கேட்டால் கிடைக்கும்
நம் வாழ்க்கையில் பல நேரங்களில், நாம் தெரிந்தே பலரை நம் பாக்கெட்டுக்குள் கைவிட்டு பணம் எடுத்துக் கொள்வதை அனுமதித்துக் கொண்டிருக்கிறோம். அது ஒரு ரூபாயாகவோ, நாலணாவாகவோ சில சமயம் நம் வாழ்க்கையாகவோ கூட இருக்கலாம். சமீபத்தில் நானும் என் மகன்களும் பிட்ஸா சாப்பிடுவதற்கு டொமினோ பிஸ்ஸாவுக்கு போனோம். எங்களது ஆர்டருக்கு மொத்தமாய் 303.71 பைசா வரிகளோடு வர, அதை 303.75க்கு முழு இலக்கமாய் மாற்றி, பில் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர் கேட்டதோ 304 ரூபாய். நானும் அது தான் விலையோ என்று பில்லை பார்க்காமல் 304 ரூபாயை கொடுத்தேன். பின்னர் பில்லை பார்த்த போது ஏற்கனவே நான்கு பைசா ரவுண்ட் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இருபத்தியைந்து பைசாவை எடுத்துக் கொள்கிறார்களே என்று சுர்ரென கோவம் வந்தது. “என்ன சார்.. அதிகமா வாங்கியிருக்கீங்க..?” ”சேஞ்ச் இல்லை சார்..” “நீங்க மாத்தி வச்சிருக்க வேண்டியதுதானே..?” “நாலனாதானே சார்..” “சார்.. உங்களுக்கு ஒரு நாலணா.. அது போல ஐம்பது பேரோட நாலணா சேர்ந்தா எவ்வளவு ஆகும் தெரியுமா..?” சிறிது நேரம் ஏதும் பேசாமல் அமைதியாய் இருந்துவிட்டு.. “நாலணாதானே சார்.. ஒரு ரூபாயா தர்றேன் ...