Thottal Thodarum

Aug 9, 2018

கொத்து பரோட்டா 2.0-62

கொத்து பரோட்டா 2.0-62
கல்வியின் பெயரில் கொள்ளையடிக்கும் இன்ஞினியரிங் கல்லூரி
என் மகனை பி.டெக் சேர்க்க பணம் கட்டிய போது கல்லூரி பஸ் வேண்டுமென்றால் 26-30 ஆயிரம் வரை சொன்னார்கள். கிலோமீட்டர் கணக்கிட்டு. அதுவும் ஆப்ஷன் தான் என்ன இப்போதே பணம் கட்டவில்லையென்றால் பின்பு பஸ் வசதியை பெற முடியாது என்ற லேசான பயமுறுத்தல் மட்டுமே இருந்தது. என் மகனின் நண்பன் எஸ்.எஸ்.என் கல்லூரியில் சேர்ந்தான். அவனுக்கு கல்லூரி பஸ் பீஸ் 46 ஆயிரம் ரூபாய். நீ பஸ்ஸில் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி.. 46ஆயிரம் பீஸ் கட்டியே தீர வேண்டும். அவனுடன் படிக்கும் பெண் கல்லூரியிலிருந்து நடக்கும் தூரத்தில் தான் வீடு. ஆனாலும் அவள் கல்லூரி பஸ்ஸுக்கு பீஸ் கட்டியாக வேண்டும் என்று வசூலிக்கிறார்கள். கல்லூரி பீஸுடம் இந்த தொகையையும் கட்டாயமாய் கட்டியே ஆக வேண்டும். கல்விக்கான தொகையே பெரும் பாராமாய் பெற்றோர்களுக்கு இருக்க, இம்மாதிரியான கட்டாய கொள்ளைகளை யார் தட்டிக் கேட்பது?. பெற்றோர்களும் நல்ல கல்லூரியில் சீட் கிடைத்தால் போதுமென்று கேள்வி கேட்க வழியில்லாமல் பணம் கட்டி விடுகிறார்கள். இது முதல் வருடம் மட்டுமல்ல நான்கு வருடங்களுக்கும் இதே ரூல்ஸ்தான். இவர்களைப் போல இன்னும் பல கல்லூரிகள் அப்பாவி மாணவர்களின் பெற்றோர்களிடம் தங்கள் கொள்ளையை தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
லஷ்மி குறும்படத்தைப் பற்றி சென்ற வாரம் நான் எழுதிய வேளையில் சோசியல் நெட்வொர்க்கில் பெரிய  சர்ச்சையே ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ் கலாச்சாரத்தையும், பெண்களையும் கேவலப்படுத்தியிருப்பதாக ஒரு குழுவும், பெண் சுதந்திரம் என்று இன்னொரு குழுவும், புருஷன் தப்புப் பண்ணா பொம்பளையும் தப்புப் பண்ணலாமா? என்றும், தப்பு ரைட்டு எல்லாம் அவங்கவங்க நிலையிலிருந்து பாக்கணும் என நடுநிலை கும்பலும் விவாதித்து அந்த குறும்படத்தை பெரிய ஹிட்டாக்கிவிட்டார்கள். இதுல எப்படி பாரதியார் பாடலைப் பயன்படுத்தலாம் என்று தனி ஆவர்தனம் வேறு. இப்படி பல சர்ச்சைகளை இக்குறும்படம் உருவாக்கினாலும், மனித உறவுகளிடையே ஏற்படும் முரண் தான் வாழ்க்கையின் சுவாரஸ்யம். அது சுவாரஸ்யமா இல்லையா? என்பது கேட்பவர்கள், எதிர் கொள்கிறவரின்  மனநிலையை, பொறுத்தது. அந்த குறும்படத்தில் லஷ்மி எடுக்கும் முடிவை அந்த கதையின் முடிவாய் நினைத்து பெரிது படுத்தாமல் போகிறவர்களுக்கு எந்தவிதமான பிரச்சனையுமில்லை. ஆனால் அது தான் சமூகத்தின் நிஜ முகம் என்று நினைத்துக் கொண்டோ, இதைப் பார்த்து நம் வீட்டுப் பெண்கள்/ ஆண்கள் தவறு செய்வார்கள் என்றோ பயப்படுகிறவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள் என்று எனக்கு படுகிறது.  பெண்கள் நாங்கள் என்ன அவ்வளவு கீழ்தரமானவர்களா? என்றும், அந்த பொண்ணு ரிலேஷன்ஷிப்பப் பத்தி பேசுற ஆம்பளைங்க எங்கயாச்சும் அவ புருஷனோட ரிலேஷன்ஷிப் பத்தி பேசினாங்களா? என்றால் இல்லை. ஆணுக்கு ஒர் கட்டுப்பாடு, பெண்ணுக்கு ஒன்று என்று விவாதம் செய்கிறவர்கள் பல பேர் தங்களை பெண்ணியவாதிகள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் தான். பெரும்பாலும் உறவுகளிடையே ஆன இன்செக்யூரிட்டி தான் இம்மாதிரியான விவாதங்களை வெளிக் கொணர்கிறது என்பது என் எண்ணம். இந்த உலகம் உள்ளவரை இந்த ஆண் – பெண் உறவுகளிடையே ஆன முரண் இருந்து கொண்டேதானிருக்கும். ஸோ..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஆழ்கடல் -குறும்படம்.
அதே லஷ்மி பிரியாவின் நடிப்பில் வெளிவந்திருக்கும் இன்னொரு குறும்படம் தான் இது. இதிலும் பேசப்படுவது ஆண் பெண் உறவுகளிடையே ஆன காம்ளெக்ஸான விஷயம் தான். காதல் என்றால் ஒருவன் ஒருத்தியுடன் தானா? அவர்களுடய ரிலேஷன்ஷிப்புக்கு அர்த்தம் என்ன? பெயர் என்ன? என்பது போன்ற பல கேள்விகளை  இக்கதையில் வரும் பெண் இயக்குனருக்கும் , ஆண் எழுத்தாளருக்குமிடையே ஆன வசனங்களிடையே பேசப்படுகிறது சென்சிட்டிவான , ஆனால் போல்ட்டான வசனங்கள், ஆரம்பத்தில் பர்சனலாய் தெரியும் காட்சிகள் சட்டென கதையின் காட்சிகளாய் மாறும் அநாயசம் எல்லாவற்றையும் மீறி அதீத ஆங்கிலம் படத்தை நம்மிடமிருந்து அந்நியபடுத்துகிறது என்பது ஒரு புறம் உண்மை. மைனஸாய் புக்கிங் ஆங்கில வசனங்கள் இருந்தாலும் ஹரிஷ் உத்தமன், லஷ்மிபிரியாவின் நடிப்பும் பின்னணியில் வரும் அழகான பாடல், ஒளிப்பதிவு எல்லாம் குட் ரகம். குட்டி ஆண்ட்ரியாவாக லஷ்மிப்ரியா உருவாகி வெளிவரும் நாள் தூரத்தில் இல்லை என்று தோன்றுகிறது.  https://www.youtube.com/watch?v=0gbIEVETpb0
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கால் கட்டு – வெப் சீரீஸ்
மிக சீரியஸான கண்டெண்டாய் இல்லாமல் கணவன் - மனைவிக்கிடையே நடக்கும் ஊடல், கூடலை மட்டுமே வைத்து சின்னச் சின்ன எபிசோடுகளை தருகிறார்கள் இவர்கள். எல்லாமே 5 நிமிடத்திலிருந்து பத்து நிமிடங்களுக்குள். முதல் எபிசோடில் கொஞ்சம் அந்நியமாய் இருந்த ப்ரதீப், சத்யாவின் நடிப்பு போகப் போக அந்நோன்யமாய் மாறிவிட்டதிலிருந்தே சீரீஸின் வெற்றி புரியும். எழுதி இயக்கி தயாரித்திருப்பவர் வெற்றி. இன்ஸ்டண்டாய் துணுக்கு போல அழகான குட்டிக்குட்டி சம்பவங்களின் தொகுப்பை பார்க்க விரும்புகிறவர்களுக்கு. https://www.youtube.com/watch?v=V1j3vHIqZ4g&t=7s
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Qarib Qarib Singlle
 Before sunrise, sunset போன்ற படங்களை எடுக்க நிறைய பேர் முயற்சித்திருந்தாலும் சரியாய் கை கூட போனது தான் அதிகம். ஏனென்றால் இரண்டு பேர் மட்டுமே பயணிக்கிற படத்தில் சுவாரஸ்யமான காட்சிகள், நிறைய பயணங்கள், அற்புதமான நடிப்பு என எல்லாம் கலந்து கட்டி அமைந்தால் தான் படம் ஒர்க்கவுட் ஆகும். இந்த படங்களில் இன்ஸ்பயர் ஆன பல பேர் ஒரிரு காட்சிகள் அம்மாதிரி அமைத்து வெற்றிப் பெற்றிருந்தாலும் முழு படம் அமையவேயில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்தப்படம் அதை தாண்டி வந்திருக்கிறது. வியோகி மிடில் ஏஜ் ஆசாமி. கொஞ்சம் பணக்காரன். லொட,லொட பேச்சுக்காரன். இதையெல்லாம் விட அற்புதமான கவிஞன். ஜெயா விதவை. அழகி. சொந்தக் காலில் நிற்பவள். தன் தனிமையை போக்கிக் கொள்ள எதையாவது பிடித்து நிற்க மாட்டோமா என்று அலைபாயும் 35 வயதில் நிற்பவள். இவளின் தனிமையை குழந்தையை பார்த்துக் கொள்வதிலும், உறவினர்களுடன் ஷாப்பிங் போக உடன் போவதிலும் கழித்துக் கொண்டிருப்பவளிடம், அவளது தோழி, அட்லீஸ்ட் டேட்டிங் சைட்டில் யாரையாவது பிடித்து, டெம்பரவரி ரிலேஷன்ஷிப்பாவது வைத்துக் கொள் என்கிறாள். சிங்கிள் சைட்டில் ரிஜிஸ்டர் செய்த மாத்திரத்தில் நிறைய ஆபர்கள் வர, வியோகியின் டீசண்ட் அப்ரோசின் காரணமாய் சந்திக்க முடிவு செய்கிறாள்.

ந்திப்பில் அவனின் ஆளுமை எரிச்சலடைய வைத்தாலும் வழியேயில்லாமல் அவனுடன் பயணிக்க வேண்டியிருக்க, தன்னைப் பற்றி சொல்லும் போது தான் மூன்று பெண்களை காதலித்திருப்பதாகவும், அவர்களுடன் பிரேக்கப் ஆகிவிட்டாலும் இன்றைக்கும் அவர்கள் எனக்காக மனதின் ஓரத்தில் அழுது கொண்டிருப்பதாகவும் சொல்ல, அப்படியெல்லாம் இல்லை என்பவளிடம் வா கூட்டிப் போய் காட்டுகிறேன் என்கிறான். இவர்களின் பயணமும், அந்த காதலிகள் இவனிடம் வைத்திருக்கும் காதலும், இவர்கள் இருவருக்கிடையே ஏற்படும் நெருக்கம், பிரிவு தான் படம்.

படம் முழுவதும் நம்ம பூ பார்வதியும், இர்பான் கானும் அட்டகாசப் படுத்தியிருக்கிறார்கள். மிடில் ஏஜ் டேட்டிங் என்பதால் அச்சு பிச்சு பேச்சில்லை. அறிவார்ந்த பேச்சு. லேசான அலட்டல், லொடலொடவென தன்னைப் பற்றியும் தன் காதலிகளைப் பற்றியும் நிறுத்தி நிதானமான பேசும் முறை, கவிதை சொல்லும் விதம், பார்வதி தன்னை இக்னோர் செய்யும் போது காட்டும் முதிர்ச்சி, பார்வதியை இம்பரஸ் செய்வதற்காக பக்கோடா வாங்கப் போய் ரயிலை மிஸ் செய்துவிட்டு, அந்த ரயில பிடிக்க பயணம் செய்யும் காட்சியில் அவர் காட்டும் நிதானம்தன் முன்னால் காதலிகளை கண்டதும் கண்களில் வெளிப்படுத்தும் சந்தோஷம் என மனுஷன் அட்டகாசமாய் நடித்திருக்கிறார். 


தனிமையும், துணை தேடும் வேட்கையும் ஒரு சேர்ந்திருக்க, இயல்பிலேயே கொஞ்சமே கொஞ்சம் அர்தடாக்ஸ் மலையாளி உள்ளே இருக்க, முதல் சந்திப்புக்கு தயாராகும் காட்சியில் புதுப் பெண்ணைப் போல பார்வதி காட்டும் எக்ஸ்பிரஷன்கள் ஆஸம். கண்களில் எத்தனை பரபரப்பு, எதிர்பார்பு. ஒரு பக்கம் இர்பானின் தொடர் பேச்சு, இரிடேஷன்களை எல்லாவற்றுக்கும் சின்னச் சின்ன ரியாக்‌ஷன்களில் பார்வதி ஸ்கோர் செய்து கொண்டே போய்விடுகிறார். இருவருக்குமிடையே ஆன புரிதல் வரும் காட்சிகள் திணிக்கப்படாமல் மிக இயல்பாய் அமைத்து, இயக்கிய தனுஜா சந்திராவின் இயக்கம், ஈஷிட் நாராயணின் ஸுமூத் ஒளிப்பதிவு, விஷாலின் உறுத்தாத இசை, கான், பார்வதியின் அற்புதமான நடிப்பு என இதயத்தை வருடும் ஃபீல் குட் மிடில் ஏஜ் காதல் கதை.E

Post a Comment

1 comment:

சிகரம் பாரதி said...

சிறப்பு. படித்தேன். ரசித்தேன்.

நமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

https://newsigaram.blogspot.com/