Thottal Thodarum

Mar 14, 2019

Manmarziyan

Manmarziyan
சுவாரஸ்யமான கதைகள் என்று பார்த்தால் அது மனித உறவுகளிடையே ஏற்படும் புரிதல் சார்ந்த பிரச்சனைகள் தான் என்பேன். உறவுகளிடையே இருக்கும் முரண் தான் மிக சுவாரஸ்யம். அந்த வகையில் முன் காலத்தில் எல்லாம் நிறைய படங்கள் அம்மாதிரியான கதைக்களன்களை சார்ந்து வந்து கொண்டிருந்தது. இப்போது உறவுகள் சார்ந்த கதைகள் வராமல் இல்லை. அவையனைத்தும் இளைஞர்கள் சார்ந்த கதைக் களன்களாய் இருப்பதால், நெகிழ்ச்சிக்கோ, காதலைத் தவிர உணர்வு பூர்வமான விஷயங்களுக்கோ முக்யத்துவம் இல்லாமல் வந்து கொண்டுதானிருக்கிறது. அப்படியான இளைஞர்களின் வாழ்க்கை, காதல் கல்யாணம் சார்ந்த நெகிழ்ச்சியுட்டும் திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை நெஞ்சத்தை கிள்ளாதே.

பின்நாளில் மணிரத்னம் மெளனராகம் படம் இன்றளவும் பேசப்பட்டுக் கொண்டிருப்பதற்கான காரணம் காதலும், அது பின் சார்ந்த உளவியம் குழப்பங்களும், அதனால் தற்காலத்தில் ஏற்படும் திருமண பந்த பிரச்சனைகளும் தான். கொஞ்சம் சென்சிபிளாக படமெடுக்க வேண்டி நினைக்கிறவர்கள் ஜாக்கிரதையாய் தொடுவார்கள். அப்படியான படங்கள் மிக சிலவே வெற்றி பெற்றிருக்கிறது.

கொஞ்சம் காலமாய் டார்க் படங்களிலிருந்து விலகி, சீரியஸாய் ஸ்மால் டவுன் காதல் படங்களாய் எடுத்துக் கொண்டிருக்கும் அனுராக் காஷ்யப்பின் லேட்டஸ்ட் மன்மர்ஜியான். ரூமிக்கும் விக்கிக்கும் காதல். இவர்களின் காதல் பெரும்பாலும் அதீத காமத்தினூடே ஊடாடிக் கொண்டிருக்க, ஒரு நாள் வீட்டில் மாட்டிக் கொள்கிறார்கள். இப்படி இருப்பதெல்லாம் வேலைக்கு ஆகாது. நீ அவனை திருமணம் செய்து கொள்ள வீட்டிலிருந்து பெண் கேட்டு வரச் சொல் என்கிறார்கள். அவனுக்கு திருமணம் செய்ய பிடிக்கவில்லை. தான் இன்னும் நிறைய செய்ய வேண்டும். பிரபலமனா டி.ஜே ஆக வேண்டுமென்ற பல கனவுகள். அதனால் தவிர்க்கிறான். வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை மணக்க சம்மதிக்கிறாள் ரூமி.  ரோபி மாப்பிள்ளையாய் நுழைகிறான். அதன் பின் என்ன நடக்கிறது என்பது கதை.

சேம் டெம்ப்ளேட் மெளனராகம்தான். ஆனால் கையாண்ட விதத்தில் தான் படம் வேற கலர். முக்கியமாய் டயர் டூ சிட்டியான சண்டிகார் போன்ற நகரத்தின் பின்னணி. அதன் கலாச்சாரம். அங்கே “போல்டாய்” இருக்கும் ரூமி போன்ற பெண். டிஜி. அமைதியான ரோபி. என வித்யாசமான கேரக்டர்கள். ரூமியாய் டாப்ஸி. முழு படத்தையும் தன் தோளில் தூக்கி சுமக்கிறார். எத்தனை எமோஷன்கள் அவரிடம். காதல், காமம்,குழப்பம்.,என கலந்து கட்டி வெளிப்படுத்தும் பாடி லேங்குவேஜ். எல்லாம் ஆசம். விக்கி கவுசல். மனிதன் செம்ம. ஆட்டிடியூட். எமோஷனல் க்ரூக்காக எக்ஸெண்ட்ரிக் பாடிலேங்குவேஜில் இக்கால நிலையில்லாத, கனவுகளில் மிதக்கும் இளைஞனை கண் முன் காட்டுகிறார். அபிஷேக் பச்சன். கண்ட்ரோல்ட் பர்பாமென்ஸ்.

படம் நெடுக ரூமியின் குழப்பமான ரெட்டை மனநிலையை குறிக்கும் வகையில் வரும் ரெட்டையர் பெண்களின் நடனங்கள். ஏன் கஷ்மீரில் வரும் வழிப்போக்கர்களாய் வரும் ஆண் ரெட்டையர்.  ரெட்டையர் பெண்களின் அபார நடனம். பின்னணியில் என்பது அடி ரோடி ட்ராபிக்கை வைத்துக் கொண்டு போர் க்ரவுண்டில் ஆடும் காட்சி விஷுவல் ட்ரீட்.

மிக நெருக்கமான செக்ஸ் காட்சிகள். சண்டிகர் மாதிரியான டயர் டூ நகர்களில் வசிக்கும் பெண்களுக்கு இத்தனை சுதந்திரமா? என்ற கேள்விகளை எழுப்பும் படியான கேரக்டரைஷேஷன். எந்த முடிவையும் சரியாய் எடுக்காமல் அலை பாய்ந்து கொண்டிருக்கும் கேரக்டர்கள் சுவாரஸ்யம் தான் என்றாலும், திரும்பத் திரும்ப அதையே செய்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது அட ஏதாச்சும் ஒன்னை டிசைட் பண்ணும்மா என்று பொறுமையிழக்க வைக்கிறார்கள். அபிஷேக் பச்சனின் கேரக்டரில் ஏன் இத்தனை ப்ரச்சனையுடைய பெண்ணை அடைய நினைக்கிறான் என்கிற கேள்விக்கான பதில் ஸ்ட்ராங்காய் இல்லை.


ஆனால் அவர்களுக்குள் ஏற்படும் நெருக்கம் உருவாகும் காட்சி. மெல்ல பேசிக்கொள்ளும் வசனங்கள். முக்கியமாய் க்ளைமேக்ஸில் பேசிக் கொள்ளும் வசனங்கள் பியாண்ட் சன்ஷைன் டைப் வசனங்கள் சுவாரஸ்யம். அமித் திரிவேதியின் இசை மிகப் பெரிய பலம். கன்வன்ஷனலான ஊரில் நடக்கும் கதைக்கும் அன்கன்வன்ஷனலான இசை. முரண் தான் ஈர்ப்பு. இன்னும் கொஞ்சம் கேரக்டர்களிலும், அதன் பின்னணியையும் சரியாய், அழுத்தமாய் கொடுத்திருந்தால் நீங்காத ஒர் இடத்தை இப்படம் அடைந்திருக்கும் என்று தோன்றுகிறது. முக்காபாஸில் கலக்கிய அனுராக் இதில் கொஞ்சம் தளர்வடைந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

Post a Comment

No comments: