Thottal Thodarum

Sep 28, 2016

கொத்து பரோட்டா - 2.0- 1

ப்ளெக்ஸு நல்லது
பாண்டிச்சேரி பக்கம் நுழையும் போதெல்லாம் முக்குக்கு முக்கு கண்ணில் படும் ப்ளெக்ஸுகளைப் பார்த்தால் பற்றியெறியும். பத்தாவது பெயிலானல் கூட காது பக்கம் செல்லை வைத்துக் கொண்டு, கேமராவை பார்த்தபடி  “பத்தாவதை பத்தாமல் ஆக்கிய குலக் கொழுந்தே” என்று ரங்கசாமி, அல்லது நாராயணசாமியுடனான பேனர் வைத்திருப்பார்கள். மதுரைப் பக்கம் இம்மாதிரியெல்லாம் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு என்று தனி கண்டெண்ட்.  இப்படியான ப்ளெக்ஸுக்கு எதிர்பாளனான என்னையே “ப்ளெக்ஷ் நல்லதுன்னு” சொல்ல வச்ச சம்பவம் ஒன்று சமீபத்தில் நடந்தேறியிருக்கிறது. 

எச்.ஐ.வியாய் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலையை சார்ந்த ஒருவர் வீட்டுக்கு தெரியாமல் மருத்துவம் எடுத்துக் கொண்டிருக்கிறார். தான் யாரையும் திருமணம் செய்ய மாட்டேனென உறுதி பத்திரமும் எழுதிக் கொடுத்திருக்கிறார். யார் வந்து கேட்கப் போகிறார்கள் என்கிற தைரியத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்து பெண்ணும் பார்த்து, நாளும் குறித்தாயிற்று. நண்பர்களின் திருமண வாழ்த்து ப்ளெக்ஸில் மணமகள் -மகன் போட்டோ போட்டிருக்க, அதைப் பார்த்த மருத்துவமனை ஊழியை ‘அடடா இவன் அவனில்லை இவனுக்கு கல்யாணமா? என்று அதிர்ந்து போய்,  டாக்டரிடம் சொல்லியிருக்கிறார். டாக்டரும் பேஷண்டுக்கு போன் போட்டால் பையன் உசாராகி, சுவிட்ச் ஆப் செய்துவிட்டானாம். பின்னார் போராடி போலீஸ் வரைக்கும் போய் திருமணத்தை நிறுத்தியிருக்கிறார்கள். தன் உடல் நிலைக்கு ட்ரீட்மெண்ட் எடுக்க தெரிந்தவனுக்கு பெற்றோருக்காகவும், ஊருக்காகவும், தன் திருமணம் மூலம் ஒரு தலைமுறையையே அழிக்க போகிறோம் என்று தெரிந்தே இம்மாதிரி செயல்களில் இறங்குவது எவ்வளவு பெரிய கேப்மாரித்தனம். நல்ல வேளை மயிரிழையில் அந்த கொடுமை தவிர்க்கப்பட்டிருக்கிறது.  அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நடந்தேறியிருக்கிறது. சமயங்களில் ப்ளெக்ஸ் நல்லதுதான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ரெண்டு வாரமாய் ஒரு எழுத்தாளரும், இயக்குனர் மாறி மாறி நெஞ்சை நக்கிக் கொண்டிருக்கிறார்கள். இயக்குனர் எழுத்தாளர் தன்னுடய குருவென்றும், ஆனால் அவரது எழுத்தை படித்ததேயில்லை என்று சொல்லி, அவரின் விமர்சனங்கள் கொஞ்சம் பார்த்து எழுத வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். உடனே அடுத்த வாரத்தில் எழுத்தாளர் தன்னை குருவென்று ஏற்றுக் கொண்டால் தன் புத்தகங்களை படித்துவிட்டு சொன்னால் தன்யனாவேனென்றும், விமர்சனம் என்பது தனிப்பட்டதல்ல, படைப்பு பற்றியதாகும் பின் எப்படி அதை நாசுக்காக விமர்சிக்க முடியுமென்று  கேள்விக் கேட்டு நெக்குருகியிருக்கிறார். ரெண்டு மூன்று வருடங்களுக்கு முன் இவர்கள் இருவரும் ஆத்ம நண்பர்களாய் வளைய வந்து கொண்டிருந்தவர்கள் தான். இவர்களின் நெருக்கம் இயக்குனரின் படத்தில் ஒரு பாடலுக்கு நடிக்க வைத்து, கட்டங்கடைசியில் எழுத்தாளரின் விரல் மட்டுமே படத்தில் தெரிய வந்த காரணத்தால்,  நொந்து போயிருந்த நிலையில், எழுத்தாளரின் புத்தக வெளியீட்டில் இயக்குனர் இதெல்லாம் எழுத்தா என்று படித்த புத்தகத்தை கண்ட மேனிக்கு விமர்சிக்க, எழுத்தாளர் நாவல் எழுதும் அளவிற்கு தொடர் திட்டுக் கட்டுரை எழுதியது உலகறிந்த விஷயம்.  அப்ப படிக்காமயா அவ்வளவு திட்டினாரு இயக்குனர்?. இவரும் பதிலுக்கு அப்படி எழுதினாரு.. இப்ப ஆளாளுக்கு நெஞ்ச நக்கிக்கிறாங்க.. பப்ளிக் மெமரி இஸ் ஷார்டுன்னு சொல்வாங்க.. ஒரு வேளை நான் பப்ளிக் இலலையோ? அவ்வ்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பேய்ப் படங்களுக்கு சாவே கிடையாது அவ்வப்போது மவுசு குறைந்து சட்டென புதுசு புதுசாய் வர ஆரம்பித்துவிடும். உலகம் பூராவும் மினிமம் கியாரண்டி படங்கள் என்றால் அது பேய்ப் படங்கள்தான். கான்சூரிங் ஹிட்டுக்கு பிறகு நம்மூர் ராமநாராயணன் ரேஞ்சுக்கு ஆகியவர் அதன் இயக்குனர் ஜேம்ஸ் வான். ஒரு பக்கம் பேய்ப்பட டைரக்ஷன் என்றால் இன்னொரு பக்கம் பேய்பட தயாரிப்பு வேறு. அதில் சமீபத்திய லிஸ்ட் Lights Out. ட்ரைலர் வெளியான போல மிரட்டலாய் இருந்தது. வழக்கமாய் இருட்டைக் காட்டி பயமுறுத்திக் கொண்டிருந்தவர்கள் இதில் வெளிச்சத்துக்கும், இருட்டுக்குமிடையே ஆன நிழலில் பேயை வைத்து மிரட்டியிருந்தார்கள். பேய் கதைகளுக்கே உரிய எல்லாவிதமான டெம்ப்ளேட்டுகளோடு படம் இருந்தாலும் அழுத்தமான கதையை சொல்லியிருந்தார்கள். பேயின் ஆக்கிரமிப்பினால் மன அழுத்தம் ஏற்பட்ட தாய், அவளிடமிருந்து என்னை காப்பாற்று என்று சுவற்றில் கிறுக்கி வைக்கும் பேய் என மைண்ட் கேம் விளையாடியிருக்கிறார்கள். க்ளைமேக்ஸில் முத்தாய்ப்பாய்.. நான் இருந்தால் தான் நீ என்று பேயை அழிக்க தன்னை அழித்துக் கொள்ளும் தாய் கேரக்டர் என ஒரு மாதிரியான பிலசாபிக்கல் ஹாரர் சப்ஜெக்டை தொட்டிருந்தார்கள். மற்றபடி ஜோடியாய் வந்தவர்கள் ஆங்காங்கே பயத்தில் தான் கட்டிக் கொண்டேன் என்று  காரணம் சொல்ல நிறைய காட்சிகள் இருந்தது. 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சாப்பாட்டுக்கடை
ரோட்டோரக்கடை என்றால் பலருக்கு அதன் சுத்தம், சுகாதாரம் என பல விஷயங்கள் கேள்விகளாய் முன் நிற்கும். ஆனால் அதே நேரத்தில் சுத்தமாகவும், சுவையாகவும் உள்ள பல ரோட்டோர கடைகளும் இருக்கத்தான் செய்கிறது. உதாரணமாய் மேற்கு சைதாப்பேட்டையில் ஆஞ்சநேயர் கோவில் தெருவில் அமைந்துள்ள அம்மன் டிபன் செண்டர் அப்படிப்பட்ட ஒரு வகையான் கடைதான். சுமார் பத்து வருடங்களுக்கு ப்ளாட்பார தள்ளுவண்டிக் கடையாகத்தான் வைத்திருக்கிறார்கள். அதுவும் காலையில் மட்டுமே. ஏழு மணிக்கு ஆரம்பித்தால் சுமார் 11 மணி வரை டிபன் கடை. இட்லி, பொங்கல், வடை, சமயங்களில் வாழைப்பூ வடை, தோசை, அதற்கு ரெண்டு வகையான சட்னி, சாம்பார். தோசைக்கு குருமா என்று இத்தூணூண்டுக் கடையில் பட்டையை கிளப்புகிறார்கள். 20 ரூபாய்க்கு இட்லி விற்கும் காலத்தில் சல்லீசான விலையில் பூப்போன்ற இட்லி, டபுள் தமாகா சைஸில் பொங்கல், கார சட்னி வகையராக்கள். வாயில் வைத்தால் கரையும் அளவிற்காகான சூடான வாழைப்பூ வடை., நெருக்கி வெட்டிய வெங்காயம் போட்டு கிரிஸ்பியாய்  பொரித்தெடுக்கப்பட்ட மசால் வடை என ஐம்பது ரூபாய்க்கு வயிறு நிறைய சாப்பிடும்படியான கையேந்தி பவன். இந்த அம்மன் டிபன் செண்டர். சிம்பிளான ஹோம் மேட் டிபன் அயிட்டங்களுக்கு .. https://www.youtube.com/watch?v=4e_DGnVAr2k
@@@@@@@@@@@@@@@@@@@@@@
பதினாலு செகண்டுக்கு மேல் ஒரு பெண்ணை உற்றோ, முறைத்தோ அல்லது சாதாரணமாய் பார்த்தால் எப்.ஐ.ஆர் போட்டு உள்ளே தள்ள முடியும் என்றிருக்கிறார் கேரளா எக்ஸைஸ் கமிஷனர் ரிஷிராஜ் சிங். கேட்ட மாத்திரத்தில் பகீரென தூக்கி வாரிப் போட்டது. எப்பேர்ப்பட்ட ஸ்டேட்மெண்ட் இது?. நல்ல வேளை சட்டமாய் இல்லை. இருந்திருந்தால் அதனால் என்னன்ன விஷயங்கள் நடந்திருக்கும்? பதினாலு செகண்டுக்குள் பெண்களின் முகத்தை எப்படி பார்ப்பது?  போன்ற யூ ட்யூப் வீடியோக்கள் வைரலாகியிருக்கும். ஸ்டாப் வாட்சுகளின் வியாபாரம் பிய்த்துக் கொண்டு போயிருக்கும். பிடிக்காத பையன்களை பழிவாங்க பெண்களுக்கு ஈசியான வழியாகியிருக்கும். போலீஸின் கட்டிங் லிஸ்டில் முதலிடம் பிடித்திருக்கும். எல்லாவற்றையும் மீறி ஆளேயில்லாத கடையில் யாருக்கு டீ ஆத்த என்று பெண்கள் தங்களை அலங்காரம் செய்து கொள்ளாமல் போய், அவர்கள் சார்ந்த வியாபாரம் படுத்திருக்கும். மாறி மாறிப் பார்த்து காதல் பொங்கச் செய்யும் காட்சிகள் எடுக்க, எழுத  முடியாமல்  படைப்பாளிகள் திண்டாடி தெருவில் நிற்க வேண்டியிருந்திருக்கும். பெண்கள் மீதான பாலியல் வன்முறையை தடுக்க சொன்ன விஷயம் தான் என்றாலும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்ட கருத்தாகவே எனக்கு தோன்றுகிறது. எல்லாம் சரி.. பதினாலு செகண்ட் முகத்தை மட்டுமே பார்க்கும் சமூகத்திலா நாம் வாழ்கிறோம்?..ஹி..ஹி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம் – The Godfather
தன் அப்பாவை முதியோர் இல்லத்தில் சேர்க்க வருகிறான் மகன். இல்லத்தில் வசதிகளை பற்றி விசாரிக்கிறான். அறையில் டிவி வேண்டுமா? என்று இல்லத்தில் உள்ள பெண் கேட்க, அப்பா ”வீட்டுல பசங்க பார்த்தாலே எனக்கு பிடிக்காது வேண்டாம்” என்கிறார். ஏசி வேண்டுமா? என்று பெண் கேட்க, ஐந்தாயிரம் தானே எக்ஸ்ட்ரா என்று பையன் ஓகே சொல்கிறார். வேண்டாம் எதுக்கு வீண் செலவு என்கிறார் அப்பா.. இப்படி பார்த்துப் பார்த்து தன் அப்பாவுக்கான நல்ல அறையை தேர்தெடுக்கிறான் மகன். அதற்கு பிறகு வரும் காட்சிகள் தான் உச்சம். எங்கேயும் மிகையில்லாத இயல்பான நடிப்பு, நீட் ப்ரெசெண்டேஷன் மளுக்கென கண்களில் கண்ணீர் வரவழைத்து எங்கேயும் ப்ரீச்சிங் இல்லாத, சாட்டையால் அடிக்கும் க்ளைமேக்ஸ். பார்த்தே தீர வேண்டிய ஒரு குறும்படம். சமீபத்தில் இக்குறும்படத்தை இயக்குனர் ஷங்கர் அவர்கள் தனது ட்வீட்ட்ரில் பகிர்ந்திருந்தார். எழுதி இயக்கியவர். ப்ரஜேஷ் திவாகரன். இவரது அப்பா இயக்குனர், நடிகர் ரமேஷ்கண்ணா. 
https://www.youtube.com/watch?v=0sHTqS8Jfv0

குமுதம்  - 28/9/16

Sep 13, 2016

இடைவெளி

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் எழுதவேயில்லை. ஏனிந்த இடைவெளி?. அடுத்த திரைப்படத்துக்கான கதை விவாத வேலை, எழுத்து என போய்க் கொண்டிருந்தாலும், கொத்து பரோட்டாவை மட்டுமாவது எழுதி விடுவேன். அதை எழுதவில்லை என்றதும் நிறைய வெளிநாட்டு வாழ் வாசகர்கள் மெயில் அனுப்பியிருந்தார்கள். (அட நிஜமாத்தான் சொல்றேங்க..). முக்கியமாய் நான் ஏன் எழுதவில்லை? எனக்கு ஏதாவது பிரச்சனையா? உடல் நலமில்லையா? என்றெல்லாம் அன்பு தோய்ந்த கேள்விகள்.  கொத்து பரோட்டா பத்தி அடுத்த வாரம் முதல் குமுதம் இதழில் வெளிவர இருக்கிறது. கொஞ்சம் செப்பனிட்ட வர்ஷனாய். அதனால் தான் எழுதவில்லை. இதனடுவே ஒரு தொடர் எழுத வேறு ப்ளான்.  விரைவில் எல்லாம் சிறப்பாக வரும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் அன்புக்கும் நன்றி. கொத்து பரோட்டா 2.0 வுடன் உங்களை சந்திக்கிறேன்.