Thottal Thodarum

Jan 24, 2018

கொத்து பரோட்டா 2.0-53

கொத்து பரோட்டா 2.0-53
எங்கு பார்த்தாலும் ப்ளூ வேல் விளையாட்டு பற்றியும், தற்கொலைகள் பற்றியுமே பேச்சாகவும், செய்திகளாகவும் இருக்கிறது. எல்லா பசங்க கையிலேயும் போன் இருக்க, அவங்க அதை வச்சி என்ன பண்ணுறாங்கன்னு வாட்ச் பண்றது எப்படினு கைய பிசைஞ்சிட்டு இருக்கிற பெற்றோர்கள் நிறைய பேர். கம்ப்யூட்டரை காமன் ஹால்ல வையுங்க. பாஸ்வேர்ட் எல்லாம் எதுன்னு பசங்க கிட்ட பேசி தெரிஞ்சுக்கங்க, என்ன விளையாடுறாங்கன்னு பார்த்துட்டேயிருங்க என்றெல்லாம் நிறைய அட்வைஸ்கள் கிடைத்துக் கொண்டேயிருந்தாலும், பெற்றோர்கள் இருக்கிற பிஸியில் இதுங்க நம்மளை தொல்லை பண்ணாம அதும் பாட்டுக்கு ஏதோ விளையாடிட்டு இருக்குதுங்கனு விடுற பெற்றோர் தான் அதிகம். பிரச்சனை அங்க தான் ஆரம்பிக்கிறது. நாம் அவர்களை தனியே விட விட, அவர்கள் மேலும் அவர்களின் செயல்களில்  மிக ஆழமாக ஈடு படுகிறார்கள்.  ஆனால் இதையெல்லாம் யூஸ் பண்ணாதே, போன் எதுக்கு என்றெல்லாம் கேட்பதை விட, அதை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி பேச ஆரம்பிக்க வேண்டும். பள்ளி, ட்யூஷன், பாட்டுக்கிளாஸ், ஹிந்திக்ளாஸ், கீ போர்ட் க்ளாஸ் என நம்மை விட படு பிசியாய் இருக்கும் நம் குழந்தைகளுக்கு செல் போன் தேவையாய்த்தான் இருக்கிறது.

முடிந்தவரை உங்களுடய செல்போனுக்கு பாஸ்வேர்ட் இல்லாமல் வையுங்கள். இல்லையேல் எல்லோருக்கும் தெரியும் படியான பாஸ்வேர்டை வைக்கவும். பிள்ளைகள் என்ன விளையாட்டு விளையாடுகிறார்கள் என்பதை கொஞ்சம் தூரத்திலிருந்தே வாட்ச் செய்யவும். நீங்களும் விளையாட்டு விரும்பியாய் இருந்தாலும் கூட சேர்ந்து விளையாடவும். அவர்களுக்கும் உங்களுக்குமான பிணைப்பு இன்னும் இறுக்கமாகும். விருப்பமில்லாமல் இருப்பவராய் இருந்தால் என்ன எப்பப்பார்த்தாலும் கேம் என்று கடுப்படிக்காமல் விட்டுபிடித்து, அவர்கள் விளையாடும் நேரம் உங்கள் கண் முன் இருக்கும் நேரமாய் பார்த்துக் கொள்ளவும். கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் என்பதால் தனி அறை குடுத்திருந்தால், கொஞ்சம் கூட யோசிக்காமல் அரை மணிக்கொரு தரம், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கொஞ்சம் வாட்ச் செய்வது அவசியம். தனி அறை, இண்டெர்நெட், மொபைல், போன்ற வஸ்துக்கள் சல்லீசாய் கிளர்ச்சியடைய வைக்கக்கூடியவை. முடிந்தவரை அவர்களை கண்காணிப்பது போல் இல்லாமல், அறைக்கும் நுழைந்து அவர்களுடன் பேசுவது, என்ன படிக்கிறாய்? விளையாடுகிறாய் என்று கேட்பது போல கொஞ்சம் நேரம் அவர்களுடன் பேசுங்கள். தினம் உங்களுடய ரெகுலர் நிகழ்வுகளை அவர்களுடன் பேசி செலவிடுங்கள். அவர்களையும் சொல்ல பழக்குங்கள். நாம் எவ்வளவு பிஸியாய் இருந்தாலும், அம்மா, அப்பா இருவரில் ஒருவர் இதை பாலோ செய்யுங்கள். நிச்சயம் உங்கள் மகனோ/மகளோ உங்களிடம் பெரிதாய் மறைக்க விஷயங்கள் ஏதுமிருக்காது. சமீபத்தில் நாங்கள் என் மகனிடம் டிஸ்கஸ் செய்தது அவன் நண்பர்களுடனான விவாதம் குறித்து. காதல் என்றால் என்ன? என்பதைப் பற்றி டிஸ்கஷன். கடைசியாய் நீ என்ன சொன்னே? என்றேன். இப்ப நாம படிக்கிற டைம். இன்பாச்சுவேஷன் எல்லாம் லவ் இல்லேன்னு சொன்னேன். நாலு பேர்ல மூணு பேர் ஒத்துகிட்டாங்க. என்றான்.ஒத்துக்காத உன் ப்ரெண்டப் பத்தி என்ன நினைக்கிறே? என்றேன்.  “ஒண்ணும் நினைக்கல.. அவன் இப்பத்தான் எங்க க்ரூப்புல பேச ஆரம்பிச்சிருக்கான். பேசப் பேசப் புரிஞ்சுப்பான். நான் எங்க வீட்டுல இதை பத்தி பேசுவேன்னு சொன்னா அவன் ஆச்சர்யப்பட்டு சாகுறான். இதுல என்னப்பா இருக்கு ஆச்சர்யபட” என்றான் மஹா ஆச்சர்யத்துடன். ப்ளூ வேலோ, கேமோ, டிவியோ, காதலோ.. எல்லாத்தையும் விட அவங்க விரும்பற விஷயமா நாம அவங்களோட ஸ்பெண்ட் பண்ணுற நேரங்கிறத பீல் பண்ண ஆரம்பிச்சிட்டா.. ஆல் இஸ் வெல்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நேர்மையாய் இருப்பது என்பது ரெண்டு பக்கமும் கூர்மையான ஆயுதத்தை ஏந்துவது போல. சில ஆண்டுகளுக்கு முன் நண்பர் ஒருவர் மூலம் திரைப்பட பிரிவியூவுக்கு அழைக்கப்பட்டேன். படம் பார்த்தேன் ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படியாய் இல்லை. படம் வெளிவரவேயில்லை. அதன் பிறகு ஒரிரு ஆண்டுகளுக்கு முன்னால் என் தயாரிப்பாளர் என்னை அழைத்து நான் ஏற்கனவே பார்த்த படத்தின் பெயரைச் சொல்லி, அதை ரிலீஸ் செய்ய பைனான்ஸ் கேக்குறாங்க.. நீங்க போய் பார்த்துட்டு நல்லாருக்குன்னு சொன்னா நான் கொடுக்குறேன் என்றார். படம் பெயரைக் கேட்டதுமே.. அதற்கு என்ன பதில் சொல்வது என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். நல்லாயில்லை வேண்டாம் என்று சொன்னால் யாரோ ஒருவரின் படம் வெளியாக நான் தடை செய்ததாகிவிடும். செய்யுங்க என்று சொன்னால் என் தயாரிப்பாளர் என் மேல் வைத்த நம்பிக்கையை பொய்ப்பதாகும். இக்கட்டான நிலையில் உண்மையை சொல்லி என்னைப் பொறுத்தவரை அந்த படத்தின் மீது இன்வெஸ்ட் செய்வது சரியான முடிவாய் இருக்காது அதன் பிறகு உங்கள் இஷ்டம் என்றேன். அவர் அதை அப்படியே அவர்களிடம் சொல்லிவிட்டார். அவரும் நேர்மையானவர். அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் நான் சொல்லிதான் என் தயாரிப்பாளர் பணம் கொடுக்காமல் கெடுத்துவிட்டேன் என்று வருடக்கணக்கில் சொல்லி வருத்தப்படுவதாய் கேள்விப்பட்டேன்.

சில நாட்களுக்கு முன் நண்பர் ஒருவர் ப்ராஜெக்ட் விஷயமாய் ஒரு கார்பரேட் கம்பெனியில் மீட்டிங். பேச்சு வார்த்தை சிறப்பாய் போனது. வெளியே வந்து என்னை அழைத்த நண்பரிடம் நடந்தவற்றை தெரிவித்தேன். அப்ப நிச்சயம் ஒர்க்கவுட் ஆயிரும் என்று வாழ்த்தினார். நான் சிரித்து “இல்லைங்க.. ஆகாது.” என்றேன். ஏன் என்று புரியாமல் அதிர்ச்சியுடன் கேட்டார். மேற்கூறிய சம்பவத்தை சொல்லி, அவர் தான் உங்க கம்பெனி சி.ஈ.ஓ என்றேன். நேர்மை ரெண்டு பக்கம் கூர்மையான கத்தி சமயங்களில் நம் கையையும் பதம் பார்க்கவல்லது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Livin – வெப் சீரீஸ்
மெட்ராஸ் செண்ட்ரல் சேனலிலிருந்து வந்திருக்கும் புதிய வெப் சீரீஸ். வழக்கம் போல் லிவ் இன் கலாச்சாரத்தை பற்றிய கதைதான். அப்பர் மிடில் க்ளாஸ் வாழ்க்கை. அதீத நுனி நாக்கு ஆங்கிலம். போட்டோகிராபி, டிவியில் படம் பார்ப்பது, கேம் விளையாடுவது. செக்ஸைப்பற்றியும், ஃபக் பற்றியும் மிக சாதாரணமாய் பேசும் பெண்கள். அங்கிட்டும் இல்லாமல் இங்கிட்டும் இல்லாமல் ஃபங்கியாய் அலையும் கண்ணா ரவி, நமக்கெல்லாம் எங்க என்கிற ரேஞ்சில் இருக்கும் கண்ணாவுடன், லிவின்னில் இருக்கும் அம்ருதா. துரத்தியடித்தாலும் கொஞ்சம் கூட இங்கிதமோ, சங்கோஜமோ படாத ஹைஃபை நெர்ட் சாம் ஆகிய மூவரையும் சுற்றும் கதைக்களன். இந்த லிவின் கலாச்சாரம் நண்பர்களிடையே, ஹவுஸ் ஓனர்ளிடையே, அவர்களுடய மனைவிகடையே எப்படி எடுத்து கொள்ளபடுகிறது என்பதை விட, சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோர்கள்,குடும்பத்தினரிடம் எப்படி எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பது மிக முக்கியம். அதையும் கொஞ்சம் ஆங்காங்கே தொட்டிருக்கிறார்கள். இக்கால இளைஞர்கள் ஆன்லைன் புட் ஆர்டர்கள், டவுன்லோடட் படங்கள், ஆன்லைன் சமாச்சாரங்கள், பேசுவதற்கு ஏதுவுமேயில்லாதது போல ஒரே விஷயத்தை பற்றி பேசிப் பேசி மாய்வதை மீறி, ஒரு சில எபிசோடுகள் சுவாரஸ்யமே. முக்கியமாய் சாம், அம்ருதாவின் நடிப்பு. மிக இயல்பான மேக்கிங் இவற்றுக்காக நிச்சயம் பார்க்கலாம். இந்தியில் இதை விட போல்டான காட்சிகளுடன் லிவின்னை பற்றி பல குறும்படங்களும், வெப் சீரிஸ்களும் எடுத்திருக்கிறார்கள். நம்மூருக்கான இலுப்பைப்பூ சர்க்கரை.. https://www.youtube.com/watch?v=OhwcIU55YDE&t=2s
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
யூட்யூப் வைரல்
இணையமெங்கும் ஜிமிக்கி கம்மல் பாடல் தான் வைரல். ”வெலிபடேண்ட புஸ்தகம்” என்ற மோகன்லால் நடித்து வெளியாகியிருக்கும் படத்தில் வரும் பாடல் தான் அது. அந்த பாடல் ஆன்லைனில் பத்து லட்சம் ஹிட்ஸ் அடித்திருக்கிறது என்றால், அந்த பாடலை வைத்து, பத்திருபது சேச்சிகள் லைவாய் ஆடிய ஆட்டம் வீடியோ தான் நிஜ வைரல். கிட்டத்தட்ட ஏழு லட்சம் ஹிட்சை நெருங்கிக் கொண்டிருக்கிறது. காரணம் சேச்சிகள் என்று பொதுவாய் சொல்லி விட முடியாது முதல் வரிசையில் ஆடிய ரெண்டு பெண்களில் ஒருவரான ஷெர்லிதான் இந்த ஹிட்டுக்கு காரணம் என்கிறார்கள் இணையவாசிகள். டிபிக்கல் மலையாள மாப்ள சாங். அதை ஆடிய சேச்சிகள் நடனம் ஒன்றும் ஆஹா ஓஹோ  கேட்டகரி இல்லை. ஹைஸ்கூல் க்ரூப் டான்ஸில் முதல் வரிசையை தவிர பின்னது எலலம் தங்கள் இஷ்டத்துக்கு ஆடும் ஆட்டம் தான். பட் ஷெர்லியின் முகம் தான் இந்த வீடியோவுக்கான ஸ்ட்ராங் ட்ராயிங் பாயிண்ட். இன்று வரை அவர் யார் என்று வெளியுலகுக்கு தெரியாவிட்டாலும், இணையவாசிகள் அவரின் போட்டோவை வைத்து பேஸ்புக் ப்ரோபைல், எல்லாம் தேடி பிடித்து ட்ரோல் செய்து,  ஒரே நாளில் ஹாட் ஷெர்லி ஆக்கிவிட்டார்கள். எங்கம்மாவோட ஜிமிக்கி கம்மல திருடி வித்து அதுல வாங்குன சாராயத்தை, எங்கம்மாவே புல்லா அடிச்சிட்டாங்கிற கருத்துள்ள பாடல் தான் இந்த பாடல். என்ஸாய் ஷெர்ல்லி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சாப்பாட்டுக்கடை - ஹோட்டல் ஸ்ரீ லட்சுமி - திருப்பத்தூர்.


ஏலகிரியில் நல்ல சாப்பாடு என்பதற்காக தனிப்பட்ட உணவகங்கள் பிரபலமில்லை என்றாலும்,  ஓரளவுக்கு தரமான உணவுகள் தங்குமிடங்களிலேயே கிடைக்கிறது என்பதால் பெரும் குறையில்லை. அங்கிருந்து கீழே வந்தால் நல்ல வெஜ் உணவகம் எங்கே என்று கேட்டால் அனைவரும் சொல்வது இந்த ஸ்ரீ லட்சுமி உணவகம் தான். 

ஏலகிரி மலையிலிருந்து கீழே வந்ததும் இடது பக்கமாய் திருவண்ணாமலைக்கு செல்லும் வழியில் போனால் திருப்பத்தூர் எனும் ஊரின் பஸ்டாண்டின் அருகில் இருக்கிறது. நாங்கள் போன நேரம் மதியம். சாப்பாடு படு ஜரூராய் ஓடிக் கொண்டிருந்தது. மினி மீல்ஸ் போன்றவை அங்கே இன்னும் வரவில்லை. டிபன் வகையராக்கள் இருந்தது. பரோட்டா, தோசை, ரவா தோசை என எல்லாமே சும்மா அடுப்பிலிருந்து எடுத்து வந்து போட்டார்கள். 

வாழையிலையில் வைத்து சூடான, சாப்டான பரோட்டா, மற்றும் குருமா, ரெண்டு செட் தோசை, அதற்கு நல்ல தரமான சட்னி, சாம்பார் என எல்லாமே உடனடி சர்வீஸ். சாப்பிட்ட பில் தொகை வந்த  போது தலை கிறுகிறுத்துவிட்டது. 

முதல் நாள் காலையில் இதே அயிட்டங்களோடு ரெண்டு காப்பி சேர்த்து சாப்பிட்டு காஞ்சிபுரம் ஹைவே சரவணபவனில் கொடுத்தது கிட்டத்தட்ட 900 ரூபாய். ஆனால் காப்பி இல்லாமல் இங்கே நாங்கள் கொடுத்தது 250 சொச்சம். அதை விட தரமான சர்வீஸ், குவாலிட்டி என பட்டையை கிளப்பிவிட்டார்கள். திருப்பத்தூர் போனீர்களானால் மதிய சாப்பாடோ, அல்லது டிபனோ.. ஒரு ரவுண்டு திருப்பத்தூர் ஸ்ரீ லட்சுமில போய்ட்டு வந்திருங்க.


சினிமா வியாபாரம் -3 - தமிழக சினிமா ஏரியாக்கள்


Jan 14, 2018

பைரஸியும் சினிமாவும் -2

பைரஸியும் சினிமாவும் -2
டிஜிட்டல் காலத்துக்கு முன் சினிமா இவ்வளவு  வெளிப்படையாய் இல்லை. எல்லாமே ரகசியமாய்  பாதுகாக்கப்பட்டு இருந்தது. படத்தின் கதையில் ஆரம்பித்து படம் வெளியாகும் வரை சம்பந்தப்பட்டவரைத் தவிர யாருமே அவ்வளவு சுலபமாய் அணுக முடியாது.  சில வருடங்களுக்கு முன் ஒரு ப்ரெஞ்ச் படத்திற்கு தயாரிப்பு நிர்வாகியாய் பணி புரிந்தேன். அப்போது அங்கே ஷூட் செய்யப்படும் பிலிம் ரோலை ப்ராசஸ் செய்வதற்காக, தயாரிப்பாளர் அனுமதியுடன் பிரசாத் லேப்பு கொண்டு வந்து கொடுத்துவிட்டு, இதற்கு முன் தினம் ப்ராசஸ் செய்வதற்காக கொடுக்கப்பட்ட புட்டேஜை போட்டு பார்ப்பதற்காக எடுத்துப் போக வேண்டும். ஒவ்வொரு முறையும் லேப்பில் தயாரிப்பாளாரின் லெட்டர் பேடில் கடிதம் கொடுக்காமல் ஒரு இன்ச் கூட லேபிலிருந்து புட்டேஜ் வெளியே போக முடியாது. ஒரு ப்ரிவியூ ஷோ போட வேண்டுமானால் கூட லேபுக்கு லெட்டர் கொடுத்துத்தான் எடுத்துப் போக வேண்டும். எடுத்துப் போன பிரிண்ட் திரும்ப கொடுக்க வேண்டிய பொறுப்பு தயாரிப்பாளருடயது.

எடிட் சூட், டப்பிங் தியேட்டர், சவுண்ட் லேபாரட்டரி என நாம் எடுத்த படத்தின் எந்த காப்பியையும் லேபின் அனுமதியில்லாமல் தயாரிப்பாளர் கூட கையாள முடியாது. அத்தகைய பவரும், பொறுப்பும் லேபிற்கு இருந்த காலம். ஒரு படம் தயாரிக்கப்படும் போது அந்த படத்தின் நெகட்டிவின் மேல் கடன் வாங்கி படமெடுத்துவிட்டு, படம் ரிலீஸின் போது நெகட்டிவ் பைனான்ஸை திருப்பிக் கொடுத்த காலமெல்லாம் இருந்தது. ஆனால் இன்றைய டிஜிட்டலில் எல்லாமே கந்தர கோளம். எல்லாமே டேட்டாவாகிவிட்ட பிறகு அதை கையாளுகிறவன் என்ன செய்வான் என்று யாருக்குமே தெரியாது.

படப்பிடிப்பு நடக்கிறது. கேமராவில் உள்ள டிஜிட்டல் மெமரி கார்ட்  லிமிட் வரை படமாக்கப்பட்ட காட்சிகளை டேட்டா ட்ரான்ஸ்பர் செய்கிறவர் தன்னுடய ஐ மேக்கின் மூலம் ட்ரான்ஸ்பர் செய்துவிட்டு, மீண்டும் அதே மெமரி கார்ட்டை டேட்டா டெலிட் செய்துவிட்டு தருவார். அதே மெமரி கார்ட் மீண்டும் படப்பிடிப்புக்கு பயன்படும். இப்போது நம் படத்தின் முழு 4 கேயில் படமாக்கப்பட்ட காட்சிகள், டேட்டாவாக ட்ரான்ஸ்பர் செய்து கொடுப்பவரின் கம்ப்யூட்டரிலும், ஹார்ட் டிஸ்கிலும். இந்த டேட்டா மாற்றுகிறவர் கம்பெனியில் பணியாற்றுகிறவராகவோ, அல்லது, கொஞ்சம் பேட்டா குறைவாக வாங்குகிற நபராகவோ இருந்தால், அவரைத் தவிர யாரிடமும் பொறுப்பு இல்லை. நான் இயக்கிய தொட்டால் தொடரும் படப்பிடிப்பில் ஒரு நாள் ஷூட் செய்த  காட்சிகளில் கடைசி காட்சிகளை அவசரத்தில் காப்பி செய்யாமலேயே டெலிட் செய்துவிட்டார். கடைசி வரை நீங்கள் அந்த காட்சிகளை படம் பிடிக்கவேயில்லை என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தவரிடம், படப்பிடிப்பின் போது எடுக்கப்படும் கண்டின்யூட்டி ஸ்டில்ஸிலிருந்து காட்டி நிருபிக்க வேண்டியிருந்தது.

இங்கிருந்து காப்பியாகும் டேட்டா ஏதேனும் ஒரு காரணத்தினால் கரப்ட் ஆகாமல் இருக்க, மல்ட்டிலெவல் டேட்டா ஸ்டோர் செய்ய தகுந்த ஹார்ட் டிஸ்குகள் பயன்படுத்தப்படுகிறது. ஒரு இடத்தில் போனால் இன்னொரு இடத்திலிருந்து படத்தின் கண்டெண்டுகளை எடுத்துக் கொள்ளலாம்.. இப்படி ஸ்டோர் செய்யப்பட்ட கண்டெண்டுகள் எடிட்டரின் ஸ்டூடியோவுக்குள் போகிறது. அங்கே எல்லாமே ஹார்ட் டிஸ்குகளாய் மட்டுமே பார்க்கப்படுகிறது. அங்கேயும் நம்முடய கண்டெண்டுகளை எடிட்டரின் அஸிஸ்டெண்ட் கூட கையாளுவார்.  தேவையென்றால் எட்டிட்டரின் அனுமதியோடு, ஹார்ட் டிஸ்குகள் வெளியே கொண்டு செல்ல படும். பல படங்களின் லீக் செய்யப்பட்ட காட்சிகள் இம்மாதிரியான இடங்களிலிருந்து கூடலீக் செய்யப்பட்டிருக்கிறது.

எடிட்டரிமிருந்து, டப்பிங்கிற்காக, அங்கிருந்து சவுண்ட் எஃபெக்ட்சுக்காக, சிஜி காட்சிகளுக்காக, பின்னணி இசைக்காக, ஃபர்ஸ்ட் கட் என பல பேர்களை பொரித்த நம் படத்தின் பிரதிகள் எந்தவிதமான பாஸ்வேர்ட் ப்ரடக்‌ஷன்  இல்லாமல் ஹார்ட் டிஸ்குகளில் காப்பியெடுக்கப்பட்டு, அந்தந்த துறை சார்ந்தவர்களிடம் புழங்குகிறது. யார் யாருக்கு என்னன்ன விதமான காப்பி போகிறது என்பதை எடிட்டர் கொடுக்கும் அவுட்புட்டில் எம்பாஸ் செய்யப்பட்டதை வைத்து மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.


இப்படி எங்கேயும் எல்லா இடத்திலேயும் எந்த விதமான பாதுகாப்பும் இல்லாமல் யார் யார் மூலமாகவோ, நம்முடய கண்டெண்டுகள் கொண்டு செல்லப்படுகிறது. அவசரத்துக்கு கட்டங்கடைசி உதவியாளர்களைத்தான் இதற்கு பயன்படுத்துவார்கள். ‘டேய் ஹார்ட் டிஸ்க் ஜாக்குரத” என்பதை தவிர பெரிய மிரட்டல்களோ, அதனுள் இருக்கும் கண்டெண்டுகளுக்கு பொறுப்பு நீ தான் என்பதோ சொல்லாமல் அனுப்பி வைக்கப்பட்டாலும், நடுவே ஒர் விபத்தோ, அல்லது வேறு ஏதாவது அசம்பாவிதமோ நடந்துவிட்டால் மொத்த முயற்சியும் வீணே. நாலாயிரம் ரூபாய் ஹார்ட் டிஸ்கில் பல கோடி ரூபாய் படம் ஒரு நொடியில் காணாமலோ, அல்லது, உள்ளே உள்ள டேட்டாக்கள் காணாமல் போகவோ வாய்ப்பு அதிகம்.  எங்கேயும் எந்த இடத்திலும் பாஸ்வேர்ட் ப்ரொடக்‌ஷன் என்பது கூட கிடையாது. முன்பெல்லாம் ஸ்டூடியோ அமைப்பு என்பதால் ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போவதற்கும் வருவதற்கும் சலான் போட்டு கேட் பாஸ் இல்லாமல் நடக்காது. இன்றைக்கு டெக்னாலஜி சுருங்கிப் போனதால், ஒரு சின்ன அறை எடிட் சூட்டாகவும், டப்பிங் ரூமாகவும், பின்னணி இசைக் கோர்ப்பு இடமாகவும் மாறிப் போய்விட்டதால் அந்த சாத்தியமே இல்லை. டி.ஐ, அவுட் கொடுக்குமிடத்தில் மட்டுமே கேட் பாஸ் போடும் முறை இருக்கிறது. அதுவும் சின்ன பட்ஜெட் படங்களுக்காக டி.ஐ செய்யும் இடமெல்லாம் ஒற்றை ரூம் எடிட் சூட் போல சுருங்கிவிட்டதால் அங்கேயும் பாதுகாப்பின்னை அதிகமாகிவிட்டது. இத்தனை சாத்தியங்கள் இருந்தும் படங்களின் பைரஸி வராமல் இருக்க காரணம் மேற்ச்சொன்ன அத்துனை டெக்னீஷியன்களின் அடிப்படை நேர்மை. பின்பு எங்கிருந்து பைரஸி வருகிறது? பார்ப்போம்.

