டெலிவரி
ஆஃபுகள் வரமா? சாபமா?
சமீபத்தில்
கும்பகோணத்திற்கு போயிருந்த போது சுவிக்கி டி சர்ட் போட்ட
இளைஞர்களை ஆங்காங்கே பார்க்க முடிந்தது. அட இங்கேயும் வந்துட்டிங்களா
மஹாப்பிரபு? என்று
ஆச்சர்யப்பட ஏதுமில்லை. காரணம் லாஜிஸ்டிக் பிஸினெஸ் போல லாபம் வரும்
தொழில் இல்லையென்றே சொல்ல வேண்டும். ஆனால் அதற்கு சரியான எக்ஸிக்யூஷனும், செயல் திறன் கொண்ட பின்னணியும் அமைய பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைன்
உணவு டெலிவரி வியாபாரம் 2022 ஆம் ஆண்டின் கணக்குபடி
581.86 பில்லியன் ரூபாய்கள் என்றும் வருகிற 2028க்குள் 3059.25 பில்லியன் வரை போகும் என்கிறார்கள்.
இதில் உணவு டெலிவரி ஆப்களின் தொழில் வகைகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று
எல்லா உணவகங்களையும் ஒன்றினைத்து அதன் மூலம் ஆர்டர்களை அந்தந்த நிறுவனங்களுக்கு அனுப்பி அவர்களைக் கொண்டே டெலிவரி செய்வது. இன்னொன்று ஆர்டர்களை தங்களது நிறுவன ஆட்கள் மூலம் பெற்று டெலிவரி செய்வது. இதில் இரண்டாவது வகைத்தான் இன்றைய பெரும் பிஸினெஸ்.
உணவு
டெலிவரி ஒரு காலத்தில் பிட்சா
கடைக்காரர்கள் தான் செய்து கொண்டிருந்தார்கள். பேப்பர்களில் விளம்பரம் போட்டு, ஆஃபர்களை அள்ளிவிட்டு, மெக்ஸிக்கன் ரொட்டியை அட்டகாசமான வீடியோ விளம்பரங்கள் மூலம் மக்களிடையே டிவிக்கள் மூலம் ரீச்சாகி, அது ரிச்சான, பணக்காரத்தனமான
உணவு என்பதை தாண்டி அதை உண்ணுவதை கலாச்சாரமாய்
மாற்றினார்கள். குடும்பமாய் சாப்பிட டைனிங் வராதவர்கள் தான் இவர்கள் டார்கெட். பணமிருக்கும் இளைஞர்களுக்கு ஈஸியாய் சென்று சேர்க்க வேண்டும் என முடிவெடுத்து உலகம்
முழுவதுமே நேரிடையாய் சூடா டெலிவரி செய்யும் விதத்திலேயே இங்கேயும் டெலிவரி செய்தும், 40 நிமிடத்திற்குள் டெலிவரி ஆகவில்லையென்றால் மொத்த பிட்சாவும் இலவசம் என்று எல்லாம் அறிவித்த பழக்கிவிட, மெல்ல இன்று பிட்சா சாப்பிடாத கூட்டம் இல்லையென்றே சொல்லலாம்.
டெலிவரி
பிஸினெஸ் மெல்ல டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களின வர ஆரம்பிக்க, அவர்கள்
பொருட்களை ஆர்டர் கொடுத்துவிட்டால் போதும் வீடு தேடி வரும் என்று ஆரம்பிக்க, மெல்ல அண்ணாச்சிகளும் அதை பின்பற்ற ஆரம்பித்தார்கள்.
கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்னால் என்னுடய கேபிள் டிவி கஸ்டமர்களிடம் அம்மாத மளிகை பொருட்களின் லிஸ்டை பெற்று அதை ஒரிரு நாளுக்குள்
அவர்கள் வீடு தேடி தரும் வியாபாரத்தை ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல்
நடத்தினோம். மளிகை வியாபாரத்தின் நுணுக்கங்களையும், லாப நஷ்டங்களையும் முக்கியமாய்
நேரத்திற்கு கொடுக்கும் லாஜிஸ்டிக் பிரச்சனைகளால் லாபம் இருக்கும் தொழில் என்று தெரிந்தும் நடத்த முடியாமல் போனது. எங்களது திறமையின்மை என்றே சொல்ல வேண்டும்.
சரவணபவன்
போன்ற பெரிய ஓட்டல்கள் உணவுப் பொருட்களை டெலிவரி செய்யும் ஆப்கள் வரும் வரை அவர்களே ஆட்களை
வைத்து டெலிவரி செய்து கொண்டிருந்தார்கள். என் நினைவுக்கு தெரிந்து
ஃபுட் பாண்டா எனும் நிறுவனம் தான் 2012 ஆம் ஆண்டில் கொஞ்சம்
கமர்ஷியலாய் புட் டெலிவரி பிஸினெஸுக்குள் இந்தியாவில் பெரிய அளவில் காலூன்றிய நிறுவனம் என்று நினைக்கிறேன். அதை
பின்னாளில் ஓலா 2017 ஆம் ஆண்டு வாக்கில்
வாங்கியது. அப்படியானாலும் சுவிக்கி, ஜோமேட்டோ தான் இன்றைய உணவு டெலிவரி உலகின் ராஜா என்றே சொல்லலாம்.
ஆரம்ப
நாட்களில் அவர்கள் வியாபாரத்தைப் பிடிக்க, வெறும் ரெண்டு சதவிகிதம் கொடுத்தால் போதும் என்றுதான் ஆரம்பித்தார்கள். இன்னும் சில பெரிய நிறுவன
உணவகங்களை எந்தவிதமான டிரான்ஸாக்ஷன் ஃபீஸுமில்லாமல் தான்
ஆரம்பித்தார்கள். ஆனால் இன்றைய நிலை அப்படியல்ல. சென்னை போன்ற நகரங்களில் இவர்களை நம்பியிராத உணவகங்களே கிடையாது என்று ஆகிவிட்டது. ஏன் பல பிரபல உணவகங்களில்
இவர்களின் டெலிவரிக்காகவே தனிக் கவுண்டர்களே வைத்துவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த உணவு டெலிவரி எத்தகைய வளர்ச்சியடைந்திருக்கிறது என்று.
அவர்களின்
வளர்ச்சியை விடுங்கள் இதனால் கடைக்காரர்களுக்கு என்ன லாபம்? உணவகங்கள் இல்லாமல் வெறும் க்ளவுட் கிச்சன் எனும் முறையில் பல புதிய உணவகங்கள்
கொரானா காலத்தில் தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களை ஆக்கிரமிக்க தொடங்கியது. உணவு டெலிவரியின் மூலமாக மட்டுமே பெற, கொடுக்க முடியும் என்ற சூழலில் வீட்டிலிருந்தே வேலை செய்ய ஆரம்பித்த மக்களின் உணவு தேவைகளுக்கு இவை பெரிதும் உதவியது
என்றாலும் மெல்ல தொழில் இவர்களை நம்பி நடத்த வேண்டியாகிவிட்டது என்கிறார்கள் நிறைய உணவகங்கள்.
கொரோனா
காலத்தில் உணவகத்தில் சர்வ் செய்ய முடியாததை இம்மாதிரியான டெலிவரி ஆப்புகள் மூலம் உணவை
விற்பனை செய்தது பலரை கொரானாவுக்கு பிறகு தாக்கு பிடிக்க வைத்தது. அதே நேரத்தில் பல
பிரபல உணவகங்களின் ப்ராஞ்சுகள் இன்றைக்கு மூடப்பட்டதற்கும் அதுதான் காரணம். க்ளவுட் கிச்சன்களின் வளர்ச்சியும் வழக்கமான உணவகங்களீன் வீழ்ச்சிக்கு இன்னொரு காரணம். இருநூறு ரூபாய் கொடுத்து பிரியாணி சாப்பிட்டவர்கள் எல்லாம் நல்ல ஹோம் மேட் புட் என்று க்ளவுட் கிச்சனில் தயாரிக்கப்படும் பிரியாணிக்கு
150 ரூபாய் கொடுத்தால் போதும் எனும் போது வியாபாரம் நன்றாகவே நடக்கும். ஆனால்
மெல்ல இந்த உணவக நிறுவனங்களின் இணைப்பு முன்பு போல சாதாரணமாய் இல்லை.
ஆஃப் நிறுவனங்கள் இந்த உணவகங்களை இணைக்க நேரம் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தது.
அவர்களுக்கான
டிமாண்ட் அதிகமாக, அதிகமாக இணைப்புக்கு ஆகும் நேரமும், அவர்களுடய கமிஷன் சதவிகிதமும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. ஆரம்பித்த போது வெறும்
2 சதவிகிதத்தில் ஆரம்பித்தவர்கள் மெல்ல 6%, 8% என்று போய் இன்று 27% வாங்குகிறார்கள். ஆரம்பத்தில் அவர்களுடய கடை விலைக்கே கொடுத்துக்
கொண்டிருந்த கடைக்காரர்கள் எல்லோரும் கமிஷன் அதிகமாக, அதிகமாக மெல்ல தங்களது விலையை அவர்கள் கொடுக்கும் கமிஷன் தொகையையும் சேர்த்து விற்க ஆரம்பித்தார்கள். அதாவது
ஒரு பிரியாணி 100 ரூபாய் என்று வைத்துக் கொண்டால் 130 ரூபாய் என்று வைத்து விற்க வைத்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை நாம் கொடுக்கும் கமிஷன் காசை ஏற்றி வைத்துத்தான் விற்கிறோம் என்று நினைத்து விற்பனை செய்தவர்கள் கட்டங்கடைசியாய் கணக்கு பார்க்கும் போது நஷ்டக்கணக்கு வந்ததுதான் மிச்சம் என்கிறார்கள் ஏற்கனவே க்ளவுட் கிச்சன் நடத்தி மூடியவர்கள். அதெப்படி நஷ்டம் வரும் என்று கேட்டதற்கு கிடைத்த கணக்கு மலைப்பாகவே இருந்தது.
உதாரணமாய்
கடலூரில் மல்ட்டி க்யூசைன் உணவகம் நடத்து நண்பர் ஒருவர் டீடெயிலாக கொடுத்த கணக்கு இதான். ஒரு
சிக்கன் பிரியாணியின் கடை விலை ரூ.150.
அதை ஒரு டெலிவரி ஆஃப்
கஸ்டமருக்கு விற்கும் பட்சத்தில் அவர்களுக்கு ஆஃப் நிறுவனங்கள் கேட்கும் கமிஷன் 23%. இது கடலூரரூக்கான கமிஷன்.
சென்னைக்கு 27% வரை போகும். எனவே
அதையும் சேர்த்து வாடிக்கையாளருக்கு அவர் உணவக லிஸ்டில் ஒரு சிக்கன் பிரியாணிக்கு
காட்டும் தொகை 185 ரூ. இந்த 185 ரூபாயில்
5% ஜி.எஸ்.டியாய் 9.25 பைசா
கழித்தால் கிடைக்கும் தொகை 175.75பைசா. இதில் உணவு டெலிவரி நிறுவனங்கள் கமிஷன் தொகை 23% ஆன ரூ.42.55 பைசா,
இந்த கமிஷன் தொகைக்கு 18% ஜி.எஸ்,டி
தொகையாய் 7ரூபாய் 65 பைசாவைவும், டி.சி.எஸ்
மற்றும் டி.டி.எஸ்
வகையில் ரூ. 3.70 பைசாவையும் கிடைக்கும் 175.75 பைசாவில் கழித்துக் கொண்டால் கடைக்காரருக்கு 150 ரூபாய் பிரியாணியை உணவு விற்பனை ஆப்பின் கமிஷன் சேர்த்தும் வைத்தும் வருவது. 121.85 பைசா மட்டுமே கிட்டத்தட்ட 35% விற்பனையிலிருந்து குறைகிறது.
சரி
ஏன் ஒத்தை ஒத்தையாய் கணக்கு செய்கிறீர்கள். உணவு வியாபாரமே வால்யூம் தானே? அதிகமாய் உணவுப் பொருட்கள் விற்பனை ஆனால் லாபம் வந்திடும் என்று வாய்க்கணக்கு சொல்வார்கள். இவர்கள் பெரும்பாலும் உணவகம் நடத்தாதவர்கள். அப்படி ஒரு நாளைக்கு மொத்த
வியாபாரமாய் 30 ஆயிரம் ரூபாய்க்கு உணவு ஆஃப்புகள் மூலம் விற்பனையாகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். 5% ஜி.எஸ்.டி
ரூ.1500 போக 28500 ரூபாய்தான் கடைக்காரின் வரவு. உணவு
ஆஃப்புகளிலன் 23% கமிஷன் தொகை 30 ஆயிரத்துக்கே கணக்கு. எனவே 6900 ரூபாயும் அந்த கமிஷனுக்கு ஜி.எஸ்.டி
தொகைக்கு 18% வீதம் 1242 ரூபாயும், ஏற்கனவே டி.டி.எஸ்.
டி.சி.எஸ் வகையில்
ஒரு 600 ரூபா எல்லாம் கழித்து அவர்களுக்கு வரும் தொகை வெறு 19 ஆயிரத்து 758 ரூபாய் மட்டுமே. கிட்டத்தட்ட அதே 36%. பின்பு எப்படி ஒரு க்ளவுட் கிச்சன்
லாபகரமாய் நடக்கும். ஆரம்பக்காலங்களில்
வால்யூமும், ஸ்டார் ரேட்டிங்கும், ரெவ்யூஸும், வர வர உற்சாகமாய்
இருக்கும். போகப் போக தொகை வர
ஆரம்பிக்கும் போதுதான் தெரியும் நாம் நஷ்டத்தில் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறோம் என்று.
சரி
இது மட்டுமா பிரச்சனை என்றால் ஆஃபர்கள் எனும் ஒரு பூதம் இந்த கடைக்காரர்களை எப்படி? எப்போது? தாக்கும் என்று அவர்களுக்கே தெரியாதாம். இவர்களுக்கே தெரியாமல் 20 முதல் 50 சதவிகிதம் வரை ஆஃபர் போட்டு
விடுவார்களாம். அதை நீங்கள் உங்கள்
டேஷ்போர்ட்டை பார்த்துக் கொண்டேயிருந்தால் மட்டுமே அவரவர் ஏரியா பி.எஸ்.ஏவிடம்
சொல்லி நிறுத்த முடியும். ஒருவேளை கவனிக்காமல் விட்டுவிட்டால் அவ்வளவுதான் நஷ்டத்திற்குத்தான் விற்பனை செய்ய வேண்டும். அப்படி விற்பனை செய்ய விரும்பவில்லை. ஆர்டர் வந்துவிட்டது. நீங்கள் உங்கள் உணவகத்தில் அதை கேன்சல் செய்துவிட்டீர்கள்
என்றால் அதற்கு உணவுப் பொருளின் விலையில் 20% வாராவாரம் அனுப்பும் பணத்தில் பிடித்து கொள்வார்களாம்.
ஆஃபர்கள்
கொடுக்கவில்லை. இது தான் என்
விலை என்று கடைக்காரர் முடிவெடுத்துவிட்டால் அவர்களுக்கு ஆர்டர் வராது. கடையை தேடி ஆர்டர் போட்டால் கூட அங்கே உங்கள்
உணவகத்திற்கான பிக்கப் ஆட்கள் இல்லை என்று வந்துவிடுமாம். வேறு வழியில்லாமல் ஆஃபர் போட்டே ஆக வேண்டிய கட்டாயம்
உணவக உரிமையாளர்களுக்கு. ஆஃபர்கள் ஏன் போட்டே ஆக
வேண்டிய சூழல் என்று யோசித்தால் இம்மாதிரியான டெலிவரி ஆஃப்களின் கஸ்டமர்களின் வகையை மூன்று வகையாக பிரிக்கலாம் என்கிறார்கள். ஆஃபர்கள்
இருந்தால் மட்டுமே வாங்கும் கஸ்டமர்கள். இவர்கள் கிட்டத்தட்ட 60% பேர். அடுத்த வகை கஸ்டமர் ரொம்பவே
சூஸி. நல்ல சுவையான, தரமான, டேஸ்டியான உணவுக்காக எந்த ஆபர் இல்லாவிட்டாலும் வாங்குபவர். இவர்கள் வெறும் 10% மட்டுமே. மீதமுள்ள 30% வாடிக்கையாளர்கள் ஆஃபர், குவாலிட்டி ரெண்டுக்கும் சாய்பவர்கள். எனவே தான் ஆஃபகள் அதிகமாய் ஆஃபர் கொடுப்பவர்களை ஆதரிக்கிறது. நிறைய பேருக்கு கொண்டு போய் கொடுத்தால் தான் அவர்களுக்கு பணம்.
இது
தவிர வாங்கி சாப்பிடும் வாடிக்கையாளர் அக்கடைக்கான ஸ்டார் ரேட்டிங், கமெண்ட்ஸ் எல்லாம் போட்டு வைத்தால் அக்கடையை சர்ச் இல்லாமல் காட்டுமா? என்று கேட்டால். அதுதான் இல்லை என்கிறார்கள். அவர்களது கடையை முன்னே காட்ட ஒரு தொகை. இல்லை
உங்களது பிரியாணியை மட்டுமே முதல் பக்கத்தில் காட்ட ஒரு தொகை. அதாவது
ஒரு ஐட்டத்தை க்ளீக் செய்தாலே ரூ.10 வரை கொடுக்க வேண்டும்.
அதற்கு முன்பணமாய் ஒரு குறிப்பிட்ட தொகையை
விளம்பரத்துக்காக எடுத்துக் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் கடை மக்கள் கண்களுக்கு
புலப்படாது. அதிகபட்சமான ஆஃபர் கஸ்டமர்கள்தான் முதல் நிலை என்பதால் விளம்பரம், ஆஃபர் கொடுக்காத கடைகள் மக்கள் கண்களுக்கு கிடைக்காது. அதற்கான செலவு செய்யும் தொகையை சேர்த்தால் வருமானத்தில் கிட்டத்தட்ட 40% போய்விடுகிறது என்கிறார்கள்.
இதைத்
தவிர பேக்கிங் மெட்டீரியல்கள். அதற்காக தனியாய் 5 ரூபாய் வரை வாங்கிக் கொண்டு
கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஜோமேட்டோ, சுவிக்கி போன்ற நிறுவனங்களின் பெயர். போட்ட ஸ்டிக்கர்களுக்கு கடைக்காரர்கள்தான் பணம் கொடுக்க வேண்டுமாம். இப்போதெல்லாம்
பல பிரியாணிக் கடைகளில் வெங்காய பச்சடி மட்டுமே கொடுக்கிறார்கள். கிரேவியோ, அல்லது கத்திரிக்காய் வேண்டுமென்றால் தனியாய் 30 ரூபாய் கொடுத்துதான் வாங்க வேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறார்கள். கடையில் போய் உட்கார்ந்து சாப்பிட்டால் அரை லிட்டர் கிரேவி
கூட இலவசம் தான். விலையும் சல்லீசுதான். வீட்டிலிருந்தபடியே சாப்பிட நாம் கொடுக்கும் உணவின் விலையில் மட்டுமே சுமார் 40%. டெலிவரி, மற்றும் டேக்ஸ் வகையராக்களில் கணக்கில் வைத்தால் 150 ரூபாய் உணவுக்கு, சுமார் 100 ரூபாயாவது அதிகமாக செலவு செய்ய வேண்டியிருக்கிறது.
இது
மட்டுமில்லாமல் இந்த ஆஃப் நிறுவனங்களே அவர்களுக்கான தனி க்ளவுட் கிச்சனை
ஆரம்பித்துக் கொள்கிறது. ஆஃபர்கள் அதிகமாகவும், விளம்பரங்களில் முன்னேயும் காட்டி கஸ்டமர்களை தங்கள் வசம் நேரிடையாய் வாங்க வைக்கிறது. அவர்களுக்கு அது செட்டி நாடு
சிக்கன், பட்டர் பன்னீர் மட்டுமே. அதுவும் 200 ரூபாய் உணவு 150க்கு என்று விளம்பரம் தெரிவதால் உடனடி ஆர்டர். எதிர்காலத்தில் இந்த அக்ரகேட்டர் ஆஃபகள் தனியாய் ஒவ்வொரு ஏரியாவிலும் ஒரு க்ளவுட் கிச்சனை
அமைத்தாலும் ஆச்சர்யமில்லை. ஏனென்றால் லாபம் அதிகம்.
பிரச்சனைகள்
ஒரு பக்கம் என்றாலும் கொரானாவுக்கு பிறகு கடை ஆரம்பித்து இன்று
மூன்று ப்ராஞ்சுகள் வரை வளர இந்த
ஆஃப்புகள் தான் காரணம் என்கிறார் நண்பர் ப்ரகாஷ். வெறும் குழம்புக்கடையாய் ஒரு ப்ராஞ்சை ஆரம்பித்தவர்
இன்று மூன்று ப்ராஞ்சுகளை நடத்துகிறார். தன்னுடய ரெகுலர் ஏரியா வாடிக்கையாளர்கள் தவிர, பெரும்பாலான பிஸினெஸ் ஆஃபுகள் மூலமாய் தான் நடக்கிறது. என்ன 100 ரூபாய் உணவை 150 ரூபாய்க்கு தான் விற்கிறேன். சமயங்களில் உணவு இருப்பு இருந்தால் ஆஃபர்களில் போட்டு விற்றுவிடுவேன். சாப்பாடு சார்.. லாபத்துல நஷ்டம் வேஸ்ட் ஆயிரக்கூடாதில்லை என்கிறார்.
ஒரு
சில அயிட்டங்களை என்னால் பார்சலில் சாப்பிட பிடிப்பதேயில்லை. தோசையை எப்படி ஆறிப் போய் சாப்பிடுகிறார்கள்?. மொறு மொறு வடை என்று வரும்
விளம்பரத்தை வைத்து பார்த்தபடி ஆறி போன வடைய
சாப்பிட எப்படித்தான் மனசு வருகிறது. வீட்டில இருந்த படியே வந்தா எப்படியிருந்தாலும் சாப்பிடுவோம் என்கிற கலாசாரம் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதை நாம் விமர்சனம்
செய்ய முடியாது. இன்றைக்கும் நல்ல உணவுகளை தேடியலையும் நல்ல உணவு ரசனையாளர்கள் நேரிடையாய்தான் உணவை தேடி அலைகிறார்கள். டெலிவரி செய்யும் ஆட்களுக்கு கொடுக்கும் சம்பளம். கமிஷன். என பல கந்தாயங்கள்
இதனுள் பேச நிறைய இருக்கிறது.
இது இந்த வியாபாரத்தின் ஒரு பக்கதான். இன்னொரு
பக்கம் உழைப்பு சுரண்டல். அநியாய கமிஷன் என்று ஒரு பக்கம் புரட்சி
பேசினாலும் இம்மாதிரி ஆஃபுகளை ஆரம்பித்து, அதற்கான டெக்னிக்கல் பின்புலம். சர்வீஸ். கூகுள் மேப் போன்றவர்களுக்கு கொடுக்கும் பணம். மார்கெட்டிங். சம்பளம் என கணக்கிட்டால் லாபம்
எவ்வளவோ அதைப் போலவே செலவும் அதிகம் தான். தொழில் இல்லாமல் தொழிலாளர்கள் இல்லை. லாபம் இல்லாத தொழிலில் முதலீடு இல்லை. மூதலீடு செய்து லாபம் சம்பாரிக்கும் தொழிலில் சுரண்டல்களும், ஏமாற்றுகளும் இருக்கத்தான் செய்யும். ஏனென்றால் இவை எல்லாவற்றுக்கும் மேலான அதிகாரம்
அவர்களை சுரண்டுவது நிற்காத வரையில் இது தொடர்ந்து கொண்டே
இருக்கும்.
கேபிள்
சங்கர்.