெனும் பட்சத்தில் இயக்குனர் தான் பொறுப்பு.

படம் நெடுக குறியீடுகளாய் பலநூறு டேக்குகளில் எடுக்கபட்ட காட்சிகள் நிறைய என்று பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் கதையில் முக்கியமான காட்சி சமந்தா தன் காதலனை அறுக்கும் காட்சியில் கண் திறந்தே இறந்திருக்கும் காதலன் ரெண்டொரு ஷாட்களில் அரைக்கண் மூடி படுத்திருப்பதை தவற விட்டிருக்கிறாரே என்று நினைக்கும் போது நிகழாமல் போன அற்புதமாகிவிடுகிறது.

அற்புதமே நிகழவில்லையா?  என்று கேட்டீர்களானால் படம் நெடுக அட போட வைக்கிற விஷயங்கள் நிறைய, குறிப்பாய் ஆர்மபக் காட்சி. ஆல்மோஸ்ட் ஆரண்ய காண்டம் படத்தின் ஆரம்பக் காட்சியானாலும், அக்காட்சி கொடுக்கும் திடுக். பின்னணியில் ஓடும் ஐயம் எ டிஸ்கோ டான்ஸர்.  பிட்டு படம் பார்க்க ஆரம்பிக்கும் போது ஒலிக்கப்படும் “வனிதாமணி” பாடல். காஜு, முட்டைபப்ஸு கேரக்டர்களின் வடிவமைப்பு. அத்தனை களேபரத்திலும் முட்டைபப்ஸின் அக்காவின் மேலான காதலை சொல்லும் காஜி கேரக்டர். டிவி ரிப்பேர் கடையில் பாட்டை வேடிக்கைப் பார்க்கும் காட்சி, பழைய ஐந்நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து வந்துவிட்டு திரும்ப திருடப் போக வேண்டும், அங்கே இன்னும் கொஞ்சம் காசு இருந்துச்சுன்னு சொல்ல, அப்பவே எடுத்துட்டு வர வேண்டியதுதானே? என்று காஜி கேட்க, “நமக்கு எதுக்குடா அத்தனை பணம்?” என்று கேட்கும் மிடில் க்ளாஸ் அப்பாவி பையனின் வெளிப்பாடு.

“ஒரு லட்சம் பேர் பார்க்குறது தப்பில்லைன்னா நாலு பேர் நடிக்கத்தான் செய்வாங்க”

“ஹேர்ஸ்டைல் நகம் வெட்டிக்கிறா மாதிரி நான் என் உடம்ப மாத்துனது தப்பா?”

”எப்படி நடந்துச்சுன்னு தெரியலை. பேசிட்டேயிருந்தோம் மேட்டராயிருச்சு. திடீர்னு செத்துட்டான்’

‘இங்க கூட பிரச்சாரமா?

என ஆங்காங்கே தெரிக்க விட்ட வசனங்கள். சேட்டு வீட்டில் கிடக்கும் பாலீத்தீன் கவர்கள் மூலமாய் வெளிப்படுத்தும் பேண்டஸி. போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் செட் ப்ராப்பர்டீஸ்கள். ஷில்பா நடந்து போகும் அந்த காரணேமில்லாத சந்தில் ஒட்டப்பட்டிருக்கும். ஆரண்யகாண்டம் நாயகன்  சிங்கபெருமாள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர். தனசேகரனின் பிரார்தனை கூடத்தில் உடையும் கடவுள் சிலையிலிருந்து கிடைக்கும் வைரத்துக்கான காரணத்தை ஒரு ரேடியோ செய்தியில் வெளிப்படுத்துமிடம், ராமசாமியின் மூலம் கிறிஸ்துவ அமைப்புகளின் பிரசாரங்கள். அபத்த நம்பிக்கைகளை போட்டுடைத்தது. அட்டகாசமான ஒலியமைப்பு டிசைன். ஸ்டேடிக் மற்றும் நீளமான ஸ்டெடி கேம் ஷாட்களின் அணிவகுப்பு. கதையில் வரும் இருண்மைக்கு  குறைவில்லாத ஒளிப்பதிவு. எங்கே வேண்டுமோ அங்கே மட்டும் சிறப்பான பின்னணியிசை அமைத்த யுவன்.

சுனாமியில் உயிர் பிழைத்ததினால் தன்னைக் காப்பாற்றிய சிலையை கடவுளென கொண்டாடும் பித்தனாய் அற்புதமெனும் தனசேகரன். தன் மூலமாய் கடவுள் நிகழ்த்த விரும்புகிறார் என நம்பும் தனசேகரனாகிய அற்புதத்தின் நம்பிக்கையை,  சப்வேயில் ஷில்பாவின் மூலமாய் உடைத்து நீ மட்டுமல்ல நானும் தான் சுனாமியில் பிழைத்தவள் என்று நம்பிக்கை உடைபடும் இடம் வாவ். அட்டகாசம். மொத்த திரைப்படத்திலேயும் எமோஷனலாக சிங்கான ஒரே இடம் இதுதான். என்ன கிளைமேக்ஸில் தசாவதாரம் போல குழப்பமான பதில் தான் என்றாலும் கமல் சொன்னால் அது குழப்பம் தியாகராஜன் குமாராஜன் சொன்னால் அது வாழ்க்கை தத்துவம் என்று ஏற்றுக் கொள்ள பழகினால் அது நிஜம்.

காஜி, தனசேகரன், லீலா, பெர்லின், வேம்பூ ஆகிய கேரக்டர்களில் இருக்கும் எக்ஸ்ட்ரீம் தன்மைதான் கதையின் பலம். அதுவே பலவீனமும் கூட. எக்ஸ்டீமாகவும், எக்ஸெண்டிரிக்காகவும் உள்ளவர்களின் கதை. யதார்த்தமாய் சிந்திக்கவே சிந்திக்காதவர்களின் உணர்வு வெளிப்பாடு. குறிப்பாய் நீ என்னை திட்டணும்னா நடிப்பு பயிற்சிக்கு போற இல்லை. குடிச்சா மாதிரி நினைச்சு திட்டிக்கோ என்று சொல்லி அவன் திட்டுமிடமெல்லாம் புதுசாய் தெரிந்தாலும், “அரிப்பெடுத்த முண்டை என்று கிடைத்த தனிமையில் அவள் மேல் வன்முறை பிரயோகம் செய்வதோ, அல்லது என் கிட்ட என்ன குறை கண்டே என்று ஒப்பாரி வைத்து அழும் கணவர்களே வெகுஜனங்களாய் இருக்கும் பட்சத்தில் யதார்த்தம் மிகையாகிப் போய் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் மனோபாவம் தான் வருகிறது.  அதே  தனசேகரன், லீலா, அவளது மகன் கதையில் இருக்கும் யதார்த்தம், எந்த காரணத்தினால் நான் இப்படி ஆனேனோ அதுதான் என் மகனின் வாழ்க்கைக்கும் என்று அற்புதம் புலம்பும் போதும், “உன்னை யாராச்சும் பெரிய நடிகையாக்குறேனு ஏமாத்திட்டாங்களா?” என்று அவளின் நடவடிக்கைக்கு ஏதாவது சால்ஜாப்பு காரணங்கள் கிடைக்காதா? என்று ஏங்கும் மகனின் கேள்வியில் இருக்கும் நிஜம் மற்ற எந்தக் கதைகளில் இல்லாததால் கொண்டாட முடியவில்லை.


சூப்பர் டீலக்ஸ் தியேட்டரில் ஓடும் வாழ்வின் ரகசியம் பலருக்கு புரிந்தார் போல தோன்றினாலும், படத்தில் காஜி சொல்வது போல ஏற்கனவே நான் பார்த்துட்டேன் என்று வாழ்வின் ரகசியத்தைப் பற்றி சொல்வார். மீண்டும் பார்க்க போகும் முன். நிகழாத அற்புதமான சூப்பர் டீலக்ஸும் அப்படியே. 

Mar 26, 2019

சாப்பாட்டுக்கடை - ஹோட்டல் அம்சவள்ளி பவன்


மதுரை சிந்தாமணி அருகில் 1952 முதல் இந்த சீரக சம்பா பிரியாணிக்கடை செயல்பட்டுக் கொண்டிருக்கிறதாம். சென்னையில் அவர்களது ப்ராஞ்சை திறந்திருக்கிறார்கள். நண்பர் பத்திரிக்கையாளர் கெளதம் சொன்னார். முதல் முறை போகும் போது இரவாகிவிட்டதால் அவர்களது ஸ்பெஷல் பிரியாணியை சூடாக சாப்பிட முடியவில்லை. பரோட்டா, அதற்கான சிக்கன், மட்டன் சால்னாவுடன், நல்ல கிரிஸ்ப் கோலா உருண்டையோடு கிளம்பிவிட்டேன். இன்று மதியம் அண்ணாநகர் வரை வேலை. நல்ல பசி என்றார் நண்பர். சரி நல்ல சீரக சம்பா பிரியாணி சாப்பிடுவோமா? என்று வண்டியை கட்டினோ இந்த அம்சவள்ளியை பார்க்க.


அப்போதுதான்  தம் உடைத்திருப்பதாகவும் சற்றே காத்திருங்கள் என்றார்கள். தலை வாழை இலை போடப்பட்டு, கால் லிட்டர் வாட்டர் பாட்டிலை வைத்தார்கள். சிக்கன், மட்டன் கிரேவி, வெங்காயப் பச்சடி என வரிசைக்கட்டிவிட்டு, சுடச்சுட பிரியாணி பரிமாறினார்கள். பிரியாணியின் கலரே ஆர்வத்தை தூண்டியது. நல்ல சீரக சம்பா அரிசியின் மணமும், மசாலாவின் மணமும் நாசியிலிருந்து மனசுக்குள் போனது. முதல் பிடி எடுத்து வாயில் வைத்தேன். வாவ். நல்ல மணம், குணம், காரத்துடன், சரியான விகிதத்தில் கலக்கப்பட்டிருந்த மசாலாவோடு ஒர் டிவைனான பிரியாணி. சீரக சம்பா பிரியாணி சென்னைக்கு வந்தாச்சு. என்று தான் சொல்வேன். உடன் கொடுக்கப்பட்ட மட்டன் சால்னா அட்டகாசம்.

மதிய நேரமானாலும் சரி, இரவானாலும் சரி பிரியாணிதான் இவர்களது மெயின் கோர்ஸ். இரவில் பரோட்டா, கல் தோசை, சிக்கன், போன்றவைகளும் இருக்கிறது. பட் டோண்ட் மிஸ் திஸ் சீரக சம்பா பிரியாணி.

ஹோட்டல் அம்சவள்ளி பவன்
யூ-75, 5வது மெயின் ரோடு
அண்ணாநகர் வெஸ்ட்
ஐய்யப்பன் கோவில் அருகில்Mar 23, 2019

சாப்பாட்டுக்கடை - குப்பம்மாள் மெஸ்


சில மாதங்களுக்கு முன் நண்பர் தீபக் எனக்கு போன் செய்து என் நண்பர் பாண்டிச்சேரி ஹவுஸ் பக்கத்தில ஒரு மெஸ் ஆரம்பிச்சிருக்காரு ஒரு நடை போய் பார்த்துட்டு வந்து சொல்லுங்க என்றார். அந்த வாரத்திலேயே ஒரு நாள் போய் நின்றேன். நண்பர் தீபக் சொன்னதை சொன்னேன். “சார். இன்னைக்கு வேண்டாம். ஏன்னா புதுசா மாஸ்டர் வந்திருக்காரு. ஆளு இன்னும் செட்டாகலை. ஒரு வாரம் போகட்டும் எல்லாம் செட்டானதும் சொல்லுறேன்’ என்றார்.

அதற்கப்புறம் மறந்தே போனேன். சென்ற வாரம் ஒரு நாள், அந்த பக்கம் க்ராஸ் செய்யும் போது நல்ல பசி. ஒரு நடை எட்டிப் பார்க்கலாம் என்று போய் சாப்பிட உட்கார்தேன். மெஸ் என்றாலே மதிய சாப்பாடுதான் ஸ்பெஷலாய் இருக்கும் என்பதால் ஒரு மீல்ஸ் கொடுங்க என்றதும் நியாபகம் வைத்துக் கொண்டு என்னை கேட்டார். ஆமாம் என்றேன். சார். நம்ம அயிட்டத்துல கறி சோறு மதியத்துல ரொம்ப பேமஸ் அதை ட்ரை பண்ணுங்க என்றார்

சுடச்சுட கறிச் சோறு வந்தது. நன்கு வெந்த மட்டன் பீஸுகளோடு, நல்ல பெப்பர் மணத்துடன். வாயில் வைத்தவுடன் பெப்பர் மற்றும் உறுத்தும் காரத்துடனான கலந்த மட்டன் சோறு. மூக்கு பக்கம் எடுத்து வைக்கும் போதே மணத்துடன். அத்துடன் ரெண்டு துண்டு மீன் வறுவல் சாப்பிட்டேன். வறுவலுடன் வரும் மசாலா தூள்களை சோற்றுடன் சேர்த்து சாப்பிடும் போது வெகு சுவையாய் இருந்தது. மீல்ஸுக்கு கருவாட்டுக் குழம்பு, கொடுப்பதாய் சொன்னார்கள். இரவு நேரங்களில் மட்டன் தோசை மிகப் பிரபலமாம். ஒரு நடை போய் சாப்பிட்டு விட்டு எழுதுகிறேன். கறிச்சோறு டிவைன்.


குப்பம்மாள் மெஸ்
பாண்டிச்சேரி கெஸ்ட் அவுஸ் அருகில்
முனுசாமி சாலை
கே.கே.நகர்
9514499888

Mar 21, 2019

2018 ஆம் ஆண்டின் வெப் சீரீஸ்கள் -2

Sacred Games
இந்திய அளவில் பெரும் விளம்பரத்தோடு வெளியான நெட்ப்ளிக்ஸ் சீரீஸ்.  அனுராக் காஷ்யப், விக்ரமாதித்ய மோத்வானி, நவாசுதீன் சித்திக், சாயிப் அலிகான், ராதிகா ஆப்தே என பிரபலங்களை களமிறக்கியிருந்தார்கள். வழக்கமான சாதாரணன் தாதாவான கதை தான் என்றாலும் அதை ப்ரசெண்ட் செய்த விதத்தில் “வாவ்” போட வைத்துவிட்டார்கள். மிரட்டும் நடிப்பு. அதிரடி வசனங்கள். காட்சிகள். பார்வையாளர்களை ஒரே வீச்சில் பார்க்க வைக்கும் திரைக்கதை என மட்டுமில்லாம டெக்னிக்கலாய் அசத்தியிருந்தார்கள். இந்திய அளவில் வந்த நல்ல வெப் சீரிஸ் இது.  அமேசானின் வழியில் நெட்ப்ளிக்ஸும் தமிழ் மற்றும் இந்திய மொழிகளில் டப்பிங் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். விரைவில் இரண்டாம் சீசன் களைக் கட்ட போகிறதாம். ஐயம் வெயிட்டிங்.

Mirzapur
நீ வயலண்டாய் சாக்ரட் கேம்ஸை இறக்குகிறாயா? இதோ என் பங்கிற்கு என அதே போல வயலண்ட் ஆக்‌ஷன் சீரிஸை அமேசான் இறக்கிவிட்டிருக்கிறது. சென்ற வருடம் தரமான சம்பவம் செய்த,  அதே இன்சைட் எட்ஜ் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து வெளியாகியிருக்கிறது. மிர்சாப்பூர் என்ற் அஒரு நகரத்தை ஆண்டு கொண்டிருக்கிற அகானந்த்  திரிபாதி எனும் கார்பெட் வியாபாரி. பேருக்குத்தான் கார்பெட் வியாபாரமே தவிர நாட்டுத் துப்பாக்கியும், அதன் பின்னணியில் உள்ள கேங்க் வாரும், வழக்கம் போல தன் பொருப்பை உணராத தறுதலைப் பிள்ளையினால் ஏற்படும் ப்ரச்சனைத்தான்  தான் கதைக் களம். அப்பிள்ளையின் பொறுப்பற்ற செயலினால் ஒரு கொலை நிகழ்ந்துவிட, அதை எதிர்த்து கேஸ் போடக் கூட ஆளில்லாத நேரத்தில் ராம்காந்த் பண்டிட் எனும் நேர்மையான வக்கில் அதில் இறங்க, அவரது மகன்களான குட்டூ, பப்புவை திரிபாதி எப்படி அவர்களை தங்கள் வலைக்குள் விழுங்குகிறான். அதிகாரத்தை ருசித்தவர்களின் கடைசி நிலைபாடு என்ன? என விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத கண்டெண்ட். பட் ரொம்பவே அடித்து துவைக்கப்பட்ட கதைக்களன். கேரக்டர்கள். தரமான மேக்கிங் மற்றும் சில நடிகர்களின் சிறப்பான நடிப்பு சீரீஸை காப்பாற்றியுள்ளது. க்ளைமேக்ஸை Fauda எனும் இஸ்ரேலிய சீரீஸுலிருந்து சுட்டது கொஞ்சம் உறுத்தலே.
GHOUL
நெட்ப்ளிக்ஸ் மற்றும் அனுராக், மோத்வானியின் ஆஸ்தான நாயகியான ராதிகா ஆப்தேவின் நடிப்பில் வெளியான அமானுஷ்ய மினி  வெப் சீரீஸ். எதிர்காலத்தில் கிட்டத்தட்ட எதேச்சிய அதிகாரக் கட்டுப்பாட்டில் இந்தியா வந்துவிட, அரசுக்கு எதிராய் யார் எதை செய்தாலும் அவர்களை தனிமைப்படுத்தி, கடும் தண்டனைக்கு உள்ளாக்கி கிட்டத்தட்ட காணாமல் போக்கடிக்கும் ஒர் ஜெயில். தன் தந்தையையே அரசுக்கு எதிராய் எழுதினதாய் கருதி அங்கே பிடித்துக் கொடுக்கும் மகள். அரசு போலீஸ் அதிகாரி வேறு. அந்த ஜெயிலுக்கு போன பிறகு தான் அங்கே நடக்கும் அநியாயங்கள் புரிய ஆரம்பிக்கிறது. அங்கே சில அமானுஷ்யங்கள் நடைபெற ஆரம்பிக்கிறது. மெல்ல அந்த அமானுஷ்யம் அந்த இடத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்து இருக்கிற எல்லாரையும் அழிக்கிறது.  சில இடங்களில் முதுகு தண்டு சில்லிட்டது உண்மை. ஆரம்ப எபிசோடில் கொஞ்சம் ஸ்லோவாய் ஏதோ தீவிர அரசியல் படம் போல தோன்றினாலும் முதல் எபிசோட் முடிவிலிருந்து மொத்தமும் அமானுஷ்ய சீரிஸாய் மாறி நம்மை கட்டிப் போடுகிறது. அதீதமாய் ரத்தம், சதை, பயம் அனைத்தையும் சிதற விட்ட சீரீஸ்.

Little Things
இதன் முதல் சீசன் யூட்யூபில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இப்போது இரண்டாவது சீசன் நெட்ப்ளிக்ஸில். கம்போஸ்ட் துருவும். துள்ளலான மித்தாலியும் மட்டுமே இந்த சீரீஸின் ப்ளஸ் அண்ட் மைனஸ். லிவினில் இருக்கும் இந்த ஜோடிகளுக்கு இடையே நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்கள். அது ஏற்படுத்தும் ப்ரச்சனைகளை இவர்கள் எப்படி தாண்டிப் போகிறார்கள் என்பது தான் கதை களம். அழகான ஜோடி. அதுவும் மித்தாலியை திரையில் பார்க்க அவ்வளவு அழகு. நம் பக்கத்து வீட்டு பெண் போல அவ்வளவு இயல்பான நடிப்பு. இருவருக்கிடையே ஏற்படும் சம்பவங்கள் திணிக்கப்படாமல் மிக வாழ்க்கையை ஒட்டி இருப்பது சுவாரஸ்யம். குறிப்பாய் மித்தாலியின் அம்மா வீட்டிற்கு வர, அவரை கோயில், குளம் என்ரு சுற்றிக் காட்டு என துருவிடம் சொல்லிவிட்டு, மித்தாலி அலுவலகம் போய்விடுகிறாள். ஆனால் மித்தாலியின் தாயோ, அமீர்கான், ஷாருக்கான் வீட்டை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறாள். துருவும் அவளை அங்கே அழைத்து செல்கிறான். தன் நெடுநாள் தோழியை சந்திக்க செல்கிறாள். அவர்கள் மனம் விட்டு பேசுகிறார்கள். பேச்சினிடையே ஒரு பாவ் பாஜி கடை பற்றி பேச்சு வருகிறது. அவர்களுடய எல்லா முதல் அனுபவங்களும் அங்கே தான் ஆரம்பித்தது என்று சொல்லி, முதல் முத்தம் உள்பட என்று தோழி கண்ணடித்து சொல்ல, துருவுக்கும், மித்தாலியின் அம்மாவுக்குமிடையே ஏற்படும் புரிதல். செம்ம க்யூட்.  இயல்பான வசனங்கள். முந்தைய சீசனை விட தரமான ஒளி மற்றும் ஒலிப்பதிவு என எல்லாவற்றிலும் நல்ல தரம். ஒரு ஃபீல் குட் வெப் சீரீஸ் பார்க்க விரும்புகிறவர்களுக்கு ஐ ரெக்கமெண்ட்.

Tikli And Lakshmi Bomb

நெட்ப்ளிக்ஸின் நேரடி ஹிந்தி திரைப்படம்.  பெர்லின் பெஸ்டிவலில் சிறந்த இண்டிபெண்டட் திரைப்பட விருதை பெற்ற படம்.  நிஜமாகவே கொஞ்சம் போல்டான கதை தான். மும்பைத் தெருக்களில் நின்றபடி விபச்சாரம் செய்து கொண்டிருக்கும் பெண்கள். அவர்களின் பிரச்சனைகள். போலீஸ். விபச்சாரத் தரகன். அவனின் பின்னால் இருக்கும் அரசியல் என பலவற்றை பேசும் படம். புதியதாய் அந்த ஏரியாவில் விபச்சாரம் செய்ய வரும் பெண் நாம் ஏன் எந்த வேலையும் செய்யாத தரகர் நாய்க்கு காசு கொடுக்கணும் என்று போர்கொடி எழுப்பி, கூட்டம் சேர்ந்து தரகனை ஒழிக்க முயலும் கதைதான் இந்த டிக்லி அண்ட் லஷ்மி கேங்க்.  விபச்சாரத்தில் கம்யூனிசம், தனி மனித உரிமை, பின்னணியில் உள்ள அரசியல், உழைப்பு சுரண்டல்கள், அனைவரையும் ஒருங்கிணைத்து வெற்றிகரமாக செயல்பட்டதை மிகச் சுலபமாய் மூட்டைப் பூச்சியை நசுக்குவதைப் போல  நசுக்க முயலும் முயற்சி, என மிக இயல்பான நடிப்பு. தைரியமான வசனங்கள். மிகைப்படுத்தப்படாத படமாக்கல் என சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாத ஒர் இணையப் படம்.  இம்மாதிரியான படங்களுக்கு சரியான இடம் இந்த ஓ.டி.டி. ப்ளாட்பார்ம்கள்.


Mar 19, 2019

2018 ஆம் ஆண்டின் வெப் சீரீஸ்கள் மற்றும் வெப் படங்கள் – ஒரு பார்வை-1


ஓ.டி.டி ப்ளாட்பார்ம்களின் வருகை தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே ஒர் புத்துணர்ச்சியை அளித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இண்டர்நெட்டின் வளர்ச்சியால் கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து போய்க் கொண்டிருக்கும் சாட்டிலைட் சேனல் உரிமை வியாபாரம் மிகப் பெரிய கேள்விக் குறியாய் இருக்கும் நேரத்தில், ஸ்ட்ரீமிங் உரிமை எனும் இண்டர்நெட் ஒளிபரப்பு உரிமை கொஞ்சம் ஆசுவாசத்தை கொடுத்திருக்கிறது.

படங்களுக்கு புத்துணர்ச்சியை அளித்தது போலவே,  வெப் சீரீஸ்கள் எனும் புதிய கதவு திறந்திருக்கிறது. வழக்கம் போல இந்தி பெரிய மார்கெட் என்பதால் அனுராக் காஷ்யப், விக்ரம் மோத்வானி, போன்ற பெரும் தலைகள் எல்லாம் சடுதியில் அதன் சூட்சுமத்தைப் பிடித்து பெரும் வெற்றி பெற ஆரம்பித்திருக்கிறார்கள்.  மற்ற மொழிகளில் வழக்கம் போல பட்ஜெட் மற்றும் வெப் சீரீஸ்களைப் பற்றிய கண்டெண்ட் அறியாமைகளோடு, களம் இறங்கியிருக்கிறார்கள்.

இதில் பெரும் கை நெட்ப்ளிக்ஸ் என்றாலும், இந்திய அளவில் பெரும் முதலாளி அமேசான் ப்ரைம் தான். இவர்களுடன் பாலாஜி டெலி பிலிம்ஸின் ஆல்ட் பாலாஜி, ஸ்டாரின் ஹாட் ஸ்டார், கலர்ஸின் வூட், சன் நெட்வொர்க்கின் சன் நெக்ஸ்ட், வியூ, டைம்ஸின் எம்.எக்ஸ் ப்ளேயர், ஜீ டிவியின்  ஜீ5, என வரிசைக் கட்டி ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்கள் இல்லாமல் ஜியோ, ஏர்டெல், போன்றோர் மொத்த ஓ.டி.டி ப்ளாட்பார்மகளில் வரும் நிகழ்ச்சிகளை ஒன்றிணைத்து தரும் முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில வருடங்களில் இவர்கள் அனைவருக்கும் புதிய நிகழ்ச்சிகள் தேவை. இல்லாவிட்டால் தாக்குப்பிடிக்க முடியாது என்பதால் வரும் காலங்களில் நல்ல தரமான வெப் சீரீஸ் கண்டெண்டுகள் கிடைக்கப் பெறும் வாய்ப்புகள் அதிகம்.

ஆனால் இவ்வாண்டின் முக்கிய முயற்சியாய் நெட்ப்ளிக்ஸ் தன் Black Mirror சீரீஸின் ஒர் எபிசோடாய் “Bandersnatch” எனும் புதிய எபிசோடில் எடுத்திருக்கும் முயற்சி மிக முக்கியமானது.  பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இண்டராக்டிவாய் காட்சிகள் அமைத்து வெளியிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உதாரணமாய் காட்சியில் நாயகனின் தந்தை இரண்டு உணவை தன் கையில் வைத்திருக்கிறார்.  காட்சியில் நாயகன் எதை சாப்பிட வேண்டும் என்று நீங்கள் முடிவு எடுக்கிறீர்களோ அதை நாயகன் சாப்பிடுவதாய் காட்சி வரும். அது போல க்ளைமேக்ஸை கூட நீங்கள் மாற்றலாம். இது போல வீடியோ கேம்களில் வந்திருக்கிறது. ஸ்டீமிங்கில் இது புதுசு. அவன் காட்டுறதை நான் ஏன் பார்க்கணும் வேற மாதிரி புதுசா நானே இதை வடிவமைச்சுக்கிறேன் என்கிறார்ப் போல எதிர்காலத்தில் வந்துவிடும் போல.

தற்போதைய நிலையில் கார்பரேட் முதலாளிகள் நடத்தும் இந்நிறுவனங்கள் தங்கள் வழக்கம் போல, ஏற்கனவே டிவி சீரீஸ் காலத்திலிருந்து மாவரைத்துக் கொண்டிருக்கும் நிறுவனங்களோடு மட்டுமே இணைந்து தயாரிப்பில் ஈடுபடுகிற காரணத்தினால் பழைய சீரியல் மாவையே கொஞ்சம் புது மொந்தையில் தருகிறார்கள். அது மட்டுமில்லாமல் முழுக்க முழுக்க நிறுவனங்களின் பணம் என்பதால், எத்தனை சுருக்கி எடுத்து பெரிய லாபம் சம்பாதிப்பது என்ற கணக்கு முக்கியமாய் கருதப்படுவதால் தரம் நடுத்தரமாய்க் கூட இல்லை என்றே சொல்ல வேண்டும்.

ஆனால் படங்களைப் பொறுத்தவரை அப்படி சொல்ல முடியாது. பெரும்பாலும் வெப் ரீலீஸுக்கு மட்டுமேயான படங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு அதிலிருந்து இவர்கள் தெரிந்தெடுப்பதால் கொஞ்சம் பரவாயில்லை ரகமாய் அமைந்துவிடுகிறது. பெரும்பாலும் செக்ஸ் சம்பந்தப்பட்ட படங்கள். ஃபீல் குட் ரொமாண்டிக் மற்றும் குடும்பப் படங்கள் தான் அதிகம். காரணம் இவற்றுக்கு வெளியே வெள்ளித்திரைகளில் பெரும் வரவேற்ப்பை பெறுவது ரொம்பவே கஷ்டமான காரியமாய் இருப்பது ஒரு முக்கிய காரணம்.

இதையெல்லாம் மீறி இந்திய அளவில், தமிழிலும் மற்ற மொழிகளிலும் வந்த சீரிய வெப் சீரீஸ்  மற்றும் வெப் படங்களின் முயற்சிகளைப் பற்றிய கட்டுரைத் தொடர் தான் இது.
Breathe
அமேசான் தன் இந்திய மார்கெட்டை சென்ற வருடம் வெளியிட்ட “இன்சைட் எட்ஜ்” எனும் சீரீஸுடன் ஆரம்பித்திருந்தது. பெரும் வெற்றி. அவர்களது மிகப் பெரிய பட்ஜெட் மற்றும் இந்திய முக்கிய ப்ராந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டது இன்னும் பல பேரை சென்றடைந்து பல இண்டர்நேஷனல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.  அது போல இந்த வருடம் மிக பெரிய விளம்பரங்களுடம் இந்தியாவெங்கும் மாதவன் நடிப்பில் வெளியானது இந்த வெப் சீரீஸ்.

தன் மகனின் லங் கேன்சருக்காக மாற்று உறுப்பு அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார் மாதவன். ஆனால் பையன் அது வரை தாக்கு பிடிப்பது கஷ்டம் என்று தெரிய வர, உறுப்பு தானம் கொடுக்க லிஸ்டில் இருப்பவர்களை எல்லாம் கொல்கிறார். பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை. ஆரம்பக் காட்சிகள் சில சுவாரஸ்யங்கள் இருந்தாலும், லாஜிக்கலாய் உடல் உறுப்பு தானம் கொடுக்க பதிவு செய்திருக்கிறவர்களை தன் சுயநலத்துக்காக கொல்வது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத விஷயமாய் போனதால் மாதவனின் அருமையான நடிப்பு விழலுக்கு இறைத்தானதாய் போனது. என்ன இதனால் பயன் அடைந்தவர்கள் அமேசான். அதீத விளம்பரம் காரணமாய் நிறைய பேர் உறுப்பினர் ஆனார்கள் என்கிறார்கள்.


இந்த சீரீஸின் தோல்விக்கு காரணம் புகழ் பெற்ற  “ப்ரேக்கிங் பேட்” எனும் அமெரிக்க சீரியலை அப்படியே உட்டாலக்கடி அடித்ததினால். அதில் நாயகனுக்கு லங் கேன்சர் வந்துவிட, தான் சாவதற்குள் தன் குடும்பத்தைக் காப்பாற்ற உடனடி பணம் தேவை. எனவே போதைப் பொருள் தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பிப்பான். அது அவனை எப்படி புதைகுழியில் கொண்டு போய் சேர்க்கிறது என்பதுதான் கதை. அதில் இருக்கும் அடிப்படை எமோஷன் கூட புரியாமல் மாற்றியமைத்ததுதான் தோல்விக்கு காரணம்.

Mar 16, 2019

கதை திருட்டு

கதை திருட்டு
இணையமெங்கும் தற்போதைய பரபரப்பு சர்கார் படக்கதை திருட்டு விஷயம் தான். பாருங்கள் நான்கூட  இக்கட்டுரையை ஆரம்பிக்க கதை திருட்டு என்று சொல்லித்தான் ஆரம்பிக்க வேண்டிருக்கிறது. ட்ரெண்டிங் முக்கியம்  என்னடா இது ஆரம்பித்த பத்தியிலேயே முருகதாஸுக்கு சப்போர்ட் செய்கிறார் போல இருக்கிறதே என்று யோசித்தீர்களானால் நிச்சயம் இல்லை. இக்கட்டுரை யாருக்கும் ஆதரவாக எழுதப்பட்ட கட்டுரையல்ல.

உலகம் உருவாக ஆரம்பித்ததிலிருந்து கதை இருக்கிறது. மனிதன் வாய் வழியாய் சொல்லப்பட்டது. மொழி, கலை வடிவத்திற்கு ஏற்ப அதனதன் வடிவில் மறு வடிவம் பெற்றுக் கொண்டேயிருக்கிறது. அந்த மாறுதலே சாஸ்வதம். என்பதை புரிந்தவர்கள் பெரிதாய் அலட்டிக் கொள்வதில்லை. அப்படியென்றால் தெரிந்தே கதையை திருடியவர்களை கேட்பது நியாயமில்லையா என்றால் நிச்சயம் கேட்கப்பட வேண்டிய, உரிமையை கோர வேண்டிய நியாயம் தான்.

சில வருடங்களுக்கு முன் பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் தன்னுடய நிறுவன சுயசரிதையை ஒர் தினசரியில் எழுதினார். எப்போது படங்கள் தயாரித்தார்கள். எங்கிருந்து படங்களின் கதை எடுக்கபட்டது போன்ற பல தகவல்கள் அதில் இருந்தது. ஏன் பிரபல கதாசிரியர்  எழுதிய கட்டுரைத் தொடரிலும் அதே விதமான வாக்குமூலம் தான். பட் படித்தவர்களுக்கு அது வாக்குமூலமாய் தெரியவில்லை. காரணம் அதை வைத்து இப்போது லைவ்வாய் ஏதும் செய்ய முடியாது. கோர முடியாது. இவர்களுக்கு இன்ஸ்பிரேஷனான படங்களின் கதாசிரியர்களுக்கோ, தயாரிப்பு நிறுவனங்களுக்கோ  தமிழ் தெரிந்திருந்தால் இன்றைக்கும் கேஸ் போட நிறைய வாய்ப்பு இருக்கிறது. அப்படியான ஓப்பன் கன்பஷன்.

கதை காப்பி என்றால் எப்படி? ஒரு ஊருல ஒரு ராஜா.. ஒரு ராணி.. அவருக்கு ஒரே ஒரு பெண். அவள் ஏழை விவசாயியை காதலிக்கிறாள். வேற கதை ஒரு ராஜா, ராணி, அவருக்கு ரெண்டு பெண். அதில் ஓருத்தி ஏழை விவசாயியை காதலிக்கிறாள். இது வேறு கதையா இல்லை ஒரே கதையா? அடிப்படையாய் சொல்லப்படுகிற லைன் ஒன்றுதான் பட்.. அதை திரைக்கதையாக்கிய விதம் தான் வேறு வேறாய் இருக்கும்.

காதல் கதைகள் என்று சொல்ல போனால், 1. காதலர்களுக்கு வெளியிலிருந்து பிரச்சனை 2. காதலர்களுக்கு வீட்டிலிருந்தே பிரச்சனை. 3. காதலர்களுக்குள்ளேயே பிரச்சனை. இந்த மூன்று லைனுக்குள் தான், ஜாதி, மதம், சமூக ஏற்றத்தாழ்வு, மனப் பிரச்சனைகள் என பல  உபகதைகள். காதல் படம் ரிலீஸான போது அது வேறொரு இயக்குனர் சொன்ன கதையை பாலாஜி சக்திவேல் எடுத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மராத்தியில் நாகராஜ் மஞ்சுளே சாய்ராட் என்று எடுத்த கதையைப் பார்க்கும் போது அது காதல் படம் போலவே நமக்கு இருந்தது. மற்ற மற்றவர்களுக்கு இல்லை. பட்.. உயர்ஜாதி பெண்ணுக்கும், கீழ் ஜாதி பையனுக்குமிடையே காதல், ஓடிவந்து திருமணம் செய்து கொள்கிறார்கள். காதலில் பெண் பிரிக்கப்பட்டு, பையன் பைத்தியமாய் அலைகிறான். இங்கே இருவரும் கொல்லப்படுகிறார்கள். இதைத் தவிர வேறு வித்யாசம் பெரிதாய் இல்லை. வீட்டை விட்டு ஓடி வந்து ஸ்லம்களில் கஷ்டப்படும் காட்சிகள் அவரவர் ஜியாகிரபிக்கலுக்கு ஏற்ப மாறியிருந்ததே தவிர, ஆல்மோஸ்ட் ஒன்றே. ஆனால் யாரும் என் கதை என்று கோரவில்லை.

மெளனராகத்தை மணிரத்னம் மகேந்திரனிடம் போட்டுக் காட்டிய போது, இது உங்கள் நெஞ்சத்தை கிள்ளாதே படத்திலிருந்து இன்ஸ்பயர் ஆனது என்றாராம். மகேந்திரன் அதை மறுத்தாலும் நம்மால் அக்கதையில் உள்ள ஒற்றுமைகளை காண முடியும். ஆனால் அதே மெளன ராகத்தை, ராஜா ராணியாக்கி பார்க்கும் போது குறைந்த பட்சம் பதினெட்டு விஷயங்கள் ஒற்றிருந்தாலும், அதை ஒத்துக் கொள்ள அந்த இயக்குனர் தயாராக இல்லை. என்பது வருத்தத்துக்குரிய விஷயமே.

சமீபத்தில் ஒரு கதை விவாதத்திற்காக ஹைதராபாத் சென்றிருந்தேன். அங்கே இருக்கும் அத்தனை பெரிய ஹீரோக்களுக்கும் ஒரு மாஸ் கதை தேவைப் படுகிறது. அம்மாதிரியான லைன்களை எங்கே பார்த்தாலும் கேட்கிறார்கள். பத்து வருடங்களுக்கு முன் நான் ஒரு பிரபல கதாநாயகனுக்கு ஒர் ஒன்லைன் சென்னேன். “ஊருலேந்து சென்னைக்கு வர்றான் ஒருத்தன். எதுக்குடா வந்தேன்னு கேட்டா? பெரிய டான் ஆகணும்னு வந்தேனு சொல்றானு” சொன்னேன். அட என்று அடுத்த ஒருவாரத்தில் கதை கேட்டார். அடுத்த ஒரு மாதத்தில் ஒரு படம் ஆரம்பம் ஆனது தெலுங்கில். பிரபல நடிகர் நடித்து. சூப்பர் டூப்பர் ஹிட். அவரோட முதல் சீன் இந்த வசனம் தான். நான் சொன்னது சென்னையில் . படமெடுத்தது ஆந்திராவில். ஸோ.. அது என் கதை என்று கேஸ் போட முகாந்திரமே இல்லை பட்.. என் ஒன்லைன் யார் மூலமாகவாவது அங்கே சென்றிருக்கலாம். ஏனென்றால் திரைத்துறையைப் பொறுத்தவரை தமிழ், தெலுங்கு என்று மொழி பேதமெல்லாம் கிடையாது. ஹிட்டு கதை, அதுவும் பெரிய ஹீரோவுக்கான கதை பிடிப்பது மிகவும் கஷ்டம். நான் இன்னும் மெருகேற்றி அதே கதையை வேறு ஒரு கோணத்தில் அஹே ஒன்லைனை இன்னும் கொஞ்சம் மாற்றி வைத்துள்ளேன். அது என்னவென்றால்.. ஆங். .அஸ்கு புஸ்கு. .சொல்ல மாட்டேன்.

பாருங்கள் எவ்வளவு யோசித்து பார்த்து பேச வேண்டியிருக்கிறது?. ஆனால் இம்மாதிரியான கதை பிரச்சனைகள் எல்லாம் சிறு முதலீட்டு படங்களுக்கு வந்திருக்கிறதா என்று பார்த்தால் பெரும்பாலும் இல்லை என்றே சொல்ல வேண்டும். அப்படியே வந்தாலும், தெரிந்தவர்கள் மத்தியில் பேசப்பட்டு, வெறும் க்ரெடிட் மட்டுமே கொடுக்கப்பட்டு பஞ்சாயத்து முடிந்த கதைகள் நிறைய இருந்தாலும், பெரிய நடிகர்கள், இயக்குனர்கள் படங்களுக்கே இந்த பிரச்சனை பெரிதாய் தலை தூக்குகிறது. ஏன் சண்டியர் என்று கமல் தன் படத்துக்கு பெயர் வைத்த போது கொதித்தெழுந்த கிருஷ்ண்சாமி.சில வருடங்களுக்கு பின் அதே பெயரில் வந்த ஒரு சிறு முதலீட்டு படத்திற்கு எந்த பிரச்சனையும் செய்யவில்லை.

சங்கரின் எந்திரன் படத்திற்கும் என் கதை என்று பஞ்சாயத்து இன்று வரை கோர்ட்டு கேஸு என்று அலைந்து கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் யோசித்து பாருங்கள். இம்மாதிரியான பல ரோபோ கதைகள் எத்தனை ஹாலிவுட்டில் வந்திருக்கிறது. ஜேம்ஸ்பாண்டும், மிஷன் இம்பாஸிபிள் ஹீரோவும் ஹீரோயினை கசமுசா செய்வதைத் தவிர செய்வதெல்லாம் ஒன்றே. இன்றளவில் யாரும் அதை என் கதையை காப்பியடிச்சிட்டான் என்று சண்டைப் போட்டதில்லை. காரணம் அவர்கள் தங்களது கேரக்டர்களிடையே உள்ள் விஷயங்கள் வரை முறை படுத்தியிருக்கிறார்கள். ரிஜ்ஸ்டர் செய்திருக்கிறார்கள். காப்புரிமை பெற்றிருக்கிறார்கள்.

ஆனால் இங்கே காப்புரிமை என்பது எல்லாம் வெறும் வெத்து வேட்டு. இங்கே வசனகர்த்தாவாக பணியமர்த்தப்படுகிறவர் செய்கிற வேலை திரைக்கதை எழுதுவதும் கூடத்தான். ஆனால் க்ரெடிட் வசனத்துக்கு மட்டுமே. இதை உணர்ந்தே எழுத்தாளர்களும் பயணிக்க வேண்டியிருக்கிறது.

சில வருடங்களுக்கு முன் நண்பர் ஒருவர் புதிய இயக்குனருக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தார். அவரிடம் கதை கேட்கச் சொன்னார். கேட்க ஆரம்பித்த மாத்திரத்தில் அது எந்த படத்திலிருந்து உட்டாலக்கடி செய்யப்பட்டது என்று புரிந்து விட்டது. இருந்தாலும் பொறுமையாய் கேட்டுவிட்டு, தம்பி கதை நல்லாருக்கு ஏற்கனவே ஹிட்டடிச்ச கொரியன் படம் தான். பட்.. இதே படத்த சூட்டிங் எடுத்து முடிச்சிட்டாங்க. அடுத்த மாசம் ரிலீஸ் என்றேன். தற்போது கூட ஒரே கொரியன் படத்தை இரண்டு அறிமுக இயக்குனர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அந்த ரெண்டு படங்களிலும் நடித்த நடிகர் சொன்னார். ரெண்டிலும் அதே கேரக்டராம். எது முந்திக்கிதோ அதுக்கு நல்லது.

அதே போல படம் பண்ணுவதற்காக கதை பண்ணிக் கொண்டிருந்தவரிடம் நிதமும் காலையில் வீட்டிலிருந்து டிபன் கொண்டு போய் கொடுத்து, கதையை கேட்டுவிட்டு, அதை தன் கதையாய் என்னிடம் சொல்லி கொண்டிருந்த ஒர் உதவி இயக்குனரை எனக்கு தெரியும். ஒரு சமயம் ஒரிஜினல் இயக்குனர் என்னிடம் கதை சொன்ன போது அதிர்ச்சியாகி இது நம்ம அஸிஸ்டெண்ட் டைரக்டர் கதையில்ல என்று கேட்டே விட்டேன். அவர் தன் கதை தான் என்று நிருபிப்பதற்கு என்னிடமே படாத பாடு பட வேண்டியிருக்கிறது.  


மொத்தமா ஏழே ஏழு கதை தான் அதை தான் அவனவன் திறமைக்கு உருட்டி பிரட்டி பண்ணிட்டிருக்கான்னு சொல்வாங்க. மொத்தமா தொடர்ந்து ஏழு சீன் ஒன்னாயிருந்தா கதை உரிமை கேட்கலாம்னு புரளியாய் ஓடிக்கிட்டிருக்கிற ரூல் ஒண்ணு இருக்கு. இன்றைய தேதிக்கு கதை உரிமை என்பது சங்கத்தில் பதிந்தாலும் கோர்ட் தான் இறுதி என்கிற நிலைமை இருக்க, வேறு வழியில்லை நம் கதையை நாம் காப்பாற்றிக் கொள்ள அத்தனை வழிகளையும் பயன் படுத்தியே தீர வேண்டும். நான் என் கதைகளை மின்னஞ்சல் மூலமாய்தான் அனுப்புகிறேன். தேதி, நேரம், யாருக்கு அனுப்புகிறோம் என்று உறுதியாய் தெரிந்துவிடும். அவர் தான் கதையை திருடினார் என்றால் நிச்சயம் மாட்டிக் கொள்வார்கள். அதை என் கதை என்று உரிமை கொண்டாட முடியாது. அதிலேயும் பணம் உள்ளவர்கள் தில்லாலங்கடி செய்தாவது கேஸில் வெற்றி பெருகிறவர்கள் இருக்கிற ஊர் தான் என்பதால் சட்டபடி எத்தனை வழிகள் உண்டோ அத்தனை வழிகளிலும் என்னுடயது என்று பதிந்து வைத்துக் கொள்வதே வழி. ஏனென்றால் அத்தனை சண்டை போட்ட மீஞ்சூர் கோபி, இன்றைக்கு அதைப் பற்றி பேச விரும்பவில்லை என்கிறார். ஸோ.. அறம் குறித்த கேள்வி கேட்க யோசனையாய் இருக்கிறது.

Mar 15, 2019

வரதன் – ஐரோப்பிய படங்களின் தாக்கம்.

வரதன் – ஐரோப்பிய படங்களின் தாக்கம்.
பொதுவாகவே மலையாள படங்களில் ஐரோப்பிய படங்களின் தாக்கம் அதிகமாய் இருக்கும். பிரியதர்ஷன் காலத்திலிருந்தே அம்மாதிரியான விஷயங்கள் அங்கு அதிகம். அதற்கு முக்கிய காரணம் தனிமையான வீடுகள். அமைதி. நகர்புறதன்மையற்ற கதைகளை எடுக்கக்கூடிய நிலப்பரப்பு. கிருஸ்துவ குடும்ப அமைப்புகள். தனிமை. குடும்பத்தோடு குடிப்பது என்பது போன்ற பல விஷயங்களை சொல்லலாம்.

நாடே பல மொழிகளில் கொண்டாடிய திருஷ்யம் ஒரு ஜப்பானிய மொழியாக்கம் என்பது இன்றளவில் உள்ளக் குற்றச்சாட்டாக இருந்தாலும் மலையாளிகள் மிகச் சிறப்பாய் கதைகளை அவர்களுக்கான படங்களாய் ஆக்குவதில் வல்லவர்கள். அதற்கு காரணம் அங்குள்ள எழுத்தாளர்கள். இன்றளவில் எழுத்தாளர்களை கதையின் நாயகர்கள் அளவுக்கு கொண்டாடிக்  கொண்டிருக்கும் ஒரே திரையுலகம் மலையாள உலகம் தான். பல சமயங்களில் அசாதாரணமான கதைகளை மிகச் சாதாரணமாய் எழுதிக் கொடுத்துவிடுவார்கள்.

பட்டர்ப்ளை ஆன் வீல்ஸ் என்ற ஹாலிவுட் படம். நம்ம ஜேம்ஸ்பாண்ட் பியர்ஸ் ப்ரான்சன் நடித்திருப்பார். அது ஒரு த்ரில்லர் வகை படம்  அதை மலையாளத்தில் காக்டெயிலாக்கி கொடுத்திருந்தார்கள்  வெற்றியும் பெற்றார்கள். அதே நேரத்தில் என் நண்பர் ஒருவர் என்னிடம் ஒரிஜினல் படத்தைக் கொடுத்து அதை தமிழில் திரைக்கதையாக்கி தருமாறு கேட்டிருந்தார். படத்தைப் பார்த்ததும் யாரோ இதை படமாக தமிழில் எடுத்துக் கொண்டிருப்பதாய் எனக்கு தகவல் வந்ததாய் சம்சமயம். எனவே விசாரிக்க ஆரம்பித்தேன். கண்டு பிடித்து அதிர்ச்சியடைந்தேன். அதற்கு ரெண்டு காரணங்கள் ஒன்று. அதை தயாரித்து நடித்துக் கொண்டிருந்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். அதை விட அதிர்ச்சியான விஷயம் தெரிந்தோ தெரியாமலோ எந்த படத்தை தழுவி எடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அந்த படத்தின் பெயரையே டேக் லைனாக வைத்திருந்த புதுமை.  அந்த படம் பெயர் லத்திகா. இப்போது புரியும் எனக்கு ஏன் அதிர்ச்சி ஏற்பட்டது என. ஆனால் ஒரு பெரிய காமெடி என்னவென்றால் ஆங்கிலத்தில் வந்து, மலையாளத்தில் தழுவி, தமிழிலும் தழுவப்பட்ட அதே கதையை மலையளத்திலிருந்து உரிமை வாங்கி இங்கே மீண்டும் தமிழில் படமாக்கி தோல்வியடைந்தார்கள். இப்படியான கதைகள் பல உண்டு. இம்மாதிரியான படங்கள் மலையாளத்தி ஹிட்டடிக்கும் தமிழில் கொஞ்சம் கஷ்டமே.

அங்காமாலி டைரீஸ், நண்டுகளோட நாட்டில் ஒர் இடைவேளா, திருஷ்யம், தொண்டிமுதலும் த்ரிக்‌ஷாக்‌ஷியும், மகேஷிண்டே பிரதிகாரம் என பெரிய லிஸ்ட் போட்டுக் கொண்டேயிருக்கலாம். ஆனால் இவைகளைப் போல மண்ணின் கதைகளனில்லாமல், த்ரில்லர் வகை படங்களுக்கு அமெரிக்க படங்களை விட ஐரோப்பிய படங்களை தங்களது கதைகளாய் மாற்றி கொண்டு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். குறிப்பாய் பயணம் சார்ந்து, தேடுதல், பழிவாங்குதல், என பல வகைகளை தங்களுடயதாக்கியிருக்கிறார்கள். அப்படியான ஒரு படத்தை இந்த வாரம் பார்க்க நேரிட்டது.

அது வரதன் என்கிற பகத் பாஸில் நடித்த படம். அமல் நீரத் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இப்படத்தின் கதை ஐரோப்பிய படங்களின் கதைகளை ஒத்திருக்கிறது. அடிப்படையில் ஒளிப்பதிவாளரான இவரின் பெரும்பாலான படங்கள் ஒளிப்பதிவுக்கு பேர் பெற்றதாகவும், மேக்கிங்கில் அழகுணர்வு மிக்கதாகவும் அமைந்திருக்கும். 5 சுந்தரிகள், அயோபிண்டே புஸ்தகம்,காம்ரேட் இன் அமெரிக்கா, போன்ற படங்கள் இப்படத்தில் 

துபாயிலிருந்து வேலைப் பிரச்சனை காரணமாய் கேரளாவுக்கு வருகிறார்கள் பகத்தும், ஐஸ்வர்யா லஷ்மியும். அவர்களுக்கான் எஸ்டேட் வீட்டில் வந்து செட்டிலாகிறார்கள். தனியான எஸ்டேட் வீடு. சுற்றிலும் அதீத அமைதி. ஆனால் ஏதோ ஒரு உருத்தல், ஐஸ்வர்யாவின் மனதில் ஈஷிக் கொண்டே இருக்கிறது.  அது அவளின் அழகை அடைய விரும்பும் அவளது பழைய ஸ்கூல் நண்பர்கள் முதற்க் கொண்டு ஊரில் பச்சோந்தியாய் அலையும் கிழவன் வரை.

கதையின் முதல் பாகம் வரை, கொஞ்சம் கொஞ்சமாய் மெதுவாய்ய்ய்ய்ய்ய் சம்பவங்கள் அரங்கேறுகிறது. ஒரு கட்டத்தில் சலிப்பேறி ஏதாச்சும் ஒண்ணை பண்ணித் தொலைங்கய்யா என்று புலம்பிவிடும் அளவிற்கு. கணவனிடம் முறையிடுகிறாள். அவன் சாத்வீகமாய் எல்லாம் முயற்சியும் செய்கிறான். இதன் நடுவில் பிரச்சனைக்குரிய குடும்பத்தில் இருக்கும் பள்ளிப் பெண்ணுக்கும், மாற்று ஜாதி ஏழை பள்ளிச் சிறுவனுக்குமிடையே ஆன காதல். அந்த பையன் இவர்கள் வீட்டில் அடைக்கலமாய் வந்தடைய.ப்ரச்சனை முற்றுகிறது. அதன் பிறகு நடக்கும் விஷயங்கள் நிஜமாகவே விஷுவலாய் அதகளம்தான். அப்படியொரு ஆக்‌ஷன் காட்சிகள். சமயோஜித புத்தியோடு அமைக்கப்பட்ட சண்டைக் காட்சிகள் பெரும் ஆசுவாசமாய் இருந்தாலும், மொத்த படத்தையும் பார்த்து முடித்துவிட்டு எழும் போது எதற்கு இப்படி நம்ப முடியாத அளவிற்கான  ஹீரோயிசம் என்ற கேள்வி எழாமல் இல்லை. ஏனென்றால் நாயகன் கதைப் படி சாதாரணன். வெளிநாட்டில் வாழ்ந்தவன். அதைத் தவிர வேறெந்த சிறப்பு பயிற்சியும் பெற்றவனில்லை எனும் பட்சத்தில் மலையாள படங்களில் இருக்கும் இயல்புத்தன்மை அடிப்பட்டுப் போய் வெறும் காட்சி அதிசயமாகி போய்விட்டது என்றே சொல்ல வேண்டும்.


அற்புதமான காட்சிப்படுத்தல்கள். தேர்ந்த நடிப்பு. கதைக்கு ஏற்றாப் போலான இடங்கள். என மிக அழகாய் பொறுக்கியெடுத்திருக்கிறார்கள். திரைக்கதையைத் தவிர என்று சொல்ல வேண்டும். கொஞ்சமே கொஞ்சம் நம்பகத்தன்மையுடனான கேரக்டர்களை வரையறுத்திருந்தால் நிச்சயம் ஒர் அபாரமான சர்வைவல் திரில்லர் வகை படமாய் அமைந்திருக்கும். அப்படி அமைக்காது விட்டதால் பிரபல ஹாலிவுட் படமான “ஹோம் அலோன்’ படத்தில் வீட்டில் திருட வரும் திருடர்களை ஒர் சிறுவன் எப்படி தந்திரங்களை பயன்படுத்தி, லாஜிக் இல்லாவிட்டாலும் சுவார்ஸ்யத்திற்கு பஞ்சமில்லாத ஐடியாக்களினால் நம்மை ஈர்த்த விஷயம் தான் நியாபகம் வருகிறது. ஐரோப்பிய படங்களிலிருந்து அமெரிக்க படங்களுக்கான தாவலோ? இல்லை ஒரிஜினலின் சாயல் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சியா? என்ற யோசனை தோன்றாமல் இல்லை. பல சமயங்களில் பல வெளிநாட்டுப் படங்கள் மலையாள சினிமாவுக்கு நல்ல சுவாரஸ்ய படங்களை தந்திருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.

Mar 14, 2019

Manmarziyan

Manmarziyan
சுவாரஸ்யமான கதைகள் என்று பார்த்தால் அது மனித உறவுகளிடையே ஏற்படும் புரிதல் சார்ந்த பிரச்சனைகள் தான் என்பேன். உறவுகளிடையே இருக்கும் முரண் தான் மிக சுவாரஸ்யம். அந்த வகையில் முன் காலத்தில் எல்லாம் நிறைய படங்கள் அம்மாதிரியான கதைக்களன்களை சார்ந்து வந்து கொண்டிருந்தது. இப்போது உறவுகள் சார்ந்த கதைகள் வராமல் இல்லை. அவையனைத்தும் இளைஞர்கள் சார்ந்த கதைக் களன்களாய் இருப்பதால், நெகிழ்ச்சிக்கோ, காதலைத் தவிர உணர்வு பூர்வமான விஷயங்களுக்கோ முக்யத்துவம் இல்லாமல் வந்து கொண்டுதானிருக்கிறது. அப்படியான இளைஞர்களின் வாழ்க்கை, காதல் கல்யாணம் சார்ந்த நெகிழ்ச்சியுட்டும் திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை நெஞ்சத்தை கிள்ளாதே.

பின்நாளில் மணிரத்னம் மெளனராகம் படம் இன்றளவும் பேசப்பட்டுக் கொண்டிருப்பதற்கான காரணம் காதலும், அது பின் சார்ந்த உளவியம் குழப்பங்களும், அதனால் தற்காலத்தில் ஏற்படும் திருமண பந்த பிரச்சனைகளும் தான். கொஞ்சம் சென்சிபிளாக படமெடுக்க வேண்டி நினைக்கிறவர்கள் ஜாக்கிரதையாய் தொடுவார்கள். அப்படியான படங்கள் மிக சிலவே வெற்றி பெற்றிருக்கிறது.

கொஞ்சம் காலமாய் டார்க் படங்களிலிருந்து விலகி, சீரியஸாய் ஸ்மால் டவுன் காதல் படங்களாய் எடுத்துக் கொண்டிருக்கும் அனுராக் காஷ்யப்பின் லேட்டஸ்ட் மன்மர்ஜியான். ரூமிக்கும் விக்கிக்கும் காதல். இவர்களின் காதல் பெரும்பாலும் அதீத காமத்தினூடே ஊடாடிக் கொண்டிருக்க, ஒரு நாள் வீட்டில் மாட்டிக் கொள்கிறார்கள். இப்படி இருப்பதெல்லாம் வேலைக்கு ஆகாது. நீ அவனை திருமணம் செய்து கொள்ள வீட்டிலிருந்து பெண் கேட்டு வரச் சொல் என்கிறார்கள். அவனுக்கு திருமணம் செய்ய பிடிக்கவில்லை. தான் இன்னும் நிறைய செய்ய வேண்டும். பிரபலமனா டி.ஜே ஆக வேண்டுமென்ற பல கனவுகள். அதனால் தவிர்க்கிறான். வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை மணக்க சம்மதிக்கிறாள் ரூமி.  ரோபி மாப்பிள்ளையாய் நுழைகிறான். அதன் பின் என்ன நடக்கிறது என்பது கதை.

சேம் டெம்ப்ளேட் மெளனராகம்தான். ஆனால் கையாண்ட விதத்தில் தான் படம் வேற கலர். முக்கியமாய் டயர் டூ சிட்டியான சண்டிகார் போன்ற நகரத்தின் பின்னணி. அதன் கலாச்சாரம். அங்கே “போல்டாய்” இருக்கும் ரூமி போன்ற பெண். டிஜி. அமைதியான ரோபி. என வித்யாசமான கேரக்டர்கள். ரூமியாய் டாப்ஸி. முழு படத்தையும் தன் தோளில் தூக்கி சுமக்கிறார். எத்தனை எமோஷன்கள் அவரிடம். காதல், காமம்,குழப்பம்.,என கலந்து கட்டி வெளிப்படுத்தும் பாடி லேங்குவேஜ். எல்லாம் ஆசம். விக்கி கவுசல். மனிதன் செம்ம. ஆட்டிடியூட். எமோஷனல் க்ரூக்காக எக்ஸெண்ட்ரிக் பாடிலேங்குவேஜில் இக்கால நிலையில்லாத, கனவுகளில் மிதக்கும் இளைஞனை கண் முன் காட்டுகிறார். அபிஷேக் பச்சன். கண்ட்ரோல்ட் பர்பாமென்ஸ்.

படம் நெடுக ரூமியின் குழப்பமான ரெட்டை மனநிலையை குறிக்கும் வகையில் வரும் ரெட்டையர் பெண்களின் நடனங்கள். ஏன் கஷ்மீரில் வரும் வழிப்போக்கர்களாய் வரும் ஆண் ரெட்டையர்.  ரெட்டையர் பெண்களின் அபார நடனம். பின்னணியில் என்பது அடி ரோடி ட்ராபிக்கை வைத்துக் கொண்டு போர் க்ரவுண்டில் ஆடும் காட்சி விஷுவல் ட்ரீட்.

மிக நெருக்கமான செக்ஸ் காட்சிகள். சண்டிகர் மாதிரியான டயர் டூ நகர்களில் வசிக்கும் பெண்களுக்கு இத்தனை சுதந்திரமா? என்ற கேள்விகளை எழுப்பும் படியான கேரக்டரைஷேஷன். எந்த முடிவையும் சரியாய் எடுக்காமல் அலை பாய்ந்து கொண்டிருக்கும் கேரக்டர்கள் சுவாரஸ்யம் தான் என்றாலும், திரும்பத் திரும்ப அதையே செய்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது அட ஏதாச்சும் ஒன்னை டிசைட் பண்ணும்மா என்று பொறுமையிழக்க வைக்கிறார்கள். அபிஷேக் பச்சனின் கேரக்டரில் ஏன் இத்தனை ப்ரச்சனையுடைய பெண்ணை அடைய நினைக்கிறான் என்கிற கேள்விக்கான பதில் ஸ்ட்ராங்காய் இல்லை.


ஆனால் அவர்களுக்குள் ஏற்படும் நெருக்கம் உருவாகும் காட்சி. மெல்ல பேசிக்கொள்ளும் வசனங்கள். முக்கியமாய் க்ளைமேக்ஸில் பேசிக் கொள்ளும் வசனங்கள் பியாண்ட் சன்ஷைன் டைப் வசனங்கள் சுவாரஸ்யம். அமித் திரிவேதியின் இசை மிகப் பெரிய பலம். கன்வன்ஷனலான ஊரில் நடக்கும் கதைக்கும் அன்கன்வன்ஷனலான இசை. முரண் தான் ஈர்ப்பு. இன்னும் கொஞ்சம் கேரக்டர்களிலும், அதன் பின்னணியையும் சரியாய், அழுத்தமாய் கொடுத்திருந்தால் நீங்காத ஒர் இடத்தை இப்படம் அடைந்திருக்கும் என்று தோன்றுகிறது. முக்காபாஸில் கலக்கிய அனுராக் இதில் கொஞ்சம் தளர்வடைந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

Mar 12, 2019

சாப்பாட்டுக்கடை - குடைக்கடை பிரியாணி -கே.கே.நகர்


நண்பர் நல்ல பிரியாணி மாஸ்டர். நிறைய முறை அவர் வேலை செய்த ஓட்டலில் இருந்து பிரியாணி கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். நன்றாகவே இருக்கும். இவரின் முதல் அறிமுகமே இன்னொரு நண்பர் கடலூரில் ஆரம்பித்திருந்த பிரியாணி கடையில் மாஸ்டராய்த்தான். பின்பு பல வருடங்களுக்கு பிறகு தற்போது சொந்தமாய் பிரியாணிக்கடை போடப் போவதாகவும், அதுவும் மொபைல் கடையாய் போடப் போவதாய் சொல்லியிருந்தார். சொன்னது போலவே அமாவாசை அன்று கே.கே. நகர், பிரபா ஒயின்ஸுக்கு எதிரே உள்ள ப்ளாட்பாரத்தில் டி.வி.எஸ்.50யில், குடையோடு ஒரு பிரியாணி கடை அமைத்திருந்தார். 

நல்ல தரமான அரிசியில், நன்கு வெந்த சிக்கன் பீசுகளோடு பிரியாணி மணமாய் இருந்தது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேல் குவாலிட்டி கண்ட்ரோல் செக் செய்து தர நிர்ணையம் கொடுத்துவிட்டேன். நல்ல தரமான சிக்கன் பிரியாணி வேண்டும் என்கிறவர்கள் நிச்சயம் ஒர் ட்ரை செய்ய வேண்டிய இடம். 

வழக்கமாய் கையேந்தி பவன் ஓட்டல்களில் குறித்தும் விலை குறைவான பிரியாணி என்றாலே காக்கா பிரியாணியாக இருக்குமோ என்கிற பொதுபுத்தி பயத்தை வேறு மீடியாக்கள் கிளப்பிவிட்டிருக்க, இந்த மொபைல் கடை அந்த நம்பத்தன்மையை கொடுக்கிறதா? என்று கேட்டீர்களானால் நிச்சயம் கொடுக்கிறது என்பேன். நல்ல தரமான பாஸுமதி அரசியில், சரிக்கு சரி சிக்கன் போட்டு சமைக்கப்படுகிறதை நானே சாப்பிட்டு இருப்பதால் உறுதியளிக்கிறேன்.

அடுத்த வாரத்திலிருந்து சனி தோறும்  அறுபது பிரியாணி ஆர்டர் கிடைத்திருக்கிறது என்கிற செய்தியே பிரியாணியின் தரத்திற்கு இன்னொரு சான்று.

பல்லாவரம் யா மொய்தீன் பிரியாணி ஒரு தள்ளுவண்டியில் ஆரம்பிக்கப் பட்டதுதான். அது போல் நண்பரின் கடையும் அமைய வாழ்த்துக்கள். ரோட்டில் நின்று சாப்பிட விரும்பாதவர்கள், பார்சல் செய்து கொண்டு போயாவது ஆதரவு தெரிவிக்கலாம். ஆஃப் பிரியாணி முட்டையோடு 80 ரூபாய். குவாட்டர் முட்டையோடு 60 ருபாய். 

குடைகடை பிரியாணி
பிரபா ஒயின்ஸ் எதிரே
முனுசாமி சாலை 
கே.கே.நகர்.
சென்னை 
தொடர்புக்கு : சபா : 9600167710

GHOUL - Web series

Ghoul
ஒரு காலத்தில் தமிழில் ஜெய்சங்கர் தொடர்ந்து ஒரே டைரக்டரின் படங்களில் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பார். அந்த படம் வெற்றி தோல்வி பற்றியெல்லாம் கவலைப் படாமல் தொடர்ந்து நடித்துக் கொடுப்பார். அதே போல ஆர்யா தொடர்ந்து விஷ்ணுவர்தனின் படங்களில் நடித்திருப்பார். அது போல ராதிகா ஆப்தே, அனுராக் கஷ்யப்பின் படங்களில் நடிப்பது. குறிப்பாய் நெட்ப்ளிக்ஸில் இவர்கள் படங்கள் வெளியாக ஆரம்பித்தபிறகு மீம்ஸ் போடுமளவுக்கு ராதிகா ஆப்தேவின் ஆக்ரமிப்பு.

சமீபத்தில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸில் நடிப்பு மட்டுமில்லாமல் , கதை வசனத்திலும் இவரது பங்களீப்பு இருந்தது. ஒரு புதிய நெட்ப்ளிக்ஸ் படத்தில் ராதிகா ஆப்தேவே எல்லா கேரக்டர்களிலும் நடிப்பது போன்ற ஒரு விளம்பரத்தை ராதிகாவே வெளியிட்டிருந்தார். அது கிண்டலுக்காக வெளியிடப்பட்டது என்று நினைத்தால் நிஜமாகவே அப்படி ஒரு திரைப்படம் வெளியாக இருக்கிறது என்று சொல்கிறார் விக்ரமாதித்ய மோத்வானி.

இத்தனை களேபரங்கள், விமர்சனங்களுக்கு நடுவில் ராதிகா ஆப்தே ஒன்றும் திறமையில்லாதவர் இல்லை ஒவ்வொரு  ப்ராஜெக்டிலும் தன் திறமையை நிருபித்துக் கொண்டேதானிருக்கிறார். ஒரு சில இயக்குனர்களுக்கு சிலருடய நடிப்பும், திறமையும் மிக இயல்பாய் பிடித்துப் போய் தொடர்ந்து அவர்களுடன் பயணிப்பது சுலபமாய் இருக்கும். எனக்கு கூட என் முதல் பட ஹீரோ தமனோடு அடுத்தடுத்து பயணிப்பது மிக சுலபமாய் இருந்திருக்கிறது. அப்படி ஒரு டீமாய் பயணித்துக் கொண்டிருக்கும் அனுராக், மோத்வானி குழுவிலிருந்து ஒரு புதிய மினி வெப் சீரீஸ் தான் கவுல்.
எதிர்காலத்தில் நடக்கும் கதை. அரசை விமர்சிக்கும், எதிர் கருத்தை வைக்கும் யாரையும் சகிக்க முடியாத அரசு. அவர்களை தீவிரவாதியாய் முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைத்து மக்களை காப்பதாய் வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் அரசில் ராணுவ அதிகாரியாய் பயிற்சி முடிந்து சேருகிறார். நாட்டு பற்று மிகவும் அதிகமுடையவர். அதன் காரணமாய் தடை செய்யப்பட்ட புத்த்கத்தை தன் தந்தை வைத்திருக்கிறார் என்பதை அறிந்து அவரை ராணுவத்தினரிடம் பிடித்து கொடுக்கும் அளவுக்கு நாட்டுப்பற்று.

ரெடெம்ஷன் செண்டர் எனும் இடத்தில் அவர்களை வைத்து விசாரிப்பார்கள். அப்படியான ஒர் முக்கிய தனி இடத்தில் முஸ்லிம் தீவிரவாதிகளை அடைத்து வைத்து விசாரிக்கின்ற இடத்தில் வேலைக்கு சேருகிறார். அங்கே தர்ட் டிகிரி என்பதெல்லாம் ஒன்றுமேயில்லை எனும் அளவுக்கு படு கொடூரமான விசாரணை முறைகள். அவற்றை பின்பற்றி தீவிரவாத செயல்களை தடை செய்ய முயற்சித்து கொண்டிருக்கிறார்கள். அப்படியான ஒரு பெரும் தீவிரவாதியை, சமீபத்தில் பெரும் உயிர் சேதத்துக்கு காரணமானவனுமான அலி சையத்தை கைது செய்து கூட்டி வருகிறார்கள். அவனை விசாரிக்கும் பொறுப்பை ஏற்று அவனை பேச வைக்க முயல்கிறார்கள். அப்போதிலிருந்து அங்கு நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகளும், அதன் தொடர்ச்சியும்  பெரும் அதிர்ச்சியை கொடுக்கிறது. இது தான் கவுலின் கதை. கவுல் எனும் அரேபிய சாத்தான். மனித உடல்களை தின்று வளரும் சாத்தான் என்று அரேபியகதைகளில் உலவும் விஷயம். அப்படியான சாத்தானை அழைத்தது யார்? எதற்காக? என்று முதல் எபிசோடுக்கு பிறகு நம்மை கட்டிப் போடுகிறது.

சில ஷாட்கள் நிஜமாகவே முதுகுத்தண்டை சில்லிட வைக்கிறது. ராதிகா ஆப்தேவின் நடிப்பு ஆரம்பக் காட்சிகள் லேசாய் ஒட்டாமல் இருந்தாலும் அவர் உள்ளே இருக்கும் கேள்விகளும், அதற்கான பதில்கள் கிடைக்க, கிடைக்க, விஷுவலாய் கிடைக்கும் அதிர்ச்சிகளும் அவரின் நடிப்பின் மீதான அபிப்ப்ராயத்தை மாற்றி விடுகிறது.


மூன்று எபிசோடுக்காக கொஞ்சமே கொஞ்சம் நீட்டிக்க பட்டிருப்பதாய் தோன்றினாலும், டெக்னிக்கலாய் அசத்தியிருக்கிறார்கள். அஹா இது போல எதுவுமே வந்ததில்லை என்பது போன்ற களம் இல்லை என்றாலும், ஒர் புதிய முயற்சி இந்த சீரீஸ் முழுவதும் இருக்கிறது. எந்த விதமான தீவிரவாத செயல்களையும் செய்யாமல் மாட்டிக் கொண்டவனின் கதை ஒன்றும். அவன் ஊமையாய் அலையும் இடங்களையும் பார்க்கும் போது ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மாட்டிக் கொண்டு அல்லாடுகிறவர்கள் கண் முன் தோன்றி மறைகிறார்கள். சிரீஸ் முழுக்க ஆங்காங்கே சர்காசமாய் வரும் வசனங்கள் அரசுக்க் எதிராய் செயல்படும் விஷயங்கள் என்று சொல்லப்படும் விஷயங்கள் எல்லாம் பி.ஜே.பி அரசை மறைமுகமாய் எள்ளி நகையாடியிருப்பது போல தோன்றுகிறது.  பட். .விஷுவலாகவும், ஹாரர் கதை விரும்பிகளூக்கும் சுவாரஸ்யமான சீரீஸ் கவுல்.

Mar 11, 2019

சாப்பாட்டுக்கடை - உங்க வீட்டு சாப்பாடு

சாலிகிராமத்தில் சொல்லிக் கொள்கிறார்ப் போல நல்ல தரமான வெஜ் உணவகங்கள் அவ்வளவாக கிடையாது. நான் வெஜ் மட்டும் இருக்கிறதா என்று கேட்டீர்களானால் கொஞ்சம் தள்ளி வளசரவாக்கம், விருகம்பாக்கம் பக்கம் போனால் இருக்கிறது. மீண்டும் சரவணபவன், பார்வதி பவனை விட்டால் சிலாக்கியமாய் ஏதுமில்லாத நிலையில் ஒரு ஷூட் இடைவேளையில் நண்பர் நல்ல சாம்பார் சாதம், தயிர்சாதம் வாங்கி வரச் சொன்னார். எங்கிருந்து என்று கேட்க, விஜயகாந்த் வீட்டுக்கு முன்னால் அபுசாலி தெருவில், மாடியில் சின்னக்கடை இருக்கிறது. தக்காளி சாதம், புளி சாதம், லெமன் சாதம், சாம்பார் சாதம் என வகை வகையான சித்ரான்னங்கள் வெறும் நாற்பது ரூபாய்க்கு என்றார். அடுத்த வாரமே அங்கே படையெடுத்தோம்.

