Thottal Thodarum

May 21, 2019

எலி - என் கதை.

பெட்ரோல் தாறு மாறாய் விலை ஏறிக் கொண்டிருந்த நேரம். பத்து நாட்களுக்கு மேல் காரை எடுக்கவில்லை. அவசரம் இல்லாமல் போக வேண்டிய வேலை இருந்ததால் காரை எடுக்கப் போனேன். காரின் ஆட்டோ லாக்கிங் சிஸ்டத்தில் இடது பக்கம் ஒர்க் ஆகவில்லை. என்னடா? என்று யோசித்து கொண்டே டாஷ்போர்டை திறந்த போது அதில் வைத்திருந்த பேப்பர்கள் எல்லாம் சுக்கல் சுக்கலாய் இருந்தது. எலி கடித்து ரெண்டொரு புழுக்கையையும் போட்டிருந்தது. காரினுள் எலியா? எப்படி? என்று யோசித்துக் கொண்டே காரிலிருந்து வெளியே வந்து ஒரு சுற்று காரை சுற்றிப் பார்த்தேன்.

வாட்ச்மேன் தெலுங்குக்காரர் “என்னா சார்?.”

“கார்ல எலி பூகுந்துருச்சுப் போல.. பேப்பரை எல்லாம் துண்டு துண்டா கடிச்சி வச்சிருக்கு” என்றேன்.

”ஆமா சார். ரேத்திரி பூரா குட்டிக் குட்டி எலிங்கு காரு மேல ஓடுதுங்க..இப்டிதான் என் வீட்டாண்ட ஒருத்தர் புது காரு. ஒரே நாத்தம் அடிக்குதேன்னு டிக்கிய தொறந்து பார்த்தா அழுகுன தக்காளி, முட்டை கோசு எல்லாம் போட்டு வச்சிருக்கு. வயரெல்லாக் கடிச்சி வச்சிருக்கு. பத்தாயிரம் ரூபாய் செலவு.” என்றார்.

ஒரு பக்க கதவு மட்டும் பிரச்சனை எனவே அதை சரி செய்ய ஜி.பி ரோடுக்கு போய் காட்டினேன். “ஒயரு மட்டும் போச்சுன்னா ஐநூறு ரூபா. மோட்டார் போச்சுன்னா.. 1500 என்றார். முதல் முறையாய் எனக்கு எலியைப் பற்றி கவலை வந்தது. திறந்து பார்த்து செக் செய்து “ஒயர் மட்டுமே” என்று சொல்லி “என்னா சார்.. எலி வந்திருக்குது. ரொம்ப டேஞ்சர் சார். அதுக்கு ஒரு மெடிசன் இருக்கு. அதை வாங்கி எலி உள்ளார பூருர வழியில கட்டி வச்சிரணும். அதுக்கு அப்புறம் வராது” என்றார்.

“அப்படியா விலை எவ்வளவு?”

“ஆயிரத்து எழுநூறு ரூபா சார்” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு டப்பாவை எடுத்து வந்து காட்டினார். அதில் போடப்பட்டிருந்த எலியின் சைஸ் பார்த்த போது ‘கெத்க்’என இருந்தது. அத்தனாம் பெருசு. “டிஸ்கவுண்ட் எதுவும் கிடையாதா” என்றேன்.

“சார் விலை பாருங்க 3400. நான் டிஸ்கவுண்ட் ரேட் தான் சொன்னேன்” என்று சிரித்தார் கடைக்காரர்.

இத்தனாம் பெரிய டிஸ்கவுண்டை நான் இது வரை வாங்கியதேயில்லை. இருந்தாலும் ஒரு சின்ன எலிக்காக இவ்வளவு செலவு செய்வதா? என்று யோசித்து பொறவு வாங்கிக்கிறேன்’ என்று சொல்லி ஐநூறோட போகட்டும் ஆண்டவா” என்று வேண்டி வண்டியை கிளப்பினேன்.

ரத்திரி மீண்டும் வண்டியை கொண்டு வந்து விடும் போது ஒன்றுக்கு இரண்டு முறை நான் கார் வைக்கும் இடத்தை சுற்றும் முற்றும் பார்த்தேன். சிறிது நேரம் அங்கேயே சத்தமில்லாமல் இருந்துப் பார்த்தேன். எலி ஏதாவது வருகிறதா? என்று. ஒரு பெருச்சாளி என் காலருகே மிக சாவதானமாய் கடந்து போனது. பதறியடித்து எழுந்தேன். “சார்.. அது ஒண்ணியும் பண்ணாதுசார்.. வயசான எலி” என்று தைரியம் சொன்னார் தெலுங்கு வாட்ச்மேன். “உங்க வண்டில ஏறுறது சுண்டேலி சார். குட்டி குட்டி” என்று கையை குவித்து காட்டினார். அவர் காட்டிய சைஸில் எறும்புதான் இருக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் என்றாலும், நம் வண்டியை பாதுக்காக்க இருக்கும் ஒரே ஆளை இழக்க விரும்பாமல். ஐம்பது ரூபாயை கொடுத்து, “எலி ஏதாச்சும் பக்கதுல வந்தா துறத்தி விடுங்க” என்று சொல்லிவிட்டு வந்தேன்.

அன்றைய இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. அடுத்த நாள் காலையில் போய் பார்த்தால் நிறைய எலிப் புழுக்கைகள் தெரிந்தது. ஒரு மாதிரி அசூசையானது. மீண்டும் க்ளீனிங். வண்டியை தெனம் எடுத்தா எலிக்கு பழக்கம் விட்டுப் போயிரும் என்றார் என் மனைவி. அன்றைக்குதான் மோடியை மிகவும் திட்டினேன். வேறு வழியில்லாமல் காரை எடுத்துக் கொண்டு போனேன். பார்க்கிற நண்பர்களிடமெல்லாம் ‘காருக்குள்ள எலி பூந்திருச்சு” என்று துக்கமாய் சொன்ன உடனேயே “இப்படித்தான் என் பிரண்ட் ஒருத்தர் காருல” என்று ஆளாளுக்கு எலி காருக்குள் பூகுந்ததை பற்றி கதை சொன்னார்கள். உடலெங்கும் வியர்வை பொங்க வைத்தது. இன்கம்மிங் அவுட்கோயிங் கால்களில் கூட நான் என் காரில் எலி புகுந்த கதை சொல்லாமல் விட்டதில்லை. மண்டை முழுக்க எலியே குறுக்கும் நெடுக்குமாய் ஓடிக் கொண்டிருந்தது. கூகுளில் தேடிய போது அய்யாயிரத்துக்கு எல்லாம் மருந்து போட்டிருந்தார்கள். கீழே அதன் விமர்சனங்களை பார்த்த போது எலியால் பிரச்சனைக்குள்ளானவர்களில் நான் மட்டும் தனியானவன் அல்ல என்று புரிந்தது.

வழக்கமாய் காலையில் எடுக்கும் போது ரிவர்ஸ் எடுக்க வேண்டாம் என்று நேராக காரை விட்டிருப்பேன். இன்றைக்கு அதை மாற்றி விட்டால் எலி தடுமாற வாய்ப்பிருக்கிறது என்று ஒரு ஐடியா உதித்து. காரை மாற்றி விட்டேன். பக்கத்து கார் காரரின் வீட்டின் கதவை தட்டி “உங்க காருல எலி தொல்லை எதாச்சும் இருக்கா?” என்று கேட்டுவிட்டு வந்தேன். ‘இல்லையாம்” . என் காரை விட உசத்தியான கார். லக்சரி கார். அவர் காருக்குள் போகாமல் என் போன்ற ஏழை க்விட் காரை ஏன் எலி தேர்தெடுத்தது என்று மனம் வெதும்பிப் போனேன்.

அடுத்த நாள் காலையில் மீண்டும் காரை செக் செய்யப் போயிருந்தேன். வழக்கமாய் எலி கக்கா போகுமிடமெல்லாம் எதுவும் இல்லை. சக்ஸஸ். எலியை ஏமாற்றிவிட்டேன். என்று இறுமாந்திருந்த நேரம் மிக சில நிமிடங்களே. காரின் பின் சீட் கீழே நிறைய எலி கக்காக்கள். க்ளீனிங் என் கண்ணீரோடு.

ஜி.பி.ரோட்டில் சொன்ன மருந்தை வாங்கி வச்சிரலாமா? என்று யோசித்துக் கொண்டிருந்த போது நண்பர் ஒருவர் போன் செய்திருந்தார். “சார்.. ரெண்டு நாளா எப்ப போன் பண்ணாலும் எலி எலின்னு இம்சை பண்ணிட்டேயிருந்தீங்க இல்லை. அதுக்கு ஒரு ரெமிடி நம்ம ப்ரெண்ட் யூஸ் பண்ணி சக்ஸஸ் ஆயிருக்கு” என்றார். மனதில் எலி பாஷாணத்தை வார்த்தார்.

“என்ன என்ன அது?’ என்றேன் ஆர்வத்துடன்.

”பொகையில சார். பொகையில பாக்கெட்ட வாங்கி எலி புழங்குற எடத்துல வச்சா எலி வராது” என்றார். பொகையில வாங்குறது எல்லாம் பெரிய மேட்டரா என்று நினைத்தது தவறு என்று புகையில வாங்க போகும் போதுதான் தெரிந்தது. பாம் உதிரி பொருட்களைக்கூட வாங்கிவிடலாம் போல புகையிலை வாங்க பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது.

புகையிலை பொருட்களை அரசு தடை செய்திருக்கிறதாம். அதனால் விற்பதில்லை என்று கடையில் போய் கேட்ட மாத்திரத்தில் நிர்தாட்சண்யமாய் இல்லை என்றார்கள். வழக்கமாய் வாங்குகிறவர்கள் வந்து கேட்ட போது ஜாடையாய் கண் காட்டி எல்லாம் பேசினார்கள். அத்தனை கெடுபிடி. ஒரு வழியாய் நண்பர் ஒருவரின் இன்ப்ளூயன்ஸை வைத்து ரெண்டு பாக்கெட் பன்னீர் புகையிலை வாங்கி டாஷ்போர்டில் வைத்துவிட்டேன். தொடர்ந்து ரெண்டு நாள் கண்காணிப்பு வேறு. அங்கொன்றும் இங்கொன்றுமாய் எலி கக்காக்கள் தெரிந்தது. அது காய்ந்திருக்கும் நிலையை வைத்து புதுசா பழசா? என்று கண்டுபிடிக்கும் அளவிற்கு எலிப் புழுக்கை ஸ்பெஷலிஸ்ட் ஆகிவிட்டேன். மேலும் நான்கு புகையிலை பாக்கெட்டை வாங்கி எலி வரும் வழிக்கான எடங்களில் எல்லாம் கட்டி தொங்க விட்டு விட்டேன். எலி வருவதில்ல.

நேற்று நண்பர் ஒருவர் போன் செய்தார். ‘சார் வண்டிக்குள்ள எலி “ என்று புலம்ப ஆர்மபித்தார். “டோண்ட் ஒர்ரி. நான் ஹெல்ப் பண்ணுறேன்’ என்றேன். எலி மூர்த்தி சின்னதாய் இருந்தாலும் கீர்த்தி பெருசுதான்.

May 13, 2019

சாப்பாட்டுக்கடை -கும்பகோணம் சுப்பையா மெஸ்



ஒரு காலத்தில் பவன் என்று சைவ ஓட்டல்களுக்கு பெயர் வைத்தால் பெரிதாய் கல்லா கட்டலாம் என்று நினைத்து ஏகப்பட்ட பவன்கள் திறந்தார்கள். அதில் தரமானது மட்டுமே நிலைத்திருக்க மற்றவை வழக்கம் போல.  அது போலத்தான் மெஸ் எனும் தாரக மந்திரத்தை தற்போது யார் வேண்டுமானாலும் வைத்து பணம் பண்ண பார்க்கிறார்கள். ஆனால் இங்கேயும் அதே விஷயம் தான் தரமும் பணமும் மட்டுமே மெஸ்ஸின் எதிர்காலத்தை நிர்ணையிக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வளசரவாக்கத்தில் ’கும்பகோணம் சுப்பையா மெஸ்” என்ற பெயர் பலகை என் ஆர்வத்தை தூண்டியது.

முழுக்க முழுக்க சைவ மெஸ். காலையில் பேக்கேஜாய் பூரி, பொங்கல், இட்லி, வடை, கல்தோசை என வரிசைக்கட்டி டிபன் வகைகள். இரண்டு இட்லி, ஒரு வடை, ஒரு பூரி, கொஞ்சம் பொங்கல் இது 45 ரூபாய்க்கு மினி டிபனும்,  மதியம் 60 ரூபாய்க்கு அட்டகாசமான அன்லிமிடெட் மீல்ஸ். ஒரு கூட்டு, பொரியல், அப்பளம், சாம்பார், ரசம், காரக்குழம்பும், மோர் என சுவையான சாப்பாடு.  அதுவும் ஏசி ஹாலில். பொரியல் வகைகள் நாளுக்கு நாள் மாறுகிறது.


வெஜிட்டேரியன் சாப்பாடு அதுவும் மெஸ்களில் அத்தனை சிலாக்கியமாய் இருப்பதில்லை. அப்படியே இருந்தால் வெஜிட்டேரியன் சாப்பாடு நூறுக்கு குறைவில்லாமல் போய்விடுகிறது. அந்த வகையில் நல்ல தரமான குழம்புவகைகளுடன், வயிற்றைக் கெடுக்காத நல்ல சைவ சாப்பாடு விரும்பிகளுக்கு  ஐ ரெக்கமெண்ட் 

கும்பகோணம் சுப்பையா மெஸ்
25. வெங்கடேஸ்வரா நகர்
பிருந்தாவன் நகர் 2வதுதெரு.
வளசரவாக்கம்.
சென்னை 87
9585551045

May 3, 2019

உறுத்தல் - விகடன் சிறுகதை.


பாத்ரூமிலிருந்து பாவாடையை மார்பு வரை மேலேற்றிக் கட்டிக் கொண்டாள் தமயந்தி. தலையின் ஈரம் போக துண்டைக் எடுத்து கட்டியபடி, கண்ணாடியில் முகம் பார்த்தாள். ’கருப்பென்னடி கருப்பு. பெருமாள் கூட கருப்புத்தான். ஒலகமே அவன் காலடியில கிடக்கலை. அதும் போல என் தமயந்தி காலடில கிடக்க ஒருத்தன் வராமயா போயிருவான்?” செத்துப் போன லெட்சுமி பாட்டியின் குரல் ஏனோ நியாபகத்துக்கு வந்தது. வாசலில் காலிங் பெல் சத்தம் கேட்க “சுபா.. யாருன்னு பாரு?” என்று உள்ளிருந்து ஹாலில் டேப்பில் செஸ் ஆடிக்கொண்டிருக்கும் தன் மகளுக்கு குரல் கொடுத்தாள். பரபரவென நெஞ்சிலிருந்த பாவாடையை இடுப்பில் கட்டி, உள்பாடி, ஜாக்கெட்டை போட்டு, சட்டென புடவைக் கட்டி, மீண்டும் ஒரு முறை கண்ணாடி பார்த்து ஸ்டிக்கர் பொட்டை எடுத்து நெற்றியில் வைத்துவிட்டு திரும்பிய போது சுபா கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்து “யாரோ சுந்தர்னு ஒரு அங்கிள் வந்திருக்காரு” என்றாள்.

சுந்தர் என்று கேட்ட மாத்திரத்தில் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள். சுந்தர் மாமாவே தான். நெஞ்சமெல்லாம் படபடவென அடித்தது.
@@@@@@@@@@@@@@@

”நல்ல பையன். அற்புதமான நளபாகக்காரன். நல்ல சம்பாத்தியம். அப்பா இல்லாம வளந்தவன். கொஞ்சம் தடித்தனமா வளர்ந்துட்டான். ஏண்டா இப்படி இருக்கேன்னு கூப்டு கண்டிச்சேன். எனக்குன்னு ஒருத்தி இருந்தா நான் ஏன் இப்படி  இருக்கப் போறேன்னு அழுதான்.  அதும் சரிதான்னு உன்னை கண்டு பிடிச்சுட்டேன். நீ தான் அவனை வழிக்கு கொண்டு வரணும். என்னடா நடராஜா சொல் பேச்சு கேட்டு நடக்குறியா?” என்று நடராஜனைப் பார்த்து கேட்ட போது முப்பத்தைந்து வயது நடராஜன் வெட்கப்பட்டான். அவனின் வெட்கத்தைப் பார்த்து அனைவரும் சிரித்தனர்.
@@@@@@@@@@@@@@@@@@@

”வாங்க மாமா எப்படி இருக்கீங்க?”

”ம்..” என்று சொன்ன மாமாவின் குரல் கரகரவென மாறியிருந்தது. பதினைந்து வருடம் ஆகிவிட்டது. சுபா உள்ளேயிருந்து டம்பளரில் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள். அவளை ஏற இறங்கப் பார்த்தார். பார்ப்பதற்கு தமயந்தி போல் இல்லாமல் நல்ல மாநிறத்தோடு, சற்றே கூர்மையான நாசியுடன் பதிமூன்று வயதுக்கு கொஞ்சம் அதிகமாகவே வளர்ந்திருந்தாள். முட்டிவரை த்ரீபோர்த்தும், கொஞ்சம் இறுக்கமான டி சர்ட்டும் வளர்த்தியாகவே காட்டியது.

“பேரு சுபாஷிணி. பத்தாவது படிக்கிறா”

தமயந்தியின் குரல் கேட்டு கலைந்து  “ம்ம்.. “ என்றார்.
பக்கத்தில் அழைத்து உட்கார வைத்து அவளையே பார்த்தார். தலை தடவி “நல்லாரு” என்றார்.
@@@@@@@@@@@@@@

“ஏதோ வாசனை வர்றதே..? குடிச்சிருக்கீங்களா?”
“குடியா .. சே..சே. என் கண்ணாட்டி செல்லம். அதெல்லாம் விட்டொழிச்சாச்சு. உனக்காக. பர்ஸ்ட் நைட். லைட்டா சின்ன பாட்டில் பியர் மட்டும்” என்றபடி லைட்டை ஆஃப் செய்துவிட்டு, இன்னும் நெருக்கமாய் அவளருக்கில் வந்து உட்கார்ந்தான்.  அவன் மூச்சுக் காற்றில் வந்த வாசமும், அவனின் நெருக்கமும் ஏனோ தெரியவில்லை தமயந்திக்கு பயத்தை கொடுத்தது. ஜன்னல் கதவு திறந்திருக்க, முகத்தில் நிலவின் வெளிச்சம் விழுந்தது. “என் கருப்பு கண்ணாட்டி ஜொலிக்கிறா?’ என்று அவளின் மீது படர்ந்தான். மூர்கமாகி, உடை கூட களைக்காமல் இயங்கினான். கட்டிலின் சத்தம் அந்த இருட்டு அறையில் ஓங்காரமாய் கேட்க, “அய்யோ. சத்தம் கேட்குது.. சத்தம் கேட்குது” என அவன் காதில் கிசுகிசுப்பாய் கத்தினாள். அவன் கேட்காமல் மேலும் இயங்க. அவனைத் தள்ளிவிட்டு கட்டிலிலிருந்து எழுந்து கீழே இறங்கி நின்றாள். நடராஜனுக்கு கோபம் வந்து, மூர்க்கமாய் அவளை அறைந்து, கட்டிலின் மேல் கிடத்தி தொடர்ந்தான். கட்டிலின் சத்தம் இப்போது இன்னும் அதிகமாய் கேட்க தமயந்தி அழுது கொண்டேயிருந்தாள்.
@@@@@@@@@@@@@@@@@@@

”பதினைஞ்சு வயசு இருக்குமா? இவளுக்கு?”

“சரியா பதினைஞ்சு. வீட்டுல மாமி எப்படி இருக்காங்க?”
“ம்ம்ம்.. அவளுக்கென்ன.. வயசிலேயே கோயில் குளம்னு சுத்திட்டிருப்பா..இப்ப கேட்கவா வேணும்.’
@@@@@@@@@@@@@@@@

“என்னா கண்ணுடி. இவளுக்கு. அப்படியே அப்பனை உரிச்சு வச்சிருக்கு. என் கண்ணே பட்டுரும்.” ஆஸ்பத்திரியின் குழந்தையை பார்த்த மாத்திரத்தில் சுந்தரின் மனைவி சொல்லியபடி, திருஷ்டி சுற்றினாள்.

“மாமா” என்றழைத்த தமயந்தியின் குரல் பலவீனமாய் இருந்தது.
என்ன என்பது போல திரும்பிப் பார்த்தார். “இனிமேலாவது அவரை குடிச்சிட்டு வர வேண்டாம்னு சொல்லிப் பாருங்களேன்.”
அதெல்லாம் இனிமே தானா குறைஞ்சிரும் பாரேன். குழந்தைக்கு இன்பெக்‌ஷன் வந்திரும் அது இதுன்னு சொல்லி பயப்படுத்தினாலே போதும். எத்தனையோ மொடாக் குடிகாரன் எல்லாம் பெத்த பொண்ணுக்காக தலைகீழா மாறியிருக்கான். இவன் எம்மாத்திரம்?” என்றாள் சுந்தரின் மனைவி.

குழந்தையின் கையை தொட்டுத் தொட்டு பார்த்துக் கொண்டேயிருந்தான் நடராஜன். முகமெல்லாம் சந்தோஷம். கையில் வைத்திருந்த காசையெல்லாம் சாக்லெட்டுகளாய் மாற்றி ஹாஸ்பிட்டலில் இருந்த அனைவருக்கும் ‘எனக்கு பொண்ணு.. எனக்கு பொண்ணு பொறந்துருக்கு’ என சொல்லிக் கொண்டே கொடுத்தான்.

“மாறிருவான் தான் போல இருக்கு” என்று தமயந்தியைப் பார்த்து சிரித்தபடி சொன்னார் சந்துரு . அவர் குரலில் இருந்த நம்பிக்கை தமயந்திக்கும் தொற்றியது.

குழந்தை வீட்டுக்கு வந்த பத்தாவது  நாள் நடராஜன் மீண்டும் குடித்துவிட்டு வந்தான். குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்படியே அவளின் மடி மேல் சாய்ந்து பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தையை முத்தமிட வந்தான். அவனை அப்படியே எக்கித் தள்ளினாள் தமயந்தி. போதையில் இருந்ததால் தடுமாறி சுவற்றில் மோதி விழுந்தான். கோபத்தோடு எழுந்து “என் கொழந்தைய நான் தொடக்கூடாதா?” என்று அவளின் மடியிலிருந்து பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தையை பிடுங்கினான். அதை எதிர்பாராத தமயந்தி சட்டென சுதாரித்து, குழந்தையை தன் பக்கம் இழுக்க, குழந்தை அத்தனை வன்முறையை எதிர்பார்க்காமல் வீரிட்டு அலறியது. “விடுங்க. விடுங்க.. குழந்தைய நானே தர்றேன்.’ என்று சொல்லி அவளின் பிடியை லேசாய் விடுவிக்க, அதை எதிர்பார்க்காத நடராஜன் குழந்தையோடு மடேலென்று மல்லாக்க விழுந்தான். குழந்தை சுவற்றில் மோதி அழுகையை நிறுத்தியது. அதன் பிறகு அழவேயில்லை.

”என் குழந்தைய நான் தான் கொன்னுட்டேன். என்னை மன்னிச்சிரு..மன்னிச்சிரு” என தமயந்தியின் கால் பிடித்து அழுத நடராஜனை பார்க்க சகிக்கவில்லை. தமயந்தி அவனை பார்க்கப் பிடிக்காமல் அங்கிருந்து எழுந்து “மாமா எனக்கு இங்கிருக்க பிடிக்கலை. உங்க வீட்டுல எனக்கு இடமிருக்குமா?” என்றவளின் கண்களிலிருந்து தாரைத் தாரையாய் கண்ணீர் வந்து கொண்டிருந்தது. சுந்தர் மாமா நிமிர்ந்து பார்த்து, ‘அவளை கூட்டிட்டு போ’ என்றார் மனைவியைப் பார்த்து.

‘தமயந்தி.. செல்லம் என்ன விட்டு போய்டாதடீ.. நான் தப்பு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிரு’ என்று மூக்கில் சளி ஒழுக அழுத நடராஜனைப் பார்க்க அனைவருக்குமே பரிதாபமாய் இருந்தது.
பெத்த குழந்தையை பறிகொடுத்தவ.. புருஷனே ஆனாலும் எப்படி பார்ப்பா? வயிறு பதறாது?” என்று அவள் போவதையே பார்த்த சுற்றம் உள்ள பெண்கள் பேசினார்கள்.
@@@@@@@@@@
”என்ன விஷயம் மாமா? இத்தன வருஷத்திற்கு பிறகு தேடிக் கண்டுபிடிச்சி வந்திருக்கீங்க?”
”ம்ம்க்கும்.. ம்ம்ம்க்கும்’ என்று தேவையில்லாமல் கனைத்தபடி சுபாஷிணியைப் பார்த்தார்.
“கண்ணு.. பக்கத்து ரூமுல இரு. அம்மா பேசிட்டு வர்றேன்” என்றவுடன் சுபாஷிணி எழுந்துப் போனாள்.
“நான் உன்னை வந்து பாத்திருக்கணும். இன்னைக்கு தேடி அலைஞ்சாப் போல தேடியிருக்கணும். தப்பு பண்ணிட்டேன்.” என்றவரின் கண்களில் கண்ணீர் வழிந்தது. தமயந்தி சிறிது நேரம் அவர் அழுவதையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவர் அழுகை நிற்கின்ற வழியாய் தெரியாததால், அவர் அருகில் வந்தமர்ந்து மாமாவின் கையை தன் கையில் எடுத்து வைத்துக் கொண்டாள். “ஏன் என்ன ஆச்சு திடீர்னு?”
@@@@@@@@@@@@@@@@@@
”என்னால முடியலை மாமா. அவன் நடவடிக்கைக்கு நானாச்சுனு சொல்லித்தான் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தீங்க. நல்ல சம்பளம். நல்லா ஜம்முனு இருக்கான்னுதான் என் அண்ணன் சரின்னான். அவன் என்ன செய்வான்? அட்டக்கருப்பியா ஒரு தங்கச்சியை எத்தன வருஷம் வச்சி காப்பாத்துவான்?. ஆனா உங்களைப் பார்த்த போது எனக்கு நம்பிக்கை வந்திச்சு. நீங்க தான் சொன்னீங்க. நான் சொல்லுறேன் அவன் சரியாயிருவான். நீ தான் அவனை திருத்தணும்னு சொன்ன போது நான் நம்பினேன். குழந்தைப் போன போது எத்தனை அழுகை. மன்னிப்பு. கால்ல விழறது. எல்லாம். அந்த ரோஜாப் பூ கையை விரிச்சு என் மார்ல தடவுன ஸ்பரிசம் கூட மறக்கலை. போயிட்டா.  நீங்க அத்தனை சொன்னதுனாலத்தான் வீட்டுக்குப் போனேன். நீங்க சொல்லி நான் கேட்காம இருந்திருக்கேனா? . திரும்ப அதே குடி. கேட்டா பொண்ணு நியாபகம்ங்கிறான். வலிக்க வலிக்க பெத்தவளுக்கு இல்லாத வருத்தம் இழுத்து சுவத்துல அடிச்சி கொன்னவனுக்க்கு எங்கேர்ந்து வந்திச்சு?. கை நிறைய காசு இருக்கு. சம்பாரிச்சதை குடிக்க குழந்தைனு காரணம் இருக்கு. வீட்டுக்கு வந்தா தெனமும் படுத்து எழ நானிருக்கேன் வேற என்ன வேணும் இந்த ஆம்பளைக்கு?. எனக்கு பிடிக்கலை வேண்டாம்னு சொன்னா? செத்துப் போனவளை திரும்ப கொண்டு வரணுமாம். திரும்ப சுவத்துல அடிச்சு கொல்றதுக்கா?.

நான் மட்டும் சுமாரான கலரோட இருந்திருந்தா ஒரு மெடிக்கல் ரெப்போ, சேல்ஸ் மேனோடயோ நிம்மதியா ஒண்டு  குடித்துனத்துலயாவது நல்லா வாழ்ந்திருப்பேனில்லை. கருப்பா பொறந்து யார் ஒத்துகுறானோ அவனுக்கு கழுத்த நீட்டணும்னு விதி. அனுப்பிவிட்டுறணும்னு உடன் பொறந்தவனுக்கு கட்டளை. கருப்பா இருந்தாத்தான் என்ன? எனக்கு மனசில்லை? கருப்பா இருக்குற என்கூட படுத்தாலும் சந்தோஷமாத்தானே இருக்கே?. முடியலை. என்னைக் கொஞ்சம் சந்தோஷமா வச்சிருந்தா நான் அவனை எத்தனை சந்தோஷமா வச்சிருப்பேனு அவனுக்கு தெரியலை. அப்படி தெரியாதவனோட அவன் சந்தோஷத்துக்காக மட்டும் படுத்து புள்ள பெத்துக்க முடியாது. முகத்தைகிட்டப் பார்க்கும் போதெல்லாம் ரத்தமாயிருக்கு அவன் முகம். என்னை அங்கே போகச் சொல்லாதீங்க. ப்ளீஸ்.” என்று அழுதபடி சுந்தரை அணைத்து குலுங்கி அழ ஆரம்பித்தாள் தமயந்தி. சுந்தர் அமைதியாய் அவளின் அழுகை முடியும் வரை காத்திருந்தார்.
@@@@@@@@@@@@@@@@@
”நீ ஏன் யார் கண் காணாம எல்லாத்தையும் விட்டுட்டு போனே? என்னாச்சுன்ன்னு எல்லாரும் கேட்டுக்கிட்டே இருந்தாங்க. நடராஜன் உன் அண்ணன் வீட்டுக்கு எல்லாம் போய் தகராறு பண்ணி, போலீஸ் கேஸ் ஆகி பெரிய பிரச்சனை ஆகியிருச்சு. வடநாட்டுக்கு சமையல் வேலைக்கு போறேன்னு அவனும் கிளம்பிட்டான். அப்புறம் எனக்கும் டச்சு விட்டுப் போச்சு. திரும்ப வந்ததுக்கு அப்புறம் எப்பயாச்சும் போன் பண்ணி பேசுவான். போன வாரம் குடிச்சு குடிச்சே  போய் சேர்ந்துட்டான்.  அவனுக்கு ஒரு பொண்டாட்டி இருக்கா? அவளுக்கு தகவல் சொல்லணுமில்லையா? தேட வேணாமான்னு புலம்பிட்டேயிருந்தா என் பொண்டாட்டி. எதுக்கு சொல்லணும்னு தோணிச்சு.  யாரும் வேண்டாம்னு இத்தனை வருஷமா கல்லு மாதிரி மனசை வச்சிட்டு எங்கேயோ நல்லாருக்கான்னு நினைச்சிட்டிருந்தவளை ஏதுக்கு போய் தேடி கண்டுபிடிச்சு உன் புருஷன் செத்துட்டான்னு சொல்றதுனால என்ன கிடைக்கப் போவுதுனு தோணிச்சு” தமயந்தியின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டார்.

“உன் பொண்ணு போட்டோவை எப்.பில பார்க்குற வரைக்கும். செஸ் டோர்ணமெண்டுல ஸ்டேட் லெவல் வின்னர்னு என் தம்பி பொண்ணு காட்டினா. அவளுக்கு மியூச்சுவல் ப்ரெண்டாம். உன்னை தேடியிருக்கணும். யாருக்காக இல்லாட்டியும் எனக்காக உன்னை தேடியிருக்கணும். தப்பிக்கிறதா நினைச்சு தள்ளிப் போட்டுட்டேன். அது கில்ட்டா அறுத்துட்டேயிருக்கு. போட்டோல உன்னையும் பொண்ணையும் பார்த்ததும் உறுத்தல் தாங்கலை. என்னாலதானா?”  என்று குலுங்கி அழ ஆரம்பித்தார் சுந்தர்.

”ஸ்…ஸ்.. அழாதீங்க. சுபாஷிணிக்கு எதுவும் தெரியாது. அவளைப் பொறுத்த வரைக்கும் அவளுக்கு அப்பாவே இல்லை. உறவுன்னு மொத முறை ஒருத்தர் இங்க வந்திருக்கிறது நீங்கதான்.  வளர்ந்து நிக்குற பொண்ணு. அவளுக்கு புரியும். ஆனா ஏதும் கேட்க மாட்டா. அழுத்தம். நிதானம். தைரியம்  உங்களைப் போல.”

சுந்தர் கலங்கிய கண்களோடு தமயந்தியை நிமிர்ந்து பார்த்தார்.

நடராஜன் எனக்கு பண்ணதுக்கு உங்களண்ட எத்தனை அழுகை. எத்தனை திட்டு. எத்தனை வருத்தம். எதுக்காச்சும் நீ யாருடி என்னை கேள்வி கேட்கனு ஒரு பார்வை, ஒரு சுடு சொல் சொல்லியிருப்பீங்களா?.  என்ன சொன்னாலும், எது நடந்தாலும் நானிருக்கேன் உனக்குனு அழுது முடியற வரைக்கும்  தோள் கொடுக்குற ஆம்பள பொம்பளைக்கு எத்தனை தைரியம். பாதுகாப்பு. நம்பிக்கை தெரியுமா?. அது அத்தனையும் எனக்கு உங்ககிட்ட மட்டுமே  கிடைச்சது. நமக்குள்ள அது நடந்திருக்கக்கூடாது. பட் வருத்தமெல்லாம் இல்லை. என்னைக்கு உங்களோட அன்பு, தைரியம், பாதுகாப்பு நம்பிக்கை எனக்குள்ள வளர ஆரம்பிச்சிச்சோ அன்னைலேர்ந்து எனக்குள்ள அசாத்ய நம்பிக்கை. நீங்களே என் கூட இருக்குறா மாதிரி.

”ரெண்டு பேருக்கும் உறுத்தக்கூடாதுன்னுதான் நான் காணாமப் போனேன். நான் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்குற மொத ஆள் நீங்கதான். சுபாஷிணியும் நானும் சந்தோஷமா, நிம்மதியா இருக்கோம். அது அப்படியே இருக்கணும்னுதான் நீங்களும் நினைப்பீங்க. நினைக்கணும் அதான் ரெண்டு பேருக்கும் நல்லது. இருங்க காப்பி எடுத்துட்டு வர்றேன். சாப்பிட்டு கிளம்புங்க” என்று சுந்தரின் கண்களை தன் கையால் துடைத்து, அவரை அணைத்து பெருமூச்சு விட்டு சமையல் அறைக்குள் சென்று காப்பி எடுத்து வந்த போது சுந்தர் கிளம்பியிருந்தார்.