Thottal Thodarum

Aug 3, 2018

கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறது? 16

நான் நடுக்கடல்லேர்ந்து சினிமாவுக்கு வந்தவன் சார் என்றார் நண்பர். போனில். என் சினிமா வியாபாரம் புத்தகத்தைப்   சில ஆண்டுகளுக்கு முன்னால் படித்துவிட்டு, பல நண்பர்களுக்கு ரெகமெண்ட் செய்திருக்கிறார். அப்போதிலிருந்தே என்னை சந்திக்க வேண்டுமென்ற ஆவல் இருந்திருக்கிறது. ஆனால் சமயம் இப்போதுதான் கிடைத்து என்றார்.

“நன்றி.. அதெல்லாம் இருக்கட்டும் அதென்ன நடுக்கடலேர்ந்து சினிமாவுக்கு வந்தேன்கிறீங்க?. “ என்றேன் ஆவல் தாளாமல்.

“ஆமாம் சார் நான் ஒரு மரைன் இன்ஜினியர். பணம் சம்பாத்தியம்னு ஓடிக்கிட்டேயிருந்தாலும் ஏதோ ஒண்ணை மிஸ் பண்றோம்னு தோணிட்டேயிருதுச்சு.  ஒரு நாள் நடுக்கடல்ல என் கேப்டன் கிட்ட சொன்னேன். நான் சினிமாவுக்கு போகப் போறேன். இந்த வேலை வேணாம்ணு. அவருக்கு என்னைப் பத்தி நல்லாத் தெரியும். சரி போன்னுட்டு. ஹெலிக்காப்டரை வர வழைச்சு, கரையில இறங்குனவன் நான்.”

அவர் சொன்னது எனக்கு த்ரில்லிங் அனுபவமாய் இருந்தது. ஆனால் அப்படி ஆவலாய் தமிழ் சினிமாவுக்குள் வந்தவரின் வாழ்க்கை எப்படியிருந்தது என்பதை கேட்க மனம் பரபரத்தது.

“ஆனா பாருங்க. எந்த சினிமாவுக்காக பறந்து வந்து இறங்குனேனோ.. அது என்னை அவ்வளவு சுலபமா வரவேற்கவேயில்லை. தேடல்.. தேடல். தேடல். கொஞ்சம் கொஞ்சமா காண்டேக் பிடிச்சு ஒரு அஸிஸ்டெண்டா வரத்துக்குள்ள தலையால தண்ணி குடிக்க வேண்டியதாப் போச்சு. அஸிஸ்டெண்ட்னா… அத்தனை மதிப்பான வேலையில்லை. அதுவும் என்னை மாதிரியான மரியாதையான இடத்துலேர்ந்து வந்தவங்களுக்கு அது பெரிய அவமானம். பட்.. புரிஞ்சுச்சு.. என்னோட மரைன் இன் ஜினியரிங்கை விட இது பெருசுன்னு நினைச்சுத்தானே வந்திருக்கேன். தென். அதப் பத்திக் கவலைப் படக்கூடாதுன்னு. நாயா அலைஞ்சேன். ஆட் ஃபிலிம் எல்லாம் வேலை செய்தேன். பட்.. எங்கே போய் எங்கே திரும்பினாலும் திரும்பத் திரும்ப ஒரே இடத்துல நிக்குறாப் போலயே ஃபீலிங்.

யோசிச்சு பார்த்தா நான் விரும்புற சினிமாவுக்கான இடம் இது இல்லைனு என் மனசு சொல்லிட்டேயிருந்துச்சு. என் கேப்டனுடய ரிலேட்டிவ் மூலமா நான் ஹாலிவுட்டுக்குள் நுழைஞ்சேன்.”
என்றவரை ஆச்சரியமாய் பார்த்தேன். “என்னது ஹாலிவுட்டா?”

“ஆமாம் சார்.. ஆனா அங்க உள்ள நுழையிறது சாதாரண விஷயமில்லை.நம்மூர்ல ஒரு மாதிரியான நெக்லெட்னா. அங்க வேற மாதிரி. ஏசியனு சொல்லிச் சொல்லியே நம்மளை ஓரங்கட்டுவானுங்க. அதையும் மீறி சைனீசுக்கு கிடைக்குற மரியாதையை கூட நமக்கு தரமாட்டாங்க. கொஞ்சம் கொஞ்சமா, பழகி, நம்மளோட வேலைய பார்த்து மதிக்க ஆர்மபிப்பானுங்க. அது வரைக்கும் கொஞ்சம் மானக்கேடா இருந்தாலும் ,தாங்கணும். நான் போன போது எனக்கு மொதல்ல கொடுத்த வேலை க்ளாப் அடிக்கிறதுதான். நம்மூர் மாதிரி சாக்பீஸுல எழுதறது இல்லை. டிஜிட்டல் இன்புட் நாமதான் கரெக்டா கொடுக்கணும். என் ஜினியரிங் படிச்சவனுக்கு இதெல்லாம் வேலையே இல்லை. ஆனால் அதான் என்னை மரியாதைக்குரியவனா ஆக்குச்சு.

அங்கேயும் எல்லா பிரச்சனையும் இருக்கு. ரேசிசம், மிக முக்கியம் . ஆனா நம்மூரைப் போல யாரையும் அடிச்சுப் போட்டு மேல ஏறணும்னு நினக்க மாட்டானுங்க. நீ பாட்டுக்கு உன் வேலைய பாரு நான் என்னுதங்கிற அவன் டேர்ம் எனக்கு ரொம்ப பிடிக்கும். பட் அவமானப் பட ரெடியாய் இருக்கணும். அது இங்கேனு இல்லை எங்கேயா இருந்தாலும்.  அப்படியே பொறுமை பழகி, ஒரு இண்டிப்பெண்டண்ட் படம் ஒன்னு, ஒரு ஹாரர் படம் ஒன்னுன்னு ரெண்டு படம் அஸிஸ்டெண்டா ஒர்க் பண்ணேன். நாமளே ஒரு ப்ராஜெக்ட் பண்ணனும்னு பல முயற்சிகளுக்கு பிறகு இன்னைக்கு நான் ஒரு இண்டிபெண்டண்ட் படம் பண்ணியிருக்கேன். 16 பெஸ்டிவல்ல கலந்து அவார்ட் வாங்கியிருக்கு, என்றவரைப் பார்க்க ரொம்பவே சந்தோஷமாய் இருந்தது. அவர் ஆசீர்வதிக்கப்பட்டவரைப் போல இருந்தார். “எந்த வெள்ளைக்காரன் என்னை ஏசியன்னு கலாய்ச்சானோ அவனே என்னைக் கூட்டி வச்சி அவார்டும் கொடுத்து, என் பட்த்தைப் பத்தி ப்ரோமோவுக்கு பேச வச்சிருக்கேங்கிற சந்தோஷம் ரொம்பவே பெருசு. இந்த படம் கொடுத்த வெற்றி. இன்னைக்கு ரெண்டு மூணு ஸ்டூடியோவுல ஸ்கிரிப்ட் ஓகேன்னு சொல்லி ப்ராசஸ் ஆயிருக்கு. எது பண்ணாலும் மனசு என்னவோ இங்கேயேத்தான் இருக்கு. என்னதான் ஹாலிவுட் படம் பண்ணாலும், ஜெயிச்சாலும் மனசு பூரா இங்கேயே இருக்கு. ஒரு நாள் வருவேண்ணே. .நிச்சயம் எனக்கு பிடிச்ச ஒரு படத்தை பண்ணுவேன். ஆனா எனக்கான சினிமாவோட வியாபாரத்த சொல்லிக் கொடுத்த உங்களை மறக்கவே மாட்டேங்க.. “ என்றபோது எனக்கு  கண்கள் கலங்கியது.


ஒரு புத்தகம் எழுதி அதனால் பணம் சம்பாதித்தோமோ இல்லையோ?. எட்டு வருடங்களுக்கு பிறகு ஒருவர் தேடி வந்து  உன் புத்தகத்தினால் தான் எனக்கான அறிவு கிடைத்தது என்று பாராட்டும் போது, இன்னும் இன்னும் உழைக்க மனம் தயாராகிறது.

Post a Comment

No comments: