Thottal Thodarum

Aug 15, 2018

கொத்து பரோட்டா 2.0 -63

கொத்து பரோட்டா 2.0
கடந்த ஒரு வாரமாய் தமிழ் சினிமாவே அல்லோல கல்லோல படுகிறது. சசிகுமார் கம்பெனியின் நிர்வாக தயாரிப்பாளரின் துர்மரணமும். அதற்கு காரணம் பைனான்சியர் அன்புசெழியன் கொடுத்த மிரட்டல்கள் தான் என்கிற அவரின் கடிதமும் தான். உடனே கந்து வட்டி பைனாசியர், ஏற்கனவே ஜி.வியின் சாவுக்கு காரணமானவர். அரசியல் பலம் காரணமாய் அராஜகம் செய்கிறவர், வீட்டிற்குள் வந்து பெண்களை மானபங்கப்படுத்தி விடுவார் என்றும், பணம் கொடுக்க வேண்டியவரை கூட்டிக் கொண்டு போய் ஒர் அறைக்குள் நிர்வாணமாய் நிற்க வைத்து, திட்டுகிறவர் என்றெல்லாம் டெரர் செய்திகள் மீண்டும் வர ஆரம்பிக்க, தமிழ் சினிமாவே கந்துவட்டியால் அவதிப்படுகிறது என்று கூக்குரல் எழுப்ப ஆரம்பித்துவிட்டார்கள். உடனடியாய் கந்துவட்டி செழியனை கைது செய்ய வேண்டுமென்று விஷால் ஒரு பக்கம் பேட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் இன்னொரு பக்கம் அவரிடம் தொடர்ந்து பணம் வாங்கி படமெடுத்து வரும் பல தயாரிப்பாளர்கள் தேவையில்லாமல் அன்பு செழியன் மீது பழி சொல்கிறார்கள் என்றும், அவர் நல்லவர் எங்கள் வகையில் இது வரை எந்த மாதிரியான தொந்தரவும் செய்ததில்லை என்று பத்திரிக்கையாளர்களைக் கூப்பிட்டு பேசும் அளவிற்கு தமிழ் சினிமா இரண்டாய் பிரிந்து ஒரு பக்கம் சப்போர்ட்டும் இன்னொரு பக்கம் எதிர்ப்புமாய் பேசிக் கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம் எதிர்ப்பவர்கள் கூட அன்புவிடம் ஏகப்பட்ட கோடி கடன் வாங்கி வைத்திருக்கிறார்கள் எனவே இந்த் பிரச்சனையை வைத்து வட்டி கட்டாமல், செட்டில் மெண்ட் போக வாய்ப்பிருக்கிறது என்பதால்தான் கூவுகிறார்கள் என்று ஆதரிப்பவர்கள் ஒரு புறம் பேசி கொண்டிருக்க, உண்மையில் பணம் கொடுத்தது சசிகுமாருக்குத்தானே தவிர இறந்த அவரது உறவினர் அசோக்குமாருக்கு இல்லாத போது, தயாரிப்பாளர் சங்கத்தில் மெம்பராய் கூட இல்லாதவரை எப்படி தயாரிப்பாளர் என்று சொல்லலாம். அது மட்டுமில்லாமல் பணம் கேட்பதானால் ச்சிகுமாரிடம் மட்டுமே அன்பு செழியன் கேட்க முடியும் என்கிற போது இந்த மரணமே கொஞ்சம் குழப்படியாய் உள்ளது என்று ஒரு சாரார் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களை யார் கடன் வாங்கியாவது படமெடுக்க சொல்கிறார்கள்? என்று நக்கலாய் கேட்பவர்கள் ஒரு புறம் இருந்தாலும் இம்மாதிரியான பிரச்சனைகள் வருவதற்கான முக்கிய காரணம் சரியான முறையில் ப்ளான் செய்யாமல் போய் மாட்டிக் கொள்வதே முக்கிய காரணம். முக்கியமாய் அதர் பீப்பிள் மணி எனும் ஓ.பி.எம் மூலம் வியாபாரம் செய்கிறவர்கள் அனைவருமே இந்த பிரச்சனையில் ஒரு நாள் அல்லது ஒருநாள் மாட்டிக் கொள்வார்கள் என்பது உறுதியான விஷயம்.

படத்துக்கு ரெட் போட்டுவிட்டார்கள் அதனால் பெரும் நஷ்டம் வரும் என்று புலம்புகிறவர்கள் இதற்கு முன்பு இப்படியெல்லாம் நடந்ததில்லை என்பது போல புலம்புவது அதிசயமாய் இருக்கிறது. ஆண்டாண்டு காலமாய் கொட்டுவாயில் லேப் லெட்டர் இல்லாமல் படம் ரிலீஸ் ஆகாது எனும் போது செட்டில் மெண்ட் பேசி ரிலீஸான பல நூறு படங்களை கண்டது தான் தமிழ் சினிமா.இன்றைக்கு திடீரென அன்பு தான் இந்த ரூல்ஸை வைத்து மிரட்டுவதாக சொல்வது அதீதமே

கடன் என்றைக்குமே அன்பை முறிக்கும். அது அன்புவிடமிருந்து வாங்கினாலும் சரி அல்லது வேறு எந்த மாநிலத்து ஆட்களிடம் வாங்கினாலும் சரி. சரியான ப்ளானிங் இல்லாமலும், தன் மார்கெட்டை சரி கட்டிக் கொள்ள பெரிய பட்ஜெட் படமாய் எடுக்க ஆசைப்படும் நடிகர்களும், இன்னமும் நூறு கோடியெல்லாம் தமிழ் நாட்டிலேயே வசூலிக்க முடியாத மார்கெட்டில் நூறு கோடியில் படமெடுக்க ஆசைப்படும் நாயகர்கள், இயக்குனர்கள் இருக்கும் வரை இம்மாதிரியான  உயிரிழப்புகளும், குற்றச்சாட்டுக்களும் இருக்கத்தான் செய்யும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Mugguru Love Story
யெப் டிவியின் லேட்டஸ்ட் ஒரிஜினல் வெப் சீரீஸ். பிரபல நடிகர் நவ்தீப் நாயகனாகவும், அர்ஜூன் ரெட்டி நாயகன் விஜய்யின் சிறப்பு தோற்றத்துடன் வெளிவந்திருக்கும் புதிய சீரீஸ். சுவாதி விஜயவாடா பெண். எதிலும் தனக்கு எது தேவை என்று முடிவெடுக்க முடியாதவள். அவளுடய கட்டுப்பெட்டி அம்மா ஐஸ்வர்யா. அப்பா செல்லமான சுவாதி தனியே ஹைதராப்பத்தில் வேலைக்கு போக விருப்பபடுகிறாள். அம்மாவோ அவளுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்துவிட பையனைத் தேட, அப்பாவின் செல்லத்தின் காரணமாய் ஹைதை வேலைக்கு வருகிறாள்.  வந்த இடத்தில் அவள் வேலை செய்யும் நிறுவன உரிமையாளர் நவ்தீப்புக்கும் இடையே காதல். அதே நேரத்தில் ரேடியோ ஆர்.ஜே ஒருவனிடமும் காதல். ஒரே நேரத்தில் இருவரையும் எப்படி காதலிப்பது என்ற சுவாதியின் வழக்கமான குழப்பம். குழப்பத்திலிருந்து சுவாதி வெளியே வந்தாளா? இல்லையா? யாரை தெரிந்தெடுத்தால் என்பதுதான் கதை.
சிம்பிளான கதை ஐஸ்வர்யா, நவ்தீப் தன்ராஜ் போன்ற தெரிந்த நடிகர்கள். நல்ல ப்ரொடக்‌ஷன் குவாலிட்டி என்றாலும் ஆங்காங்ககே சில எபிசோடுகளில் பட்ஜெட் பல்லை காட்டுகிறது. சுவாதியாய் தேஜஸ்வினி. அந்த பெரிய உதடுகள் முகத்துக்கு செக்ஸியாய் இருக்க, முகம் பாவமாய் வைத்து குழப்படியாய் பேசிடும் இடங்களில் ஆரம்பித்து பல இடங்களில் க்யூட்டாக நடிக்கிறார். ஐஸ்வர்யாவின் கேமியோவும் அழகு. அர்ஜுன் ரெட்டி விஜய்யை பயன் படுத்தியவிதம் இண்ட்ரஸ்டிங். ஆங்காங்கே கொஞ்சம் நாடகத்தனமான டயலாக் காமெடிகள் இருந்தாலும் நாயகியின் கேரக்டரைஷேஷன், அவளுடய தோழியாய் வரும் பெண், முறைப்பையன் ஆகியோரை வைத்து வசனம் மூலமாய் காமெடியை ஒர்க்கவுட் பண்ணிய விதம் சுவாரஸ்யம்.

