Thottal Thodarum

Aug 13, 2018

Love Per Square feet

Love Per Square feet
நெட்ப்ளிக்ஸ், அமேசான் போன்ற ஸ்ட்ரீமிங் ஜாம்பவான்கள் இந்திய மார்கெட்டை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அமேசான் ஒரு புறம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வரும் பிரபல படங்களை உடனடியாய் வாங்கி தன்னுடய ஸ்ட்ரிமிங் லிஸ்டில் அணிவகுக்கும் அதே நேரத்தில், ரியாலிட்டி ஷோக்கள் கூட தயாரித்து வெளியிட ஆரம்பிதிருக்கிறார்கள். சக போட்டியாளரான நெட்ப்ளிக்ஸ் அந்த அளவுக்கு சினிமா கண்டெண்டுகளுக்கு டஃப் பைட் கொடுக்காவிட்டாலும், தங்களது நெட்வொர்க்குக்காக மட்டுமே படங்களை தயாரித்து கொடுக்க, பிரபல நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். ப்ராட் பிட், வில் ஸ்மித் போன்ற பிரபல ஹாலிவுட் நடிகர்களை வைத்து நெட்ப்ளிக்ஸுக்காக மட்டுமே படங்களை தயாரித்து வெளியிட்டிருக்கின்றார்கள். வில்ஸ்மித்தின் ப்ரைட் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் கிட்டத்தட்ட 11 மில்லியன் முறை ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டிருக்கிறது. இப்படங்களின் வெற்றி மேலும் சுமார் 80 நேரடி ஸ்ட்ரிமிங்கிற்காக மட்டுமே தயாராகும் ஹாலிவுட் திரைப்படங்களை தயாரிக்க நெட்ப்ளிக்ஸ் தயாராகிவிட்டடது. ஜேம்ஸ் காமரோன், கிரிஸ்டபர் நோலன் போன்றோர் வெள்ளித்திரை அல்லாத ஒரு திரைப்படத்துக்கு தங்கள் ஆதரவு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். நோலன் தனக்கு நெட்ப்ளிக்ஸ் அளித்த வாய்ப்பை மறுதளித்துவிட்டார்.

ஆனால் இந்திய படங்களைப் பொறுத்த வரை புதிய திறமைகள், உலகளாவிய வகையில் நேரடியாய் மக்களிடம் சென்றடைய இம்மாதிரியான ஸ்ட்ரீமிங் சர்விஸ்கள் பெரிய வரப்பிரசாதம். சென்சார் இல்லை, தயாரிப்பாளருக்காக, குத்து பாட்டு வைக்கத் தேவையில்லை. வெகுஜன மக்களுக்காக காம்பரமைஸ் செய்யத் தேவையில்லை என்பது போல பல சுதந்திரங்கள் இருந்தாலும், என் படம் பெரிய ஹிட் என்ப்தாய் மார்த்தட்டிக் கொள்ள டேட்டா கிடைக்காத பட்சத்தில் கொஞ்சம் சுவாரஸ்யக் குறைவாய்த்தாந்தோன்றும்.   தற்போது ஹிந்தியிலும் அதை ஆரம்பித்திருக்கிறார்கள். ஷாருக்கான், பர்ஹான் அக்தர், யாஷ் ராஜ் போன்ற பிரபல நிறுவனங்களிடம் வரிசைக்கட்டி ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. பிரபல நிறுவனங்கள் ஆட்டத்தில் இறங்கும் போது நிச்சயம் வெகு ஜன மக்களையும் சேர்ந்தடையும். சுமார் ஒரு மில்லியன் இந்திய வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் நெட்ப்ளிக்ஸின் மார்கெட் உண்மையில் சொல்லப் போனால் தியேட்டர் மார்கெட்டை விட பெரிதாய் வளரக்கூடியது என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில் ஹிந்தியில் காதலர் தின ஸ்பெஷலாய் வெளிக் கொணர்ந்திருக்கும் ஹிந்தி நேரடி ஸ்ட்ரீமிங் படம் தான் “Love Per Square feet”

ரொம்பவே சிம்பிளான கதை. பாங்கில் வேலை செய்யும் மிடில் க்ளாஸ் சஞ்சய்க்கு எப்படியாவது ஒரு வீடு சொந்தமாய் வாங்க வேண்டுமென்பதே கனவு. அதே கனவு தலைமேலே உள்ளவன் கொஞ்சம் அதிர்ந்து நடந்தாலும், காரை கொட்டும் வீட்டிலிருந்து விடுதலை வேண்டி கனவு காணும் கரீனா.  சஞ்சய்யின் பாஸ் ரஷிக்கும் அவனுக்குமிடையே செக்ஸ் இல்லாத கில்மா உறவு போய்க் கொண்டிருக்கிறது. அதே போல கரீனாவுக்கும் அவளுடய உறவுக்கார சாமுவேலுக்குமிடையே திருமணம் செய்ய பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கிறது. இருவருடைய கனவு வீட்டை அடைய ஒரு வழி கிடைக்கிறது அரசு சல்லீசு விலையில் குலுக்கல் முறையில் ஒதுக்கு ப்ளாட்டுக்கள். அதை எப்படியாவது வாங்க வேண்டுமானால் வேறு வழியே இல்லை. திருமணம் ஆனவராக இருக்க வேண்டியது கட்டாயம். அதனால் இருவரும் சேர்ந்து ஒரு வீட்டை வாங்க ப்ளான் போடுகிறார்கள். அதற்காக போலி திருமண ரெஜிஸ்ட்ரேஷன் எல்லாம் நடக்க, ஒரு சுபயோக சுபதினத்தில் இருவருக்கும் காதல் பற்றிக் கொள்கிறது. இருவருடைய முன்னாள் காதல்களைப் பற்றி ஏற்கனவே பேசியிருந்தாலும், காதல் என உறவாகி, புதிய வீட்டில் ஒரு நெகிழ்ச்சியான தருணத்தில் உறவுமாகிவிட, இருவரின் நெருக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் பொஸஸிவாக மாறுகிறது.

எதையும் தடுக்க முடியாத ஒர் அசந்தர்ப்ப நேரத்தில் சஞ்செய்க்கும் ரஷிக்குமிடையே அந்தசம்பவம் நடந்து விட, அதை சொல்லாமல் இருப்பது துரோகம் என எண்ணி, உண்மையை சொல்லிவிடுகிறான். இதனால் இருவரிடையே பிரிவு உண்டாகிறது. வீடு வேண்டுமானால் இருவரும் ஒன்றாய் ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய வேண்டி இருக்க, குடும்பத்தினர் அனைவரும் இவர்களின் ப்ரச்சனைகளுக்கு முன்னமே இருவரது திருமணத்துக்கும் ஒத்துக் கொண்டு, எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்க, என்ன நடக்கிறது என்ப்துதான் க்ளைமேக்ஸ்.

கொஞ்சம் டெம்ப்ளேட்டான ஹாலிவுட் தனமான காதல் காட்களும், பாடல்களும் இழுவையாய் இருந்தாலும், நம்மூர் ஆண்டவன் கட்டளையில் கட்டாயத்தினால் புருஷன் பொண்டாட்டி ஆகி அதனால் ஏற்படும் இன்னல்களை நகைச்சுவையுடன் சொல்லி பார்த்திருந்தாலும், விக்கி கௌஷல், அங்கிராவின் நடிப்பும், கண் உறுத்தாத ஒளிப்பதிவும், ஆங்காங்கே தெறிக்கும் இயல்பான நகைச்சுவையும் ஒரு நல்ல ஃபீல் குட் படத்தை பார்த்த திருப்தியை அளிக்கிறது.Post a Comment

No comments: