Thottal Thodarum

Aug 13, 2018

சத்யம்ங்கிறது தியேட்டர் இல்லை எமோஷன்


சத்யம் தியேட்டரை மூடப் போகிறார்கள் என்று அறிந்ததும் துக்கம் தொண்டையை அடைத்தது. எத்தனை நல்ல சினிமா பார்த்திருக்கிறோம் என்று மனம் லிஸ்ட் போட்டது. காம்ப்ளக்ஸ் தியேட்டர்கள் கோலோச்ச ஆரம்பித்த காலத்தில் தேவி, சத்யம், அபிராமி போன்றவர்கள் மட்டுமே இருந்த காலம். தெலுங்கு குஷி எல்லாம் நூறு நாட்களுக்கு மேல் சாந்தத்தில் ஓடிய காலம். 

தனியாய் சினிமா பார்க்க ஆர்மபித்த காலத்திலிருந்து சத்யம் மேல் எனக்கு ஒரு ஈடுபாடு இருந்து கொண்டேயிருந்தது. அதற்கு முக்கிய காரணம் சாந்தமில் போடப்படும் க்ளாஸிக் ஆங்கில படங்கள். மிகவும் சிறுவனாய் இருந்த காலத்தில், சாந்தம், பைலட் ஆகிய திரையரங்குகளில் ஆங்கிலப்படங்கள் அதுவும் ஆக்‌ஷன், எல்லாம் இல்லாத நல்ல ட்ராமா, கதை சொல்லும் படங்கள் எல்லாம் காலைக் காட்சி போடுவார்கள். அங்கே தான் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற தெலுங்கு திரைப்படமான “பரத் அனே நேனு” வின் ஒரிஜினலான “த அமெரிக்கன் ப்ரெசிடெண்டை” பார்த்தேன். 

இண்டர்வெல்லில் தம்மடித்துக் கொண்டு அதீத ஆங்கிலத்தில் ஏதாவது ஒரு படப்பெயரைச் சொல்லி, டைரக்டர், ஆக்டரி பேரைச் சொல்லி சிலாகித்துக் கொண்டிருக்கும் மாமாக்களை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருப்பேன். அவர்களையே வெறித்து பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவனான என்னை ஆரம்ப நாட்களில் அவர்கள் மதிக்கவேயில்லை. தொடர்ந்து நான்கைந்து படங்களில் இரண்டு தியேட்டர்களில் பார்க்க ஆர்மபித்ததும்,கூப்பிட்டு படங்கள் பற்றியும், அந்தப்படஙக்ள் எங்கே எப்போது இந்த திரையரங்குகளில் வெளியாகிறது போன்ற தகவல்களை சொல்வார்கள். அப்படி என்னுள் சினிமாவை வளர்த்த தியேட்டர்

கல்லூரி முடித்த பின் முன்னாள் ப்ளேமுடய இந்நாள் காதலனுடன் Fx Murder by Illusion படத்தை கார்னர் சீட்டில் அவளுடன்  பார்த்த அரங்கு. என எனக்கு சத்யமுடனான நெருக்கம் அதிகம். அதை மூடப் போகிறார்கள் என்றதும் துக்கம் தொண்டையை அடைக்காமல் என்ன செய்யும். கடைசி படம் ஃப்ரீ வில்லி 2 நைட் ஷோ பார்த்துட்டு எல்லாரும் தியேட்டர்லேர்ந்து கிளம்பிப் போனப்புறம், தியேட்டர் வாசல்ல இருக்கிற படியில உட்கார்ந்துட்டு கிளம்பினேன்.  

மூட நினைச்சு அங்க வேற இப்ப இருக்குற கார் பார்க்கிங் இடத்துல ஒரு பில்டிங் கட்ட கடக்கால் எல்லாம் பொட்டுட்டாங்க. முடின தியேட்டர் வாசல்ல ஒரு வாட்டி நின்னுட்டுத்தான் மவுண்ட்ரோடை க்ராஸ் பண்ணுவேன். அப்ப ஒரு கெட்டது சத்யம் தியேட்டர் குடும்பத்துக்கு நடந்தது. குடும்பப் பெரியவரை ஆந்திராவுல நக்ஸலைட் சுட்டுக் கொன்னாங்க. அமெரிக்காவுல இருக்குற அவரு பையன் வந்தாரு. எல்லா ப்ராஜெக்டும் அப்படி அப்படியே இருக்க, சத்யமை மீண்டும் திறக்குற வேலைய ஆரம்பிச்சாரு.  என் நியாபகம் சரியாய் இருந்தா இந்தியன் திரைப்படம் தான் சத்யமை புதுப்பிச்சு ஆரம்பிச்சு வச்ச படம். இப்போ மாதிரியான புதுப்புது டிசைன். கலர், நல்ல சீட், சவுண்ட், டி.டி.எஸ். என பல புது விஷயங்கள். தியேட்டர்னா இப்படிக் கூட இருக்கலாமான்னு வாயை பொளக்க வச்சாங்க.. கமலுக்காக ரெண்டு வாட்டின்னா தியேட்டருக்காக இன்னும் ரெண்டு வாட்டி பார்த்த படம் இந்தியன்.

கொஞ்சம் கொஞ்சமா அவர்கள் சீட்டுக்களை மாற்றி அமைத்த விதம். புதிய தியேட்டர்களை வடிவமைத்தது. டிஜிட்டல் ப்ரொஜக்‌ஷனில் இன்னவோஷன் என பல புதியவைகளை தமிழ் நாட்டு திரையரங்குகளுக்கு அறிமுகப்படுத்தியது சத்யம்தான். தமிழ் நாட்டில் தியேட்டர்களில் புரட்சியை ஏற்படுத்தி, தியேட்டருக்கு என்றே தனி ரசிகர்களை அமைத்துக் கொண்டது சத்யம்தான். 

ஆன்லைன் புக்கிங். மழைக்காலங்களில் ஓப்பன் பார்க்கிங்கிலிருந்து காரில் வரும் ரசிகர்களை பெரிய குடைக் கொண்டு தியேட்டர் வரை அழைத்து வரும் பாங்கு. டிஜிட்டல் ப்ரொஜக்‌ஷன் ஆரம்பக் காலத்தில் பல சமயங்களி ஹேங்க் ஆகி படம் மீண்டும் மீண்டும் தொடங்கிய இடத்திலிருந்தே ஓட ஆரம்பிக்கும் அப்போதெல்லாம் முக்கால் வாசி படம் ஓடியிருந்தாலும் கூட, படத்தின் டிக்கெட் பணம், மற்றும் பார்க்கிங் பணம் எல்லாவற்றையும் ரிபண்ட் செய்துவிடும் கஸ்டமர் சர்வீஸ். கொடுக்கும் காசுக்கு மேலாய் ரசிகர்களை அவர்களின் பின்னூட்டங்களை மதிக்கும் நிர்வாகம் என சொல்லிக் கொண்டே போகலாம். 

விஜய் படம் ஆடியோ லாஞ்ச் ஆனாலும் சரியாய் படத்தை ஆரம்பிக்க துறத்துனவங்க. என் படத்தோட ஆடியோலாஞ்சை சத்யத்துல வைக்க முடியாட்டாலும், அட்லீஸ்ட் சாந்தத்திலயாவது வையுங்கனு ஆசைப்பட்டேன். அத்தனை பிரஸ்டீஜியஸ் அரங்கு. 

இரண்டு சம்பவங்கள் என்னால் மறக்க முடியாது. ஒரு முறை தெலுங்கு படத்திற்கு டிக்கெட் வாங்கிவிட்டு பார்க்கிங்கில் வண்டியை வைத்துவிட்டு, அந்த டிக்கெட்டை வைக்கும் போது படத்தின் டிக்கெட்டை தொலைத்துவிட்டேன். என்ன செய்வது என்றே தெரியவில்லை வேறு டிக்கெட் வாங்கலாம் என்று யோசித்து வாங்கும் முன் டிக்கெட்டை தொலைத்துவிட்டேன் என்று சொன்னேன். டிக்கெட் சீட் நம்பர் நியாபகம் இருக்கிறதா? என்றார். நம்பர் நியாபகம் இருந்ததால் சொன்னேன். உறுதிப்படுத்திக் கொண்டு நீங்க டிக்கெட் வாங்க வேணாம் சார். நீஙக் போய் படம் பாருங்க. ஆனால் வெளியே இருந்து யாராச்சும் டிக்கெட் எடுத்துட்டு வந்தா நான் உள்ளே விட மாட்டேன்னு சொல்ல முடியாது. ஒரு வேளை படம் ஹவுஸ் புல் ஆயிருச்சுன்னா உங்களை நான் வெளியே அனுப்ப வேண்டியிருக்கும். அப்படி ஏதும் ஆகலைன்னா.. நீங்க படம் பார்க்க நாங்க அனுமதிக்கிறோம் என்று சொல்லி என்னுடன் ஒரு ஆளை அனுப்பி, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை  என்னை டிஸ்டர்ப் செய்யாமல் அதே சீட்டில் உட்கார வைத்தார்கள். பின்பு சிறிது நேரத்தில் யாரோ ஒருவர் ரோட்டில் கிடந்த டிக்கெட்டை எடுத்துக் கொண்டு வர, அவரை அந்த சீட்டில் உட்கார வைத்துவிட்டு, எனக்கு பால்கனியில் ஒரு சீட்டை தெரிந்தெடுத்து உட்கார வைத்து, ஒரு மணி நேரம் வரை உடனிருந்து யாரும் அந்த சீட்டிற்கு வரவில்லை என்று உறுதி செய்து கொண்டு  கிளம்பினார். 

