Thottal Thodarum

Nov 26, 2018

நடிகையர் திலகம் வெற்றியா?

நடிகையர் திலகம் வெற்றியா?
நடிகை சாவித்திரியின் வாழ்கையை பற்றிய படம் என்று ஆரம்பிக்கப்பட்ட போதே பரபரப்பு ஏற்படுத்திய படம். கொஞ்சம் கொஞ்சமாய் அதன் காஸ்டிங் பற்றி தெரிய வர, கீர்த்தி சுரேஷ் தான் சாவித்திரி வேடத்தில் நடிக்கிறார் என்றதும் சோஷியல் மீடியாக்களில் ட்ரோல் செய்தவர்கள் ஏராளம். ஏனென்றால் கீர்த்தி சுரேஷ் அவரது நான்கைந்து எக்ஸ்பிரஷன்களை வைத்து கலாய்க்கப்படுகிறவர். அப்படிப்பட்டவர் எப்படி சாவித்திரியாக நடிக்க முடியும்? தப்பான காஸ்டிங் என்றார்கள். சாவித்திரியின் வாழ்க்கை என்று வரும் போது அவரது வாழ்க்கை பயணத்தில் ஏறி இறங்கிய அத்துனை சம்பவங்களையும சொல்ல விழைந்தால் நிச்சயம் வாழும் வாரிசுகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்ப அதிக வாய்ப்பிருக்கிற நிலையில், எப்படி ஒரு சுவாரஸ்யமான கதையாய் நடிகையர் திலகத்தை உருவாக்க முடியும்? என்கிற கேள்வியும் பலருக்கு இருந்தது.

ஏனென்றால் பயோ பிக் எனும் வாழ்க்கை வரலாற்றை அப்படியே ஏற்றுக் கொண்டு அதை கையாளும் லாவகம் தெரிந்த இயக்குனர்கள் மிகவும் குறைவு. அதுவும் அரசியல் பிரமுகர்கள் என்றால் அவர்களைப் பற்றிய காரசாரமான நெகட்டிவ் விமர்சனங்களை காட்டவே முடியாது. இந்திய அளவில் சென்சார் ஆன படத்துக்கு எந்த மூலையிலிருந்து எதிர்ப்பு வருமென்று யாருக்கும் தெரியாது. அளூம் அரசின் ஆதரவுடன் துண்டு துக்கடா கட்சிகள் கூட ப்ரச்சனையை பெருசாக்கி, ஊதி பட வெளியீட்டை தடுக்க முடிகிற நாடு இது. தமிழகத்தில் கேட்கவே வேண்டாம். எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, கருணாநிதி என அவர்களின் அரசியல் வாழ்வைப் பற்றி வேண்டாம், அவர்களது திரையுலக வாழ்க்கையைப் பற்றி எடுத்தால் கூட அதை அரசியலாக்கி, பஞ்சாயத்து செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். அதையெல்லாம் மீறி மணிரத்னம் எம்.ஜி.ஆர் – கருணாநிதி ஆகியோரை அடிப்படையாய் வைத்து எடுத்த இருவர் படத்திற்கு வந்த எதிர்ப்பு எல்லோரும் அறிந்ததே. தன்னைப் பற்றிய படம் என்பதை அறிந்து அதில் என்னென்ன வைத்திருக்கிறார்கள் என்று ஒன்றுக்கு நான்கு முறை பார்த்து விசாரித்தே கலைஞர் அனுமதித்தார் என்றும் கூறுவார்கள்.

இப்படியான ஒரு மாநிலத்தில் பயோ பிக் என்பது கத்தி மேல் நடப்பது போல. அதிலும் மக்கள் மனதில் இன்றைக்கும் நல்ல பெயரோடு இருக்கும் நடிகையர் திலகம் சாவித்திரியைப் பற்றி எனும் போது இன்னும் கொஞ்சம் ஆர்வம் அதிகமாகத்தான் செய்தது. நடிகையர் திலகத்தின் வாழ்க்கை எனும் போது அதில் ஜெமினி கணேசனை புறந்தள்ளிவிட்டு விட முடியாது. ஏனென்றால் அவரின் ஏற்றத்துக்கும் தாழ்வுக்கும் மிக முக்கிய காரணமான கேரக்டர் ஜெமினி.

ஜெமினி ஒர் திறந்த புத்தகம். அதனால் குடும்பத்திலிருந்து பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஏனென்றால் அவர் இறப்பதற்கு சில வருடங்களுக்கு முன்னால் கூட  அவரின் மகள் வயதுடைய பெண்ணை பகிரங்கமாய் அறிவித்து திருமணம் செய்து கொண்டவர். ஆனால் சாவித்திரியின் வாழ்க்கை என்று வரும் போது தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு சினிமா உலகங்களையும் கவர் செய்தே தீர வேண்டும். சொந்த வாழ்க்கை என்று வரும் போது அவரது பொருளாதார தாழ்வுக்கு மிக முக்கியமான காரணம், அவரது குடிப்பழக்கம். அதற்கு காரணம் நிஜ வாழ்வில் ஜெமினிக்கும் அவருக்குமிடையே ஆன பிரிவு. பின்பு சாவித்ரிக்கும் சந்திரபாபுவுக்குமிடையே ஆன உறவு அதன் மூலம் அதிகமான குடிப்பழக்கம் போன்றவைகளைப் பற்றி பேசியே ஆகவேண்டும்.

ஆனால் இந்த திரைப்படத்தில் தமிழக சினிமாவில் அவர் கோலோச்சிய விஷயங்கள் பற்றி அவ்வளவாக பேசப்படவில்லை. இரண்டு மொழிகளில் எடுக்கப்படவிருக்கிற படம் என்று அறிவித்திருந்தாலும், கடைசியில் தமிழில் வரும் போது டப்பிங் படமாகவே வெளிவந்திருக்கிறது. அதனால் தான் சிவாஜி பற்றி பேசும் போது பாசமலர் காட்சியை ரீ கிரியேட் செய்து மட்டுமே காட்டியிருக்கிறார்கள். நாகேஸ்வரராவை பற்றி பேசியிருக்கும் அளவிற்கு என்.டி.ராமாராவைப் பற்றி பேசவில்லை. கடைசியாய் சங்கரய்யா என்பவரை தேடிப் போனார் என்று கதை ஆரம்பிக்கும் போது நான் ஒருவேளை சந்திரபாபுவைத்தான் அப்படி மாற்றி வைத்திருக்கிறார்களோ என்று கூட நினைத்தேன். ஒரு வேளை சந்திரபாபுவுக்கும் சாவித்ரிக்குமான உறவு குறித்து காட்டினால் சாவித்திரியின் மீதுள்ள புனித பிம்பம் குறைந்துவிடும் என்கிற பயம் காரணமாய்க் கூட இயக்குனர் அதை தொடாமல் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இதெல்லாம் சின்னஞ்சிறிய குறைகளாகவே எனக்கு தெரிகிறது. ஏனென்றால் ஒரு கட்டத்திற்கு பிறகு படம் பார்க்கும் பார்வையாளர்கள் சாவித்திரியின் வாழ்க்கையோடு ஒன்ற ஆரம்பித்துவிடுகிறார்கள் என்பதை திரையரங்கில் கேட்கும் “உச்” கொட்டும் சத்தமும், மிகுந்த அமைதியுமே சாட்சி.

தரமான படங்கள் மலையாளத்தில் வருவதும், அவை கமர்ஷியல் வெற்றி பெறுவது ஒன்றும் பெரிய ஆச்சர்யமில்லை. ஆனால் மசாலா படங்களுக்கு பெயர் போன தெலுங்கு சினிமா உலகத்திலிருந்து தொடர்ந்து எவடே சுப்ரமணியம், அர்ஜுன் ரெட்டி, மஹாநடி போன்ற படங்கள் வெளிவந்து கமர்ஷியல் வெற்றி பெறுவது மகிழ்ச்சியான விஷயம்.

தெலுங்கில் பெரும் வெற்றி பெற்றிருக்கும் இந்த படம் தமிழில் வெற்றியா என்று கேட்டீர்களானால் நிச்சயம் டப்பிங் பட பட்ஜெட்டுக்கு வெற்றியே. ஆனாலும் சிறு ஊர்களில் நிறைய அரங்குகளில் இரண்டாவது நாளிலேயே படம் தூக்கப்பட்டுவிட்டதாய் தகவல். இரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், போன வார இருட்டு அறையில் முரட்டுக் குத்துக்கு நடுவில், மிக சொற்பமான திரையரங்குகளே கிடைத்திருக்க, பெரு நகரங்களில் உள்ள திரையரங்கள், மற்றும் மல்ட்டிப்ளெக்ஸுகள் திங்கள் கிழமை கூட இரவு காட்சிக்கு 80 சதவிகிதம் பார்வையாளர்களை கொண்டு வந்திருக்கிறது.  இளைஞர்கள் தங்களது தாயை அழைத்துக் கொண்டு திரையரங்க்குக்கு வந்ததை கண் கூடாய் பார்க்க முடிந்தது. படம் முடிந்து பல பெண்கள் கண்களை துடைத்துக் கொண்டு போனதை பார்த்த போது சாவித்திரி அவர்களிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். சமயங்களில் உண்மையை சொல்லாமல் இருப்பது கூடநல்லதுதான் போல.


Nov 12, 2018

இருட்டு அறையில் “சென்சார்” குத்து

இருட்டு அறையில் “சென்சார்” குத்து
ஆம் சென்ஸார் குத்துதான். அது ஏ படம். வயது வந்தவர்களுக்கான படம். அதில் ஆபாசமான காட்சிகள் அனுமதிக்கப்பட்டவைதானே? இதில் என்ன பிரச்சனை? என்று கேட்டீர்களானால், நிச்சயம் எல்லா படங்களையும் ஒரே தராசில் வைத்து அவர்கள் பார்ப்பதில்லை என்றே சொல்ல வேண்டும். இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்திற்கு அனுமதி அளித்ததே தவறு என வாதிட்டுக் கொண்டிருக்கிறவர்களுக்கு மத்தியில் ஏன் எங்கள் படங்களுக்கு இவ்வளவு ஸ்ட்ரிக்டு என கேள்வி வைக்கும் இந்த கட்டுரை அபத்ததின் உச்சமாய் கூடத் தெரியும். ஆனால் நிஜத்தை பேசியே ஆகவேண்டும்.
வசவு வார்த்தைகள், குழந்தைகள் மீதான வன்புணர்வு, டபுள் மீனிங் வார்த்தைகள் பெண்களின் க்ளீவேஜ், மற்றும் பின்புற பாகங்கள் ஆட்டுவதை காட்டுவது, உடலுறவை வெளிப்படையாய் காட்டுவது, முத்தக்காட்சி என பல லெவல்களில் சென்சார் தன் வேலையை செய்ய அரசு சட்டம் வகுத்திருக்கிறது என்கிறார்கள். ஆனால் அந்த சட்டங்கள் எல்லா படங்களுக்கும் ஒரே விதமாய் யாரும் பார்ப்பதில்லை.

உதாரணமாய் எங்களுடய “6 அத்தியாயம்” படத்திற்கு சென்சாரில் “ஏ” சர்டிபிகேட் கொடுத்தார்கள். எங்களின் படத்தில் உள்ள காட்சிகளின் தரம் பற்றி எங்களுக்கே தெரிந்திருந்தாலும், அக்காட்சிகளுக்காக யு/ஏ கொடுத்தால் தப்பில்லை என்றே சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் கிடைத்ததோ “ஏ” அதுமட்டுமில்லாமல் 12 காட்சிகள் கட் செய்ய வேண்டுமென்றார்கள். அதை விட மிக முக்கியம் இயக்குனருக்கான மரியாதையை கொடுக்காமல் பேசியது. நானே சேரை எடுத்து போட்டு பேசினேன். உங்கள் கதையில் மிருக உறவு பற்றி காட்சி வைத்திருக்கிறீர்கள், குழந்தை மீதான வன்புணர்வு சம்பந்தப்பட்ட காட்சி வைத்திருக்கிறீர்கள். எனவே அதையெல்லாம் காட்சியிலிருந்து தூக்க வேண்டும். என்றார்கள். மிருக உறவு காட்சியை அனிமேஷனில் செய்து, அதை வெளிப்படுத்தாத வகையில் நாங்களே மறைத்து சென்சார் செய்துதான் படத்தில் காட்டியிருப்போம். அது போல குழந்தை மீதான வன்புணர்வு காட்சிகளில் ஒரு ஷாட்டில் கூட அக்குழந்தைமீது அந்த ஆணின் கை படுபடியாகவோம், அல்லது வக்கிரமாய் அணுகும் காட்சிகளோ கிடையாது. மிகவும் நாசூக்காக அதை வெளிப்படுத்தியிருப்பார் அக்கதையில் இயக்குனர். இப்படியிருக்க, அக்காட்சிகளை கட் செய்து விட்டால் கதையில் என்ன சம்பவம் நடந்தது என்றே படம் பார்க்கும் ரசிகர்களுக்கு புரியாது. அதே போல படம் முடிந்து வரும் அனிமேஷன் காட்சியில் பேய் ஒன்று சுடுகாட்டில் ஆடுகிறது. அதன் கால்களில் கொலுசை மாட்ட விழையும் ஒரு மனிதன் அதை தூக்கிப் போட,அந்த கொலுசு, அங்கிருக்கும் பல மத, சமாதிகளைத் தாண்டி, போய் அந்த பேயில் இல்லாத காலில் மாட்டிக் கொள்ளும். அதில் இந்து சமாதி, கிறிஸ்துவர் சமாதி எல்லாவற்றையும் தாண்டிப் போய் விழும். அது மத நல்லிணக்கத்தை கெடுத்துவிடுமாம். அதே போல பாடல் முடியும் போது சும்மா ரிதமுக்காக “சண்டா மாத்தே” என்று ஒரு அர்த்தமில்லாத வார்த்தை இருக்கும். அதைப் பற்றி தமிழ் ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு விவாதித்தார்கள். கேட்டால் அவர்கள் நேர்மையானவர்களாம். பின்னால் யாராவது சென்சாரை குறை சொல்லக்கூடாது என்பதற்காக உழைக்கிறோம் என்றார்.

எனக்கு சிரிப்பாய் வந்தது. குழந்தை வன்புணர்ச்சியை மையமாய் வைத்து சிறிது காலத்துக்கு முன்னால் தான் ஒரு முழு படம் வெளியாகியிருந்தது. அதில் ரத்தப் போக்கெல்லாம் கூட காட்டப்பட்டிருக்கும். அதற்கு யூ/ஏ சர்ட்டிபிகேட் கொடுத்திருக்கிறீர்கள். என கேட்டால் அது வேறு டீம் என்பார்கள். அவர்களிடம் நான் கேட்டதே. இதையெல்லாம் கட் செய்தால் யூ சர்டிபிகேட் கொடுப்பீர்களா? என்றுதான். இல்லை. ஏக்கே இதையெல்லாம் கட் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு என் பதிலுக்கு கூட எதிர்பாராமல் கிளம்பிவிட்டார்கள். இதையெல்லாம் கட் செய்தால் யூ/ஏ கொடுங்கள். ஏ கொடுக்கும் பட்சத்தில் எந்த கட்டுக்கும் எனக்கு உடன்பாடு கிடையாது என்று சொல்லிவிட்டு மீண்டும் ட்ரிபூனலுக்கு சென்று எந்த கட்டும் இல்லாமல் ஏ வாங்கினோம். அதில் அவர்கள் சொன்ன விளக்கங்கள் செம்ம காமெடி. தனிக்கதையே எழுதலாம்.

இது போன்ற அபத்தங்கள் என் படத்துக்கு மட்டுமல்ல, பல படங்களுக்கு நடந்தேறியிருக்கிறது. ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒவ்வொரு அனுபவம். ஆனால் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தை பார்த்தவர்களுக்கு தெரியும். மேலே சொன்ன அத்துனை விஷயங்களையும் கட்டே செய்யாமல் ‘ஏ’ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டிருக்கிறது. படத்தில் டபுள் மீனீங்க் என்றில்லாமல் அத்தனையும் ஸ்ட்ரையிட் மீனிங், பெண்களின் க்ளீவேஜ் காட்டினாலே அத்துனை நேர்மையாய் இருக்கும் சென்சார் ஆட்கள் அதிலும் ஒரு பெண் சென்சார் ஆபீசராயிருக்கும் நேரத்தில் கிட்டத்தட்ட முழு மார்பையும் காட்ட விழையும் காட்சிகள், குறி பற்றிய விளக்கங்கள். காமத்தைப் பற்றிய பேச்சுக்கள். இரண்டு ஆண்கள் கிறிஸ்துவ பாதிரியார் போலவும், கன்னிகாஸ்தரி போலவும் வேடம் போட்டுக் கொண்டு செக்ஸுக்காக அலைந்து, டபுள் மீனீங்கில் பேசுவதையும், எந்தவிதமான சவுண்ட் மீயூட்டும் இல்லாமல் அப்படியே காட்டப்பட்டிருக்கிறது. ஏ படம் தானே? வயது வந்தவர்களுக்கான படம் அவர்களுக்கு இது தவறில்லை என்று வாதிடுகிறவர்களுக்கு மேலே சொன்ன அத்துனை காட்சிகளும் இல்லாத எங்கள் படத்தி?ற்கு அவர்கள் சொன்ன காரணங்களை பற்றி யோசியுங்கள். சின்ன படங்களுக்கு ஒரு ரூல், கிம்பளம் கொடுத்து கவனிக்கப்படும் படங்களுக்கு ஒரு ரூல் என்பது தான் உண்மை.

இந்த ப்ரச்சனையை இங்கே எழுதுவதற்கான காரணம் நிறைய செக்ஸ் படங்கள் வர வேண்டும் என்பதற்காக அல்ல, பேச வேண்டிய பல வயது வந்தவர்களுக்கான விஷயங்கள் நிறைய உள்ளது. அதை காட்ட வேண்டுமானால் அதற்கு இம்மாதிரியான ஓரவஞ்சகம் இருக்கக்கூடாது. சென்சார்.. கட்டிங்க்  கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் அனைவருக்கும் பொதுவானதாயிருந்தால் தான் சினிமாவுக்கு நல்லது.