Thottal Thodarum

Jun 29, 2023

சாப்பாட்டுக்கடை - உபவிஹார் - அண்ணாநகர்

 பென்ன தோசை சாப்பிடுவதற்காக கோவா செல்லும் வழியில் ஓர் ஊரில் இரவு தங்கி, விடியற்காலையில் அந்த ஊர் பென்ன தோசைக்கு பேமஸ் என்பதால் முதல் தோசையை சாப்பிட்டு கிளம்பிவர்கள் நாங்கள். அப்படியான பென்னை தோசை சென்னையில் கிடைக்கிறது என்று கேள்விப்பட்ட போது கண்களில் அந்த செந்நிறமாய் மடிக்கப்பட்ட தோசை கண் முன் நிழலாடியது. கர்நாடக பென்னை தோசைக்கு உள்ளே வைத்துத் தரும் மசால் இன்னொரு சுவாரஸ்யம் என்றாலும் தோசையின் மேல் வெண்ணையை வைத்து அது உருகிய பின் பிய்த்து சாப்பிடும் சுவை இருக்கிறதே அட அட அட..  அப்படியான ஒரு தோசை சென்னையில் கிடைக்கும் இடம் எது என்று தேடியதில் பெங்களூர் டிபன் செண்டர் என்று ஒன்றைப் பார்த்தோம் படு திராபையான உணவு. கூடவே தண்ணி பாட்டில் வாங்க சொல்லி திட்டு வாங்கிக் கொண்டார்கள். தொடர் தேடல் புதிதாய் ஒரு கடை அண்ணாநகரில் திறந்திருக்கிறார்கள் என்றதும் வண்டியை விட்டோம்

அண்ணாநகர் டவர் பார்க் மெட்ரோ பார்க்கிங்கில் தான் கடை ஆரம்பித்திருக்கிறார்கள். சின்னக் கடை தான். ஏகப்பட்ட கூட்டம். டிபிக்கல் கர்நாடக அயிட்டங்களை வகைப்படுத்தியிருந்தார்கள். தட்டே இட்லி, கார பாத், பிஸிபேளா பாத், பூரி, பென்னே தோசை, மசாலா பென்னே தோசை என இருபதுக்கும் மேற்பட்ட அயிட்டங்கள். பில் போட பெரிய க்யூ நின்றது. அதே நேரத்தில் பரபரவென அயிட்டங்கள் டெலிவரியும் ஆகிக் கொண்டிருக்க, நாங்களும் க்யூவில் நின்றோம். ஒரு பென்னை தோசை, கார பாத் ஆர்டர் செய்தோம். தோசைக்கு டோக்கை கொடுத்துவிட்டு, காரபாத்தை உடனே கொடுத்தார்கள். டிபிக்கல் தித்திப்பு சாம்பார். கார சட்னியும் தேங்காய் சட்னியும் கொடுத்தார்கள். கார பாத் ஆஸ் யூஸுவல் பெங்களூரில் சாப்பிட்டது போல இருந்தது. சிறிது நேரம் கழித்து டோக்கன் நம்பர் சொல்லி கூப்பிட்டு பென்ன தோசை கொடுத்தார்கள். பார்ப்பதற்கே கவர்ச்சிக் கன்னி போல இருந்தது தோசை. நல்ல ரோஸ்டாகி, பென்னை மேலே பளபளவென தெரிய, க்ரிஸ்பான பென்னெ தோசை. அபாரமான சுவையோடு இருந்தது.

மற்றொரு நாள் அதே பென்னை தோசையோடு, பிஸிபேளாபாத் ஆர்டர் செய்திருந்தோம். பிஸிபேளாபாத் என்றால் நம்மூரில் சாம்பார் சாதத்தை தருவார்கள். அதையே சாம்பார் சாதம் என்றும், பிஸிபேளா பாத் என்று அழைப்பார்கள். இரண்டிற்கு ஆறு வித்யாசமில்லை. ஒரு வித்யாசம் கூட இருக்காது. கொஞ்சமே கொஞ்சம் சமைக்க தெரிந்தவன் பிஸிபேளாவில் கொஞ்சம் தனியா அள்ளிப் போட்டிருப்பான் அவ்வளவுதான். ஆனால் இவர்களது பிஸி பேளா கெட்டியாகவும் இல்லாமல், தண்ணீராகவும் இல்லாமல் அட்டகாசமான மிக்ஸரில் இருக்க, சுவை ஆஸ்யூஷ்வல் தித்திப்பு சுவையோடு, கர்நாடக பிஸி.  இன்னமும் ரவா தோசை சாப்பிடவில்லை. செளசெள பாத் சாப்பிடவில்லை. விரைவில் அதையும் ஒரு கை பார்த்துவிடுவோம். என்ன க்யூவில் நிற்க தயாராக வேண்டும். அதே போல சாப்பிட இரண்டே இரண்டு டேபிள்கள் தான் அதுவும் நின்ரு கொண்டு சாப்பிடும் முறையில் இன்னும் நான்கைந்து டேபிள்கள் போடலாம். நல்ல தரமான சுவையான டிவைனான கர்நாடக திண்டிக்கு "உபவிஹார் அண்ணாநகர்

Jun 27, 2023

சாப்பாட்டுக்கடை - தோசை மாமா கடை -வீழ்ந்த கதை

 தோசை மாமா கடையைப் பற்றி "வேற லெவல்" கடை என்று வீடியோ போடாத ஃபுட் ரிவ்வியூவர்களே கிடையாது என்று  சொல்லலாம். அதோடு அங்கே சாப்பிடச் சென்றால் பெரிய க்யூவில் நிற்க வேண்டும். க்யூவைத் தாண்டி அவர் அப்படி சமைப்பார். இப்படி சமைப்பார். செம்ம சுவை என்றெல்லாம் வீடியோவில் சொல்லாத ஆள் இல்லை. அவரின் கடையில் க்யூவே இல்லாத காலத்திலேயே நான் சாப்பிட்டிருக்கிறேன். அத்தனை கூட்டமெல்லாம் இருக்காது.

கூட்டத்திற்கு காரணம் அவரின் தோசை தயாரிப்பு முறைதான். அவரே தோசை மாவு கரைப்பார். அவரே தோசை ஊற்றுவார். அவரே பொடி எல்லாம் போடுவார். அவரே எண்ணைய் ஊற்றுவார். அவரே பார்சலுக்கு பணம் வாங்குவார். அவரே தோசை சுட்டு அதை ப்ளேட்டில் வைத்து சாம்பார் சட்டினி எல்லாம் ஊற்றி கொடுப்பார். அவரே சாப்பிட்ட தட்டுக்களை கழுவி வைப்பார். அது மட்டுமில்லாமல் பத்துக்கும் மேற்பட்ட வகை தோசைகள் வைத்திருப்பார். அதனால் இன்னும் அதற்கான பிரிபரேஷன்கள் ஒவ்வொரு தோசைக்கும் மாறுபடும் பட்சத்தில் நேரம் எடுக்கத்தான் செய்யும். இத்தனைக்கும் க்யூவில் வரவில்லையென்றால் கொடுக்க மாட்டார். கொஞ்சம் முகம் காட்டுவார். இத்தனையும் அவரே செய்வதால் நேரம் ஆகத்தான் செய்யும். கூடவே யூட்யூபர்களின் வருகை அவருடய கடைக்கு ஆட்களை அதிகம் பேர் கொண்டு வர, க்யூ பெரிதானது. காத்திருப்பு நேரம் அதிகமானது. அவருடய உழைப்பும் அதிகமானது. வருமானம் அதிகம் ஆகியும் அவர் ஆட்களை போட்டுக் கொள்ளாமலேயே கடை நடத்தினார். இன்னும் கூட்டம் அதிகமானது. ஒன்பதரை பத்துக்கு பிறகு இத்தனை பேருக்கு மேல் தோசை கிடையாது என்று சொல்லி திரும்பி அனுப்பும் அளவிற்கு பிஸினெஸ் வளர்ச்சி ஆனது. சில யூட்யூப்களில் பேட்டி எல்லாம் கொடுத்தார் மாமா. ravichandran என்கிற அவரின் பெயரே தோசை மாமா ஆனது. இந்த வளர்ச்சி தான் அவரை  கீழே விழச் செய்ததும் என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் அவரின் தோசையின் டேஸ்ட் என்று சொல்லப் போனால் அத்தனை சிலாக்கியமான தோசையெல்லாம் இல்லை. வேறே லெவல்.. வேற லெவல் என்று சொல்லிய தோசையை அரை மணி நேரம் காத்திருந்து சாப்பிட்டதும் அதை நல்லா இல்லை என்று சொன்னால் நம்மை ஃபுட்டி லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என்கிற ஆதங்கத்தீல் அவர்கள் பாராட்டித் தொலைப்பார்கள்.  ஆனால் மாமாவின் தோசை சாதாரண கையேந்தி பவன் தோசைக்கு எந்தவிதமான குறைவுமில்லாத தோசை தான். அதிலும் பொடி எல்லாம் போட்டு சல்லீசான விலையில் வீட்டு தோசைக்கு நிகராய் இருக்கும்.

இவரிடம் போய் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த வண்டி கடையிலேயே இருப்பீங்க? என்று யாரோ சொல்லி விட்டிருப்பார்கள் போல. தள்ளுவண்டிக்கடையை ஏறக்கட்டிவிட்டு, சாலிகிராமத்தில் தோசை மாமா கொஞ்சம் பெரிய உணவகமாய் திறந்தார். நல்ல விஷயம் தானே.. எத்தனை நாள் தள்ளுவண்டிக் கடையாகவே இருப்பது. நல்லதுதான் ஆனால் சில கடைகள் சின்னதாய் இருக்கும் பட்சத்தில் மட்டுமே வேலைக்காகும். பெரிதாய் ஆக, ஆக அதன் மேல் உள்ள ஈர்ப்பு குறைந்து நத்திங் ஸ்பெஷல் இல்லை என்பது தெரிந்துவிடும். அப்படியானது இவர்களது தோசை மாமா தோசை கடை இன் சாலிகிராமம். சாலிக்கிராமத்தில் ஆரம்பித்த சில நாட்களிலேயே மேற்கு மாம்பலத்தில் இன்னொரு சின்ன கிசோக்ஸ் கடை ஒன்று திறந்தார்கள். என்னாடா அதுக்குள்ள ரெண்டு கடையா? என்று ஆச்சர்யப்பட்டேன். கடை ஆரம்பித்த நாட்களில் ப்ராண்ட் அம்பாசிட்டர் போல கடையில் நிற்க வைத்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாய் வழக்கம் போல நார்த் ஈஸ்ட் ஆட்கள் தோசை போட ஆரம்பித்தார்கள். 30ரூபா தோசை 60 ஆனது. பின்பு சாலிகிராமத்தில் அவரை காண்பது அரிதானது. சரி ஒரு வேளை மேற்கு மாம்பலம் கடையில் இருப்பாரோ என்று கேட்ட போது அவர் இப்போது வருவதில்லை ஆனால் அவரது ரெஸிப்பி தான் ஃபாலோ செய்கிறோம் என்றார்கள். சிரித்தேன். அவரது ரெசிப்பியே சிங்கிள் மேன் ஷோதான். அதுதான் ஸ்பெஷல். என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு கிளம்பினேன். தோசை மாமாவின் தோசையை விட வெகு சுமாராய் இருந்தது. யாரோ இவரை ப்ராண்டாய் வைத்து காசு பார்க்க ஆசைப்பட்டு இவரை போட்டு பார்த்துவிட்டார்கள் என்றே தோன்றியது. வெகு சீக்கிரத்திலேயே சாலிக்கிராமம் மற்றும் மேற்கு மாம்பலம் கடைகள் மூடப்பட்டது. 

மீண்டும் தோசை மாமா அதே தள்ளுவண்டிக்கடையில் ஆரம்பித்துவிட்டார் அவரது அயராத உழைப்பை. முன்பு அளவிற்கு கூட்டமெல்லாம் இல்லை. சகாய விலை. அயராத உழைப்பு. நத்திங் ஸ்பெஷல் இல்லையென்றாலும் அவரது உழைப்புத்தான் ஸ்பெஷல் என்பதால் மக்களின் அன்பு அவரை தோசை மாமா ஆக்கியது. தோசை உள்ளவரை தோசை மாமாவின் பெயர் நிலைக்கும். 

Jun 10, 2023

சாப்பாட்டுக்கடை - முத்து வடை கடை

விருகம்பாக்கத்தில் அலுவலகம் ஆரம்பித்த அன்று அக்கம் பக்கம் என்னென்ன கடைகள் இருக்கிறது என்று ஒரு ரவுண்ட் அடித்தேன். நல்லதாய் ஒரு டீக்கடை இல்லாத ஏரியா எது என்றால் அது விருகம்பாகக்ம் ஏரியாதான். கொஞ்சம் சின்மயா நகர் பக்கம் போனால் கருப்பட்டிக் காப்பி கார்பரேட் காப்பி ஹவுஸ் லெவலுக்கு கடை போட்டிருக்கிறார்கள்  அதைப் பற்றி பிறகு எழுதுகிறேன். இந்த முத்து வடைக்கடையை பார்த்ததும் கடையில் போய் கேட்ட போது மாலை தான் திறப்பார்கள் என்றார்கள்.  ஆபீஸ் பசங்களிடம் நான்கு மணிக்கு போய் ஒரு நடை பார்த்துவிட்டு வரச் சொல்லியிருந்த போது இப்போ தான் அடுப்பு எல்லாம் செட் செய்றாங்க.  கூட்டமா வேற இருக்கு என்றார். என்னாது வடை கடைக்கு கூட்டமா? என்று நானே கிளம்பிப் போனேன். நிஜமாகவே நல்ல கூட்டம் அவர் வடை வறுக்கும் சட்டியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

மசால் வடை போட்டிருந்தார். அடுப்பிலிருந்து எடுத்த மாத்திரத்தில் எல்லா வடையும் பார்சல் போய்விட, கட்டங்கடைசியாய் ஒரே ஒரு வடை இருக்க அதை நான் ஆவலாய் எடுத்து ஒரு கடி கடித்தேன். மசால் வடையில் பெரும்பாலும் வெங்காயத்தை கொஞ்சம் தீய வைக்கும் அளவிற்கு வடை முறுகலாய் வர வேண்டும் என்பதற்காக வேக வைப்பார்கள். இவரின் வடையில் அப்படி வெங்காயம் தீயாமல் பொன்நிறத்தில் வரும் போது எடுத்து விடுகிறார். சமீபத்தில் அத்தனை க்ரிஸ்பியாய் ஒரு வடையை  சாப்பிட்ட நியாபகமே இல்லை. சரியான பதத்தில் அரைக்கப்பட்ட மாவு. கொஞ்சம் ஆறியவுடன். அதை சாதத்தோடு பிய்த்து போட்டு சாப்பிட்டால் சாப்பாட்டின் நடுவே கருக்முறுக்கென பருப்பு வாயில் அரைபடும். அட்டகாசமான சுவையை தரும். 

மாசல் வடையே இப்படி என்றால் கூடவே இனிப்பு சூய்யம். அளவான தித்திப்போடு வெல்லம் போட்ட சூய்யம். மெதுவடை. எண்ணைய் வடித்து  பின் அரைச்சூட்டில் சாப்பிட்டுப் பாருங்கள் வாயில் கரையும். பட்டாணி சுண்டல் மசால் வடை காம்பினேஷன் இன்னும் அட்டகாசமாய் இருக்கும். 

மதியத்தில் சாம்பார், லெமன், தக்காளி, தயிர், வெஜிட்டபிள் சாதங்கள் வெறும் 30 ரூபாய்க்கு கூடவே தொட்டுக் கொள்ள மசால் வடை.. அத்தனை தரமாய் இருக்கும். என்ன நெய் போடுறேன். வெண்ணெய் போடுறேன்னு எல்லாம் இருக்காது. நல்ல வீட்டு சாப்பாடு போல இருக்கும். என் அலுவலகத்திற்கு வரும் பல செலிப்ரெட்டிகளுக்கு நான் மணி அண்ணன் கடையிலிருந்து சாம்பார் சாதம் தயிர் சாதம் வாங்கிக் கொடுத்திருக்கேன். சாப்பிட்ட மாத்திரத்தில் அவர்கள் கேட்ட முதல் கேள்வி எங்க இருக்கு இந்த ஓட்டல் என்பதுதான். கூடவே வடை வேறு கேட்கவா வேண்டும். 

இந்த வடைக்கடை இருந்த இடத்தில் கொரோனாவுக்கு முன் அண்ணன் முத்து பஞ்சர் கடை வைத்திருந்திருக்கிறார்.  கொரோனாவுக்கு பின் தான் இந்த வடை கடை. மெல்ல மாலைக்கடை மதியக்கடையாகியிருக்கிறது. மிகவும் அன்பான, வெள்ளந்தியான மனிதர் அண்ணன் முத்து. அவரு மனசு போலவே அவரு கொடுக்குற சாப்பாடும். ஒரு காலத்தில் மதுரவாயில் பகுதியில் அற்புதமான மீன் குழம்பு சாப்பாடு போட்டு கடை சூப்பராய் பிக்கப் ஆகும் நேரத்தில் ரோடு அகலப்படுத்தியதில் அவரது கடைபோய் ஆரம்பித்த இடத்திற்கே வந்தவர் இப்போது மீண்டும் அவரது கை மணத்தில்  

ஆவிச்சி ஸ்கூலுக்கு பக்கத்தில் கோயம்பேடு போக பஸ் எல்லாம் நிற்கும் அந்த இடத்தில் ஒரு சிறு கடை தான் இந்த மணி வடை கடை. டோண்ட் மிஸ்.  அத வடை நிஜமாவே டிவைன் தான்.

கேபிள் சங்கர்.

முத்து வடை கடை

காமராஜர் சாலை

விருகம்பாக்கம்.