Thottal Thodarum

Jan 14, 2018

பைரஸியும் சினிமாவும் -2

பைரஸியும் சினிமாவும் -2
டிஜிட்டல் காலத்துக்கு முன் சினிமா இவ்வளவு  வெளிப்படையாய் இல்லை. எல்லாமே ரகசியமாய்  பாதுகாக்கப்பட்டு இருந்தது. படத்தின் கதையில் ஆரம்பித்து படம் வெளியாகும் வரை சம்பந்தப்பட்டவரைத் தவிர யாருமே அவ்வளவு சுலபமாய் அணுக முடியாது.  சில வருடங்களுக்கு முன் ஒரு ப்ரெஞ்ச் படத்திற்கு தயாரிப்பு நிர்வாகியாய் பணி புரிந்தேன். அப்போது அங்கே ஷூட் செய்யப்படும் பிலிம் ரோலை ப்ராசஸ் செய்வதற்காக, தயாரிப்பாளர் அனுமதியுடன் பிரசாத் லேப்பு கொண்டு வந்து கொடுத்துவிட்டு, இதற்கு முன் தினம் ப்ராசஸ் செய்வதற்காக கொடுக்கப்பட்ட புட்டேஜை போட்டு பார்ப்பதற்காக எடுத்துப் போக வேண்டும். ஒவ்வொரு முறையும் லேப்பில் தயாரிப்பாளாரின் லெட்டர் பேடில் கடிதம் கொடுக்காமல் ஒரு இன்ச் கூட லேபிலிருந்து புட்டேஜ் வெளியே போக முடியாது. ஒரு ப்ரிவியூ ஷோ போட வேண்டுமானால் கூட லேபுக்கு லெட்டர் கொடுத்துத்தான் எடுத்துப் போக வேண்டும். எடுத்துப் போன பிரிண்ட் திரும்ப கொடுக்க வேண்டிய பொறுப்பு தயாரிப்பாளருடயது.

எடிட் சூட், டப்பிங் தியேட்டர், சவுண்ட் லேபாரட்டரி என நாம் எடுத்த படத்தின் எந்த காப்பியையும் லேபின் அனுமதியில்லாமல் தயாரிப்பாளர் கூட கையாள முடியாது. அத்தகைய பவரும், பொறுப்பும் லேபிற்கு இருந்த காலம். ஒரு படம் தயாரிக்கப்படும் போது அந்த படத்தின் நெகட்டிவின் மேல் கடன் வாங்கி படமெடுத்துவிட்டு, படம் ரிலீஸின் போது நெகட்டிவ் பைனான்ஸை திருப்பிக் கொடுத்த காலமெல்லாம் இருந்தது. ஆனால் இன்றைய டிஜிட்டலில் எல்லாமே கந்தர கோளம். எல்லாமே டேட்டாவாகிவிட்ட பிறகு அதை கையாளுகிறவன் என்ன செய்வான் என்று யாருக்குமே தெரியாது.

படப்பிடிப்பு நடக்கிறது. கேமராவில் உள்ள டிஜிட்டல் மெமரி கார்ட்  லிமிட் வரை படமாக்கப்பட்ட காட்சிகளை டேட்டா ட்ரான்ஸ்பர் செய்கிறவர் தன்னுடய ஐ மேக்கின் மூலம் ட்ரான்ஸ்பர் செய்துவிட்டு, மீண்டும் அதே மெமரி கார்ட்டை டேட்டா டெலிட் செய்துவிட்டு தருவார். அதே மெமரி கார்ட் மீண்டும் படப்பிடிப்புக்கு பயன்படும். இப்போது நம் படத்தின் முழு 4 கேயில் படமாக்கப்பட்ட காட்சிகள், டேட்டாவாக ட்ரான்ஸ்பர் செய்து கொடுப்பவரின் கம்ப்யூட்டரிலும், ஹார்ட் டிஸ்கிலும். இந்த டேட்டா மாற்றுகிறவர் கம்பெனியில் பணியாற்றுகிறவராகவோ, அல்லது, கொஞ்சம் பேட்டா குறைவாக வாங்குகிற நபராகவோ இருந்தால், அவரைத் தவிர யாரிடமும் பொறுப்பு இல்லை. நான் இயக்கிய தொட்டால் தொடரும் படப்பிடிப்பில் ஒரு நாள் ஷூட் செய்த  காட்சிகளில் கடைசி காட்சிகளை அவசரத்தில் காப்பி செய்யாமலேயே டெலிட் செய்துவிட்டார். கடைசி வரை நீங்கள் அந்த காட்சிகளை படம் பிடிக்கவேயில்லை என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தவரிடம், படப்பிடிப்பின் போது எடுக்கப்படும் கண்டின்யூட்டி ஸ்டில்ஸிலிருந்து காட்டி நிருபிக்க வேண்டியிருந்தது.