கொத்து பரோட்டா 2.0-52

கொத்து பரோட்டா 2.0-52
பெஃப்ஸி ஸ்ட்ரைக். தொழிலாளர் பிரச்சனை என்றெல்லாம் பரபரப்பாக தமிழ் சினிமா நிகழ்ந்து கொண்டிருக்க, இதற்கான காரணம் திரைப்பட தயாரிப்பாளர்கள் புதிய ஆட்களை தெரிவு செய்து தனியே ஒரு சங்கத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டுதான். புதிய ஆட்களை தெரிவு செய்வது என்பதும், இவர்களுடன் மட்டுமே வேலை செய்ய வேண்டுமென்ற மோனோபாலி மனப்பான்மை இனி வேலைக்காகாது என்பதையும் பெஃப்ஸிக்காரர்கள் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆனால் அதே நேரத்தில் இந்த சுதந்திர ஆள் எடுப்பு படலத்தினால் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் உழைப்பு சுரண்டல்கள் அதிகமாகப் போகிறது என்றே தோன்றுகிறது.

தொழிலாளர்களுக்கு எல்லாம் ஷூட்டிங் என்று போய்விட்டால் நிச்சயம்  சன்ரைஸ் கால்ஷீட்டில் ஆரம்பித்து, காபி டிபன், பேட்டா, என எல்லாமே கட்டாயம் உண்டு. ஆனால் ஷூட்டிங் நடந்தாலும், சரி நடக்காவிட்டாலும் சரி பேட்டாவோ, சம்பளமோ நிச்சயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையே இல்லாமல் கிடைக்கிற வரைக்கும் லாபம். எப்படியாவது முட்டி மோதி ஒரு படம் பண்ணிரணும்னு துடியாய் உழைக்கிற உதவி இயக்குனர்கள் நிலை தான் பாவம். ஒரு திரைப்படம் தயாரிக்க தயாரிப்பாளர் எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியம் எடுக்க நினைக்கிற படத்தை திரைக்கு கொண்டு வர போராடும் இயக்குனர் அண்ட் உதவி இயக்குனர் டீம். ஆனால் இருப்பதிலேயே மிகவும் குறைவாய் மதிக்கப்படுகிறவர்கள் இவர்கள் தான்.  சம்பளம் தான் இல்லை. அட்லீஸ்ட் பேட்டாவாவது கொடுத்துக் கொண்டிருந்தார்கள் என்ற நிலை இருந்ததை புதியதாய் வந்து வெற்றி பெற்ற சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் அது கூட கிடையாது ஷூட்டிங் போனால் தான் பேட்டா என்று சொல்லிவிட, மாத சம்பளமாவது வருமா என்று பார்த்தால் அதுவும் வரும் போதுதான். சரி ஷூட்டிங் போனால் பேட்டா என்ற சந்தோஷமும் ஒவ்வொரு நாள் கடைசியிலும், மிச்சம் மீதி இருந்தால் மட்டுமே தரப்பட, நாளைக்கு வாங்கிக்கங்க என்று கொஞ்சம் கூட தயவு தாட்சண்யம் பார்க்காமல் துறத்தப்படும் இனம் உதவி இயக்குனர்கள் தான்.

பெரிய இயக்குனர்கள் படங்களில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தவர்கள் பாக்யவான்கள். நிச்சயம் மாத சம்பளம் ஒழுங்காய் வந்துவிடும். இன்னும் சில இயக்குனர்கள். ஒரு டூவீலர் கூட வாங்கிக் கொடுத்துவிடுவார்கள்.  ஆனால் பிரச்சனை என்னவென்றால் அவர்களிடம் இருக்கும் நானூத்து அம்பது உதவியாளர்களில் ஒருவராய் தான் இருக்க முடியும். இருக்குற கூட்டத்தில் போராடி டைரக்டருக்கே நான் உங்க அஸிஸ்டெண்ட் என்று அவ்வப்போது நியாபகப்ப்டுத்தி எதையாவது செய்து, வெளியே வந்து படம் வாய்ப்பு பிடிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. ஒரு முறை இந்த லக்ஸரி பட்ஜெட் டாஸ்கை அனுபவத்தவர்கள் அதில் இருந்து வெளியே வர கஷ்டப்படுவார்கள். ஏனென்றால் இந்த நிலையான உதவி இயக்குன அனுபவம் வெளியே கிடைப்பது அரிதிலும் அரிது.

இத்தனைக்கும் இயக்குனர்கள், உதவி இயக்குனர்களுக்கு என்று சங்கம், பேட்டா, சம்பளம் ரூல்ஸ் எல்லாம் உண்டென்றாலும் வேலைக்காகாது. ஹிட் படம் கொடுத்த இயக்குனர்களுக்கு கூட முழு சம்பளத்தை செட்டில் செய்யாத தயாரிப்பாளர்கள் நிறைய பேர் உண்டு . ஏன் என்னைப் போன்றவர்களுக்கே பணம் கொடுக்காமல், வருடக்கணக்கில் இழுத்தடிக்கும் தயாரிப்பாளர்கள் இருக்கும் நிலையில் புதியதாய் தெரிந்தெடுக்கும் டெக்னீஷியன்களை, வாய்ப்பு கொடுக்கிறேன் என்ற மகோன்னத உயரத்திலிருந்து அவனின் அடிப்படை செலவுக்குக்கூட கொடுக்காமல் போகும் வாய்ப்பு இருக்கிறது என்பதை நினைக்கும் போது கொஞ்சம் கலவரமாய்த்தான் இருக்கிறது. சட்டமிருந்தே கேட்க முடியாத நிலையில் ஃபீரிலான்சராய் உள் நுழைந்தவர் என்னத்தை போராட்டம் செய்து கிழித்துவிட முடியும். சினிமாவில் எத்தையாவது சாதிக்க வேண்டுமென்று வீட்டை எதிர்த்துக் கொண்டு, பார்த்த சாப்ட்வேர் வேலையை உதறிவிட்டு, உதவி இயக்குனராய் வலம்வரும் பல பேருக்கு வறுமை, பசி, போன்றவற்றினால் அடையும் மன உளைச்சல், ப்ரெஷர் எல்லாம் சேர்ந்து அவனை அழித்துவிடக்கூடிய நிலையில் தான் இருக்கிறான். இந்த புதியவர்களுக்கு ஆதரவு தர தயாராய் இருக்கிறவர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தையும் கொஞ்சம் கவனத்தில் வைத்தால் நல்லது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Only 13 – The true story of Lon                                                                                                                                                                                       
நான் ஏன் விபசாரியானேன்? என்று கேட்டால் வீட்டுல கஷ்டம், என் அண்ணன்/ அப்பா/ அம்மா வே இங்க கொண்டு வந்து வித்துட்டாங்க. தம்பிக்கு கண் தெரியாது என்பது போல பல கதைகளை தொடர்ந்து எழுதி, பார்த்திருப்போம். தாய்லாந்து என்றதும் sex tourism தான் நினைவுக்கு வரும். ஏன் அந்நாட்டில் மட்டும் இவ்வளவு சல்லீசாய், சுலபமாய் நடக்கிறது. அதுவும் எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல் என்ற கேள்வி எழுந்தால் அதற்கான பதில் இந்த புத்தகத்தில் இருக்கிறது.

13 வயதான லான். இஸான் எனும் தாய்லாந்தின் குக்கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்தவள்.  வீட்டின் பிரச்சனை தாங்காமல் வீட்டை விட்டு ஓடியவள். மீண்டும் 13 வயதில் தாய்லாந்தின் பாரில் வேலைக்கு சேர்ந்தவள். 13 வயதில் ப்ரீமியம் ரேட்டுக்காக தன்னை இழந்தவள்.  மிகச் சிறிய வயதில் அத்தொழிலில் மிக அதிகமாய் சம்பாதித்தவள். மாடலானவள். இந்த லான் சொல்லும் காரணமும் அதே தான். வறுமை. ஆனாலும் தான் சம்பாதித்த பணத்தைக் கொண்டு அவளின் அம்மா ஊரில் கெத்து காட்டிக் கொள்வதற்காக மேலும் பணம் கேட்பதும், வீட்டின் ஆண்கள் குடித்துவிட்டும், பிம்பிங் வேலை பார்த்தும், வீணாய் பணத்தை தண்ணீராய் செலவு செய்தும் வாழ்ந்து கொண்டிருப்பதையும் மீறி தனக்கான வீடு கட்டுவதற்காக போராடியவள். அதீத பணம், செக்ஸ் எல்லாவற்றையும் பார்த்ததினால்  பல சமயம் சுய பச்சாதாபத்தில் வாழ வேண்டிய கட்டாயம். யாரையாவது சார்ந்திருக்க வேண்டி காதலில் விழுவது. அந்த காதலை தன் முன்னேற்றத்துக்காக கழற்றி விடுவது இத்தொழிலிருந்து வெளியே வந்து செட்டிலாக நினைத்து சம்பாதித்த பணத்தை எல்லாம் ஐரோப்பாவில் விட்டது. இங்கிலாந்தில் வந்து செட்டிலாக வேண்டும் என்ற எண்ணத்துக்காக, ஒருவனிடன் காதலில் வீழ்ந்து, அவனை திருமணம் செய்து, பல கஷ்டங்களை பட்டு, மனநிலை பாதிக்கப்பட்டு, தனக்கு பிறந்த குழந்தையையே அவளின் மனநிலை காரணமாய் வேறு ஒருவருக்கு தத்து கொடுத்துவிட்டு, குழந்தை பாசத்தில் ஏங்கிக் கொண்டும், மனநல காப்பகத்தில் இருந்து கொண்டு, அரசு தரும் பணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் லானின் உண்மைக் கதைதான் இந்த புத்தகம்.

இந்த புத்தகத்தை எழுதியவர்கள் ஜுலியா மன்ழானரெஸும், டெரெக் கெண்ட்டும். லான் அவர்களிடம் சொல்லி எழுதியது. இந்த புத்தகத்தின் மூலமாய் வரும் வருமானத்தில் செக்ஸ் டூரிசத்தில் ஏற்கனவே உழன்று கொண்டிருக்கும் இளம் பெண்களை அதிலிருந்து மீட்பதற்கும், இனி விழ இருக்கும் பெண்களை காப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள்.  லானின் கதை எல்லார் கதை போல இருந்தாலும், சாதாரண வேலை செய்தால் சம்பாதிக்க முடியாததை இந்த தொழிலில் ஈடுபட்டால் மிக சுலபமாய் சம்பாதிக்க முடியுமென்ற பணம், புகழ், சுதந்திர ஆசை யும், அதே பணம் மூலமாய் தன் குடும்பத்தை உயர்த்திக் காட்ட, செட்டிலாக நினைக்கும் குடும்பத்தினருக்கும் மகளின் மூலமான இந்த வருமானம் ஆரம்பத்தில் தேவையாகவும், போகப் போக ஆடம்பரத்தை நிலை நிறுத்திக் கொள்ள  வேண்டிய கட்டாயத்தில் தேவை அதிகரிக்க, கூசாமல் இன்னும் கொஞ்சம் அனுப்பு என்று கேட்பவர்களாகவும் மாற்றி விடுகிறது என்பதை தன் குடும்பம் என தனியே சொல்லாமல் பல நண்பிகளின் குடும்பக் கதைகள் மூலம் சொல்கிறார் லான்.  இவரின் நிஜ காதலரின் கேரக்டர் மிக அருமை. இந்த தொழிலை விட்டு விடு நான் மாதா மாதம் பணம் அனுப்புகிறேன் என்ற அக்ரிமெண்ட்டில் மாதம் பணம் அனுப்பும் வெளிநாட்டுக்காரர்கள். அவர்களை சீட் செய்து மேலும் சம்பாதிக்க விழையும் பேராசை. சிட்டிங் தெரிந்தவுடன் ஆமா இப்ப என்ன எனக்கு நீ அனுப்பும் காசு பத்தலை என்று ப்ளேட்டை மாற்றிப் போட்டு எக்ஸ்ட்ரா காசு வாங்கும் வித்தை.

காதல், காதலனை நாயாய் பயன்படுத்தியவிதம். தன் ஆசைக்காக பர்வர்ட் ஒருத்தனிடன் காதல் வயப்பட்டு, இங்கிலாந்தில் செட்டிலாக கல்யாணம் செய்து கொண்டதும் நடக்கும் மன அழுத்த நாட்கள் எல்லாம் லானின் மீதான பரிதாபம் ஓங்கச் செய்யும் நிகழ்வுகள்.  எங்கேயும் தன் செய்கைகளை நியாயப்படுத்தாமல், ஆனால் எக்காரணம் கொண்டும் தன் தங்கைகளை இந்த தொழிலுக்கு வந்து சம்பாதிக்க விட்டுவிடக்கூடாது என்ற அழுத்தமான கொள்கைக்காக,  இத்தனைக்கு பின்பும் அதைக் காப்பாற்ற, குடும்பத்திற்கு பணம் அனுப்பிக்  கொண்டிருக்கிறாள் லான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Jan 5, 2018

சாப்பாட்டுக்கடை - நியூ பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ்


பட்டுக்கோட்டை காரர்களுக்கு இந்த பெயரை கேட்டாலே நாவில் நீர் ஊரும். கே.ஆர்.பியிடம் சொன்ன மாத்திரத்தில் அவர்களிடம் சாப்பாடு அட்டகாசமாய் இருக்குமென்றார். நண்பர் ஸ்ருதி டிவி கபிலன் தன் பிறந்த நாள் விருந்துக்கு  அழைத்திருந்தார். நீங்களே ஒரு இடத்தை தேர்தெடுங்கள் என்றதும் நான் சொன்ன பெயர் மேற்ச் சொன்ன இடம் தான். 12 .30 மணிக்கே போய்விட்டதினால் அப்போதுதான் பூஜை போட்டுக் கொண்டிருந்தனர். ரெண்டு பேர் சாப்பிட காத்திருந்தனர். ஓனர் செல்வத்திடம் என்னை அறிமுகப்படுத்தினார் அங்கிருந்த சினிமா தயாரிப்பாளர் என்னைப் பார்த்ததும். 




டெய்லி பேப்பரை கீழே போட்டு அதன் மேல் தலை வாழை இலை போட்டார்கள். பாட்டிலில் வாட்டர்.  இலை கழுவி விரித்த மாத்திரத்தில் இரண்டு பொரியல்கள், ஒரு தொக்கு. அந்த தொக்கின் பெயரைச் சொன்னால் சில பேர் மூக்கில் விரல் வைத்தபடி சப்புக் கொட்டி சாப்பிடுவார்கள். பல பேர் ஆழமாய் மூச்சிழுத்து சேம் சப்பு கொட்டு சாப்பிடுவார்கள். கருவாட்டு தொக்கு வைத்தார்கள். ஆகா ஆரம்பமே அசத்தலாயிருக்கிறதே.. 

ஒரு சிக்கன் சாப்பாடு, ஒரு மட்டன் சாப்பாடு, ஒரு எரா சாப்பாடு, ஒரு மீன் சாப்பாடு என்று ஆர்டர் செய்தோம். கூடவே ஒரு நாட்டுக்கோழி ப்ரை, மட்டன் சுக்கா, கோலா உருண்டை, வஞ்சிரம் மீன் ப்ரை, கரண்டி ஆம்லெட் என லிஸ்ட் நீண்டது

சாதம் பரிமாறப்பட்ட உடன் சிக்கன் கிரேவி என திக்காய் ஒரு திரவத்தை ஸ்பூனில் பரிமாறினார்கள். இன்னும் கொஞ்சம் கேட்க, இத சாப்புடுங்க.. வேணும்னா இன்னும் தர்றோம் என்றார்கள். ஸ்பூனில் ஊற்றியதை சாதத்தில் கலக்க, கிரேவியின் டென்சிட்டி பரந்து விரிந்து நிறைய சாதத்தை அடைந்தது. வாயில் வைத்த மாத்திரத்தில் அட.. அட.. அட என்று சொல்லி முடிப்பதற்குள், காடை கிரேவி, மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, நண்டு கிரேவி, எரா கிரேவி, மீன் குழம்பு. என வரிசைக் கட்டி வர, ஒவ்வொன்றும் ஒவ்வொரு டேஸ்ட். முக்கியமாய் நண்டும், சிக்கன் குழம்பும் ஆசம் என்றால் ஆசம். மீன் குழம்பு, சிக்கன் குழம்பு, என்பதையெல்லாம் பெயரில் மட்டுமே பார்த்திருக்கும் நமக்கு ஒவ்வொரு குழம்பிலும் ஒவ்வொரு துண்டுகளோடு பரிமாறப்படுவது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.  சிக்கன் குழம்பு அவ்வளவு அருமையான மசாலாவோடு, நன்கு வெந்த சிக்கன் துண்டுகளோடும், மட்டன் குழம்பில் மட்டன் துண்டுகள், என எல்லா கிரேவிக்களும், ஸ்பூனில் தான் தருகிறார்கள். எரா ப்ரை சூப்பர். நாட்டுக் கோழியின் மசாலாவும், சிக்கன்மசாலாவும் சேம் டேஸ்டாய் இருந்தது. வஞ்சிரம் மீன் ப்ரை ஆசம். முக்கியமாய் ஒரு விஷயம் சாப்பாடு பரிமாறும் போதே சின்ன வெங்காயத் துண்டுகளை வைக்கிறார்கள். பல விதமான குழம்புகளை நாம் சாப்பிடும் போது டேஸ்ட் வித்யாசம் தெரிய ஒவ்வொரு குழம்புக்கு இடையேயும் ஒரு கடி இந்த வெங்காயத்தை கடித்துக் கொண்டுவிட்டு, அடுத்த கிரேவிக்கு போனால் இன்னும் சிறப்பு. சின்ன வெங்காயம் உடலுக்கும் நல்லது. கோலா  உருண்டையில் லவங்கப்பட்டை தூக்கலாய் இருந்தால் கோலாவின் டேஸ்டை கொஞ்சம் குறைத்தது.  

பைனல் டச்சாய், அருமையான ரசம். உடன் மோர். வேண்டுமென்றால் தயிர் தருகிறார்கள் அவ்வளவு சிலாக்கியம் இல்லை. சாப்பிட்டு முடித்துவிட்டு, வெளியே வந்தால் இலவச வேர்கடலை பர்பி.   டேஸ்டுக்காக அவர்களின் பிரியாணியை ரெண்டு ஸ்பூன் சாப்பிட்டுப் பார்த்தேன். சீரக சம்பாவின் மணம் அருமையாய் இருந்தது. அளவான மசாலாவோடு. ஒரு நாள் வெறும் பிரியாணியை மட்டும் மற்றொரு சீட்டிங் நாளில் கட்ட வேண்டும். 

டிபிக்கல் வீட்டு சாப்பாடு போல வகை தொகை இல்லாமல் சாப்பிட வேண்டுமென்றால் என்னுடய தற்போதைய ரெக்கமெண்டேஷன் நீயூ பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ்.

செஃப் சுதாகரையும் சந்தித்துவிட்டுத்தான் வந்தேன் மேற்ச்சொன்ன குறைகளையும் சொன்னேன். ஏற்கனவே பல பிரபலங்களின் வருகையால் இடப்பற்றாகுறையாய் இருப்பதாய் சொன்னார்கள்.  தி.நகரில் பிக்பஜாருக்கு பின்புறம் உள்ள ஜல்லிக்கட்டு உணவகத்துக்கு பின்னால் இந்த உணவகம் உள்ளது. என்சாய். நன்றி ஸ்ருதி டிவி கபிலன் வாழ்க பல்லாண்டு.

முக்கிய அறிவிப்பு. இந்த உணவகம் மதியம் லஞ்சுக்கு மட்டுமே செயல்படுகிறது. ராத்திரியில் போய் ஏமாற வேண்டாம். 

Jan 2, 2018

சினிமா வியாபாரம் -2 - Distribution


பைரஸியும் சினிமாவும் -1

பைரஸியும் சினிமாவும்.
நியாயமாய் சினிமாவும் பைரஸியும் என்று தான் ஆர்மபித்திருக்க வேண்டும். ஆனால் இன்றைய நிலையில் சினிமா என்றில்லாமல் எல்லா டெக்னாலஜி விஷயங்களையும் ஆக்டபஸாய் ஆக்கிரமித்து அழித்துக் கொண்டிருப்பது பைரஸி என்பதால் அது முதல் நிலையில் செல்ல வேண்டிய கட்டாயம். சென்ற வாரம் என்னுடய புதிய திரைப்படமான “6 அத்யாயம்” திரைப்படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்தேறியது.  இது ஒரு அந்தாலஜி திரைப்படம். ஆறு கதைகள், ஆறு இயக்குனர்கள், ஒரே ஜெனர். முக்கியமாய் உலக திரைப்பட வரலாற்றில் முதல் முறையாய் அனைத்து கதை க்ளைமேக்ஸ்களும் கடைசி அரை மணி நேரத்தில் காண்பிக்கப்படும் படம். இப்படியான சிறப்புகள் கொண்ட சுயாதீன திரைப்பட விழாவுக்கு வந்திருந்து வாழ்த்தியவர்கள் அனைவரும் பேசிய முக்கிய விஷயம் நாம் ஐந்து வாரமாய் பேசிய ஓ.டி.டி டிஜிட்டல் ப்ளாட்பார்ம் பற்றியும், எதிர்காலத்தில் டிஜிட்டல் ப்ளாட்பார்ம்களின் ஆக்கிரமிப்பு எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பற்றியும்.பைரஸி பற்றியும் தான்.
சினிமா டிஜிட்டலாய் மாற ஆரம்பித்ததிலிருந்த காலத்திலிருந்தே பைரஸி ஆரம்பித்துவிட்டது என்று சொல்ல வேண்டும். ஊர் திருவிழாவில் திரை கட்டி படம் பார்த்து வளர்ந்தவர்கள் தான் நாம். வீடியோ கேசட் வந்த பிறகு அதே கொண்டாட்டத்தோடு 12 /24 மணி நேரங்களுக்கு வாடகைக்கு எடுத்து மொத்தமாய் நான்கைந்து படங்கள் பார்க்க ஆரம்பித்த காலத்தில் நாலு பழைய படமென்றால்  ரெண்டு புது படமாய்த்தான் இருக்கும். அப்படி வரும் புதுப்படங்கள் திருட்டுத்தனமாய் எடுக்கப்படும் கேமரா பிரிண்டுகளாய் இருக்கும், ரெண்டு வாரத்துக்கு பின்பு அதே படம் உருது சப்டைட்டில்களோடு, திரை நெடுக நீலம் ஆக்கிரமிக்கப்பட்ட கொஞ்சம் நல்ல ப்ரிண்ட் வரும். மீண்டும் சில வாரங்களுக்கு பின் நல்ல தரமான வீடியோ பிரிண்டுகள் வலம் வரும்.  முதலில் வந்தது திருட்டுத்தனமாய் திரையரங்குகளில் எடுக்கப்பட்ட வீடியோ. அதன் பின் வருபவை எல்லாம் வெளிநாட்டு உரிமை என்று அரபு மற்றும் சிங்கப்பூர் மலேசியாவுக்கு விற்ற உரிமம் மூலமாய் வீடியோ கேசட்டுக்கள் வெளியிடப்பட்ட சூட்டோடு, நம்மூருக்கு ப்ளைட் ஏற்றிவிடுவார்கள். பின்பு வழக்கம் போல காப்பிகள் போடப்பட்டு விநியோகம் நடக்கும்.

வீடியோ கேசட்டை புதிய வரவான சீடி வந்து மொத்தமாய் ஆட்டத்திலிருந்து விலக்கினாலும், பைரஸி உள்ளங்கை அடக்கமானது. அடுத்த கட்டமாய் டெக்னாலஜியின் புதிய வரவான கேபிள் டெலிவிஷன் வந்து சீடியின் டிமாண்டை குறைத்தது ஒரு சிடி வாங்கி பல நூறு காப்பிகள் போட வேண்டிய தேவையில்ல. ஒரு சிடி எடுத்து கேபீள் டிவியில் போட்டா ஊரே பார்த்துவிடலாம். என்ற நிலையில் இணையம் பிரம்மாண்டமாய் வளரத் தொடங்கி, இன்று 100 எம்.பிபிஎஸ் வேகத்தில் வீட்டில் உட்கார்ந்தபடியே ஒரு முழு படத்தை மூன்று நிமிடங்களில் எல்லாம் டவுன்லோட் செய்யக்கூடிய நிலையாகிவிட்டபடியால் பைரஸியும் மிக வேகமாய் வளர ஆர்மபித்துவிட்டது. மக்களுக்கும் தாங்கள் செய்வது தவறு என்று உறுத்துவதில்லை. சினிமா, எண்டர்டெயிண்ட்மெண்டுக்காக செய்யும் திருட்டுக்கள் திருட்டுக்களாகவே மக்களுக்கு படுவதில்லை.

வீடியோ கேசட் காலத்தில் வெளிநாட்டு உரிமை விற்பதால் தான் பைரஸி வருகிறதென்று வெளிநாட்டு உரிமம் முதல் மூன்று வாரங்களுக்கு விற்காமல் எல்லாம் முயன்று பார்த்தார்கள். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள். பட் நோ யூஸ். இன்றைக்கும் அதே போல தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் இருபது வருஷத்துக்கு முன் பேசினார்ப் போலவே பேசிக் கொண்டிருக்க, பைரஸி கட்டுக்குள் வந்த பாடில்லை. ஆந்திராவைப் பாருங்கள், கேரளத்தை பாருங்கள், ஹிந்தி திரையுலகை பாருங்கள் அங்கேயெல்லாம் பைரஸியே இல்லை என்று உதாரணத்தோடு சொன்னாலும்,  ஆந்திரத்தில் பெரும்பான்மை மக்களின் எண்டர்டெயிண்ட்டான சினிமா எக்ஸ்பென்ஸிவ் கிடையாது என்பதும், நல்ல தரமான ஒளி, ஒலி அமைப்புகளுடன் கூடிய அரங்கில் 80 ரூபாய்க்குள் திரைப்படம் பார்க்க முடியும் என்பதும், கேரளாவில் மக்களே பைரஸியை வரவேற்க்காமல் இருக்க, அதையும் மீறி கேரள அரசு பைரஸிக்கென்றே ஒர் தனி பிரிவை தொடங்கி, அப்லோட், டவுன்லோட் செய்கிறவர்களை எல்லாம் ஐ.பி அட்ரஸ் தேடி கண்டுபிடித்து முட்டிக் முட்டி தட்டிக் கொண்டிருப்பதை சொல்ல மாட்டார்கள்.\

பைரஸி குறைய வேண்டுமென்றால் மக்களின் வாங்கும் சக்திக்கு ஏதுவான விலை. தரமான அரங்குகள், வரும் பார்வையாளர்களுக்கான சேவை என இவையெல்லாம் மிகவும் முக்கியம். பொழுது போக்கிற்காக உள்ளே வரும் பார்வையாளனின் டவுசரை மொத்தமாய் அவித்து விடாமல்  இருப்பது மிக முக்கியம். சமீபத்தில் ஒர் ஆங்கில வெப்சைட்டில் தமிழ் ராக்கர்ஸின் அட்மின் ஒருவரிடம் பேட்டி எடுத்ததாய் போட்டிருந்தார்கள். அதில் தயாரிப்பாளர்களே படங்களை லீக் செய்ய தயாராய் இருப்பதாகவும் சொல்லியிருந்தார்கள். ஓரளவுக்கு அது உண்மை என்றாலும், அந்த பெரிய பேட்டி பெரும் பொய் என்பதுதான் நிஜம். ஏனென்றால் அந்த பேட்டியில் சொல்லப்பட்ட பல விஷயங்கள் பத்திரிக்ககளில்  படித்த விஷயங்களின் தொகுப்பாய் தான் இருந்தது.

ஆந்திராவில் அத்தாரிண்டிக்குதாரேதி எனும் பவன் கல்யாண் படத்தை  காழ்ப்புணர்ச்சி காரணமாய் இணையத்தில் வெளியிட்ட கதை, போட்டி பொறாமையால் வெளியிட்டார்கள் என்பது போல பல கதைகள் உலவினாலும் இன்றைய அளவில் ஒரு படம் வெளியாகும் முன்பே பைரஸியாய் வெளியாகும் சாத்தியம் இரு நூறு சதவிகிதத்துக்கும் மேல். அத்தனை  வழிகள் இருக்கிறது. பிலிம் இருந்த காலத்தில் இது சாத்தியமே இல்லை. அத்துனை ஃபூல் ப்ரூப் பாதுகாப்பு இருந்தது. டிஜிட்டலான பின் எப்படி அவ்வளவு சுலபமாய் பைரஸி செய்ய முடியும்? பைரஸி நிஜமாய் எங்கிருந்து வருகிறது?  என்பதை அடுத்த கட்டுரையில் பார்போம்.


கொத்து பரோட்டா 2.0-51

கொத்து பரோட்டா 2.0-51
Arjun Reddy
ஆந்திராவை மட்டுமல்ல. தமிழ் நாடு, கர்நாடகா, வெளிநாடு என எல்லா இடங்களிலும் ரசிகர்களை ஒரு கலக்கு கலக்கி விட்டிருக்கும் படம். இப்படத்தோடு வெளியான விவேகத்தின் வசூலை விட, அதிக வசூலை வெளிநாடுகளில் ஏற்படுத்திய படம். சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் விவேகத்தின் ஆக்கிரமிப்பால் வெறும் நான்கு காட்சிகளுக்கு மட்டுமே அரங்குகள் கிடைத்திருக்க, திங்களிலிருந்து சுமார் 20பதுக்கும் மேற்பட்ட காட்சிகள் உயர்ந்த படம். இந்த அக்மார்க்  தெலுங்கு படம்..

கதையென்று பார்த்தால் நம்ம பழைய தேவதாஸின் லேட்டஸ்ட் வர்ஷன் தான் ஆனால் அதை ப்ரெசெண்ட் பண்ணியிருக்க ரானெஸ் தான் படத்தை அப்படி கொண்டாட வைக்கிறது. மெடிக்கல் காலேஜில் எல்லாவற்றிலும் டாப்பர் ஹீரோ. ஆனால் ஆங்கர் மேனேஜ்மெண்ட்டில் ஜீரோ. ஒரு கோப  தருணத்தில் காலேஜை விட்டு வெளியே போகிறேன் என்று முடிவெடுத்த போது, புதியவளான நாயகி ப்ரீதியை பார்க்கிறான். பார்த்த கணத்தில் அவள் மேல் காதல் கொள்கிறான். அவளின் மேல் அதீத காதல் கொள்கிறான். அவனின் காதலில் அவள் மூழ்கி திளைக்கிறாள். திக்கு முக்காடுகிறாள். காதலின் ஆக்கிரமிப்பை மூச்சு முட்ட அவள் அனுபவிக்கிறாள். அவளின் டாக்டர் கனவும், ஹீரோவின் மாஸ்டர் கோர்ஸும் முடியும் வரை காத்திருக்கிறார்கள். ஒன் பைன் டே ப்ரிதியின் அப்பாவிடம் பெண் கேட்கும் நிர்பந்ததில் போய் நிற்க, நீ என்ன ஜாதி, நானென்ன ஜாதி என அவமானப்படுத்திப் பேச, இருவரும் பிரிய வேண்டிய நிலை. ஆறு மணி நேரத்திற்குள் நீ முடிவெடு, இல்லாவிட்டால் உன் அப்பாவின் விருப்பம் போல நல்ல துளு பையனை பார்த்து கல்யாணம் செய்து கொள் என்று கோபமாய் சொல்லிவிட்டு போய், முட்ட முட்ட குடித்துவிட்டு, ஹை டோசேஜாய் மார்பினை ஏற்றிக் கொண்டு கிட்டத்தட்ட கோமாவில் வீழ்கிறான். பின்பு என்ன ஆனது என்பது கதை..

மெடிக்கல் காலேஜ் வாழ்க்கை, டாக்டர்களின் பின்னணி, அவர்களின் மிதமிஞ்சிய போதை பழக்கம், என முகம் சுளிக்க வைக்கும் விஷயம் காட்சிகளாய் நிறைய இருந்தாலும் நிஜத்தில் இவர்கள் காட்டியதை விட மோசமான பழக்க வழக்கங்களை கொண்ட டாக்டர்களை அவர்கள் ஆஸ்டலில் கண்டிருக்கிற படியால் என்னால் ஈஸியாய் ரிலேட் செய்து  பார்க்க முடிந்தது என்பதை மறுக்க முடியாது.

கோபக்காரன், நல்லவன், அதீத அன்புக்கு சொந்தமானவன், காதலிக்காக எதை வேண்டுமானலும் செய்ய துணிபவன், பிடித்த பெண்ணிடம் ஆவேசமாய் கிட்டத்தட்ட கட்டாயப்படுத்தி காதலை வெளிப்படுத்துபவன் என எனக்கு சேது விக்ரம் நியாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் இந்த அர்ஜுன் ரெட்டியின் கேரக்டரை மிக அழகாய் முதல் காட்சியில் அவனுடய பாட்டியை விட்டு, அவன் எப்படிப்பட்டவன் என்று விளக்கமிடத்திலிருந்து ஆகட்டும், அவனின் செய்கைகள் ஆகட்டும், திகட்ட, திகட்ட காதலையும், முத்தங்களையும், செக்ஸையும் கொஞ்சம் கூட வக்கிரமில்லாமல் வெளிப்படுத்தும் காட்சிகளாகட்டும், காதலின் வலியை, வலிக்க, வலிக்க, நம்மூள் நிறுத்தி நிதானமாய் மூன்று மணி நேரம் கதை சொல்லி செலுத்திய நுட்பமாகட்டும் அட்டகாச ஃபீல்.

படம் நெடுக மிக இயல்பான கான்வர்ஷேஷன். குறிப்பாய் அர்ஜுன் ரெட்டியின் நண்பன் கேரக்டரும், அவனுடய பாட்டி கேரக்டரும் பேசும்  வசனம்  “அவன் இப்படி இருப்பதற்கு காரணம் அவனுடய வலி. சந்தோஷத்தை ஷேர் பண்ணலாம் வலியை ஷேர் பண்ணச் சொன்னா எப்படி பண்ண முடியும். லெட் ஹிம் சஃபர் ஹிஸ் பெயின்” என்று சொலுமிடம்  அட்டகாசம். இடைவேளை வரும்  காட்சியில் விஜய் மற்றும் ப்ரீதியின் நடிப்பு அட்டகாசம். அந்தக் காதலும், கோபமும், மறுத்தலிப்பும் அவமானமும் விஜய்யின் கோபத்தை ஏற்ற, அவனை முற்றிலும் புரிந்த ப்ரீத்தி அவனை கட்டி அணைத்து, அழுது, திமிரும், அவனை கண்ட்ரோலுக்கு கொண்டு வர,  தன் காதலையும், தற்போதைய நிலையையும் சொல்லும் காட்சி.. நடிப்பும், ப்ரெசெண்டேஷனும், இண்டர்வெல் ப்ளாக் காட்சியும் ஆசம்.. ஆசம்.

படம் நெடுக பின்னணியிசையும், அழகாய் ப்ரேம் வைத்திருக்கிறோம் என்று மெனக்கெடாமல் வைக்கப்பட்ட ஷாட்களும், காட்சிகள் இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக இருக்க, பாடல்கள் எல்லாம் க்ளாஸிக்கல் பாடல்களாய் ஒலிப்பது இன்னும் க்யூட். உழைப்பு, உழைப்பு எப்பேர்பட்ட உழைப்பு. பெல்லி சூப்புலு படத்தில் சாக்லெட் பாயாக தெரிந்த விஜய் தேவரக்கொண்டாவின் ஆங்கிரி யங் மேனிலிருந்து, மொடாக்குடியன், ஸ்திரிலோலன், உருகி உருகி காதலிப்பவன் என இத்தனை ட்ரான்ஸ்பர்மேஷன்கள் வெளிக்கொணர அவர் செய்திருப்பதுதான் கடும் உழைப்பு. திரை நெடுக இவரை பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறது. முத்தக்காட்சிகள். மிக இயல்பான செக்ஸ், தடாலடியான வசனங்கள் என ஒட்டாமல் அதிர்ச்சி ஏற்படுத்துவதற்காக வக்கிரங்களை மட்டுமே வெளிப்படுத்தும் படங்களுக்கு மத்தியில் இன்றைய இளைஞர்களின் மனநிலையில் அட்டகாசமான, போல்டான, மேக்கிங்கில்,  காதல் கதையை கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். டோண்ட் மிஸ்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Lipstick Under My Burka
பல விதமான தடைகளைத் தாண்டி வெளியாகியிருக்கும் படம். டைட்டிலே ப்ரச்சனைக்குரிய காரணங்களை சொல்லும். இதன் ட்ரைலர் வேறு இன்னும் கிளப்பிவிட, பெரும் போராட்டத்திற்கு பிறகே வெளியானது. நான்கு சாதாரண பின்னணி கொண்ட மிடில்க்ளாஸ் பெண்கள். பெண்களுக்கான சமூக  அடக்குமுறைகளுக்கிடையே அவர்களின் , காதல், காமம், ஆசாபாசங்கள், விருப்பங்கள்,அடைய நினைக்கும் உயரங்கள், உரிமைகளை  அடைய,  எத்தனை பொய், துரோகம், திருட்டு எல்லா செய்து அடைய வேண்டியிருக்கிறது என்பதை மிக இயல்பாய் சாட்டையால் அடித்து சொல்லியிருக்கிறார்கள்.

ஷெரின் முஸ்லிம் பெண். டிபிக்கல் மேல் ஷாவனிஸ்ட் சவுதி அரேபியாவில் பணி புரிந்துவிட்டு, செக்ஸுக்கு மட்டுமே மனைவி என்ற எண்ணத்தை மீறி எதையும் கொள்ளா கணவன்,  இரண்டு குழந்தைகளுடன் புழுக்கத்துடன் வாழ்கிறவள். அவளின் ஒரே சுதந்திர காற்று  மதியங்களில் கணவனுக்கு தெரியாமல்  அவள் செய்யும் சேல்ஸ் வேலை. அதன் மூலம் வரும் சுதந்திர வருமானம்.

லீலாவுக்கு இந்த கீக்கிடமான போபாலிலிருந்து டெல்லிக்கு போய் சொந்தமாய் தொழில் செய்து முன்னேற வேண்டுமென்ற ஆசையுடையவள். அவளின் குறிக்கோளூக்கு இருக்கும் ஒரே ஆதரவு போடோகிராபர் காதலன். அவனும் எப்போது வேண்டுமானாலும் கழட்டிக் கொள்ள விழைகிறவன். அவனை தன்னுடன் வைத்துக் கொள்வதற்காக செக்ஸை முன்னிலைப்படுத்தி கண்ட்ரோல் செய்து கொண்டிருப்பவள்.

ரிஹானா கல்லூரி மாணவி. புர்கா தைத்து விற்கும் மிடில் க்ளாஸ் முஸ்லிம் குடும்பத்துப் பெண். புர்காவுக்குள் இருக்கும் அவளின் நிஜ விருப்பமோ ஒரு பாடகி ஆவது. ஜீன்ஸும், டாப்ஸுமாய் இக்கால இளைஞிகளின் கனவுகளோடு வளைய வருகிறவள். வீட்டிற்குள் ஒருத்தியாகவும், வெளியே வேறொருத்தியாகவும் தன் கனவுகளை அடைய விழைகிறவள்.
உஷா ஆண்டி. ஐம்பதுகளில் பக்தி புத்தகங்களுக்கிடையே சாப்ட் போர்ன் நாவல்களின் மூலம் தன் செக்ஸுவல் உணர்வுக்கு வடிகால் தேடிக் கொண்டிருப்பவள். அந்த ஜன்னலுக்கு வெளியே என்னை அழைத்துப் போக ராஜகுமாரன் வருவான் என்று கற்பனை செய்து கொண்டிருப்பவள். அவளின் உணர்வுகளின் வடிகாலுக்காக அவள் செய்யும் போன் செக்ஸ்

இப்படி நான்கு கேரக்டர்களிடையே மிக இயல்பாய் சமூகத்தில் பெண்கள் மேல் திணிக்கப்படும் சமூக நற்குண அழுத்தங்களிடமிருந்து அவர்கள் வெளியே வர நடந்தும் போராட்டங்களை சொல்லியிருக்கிறார்கள். ஷெரினாக வரும் கொங்கனா சென்னின் நடிப்பு ஆசம். வெளிநாட்டிலிருந்து வரும் கணவனின் அதீத செக்ஸ். காண்டம் யூஸ் பண்ணினால் அடுத்த குழந்தை பிறப்பையும், உன் உடல் நிலையையும் காத்துக் கொள்ளலாம் என்பதை அடிப்படைவாதியான கணவனிடம் சொல்ல முடியாத ப்ரச்சனை. எப்படியாவது தன் வேலையை பற்றி சொல்லி விட வேண்டுமென்று பரிசாய் கிடைத்த ஓவனில் கேக் செய்து புருஷனிடம் கொடுத்துவிட்டு, கேக் செய்திருக்கிறேன் என்று மீண்டும் மீண்டும் சொல்லி எப்படி என்று கேட்பான் அவனிடம் கேக் செய்வதற்கு ஓவன் வந்த கதையோடு சொல்லி வேலை செய்வதை விளக்கலாம் என்று ஆர்வத்துடன் இருக்க, தனியே இருக்கும் சந்தர்பத்தையும் பயன்படுத்தி கேட்க, அருகில் உட்கார, அவன் அவளை செக்ஸுக்கு அழைத்து அவளின் பேச்சை கேட்க மறுப்பதும், அக்காட்சி முடிந்ததும், தளும்பும் கண்ணீருடன் புருஷனுக்காக வைத்த கேக்க அவர் முழுங்கும் காட்சி .

உஷா ஆண்டியிடம் அவர் வயது ஒத்த ஒருவரை காட்டி, அவருடய மனைவி இறந்துவிட்டதாகவும், இவருக்கு ஏற்ற பெண் யாராவது இருந்தால் சொல்ல்லுங்கள் என்று உற்வுக்காரப் பெண் கூற, அவர் ஆமாம் ஆண்டி என்று அழைக்கும் போது காட்டும் முக பாவம். தன் கனவுக்காதலனை நேரில் பார்த்த சந்தோஷத்தில் இருக்க, உங்க பேர் என்ன என்று கேட்க, ஆண்டி என்று மட்டுமே பெரும்பாலும் அழைக்கப்பட்டு, அவளின் உண்மை பெயரை மறந்து சட்டென ஆண்டி என்று சொல்லுமிடம், அது மத்தவங்களுக்கு உங்கள் நிஜ பேர் என்றதும் யோசித்து வெட்கப்பட்டு உஷா எனும் இடமெல்லாம் ஆசம்.
போலி பெண்ணிய வாத திரைப்படங்களுக்கு மத்தியில் பெண்ணியம் மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல் அதிலிருந்து அவர்கள் வெளிவர போராடும் போராட்டம். மூச்சு முட்ட அமுக்கும் சமூகம். இவைகளிடமிருந்து வெளி வருவோம் என்ற துளி கீற்று நம்பிக்கையுடன் காட்டப்படும் கடைசிகாட்சி நம்பிக்கை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@