சத்யம்ங்கிறது தியேட்டர் இல்லை எமோஷன்
சத்யம் தியேட்டரை மூடப் போகிறார்கள் என்று அறிந்ததும் துக்கம் தொண்டையை அடைத்தது. எத்தனை நல்ல சினிமா பார்த்திருக்கிறோம் என்று மனம் லிஸ்ட் போட்டது. காம்ப்ளக்ஸ் தியேட்டர்கள் கோலோச்ச ஆரம்பித்த காலத்தில் தேவி, சத்யம், அபிராமி போன்றவர்கள் மட்டுமே இருந்த காலம். தெலுங்கு குஷி எல்லாம் நூறு நாட்களுக்கு மேல் சாந்தத்தில் ஓடிய காலம். தனியாய் சினிமா பார்க்க ஆர்மபித்த காலத்திலிருந்து சத்யம் மேல் எனக்கு ஒரு ஈடுபாடு இருந்து கொண்டேயிருந்தது. அதற்கு முக்கிய காரணம் சாந்தமில் போடப்படும் க்ளாஸிக் ஆங்கில படங்கள். மிகவும் சிறுவனாய் இருந்த காலத்தில், சாந்தம், பைலட் ஆகிய திரையரங்குகளில் ஆங்கிலப்படங்கள் அதுவும் ஆக்ஷன், எல்லாம் இல்லாத நல்ல ட்ராமா, கதை சொல்லும் படங்கள் எல்லாம் காலைக் காட்சி போடுவார்கள். அங்கே தான் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற தெலுங்கு திரைப்படமான “பரத் அனே நேனு” வின் ஒரிஜினலான “த அமெரிக்கன் ப்ரெசிடெண்டை” பார்த்தேன். இண்டர்வெல்லில் தம்மடித்துக் கொண்டு அதீத ஆங்கிலத்தில் ஏதாவது ஒரு படப்பெயரைச் சொல்லி, டைரக்டர், ஆக்டரி பேரைச் சொல்லி சிலாகித்துக் கொண்டிருக்கும் மாமாக்...