அதே போல கும்கி படத்திற்கு டிக்கெட்டை சத்யம் கவுண்டரில் வாங்கினோம். டிக்கெட்ட் ப்ரிண்டிங்கில் ஏதோ குழப்பம். ஒரே வரிசையில் ரெண்டு செட் டிக்கெட் பிரிண்டாகி அதில் எனக்கும் என் நண்பருக்குமான டிக்கெட் மாட்டிக் கொண்டது. எஸ்கேப் அரங்கில். சொன்னோம். ஒரு எக்ஸிக்யூட்டிவ் வந்தார். முதலில் வந்த டிக்கெட் பார்ட்டிகளுக்கு அவர்களது இடத்தை ஒதுக்கு கொடுத்து விட்டு, பத்து ரூபாய் டிக்கெட் வரிசையில் எங்களை உட்கார வைத்துவிட்டு,  ஒரு அரை மணி நேரம் படம் பாருங்கள் என்று சொல்லிவிட்டு, வெளியே போனார். படம் ஓடிக் கொண்டிருந்தது. ஆளைக் காணவில்லை. நம்முள் இருக்கும் கேட்டால் கிடைக்கும் ஆள் முழித்துக் கொள்ள, இவங்களை விடக்கூடாது என்று கருவிக் கொண்டிருந்த போது இடைவேளை. எழுந்தா என் முன்னாடி அதே எக்ஸிக்யூட்டிவ். கோபமா கத்தலாம்னு நினைச்சப்பா, ஒரு டப் பாப்கார்னுடன் ஒரு டால் கோக்கை கொடுத்துட்டு, தங்களுடய சைட் தவறு அதனால மன்னிக்கணும்னு எல்லாம் அதீத மன்னிப்பு கேட்டாஙக்.. சத்யம் நம்ம செல்லப்பிள்ளைங்கிறதுனால மனமிறங்கி மன்னிச்சூஊஊ. இதெல்லாம் ட்விஸ்ட் இல்லை. படம் எல்லாம் முடிஞ்சி தியேட்டரை விட்டு வெளியே வரும் போது அந்த எக்ஸ்க்யூட்டிவ் மீண்டும் எங்களை அழைத்தார். தனியே கூட்டிப் போய் ஒரு கவரைக் கொடுத்தார். அதில் இரண்டு டிக்கெட்டுக்கான 240 ரூபாய் இருந்தது.  படமும் பார்த்துவிட்டு, இண்டர்வெல் ஸ்நாக்சும் கொறித்துவிட்டு, பணம் வாங்குவது உறுத்தலாய் இருக்க, எதுக்குங்க? என்று இழுத்தேன். எங்க தவறினால் உங்களுடய படம் பார்க்கும் அனுபவம் தடையாகிருச்சு. ஸோ. எங்களான காம்பன்ஷேஷன் என்றார். 

தொட்டால் தொடரும்  படத்துக்கு தியேட்டர் கேட்க போன போது, முனிகன்னையவிடம், அட்லீஸ்ட் ஸ்டியோ 5லயாவது ஒரு ஷோ கொடுங்க. ஏன்னா அது என் தியேட்டர் என்றேன். அதிர்சியாய் நிமிர்ந்தார். பின்ன என்னங்க நான் அத்தனை படம் உங்க தியேட்டர்ல பார்திருக்கேன் நான் கொடுத்த காசுல கட்டின தியேட்டர் தானே அது? என்றதும் சிரிகக்வே சிரிக்காதவர் சிரித்தார். ஸ்டூடியோ 5 திரையரங்கை கொடுக்காமல் எஸ்கேப்பில் கொடுத்தார். இப்படி பல விஷயங்கள்.  இப்ப சொல்லுங்க  சத்யங்கிறது ஏன் வெறும் தியேட்டர் இல்லை எமோஷனு.

கேபிள் சங்கர்

Post a Comment

No comments: