Thottal Thodarum

Jun 10, 2023

சாப்பாட்டுக்கடை - முத்து வடை கடை

விருகம்பாக்கத்தில் அலுவலகம் ஆரம்பித்த அன்று அக்கம் பக்கம் என்னென்ன கடைகள் இருக்கிறது என்று ஒரு ரவுண்ட் அடித்தேன். நல்லதாய் ஒரு டீக்கடை இல்லாத ஏரியா எது என்றால் அது விருகம்பாகக்ம் ஏரியாதான். கொஞ்சம் சின்மயா நகர் பக்கம் போனால் கருப்பட்டிக் காப்பி கார்பரேட் காப்பி ஹவுஸ் லெவலுக்கு கடை போட்டிருக்கிறார்கள்  அதைப் பற்றி பிறகு எழுதுகிறேன். இந்த முத்து வடைக்கடையை பார்த்ததும் கடையில் போய் கேட்ட போது மாலை தான் திறப்பார்கள் என்றார்கள்.  ஆபீஸ் பசங்களிடம் நான்கு மணிக்கு போய் ஒரு நடை பார்த்துவிட்டு வரச் சொல்லியிருந்த போது இப்போ தான் அடுப்பு எல்லாம் செட் செய்றாங்க.  கூட்டமா வேற இருக்கு என்றார். என்னாது வடை கடைக்கு கூட்டமா? என்று நானே கிளம்பிப் போனேன். நிஜமாகவே நல்ல கூட்டம் அவர் வடை வறுக்கும் சட்டியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

மசால் வடை போட்டிருந்தார். அடுப்பிலிருந்து எடுத்த மாத்திரத்தில் எல்லா வடையும் பார்சல் போய்விட, கட்டங்கடைசியாய் ஒரே ஒரு வடை இருக்க அதை நான் ஆவலாய் எடுத்து ஒரு கடி கடித்தேன். மசால் வடையில் பெரும்பாலும் வெங்காயத்தை கொஞ்சம் தீய வைக்கும் அளவிற்கு வடை முறுகலாய் வர வேண்டும் என்பதற்காக வேக வைப்பார்கள். இவரின் வடையில் அப்படி வெங்காயம் தீயாமல் பொன்நிறத்தில் வரும் போது எடுத்து விடுகிறார். சமீபத்தில் அத்தனை க்ரிஸ்பியாய் ஒரு வடையை  சாப்பிட்ட நியாபகமே இல்லை. சரியான பதத்தில் அரைக்கப்பட்ட மாவு. கொஞ்சம் ஆறியவுடன். அதை சாதத்தோடு பிய்த்து போட்டு சாப்பிட்டால் சாப்பாட்டின் நடுவே கருக்முறுக்கென பருப்பு வாயில் அரைபடும். அட்டகாசமான சுவையை தரும். 

மாசல் வடையே இப்படி என்றால் கூடவே இனிப்பு சூய்யம். அளவான தித்திப்போடு வெல்லம் போட்ட சூய்யம். மெதுவடை. எண்ணைய் வடித்து  பின் அரைச்சூட்டில் சாப்பிட்டுப் பாருங்கள் வாயில் கரையும். பட்டாணி சுண்டல் மசால் வடை காம்பினேஷன் இன்னும் அட்டகாசமாய் இருக்கும். 

மதியத்தில் சாம்பார், லெமன், தக்காளி, தயிர், வெஜிட்டபிள் சாதங்கள் வெறும் 30 ரூபாய்க்கு கூடவே தொட்டுக் கொள்ள மசால் வடை.. அத்தனை தரமாய் இருக்கும். என்ன நெய் போடுறேன். வெண்ணெய் போடுறேன்னு எல்லாம் இருக்காது. நல்ல வீட்டு சாப்பாடு போல இருக்கும். என் அலுவலகத்திற்கு வரும் பல செலிப்ரெட்டிகளுக்கு நான் மணி அண்ணன் கடையிலிருந்து சாம்பார் சாதம் தயிர் சாதம் வாங்கிக் கொடுத்திருக்கேன். சாப்பிட்ட மாத்திரத்தில் அவர்கள் கேட்ட முதல் கேள்வி எங்க இருக்கு இந்த ஓட்டல் என்பதுதான். கூடவே வடை வேறு கேட்கவா வேண்டும். 

இந்த வடைக்கடை இருந்த இடத்தில் கொரோனாவுக்கு முன் அண்ணன் முத்து பஞ்சர் கடை வைத்திருந்திருக்கிறார்.  கொரோனாவுக்கு பின் தான் இந்த வடை கடை. மெல்ல மாலைக்கடை மதியக்கடையாகியிருக்கிறது. மிகவும் அன்பான, வெள்ளந்தியான மனிதர் அண்ணன் முத்து. அவரு மனசு போலவே அவரு கொடுக்குற சாப்பாடும். ஒரு காலத்தில் மதுரவாயில் பகுதியில் அற்புதமான மீன் குழம்பு சாப்பாடு போட்டு கடை சூப்பராய் பிக்கப் ஆகும் நேரத்தில் ரோடு அகலப்படுத்தியதில் அவரது கடைபோய் ஆரம்பித்த இடத்திற்கே வந்தவர் இப்போது மீண்டும் அவரது கை மணத்தில்  

ஆவிச்சி ஸ்கூலுக்கு பக்கத்தில் கோயம்பேடு போக பஸ் எல்லாம் நிற்கும் அந்த இடத்தில் ஒரு சிறு கடை தான் இந்த மணி வடை கடை. டோண்ட் மிஸ்.  அத வடை நிஜமாவே டிவைன் தான்.

கேபிள் சங்கர்.

முத்து வடை கடை

காமராஜர் சாலை

விருகம்பாக்கம்.


Post a Comment

No comments: