Thottal Thodarum

Nov 3, 2022

சாப்பாட்டுக்கடை - ஆற்காடு மெஸ்- தோற்ற கதை.

பல சாப்பாட்டுக்கடைகளைப் பற்றி எழுதியிருக்கிறேன். 40-50 வருட பாரம்பரியம் உள்ள கடைகள் முதற் கொண்டு, புதியதாய் ஆரம்பித்திருக்கும் கடைகள் வரை எழுதியிருக்கிறேன். ஆனால் மூடிய கடையைப் பற்றி இதுவரை எழுதியதில்லை. மூடியதை பற்றி எழுதி என்ன பிரயோஜனம்?. பல வருட பாரம்பரியம் உள்ள கடைகள் கால மாற்றத்தில் தக்க வைக்க முடியாமல் மூடியதில்லையா?. இதில்  எழுத என்ன இருக்கிறது என்று கேட்கலாம். மொக்கையான சின்னக்கடைகளை எல்லாம் வேற லெவல் கடை என்று வீடியோ போட்டு ப்ரோமோட் செய்யும் காலத்தில் எந்த விதமான ப்ரோமோஷனும் இல்லாமல் முப்பது வருடங்களுக்கு மேலாய் பூந்தமல்லி ரோட்டில், அமைந்தக்கரை முரளிகிருஷ்ணா தியேட்டருக்கு திரும்பும் இடத்தில், ஒரு பழைய பில்டிங்கில் இருந்த கடை தான் இந்த ஆற்காடு மெஸ்.

மதிய சாப்பாடு இங்கே மிகப் பிரபலம். குறிப்பாய் எறா தொக்கு, சிக்கன், மட்டன் குழம்புகள் அட்டகாசமாய் இருக்கும். இன்றைக்கு எல்லா நான்வெஜ் கடைகளிலும் கருவாட்டுக்குழம்போ, தொக்கோ இல்லாமல் இருப்பது இல்லை. ஆனால் அப்போது எல்லாம் கருவாட்டுக் குழம்பு எல்லா கடைகளிலும் கிடைக்காது. இவர்கள் கடையில் ஞாயிறு ஸ்பெஷல். அதை சாப்பிடுவதற்காக ஒரு பெரிய கூட்டமே உண்டு. அது மட்டுமில்லாமல் இரவு உணவாய் தோசை, பரோட்டா, போன்ற அயிட்டங்கள் இருந்தாலும், இவர்களது சுடான இட்லி, குழம்பு, எறா தொக்குக்கு ஈடு இணை கிடையாது. அதுவும் ராத்திரி பதினோரு மணிக்கு போனாலும், சூடான இட்லி கிடைக்கும். புத்தக கண்காட்சி பூந்தமல்லி ஹைரோட்டில் உள்ள ஒரு பள்ளியில் சில வருடங்கள் நடந்த காலத்தில், பாதி நாள் அங்கே தான் இரவு உணவு. நிறைய நண்பர்களை கூட்டிக் கொண்டு போய் உணவருந்தியிருக்கிறேன். தொடர்ந்து போவதால் அந்தக்கடையின் உரிமையாளர் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பராய் மாறினார். அவரது சமையல் ரகசியத்தை ஒருநாள் கேட்டேன். அப்படினு தனியா ஏதுமில்லங்க. என்றார். நான் முதலில் நம்பவில்லை. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக ஆற்காடு மெஸ்ஸின் பிரபல அயிட்டமான எறாதொக்கை செய்யச் சொல்லி வீடியோ எடுத்தோம். எந்தவிதமான ரகசிய மசாலாவோ, அயிட்டங்களோ இல்லாமல் அவரின் கை பக்குவத்தில் செய்து காட்டினார். அதே சுவை. 

இப்படி அவரது கை பக்குவத்தின் காரணமாய், ஒரு தலைமுறையே தன் சமையல் ருசிக்கு அடிமையாக்கியிருந்தவருக்கு ஒரு ஆசை. ஒரு பெரிய கடை போடணும் தம்பி என்று சொல்லிக் கொண்டேயிருப்பார். நானும் அவருக்காக சில இடங்களை பார்த்துக் கொண்டேயிருந்தேன். கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட் ஆரம்பித்த நேரத்தில் எதிரே புதுப்புது கட்டிடங்கள் கட்ட ஆரம்பித்திருந்தார்கள். அதில் இப்போது கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இருக்கும் இடத்தை அவருக்கு காட்டினேன். வாடகை மற்றும் சில விஷயங்களால் முடிக்க முடியவில்லை. பிறகு சில இடங்கள் பார்த்தும் செட்டாகாமல் போக, அவரே சில இடங்களைப் பார்க்க ஆரம்பித்தார். 

ஒவ்வொரு இடம் பார்க்கும் போதும் அவரிடம் நான் சொல்வது. "அண்ணே எந்தக் காரணம் கொண்டும், உங்க பேவரேட் இட்லி, மீன்குழம்பு, எறா தொக்கு, கருவாட்டுக் குழம்பு மீல்ஸ் இதை விட்டுறாதீங்க. அதான் உங்களுடய ட்ரேட் மார்க்கே என்பேன். ஆமா தம்பி அதை வச்சித்தானே என் குடும்பத்த ஒரு நிலைக்கு கொண்டு வந்து இன்னைக்கு பெரிய கடை பாக்குற அளவுக்கு வளர்ந்திருக்கேன் விடுவேனா என்பார்.

சில காலம் கழித்து என்னை அவருடய புதிய கடைக்கு திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவருடய பழைய கடை இருந்த பில்டிங் எதிரே ஒரு மலையாளி ஓட்டல் இடம் வாடைக்கு வரை அதையே பிடிச்சிட்டேன் என்றார். சூப்பர்ணே உங்க கஸ்டமர் எங்கேயும் போக மாட்டாங்க. புதுக் கஸ்டமருக்கும் பழைய கடை வச்சி தேடி வந்திருவாங்க. பழைய கடைய மாத்தாதீங்க என்று போனில் சொன்னேன். 

கடை திறப்பு விழாவுக்கு போன போது மெனு லிஸ்டில் மீல்ஸோ, இட்லியோ, இல்லை. ப்ரைட் ரைஸ் அயிட்டங்களும் தாலி சாப்பாட்டு மட்டுமே இருக்க, "என்னண்ணே இப்படி பண்ணிட்டீங்க? உங்க ப்ராண்ட் அயிட்டம் இல்லாம என்ன ஆற்காடு மெஸ்?." என்று சற்று கோபமாகவே கேட்டேன். 

"பசங்க பழைய சாப்பாடு எல்லாம் வேலைக்காகாது இதான் ஓடும் அப்படிங்குறாங்க. அவங்க தலையெடுத்து பார்த்துக்குறாங்க. ஒத்துக்கிட்டுத்தானே ஆவணும்" என்றார்.

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஒரு உணவகம் அதனுடய சிக்னேச்சர் அயிட்டங்கள் இல்லாமல் ஜெயித்து பார்த்ததில்லை.

"அண்ணே.. வாழ்த்துகள். ஆனா எதிர்கடைய விட்டுறாதீங்க. அங்கேயும் சின்னதா நடத்துங்க. வாழ்த்துகள் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன். கண்ணெதிரே ஒரு 40 வருட சாம்ராஜ்ஜியம் கவிழப் போகிறதை உணர்ந்தேன்.

சில மாதங்கள் கழித்து பூந்தமல்லி ஹைரோட்டில் போகும் போது ஆற்காடு மெஸ் இருந்த பழைய கட்டிடம் இடிக்கப்பட்டிருந்தது. எதிரே ஆரம்பித்திருந்த புதிய ஆற்காடு மெஸ்ஸும் மூடியிருக்க, ஆற்றாமை தாங்காமல் அவருக்கு போன் செய்தேன். 

"சரியா போகலை தம்பி. மூணு மாசத்துக்கு மேல நடத்த முடியலை. பழைய கடையையும் வச்சிக்க வேணாம்னு அப்பவே விட்டுட்டேன். பையன் வேலைக்கு போயிட்டான். எனக்குத்தான் என்ன பண்றதுன்னு தெரியலை. நீங்க சொன்னது கரெக்ட் தான். பழைய கடையாச்சும் நான் வச்சிருந்திருக்கணும்" என்று என் பதிலை எதிர்பார்க்காமல் போனை கட் செய்தார். அதன் பின்பு அவரிடம் பேச எனக்கு எதுவுமில்லை. சில காலம் கழித்து கால் செய்த போது, அவரது போன் சுவிட்ச் ஆப்பிலேயே இருந்தது. அவர் இருக்கிறாரோ இல்லையோ. அவரது எறா தொக்கும், சூடான இட்டிலியையும், அவரையும் என்னால் மறக்க முடியவில்லை. இதை எழுதும் போது கூட அவரது தொலைபேசி எண்ணை ஒரு முறை டயல் செய்து பார்த்துவிட்டு அது சுவிட்ச் ஆப் ஆகியிருந்ததை கேட்டுவிட்டுத்தான் எழுதுகிறேன். ஆற்காடு மெஸ். வரலாறாய் போயிற்று. 

கேபிள் சங்கர்