இந்தியாவில் குறிப்பிட தகுந்த சிறந்த இயக்குனர்களில் பாசிலும் ஒருவர். பாசிலின் வருஷம்16, பொம்முகுட்டி அம்மாவுக்கு,பூவிழி வாசலிலே, போன்ற படங்களினால் அவர் மேல் அபரிமிதமான காதல் இருந்த கால கட்டம். ஏனென்றால் அவரது படங்களில் இருக்கும் ஒவ்வொரு சின்ன கேரக்டரும் மக்களின் மனதில் நிற்கும் கேரக்டர்களாக வலம் வரும் கேரக்டர்களாக இருக்கும் என்பதால் நான் நடித்து கொண்டிருந்த காலத்தில் பாசில் “ஒரு நாள் ஒரு கனவு” படத்தை ஆரம்பித்தார். அப்போது அவரது அலுவலகம் அசோக்நகரில் போஸ்டல் காலனியில் இருந்தததாய் ஞாபகம். தொடர் முயற்சிக்கு பின்பு அவரை பார்க்க முடியாவிட்டாலும் ஒரு வழியாய் என் போட்டோவை அவர்கள் அலுவலகத்தில் சேர்த்துவிட்டேன்.
எனக்கு தெரிந்து பாசில் என்றில்லை எந்த மலையாள திரைப்பட இயக்குனர் தமிழில் படம் செய்தால் அதில் பிரதான கேரக்டர்களை தவிர மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள், ஏன் சில சமயம் வசனம் எழுதக் கூட மலையாள ஆட்கள் எழுதி பார்த்திருக்கிறேன்.
பாசிலின் படங்களில் பார்த்தால் அவரது கேமராமேன் அனந்த குட்டன், வசனகர்த்தா கோகுல கிருஷ்ணா மற்றும் படத்தில் வரும் பல கேரக்டர்கள் ஆர்டிஸ்ட் கேரளத்துகாரர்களாகவே இருந்ததை மறுக்க முடியாது. இது அவரை மட்டுமே குறை சொல்வதற்காக சொல்லவில்லை. இது தான் அவர்களது வழக்கம். தமிழ் நடிகர்களில் சார்லி மட்டும் இவர்களது லிஸ்டில் இருப்பது ஒரு அதிசயம்.
அப்படியிருக்க ஒரு நாள் எனக்கு அந்த கம்பெனியிலிருந்து கால் வந்தது. ”நான் பாசில் சார் கம்பெனியிலிருந்து மேமேஜர் பேசறேன். உடனே டைரக்டர் உங்களை பார்க்கணும்னு சொல்றாரு.. வர முடியுமா..? ஒரு நல்ல கேரக்டர் ஓகேண்ணா ஐந்து நாள் கேரளாவில ஷூட்டிங். உடனே வாங்க” என்று அவசரபடுத்தினார்.
எனக்கு அன்றைக்கு வேறு ஒரு படத்துக்கு தேதி கொடுத்திருந்தேன் அதனால் நாளை வரலாமா என்று கேட்டபோது.. “அதெல்லாம் முடியாது சார். சார் நாளைக்கு கிளம்பிவிடுவார். உடனே வாங்க” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார். நான் இதுவரை கேள்விபட்ட வரையில் மலையாள நடிகர்கள் தவிர சற்றே பெரிய கேரக்டர்களுக்கு வேறு ஆட்களை தேர்வு செய்ததில்லை. இருந்தாலும் மனதில் ஒரு சின்ன நப்பாசையினால் அன்றைக்கு நான் நடிக்கவிருந்த “தமிழகம்” படத்தின் இயக்குனரை தொடர்பு கொண்டு ஒரு மணி நேரம் வாங்கிக் கொண்டு பிரசாத் லேபுக்கு போனேன்.
மேனேஜர் என்னை பார்த்ததும், “போட்டோவுல கொஞ்சம் செகப்பா இருந்தீங்க.?” என்றபடி சார் உள்ளே இருக்காரு இருங்க சொல்றேன். என்று உள்ளே சென்றவர் மீண்டும் திரும்ப வந்து உள்ளே ராஜா சார் கம்போஸிங் நடக்குது, ஓரமா வெயிட் பண்ணுங்க.. சார் கூப்பிடுவாரு. என்று சொல்லிவிட்டு எனக்கோ ஒரே சந்தோசம் ராஜா சார் கம்போஸிங்கை நேரில் பார்க்க போகிறேன் என்று உள்ளே நுழைந்தேன். உள்ளே ராஜா சார், வாலி, பாசில் ஆகியோர் உட்கார்ந்திருந்தார்கள். மயிர்கால்கள் எலலாம் புல்லரிப்பில் குத்திட்டு நின்றது. தொடர்ந்து டூயூன்களை வாசித்து கொண்டிருந்த இசைஞானி சிறிது ப்ரேக் எடுத்துக் கொள்ள, அங்கே நின்றிருந்த என்னை பாசில் பார்த்து பேர் என்ன என்று கேட்டார் சொன்னேன். சரி சொல்லி அனுப்புகிறேன் என்றார்.