மிக்கி ஜே மேயரின் டைட்டில் பாடல், ராஜ் கே நல்லியின் நீட்டான ஒளிப்பதிவு. நல்ல காஸ்டிங். ஷஷாங் ஏலட்டியின் சிறப்பான இயக்கம் சீரிஸின் வெற்றிக்கு உதவியிருக்கிறது.  இன்னும் கொஞ்சம் ரிச்சான பட்ஜெட் கொடுத்திருக்கலாம், நாடகத்தன்மையை குறைத்திருக்கலாம், க்ளீஷே காட்சிகளை குறைத்திருக்கலாம், திரும்ப திரும்ப காதல் குழப்பம் போன்றவைதானா? இந்திய வெப் சீரிஸ் என்றாலே இப்படித்தானா? என்று தோன்றினாலும் கிட்டத்தட்ட ஸ்டார்டப் நிலையில் தான் இந்திய வெப் சீரிஸ் உலகம் இருக்கிறது. எனவே இலகுவாய் மக்களிடம் சேரும் கண்டெண்டுகளை கொஞ்சம் வித்யாசமாய் அணுக ஆரம்பித்திருக்கிறார்கள். இதை இன்னமும் தமிழ் வெப் சீரிஸ் உலகம் முயற்சிக்கவேயில்லை என்பது வருத்தமே.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
டூலெட் – குறும்படம்
வாடகைக்கு வீடு தேடுவது என்பது இம்சையான விஷயம். அதை தேடும்போதும், தேட நேரும் போது கிடைக்கும் அனுபவங்களையும் பார்க்கும் போது எப்பாடுபட்டாவது சொந்த வீடு வாங்கிவிட வேண்டுமென்ற வெறி வரும். அப்படி வெறி வந்து உறுதி பூண்டவர்கள் வீடு வாங்கி சந்தோஷமாய் இருந்த கதையும் உண்டு. வாங்கி கடன்காரர்கள் ஆகி இம்சைக்குண்டானவர்களும் உண்டு. ஆனால் சொந்தமாய் வீடு வாங்க முடியாதவர்கள் எனும் பெரும்பான்மை இனம் உள்ளவர்கள் உள்ள நாட்டில்,  பேச்சுலர்களுக்கு ஒர் சட்டம், குடும்பஸ்தர்களுக்கு ஒர் சட்டம், இண்டிபெண்டண்ட் பெண்களுக்கு ஒர் சட்டம், முஸ்லிம்களுக்கு, ப்ராமணர்களுக்கு, சைவம் , அசைவம் என ஆளுக்கு ஏற்றார்ப்போல வாடகைக்கு வீடு விடுகிறவர்கள் அவர்களுக்கு என்று ஒரு சட்டத்தை, பொதுபுத்தியை, வரைமுறையை வைத்திருக்கிறார்கள். இக்குறும்படம் இவையெல்லாவற்றையும் சில ஷாட்களில் மிக அழகாய் சொல்லி க்ளைமேக்ஸில் பொட்டில் அடித்திருக்கிறார் இயக்குனர் ஜெயசந்திர ஹஸ்மி.  https://www.youtube.com/watch?v=OqhpBqg5NO4&feature=youtu.be
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நடந்த கதை – குறும்படம்
சற்றே பழைய குறும்படம். அழகிய பெரியவனின் “குறடு” சிறுகதையை குறும்படமாக்கியிருக்கிறார்கள். நகரங்களில் எல்லோரும் செருப்பு போட்டு நடப்பது சாதாரணம்விஷயம். ஆனால் கிராமங்களில் இன்றைக்கும் ஜாதி வேற்றுமை, தீண்டாமை போன்றவைகள் இருக்கத்தான் செய்கிறது. அப்படி அதிக்க சாதியினரால் பாதிக்கப்பட்ட ஒர் இளைஞன் செருப்புப் போட்டு நடந்த கதைதான் இது. ஏன் நாம் மட்டும் செருப்பு போடக்கூடாது? என்ற கேள்விக்கு பதில் கிடைக்காமல் அலையும் சிறுவன், கொஞ்சம் புரிந்து ஏன் நாங்க செருப்பு போடக்கூடாது என்று கேள்விகேட்டு அடிவாங்கியவன், ஊருல இருக்குற எல்லாம் நாயும் மேலத்தெருவுல ஒண்ணுக்கடிக்குது. அந்த நாயைவிடவா குறைஞ்சிட்டோம் என்று பெருமும் இளைஞனுக்கு செருப்புப் போட்டு நடக்க ஒர் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அதையும் ஊர் மேலத்தெரு எதிர்க்கிறது. அதை எப்படி எதிர்கொள்கிறான் அந்த இளைஞன் என்பதை ப்ளாஷ்பேக்காய் புதிய செருப்பைபோட்டு ஆனந்தமாய் நடக்கும் தன் பேரனுக்கு செல்ல ஆசைப்படுகிறவரின் பார்வையில் போகிறது. அழுத்தமான கதை. ஜாதிக் கொடுமையை, தீண்டாமையை அழுத்தமாய் பேசியிருக்கிறது. மைனஸாய் பார்த்தால் கொஞ்சம் நீளம். பட்.. சொல்ல வந்ததை மிக அழுத்தமாய், நேர்மையாய் சொல்லியிருக்கிறார் இயக்குனர் பொன்.சுதா.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Post a Comment

1 comment:

srik said...

Why all these old articles are repeating again