படத்தில் காட்டப்பட்டிருக்கும் கருவேப்பிலை சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம் எல்லாம் சேர்த்து எவ்வளவு தெரியுமா? ரூ.40 தான். தனியே வாங்கினால் இதே அளவுக்கு முழு சாதம் தருகிறார்கள்.
உதவி இயக்குனர்கள் வெகுவாய் சுற்றியலையும் இந்த ஏரியாவில் இம்மாதிரியான உணவகங்கள் அட்சய பாத்திரம். நல்ல தரமான,சுவையான சாத வகைகள். சரவண பவனிலேயே தயிர் சாதத்திற்கு மாதுளை போடாத காலத்தில் இங்கே கரண்டி தயிர் சாதத்திற்கும் மாதுளையோடுதான் சப்ளை. இது நாள் வரை நான் இங்கு புளீத்த தயிர் சாதம் சாப்பிட்டதேயில்லை.
வீட்டிலிருந்தே செய்து கொண்டு வந்து விடுகிறார்கள். சிப்ஸ், மிக்ஸர், அல்லது காராபூந்தி என நாளொரு மேனிக்கு சைட் டிஷ் வேறு. எல்லாமே வெறும் நாற்பது ரூபாய்க்கு.
விருகம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனைத் தாண்டி ஒரு அம்மன் கோயில் ரோட்டிலேயே இருக்கும் அங்கே நின்று மாடியில் பார்த்தால் அந்த சின்ன உணவகம் இருக்கும். தவறாது விசிட் செய்து ஆதரவு கொடுங்கள். நிச்சயம் தரமான, மலிவான வெஜ் உணவகம்.

உங்க வீட்டு சாப்பாடு
அபுசாலி தெரு 
சாலிகிராமம்
விஜய்காந்த் வீடு தாண்டி.

Mar 7, 2019

கள்ளச்சிரிப்பு - வெப் சீரீஸ்

கள்ளச்சிரிப்பு
சென்ற மாதம் இணையம் எங்கும் பல விளம்பரங்கள். புதிய தமிழ் வெப் சீரீஸ்களைப் பற்றிய அறிவிப்புகள் என இருக்க, கோடம்பாக்கத்தில் ஷார்ட் பிலிம் எடுத்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் வெப் சீரீஸ் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் யாருக்கும் தெரியாது. இவைகளுக்கான மார்கெட் என்ன? எங்கு வியாபாரம் ஆகும்? எப்படி வியாபாரம் ஆகுமென்ற அடிப்படை கூடத் தெரியாமல் சில பல லட்சங்கள் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

சரி வியாபாரம் தெரியாமல் தான் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்தால் வெப் சீரீஸ் என்றால் என்ன என்று கூட தெரியாமல் படமெடுத்துக் கொண்டிருக்கிறவர்கள் நிறைய. பேர். குறிப்பாய் கெட்ட வார்த்தைகளை மிகச் சுலபமாய் பேசக்கூடிய மீடியம் என்பதை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு, சரளமாய் ஓ.த்தா.. ந்க்கொம்மா என்று ஆண் பெண் பேதமில்லாமல் பேசுவது தான் வெப் சீரீஸின் சுதந்திரம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் கூட்டம் ஒன்று பரவலாய் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் தமிழில் வெப் சீரீஸ் என்றவுடன் நியாபகம் வருவது பாலாஜி மோகனின் “ஆஸ் ஐயம் சபரிங் ஃபர்ம் காதல்” தான். அதில் மிக சாதாரணமாய் தமிழ் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தார்கள். ஹிந்தியில் வெளிவந்திருக்கும் பல வெப் சீரீஸ்களில் இதே மாதிரியான கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவது சகஜமான ஒன்றாய் மாறியிருக்கிறது. ஆனால் கெட்ட வார்த்தை பேசுவதற்காகவே பேசப்படுவதில்லை.

சமீபத்தில்  கள்ளச்சிரிப்பு எனும் வெப் சீரீஸ். கார்த்திக் சுப்பாராஜின் நிறுவனத்திலிருந்து. ஜீ 5 எனும் ஓ.டி.டி. ப்ளாட்பார்மில். வெளியாகியிருக்கிறது. கதை என்று பார்த்தால் தினமும் நாம் டிவி, பேப்பரில் பார்க்கும் கள்ளக்காதல் மேட்டர் தான். அதன் பின்னணியில் உள்ள ஹோமோ செக்ஸுவல், கட்டாய கல்யாணம், உயர் குடி மக்களின் இது பற்றிய எண்ணம் எனத்தான் இந்த கதையும் போகிறது. சுவாரஸ்யத்துக்கு குறைவில்லாத களம் தான். ஆனால் இக்கதை தினத்தந்தி பேப்பர் கொடுக்கும் ஆர்வத்தை கூட கொடுக்கவில்லை. காரணம் மிக மோசமான கேரக்டர் கிரியேஷன்கள்.

முதல் காட்சியில் நடக்கும் ஆக்ஸிடெண்டலான கொலை. அதனை தொடரும் கொலை மறைக்கும் முயற்சிகள் என ஒரு சாதாரணப் பெண் சட்டென தீரமாய் முடிவெடுக்கும் இடம். கொஞ்சம் கூட பதட்டமில்லாமல் பிரச்சனைகளை சமாளிக்கும்விதம் என கொஞ்சம் கூட நம்பத்தகுந்த விதமாய் கேரக்டர்கள் எழுதப்படவில்லை. ஆங்காங்கே காட்சிகளில் அவள் சிறு வயதிலேயே கொஞ்சம் அப்படி இப்படி இருந்தவள் என்பதாய் ஆங்காங்கே வசனங்களில் சொல்லப்பட்டிருந்தாலும், கண் முன்னே காட்டப்படும் கேரக்டர் வெளிப்படும் காட்சிகளில் அவளைபற்றிய எந்த எண்ணமும் ஒழுங்காய் மனதில் உட்காராதினால் மொத்த சீரீஸையும் கடனே என்று தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

கிட்டத்தட்ட ஒரு கொலை, அதை மறைக்க முயலும் போது நடைபெறும் கொலைகள் என போனாலும், சீனீமாமா பையன் கே என்பதை அடிப்படையாய் வைத்து ஓரு கேரக்டர். கட் த்ரோட்டான கொஞ்சம் கூட பாசமே இல்லாத அப்பா. மிகவும் பாசமான ஹைஸ்பீட் அம்மா என டெம்ப்ளேட் கேரக்டர்கள். சீரீஸ் நெடுக.

சுவரஸ்யமாய் எது இருந்தது என்று சொல்ல வேண்டுமென்றால் நான் லீன்யராய் கல்யாணம், கள்ளக்காதல், நிகழ்வு நடந்த போது இடம் பெற்ற காட்சிளின் பர்செப்ஷன் என எழுதப்பட்ட திரைக்கதை மட்டுமே. அது கூட சொல்லப்பட்ட விதத்திற்காக பாராட்டலாம்.

சீரீஸ் நெடுக, ஃபக், ஓத்தா, ஒம்மால.. மு.கூ. என மிக சகஜமாய் கெட்ட வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறரகள். ஏன் ஒரு எபிசோடில் வரும் பின்னணியிசையாய் ஓத்தா.. ஒம்மால என்று கோரஸ் கூட போட்டிருக்கிறார்கள். நான் இங்கே கெட்ட வார்த்தை பேசியதால் இதை எழுதவில்லை. கெட்ட வார்த்தையை எங்கே எப்போது பேசுகிறார்கள் என்று சரியாக சொல்லியிருந்தால் எபெக்டிவாய் இருக்க வேண்டியது எல்லாம் திணிக்கப்பட்டதாய் இருக்கிறது என்பதினால்தான்.

உதாரணமாய் அம்மாவிடம் மாஸ்ட்ருபேஷன் பத்தி தன் இரண்டு கை விரல்கள் மூலமாய் நாயகி சொல்லும் காட்சி. அது இக்கதைக்கு தேவையா என்று கேட்டால் இல்லையென்றுதான் சொல்வேன். ஆனால் அதே நேரத்தில் நாயகியின் கள்ளக்காதலன் உன்னை என்னால விடவே முடியாது என்று சொல்லும் போது “அப்படி என்னடா என் கிட்ட” என்று நாயகி கேட்கிறாள். அதற்கு அவன்  “என்னைக்காவது உன்னை மேட்டர் பண்ணி பாத்துருக்கியா? செம்மயான ஆளு நீ உன்ன என்னால மிஸ் பண்ணவே முடியாது”என்கிறான்.
கள்ளக்காதலர்கள். இருவரிடையே உடல் சார்ந்த வேகமும், காமமும் அதிகம் இருக்கும். அதை இம்மாதிரியான வசனங்கள் மூலமாய் பேசிக் கொள்ள அதிக வாய்ப்புள்ள் இடம். ஆனால் தேவையேயில்லாமல் அப்பாவிடம், அம்மாவிடம். ரோட்டில் போகிறவனிடமெல்லாம் ஃபக், ஓத்தா, ஒம்மால போன்ற வசனங்கள் இயக்குனரின் அமெச்சூர் தனத்தையே காட்டுகிறது. மெச்சூரிட்டியை அல்ல.

தமிழில் வந்திருக்கும் வெப் சீரீஸ்களில் கொஞ்சம் காம்ப்ளெக்ஸ்டான களன் என்பதைத்தவிர, அரைவேக்காட்டுத்தனமாய் உட்டாலக்கடி செய்த சீரிஸ் போலத்தான் இதுவும் இருக்கிறது.  தமிழ் வெப் சீரீஸ் போக வேண்டிய தூரம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பவே அதிகமிருக்கிறது.


Mar 5, 2019

விட்டுக்கொடுப்பதில்லை உன்னை -கவிதை?

விட்டுக்கொடுப்பதில்லை உன்னை
நான் உன்னை எங்கேயும்
யாரிடத்திலும் விட்டுக்
கொடுப்பதில்லை
நீயும் அது போல் தான் என
உறுதியாய் நம்புகிறேன்
நீ விட்டுக்கொடுத்ததாய்
வரும் செய்தியை
கேட்கும் போதும் நான்
நம்புவதில்லை
ஏனென்றால் நான்
உன்னை எப்போதும்
விட்டுக் கொடுப்பதில்லை

Subbura – Blood on Rome -web series

Subbura – Blood on Rome
அமெரிக்க படங்களுக்கும் மற்ற நாட்டு படங்களுக்கும் நிறைய வித்யாசம் இருக்கும். குறிப்பாய் ஐரோப்பிய படங்களுக்கும் ஹாலிவுட்டுக்கும் நிறைய வித்யாசம் உண்டு. ஆக்‌ஷன் கதைகளைக்கூட கொஞ்சம் அழகுணர்வோடுதான் அவர்கள் எடுக்கிறார்கள். கொஞ்சம் எமோஷனுக்கு முக்யத்துவம் கொடுக்கிறார்கள். ஹாலிவுட் போல ப்ளாஸ்டிக் தனமாய் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

நம்மூர்  படங்களுக்கும் கொரிய படங்களுக்கும், உடை, உணவு போன்றவற்றில் வித்யாசம் இருந்தாலும், குடும்ப அமைப்புகளில், உறவுகளில் உள்ள பின்னல்கள் எல்லாம் கிட்டதட்ட தமிழ் படம் போலவே இருப்பதால் தான் மிக ஈஸியாக சுட்டுத்தள்ள முடிகிறது. படங்களைப் போலத்தான் வெப் சீரீஸ்களும். ஹாலிவுட் சீரீஸ்கள், கொரிய சீரிஸ்கள் என வரிசைக் கட்டி அணிவகுத்திருக்கும் நெட்பிளிக்ஸில் நிறைய ஐரோப்பிய சீரீஸ்களும் உண்டு. சமீபத்தில் பார்த்த சீரீஸ் சுப்பூரா எனும் இத்தாலிய சீரீஸ். வாடிகனுக்கு சொந்தமான நிலம் ஒன்று இருக்கிறது. அதை அடைய சமுராய் எனும் தாதா கும்பலும், அரசியல் பலமுள்ள ஒரு லாபியிஸ்ட் பெண்ணும், அந்த இடத்துக்கு பக்கத்திலேயே இன்னொரு இடம் வைத்திருக்கும் இன்னொரு தாதா குடும்பமும் ஆசைப் படுகிறது. சமுராய் பெரிய தாதா. இதன் நடுவில் ஜிப்ஸிக்களின் தாதா கும்பல். தேவையேயில்லாமல் ஹெராயின் விற்று பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் ஒர் போலீஸ்காரரின் மகன். நேர்மையான அரசியல்வாதி ஒருவனை வைத்து அரசியலில் காய் நகர்த்த அவனை மிரட்டும் சமுராய்.

ப்ரச்சனை நிலம் சம்பந்தப்பட்டதுதான். ஆனால் பின்னணியில்  வாடிகன். பாதிரிமார்களின் செக்ஸுவல் அபிலாஷைகள். கணவனுக்கு துரோகம் செய்து போலீஸ்காரர் மகனுடன் சல்லாபிக்கும் லாபியிஸ்ட்.. மெயின் தாதாவான சமுராய் எல்லா இடத்துக்கும் நேரடியாய் போய் ப்ரச்சனையை எதிர் கொள்ளும் விதமும், பயமுறுத்தும் விதமும் ஸ்லீக் குத்துக்கள். அதே நேரத்தில் இன்னொரு தாதா ஜாயிண்டின் தலைவனை ஒழித்துக்கட்ட சரக்கு விற்ற கல்லூரி மாணவனை வைத்தே கொல்வதும். அந்த பையன், ஜிப்ஸிகளின் இளவரசன், தாதாவின்பையன் மூவரிடையே உருவாகும் நட்பு. ஜிப்சியின் தன்பால் ஈர்ப்பு பிரச்சனை. என டீடெயிலாக தாதாக்கள் ஆனாலும் அழகாய் விரிவாய் சொல்லியிருக்கிறார்கள்.

நட்பினிடையே ஏற்படும் துரோகள் தெரியவரும் போது நடக்கும் உணர்ச்சி போராட்டங்கள். தாதாவின் மறைவுக்கு பிறகு அக்கா – தம்பிக்கிடையே ஏற்படும் துரோக பழிவாங்கல் காட்சிகள் என நிறைய ட்ராமாவோடு ஆர்பாட்டமில்லாத ஒர் தாதாக்கள் கதையை சொல்லியிருக்கிறார்கள்.

அதிரடி எபெஃக்டுகள் கிடையாது. ஆர்ப்பாட்டமான இசை கிடையாது. ரேஸியான பத்து செகண்ட் எடிட் கட் கிடையாது. அடுத்தடுத்த காட்சிகளுக்கு தாவும் போலியாய் பரபரக்கும் திரைக்கதை கிடையாது. ஆனால் ஒவ்வொரு எபிசோடும் நம்மை கட்டிப்போடும் அற்புதமான விஷுவல்கள். ரோமில் எங்கு கேமரா வைத்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கிறது. தேர்ந்த நடிகர்களின் நடிப்பு. குறிப்பாய் சமுராயாய் வரும் நடிகரின் கண்ட்ரோல்ட் நடிப்பும். ஜிப்ஸி இளைஞனாய் வருகிறவரின் நடிப்பும் அட்டகாசம்.

இவர்களின் சீரீஸ்களில் ஆக்‌ஷன் இருந்தாலும் அதை ஆர அமர மிக பொறுமையாய்த்தான் கையாளுகிறார்கள். கொலைகளைக் கூட தடாலடியாய் திடுமென சட்டுக் கொல்வதில்லை. சீனியர் தாதாவான சமுராய் இந்த டீலுக்காக இரவு பகல் பார்க்காமல் யாருக்கு எங்கே செக் வைத்தால் எங்கு வலிக்கும்? என யோசித்து ஒவ்வொரு மூவாய் செய்யும் இடமாகட்டும். இடையறாத இந்த முயற்சியில் துக்கமில்லாமல் வண்டி ஓட்டிக் கொண்டே தூங்கி விபத்துக்குள்ளாகும் காட்சியும், அந்த இடத்துக்காக சமுராயை மிரட்டும் அவனுக்கும் மேலான அதிகார கூட்டம் அவரது வயதான தாய் மட்டுமே வசிக்கும் வீட்டில் வந்து உட்கார்ந்து மிதமாய் மிரட்டிவிட்டு போன பிறகு, அவரின் வயதான அம்மாவிடம் “ஒண்ணுமில்ல சின்ன பிஸினெஸ் மீட்” என்று சொல்ல அம்மா அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் “இதுதான் உன் தூக்கத்த கெடுக்குதுன்னா அது ஏன்?” என்று கேட்குமிடம் போல பல எமோஷனல் நிமிடங்கள் சீரீஸ் முழுக்க எழுதப்பட்டிருக்கிறது.

எங்கேயும் விக்கி, அழவில்லை. கண்களில் கண்ணீர் தளும்பி வழியவில்லை. பட் எல்லாமே அளவாய், நாசூக்காய் வெளிப்படுத்துகிறார்கள். விஷுவல்களில் தெரியும் இத்தாலிய பெண்களில் நிர்வாண உடல்களில் இயல்பாகவே ஒர் அழகுணர்வு இருக்கிறதோ என்று தோன்றுகிறது. எத்தனை சுதந்திரம் இருந்தாலும், அதை தேவைக்காக சரியாக கையாளுகிறார்கள். செக்ஸையோ, வன்முறையையோ திணிப்பதில்லை. ஆனால் இவர்களின் வாழ்க்கையில் செக்ஸும், போதையும், வன்முறையும் இழைந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. சுப்போரே ஒர் வித்யாசமான அனுபவம்.


Mar 4, 2019

உயிர் பெரும் பி & சி

உயிர் பெரும் பி & சி
ஒரு வளர்ந்து வரும் நடிகன் ஸ்டார் ஆவது பி &சி எனும் ஏரியாக்களில் வெற்றிக் கொடி நாட்டும் போதுதான். அப்படித்தான் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித், விஜய்காந்த் என வரிசைக் கட்டி வென்றவர்கள். ஆனால் அவர்களுக்கான படங்கள் சமீபகாலமாய் வருவதில்லை என்று அங்கலாய்ப்பவர்கள் ஒரு புறமிருக்க, இன்னொரு பக்கம் வந்தா மட்டும் ஓடிருதா? என்பார்கள்.

ஆனால் டிஜிட்டல் வருவதற்கு முன் பிலிம் காலங்களில் ஒரு படம் சிட்டிக்களில் ரிலீஸ் ஆகி, மெல்ல, அடுத்தடுத்த செண்டர்களுக்கு சென்று அங்கும் ஒரு பெரிய ரவுண்ட் ஓடி மூச்சு வாங்கி, பிரிண்ட் தேய்ந்து புது பிரிண்டுகள் போடப்பட்ட காலமெல்லாம் இருக்க, இன்று ஒரே நாளில் தமிழ் நாட்டில் உள்ள அத்தனை செண்டர்களிலும் படங்களை திரையிட முடிகிறது. அதனால் பி & சி எனும் ஷிப்டிங் மார்கெட்டே இல்லாமல் போய் விட்ட நிலையில், ஒரே நேரத்தில் அத்துனை அரங்குகளிலும் வெளியாகும் படங்களுக்கான வரவேற்பு கிடைக்கிறதா? என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும்.

சமீபத்தில் எங்களது “6 அத்யாயம்” திரைப்படத்தை ஒர் பி செண்டர் ஏரியாவில் வெளியிட்டோம். திரையரங்கு உரிமையாளருக்கு போன் செய்த போது, “அதிசயமா இருக்கு சார். முகம் தெரிஞ்ச ஹீரோக்கள் நடித்த படத்துக்கே 20 பேருக்கு மேல வர மாட்டாங்க மொத ஷோவுக்கு. உங்க படத்துக்கு 120 டிக்கெட் எப்படின்னே புரியலை” என்றார். இதுதான் நிஜ நிலமை பி & சி தியேட்டர்களில்.

சிங்கிள் ஸ்கீரீன் தியேட்டர்கள் காத்தாட ஆரம்பிக்க, மெல்ல அரங்குகள், கொடவுன்களாகவும், கல்யாண மண்டபங்களாகவும் மாற, சிட்டியைப் போல சிலது மல்ட்டி ப்ளெக்ஸுகளாய் உருமாற, மல்ட்டிப்ளெக்ஸ் ஆடியன்ஸை மட்டுமே குறிவைத்து படங்கள் தயாரிக்கப்பட, சிட்டி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் ஏரியாக்களில் மட்டுமே கல்லா கட்டும் அர்பன் எனச் சொல்லப்படும் மாநகர கதைகள் அதிகம் வர ஆர்மபித்தது. த்ரில்லர் படங்களும், மார்டர்ன் படங்களும், ப்ளாக் காமெடிக்களும் தான் இந்த மார்கெட்டை தக்க வைத்துக் கொண்டிருக்க, எப்போதோ ஒரு முறை தான் பி & சி ஏரியாக்களுக்கு படங்கள் தயாராகின்றன.

முக்கியமான காரணம் இம்மாதிரியான பி &சி படங்களை பற்றி இணையங்களில் பெரிதாய் கொண்டாடப்படுவதேயில்லை. அது மட்டுமில்லாமல் அப்படங்களை கழுவி கழுவி ஊற்றுகிறார்கள். இணையத்தில் மட்டுமே வெற்றி பெற்றால் போதும் என்கிற எண்ணம் தான் பெரும்பாலான நடிகர்கள் மனதில் இருக்கிறது. ஏனென்றால் இம்மாதிரியான கிராமப்படங்களில் நாடகத்தனம், செண்டிமெண்ட் வசனங்கள், டிபிக்கல் சண்டைக்காட்சிகள் என பல வருடங்களாய் இருக்கும் டெம்ப்ளேட் க்ளீஷே காட்சிகள் நிரம்பியிருக்கும். அதை ட்ரெண்டி பார்வையாளர்கள் கழுவி ஊற்றுவார்கள். ஆனால் அதே படங்கள் தான் சாதாரண பார்வையாளனுக்குள் ஒர் தொடர்பை ஏற்படுத்துகிறது. ஆனால் இம்மாதிரியான படங்களில் நடிக்க ஆரம்பித்தால் அது ஓடாது. கொஞ்சம் வெற்றி கொடுத்திருக்க வேண்டும். மக்களின் முகம் தெரிந்தவனாக  இருக்க வேண்டும் அப்படியான நடிகர் தான் இம்மாதிரியான படங்களை பார்க்க தியேட்டருக்கு வருவார்கள் மக்கள். இது தெரியாமல் ஒர் புது முக நடிகன் இம்மாதிரியனா பி & சி படங்களில் நடித்தால் வெற்றியடைவது கொஞ்சம் கஷ்டமே.

சென்ற வாரம் வெளியான இரண்டு படங்களுமே தியேட்டருக்கு வராத மக்களை மீண்டும் அழைத்து வந்திருக்கிறது என்கிறார்கள். தமிழ்படம் எல்லா வயதினரையும் இழுந்து வந்துருக்க, முதல் நாள் வசூல் மட்டுமே 3 கோடியை தாண்டியிருக்கிறது. உடன் வந்த கடைக்குட்டி சிங்கம் மெல்ல பிக்கப் ஆகி, இன்று தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெற்றியை தாண்டியிருக்கிறது. குறிப்பாய் முன்பு கொம்பன் படம் வந்த போது பல ஊர்களில் மக்கள் கூட்டமாய் வண்டி கட்டிக் கொண்டு வந்தார்கள் என்ற பேச்சு இருந்தது. அது போல பேமிலி கூட்டம் நன்றாகவே இருப்பதாய் தகவல். என்னதான் பெரிதாய் ஹிட் என்றாலும் திங்கட்கிழமை அன்று தான் படங்களில் ஒரிஜினல் நிலை தெரியும். அந்த வகையில் பார்த்தால் திங்கட்கிழமை மதியக் காட்சிக்கு சென்னையில் உள்ள ஒர் மல்ட்டி ப்ளெக்ஸில் சுமார் ஐம்பது சதவிகிதம் ஆடியன்ஸ் கடைக்குட்டி சிங்கத்துக்கு வந்திருந்தார்கள். படத்தின் வெற்றியை இது பறை சாற்றுகிறது.

தெலுங்கில் இம்மாதிரியான பேமிலி செண்டிமெண்ட் படங்கள் பெரும் வரவேற்பை பெரும் விஷயம். கூட்டு குடும்பம், விவசாயம், ஒவ்வொரு வளரும் ஹீரோவும் இம்மாதிரியான செண்டிமெண்ட் பி செண்டர் படங்களில் நடித்துவிடுவார்கள். ஏனென்றால் அம்மாதிரியான படங்களின் வெற்றி அவர்களை இன்னமும் நெருக்கமாய் மக்களிடையே கொண்டு போய் சேர்க்கும் என்பதால். சதமானம் பவதி ஒர் ஹிட் என்றால் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட “ரங்கஸ்தலத்தின் வெற்றி அதை விட பெரியது. வசூலில் மட்டுமில்லாமல் ராம் சரணை ஒர் நல்ல நடிகனாகவும் வெளியே தெரிய வைத்தது.

வியாபாரமாய் வந்த ரெண்டு படங்களும் பெரும் ஹிட் என்பது தமிழ் சினிமாவுக்கு நல்ல விஷயம் தான். இரும்புத்திரை, டிக் டிக் டிக், தமிழ் படம்2, கடைக்குட்டி சிங்கம் என திரும்பவும் மக்கள் தியேட்டர் நோக்கி வரவழைத்திருக்கிறார்கள். இதை சாக்காய் வைத்து மீண்டும் அவர்களின் டவுசர் அவிழ்க்க முயலாமல், ஆன்லைன் டிக்கெட் கொள்ளை, பார்க்கிங் கொள்ளை, ஸ்நாக்ஸ் கொள்ளைகளை விட்டால் தமிழ் சினிமா உயிர்த்தெழும்.