சினிமாவில் இதெல்லாம் சகஜம். அப்புறம் வா.. சொல்லி அனுப்புகிறேன். மைண்ட்ல வச்சிருக்கேன் என்பது போன்ற வார்த்தைகள் எல்லாம் சகஜமே..
அதற்கப்புறம் எந்தவிதமான தொடர்பும் இல்லை. எனக்கு சொல்லப்பட்ட கேரக்டரில் ஒரு மலையாள நடிகர் நடித்ததாக கேள்விபட்டு, என் மனதின் ஆதங்கம் தாங்காமல் அந்த மேனேஜருக்கு போன் செய்தேன் “சார்.. என்ன சார். ஏன் என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்?” என்று கேட்டேன்.
“நீங்க தமிழா..? படத்தில கொழுக்கு மொழுக்குன்னு இருக்கிறத பார்த்துட்டு மலையாளின்னு நினைச்சி கூப்பிட்டாரு..” .
நான் மிகவும் வருத்தப்பட்டேன். இவர் மட்டுமல்ல மலையாளத்திலிருந்து வரும் எல்லா இயக்குனரும் இதே விஷயத்தைதான் தொடர்கிறார்கள். நிச்சயம் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்பதற்காகவோ, நான் ஒரு சிறந்த நடிகன் என்று பீற்றிக் கொள்ளவோ இதை நான் சொலல்வில்லை. அன்றைய நிலையில் நான் ஒரு சாதாரண ஆரம்ப நிலை, வாய்ப்பு தேடியலையும் கேரக்டர் நடிகன் தான். மலையாள நடிகர்களும் சிறந்த நடிகர்களே. அவர்கள் வாய்ப்பு ஏன் கொடுக்கவில்லை என்ற காரணம் சொன்னார்களே அதற்காகத்தான் நான் வருத்தப்படுகிறேன்.
பின்னொரு நாளில் நான் உதவி இயக்குனராய் வேலை செய்து கொண்டிருந்த போது, ஒரு கேமரா மேன் என்னை தொடர்பு கொண்டார். தான் ஒரு சேனலில் கேமராமேனாக வேலை செய்வதாகவும், உங்களுக்கு ஏதாவது தொடர்பிருந்தால் எனக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்குமாறு கேட்டுக் கொண்டு ஒரு சிடியை கொடுத்தார். அதில் அவர் ஒளிப்பதிவு செய்திருந்த ஒரு குறும்படமும், விளம்பர படமும் இருந்தது. அவரது ஒளிப்பதிவு நன்றாக இருந்தது. பின்னொரு நாளில் என்னுடய முதல் குறும்பட வாய்ப்பு கிடைத்த போது ஞாபகமாய் நான் அவரை பயன் படுத்திக் கொண்டேன். அவர் ஒரு மலையாளி. இதை குறிப்பிடுவது கூட எனக்கு கஷ்டமாக இருக்கிறது. அவரிடம் அனுமதி பெற்றுவிட்டுதான் இதை எழுதுகிறேன். அவருக்கும் மனதளவில் மலையாள இயக்குனர்களின் போக்கு வருத்தத்துக்குரியதே என்று சொல்வார். வருத்தப்படுவார்.
நிச்சயம் இது மலையாளிகளுக்கு எதிரான துவேசம் எழுப்பக்கூடிய பதிவு அல்ல. என் மன வருத்தத்தை பதிவு செய்வதற்கான பதிவு. சினிமா ஒன்றில் தான் பல வருடங்களாய் ஜாதி, இன, துவேஷமில்லா ஒரு அணியாக இருந்து வந்தது. ஆனால் இவர்களின் வருகைக்கு பிறகு. கொஞ்சம் கொஞ்சமாய் ஜாதி, இன, அணிகள் உருவாக ஆரம்பித்து, வருத்தத்துக்குரிய விஷயமாக வளர்ந்து வருகிறது.சில வருடங்களுக்கு முன் சுமார் இருபது நாடார்கள் எலலாம் சேர்ந்து ஒரு திரைப்படத்தை தயாரித்தார்கள், அதில் இயக்குனர் முதற் கொண்டு முடிந்த வரை எல்லா முக்கிய டெக்னீஷியன்கள் நாடார்களாய் பார்த்து தேர்ந்தெடுத்தார்கள். நல்ல வேலை படம் ஓடாததால் அடுத்த படம் தயாரிக்கவில்லை. இப்படி பட்ட நிலை உருவாகாமல் தடுக்க ஜாதி, இன, மத துவேஷத்தை அட்லீஸ்ட் திரை துறையிலாவது தவிர்ப்போமே..
திறமை எங்கிருந்தாலும அவர்களை தூக்கி வைத்து கொண்டாடும் நம் ஆட்களை போல மற்ற மாநிலத்தவரும் நம் ஆட்களின் திறமைகளை மதித்து வாய்பளித்தால் இன்னும் நன்றாக இருக்குமே..? இது என் தாழ்மையான வேண்டுகோள்.