புத்தக கண்காட்சி நாள்-3
ஞாயிற்றுக்கிழமை கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் வேறு ரிலீஸாகியிருந்ததால் ஒரு பக்கம் திரைப்பட ஆசையும், இன்னொரு பக்கம் இலக்கியவாதி (???) ஆசையுமாய் அலைபாய்ந்தாலும், திரைப்பட ஆசையே வெற்றி பெற்றது. காலைக் காட்சி படம் பார்த்துவிட்டு, கே.ஆர்.பிக்கு போன் செய்தால் மனிதர் மதியத்திலிருந்தே கண்காட்சியில் இருப்பதாய் சொன்னார். இன்று பைக் பாஸ் வாங்கி வைத்திருந்ததால் நேரடியாய் கண்காட்சிக்கு அருகிலேயே வண்டியை பார்க் செய்துவிட்டு சென்றேன். போகிற வழியில் நாஞ்சில் நாடனுடன், பரமேஸ்வரி, அகநாழிகை வாசு, போகன் ஆகியோர் பேசிக் கொண்டிருக்க, ஒரு வணக்கத்தைப் போட்டேன். வாசு என்னை பரமேஸ்வரியிடம் அறிமுகப்படுத்த, என்னைத் தெரியும் என்றார். புத்தகங்களின் விலையைப் பற்றி நாஞ்சில் நாடனும், வாசுவும் பேசிக் கொண்டிருந்தார்கள். வழக்கமாய் கூடும் டிஸ்கவரியில் போய் நின்றேன். நம் மக்கள் நிறைய பேர் இருந்தார்கள். மணிஜி மிகவும் டயர்டாக இருந்தார். போய் கொஞ்ச நேரத்தில் எல்லாம் டீ சாப்பிட கிளம்பினோம். கேண்டீன் வரை சென்ற போது சினிமா எக்ஸ்பிரஸில் இருந்த கிராபியன் ப்ளாக் வணக்கம் சொன்னார். அவருடன் சன் டீவி வெற்றிவேந்தன் இருந்தார். எல்லோரும் அ...