இங்கிருந்து காப்பியாகும் டேட்டா ஏதேனும் ஒரு காரணத்தினால் கரப்ட் ஆகாமல் இருக்க, மல்ட்டிலெவல் டேட்டா ஸ்டோர் செய்ய தகுந்த ஹார்ட் டிஸ்குகள் பயன்படுத்தப்படுகிறது. ஒரு இடத்தில் போனால் இன்னொரு இடத்திலிருந்து படத்தின் கண்டெண்டுகளை எடுத்துக் கொள்ளலாம்.. இப்படி ஸ்டோர் செய்யப்பட்ட கண்டெண்டுகள் எடிட்டரின் ஸ்டூடியோவுக்குள் போகிறது. அங்கே எல்லாமே ஹார்ட் டிஸ்குகளாய் மட்டுமே பார்க்கப்படுகிறது. அங்கேயும் நம்முடய கண்டெண்டுகளை எடிட்டரின் அஸிஸ்டெண்ட் கூட கையாளுவார்.  தேவையென்றால் எட்டிட்டரின் அனுமதியோடு, ஹார்ட் டிஸ்குகள் வெளியே கொண்டு செல்ல படும். பல படங்களின் லீக் செய்யப்பட்ட காட்சிகள் இம்மாதிரியான இடங்களிலிருந்து கூடலீக் செய்யப்பட்டிருக்கிறது.

எடிட்டரிமிருந்து, டப்பிங்கிற்காக, அங்கிருந்து சவுண்ட் எஃபெக்ட்சுக்காக, சிஜி காட்சிகளுக்காக, பின்னணி இசைக்காக, ஃபர்ஸ்ட் கட் என பல பேர்களை பொரித்த நம் படத்தின் பிரதிகள் எந்தவிதமான பாஸ்வேர்ட் ப்ரடக்‌ஷன்  இல்லாமல் ஹார்ட் டிஸ்குகளில் காப்பியெடுக்கப்பட்டு, அந்தந்த துறை சார்ந்தவர்களிடம் புழங்குகிறது. யார் யாருக்கு என்னன்ன விதமான காப்பி போகிறது என்பதை எடிட்டர் கொடுக்கும் அவுட்புட்டில் எம்பாஸ் செய்யப்பட்டதை வைத்து மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.


இப்படி எங்கேயும் எல்லா இடத்திலேயும் எந்த விதமான பாதுகாப்பும் இல்லாமல் யார் யார் மூலமாகவோ, நம்முடய கண்டெண்டுகள் கொண்டு செல்லப்படுகிறது. அவசரத்துக்கு கட்டங்கடைசி உதவியாளர்களைத்தான் இதற்கு பயன்படுத்துவார்கள். ‘டேய் ஹார்ட் டிஸ்க் ஜாக்குரத” என்பதை தவிர பெரிய மிரட்டல்களோ, அதனுள் இருக்கும் கண்டெண்டுகளுக்கு பொறுப்பு நீ தான் என்பதோ சொல்லாமல் அனுப்பி வைக்கப்பட்டாலும், நடுவே ஒர் விபத்தோ, அல்லது வேறு ஏதாவது அசம்பாவிதமோ நடந்துவிட்டால் மொத்த முயற்சியும் வீணே. நாலாயிரம் ரூபாய் ஹார்ட் டிஸ்கில் பல கோடி ரூபாய் படம் ஒரு நொடியில் காணாமலோ, அல்லது, உள்ளே உள்ள டேட்டாக்கள் காணாமல் போகவோ வாய்ப்பு அதிகம்.  எங்கேயும் எந்த இடத்திலும் பாஸ்வேர்ட் ப்ரொடக்‌ஷன் என்பது கூட கிடையாது. முன்பெல்லாம் ஸ்டூடியோ அமைப்பு என்பதால் ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போவதற்கும் வருவதற்கும் சலான் போட்டு கேட் பாஸ் இல்லாமல் நடக்காது. இன்றைக்கு டெக்னாலஜி சுருங்கிப் போனதால், ஒரு சின்ன அறை எடிட் சூட்டாகவும், டப்பிங் ரூமாகவும், பின்னணி இசைக் கோர்ப்பு இடமாகவும் மாறிப் போய்விட்டதால் அந்த சாத்தியமே இல்லை. டி.ஐ, அவுட் கொடுக்குமிடத்தில் மட்டுமே கேட் பாஸ் போடும் முறை இருக்கிறது. அதுவும் சின்ன பட்ஜெட் படங்களுக்காக டி.ஐ செய்யும் இடமெல்லாம் ஒற்றை ரூம் எடிட் சூட் போல சுருங்கிவிட்டதால் அங்கேயும் பாதுகாப்பின்னை அதிகமாகிவிட்டது. இத்தனை சாத்தியங்கள் இருந்தும் படங்களின் பைரஸி வராமல் இருக்க காரணம் மேற்ச்சொன்ன அத்துனை டெக்னீஷியன்களின் அடிப்படை நேர்மை. பின்பு எங்கிருந்து பைரஸி வருகிறது? பார்ப்போம்.

Post a Comment

No comments: